எல்லோரும் கொண்டாடுவோம், எல்லோரிடமும் எல்லாமும் இருக்கட்டும் என்ற உன்னத நினைப்போடு உங்கள் கண் தடத்தைப் பெற்றுக் கொண்டு உங்களுக்கு இலவசமாக கணினி நாணயங்கள், அதாவது இலக்க நாணயங்கள் வழங்குவதாக ‘வேர்ல்ட் காயின்’ (World Coin) என்ற அமைப்பு சொல்கிறது.
‘ஆர்ப்ஸ்’(Orbs) என்ற வன்பொருளின் துணை கொண்டு தனிப்பட்ட மனிதர்களின் கண்விழிகள் உலகில் நான்கு கண்டங்களில் பதியப்பட்டு வருகின்றன. இந்தக் கருவியை மாதத்திற்கு நாலாயிரம் வரை களமிறக்கப் போவதாக இந்தத் திட்ட வளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். உலகில் அனைவருக்கும் அடிப்படை வருமானம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையைப் போல உலகில் அனைவரிடமும் இலக்க நாணயங்கள் இருக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று ‘வேர்ல்ட் காயின்’ சொல்கிறது. உங்கள் கருவிழித் தடத்தை எண்களும், அக்ஷரங்களுமுள்ள சரங்களாக மாற்றிய பிறகு கருவிழிப் பதிவை அழித்துவிடுவார்களாம். இது எதீரீயம் (Ethereum Block Chain) தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 10 பில்லியன் ‘டோக்கன்கள்’(Tokens) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் நபர்களுக்கு மேல் இதில் தங்கள் கண் விழிகளைப் பதிவிட்டுள்ளார்கள்! மனிதர்கள் எந்தப் புதுமையையும் ஏற்கத் துணிகிறார்கள் என்பதின் பின் புலமாக இலவசமாக கிடைக்கப் போகிற இலக்க நாணயம் இருக்கிறது. இது நம்பிக்கை சார்ந்ததல்ல, நாணயம் சார்ந்ததுமல்ல (ஏனெனில் என்ன மதிப்பில் கொடுக்கப் போகிறார்கள் என்பது இன்று வரை தெரியாது) பணம் என்ற ஒன்றைச் சார்ந்தது. அறிவிப்பு ஒன்றாகவும், நடப்பு மாறாக இருக்கும் என்பதும் நாம் அறியாததா என்ன?
கணினிகளைக் கொந்தி பல நிறுவனங்களைச் செயல்பட முடியாமல் செய்து பிணைப்பணம் பெறுபவர்கள் இலக்க நாணயங்களாகக் கேட்கிறார்கள் என்பது நாமறிந்த ஒன்று. அதே நேரம் சமீபத்தில் ஆர்ஈவில் (R Evil) என்ற பிணைப்பணம் பெறும் அமைப்பிடமிருந்து கூட்டு ஆய்வுக் காவல் துறை(Federal Bureau of Investigation) சிறிது சிறிதாக சிறிய அளவில் பணத்தை மீட்டெடுத்தது பலக் கொந்தர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. ‘உலகின் மிக மோசமான கொந்தர்’ என்று அமெரிக்காவை நிழல் உலகம் விமர்சித்துள்ளது. அவர்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளையும், இலவச இணைய நாணயங்களையும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கரு விழித் தடத்தின் மூலம் இனம், மரபு சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இனம், மரபு, மதம் ஆகியவற்றின் பேரால் மனித சமூகம் பிளவு படும் அபாயமும் ஏற்படுமோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
உலகளவிலான இணையப் பாதுகாப்பு,(மற்றும்) தாக்குதலிலிருந்து தப்பிக்கும் முறைகளும் பற்றிய அமைப்புகள் $13.8 பில்லியனிலிருந்து, 2026க்குள் 18.7 பில்லியன் அளவிற்கு வளர்ச்சி பெறும் என கணிப்புகள் சொல்கின்றன. எர்காங் ஸெங் (Erkang Zheng) என்பவர் ஜூபிடர் ஒன்று (Jupiter One) என்ற ஒரு குழுமம் தொடங்கியுள்ளார். அது, இணைய வழிக் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வழி முறைகளைச் சொல்கிறது. வரை கோடான (Graphs) அரணுடன் கூடிய மேகக் கணினிகள், நிறுவனங்களின் இணையச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பயனர்கள் அதைப் மீள்பார்வையிடவும், பணியாற்றவும் உதவும் வகையில் உருவாகின்றன என அந்த நிறுவனம் சொல்கிறது.

பல வருடங்களாகப் பாடுபட்டு உருவாக்கிய நம்பிக்கையை சில நொடிகளில் போக்கடிக்க முடியும் என்று சொல்வார்கள். சமகால அமெரிக்க அரசியலின் மீது நம்பிக்கையின்மை என்பது ஆதிக்கம் செலுத்துகிறது. ‘ட்ரம்பிசம்’(Trumpism) மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வாக்காளர்கள் மறுதலித்த பிறகும் இன்றைய அதிபரின் வெற்றியை ஏற்க முடியாத, ‘ஆற்று மணலில் ஊசியைத் தேடும்’ ஆதரவாளர்களை என்னவென்று சொல்வது? கன்சர்வேடிவ்(Conservative) கட்சி இதழ்கள் காற்றும் புகாத எதிரொலி அறைகளைக்(echo chambers) கட்டமைத்து இலாபம் ஈட்டுகின்றன.
பகைமை, மனக்கசப்பு, சித்தப்பிரமை ஆகியவை சமச்சீரற்ற முறையில் விரவியுள்ளது ஒரு மாகாணத்திலோ, ஒரு கட்சியிலோ மட்டுமல்ல. போர்ட்லான்ட், ஒரேகானில் பாருங்கள்; சட்டபூர்வ நடவடிக்கைகள் எதிர்க்கப்படுகின்றன. அங்கீகாரமற்று ஒரு இடத்தை ஆக்கிரமித்து அதை விட்டு வெளியேற மறுப்பவர்களின் மீது எடுக்க முயன்ற நடவடிக்கைகளுக்கெதிரான களச் செயல்பாட்டாளர்கள் ‘சிவப்பு இல்லத்தின்’ (Red House) எதிரில் திரண்டு ‘காவலர்களைக் கொல்லுங்கள் (Kill Cops)’ என்று கறுப்பும், சாம்பலும் கலந்த பதாகையை ஏந்தி கோஷமிட்டது எதைக் குறிக்கிறது? அமைப்புகளும், நிர்வாகமும், அடக்கியாள்கின்றன என்ற கருத்து நிலவுகையில் அவைகளுக்கெதிரான வெறுப்பு தோன்றாதிருக்குமா?
குடியரசுகள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது விதி முறை; ஆனால், இன்றைய சூழல் நம்பிக்கையின்மையைச் சுட்டுகிறது. 1964-ல் கூட்டாட்சியில் 75% அமெரிக்கர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்; ஆயின் தற்போதோ, ப்யூ ஆய்வு மைய(Pew Research Center) அறிக்கையின் படி 25% மட்டுமே கூட்டாட்சியை நம்புகின்றனர். கேலப் (Gallup) ஆய்வின்படி ஊடகங்களை 70% வரை நம்பிய மக்கள் தொகை தற்போது 40% ஆகிவிட்டது. இதிலும் கட்சி சார்ந்த துருவப்பாடு நிகழ்கிறது. முன்பைவிட தற்போது அமெரிக்கர்களிடையே பகைமை உணர்வு பெருகியுள்ளது. அரசியல் அறிவியலாளர்களான லில்லியானா மேசன்,(Lilliana Mason) நேதன் கல்மோ(Nathan Kalmoe) ஆகியோரின் கள ஆய்வு சொல்கிறது- வாக்காளர்களில் 50% ‘எதிர் கட்சி தீயது மட்டுமல்ல, கெடுதலும் செய்வது என்று சொல்கிறார்கள்; அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் ‘தவறாக நடந்து கொள்வார்கள் என்றால் அவர்கள் விலங்குகளுக்குச் சமானம்’ என்று 25% மக்கள் கருதுகின்றனர்.
சமூகக் கூட்டமைப்புகளிலும், சமூக நம்பிக்கையிலும் கூர்ந்த கவனம் செலுத்தி ‘பௌலிங் அலோன்’ (Bowling Alone) என்ற நூலை 2000த்தில் வெளியிட்ட ஹார்வேர்ட் அரசியல் அறிவியலாளர் ராபர்ட் டி பட்னம்,(Robert D Putnam) ஷேலின் ராம்னி கேரெட்டுடன் (Shaylyn Romney Garrett) இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘த அப் ஸ்விங்’(The upswing) என்ற புத்தகத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பியிருக்கிறார். அவர் அளவீட்டின்படி, வளமை நிறைந்த சமூகக் கூட்டமைப்புகள் குறைந்து, அதனால், சமூக மூலதனமும்(Social Capital) குறைந்து போய்விட்டது. ‘இறங்கு முகத்திலுள்ள பொருளாதாரச் சமமின்மை, பொது நலத்திற்காக விட்டுக் கொடுத்துப் போகும் தன்மைகள் குறைந்து வருவது, எரிச்சலான சமுதாயம், கலாச்சார தற்பெருமிதம் மேலோங்குதல் (Narcissism) இன்றைய அமெரிக்காவை குறி பார்ப்பதாக அவர் சொல்கிறார். உரையாளரான டேவிட் ப்ரூக்ஸ் (David Brooks) நம்பிக்கையின்மை என்ற பெருந்தொற்றை இருத்தலியலின் அச்சுறுத்தலாகப் பார்க்கிறார். ‘நம் அமைப்புகளில், நம் அரசியலில், நாம் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கை ஆகியவற்றில் குறைவு நேர்ந்தால், அதாவது சமூக நம்பிக்கை செங்குத்தாக வீழுமென்றால், தேசம் வீழ்ந்து படும்.’
அரசியல் சாம்ராஜ்யத்தில் பின்னடைவைச் சந்தித்து வரும் நம்பிக்கை இன்றைய நவீன உலகின் மற்றொரு அம்சமான முதலீயத்தில் முக்கிய நிலையைப் பெற்றுள்ளது. நாம், கல்யாண மாலை, தமிழ் ஷாதி.காம், உபர், ஓலா போன்றவற்றில் எதிர்ப்படும் முன்பின் அறிந்திராதவர்களை நம்புகிறோம். ஸ்விக்கியின் சேவையைப் பற்றியோ, ஸ்வீட் காரம், காஃபியின் பக்ஷண சுவைகள் பற்றியோ யாரோ எழுதியுள்ள விமர்சனங்களை நம்பி நாம் நம் சுவை மெட்டுக்களை மலர்த்திக் கொள்கிறோம். பொருளியலாளர்களான பாலோ சாபியன்ஸா (Paola Sapienza) மற்றும் ல்யூகி ஜிங்கேல்ஸ் (Luigi Zingales) கொடுத்துள்ள நிதி நம்பிக்கைக் குறியீட்டு ஆய்வின் படி பெரும் பொருளாதார மந்த நிலையிலும் சென்ற பத்தாண்டில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார மந்த நிலைக்குப் பின்னர் பணப்புழக்கம் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ள போதிலும் நம்பிக்கையின்மை குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படவில்லை. (கடன்) திரும்பச் செலுத்தப்படுவதில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கையில், ஏறுகின்ற வட்டி விகிதம் பூஜ்யத்தில் இருப்பதன் மர்மம் தான் புரியவில்லை.
டேவிட் ஃபாஸ்டர் வாலசின் (David Foster Wallace) நீர் அறியா மீன்களைப் போல இன்றைய நவீனப் பொருளாதரத்தில் மக்களின் நம்பிக்கை இருக்கிறது. எதுவுமே இருப்பில் கணிக்கப்படுகிறது. ‘ஒரு எலும்புத் துண்டை தன் இனத்திடம் எந்த நாயும் நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்வதை நாம் யாரும் பார்த்ததில்லை’ என்று சொன்ன ஆடம் ஸ்மித் ‘நம்பிக்கை என்பது மனிதத்தன்மையின் சிறப்பான அம்சம்’ என்று சொன்னார். நோபெல் பரிசு வெல்வதற்கு சற்று முன்னால் கென்னத் ஆரோ (Kenneth Arrow) நம்பிக்கை என்பது போற்றுதலுக்குரியது, அது சமூகச் சக்கரங்களின் மசகெண்ணய், நல் வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் அது இன்றியமையாதது என்றார். இதைச் சுலபமாக ஒரு பொருளாக வாங்க இயலாது என எச்சரித்தவர், ‘இதை நீங்கள் வாங்க வேண்டுமென்றால், நீங்கள் வாங்கியதைப் பற்றி உங்களுக்கு சில சந்தேகங்கள் முன்னரே இருக்கும்.’ சமத்துவமின்மையைப் பற்றி எப்போதுமே விமர்சிக்கும் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்,(Joseph Stiglitz) ‘பணத்தைக் காட்டிலும் உலகை இயக்குவது நம்பிக்கையே’ என்று சொன்னார்.
தங்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து விடுபட்டு ரூபாயை நோக்கி சமுதாயம் பயணித்ததே நம்பிக்கையின் அடிப்படையில் தான். நம் சட்டைப்பைகளில் கசங்கி இருக்கும் அந்தத் தாள்கள், ‘கடவுளை நம்புகிறோம்’ என்பதன் காகித வடிவம். நம் அரசின் மீது நாம் கொண்டிருக்கும் முழு நம்பிக்கை இது. பகுதி இருப்பு மட்டுமே கொண்டுள்ள வங்கிகளை (Fractional Reserve Bank), அவர்கள் பெறும் வைப்பு நிதிகளை விட அதிகமாகக் கடன் வழங்க அனுமதித்ததால் முதலீயம், பல நூற்றாண்டுகளாக இயங்குகிறது. அணுகிப் பார்த்தால் பெரும் பொருளாதாரச் சிக்கல்களை, நம்பிக்கையின்மைச் சிக்கலென உணரலாம். பகுதி இருப்பு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை இவ்வகைகளில் குறைகிறது. இதைப் போலவே நாட்டின் பொருளாதார (அதிக) பணவீக்கச் சுருள்கள் நாட்டின் நிதிக் கொள்கையின் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது; பணத்தின் மதிப்பு வீழ்ந்து படுகையில் நம்பிக்கைக்குலைவு நிகழ்கிறது.
வணிகம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழும் ஒன்றே. ஆனாலும், மானிடவியல், சமூகவியல், அரசியல் அறிவியல், உளவியல் ஆகியவற்றிலும் நம்பிக்கை இடம் பெற நவீனப் பொருளியல் நிபுணர்கள் பெரும்பாலும் விட்டுக் கொடுத்து விட்டார்கள் எனச் சொல்லலாம். வாஸர்(Vassar) கல்லூரியின் பேராசிரியர் பெஞ்சமின் ஹோ (Benjamin Ho) தன்னுடைய ‘ஏன் நம்பிக்கை பொருட்படுத்தத் தக்கது’ என்ற நூலில் பொருளாதாரத்தில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உயிர்ப்பிக்க முனைகிறார்.
ஐசக் அசிமோவின் ‘ஃப்வுண்டேஷன்’ தொடரின் கணித அறிவுமிக்க கதாநாயகனான ஹாரி செல்டன்,(Hari Seldon) சமூக முன்கணிப்புக்களுக்கான சூத்திரங்களைக் கொண்டு ‘சமூக வரலாற்றின் மூலம் சமூக நாகரீகத்தை மேம்படுத்துவதை’ தன்னுடைய உந்துதலாகக் கொண்டு, இந்த நூலை எழுதியதாக ஹோ சொல்கிறார். தனக்கும் இத்தகைய உந்துதல் ஏற்பட்டது என்று பால் க்ருக்மேன் (Paul Krugman) சொல்கிறார். ஹோ இதன் மூலம் நடத்தைப் பொருளியலின்(Behavioural Economics) தன்மையைப் பேசுகிறார். மன்னிப்புகள் வலிமையுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று ‘குறு பொருளாதாரம்’ என்ற கட்டுரையில் அவர் எழுதினார். தன்னுடைய ‘வொய் ட்ரஸ்ட் மேட்டர்ஸ்’ (Why Trust Matters) என்ற புத்தகத்தில் தன்னுடைய துணைப்புலமான கணிதத்தை விட்டு விலகி அனைத்து சமூக அறிவியலின் அடிப்படைகளைப் பற்றி பேசுகிறார்.
‘மனித நாகரீகத்தின் கதையை நாம் ஒருவரையொருவர் எவ்வாறு நம்பத் தொடங்கினோம் என்ற கதையிலிருந்தே சொல்லலாம்’ என்று ஹோ சொல்கிறார். தனியே வேட்டையாடி உண்பதைவிட கூட்டு வேட்டையிலும், கூட்டாக உண்பதிலும் நாம் நம்பிக்கையைக் கண்டு கொண்டோம். மூளை முன்புரணி அமைப்புகளின் அளவைப் பொறுத்து குழுக்கள் அமைந்தன- பெரும் அளவிலான மூளை அமைப்புகள் கொண்டவை பெரும் குழுக்களாக மாறின என்று பிரித்தானிய உளவியலாளரான ராபின் தன்பார் (Robin Dunbar) சொன்னதை ஹோ மேற்கோள் காட்டுகிறார். தன்பாரின் எண் என்று அறியப்படும் 150 என்பது பெரும் மூளையுடைய ஹோமோ சேபியன் குழுவின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சராசரியாகக் கணிக்கப்பட்ட எண்ணானது உலோகக் காலத்திலும், டூம்ஸ்டேபுக்கில் சொல்லப்பட்டுள்ள ஆங்கிலோ சேக்ஸன் காலத்திலும், இன்றைய முக நூல் காலத்திலும் மீள மீள வரும் ஒன்றாக இருக்கிற எண் என்றும் தன்பார் சொல்கிறார். இக்கருத்து பல விமர்சனங்களுக்கு உட்பட்டாலும், தொடர்பு கொள்ளும் திறனளவின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு ஏற்றுக் கொள்ளலாம். அப்படியிருக்கையில் பல இலட்சக்கணக்கான பொதுக் கூறுகள் கொண்ட சமுதாயங்கள் எப்படி உருவாகின?
இதை எளிதாகச் சாதித்திருக்கிறோம். நம்முடைய குழு, நாம் தொடர்பை உருவாக்கிக் கொள்ள வேண்டிய வெளிக் குழு எனப் பகுத்து செயல்பட்டிருக்கிறார்கள். பழங்குழுக்களின் இனம் கிராமங்களாக, நகரங்களாக, நாடுகளாக உருவெடுத்தன. நெகிழ்வான சமூக அடையாளங்களால் நம்முடைய பழங்குடியினருடன் தொடர்புகள் நிலை நிறுத்தப்பட்டன. நாம் அறியாதவராக இருந்தாலும் நம் இனத்தைச் சேர்ந்த குழுவினருடன் வணிகம் செய்வதில் அதிக நம்பிக்கை இயற்கையாகவே ஏற்பட்டது; மற்ற குழுவினர் மீது அவநம்பிக்கையும், கசப்புணர்ச்சியையும் இது சுட்டியது. மதம் ஒரு வலுவான சமுதாய பிணைப்பினை உருவாகியது; பொதுச் செயல்களில் இணக்கம், இனப்பாதுகாப்பு, மிதமான பகிர்தலுக்கான அவசியம் போன்றவை இறைத்தூதர்கள் மற்றும் பழி வாங்கும் தேவர்களின் பெயரால், மதத்தால் நிலை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே மதச் சார்பற்ற அமைப்புகள் மேலும் சிக்கலாகின. பணம் என்ற ஒன்று இல்லாத போதிலும் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கும் பழக்கம் வந்தது. இதற்கான தேவையைப் பற்றி மானுடவியலாளர்களான ப்ரானிஸ்லாவ் மலிநௌஸ்கி,(Bronislaw Malinowski) மார்செல் மூஸ் (Marcel Mauss) ஆகியோர் வியந்து எழுதியிருக்கின்றனர். ஒன்றைச் சார்ந்து இருப்பதற்கும், குழுவிலிருந்து விலக்கப்படாமல் இருப்பதற்கும் நம்பிக்கை என்பது உறுதியாக இருந்து உதவியது; வேறு சமுதாயங்களில், மனிதர்களுக்கிடையேயான நம்பிக்கைகளையும் தாண்டி சில அமைப்புகளின் பால் மனித சமுதாயம் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தது.- ரோமானிய சுரங்கங்களின் கள்ள நாணயம் உருவாகாத தொழில் நுட்பம், இடைக்காலக் கட்டத்தின் தன்னாட்சி முறை, புதிதாக உருவாகி வந்த காகிதப் பணம், நிலை பெறும் அரசுகள், ஒப்பந்தங்களை சீரான முறையில் நிறைவேற்றுவதில் நீதி அமைப்புகளின் பங்கேற்பு, மிகச் சமீபத்தில் உருவாக்கப்படுள்ள கணினிச் செயல்களின் குறியீடுகள் போன்றவைகளை நாம் எண்ணிப் பார்க்கலாம்.
ஒழுங்கான செயல்முறைகள் வற்புறுத்தப்பட்டன. மனித இனம் விரிவடைந்ததில் கடவுளைப் பற்றிய, தண்டனைகள் பற்றிய அனுமானங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. இன்றும் கூட நரகத்தைப் பற்றிய பயம் நம்மிடமுள்ளது என சமூக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். கருட புராணம் மரணத்திற்குப் பிறகு பாவம் செய்த மனிதர்கள் எப்படியெல்லாம் துன்பத்தைச் சந்திக்க நேரிடும் என்றும், புண்ணியம், பாவம் இவற்றைச் சார்ந்து இவர்களுக்கு சொர்க்கம் அல்லது நரகம் அமையுமென்றும் விரிவாகச் சொல்கிறது.
வெள்ளை உடை அணிந்து உலா வரும், அதிக சக்தி வாய்ந்த, பாகிஸ்தானின் உளவுத் துறை அமைப்பின் முகவர்களை ‘தேவதைகள்’ என அழைத்தாலும், கண்காணிக்கப்படுதல் என்பதே நம்பிக்கைக்குலைவிற்குக் கொண்டு செல்கிறது. கடவுளரின் கண்காணிப்பில் மனித இனம் பெரும்பாலும் நம்பிக்கை வைத்திருந்தாலும், மனிதர்கள் அந்தச் செயலைச் செய்கையில் எஞ்சுவது பயமும், வெறுப்பும், விலக்கமும் தான். மிகச் சிறந்த ருஷ்யக் கவிஞரான ஆன்னா அக்மடோவா,(Anna Akhmatova) ஸ்டாலினின் இரகசியக் காவல் அமைப்பிற்குப் பயந்து தன் கவிதைகளை மனப்பாடம் செய்து எழுதியவற்றை அழித்திருக்கிறார். சீன கம்யூனிச அரசின் ‘சமூக மதிப்பு திட்டம்’ (Social Credit Project), நிகழ்நிலை மற்றும் அதல்லாத மற்ற நிலைகளில், அதன் குடிமக்களின் நடத்தையைக் கண்காணிக்கும் ஒன்று. அதன் கணிப்பின்படி நல்லவர்கள் எளிதாக உலா வரலாம்; அல்லாதவர்கள் ஒரு அடி கூட சுதந்திரமாக வைக்க முடியாது!. இதில் நம்பிக்கை என்ற இயல்பான அருங்குணம், அரசின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப உற்பத்தி செய்யப்படுவதை என்னவென்று சொல்வது? வாழ்வின் இருள் பக்கங்களைப் பார்க்கும் மனிதர்கள், மாறுதல்களை எப்போதுமே வரவேற்பதில்லை. ஆனால், ஹோவிற்கு ‘நம்பிக்கையின்’ மேல் நம்பிக்கை இருக்கிறது.
நம் வரலாற்றில் ஆறில் ஒருவர் வன்முறையால் இறந்திருப்பது நமக்குத் தெரியும். அறிவியல் உலகில் உலவிய நம்பிக்கை, மனித வாழ்வை மேம்படுத்தியது. தொழில்மயமாக்கம், சுதந்திரச் சந்தை, நலமான அரசுகள், வறுமையையும், மனிதத் துயர்களையும் பெருமளவில் குறைத்திருக்கின்றன. சமீபக் காலங்களில் முற்றிலும் அழியாவிட்டாலும் பெருமளவில் பாரபட்சம் குறைந்துள்ளது. நாணயங்களின் மதிப்பு பெரும்பாலும் நிலை பெற்றுள்ளது; காலநிலை, பருவ மாற்றச் சவால்கள், அணுப்பெருக்க அழிவுகள் பற்றிய உலகளாவிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விழிப்பினை ஏற்படுத்தி வருகின்றன.
நம்பிக்கை கொணர்ந்த இத்தனை வளர்ச்சிகளுக்கு இடையே ஏன் அமெரிக்கர்கள் முன்பை விட அதிகமாக அவநம்பிக்கையில் இருக்கிறார்கள்? கடந்த நான்கு பத்தாண்டுகளாக பல நாடுகளில், மக்களின் நம்பிக்கைகளைப் பற்றி களப் பேட்டி கண்டு ‘வேல்ர்ட் வேல்யூஸ் சர்வே’ (World Values Survey) என்ற அமைப்பு தரவுகள் சார்ந்த அறிக்கை தந்துள்ளது. ஜெர்மானியர்களைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவும், தென் கொரியர்கள், ஜப்பானியர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவும் அமெரிக்கர்கள் ஒருவரை மற்றவர் நம்புகிறார்களாம். சட்டங்களின் செயல்பாடுகளும், அரசின் செயல்முறைகளும் இணக்கமாக இருப்பது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கிறது. உலக நாடுகள் பலவற்றில் அரசிடமும், அதன் அமைப்புகளிலும் மக்களுக்கு நம்பிக்கைச் சரிவு ஏற்பட்டுள்ளதைப் பார்த்து வருகிறோம். பல கலாச்சார பின்னணி உள்ள நாடுகளில் எடுக்கப்பட்ட இந்தத் தகவல்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்பதும் சிந்தனைக்குரியதே. மக்களாட்சி என்ற பெயரில் ஒரு சிலரின் அதிகாரத்திற்கும், மமதைக்கும், பிரிவினை சூழ்ச்சிகளுக்கும், மொழி சார்ந்த தற்பெருமைகளுக்கும் சாதாரண மனிதன் இடம் கொடுக்க நேரிடுகிறது. ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தங்களை பொது மனிதனைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக நினைக்கிறார்கள். திட்டங்கள், அறிவிப்புகள், ஏழைகளைப் பொது மன்றத்தில் ஏற்றி மாலை மரியாதை செய்வது, பெண்களுக்கான அரசு என்று மேடையில் முழங்குவது என்று பலவகை முகமூடிகள் அணிந்து பெருமிதத்துடன் உலா வருகிறார்கள்.
சீன நாட்டில் எடுக்கப்பட்ட மேற்சொன்ன கள ஆய்வில், சீனர்கள் ஸ்வீடியர்களுக்குச் சமமாக ஒருவரிடம் ஒருவர் நம்பிக்கை கொண்டுள்ளார்களாம். ஹாங்காங்கில் நிகழ்வதையோ, உய்கர் இஸ்லாமியர்களுக்கு நடப்பதையோ. சுரங்கத் தொழிலாளர் முதல் மருத்துவ அறிவியலாளர்கள் வரை மனித உரிமைகள் பாதிக்கப்படுவதையோ, 14 நாடுகளுடன் எப்போதுமே எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டு போர்ச் சூழலைக் கொண்டு வருவதையோ, சிறு திபெத்திய இளைஞர்களைக் கட்டாயப் படுத்தி மலைப் பகுதிகளில் இராணுவர்களாக அவர்களைப் பயிற்றுவிப்பதையோ, சுதந்திரமாகச் செயல்படாத நீதித்துறையைப் பற்றியோ அறியாதவர்களா சீனப் பொது மக்கள்? ஒருக்கால் அவர்கள் கருத்துக் கணிப்பாளரிடம் நம்பிக்கை கொண்டிருக்காமல் இருந்திருக்கலாம்; அல்லது அவர்களுக்கு இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று தோன்றுகிறதோ? ஆனால், இந்த மனநிலை இந்தியர்களுக்குத்தான் அதிக அளவில் இருக்கிறது. (சீன மக்களின் நடத்தை பற்றி எனக்குத் தோன்றுவது, ‘யதா ராஜா, ததா ப்ரஜா’)
இன்னொரு சிக்கலைப் பற்றியும் பார்க்கலாம். நவீன சிந்தனையாளரான ஃப்ரான்சிஸ் ஃபூகயாமா (Francis Fukuyama) நம்பிக்கை குறைபாடுள்ள இடத்தில் வளம் குறையுமென்றும் சீனா அத்தகைய ஒரு தேசமென்றும் சொன்னார். ஆனால், சர்வதேச அளவில் அதன் வளர்ச்சி!! வளர்ச்சியும், நம்பிக்கையும் இரு வழிப் போக்குள்ளவை- ஒன்றை மற்றொன்று ஏற்படுத்தும்- நம்பிக்கை நாணயச் செழிப்பினை உண்டாக்கும்; நாணயச் செழிப்பு நம்பிகை தரும்.
பொருளாதாரத் தேக்க நிலையால் அமெரிக்கர்களிடம் நம்பிக்கை குறைந்திருக்கலாம். வேலை வாய்ப்புகள் நம்பிக்கையை உறுதிப்படுத்தின. இயந்திரமயமாக்குதல்கள், தானியங்கிகள், நிகழ்நிலை வணிகம் போன்றவை அதிகப் படிப்பில்லாத, இந்த இயந்திரங்களை அறிய முடியாத மனிதர்களை, பொது நல அரசிடம் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. ஹோ சொல்கிறார் “ நம்முடைய பழங்குடித் தன்மை அப்படிப்பட்ட பல்வேறு இனத் தன்மையினால் எரிச்சலுற்று நம்மை பிறரிடம் அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது. ஒருகாலத்தில் கறுப்பினத்தவரை அடிமைகளாய்க் கொண்ட அமெரிக்காவில் வெள்ளையரல்லாத பெரும்பான்மையினர் மேலெழக்கூடும் என்ற சாத்தியங்களே குழு மனப்பான்மையை அதிகரிக்கலாம். இது குழுவினுள்ளே நம்பிக்கையையும், பிறக் குழுக்களின் பால் அவநம்பிக்கையையும் கொணர்ந்துவிடும். குடும்பம் சார்ந்த அமைப்புகள் குலங்களின் பால் நம்பிக்கை கொள்வது அதிகம். குழு சார்ந்த மனோ நிலை உருவாகி வலுவாகிறது. முக்கியஸ்தர்களுக்கான ஊடகங்கள் இவற்றை ஊட்டி வளர்க்கின்றன.” நமக்குத் தெரிந்தவற்றை ஊடகங்கள் மூலம் நம்பும் நம் மனோபாவம் நம் சார்பினையும் காட்டுகிறது.
பிளவுபட்ட அரசியல் வானில் நம்பிக்கையின்மை ஏற்படத்தான் செய்யும். ஆனால் இந்தப் பிளவு உண்டாக்கும் பெருவெறுப்பு, நம்பிக்கையை அளத்தலில் சிக்கலைத் தரும். தேர்தல் முன்கணிப்புகள், பின்கணிப்புகள், வேட்பாளர்களை புலம் சார்ந்து போட்டியிடச் செய்து இன, ஜாதி போன்றவற்றின் மூலம் வெற்றி பெறச் செய்தல் எல்லாமும் இந்தப் பிரிவினையால் உண்டாகிய நம்பிக்கை நிலைகுலைவின் அர்த்தங்களே! 50% அமெரிக்கர்களும் மேலாக வங்கிகளில் நம்பிக்கையில்லை என்ச் சொல்வது எதைச் சுட்டுகிறது- (அவர்களது) வங்கி திவாலாகிவிடும் என்ற ஒன்றையா அல்லது தங்கள் பொருளாதார நிலையில் அவர்களுக்கு இருக்கும் திருப்தியின்மையையா அல்லது பொருளாதாரத் திட்டங்களிலுள்ள அவர்களது அவ நம்பிக்கைகளையா? நம்பிக்கைகளை அளக்கும் குறியீடுகள் எந்த அளவில் நம்பிக்கையானவை?
தகவல் தொழில் நுட்பத்தில் நிகழ்ந்துள்ள வியத்தகு முன்னேற்றங்கள், வழிவழியான அமைப்புகளைப் போல, நிறுவனங்களிலிருந்து தனிப்பட்ட மனிதர்களுக்கு நம்பிக்கையைக் கடத்தின என்று ரேச்சல் பாட்ஸ்மேன் (Rachel Botsman) ‘நீங்கள் யாரை நம்பலாம்?’ என்ற நூலில் சொல்கிறார். 50களின் புகழ்பெற்ற செய்தியாளரான வால்டர் க்ராங்கைட்டின் ‘ சிபிஎஸ் மாலைச் செய்திகள்’ பெற்றோரின், உடன் பிறப்புகளின் குணச் சாயல்கள் உணர்த்திய அந்த நிகழ்ச்சியை நினைவு கூறுங்கள். நாம் இப்போது பார்த்து வருவதோ, ‘பிரித்து வழங்கப்பட்டுள்ள நம்பிக்கை’ அதாவது, பக்க வாட்டில் பரவும் ஒன்று.
வில்சன் என்ற புகழ் பெற்ற உயிரியலாளர் இதை அருமையாகச் சொல்கிறார்: “கற்காலத்திய உணர்வுகள், இடைக்கால அமைப்புகள், கடவுளை நிகர்த்த தொழில் நுட்பங்கள் இவைகளிடையே நாம்.” மிகப் புனிதர்கள், சிறந்த அரசியலாளர்கள், சிறந்த செய்தியாளர்கள் ஆகியவற்றின் பெருமித நிலையினை இலக்கத் தொழில் நுட்பம் துண்டாக்கிவிட்டது. நம்பிக்கை இப்போது அமைப்புகளிலிருந்து தனி நபரிடம் சென்றுவிட்டது.
ஹோவும், பாட்ஸ்மேனும் சமூக நம்பிக்கை என்னும் கள விளையாட்டாளர்களானாலும், அவர்கள், புதிய தொழில் நுட்பம் கொண்டு வரும் அதிர்வுகளை, அதன் பரவலான அமைப்பு சித்தாந்தத்தை, இலக்கப்படுத்தப்படுதலில் மாறுபாடான எண்ணம் கொண்டுள்ளார்கள். தொடரேட்டுத் தொழில் நுட்பம், கணிதம், கணக்கிடுதல் ஆகியவற்றின் அற்புதமான ஒரு படைப்பு. மைய வங்கிகளின் மேலுள்ள நம்பிக்கையை அது கணினிச் செயலிகளுக்கு மாற்றிவிட்டது. இலக்க நாணயங்களில் நிதி ஒப்பந்தங்கள் தொடங்கி, வர்த்தகம், சேமிப்பு வரை வங்கிகள் தலையீடு இல்லாமல் செய்ய முடிகிறது. பாட்ஸ்மேன், இந்த தொடரேட்டு நுட்பம் இன்னும் பத்தாண்டுகளில் இணையத்தைப் போல உலகையாளும் என்று சொல்கிறார்.
ப்ளாக் செயின் மனிதர்களுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையின் உறுதுணையாக இருக்கிறது என்பதில் ஒரு மாயம் ஒளிந்திருக்கிறது. பிட்காயின் வங்கியின் தேவை இல்லாமல் செய்திருக்கலாம்- ஆனால், அவை நிழல் செயல்களிலும் அல்லவா பெரும் பயனைத் தருகிறது?
பிட்காயின் மின்சக்தியை அதிக அளவில் உட்கொள்ளும் பஹாசுரன். கிட்டத்தட்ட 1400 பரிவர்த்தனைகளை ‘விசா’ செய்கிறது என்றால் ஏழேஏழு பரிவர்த்தனைகள் மட்டுமே பிட்காயினில் சாத்தியமாகின்றன. அதிக நேரம்- ஒரு பரிவர்த்தனைக்கு 10 நிமிடங்களுக்கும் அதிகமாக ஆகிறது. நிதித் துறையின் ஒரு முக்கிய அம்சமாக இது உருவெடுக்க இதில் பல அம்சங்கள், அரண்கள் தேவைப்படும்.
நம்பிக்கை குறைபாடு என்பது, பெரும்பாலும், இனக்குழு அடையாளங்களைப் பற்றியிருக்கும் சமயத்தில், மறுப்பாளர்களை மறுதலித்து எழும்பிய குரல் ஒரு பொருளாதாரரின் குரலாக இருப்பது போற்றக்கூடியதே!
நம்பிக்கை என்பது அளவிடும் ஒன்றல்ல; அது உறவெனும் உணர்வு சார்ந்த ஒன்று. யாரிடம், எப்போது என்பதே முக்கியக் கேள்வி. கூட்டு நம்பிக்கையின் அற்புத விளைவுகளை நாம் பார்த்து வருகிறோம். கோவிட் எனும் தீநுண்மியின் மரபணு வரைபடத்தை சீன அறிவியலாளர்கள், உலக அறிவியல் சமூகத்திடம் பகிர்ந்ததும், அனைவருமாக தடுப்பூசி மற்றும் மருந்துகளை உருவாக்க முனைந்ததும் மனித நலனுக்கான நம்பிக்கையைக் கொண்டு செயலாற்றியதன் விளைவல்லவா? பொதுமுடக்கக் கால கட்டத்தில் அதிக அளவில் மக்கள் அரசின் நெறிமுறைகளுடன் ஒத்துழைத்ததும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்ததும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்ததும் இத்தகைய செயல்பாடுகள் தங்கள் நலத்திற்கே என மக்கள் நம்பியதன் வெளிப்பாடே. நிதி சுழற்சி, தொழில் ஆகியவை முடங்கினாலும், அதிக வலுவோடு மீளூம் என்பதும் நம்பிக்கையே. மனிதர்களிடம் மதிப்பு கொண்டு ‘தடுப்பூசி கடவுச் சீட்டுக்களை’ விட அவர்களைப் பல மாநிலங்கள் நம்புவதும் நல்ல முன்னேற்றமே! ஆயினும், வதந்திகள், ஊகங்கள், தயக்கங்கள் போன்றவை, இந்தத் தொற்றுக் காலத்தில் எடுக்கப்பட்ட அறிவியல் மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளின் வெற்றியை தாமதித்தன. அமெரிக்காவின் கடுங்கசப்பான குழுப் பூசல்கள் இந்தப் பெருந்தொற்று நேரத்தில் தலை தூக்காது என்ற எண்ணமும் பொய்த்துப் போனது. இது அவ்வளவு எளிதானதல்ல. மொத்தத்தில், அரசியலில் குறைந்து வரும் நம்பிக்கை, பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்று வருகிறது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன கணியன் பூங்குன்றனார், ‘வசுதேவ குடும்பகம்’ என்ற வேதம், ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்ற பொது வாக்கு அனைத்தும் மனித இனம் முழுவதற்குமான நம்பிக்கை. எத்தனை மொழிகள், எத்தனை மாறுபட்ட கலாசாரங்கள், எவ்வளவு மக்கள் அனைத்தையும் இணைக்கும் பாரதப் பண்பாடு, நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டுள்ளது. நாம் உலக நாடுகளுக்கு ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியை இலவசமாக வழங்கியதும், உலக நாடுகளுக்கு சக மனித நேசத்தை அதன் மூலம் எடுத்துக் காட்டியதும் நமது தனித்தன்மையினால் அல்லவா? பரஸ்பரம் என்ற சொல்லின் பொருளை உலகம் அறிந்து கொண்டால் அனைத்தும் நலமே! ஹவாலா பரிவர்த்தனைகள், பினாமி சொத்துக்கள், பணச்சலவை செயல்பாடுகள் இயங்குவது நம்பிக்கையின் அடிப்படையிலே! நிழல் செய்கைகளில் தென்படும் நம்பிக்கை நேர் செய்கைகளில் குறைந்து போவதன் விசித்திரத்தை என்னவென்று சொல்வது?
மூலக் கட்டுரை: BELIEVE YOU ME by IDREES KAHLOON: https://www.newyorker.com/magazine/2021/07/26/are-americans-more-trusting-than-they-seem
பானுமதி.ந