பௌர்ணமி

ம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் இத்தனை வெறிச்சோடிக் கிடப்பதை அவன் இதுநாள்வரைப் பார்த்ததில்லை. அத்தனை பெரிய பஸ் ஸ்டாண்டில் தனி ஆளாக நின்று கொண்டிருந்தான். வழக்கமாக வந்திறங்கியதும் செல்லும் ஆவின் பால் பூத்திற்கு அருகில் இருக்கும் சம்முகம்பிள்ளை சுக்குக் காப்பிக் கடையும் மூடி இருந்தது. ஆள் நடமாட்டம் எதுவும் கண்ணில் படவில்லை. வந்த பஸ்சில் இருந்தவர்களும் கல்லிடையில் ஏறி கல்யாணியில் இறங்கி இருந்தார்கள். புது நெல்லு புது நாத்து இரண்டாம் காட்சியாகக் கல்யாணியில் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியாக இருந்த முருகனை இறக்கி விட்ட பஸ் இனி மறுநாள் காலை ஆறு மணிக்குத் திருநெல்வேலி ஜங்ஷன் என்ற திருப்பி வைக்கப்பட்ட போர்டுடன் வந்து நின்றால் தான் உண்டு. அதுவரை டிப்போவில் தான். வழக்கமாக வரும்  மினி பஸ்களும் இன்று இல்லை. ஏதோ ஸ்ட்ரைக்காக இருக்கலாம் என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டான்.

துணி வியாபாரத்திற்காக டவுன் சென்றவன், வியாபாரம் முடிந்து இரண்டு மூட்டைகளுடன் வந்து நின்று கொண்டிருந்தான். வழக்கமாக வரும் பஸ் இல்லை என்பதால் மூட்டைகளுக்கு லக்கேஜ் சார்ச் போட்டிருந்தார்கள். அதுபோக இன்று வியாபாரமும் கொஞ்சம் சுமார் தான். முதல் போணியே மாலை நான்கு மணிக்குத்தான் ஆனது. காலை ஐந்து மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு அவசர அவசரமாக சைக்கிளில் அம்பை வந்து டவுனுக்குச் செல்லும் முதல் பஸ்ஸில் ஏறினால் தான் நிம்மதி. அதை விட்டால் மதுரையோ,கோவில்பட்டியோ செல்லக்கூடிய ரூட் பஸ் தான். ஐந்து ரூபாய் கட்டணம் அதிகம். காலை எட்டு மணிக்கு நைனார் குளத்தில் தொடங்கும் வியாபாரம் டவுன் முழுவதும் சுற்றிவிட்டு குற்றால ரோட்டில் வந்து நிற்கும் போது வானம் கருத்திருக்கும். பின் அங்கிருந்து பொடி நடை நடந்தால் காச்சி மண்டபத்தில் அம்பாசமுத்திரத்திற்கான பஸ். பெரும்பாலும் தினமும் இதே ரூட் தான். சமயங்களில் மாறவும் செய்திருக்கிறது. 

மூட்டைகளை அருகிலிருக்கும் பெஞ்சில் வைத்துவிட்டு, அங்கும் இங்கும் ஒருமுறை பார்த்தவாறு பஸ் ஸ்டாண்டின் கிழக்கு மூலையில் இருக்கும் குப்பைத் தொட்டிக்குப் பின் புறம் சென்று, குத்த வைத்து ஒண்ணுக்கிருந்து விட்டு, சட்டைப் பையில் இருந்து பீடி ஒன்றை எடுத்து, மூக்கில் இரண்டு முறை தேய்த்து அதன் வாசத்தை நுகர்ந்த பிறகு, வாயில் வைத்துப் பற்ற வைத்துக் கொண்டான். உள்ளிழுக்கும் போது ஏற்பட்ட சூடு அந்தக் குளிருக்கு இதமாக இருந்தது. பால்பாண்டி கடையில் விட்டுச்சென்ற சைக்கிளை எடுத்து வீடு செல்ல வேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தனியாகச் செல்ல வேண்டும். மணியும் இரவு பதினொன்றைக் கடந்திருந்தது. ஒருமணி வரை இங்கேயே காத்திருந்தால் இரண்டாம் காட்சி முடிந்து ஆட்களை ஏற்றிச் செல்ல சண்டிங் வேன் வரும். அதுவும் இன்று வருவது சந்தேகம்தான். வேறு வழியில்லை, சென்றாக வேண்டும். முட்டிக்கு மேல் வேட்டியை மடித்துக் கட்டி, இரண்டு மூட்டைகளில் ஒன்றை வலது தோளிலும் மற்றொன்றை இடது தோளிலும் போட்டு இரண்டு கைகளாலும் அதைப் பிடித்தவாறு வாட்டர் டேங்க் அருகிலிருக்கும் பால் பாண்டி கடைக்கு நடக்கத் தொடங்கினான்.

கடை மூடி இருந்தது. காலை விட்டுச்சென்ற சைக்கிள் அதே இடத்தில் இருக்க, இரண்டு மூட்டைகளையும் அதன் கேரியரில் வைத்துக் கட்டிய பின்னர், ஸ்டாண்டை எடுத்தான். சைக்கிள் எடுக்கும் சத்தம் கேட்டு “யாரது இந்நேரத்துல? முருகனா?” என்று கடைக்குள் இருந்து பாண்டியின் அப்பா சத்தம் கேட்க, “ஆமா அண்ணாச்சி முருகன்தான். பாண்டி இல்லயா?” என்றான்.

கதவைத் திறந்து வெளியே வந்தவர், 

“அவன் அப்பலையே கடைய அடச்சிட்டுப் போய்ட்டானே. இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பான். இன்னைக்கு நா படுத்துக்குறேன்னே, அதுனால அவன் போய்ட்டான். அதுசரி நீ என்னடே இன்னைக்கு இவ்ளோ லேட்டு?” என்று கேட்டார்.

“அது ஒன்னுமில்ல அண்ணாச்சி, ஏழு மணி பஸ்ஸ விட்டுட்டேன். பொறவு நின்னு கடைசி பஸ்ஸுலதான் வந்தேன். சரி அது கெடக்கட்டும் இங்க என்ன ஒரே கீ னு கெடக்கு? ஆள் நடமாட்டத்தையேக் காணும்?”

“அதுவா? சாயந்தரம் இந்த மேலத்தெருச் சங்கர எவனோ வெட்டிப்புட்டானாம். இவ்ளோ நேரமும் போலீசும் கீலீசுமா கேகேன்னு கெடந்துச்சு பாத்துக்கோ. பிரச்சன கிரச்சன வந்துருமோன்னு இப்பத்தான் எல்லாம் உள்ள அடஞ்சி கெடக்கு போல” என்றார்.

“அப்படியா சங்கதி? சரி இந்த ரெண்டு மூட்டையும் இங்க கெடக்கட்டுமா? காலைல வந்து எடுத்துக்குறேன்”

“அதுக்கென்னடே காசா பணமா? அந்தானிக்கு ஒரு ஓரமா வச்சிட்டுப் போ” என்றார்.

இரண்டு மூட்டைகளையும் கடையின் ஒரு மூலையில் ஒன்றன்மேல் ஒன்றாக இறக்கி வைத்துவிட்டு “சரி அண்ணாச்சி அப்போ காலைல வெள்ளன வந்து எடுத்துக்குறேன்” என்று சொல்லும்போதே அவன் கால்கள் சைக்கிள்ப் பெடலை மிதிக்கத் தொடங்கியிருந்தன.

பௌர்ணமி நிலா வெளிச்சம் சைக்கிள் ஓட்டிச் செல்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஆள் அரவமற்ற சாலையில் முருகன், அவனுக்குத் துணையாக வாயிலிருந்து வரும் பீடிப் புகை, பௌர்ணமி நிலா, சைக்கிள் செயினிலிருந்து வரும் கிரீச் கிரீச் சத்தம். இதைத் தவிர அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்னும் நாற்பது நிமிடங்கள் தொடர்ந்து மிதித்தால்தான் வீடு சென்றடைய முடியும். வெளிச்சம் தந்த போதிலும் கூடவே வரும் நிலா ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. முன்பெல்லாம் நிதானம் இல்லாமல், எப்படி வந்து சேர்ந்தோம் என்று தெரியாமல் வீடு வந்து சேர்ந்த நாட்கள் தான் ஏராளம். ஏராளம் என்றால் தினமும். ஆனால் இன்று முதல் முறையாகக் கண்கள் தெளிவாகத் தெரிகிறது, உடல் நிதானமாக இருக்கிறது, செல்லும் பாதை தெளிவாகத் தெரிகிறது, சைக்கிள் கீழே விழாமல் செல்கிறது.  

ரயில்வே கேட், மில், மொட்ட மலை அடுத்ததாகக் கருப்பந்துறை. இதைக் கடந்தாலே முக்கால்வாசி தூரம் கடந்தது போலத்தான். அதற்கடுத்து வரும் ஆற்றுப் பாலத்தைக் கடந்தால் வீடு. அதென்னவோ எளிதாகக் கடந்துவிடக்கூடிய பாதை தான். கருப்பந்துறையைப் பற்றி நினைத்தாலே வயிற்றுக்குள் ஏதோ செய்தது. அது வயிற்றுக்குள் புளி கரைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருந்தது. அம்பாசமுத்திரத்திற்கு மேற்காக, சிவந்திபுரத்திற்குக் கிழக்காக விழும் பிணங்களைக் கொண்டு வந்து எரிக்கக்கூடிய இடம் கருப்பந்துறை. இரவு பத்து மணிக்குமேல் அதைக் கடப்பதென்பது சாதாரண செயல் இல்லை. அதுவும் இன்று அவன் மட்டும் தனியாக. ஊருக்குள் கருப்பந்துறைக்கென்று பல கதைகள் உண்டு. இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு வரும் வழியில் பேயடித்து இறந்து போன பெரிய வீட்டுச் செல்லையா அண்ணாச்சி, மரம் எடுக்கப் போய் முதுகில் ஐந்து விரல் கைத் தடம் வாங்கி வந்து இரண்டு நாட்களில் இறந்து போன வேல் ஆசாரி, ஊருக்குச் சென்று திரும்பும் போது பேயைப் பார்த்ததாகச் சொல்லி ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்து பின் இறந்து போன சங்கரி அக்கா, இன்றும் இரவானால் ஊரின் வாய்க்கால்க் கரைப் புளிய மரத்திற்கும் கருப்பந்துறைக்கும் ஓடித் திரியும் சரசு, அங்கங்கே காணப்படுவதாகச் சொல்லப்படும் தீக்குளித்து இறந்து போன கருப்பாயி, வீட்டு உத்திரத்தில் தூக்கிட்டு நாக்கு தள்ளி இறந்து போன ஜோசப். இப்படி கருப்பந்துறைக் கதைகள் ஒவ்வொன்றாக மனதில் எழத்தொடங்கி, அது மேலும்  பயத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் பயந்து கருக்கல் நேரம் கடந்துவிட்டால் பலர் அம்பையிலோ, கல்லிடையிலோ உறவினர்கள் வீட்டில் தங்கிவிட்டு காலை எழுந்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஆந்தைகள் அங்கும் இங்கும் உலவுவதைக் காண முடிந்தது. மேற்கிலிருந்து குளிர்ந்த காற்று வீச, பகல் வெக்கை தணிந்து இரவின் குளிர்ச்சி மேலோங்கி இருந்தது. ரயில்வே கேட்டைக் கடந்து மில் அருகில் சென்று கொண்டிருக்கையில் “க்ரீச்சிக்” என்றொரு சத்தம். சைக்கிள் பெடல் வேகமாகச் சுழன்றது. கீழே இறங்கிக் குனிந்து பார்த்தால் சைக்கிள் செயின் கழண்டிருக்க, ஸ்டாண்டைப்  போட்டுவிட்டு செயினை சரிசெய்ய முயன்றான். எத்தனை முயன்றும் கையில் கிரீஸ் படிந்ததே தவிர செயின் பல்லில் மாட்டுவதாக இல்லை. அந்த இரவுக் குளிரிலும் அவனுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. “ஏ கூதிபுள்ள” என்று திட்டிக் கொண்டே கடைசி முயற்சியாக செயினைப் பிடித்து இழுக்க, அது கையில் ஒன்றுமாகத் தரையில் ஒன்றுமாக அறுந்து விழுந்தது. இனி பெடல் போட முடியாது, உருட்டித் தான் சென்றாக வேண்டும். பாதி வழி கடந்ததால் இனி திரும்பவும் முடியாது. பாண்டி இருந்தாலாவது அவனுடன் கடையில் படுத்துக் கொள்ளலாம் அதற்கும் வழி இல்லை. வீட்டிற்குச் செல்வதுதான் ஒரே வழி. எரிச்சலில் மேலும் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்து, சைக்கிளை உருட்டிக் கொண்டே நடக்கத் தொடங்கினான். 

அமாவாசை இருள் மட்டும் அல்ல, கூடவே வரும் பௌர்ணமி நிலா கூட ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. சிறிது நேர நடையில் மொட்ட மலையை அடைந்திருந்தான். அடுத்ததாகக் கருப்பந்துறை. நினைக்கையிலேயே மீண்டும் ஒருமுறை ஒன்னுக்கு முட்டிக் கொண்டு வர, அருகிலிருந்த வேப்ப மரத்தில் சைக்கிளைச் சாய்த்துவிட்டு வேட்டியை மட்டும் தூக்கிப் பிடித்தவாறு நின்று கொண்டே ஒன்னுக்கு இருந்தான். இம்முறை பயத்தில் குத்தவைக்கவில்லை. முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கையில் கருப்பந்துறையின் எல்லையான ஒற்றைப் பனைமரம் கண்ணில் பட மேலும் பயம் தொற்றிக் கொண்டது. 

அதே ஒற்றைப் பனை மரத்தடியில் விஷம் குடித்து இறந்துபோன மீனாவைப் பலமுறை பார்த்ததாக ஊருக்குள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறான். பழனியும் கூட ஒருமுறை அங்கு மீனா வெள்ளைச் சேலையுடன் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறான். இதையெல்லாம் நினைக்கையில் “ஏன்டா வந்தோம்” என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இல்லை. தூரத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு கொல்லப்பட்ட சங்கராகக் கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான். இனி நினைத்தாலும் திரும்பிச் செல்ல முடியாது. ஒரு நிமிடம் நின்று மனதிற்குள் ஏதோ சொல்லிவிட்டு முன்னேறி நடந்தான். ஒற்றைப் பனை மரத்தைக் கடக்கையில் பழனி கூறியது போல வெள்ளைச் சேலை உடுத்திய பெண் அழுது கொண்டிருந்தாள். மீனாவாக இருக்கலாம். மரத்தை நெருங்க நெருங்க அழுகுரல் இன்னும் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. அது மீனாவின் அழுகை சத்தம் தான். திரும்பிப் பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், அருகில் வந்த அந்தக் குரல் “முருகா ஒரு சேல குடு முருகா” என்று கேட்பதுபோல் இருந்தது. அது அழுதுகொண்டே தன்னைப் பின் தொடர்ந்து வருவதுபோல் உணர்ந்தான். சிறிது தூரம் செல்ல “ஏல முருகா, ஏல முருகா” என்று யாரோ தூரத்திலிருந்து அழைப்பதுபோல் இருந்தது. நேரம் செல்லச் செல்ல அக்குரல் வெகு அருகில் தன் காதருகே கேட்கத் தொடங்கியது. போன மாதம் விபத்தில் இறந்துபோன கணேசனின் குரல் தான். மீனாவின் அழுகையோடு கணேசனும் சேர்ந்து கொண்டான். எதற்கும் திரும்பிப் பார்க்காமல் நேராகப் பார்த்து நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்றான். அவன் வலது புறம் இருந்த முள் செடிக்குள் ஏதோ சத்தம் கேட்க அவன் எங்கும் நகரவில்லை. அடுத்த அடி எடுத்து வைக்கப் பயம். தலையைத் திருப்பாமல் கண்ணை மட்டும் உருட்டி செடிக்குள் பார்த்தான். உள்ளிருந்து எட்டிப் பார்த்த ஜோசப் “லேய் முருகா கொஞ்சம் தீப்பெட்டி குடேன்” என்று கேட்பதுபோல் இருந்தது. ஜோசப்பின் நாக்கு வெளியில் தள்ளி இருந்தது. துர்மரணம் அடைந்தவர்கள் ஆவியாக பூமியில் சுற்றுவார்கள் என்பதை அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. 

சில அடி தூரம் கடந்ததும், சூறைக்காற்று வீசத் தொடங்கியிருந்தது. மேற்கிலிருந்து வரும் காற்று என்பதால் குளிர் அதிகமாக இருக்க, அது ஊ….ஊ….என்று ஊளை சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. எதிர் காற்று அவனை நடக்க விடாமல் பின்னோக்கித் தள்ள, சைக்கிளை உருட்டிச் செல்வது சற்று கடினமாக இருந்தது. நிற்பதற்குப் பயந்து, சைக்கிளைத் தள்ளியவாறே நடந்து கொண்டிருந்தான். சிறிது தூரம் கடந்ததும், தூரத்தில் யாரோ நிற்பது போலத் தெரிந்தது. அதைக் கண்டவுடன் கை கால் நடுக்கமெடுத்துக்கொண்டு, வியர்த்து விறுவிறுத்து ஒரு நிமிடம் நின்ற இடத்திலேயே நின்று கண்களைச் சுருக்கி கூர்ந்து பார்க்க, பாவாடை சட்டை அணிந்த சிறுமி ஒருத்தி நிற்பது போன்ற தோற்றம் தெரிந்தது. பயத்திலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யாரது? யாருன்னு கேக்கம்லா?” என்றான். பதில் இல்லை. ஒரு அடி இரண்டு அடி என்று ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அதன் அருகில் செல்லச் செல்ல அது ஒரு உருவம் இல்லை இரண்டு என்பதை உணர்ந்தான். “ஏய் யாருன்னு கேக்கம்லா?” என்று கேட்டவாறே முன் நோக்கி நடந்தான். உருவம் கொஞ்ச கொஞ்சமாகத் தெளிவடையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் உருவம் நன்றாகத் தெரியவர 

“ஏ மூதிகளா நீங்கதானா? கேட்டுட்டே வாரம்லா பதில் சொல்லலாம்லா”  என்றான். 

“எங்க சொல்ல விட்டீக, நீங்க தான் பேசிட்டே வாறீகளே” என்றாள் மனைவி.

“எப்பா நாந்தான் கூப்டம்லா காதுல விழலயா?” என்றாள் மகள்.

“அதுசரி…. இந்த ராத்திரில இங்க வந்து என்ன நின்னுட்டு இருக்கீக?”

“சொல்லப்போனா நாங்க ரயில்வே கேட்டுக்கே வரலாம்னு தான் பாத்தோம். அம்மா தான் லேட்டாக்கீட்டா”

“அதுலாம் ஒன்னும் வேணாம்.நானே வந்துருவேன்”

“இத்தன வருஷம் நீங்க வந்தது தெரியாதா? கேட்டா இந்த கருப்பந்துறையக் கடந்து வர பயமா இருக்குறதுனாலதான் குடிக்கேன்னு சொல்லுவீங்க. ஏதோ இன்னைக்கு தான் மொத தடவையா அந்த கழுத மூத்திரத்த குடிக்காம வந்துருக்கீங்க” 

 “அதான் இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்றம்லா”

“எய்யா ராசா நல்லா இருப்பீங்க, நீங்க குடிச்சு நாம பட்ட பாடெல்லாம் போதும். இனிமே தயவு செஞ்சி அதைத் தொடாதீங்க”

“மாட்டங்கம்லா”

“எப்பா நா ஒன்னு சொல்றேன் கேக்கியா?”

“ம்ம்…”

“இனிமே அவன் கூப்பிட்டான், இவன் கூப்டான்னு சொல்லிப் போவாத. இத இன்னையோடி அப்டியே தல முழுகிறு. உனக்கு ராத்திரி ஒத்தைல வாரத்துக்கு பயமாயிருந்தா சொல்லு. எங்களுக்கு உன்ன கூப்பிட வாரத்துக்கு எந்த சங்கடமும் இல்ல பாத்துக்கோ. டெய்லி நாங்க மில் கேட்டுக்கே வந்துறோம். நீ இப்படியே வா. அது போதும் எங்களுக்கு” என்றாள்.

“ஆட்டும்” என்று சொல்லித் தலை அசைத்துக் கொண்டான்.                              

மூன்று பேரும் பேசிக்கொண்டே ஆற்றுப் பாலத்தைக் கடந்து வீடிருக்கும் வடக்குத் தெருவுக்குள் நுழைய, “செத்த இங்க நில்லுங்க வாரேன்” என்று சொன்னவன் விறு விறுவென்று சென்று முக்குக்கடை ராசம்மாவின் வீட்டுக் கதவைத் தட்டி, தேன் மிட்டாய் ஐந்தை வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வந்தவன் “சரி வாங்க போலாம்” என்று சொல்ல மூவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். வழி நெடுகிலும் மனைவியிடமும் மகளிடமும் பேசிக்கொண்டே வந்தான்.  வீடு வரவும் “எப்பா நீ முன்வாசல் வழியா வா, நாங்க பொறாசல் வழியா வாரோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் செல்ல, முருகனோ கதவைத்திறந்து உள்ளே சென்றான். லைட் எதுவும் போடாமல் நேராகப் புறவாசல் சென்று கை கால்களைக் கழுவிவிட்டு, கதவைத் திறந்து, தோட்டத்தில் இருக்கும் புளியமரத்தடியில் வாங்கி வந்த ஐந்து தேன்மிட்டாய்களையும் வைத்து அருகிலிருக்கும் விளக்கை ஏற்றி கண்களைத் துடைத்தவாறே மேல் நோக்கிப் பார்த்தான். மேகத்தின் உள்ளிருந்து வெளியே வந்த பௌர்ணமி நிலா பிரகாசமாக இருந்தது. அதனருகே ஒரு சிறிய நட்சத்திரம்.

***

2 Replies to “பௌர்ணமி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.