புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5

This entry is part 5 of 23 in the series புவிச் சூடேற்றம்

[பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – தொடர் கட்டுரை]

மனிதன் நிலத்தில் வாழும் ஒரு உயிரினம். என்னதான், கடலிலும், நதியிலும், வானத்திலும் பயணித்தாலும், பெரும்பாலும், நாம் வாழ்வது நிலத்தில்தான். இந்த பூமியில் உள்ள, பனியற்ற நிலத்தில் 70% -ஐ, மனிதன்,  ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகிறான் – விவசாயம், நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள், காட்டுப் பொருட்கள், சக்தி, நீர் என்று இந்தப் பட்டியல் நீளும். இந்த 70 சதவீத நிலத்தில், கால் பங்கு, மனிதன், உணவு, மேய்ப்பு, மரம், மற்றும் சக்திக்காகப் பயன்படுத்துகிறான். 

நிலம், புவி சூடேற்ற வாயுக்களின், உற்பத்தி மூலம், மற்றும் உறிஞ்சி என்று சொல்லலாம். நிலத்தில் உள்ள சூழ்நிலையமைப்பு (ecosystem) சிக்கலானது. காடுகளுக்கு ஒரு அமைப்பு, நதிகள் மற்றும் ஏரிகளுக்கு இன்னொரு அமைப்பு, மலைகளுக்கு, கடற்கரைக்கு என்று பலவகை சூழ்நிலையமைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும், மனிதனுடைய நோக்கங்களால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகிறது.. பிரச்சினை என்னவென்றால், இந்த மாற்றங்களின் பின்விளைவுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வருகின்றன. இயற்கையில் இருக்கிற ஒட்டு மொத்தச் சூழ்நிலையமைப்பைக் குலைத்து விட்டால், சமநிலையை மீட்பது இயலாத காரியம்.

https://d2ouvy59p0dg6k.cloudfront.net/downloads/ipcc_landreport_land_use_graphic_package_01.jpg

மனிதனின் மிகப் பெரிய தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவு உற்பத்தி செய்வது. நிலத்தில் உள்ள நீரில் 70% விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உணவில் 25% முதல் 30% வரை, பயனில்லாமல் போகிறது. குறிப்பாக, சமைத்த உணவு, பயனில்லாமல் போவது சுற்றுச்சூழலுக்கு நல்லது அல்ல. அதிலிருந்து உருவாகும் மீதேன் போன்ற வாயுக்கள் மேலும், புவி சூடேற உந்துகின்றன. இதை இங்கு சொல்லக் காரணம், இந்த பயனற்ற உணவு, உலகில் 3 பில்லியன் மனிதர்கள் இருந்ததை விட, இன்றைய 7.5 பில்லியன் மனித உலகில் மிகவும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில், உலகில், 800 மில்லியன் மனிதர்கள் சரியான உணவின்றி தவிக்கிறார்கள். விவசாய மண் அரிமானம் (agriculture soil erosion), புதிய மண் உருவாகும் வேகத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. 

 1961 முதல் 2013 –வரையிலான கணக்குப்படி, நல்ல பயிர் விளையும் நிலங்கள், வருடம் ஒன்றிற்கு, 1% என்று வரண்டு வருகிறது. இந்தக் கணக்குப்படி பார்த்தால்,


https://d279m997dpfwgl.cloudfront.net/wp/2014/02/0205_drought-california-1000x621.jpg

மனிதர்களுக்கு தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஒரே வழிதான் – அது, இருக்கும் காடுகளை அழிப்பது. இந்தக் கணக்கை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், வரண்ட நிலங்கள், சில வருடங்களில் பெய்த பெரு மழையால் பயிர் விளையும் நிலமாகவும் மீண்டிருக்கின்றன; ஆனால், இந்தப் பங்கு, மிகக் குறைவு. இன்னொரு முக்கிய விஷயம் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்தும். நகரங்களின் வளர்ச்சியால், சுற்றியுள்ள பயிர் நிலங்கள் பலியாவது நகரவாசிகளுக்குப் பரிச்சயம்.

மனித நடவடிக்கைகள், காற்று மண்டலத்தில் ஏராளமான கரியமில வாயுவை சேர்க்கின்றன. இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் நிலத்திலேயே நடக்கின்றன. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, வெளியேற்றும்  கரியமில வாயுவை விட, இந்த பூமி, வருடம் ஒன்றிற்கு, 11.2 கிகா டன் அதிக கரியமில வாயுவை உள்வாங்குகிறது. இது, புவி சூடேற்றத்தை மேலும் வேகப்படுத்துகிறது.  

இங்கு சொன்ன விஷயங்கள், பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடும். அதற்கேற்ப, தாக்கமும் மாறுபடும். பூமியின் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே/தெற்கே சுமார் 10 டிகிரி வரை, அதிகம் சூடான பகுதி. அத்துடன், அதிக மழையும் பெய்யும் பகுதி. 10 டிகிரி முதல் 23 டிகிரி வரை, பூமியின் இரு அரைப் பகுதிகளிலும், மிகவும் செழிப்பான விவசாயம் நிகழும், ஜனத்தொகை அதிகமான பகுதிகள். இந்தப் பகுதி, பருவநிலை மாற்றங்களால், அதிகம் பாதிக்கப்படும் பகுதி. இங்கு, புவி சூடேற்றத்தால்,  கோடைக்காலம் நீண்டும், குளிர்காலம் குறைந்தும் வருகிறது. அத்துடன், வெப்ப அலைகள் அதிகரித்தும், மழைக்காலங்களில், வெள்ள பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு மாற்றங்கள் விவசாயத் தொழிலைப் புரட்டி எடுத்து வருகிறது.

  1. விளையும் பயிர்களை மாற்ற வேண்டிய சூழல்
  2. மண்ணில் அதிக உரம் கலக்க வேண்டிய சூழல் – ஏனென்றால், மண் அரிமனம் அதிகமாகி வருகிறது
  3. சில பகுதிகளில், நீண்ட கோடைக் காலத்தால், பயிர் நிலம், வறண்டு போய், விவசாயமே செய்ய முடிவதில்லை
  4. உயரும் கடல் அளவால், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் கரை தாண்டி உள்ளே வந்து, மேலும் விவசாயத்தை பாதிக்கிறது
  5. குளிர்காலப் பயிர்களுக்கு போதிய நாட்கள் குளிராக இருப்பதில்லை
https://www.science20.com/files/images/carbon%20release%20thawing%20permafrost%20arctic.jpg

இப்படி ஒரு புறம் இருக்கையில், வட துருவம் அருகே உள்ள கனடா, ஸ்வீடன், ஃபின்லேந்து, போன்ற நாடுகளில் இதே விஷயம் வேறு விதமாகத் தாக்குகிறது.

  1. நீண்ட கோடை காலம், புதிய பயிர்களை பயிரிட வழி செய்கிறது
  2. பனியால் மூடப்பட்ட நிலம் குறையக் குறைய, பயிர் செய்யத் தகுந்த நிலங்கள் அதிகமாகின்றன
  3. இந்த நாடுகளில், தண்ணீர் பிரச்சினை இல்லாததால், பயிர் விளைச்சல் என்பது இன்னும் அதிகரிப்பது சாத்தியம்.

சில குளிர் நாடுகளுக்கே உரிய புவி சூடேற்றப் பிரச்சனையும் இதில் அடங்கும். பனியால் என்றுமே மூடப்பட்ட நிலங்கள் வெப்பமேறினால், அதில் பொதிந்திருந்த கரியமில வாயு அதிகமாக காற்றில் மேலும் கலந்து புவி சூடேற்றத்திற்கு உதவுகிறது. சென்ற பகுதியில் பார்த்தது போல, தெற்கே பாயும் நதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு, அமெரிக்க (யுரோப்பில் நடுவே கடல் வந்து விடுவதால், இந்தப் பிரச்சினை இல்லை), தென் மேற்கு பகுதிகள் வரண்டு தவிக்கின்றன. அதே போல, கங்கை போன்ற பனியுருக்கத்தால் தொடங்கும் நதிகளும், அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. எத்தனை நாள், ”கங்கை நதி காயுமா?” என்று கவிதை எழுத முடியும் என்று தெரியவில்லை.

இது போன்ற புவி சூடேற்ற விஷயங்களை, நம் அரசியல்வாதிகள், கால் பந்தாடுகையில், ஒவ்வொரு நாட்டின் உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்படுகிறது. 21 –ஆம் நூற்றாண்டின் பெரும் பிரச்சினைகள், உணவு மற்றும் தண்ணீர். இந்த நூற்றாண்டின் பெரிய ஜனத்தொகைப் பெருக்கம், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் சீனாவில் இருக்கும். இந்த நாடுகள், புவி சூடேற்றத்தால்  தண்ணீருக்கும், உணவிற்கும் மிகவும் பாதிக்கப்படும் என்று தைரியமாகச் சொல்லலாம். நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார வித்தியாசங்கள் மேலும் அதிகரிக்க இதனால் வாய்ப்புள்ளது. அத்துடன், தண்ணீருக்காக பல அண்டை நாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அணை கட்டி, உறவுகளில் உராய்வும் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்தப் பிரச்சனைகளை ஆராய்ந்த பருவநிலை மாற்ற நிபுணர்கள், பல யோசனைகளை முன் வைத்துள்ளார்கள். இந்த யோசனைகளைச் செயலாக்குவது  அரசாங்கங்களே செய்யக்கூடியது, சிக்கலான  முயற்சி. இதைச் சொல்வது எளிதானாலும், நடைமுறைப்படுத்துவது எளிதல்ல.

  1. நிலம் சார்ந்த அரசாங்கக் கொள்கைகள், புவி சூடேற்றத்தால், விளை நிலங்கள் பாலைவனமாக மாறுவதைத் தடுப்பது, மற்றும், தன் மாநிலம்/நாட்டின் உணவு பாதுகாப்பை தக்க வைத்துக் கொள்வது போன்ற நோக்கங்களைச் செயல்படுத்துவது 
  2. மாறும் பருவநிலைக்கேற்ப, பயிர் வளர்ப்போருக்கு தகுந்த விஞ்ஞான பூர்வமான ஆலோசனை வழங்கி, விளைச்சலைப் பாதுகாப்பது
  3. நீர் பயன்பாட்டை விரயமின்றிச் சீரமைத்தல். ஏனெனில் புவி சூடேற்றம் மற்றும் ஜனத்தொகை அதிகரிப்பால், நிலத்தடி நீர் குறைவதில் முதல் அடி வாங்குவது விவசாயம் தான். துவக்க கட்டங்களில் கவனிக்கப்படாமல் தற்காலிகத் தீர்வுகளே கைப்பிடிக்கப்பட்டு, பின் நிலைமை முற்றிக் கை மீறிப் போனபின்னரே கவனிக்கப்படும் வகைப் பிரச்சனைகள் இதில் எழும். 
  4. சில மாற்றங்கள், இந்த ஆண்டுடைய பயிரைக் காப்பாற்றும் முயற்சி. மற்றவை, அடுத்த பத்தாண்டுகளில் வரவிருக்கும் மாற்றங்களை முன்நோக்கியே கையாள வேண்டிய வகை முயற்சிகள். இரண்டாம் வகை முன்னெடுப்புகளைச் சில அரசாங்கங்களே தொலை நோக்குடன் செய்து வருகின்றன
  5. உதாரணத்திற்கு, கடலோரப் பகுதிகளில் மண் அரிமானத்தால் பாதிக்கப்பட்டால், அதற்கான நிவாரணப் பணிகள் உடனே இந்த ஆண்டே பயன் தராது
  6. கடந்த சில வருடங்களாக, நீர் மேலாண்மையை சரியாகச் செய்யாத்தால், காவிரி போன்ற ஆறுகள், விவசாயத்திற்கு முன்பு இருந்ததைப் போலப் பயனளிப்பதில்லை. பனியுருகி நீராவதால் பெருகுவதல்ல காவிரியின் மூலம். சில மாதங்களே பெய்த மழைநீரை ஆற்றில் பாதுகாப்பது மிகவும் கடினம் என்றாலும், வேறு வழியில்லை. அத்துடன், பல கிளையாறுகள் கவனிக்கப்படாமல் இருப்பதால், மேலும் காவிரி போன்ற நதிகள் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன
  7. அதிகமாக விளைச்சல் நிலம் புதிதாக உருவாகியிருக்கும் நாடுகளில், (கனடா, ஸ்வீடன்) அரசாங்க முயற்சிகள் எளிதில் மேற்கொள்ளப்படலாம். ஆனால், இங்கும் பல பிரச்சினைகள் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக பனியால் மூடப்பட்ட நிலங்களைச் சென்றடைய, சாலைகள் கிடையாது. அங்கு யாரும் சென்று வசிக்காததால், புதிய விவசாய முயற்சிகள், மிகவும் கடினம். மேலும் முன்பு பனி மூடிய நிலப்பகுதிகள் ஓரிரு ஆண்டிலேயே பனி விலகி முழுதும் வாழ்வுக்கு ஏற்ற நிலங்களாகி விடுவதில்லை. தட்ப வெப்ப நிலை ஏறுமாறாகவே சில, பல ஆண்டுகள் இருந்து பின் நிலைத்த மாறுதலாகின்றன.  எனவே உடனடி மக்கள் குடியேற்றம் நேரும் என்று எதிர்பார்ப்பது பயன் தராது. அத்துடன், இந்தக் குளிர் நாடுகளில், உள்ள குறைந்த ஜனத்தொகைக்கு, ஏற்கனவே தேவைக்கு அதிகமான விவசாயப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. 
  8. உணவு வீணாவதைத் தடுப்பது மிகவும் முக்கியமான ஒரு பணி. ஆனால், மிகவும் சூடான நாடுகளில், அதுவும் ஏழை நாடுகளில், இது மிகவும் கடினம். இங்கு குளிர்சாதனக்களுடன் லாரிகள் கிடையாது. வழியிலேயே, காய், பழங்கள் வீணாகிப் போகின்றன. மிக முக்கியமாக, குளிர்சாதனங்கள் இந்தியா போன்ற நாடுகளில், இருக்கும் உணவை வீணாகாமல் பாதுகாக்கும். என் பார்வையில், இந்தியா அதிகம் கவனம் செலுத்தாத ஒரு துறை, குறைந்த செலவு வாகனக் குளிர்சாதனம். இத்தனை மனித வளம் இருந்தும், இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனையான விஷயம்
  9. சிறிய குட்டைகள் மற்றும் ஏரிகளைப் புறக்கணிப்பதால், புவி சூடேற்றம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவற்றை சரியாகத் தூர் வாருவது மற்றும், அதிலுள்ள நீரைப் பாதுகாப்பது, மக்கள் மற்றும் அரசின் கடமை
  10. இந்த நிலம் சார்ந்த காப்பு முயற்சிகளில், இதற்காக இன்னும் அதிக நிலம் தேவையில்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த முயற்சிகளின் வெற்றி, இருக்கின்ற நிலத்தை மேலும் வளப்படுத்துவதில் அடங்கியுள்ளது
  11. பல இந்திய கிராமங்களில், உணவு மற்றும் விவசாயக் கழிவை, சக்தி  உற்பத்தி செய்து வருவது, மிகவும் வரவேற்கத் தகுந்தது. இந்தக் கழிவுகள், அப்படியே விட்டால், மேலும் புவி சூடேற்ற வாயுக்களை உற்பத்தி செய்யும். 

http://static.dnaindia.com/locality/sites/default/files/styles/news_slider/public/newsimage/biogas%204.jpg?itok=9Nt8wIsw

   வட இந்தியாவில், பஞ்சாப், யு.பி. ஹரியானா போன்ற மாநில      விவசாயிகள் பயிர்தூரை எரிப்பதால் உருவாகும் சிக்கல்களை நாம் இக்கட்டுரைத் தொடரில் முன்பு, காற்று மாசுப் பகுதியில் பார்த்தோம்

  1. வெப்ப மண்டல நாடுகளில் (tropical countries) , புதிய மரங்களை நட்டு, மேலும் காடுகளை உருவாக்குவதால் பல நன்மைகள் விளைகின்றன. மண் அரிமானம் குறைகிறது, நிலச்சரிவுகள் குறைகின்றன – சூடும் ஓரளவு தணிகிறது
  2. பாலைவனங்கள் சார்ந்துள்ள பயிர்நிலங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை, பாலைவன புழுதிக்காற்று. இவற்றைத் தடுக்க, சில நாடுகள், பச்சை சுவர்களை பயிர்நிலங்களின் விளிம்பில் வளர்த்து வெற்றி பெற்றுள்ளன
  3. காடுகளைப் பாதுகாப்பது புவி சூடேற்றத்திற்கு மிகவும் அவசியம். குளிர் நாடுகளான கனடா, ஸ்வீடன் போன்ற நாடுகள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாகக் கவனிப்பில்  எடுத்துக் கொள்ளுகின்றன. இந்த நாடுகளில், மரம் வெட்டுவது மிகவும் முக்கிய தொழில். வீடு கட்டும் தொழிலில் மரம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சகட்டு மேனிக்கு மரங்களை அறுத்தால், காடுகள் அழிந்து விடும். இந்தப் பாதையில், இவ்வளவு மரம் அறுக்கப்படலாம் என்று கணக்கு வைக்கப்படுகிறது. மேலும், அறுக்கப்பட்ட இடங்களில், புதிய மரங்கள் நடப்படுகின்றன. மரம் வளர 30 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும்; நிமிடங்களில் அதை அறுத்துவிடலாம்!
  4. காடுகளைப் பாதுகாப்பதில், உள்ள சமாளிக்க முடியாத ஒரு விஷயம் காட்டுத்தீ. காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் மிகவும் அதிகம். என்னதான், கஷ்டப்பட்டு வட அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைத்தாலும், சில நாட்களில், இயற்கை, ஏராளமான சேதத்தை உருவாக்கி விடுகிறது. எரிந்த காடுகளில், மீண்டும் மரம் வளர்ப்பது என்பது மனிதனால் அறுக்கப்பட்ட காட்டை விட மிகவும் கடினம். புவி சூடேற்றத்தால், வெப்ப நாட்கள் அதிகமாவதால், காட்டுத்தீ அதிகரித்து வருகிறது. வருடா வருடம், தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு கனடாவில் பல லட்சம் ஹெக்டேர் காடுகளை, இதனால் இழந்து வருகிறோம்
  5. சில கிராமங்களுக்கு, அரசாங்கங்கள், புவி சூடேற்ற தணிப்பு முயற்சிகளுக்கு பண உதவி செய்வது அவசியம். இது, கிராமத்து விவசாயிகளுக்கு தொலைநோக்கு முயற்சிகளில் ஈடுபட ஊக்கம் அளிக்கும்

புவி சூடேற்றம், புவி எங்கும் நடை பெற்றாலும், அதன் தாக்கத்தை பெரும்பாலும், நாம் வாழும் நிலத்தில் உணருகிறோம். இதன் ஆரம்பமும் நிலத்தில் தான். முடிவுகளும் நிலத்தில்தான் எடுக்கப்பட வேண்டும். நிலம் என்பதை எளிதில் இயற்கை வாயிலாகச் சொல்லி விடலாம். ஆனால், அரசியல் ரீதியாக, நாம் பல்வேறு நாடுகளாக பிரிந்து உள்ளோம். இதில் பல பொருளாதார வேறுபாடுகள், நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், பிரச்சனை என்னவோ பூமிக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்டது. 

மனிதர்கள் இணைந்தால், இந்தப் பிரச்சினையை சமாளிக்க முயலலாம். ஒன்று சேராவிட்டால், இதில் பாதிக்கப்படுவது உயிரினங்கள் மட்டுமே. உயிரினங்கள் தோன்றுவதற்கு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி இருந்தது; இன்று இருக்கும். நாம் தான் வரும் நூறாண்டுகளில் இருப்போமா இருக்க மாட்டோமா என்பது சந்தேகம்.

சரி, அப்படி என்ன பூமிக்கு மனிதர்கள் அப்படி தீங்கு விளைவித்துள்ளார்கள்? அடுத்த பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.

***

Series Navigation<< பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.