புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

1

அவ்வளவு உறுதியாக
நான் வார்த்தைகளை
பயன்படுத்தக் கூடாது
அது அதன் பயன்பாட்டில்
மறைந்து இருக்கும்
சொல்லாடல்களை நான்
கண்டறியவேண்டும்
அது பிரசவிக்கும் உண்மையில்
அது அதற்கான
அர்த்தத்தைப் பெறாமல்
எனக்கு உணர்வை
மட்டும் ஊட்டுகின்றது
நான் அதை
என் மௌனத்தின்
ஒலியில் கேட்கிறேன்
என் சிந்தனையோ
காலம் கடந்து பயணிக்கிறது
ஓசையின் நாதம்
என் காதில் விழவில்லை
என்றாலும் நான் கேட்டு
கொண்டு தான் இருக்கிறேன்
இப்பொழுது நான்
எப்பொழுதும் இருக்கும்
அறை சட்டென
புதிதானது போல்
அதிலிருந்து நான் விடுபட்டேன்

2

அவன் உண்மையில் ஒவ்வொரு
கனவிலிருந்தும் விடுபடுகிறான்
அதேநேரத்தில் இன்னொரு
கனவிற்குள் நுழைகிறான்
அவன் நிலை கரையும் போது
அல்லது அதைப்பற்றி
அவனுக்கு மட்டுமே
அர்த்தமாக்கிக் கொள்கிற
முறையில் விளக்கிக் கொள்கிறான்
மறதிக்குப் பிற்பாடு
அவன் முழித்துக் கொள்கிறான்
சேமிப்பு கிடங்கிலிருந்து
ஒரு தேர்வு துல்லியமான
ஒரே ஒரு உணர்வினை கூட்டி
அவனது சிந்தனையைக் கலைக்கிறது
அவனது ஆயுளில்
இடம் பெறுகிற நிகழ்ச்சி
அந்த புத்தகத்தின்
எந்த பக்கத்தில்
எங்கே இருக்கிறது
இருப்பதைக் காட்டும்
கண் மட்டும்
அவன் மனதில் என்று

3

பொருட்களோ எண்ணங்களோ
சிந்தனையோ கனவுகளோ
நினைவோ மனமோ
உடலோ உணர்ச்சிகளோ
எல்லாம்
ஒரே நேர் கோட்டில்
பயணிக்கும் போது
நான் என்பதை
எந்த கண்ணாடியின்
துணையின்றி
எனக்கான வழியில்
என்னை என்னால்
பார்க்க முடிந்தது
எனது நிலையற்ற
நியாயத்தின் உண்மை
நிரூபிக்கப்பட்ட போது
அப்பொழுதுக்கு அப்பொழுதென
சாத்தியத்தில் என் மனம்
வழியை விட
நான் காத்திருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
என் மனம் கரைவதை
நான் பார்த்தேன்
எவ்வளவு உணர்வு
பூர்வமான பயணம் அது
என்பதை அறியும்போது
நான் அவனை
முழுமையாகப் பார்த்தேன்
இப்பொழுது நான் தான்
என அவனாகி
என்னிலிருந்து நான்
அவனை அவ்வப்போது
பிட்டு வைக்கிறேன்
அந்நிலையின் நிலை கருதி

4

என்னை யாரும் இங்கே
ஒன்றும் செய்துவிட முடியாது
நான் தனிமையில் இருக்கிறேன்
உயிரோடு இருக்கிறேன்
என் விருப்பங்கள் நிறைவேறாது
என்று எனக்குத் தெரியும்
என் கனவில் கிடைத்த
திரவம் நிறைந்த பாட்டிலை
கீழே போட்டு உடைத்து விட்டேன்
கண்ணுக்குத் தெரியாத காற்றை
கிழித்துக் கொண்டு நடக்கிறேன்
வார்த்தைகளுக்கும் சொற்களுக்கும்
முன்னால் இருக்கும்
உணர்ச்சிகளின் காட்சிகளை
சுரந்தபடியே இருக்கும்
ஊற்றினை நான் விழுங்கிவிட்டேன்
தீர்க்க முடியாததும்
தண்டனைக்கு உட்பட்டதுமான நிலையில்
கரைசேரமுடியாமல் நீந்திக்கொண்டிருக்கிறேன்
என் இயலாமையின்
அதிகாரப் பூர்வமான அறிவிப்பு
வரும்வரை காத்திருக்கிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.