நடிகன்

தெருமுனையில் ‘வாராயென் தோழி வாராயோ’ கரகர குரலில் ஒலித்து, குறைந்தது மூன்று மாதமாகத்  தினமும் நாலைந்து முறை போட்டு ரிக் கார்டே தேய்ந்து போயிருப்பதை அறிவித்தது. ‘டாக்கீஸ் வண்டி வரும் முன்னே வாராயென் தோழி வரும் பின்னே’ என்று ஆர்.சி. பள்ளிக்கூட வாத்தியார் சூசை வாரத்தில் ஒருமுறை  அந்தத் தெருவில் இருக்கும் ஆண் பெண் குழந்தைகள் அனைவரிடமும் சொல்லிப்  புன்னகையை வசூலித்து விடுவார். முருகன் டாக்கீஸ் வண்டியை மாடசாமி மாமூ ஒட்டி வருவார், அதற்கு உள்ளே முன்னங் கால்கள் இரண்டையும் கைகளைப் போலவைத்து உட்கார்ந்து கொண்டு பாட்டு கேட்கும் நாயின் உருவப் படத்துடன் கிராமபோன் சுற்றிக் கொண்டிருக்கும். அதன் அருகில் பலவேசம் அண்ணன் உட்கார்ந்திருப்பார். ரிகார்டு முடிந்ததும் அதை எடுத்து மறுபக்கம் போடுவது, அது முடிந்ததும் அடுத்த ஒரு தேய்ந்த ரிக் கார்டு  போடுவது, வண்டிக்குப் பின்னால் ஓடி வரும் பொடியன்களுக்கு சினிமா நோட்டிஸ் தருவது என்று முக்கால் வேலைகளைப் பலவேசம் அண்ணன்தான் கவனித்துக் கொள்வார். இது தவிர இரண்டு மூன்று பாடல்களுக்கு நடுவே அன்று டாக்கீஸில் ஓடும் படம், எந்தெந்த நடிகர்கள் நடிகைகள் நடிக்கிறார்கள், அவர்களுடைய பொய்யான வயசு என்ன, சண்டைக் காட்சிகள் விவரம், கலர்ப் படமா இல்லை கறுப்பு வெள்ளையா என்ற விவரங்களையும் மைக்கில் சொல்லுவார்.  மைக் அவர் தொண்டைக்குள் அடைத்துக் கொண்ட மாதிரி குரலில் ஒரு கர கர .

டாக்கீஸ் வண்டி வருவதைக் கேட்டுப் பெரியசாமி தட்டில் இருந்த கடைசி இட்டிலியை வாய்க்குள் அடைத்துக் கொண்டான். “என்னமோ செம்புலி  ஐயனாரப் போய்க்கும்புடறதுக்கு ஓடறது மாதிரியில்லே பறக்குறான். பாடத்தப் படிக்குறதுக்கு இதுலே அரைக்காவாசி ஆத்தரத்தைக் காமிச்சா நல்லா மார்க்கு வாங்குற வளிக்காச்சும் ஆகும்!” என்று அவன் அம்மா குருவம்மா கத்துவதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே வீட்டுக்கு வெளியே ஓடினான்.

அவன் வீட்டுக்கு இரண்டு கட்டிடங்கள் முன்னால்தான் வண்டி வந்து கொண்டிருந்தது. தினமும் செய்கிற வேலையில் அலுப்புற்றவை போல வண்டிக்கு முன்னால் கட்டியிருந்த இரண்டு மாடுகளும் கழுத்தை அசைத்து  அசைத்து ஊர்ந்தன. வண்டியின் பின்னால் சிறுவர்கள் சிறுமிகள் கூட்டம் கைகளை நீட்டியபடி “அண்ணே அண்ணே எனக்கு நோட்டிசு” என்று குரல்களை எழுப்பிய வண்ணம் ஓடி வந்தார்கள். பலவேசம் அண்ணன் சில கைகளுக்கு மஞ்சள் நிறத்திலும், வேறு சில கைகளுக்கு சிவப்பு நிறத்திலும் அடிக்கப்பட்டிருந்த காகிதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவன் வலது கையில் வாங்கிய மஞ்சள் நோட்டிசை இடது கைக்கு மாற்றி மறைத்துக் கொண்டு மறுபடியும் வலது கையை நீட்டி “அண்ணே எனக்கு சிவப்பு கலர்” என்று கெஞ்சினான். அதற்குள் அவனுக்குப் பக்கத்திலிருந்த ஒரு சிறுமி “அண்ணே , ரெண்டு வாங்கப் பாக்கறாண்ணே” என்று கத்தினாள். பலவேசம் இரண்டாவது தடவையாக நீட்டியவனின் கை மீது ஒரு அடி வைத்தார். அவன் வலி பொறுக்காமல் கத்தியபடி விருட்டென்று கையை இழுத்துக் கொண்டான். 

பெரியசாமி நோட்டிசுக்காக வண்டியின் பின்னால் ஓட வேண்டியதில்லை. ஊரில் உள்ள பெரிய மனுசா வீட்டு முன் வண்டியை நிறுத்தி நோட்டிசைக் கொடுப்பது பலவேச அண்ணனின் வழக்கம். ஊர்ப் பெரிய மனுசர்களில் பெரியசாமியின் அப்பா முத்துச்சாமியும் ஒருவர். அவர் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசில் வேலை பார்க்கிறார். வரி வசூலிக்கிற ஆள் என்றால் சும்மாவா என்று ஊரில் நினைப்பு இருந்தது. அது அவரைப் பெரிய மனுசாக்களில் ஒருவராக ஆக்கி விட்டிருந்தது. தினமும் வேண்டுமென்றால் கூட பலவேசம் அண்ணன் இல்லாமலே நோட்டீசு அவனுக்குக் கிடைத்துவிடும்.  ஆறுமுகம் கொண்டு வந்து கொடுத்து விடுவான். பலவேசம் அண்ணனின் மூத்த மகன் ஆறுமுகம். பெரியசாமியின் வகுப்பில்தான் ஆறுமுகமும் படிக்கிறான். இரண்டு பேரும் ரொம்ப நெருக்கம் என்று அவர்கள் வகுப்பில் படிக்கும் தனலட்சுமி சொல்லுவாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முருகன் டாக்கீஸில் என்ன படம் வரும் என்று பெரியசாமிக்கு வியாழக்கிழமையே காலையில் தெரிந்து விடும். வீட்டுத் தோட்டத்திலிருந்து  பறித்து வரும் கொய்யாப் பழம், மாங்கா, கொடுக்காப்புளி என்று  பெரியசாமி ஆறுமுகத்துடன் பங்கு போட்டுக் கொள்வான்.

தனலட்சுமியும் அவர்கள் கூடவே இருப்பாள். அவள் கணக்கில் வகுப்பில் முதல் மார்க். அவர்களுடைய கணக்குப் பாட சந்தேகங்களை அவள்தான் தீர்த்து வைப்பாள். பெரியசாமி அவளுக்கும் கொய்யாப் பழம், மாங்கா, கொடுக்காப்புளியைக் கொடுப்பான். 

அன்று பள்ளி ஆரம்பிக்கும் முன் அவர்கள் மூவரும் வழக்கம் போல ஸ்கூல் வாசலுக்கு எதிரே இருக்கும் கடை முன்னே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நாளைக்கு என்ன படம் போடப் போறாங்க தெரியுமா?” என்று ஆறுமுகம் சிரிப்புடன் பெரியசாமியைக் கேட்டான்.

“எம்ஜியாரா, சிவாஜியா?’

“இப்ப ஓடுறது எம்ஜியார் படந்தானே? நாளைக்கி சிவாஜி படம்தான்” என்றாள் தனலட்சுமி.

“கரெக்ட்” என்றான் ஆறுமுகம்.

பெரியசாமி சற்றுப் பொறாமையுடன் தனலட்சுமியைப் பார்த்தான்.

ஆறுமுகம் தனலட்சுமியிடம் “ஒரு சிவாஜி இல்லே, ஒம்பது சிவாஜி வராரு” என்றான்.

பெரியசாமி “நவராத்திரி” என்றான். “போன தடவை வந்தப்போ நான் பாக்காம முடியாமப் போயிருச்சு.”

தனலட்சுமி “நான் பாத்தேன். அதெப்படி ஒம்பது ஆளுங்க ஒரே ஆளு மாதிரி  இருக்க முடியும்? நம்புற மாதிரி இல்லியே?” என்று உதட்டைச் சுழித்தாள்.

“சம்பூர்ண ராமாயணத்திலே மாத்திரம் பத்து தலை ராவணன் வந்தப்போ அன்னிக்கி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னியே” என்று பெரியசாமி அவளை மடக்கினான் .

“அதானே! சரியாப் பிடிச்சேடா” என்று ஆறுமுகம் பெரியசாமியின் கையைப் பிடித்துக் குலுக்கினான். 

“அது சாமி படம். என்னா வேணும்னாலும் கதைன்னு ரீல் விடலாம்.அடிச்சு விடலாம். இது இப்ப நடக்குதுன்னுல்லே சொல்றாங்க. அதனாலேதான் நம்புற மாதிரி இல்லேங்கிறேன்” என்றாள் தனலட்சுமி.

பெரியசாமி ஆறுமுகம் பக்கம்  திரும்பி “நாளைக்கி படம் பாக்கப் போவோமா?” என்று கேட்டான் பெரியசாமி. “உங்க அப்பாகிட்டே நீ சொன்னேன்னா  நாம  ஜாலியா டிக்கட்டு எதுவும் வாங்காமலே போயிறலாம்! தரையில டிக்கட்டு வாங்கிட்டுப் போயி உக்காந்தா முன்னாலே இருக்கற ஆளோட தல மறைக்கும்,  கஷ்டப்பட்டு மணலைக் குமிச்சு அது மேலே உக்காந்து பாத்தாதான் படம் தெரியும். உங்கப்பா கூடப் போனா  ஸ்டையிலா சேர்லே உக்காந்து பாக்கலாமே!” 

ஆறுமுகம் பதில் எதுவும் சொல்லாமல் நண்பர்கள் இருவரையும் பார்த்தான்.

“ஏண்டா பேசாம இருக்கே? உனக்கு ஏதாச்சும் வேலை இருக்கா நாளைக்கி?” என்று பெரியசாமி கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நாளைக்கி சினிமா பாக்கப் போகலாம். ஆனா எங்கப்பா கிட்டே கேக்க முடியாது” என்றான் ஆறுமுகம்.

“ஏண்டா? அவரு திட்டுவாரா?”

“ம், ஹூம். அவரு வீட்டிலே இருக்குற எங்களையே  சினிமா பாக்கக் கூட்டிட்டு போக மாட்டாரு. எங்க சொந்தக்காரங்க வரப்போ உங்க டாக்கீசுதானே உங்க தியேட்டரிலே வந்துருக்குற சினிமாக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டா, மாட்டேன்னுடுவாரு. அப்பிடி மொகத்துக்கு நேரே சொல்ல முடியாத யாராச்சும் வந்தா அவரே டிக்கட்டு எடுத்துக் குடுத்து அவங்களை அனுப்புவாரு.”

மற்ற இருவரும் திடுக்கிட்டு கோரஸாக “என்னாது? டிக்கட்டு எடுத்துக் குடுத்து  அனுப்புவாரா?” என்று கேட்டார்கள். 

ஆறுமுகம் ஆமென்று தலையை அசைத்தான். அவன் விளையாடுகிறானோ என்று எண்ணி பெரியசாமி ஆறுமுகத்தை உற்றுப் பார்த்தான். அவன் முகம் சீரியசாக இருந்தது. அவன் சொன்ன விஷயத்தின் வலி அவன் முகத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது போலக் காட்சியளித்தான். 

பெரியசாமிக்கும் தனலட்சுமிக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த மௌனத்தைக் கலைத்து விட்டு ஆறுமுகம் அவர்களிடம் “ஒரு நா நாங்க வீட்டிலே உக்காந்து பேசிட்டு இருக்குறப்போ எங்கப்பா சொன்னாரு. அவரு வேலை பாக்குற முருகன் டாக்கீசு நஷ்டத்துலே ஓடிக்கிட்டு இருக்கு, மூடுங்கன்னு அவரு கிட்டே அவங்க குடும்பத்திலே இருக்குறவங்க சொன்னாலும் அவரு கேக்க மாட்டேங்கிறாரு. அவருக்கு சினிமா மேலே அம்புட்டு ஆசை, நஷ்டம் வர்ற மாதிரி லாபமும் வரும்னு சொல்லி நஷ்டத்திலேயே ஒட்டிக்கிட்டு இருக்காரு. இப்ப உங்க எல்லாரையும் சினிமா பாக்க நான் அழைச்சிட்டு போனா அவரு நம்பளை  டிக்கட்டு வாங்க விடமாட்டாரு. நாமளும் நம்ம சொந்தக்காரங்களும்னு ஒரு பத்து பதினஞ்சு பேரு ஒரு மாசம் ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா டிக்கட் வாங்காம போனா நம்மாலே அவருக்கு நஷ்டம்தானேன்னுதான் நானும் போறதில்லே. மத்தவங்களையம் என் பேரைச் சொல்லிக்கிட்டுப் போக விடறதில்லேன்னாரு” என்றான்.

அப்போது பள்ளிக்கூட முதல் மணி ஒலித்தது. அவர்கள் மூவரும் வகுப்பை நோக்கி ஓடினார்கள். 

முத்துச்சாமி படு எரிச்சலில் இருந்தார். அவரது அலுவலகத்தில் டைபிஸ்ட்டாக இருந்த கோவிந்தராவுக்கு சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இரண்டு நாள் முன்பு நெஞ்சு வலி அதிகமாக இருக்கிறது என்று மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மனிதன் இன்று காலை இறந்து விட்டதாக அலுவலகத்துக்குச் செய்தி வந்தது. அலுவலகத்தினருடன் அவரும் கோவிந்தராவின் வீட்டிற்குச் சென்று தன் இரங்கலைத் தெரிவித்து விட்டு வந்தார். 

கோவிந்தராவ்தான் அவர்கள் அலுவலகத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கிளப்புக்கு செகரட்டரியாக இருந்தார். அந்தக் கிளப்பில் விளையாடும் ஒரே விளையாட்டு சீட்டாட்டம்தான். அலுவலக நாள்களில் மட்டுமே மாலையில் நடக்கும் கிளப்பில் அந்த அலுவலகக் கட்டிடத்தில் இருந்த பல்வேறு விற்பனை வரிக் கிளை அலுவகங்களில் வேலை பார்த்தவர்கள்தாம் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் இடது கையிலும், மேஜைக்கு அடியிலுமாக வருவதை  வீட்டுக்கு கொண்டு செல்லும் விருப்பம் இல்லாதவர்களாக  அலுவலக வளாகத்துக்குள்ளேயே அதைத் தொலைத்து விட வேண்டும்  என்று கிளப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆபீஸ் விட்டு ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் ஜமா எட்டு மணி வரை கூச்சலும் ஆர்ப்பாட்டமுமாய் ஓடும். ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற நாள்கள் எல்லாவற்றிலும்  முனைப்புடன் செயல்படும் இந்தக் கூட்டத்தில் முத்துச்சாமியும் பங்கு பெற்றிருந்தார். முத்துச்சாமிக்கு ஏன்தான் இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, பண்டிகை நாட்கள் எல்லாம் வருகின்றனவோ என்று அவைகளை அவர் வெறுப்புடன் பார்ப்பார். 

இன்று கோவிந்தராவின் நினைவுக்கு மரியாதை செலுத்தும் முகமாக அலுவலகம் நான்கு மணிக்கு மூடப்படும் என்றும் கிளப் நடை பெறாது என்றும் தெரிவித்து  ஒரு சுற்றறிக்கை மூன்று  மணிக்கு வந்தது. இன்று வெள்ளி நாளை இரண்டாம் சனி பிறகு ஞாயிறு என்று மூன்று நாள்கள் சீட்டாட்டம் கிடையாது என்று முத்துச்சாமி படு எரிச்சலில்  இருந்தார். ஒரு நாளைப் போல அவர் வீட்டுக்கு ஒன்பது மணிக்கு வருவதைப் பார்த்து அவர் மனைவி குருவம்மா ஒரு நாள் ஊரிலிருந்து வந்திருந்த அவருடைய தங்கையிடம்” “தெனமும் இந்த நேரத்துக்குத்தான் வராரு. ஆபீசுலே அப்பிடி ஒரு வேலை. அப்பிடி ஒரு சொக்குப் பொடி போட்டு வச்சிருக்கு சீட்டு,” என்றாள்.

அவர் திடுக்கிட்டு மனைவியைப் பார்த்தார்.

“சீட்டா?” என்று புரியாமல் தங்கை கேட்டாள்.

“ஆமா. ஆபீசுலே உக்காந்திருக்கிற சீட்டுக்கு அவ்வளவு பலம் ஜாஸ்திங்கிறேன். பிள்ளைங்க பொண்டாட்டி எல்லாம் இந்த மயக்கத்துக்கு அப்புறம்தான்!”

மயக்கம்!

“சரி, சரி, வா. இன்னிக்கி என்ன பலகாரம்? பசி வயித்தைக் கிள்ளுது” என்றபடி அவர் உள்ளே போனார்.

இப்போது அவர் வீட்டுக்குப் போனால் அவள் அவரை நம்ப முடியாதவளைப் போலப் பார்க்கப் போகிறாள். வீட்டில் போய் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. 

அவர் ஆறு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த போது  எதிர்பார்த்தபடியே அவரது மனைவிக்கும் பையனுக்கும் பெண்ணுக்கும் முகங்களில் அப்படி ஒரு ஆச்சரியம்.

அவர் மனைவி பையனிடம் “டேய் பெரியசாமி, வாசல்லே போயி மானத்தைப் பார்த்திட்டு வா” என்றாள்  அந்தப் பொல்லாதவனும் வேகமாக ஓடிப் போய் விட்டுத் திரும்பி உள்ளே வந்து “ஆமாம்மா. மழை வந்து கிட்டே இருக்கு” என்று சிரித்தான். பெண் அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்துத் தன் மகிழ்ச்சியைக் காண்பித்தாள்.

அவர் உடுப்பைக் கூடக் கழற்றாமல் சோபாவில் சாய்ந்து கொண்டார்.   

உள்ளே சென்ற அவர் மனைவி காப்பி கலந்து கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள்.

அப்போது முருகன் டாக்கீஸ் லவுட் ஸ்பீக்கரிலிருந்து “போகாதே, போகாதே என் கணவா” என்ற பாடல் காற்றில் மிதந்து அவர்கள் வீட்டுக்குள் வந்தது. பெரியசாமியின் வீட்டுக்குப் பின்புறத்திலிருந்த இரண்டு மூன்று வயல்

காடுகளைத் தாண்டியிருந்த ஓர் இடத்தில்தான் முருகன் டாக்கீஸ் இருந்தது. ஒரு தடவை வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு மாதத்துக்கும் மேலாக ஓடிய போது இரவில் பதினோரு மணி நிசப்தத்தில் சிவாஜி ‘வரி, வட்டி, திரை, கிஸ்தி…யாரைக் கேட்கிறாய் வரி?’ என்று  தினமும் சிம்மக் குரலில் கர்ஜிக்கும் போது அவருக்கு அடுத்த வீடு ராமசாமி இன்கம்டாக்ஸ்காரர்களைத் திட்டிப் பேசுவது நினைவுக்கு வந்து சிரிப்பைக் கொடுத்தது. 

“வெள்ளிக்கிழமையும் அதுவுமா, விளக்கு வைக்கிற நேரத்துல போடற பாட்டைப் பாரு” என்றார் முத்துச்சாமி.

“ஏங்க, இன்னிக்கி நீங்க சீக்கிரம் வந்திருக்கீங்க. சினிமாக்குப் போலாமா? இன்னிலேந்து நவராத்திரி போட்ருக்காங்களாம்” என்றாள் குருவம்மா ஆசையுடன்.

“அது ஏற்கனவே ரெண்டு தடவை பாத்த படமாச்சே” என்றார் முத்துச்சாமி. 

“இருந்தா என்ன? நாலு வருஷம் முன்னாலே பாத்ததுதானே? சிவாஜி சாவித்திரி ஜோடி ரொம்ப நல்லா இருக்குமே. பாட்டெல்லாமும் நல்லா  இருக்கும் கேக்குறதுக்கு” என்றாள் அவர் மனைவி விடாமல்.

பெரியசாமி எழுந்து உள்ளே சென்றான்.

அதுவும் சரி, ஒரு இரண்டு மூன்று மணி நேரத்தைக் கழிக்கலாமே என்று அவருக்கும் தோன்றியது.  

“சரி போவோம் வா.” என்றார். 

உள்ளே சென்று அலங்கரித்துக் கொண்டு வந்தவள் “கொல்லப்புரத்துலே வேலுவும் இருந்தான். சினிமாக்குப் .போயிட்டு வரேன்னு சொன்னா  

அவனும் செல்லியும் வரேங்கறாங்க. பாவம் அவங்களும் காசு குடுத்து எப்பிடி சினிமாக்கெல்லாம் போக முடியும்? நம்மளோட வந்தா யாருக்கும் டிக்கட்டு வாங்க விட மாட்டாரே அந்த தியேட்டரு மானேஜருன்னுதான் சரி வாங்கன்னுட்டேன்”  என்றாள்.

“ஆறு டிக்கட்டா ? சரிதான் போ” என்று முத்துச்சாமி சிரித்தார். வேலுவும் செல்லியும் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள்.

அவர்கள் கிளம்பிய போது பெரியசாமியைக் காணவில்லை. குருவம்மா அவன் பெயரைச் சொல்லிக் கத்திக் கூப்பிட்டாள். பதிலில்லை.  உள்ளறையிலிருந்து முனகல் சத்தம் வந்தது. அவள் பதறிக் கொண்டு உள்ளே சென்றாள். கட்டிலில் பெரியசாமி படுத்திருந்தான் முனகலுடன்.

“என்னடா தம்பி, என்னா ஆச்சு?” என்று குருவம்மா அவன் கன்னத்திலும் கழுத்திலும் கை வைத்துப் பார்த்தாள்           

“வயித்தை வலிக்குது. ரொம்ப வலிக்குதும்மா” என்றான் அழுகுரலில். 

அவள் கணவனிடம் சென்று சொன்னாள்.    

அவர் அவனை வந்து பார்த்தார். அவன் முனகல் அதிகமாயிற்று.

“டாக்டருகிட்டே போலாமாடா?” என்று முத்துச்சாமி கேட்டார்.

அவன் மறுத்துத் தலையை ஆட்டினான்.

“இவனோட பெரிய ரோதனை! டாக்டருன்னா வர மாட்டேன்னு அடம் பிடிப்பான்” என்று வெளியே வந்து வேலுவைக் கூப்பிட்டார்.

ஒரு காகிதத்தில் எழுதி “மீனாட்சி மெடிகல்ஸ்லே போயி இந்த மருந்தை வாங்கிட்டு வா” என்று பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

உள்ளேயிருந்து வந்த அவர் மனைவி “இவனைப் படுக்கப் போட்டுட்டு நாம எங்கே சினிமாக்குப் போறது? என் அதிருஷ்டம் வாச வழியா வந்திட்டு திரும்பில்ல ஓடிப் போயிருது. நமக்கு விதிச்சது சமயக்கட்டுதான். இந்த வயித்துவலிக்காரப் பிள்ளைக்கு ஏதாச்சும் தனியா பண்ணி கொடுக்கணுமே” என்று அலுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.  

வேலு மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்த போது யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை. அவன் பெரியசாமி படுத்திருந்த அறைக்குள் சென்று பார்த்தான். கண்களை மூடிப் படுத்திருந்த பெரியசாமி நடமாட்டம் கேட்டுக் கண் விழித்தான். வேலு அவன் அருகில் சென்று “கால் மணிக்கு முன்னாலே இறாலு வறுவல் இருக்கு. உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே சாப்புடுறீயான்னு  செல்லி கேட்டப்போ வாங்கி வாங்கிச்  சாப்பிட்டே.  இப்ப திடீர்னு வயித்து வலி வந்திருச்சா? சினிமாக்கு என்னையப் போக விடாம கெடுத்துப் போட்டியே சாமி!” என்று சற்று மனத்தாங்கலுடன் பார்த்தான். 

***

One Reply to “நடிகன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.