இவர்கள் இல்லையேல் – அத்தியாயம் 6
[தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி]
மைலோவுக்கு உடல்நலம் குன்றி வர முடியாமல் போனபோது , அவளது இடத்தில் வேலை செய்ய வந்தவள் தான் சமேலி. மின்னலைப் போல வந்து மின்னலைப் போல மறைந்து விடுவாள். வேலையில் மிகவும் சுத்தம். சுறுசுறுப்பும் கூட. அழகு நிலையத்தில் வேலை செய்து வந்த அவளது மூத்த சகோதரி, தானாகவே யாரோ ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவனைத் தான் மணப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கவே, பயந்துபோன சமேலியின் தந்தை, சமேலிக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடி அவசர அவசரமாக எல்லாத் திருமண ஏற்பாடுகளையும் செய்து விட்டார். மணமகன் ஏதோ அரசாங்க அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருந்தான் சற்றே மாறுகண் உடையவன். அதிலும் சமேலிக்கு வேடிக்கைதான். என்னைப் பார்க்கிற சாக்கில், வேறு யாரை வேண்டுமானாலும் பார்க்கலாம் இல்லையா பீஜி என்று சிரிப்பாள்.
அவளுடைய அக்கா தன் சாப்பாட்டிற்கு மட்டுமே வீட்டிற்கு பணம் கொடுப்பாள். நக பாலிஷுக்கும் அலங்காரப் பொருட்களுக்கும் செலவழித்தது போக, மீதி பணத்தை தனியாக வங்கியில் கணக்கு துவக்கி சேர்த்து வைத்திருந்தாள்.
சாமர்த்தியம் இல்லாத தகப்பன் அல்லது கணவனோ இருக்கையில் பெண்களுக்கு இப்படி எல்லாம் தான் தகிடுதத்தம் செய்யவேண்டியிருக்கிறது. சமேலிஅவளுக்கு நேரெதிர் மாதிரி. சம்பாதிக்கிற பணம் முழுவதையும் விசுவாசமாக தன் அம்மாவிடம் கொடுத்து விடுவாள்.
“திருமணமான பிறகு நான் திட்டவட்டமாக சொல்லிவிடப் போகிறேன் ஒன்று, வீட்டிலிருந்து வீட்டு வேலையை கவனிப்பேன் அல்லது வெளியே சென்று வேலை செய்வேன். இரண்டும் ஒரே நேரத்தில் என்னால் செய்ய முடியாது. நான் கொத்தடிமை இல்லை” என்பாள். எனக்கு அவள் பேசுவதை கேட்டு சிரிப்பு வரும். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற எல்லா பெண்களையும் கரையேற்ற நீ ஒருத்தியே போதும் சமேலி என்று சொல்லிச் சிரிப்பேன்.
எந்நேரமும் ஏதாவது பாட்டு ஒன்றை பாடிக் கொண்டே இருப்பாள்.
நான், “தேனிலவுக்கு எங்கே போவதாக எண்ணம்?” என்று அவளை வம்புக்கு இழுப்பேன். என் அப்பா அம்மா எந்த தேனிலவுக்கும் போகவில்லை. நாங்கள் இத்தனை பேர் பிறக்க வில்லையா என்ன? நான் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள மாட்டேன். “நாம் இருவர், நமக்கு இருவர்.” வரும் சம்பளத்தில் கவனமாக குடும்பம் நடத்தினால் வசதியாகவே இருக்கலாம் என்பாள் சந்தோஷமாக.
திருமணத்திற்குப் பின், பிறந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம், என்னைப் பார்க்க வருவாள். போன சந்திப்பிற்கும் இந்த சந்திப்பிற்கும் இடையில் நடந்தத அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வாள். பேராசை அற்றவள். சிறுசிறு நிகழ்வுகளையும் ரசித்து, வாழ்க்கைக்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்திக் கொள்ள எனக்கு கற்று தந்தவள் சமேலி.
சமேலிக்கு திருமணமாகி, அவள் தன் சிறு சாம்ராஜ்யத்தை நிர்வாகிக்கச் சென்றபிறகு வந்தவள் சுந்தரி. பெயருக்கேற்ற அழகி. அம்மன் சிலை போல கருப்பாக இருந்தாலும், வாட்ட சாட்டமான உடல் வாகு கொண்ட அழகி. வேலையை ஆரம்பிப்பதற்கு முன் வாசல் முற்றத்தில் அமர்ந்தே நிதானமாக பீடி குடிப்பாள். பிறகு தேநீர். வேலையை தொடங்கினால், புல்லட் வண்டி போல, முடித்த பிறகுதான் நிறுத்துவாள். சில சமயம் தானாகவே தன் வீட்டு கதைகளையும் அக்கம்பக்கத்து கதைகளையும் பேசுவாள். சிலசமயம், அதற்கு முற்றிலும் மாறாக,” நான் வேலை செய்யும் போது நடுவில் பேசாதே பீஜி! எனக்குத் தொந்தரவாக இருக்கிறது” என முகத்தில் அறைந்த மாதிரி சொல்லிவிடுவாள்.
ஒருநாள், “என் கணவன் எழுத்துக்கூட்டிப் படிக்க தெரியாதவன்தான். ஆனாலும் , இன்று நாளிதழில் உன் படம் வந்திருக்கிறதென்று சொன்னான் பீஜி? நிஜமாகவா?” என்று கேட்டாள். அது என்னைப் போலவே இருக்கும் வேறு யாரோ என நான் சிரித்து மழுப்பி விட்டேன். தேர்தல் சமயத்தில், ராஜேஷ் கன்னா வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்த போது, இவளது கணவன், நீ வெளியே போகக்கூடாது என்று இவளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டானாம். எங்காவது ராஜேஷ் கன்னா என்னை பம்பாய் அழைத்துக்கொண்டு போய்விட்டால், தானும் குழந்தைகளும் என்ன செய்வது என்கிற பயம்தான் பீஜி என்றாள் சிரித்தவாறு. கணவனுக்கு கொடுத்த வாக்கின்படி, அன்று தெருவில் இறங்கி ராஜேஷ் கன்னாவைப் பார்க்காவிட்டாலும், அதற்கு அடுத்த நாள், எந்த பகுதிக்கு வருகிறார் என்று முன்னதாகவே தெரிந்து கொண்டு, கூட்டத்தில் முண்டியடித்து ராஜேஷ் கன்னாவோடு கை குலுக்கி விட்டாள் சுந்தரி! எத்தனை சாமர்த்தியசாலி!
ஐந்து பிள்ளைகள் பெற்றுக் கொண்டு, அவர்கள் வாலிபர்களாகி வேலைக்கு போய் சம்பாதிக்கும்போது, ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா இருநூறு ரூபாய் வசூல் செய்துகொண்டு, முதுமைக் காலத்தை நிம்மதியாகக் கழித்துவிடுவேன் என்று சொல்வாள்.
ஏதோ ஒரு சிறிய மனஸ்தாபம் காரணமாக சுந்தரி வேலையை விட்டு நின்று விட்டாள். சுந்தரி காட்டாறு போன்றவள். காற்று போல சுதந்திரமான வள். சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாதவள். நாக்கு கத்தி போல வெட்டினாலும், உள்ளுக்குள் அழுக்கற்றவள். வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் தெளிவும், முதிர்ச்சியும் படைத்தவள் அவள் அதிக காலம் வேலை செய்தது எங்கள் வீடாகத் தான் இருக்கும் எனத் தெருவாசிகள் பேசிக் கொண்டதாக, காய்கறி விற்கும் லாலி பிறகு என்னிடம் தெரிவித்தாள்.
சுந்தரி வேலையைவிட்டு நின்ற செய்தி காற்றில் நறுமணம் போல பரவியது. காய்கறி விற்கும் லாலி, மறுநாள் ஒரு பெண்ணை அழைத்து வந்தாள். அவள் பெயர் சீனா. இருபது வயது கூட இருக்காது . ஒன்றரை வயதில் ஒரு நோஞ்சான் பெண் குழந்தை. ஒரு வீட்டின் மாடிப் படியின் கீழே அட்டைப்பெட்டியை தரையில் போட்டு, குழந்தையை அதன் மேல் படுக்க வைத்திருந்தாள்.
லாலி என்னிடம், ” இவள் முகத்தை பாருங்கள் பீஜி, எத்தனை சின்னப் பெண்! திருமணம் ஆனதா இல்லையா என்று கூட தெரியவில்லை. கர்ப்பமாக இருக்கிற செய்தி தெரிந்ததுமே அந்த கடன்காரன் இவளை நிராதரவாக நிறுத்தி விட்டு ஓடிவிட்டான். ரொம்ப கஷ்டப்படுகிறாள். இரவில் ஏதாவது ஒருவீட்டு மாடிப் படியின் கீழே படுக்கிறாள். ஒருநாள் இந்த வீடு மறுநாள் அடுத்த வீடு என்று மாறிமாறிப் படுக்கிறாள். எங்கும் பத்திரமாக இருக்க முடிவதில்லை. இவளை உங்கள் வீட்டில் வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பீஜி. நாயாக உழைப்பாள்,” என்றாள்.
நான் சீனாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். அந்த குழந்தை ஜுரத்தில் வாடிக்கொண்டிருந்தது. “எப்படியாவது என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் பீஜி, பிழைக்க மாட்டாள் போலிருக்கிறது. நீங்கள் செய்கிற உதவிக்கு நான் உங்கள் கால்களைக் கழுவி அந்த நீரை குடிப்பேன்” என்று கூறினாள். “இவளை வளர்க்க என்னென்ன கஷ்டங்கள் பட்டிருப்பேன் என்பது கடவுளுக்கு கூட தெரியாது” என்று அழுதாள். அப்போது தில்லியில் பிரசித்தி பெற்ற குழந்தை மருத்துவர் ஆர்யாவுக்கு நான் போன் செய்து விட்டு, குழந்தையை அவரிடம் தூக்கிக் கொண்டு போனேன். அவர் நிஷாவை (அதுதான் அவள் பெயர்) பரிசோதித்துவிட்டு, ஊசி போட்டு, சாப்பிட மருந்துகள் கொடுத்தார். மறுநாள் காலையில், நிஷா சிட்டுக் குருவியைப் போல உற்சாகமாக பேசி விளையாட ஆரம்பித்தாள். என் கணவர் பெரிய குடும்பத்தில் நிறைய பேருடன் பிறந்தவர். குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். நிஷா அவரது மடியில் ஏறி குதிப்பாள். அவர் மீது கோபம் கொள்வாள். சண்டை போடுவாள். பிறகு சிறிது நேரத்தில் மறந்து போய் விளையாட ஆரம்பித்து விடுவாள்.
ஒரு நாள், சீனா, அவளுடைய தோழியும் தோழியின் கணவருமாகச் சேர்ந்து, அவளுக்காக ஒரு மாப்பிள்ளையைத் தேடியிருப்பதாகச் சொன்னாள் அந்த நபர் காய்கறிக் கடை வைத்திருப்பதாகவும் இவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தாள். எல்லாவற்றையும் விட முக்கியமாக விஷயம் என்னவென்றால், அவர் நிஷாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்திருப்பதாகவும் சொன்னாள். திருமணத்திற்காக கிராமத்திலிருந்து வருபவர்கள் திரும்பிப் போகும் வரை நிஷாவை அவளுடைய தோழி பார்த்துக்கொள்வாள் எனவும், அதற்குப் பிறகு அவள் நிஷாவை தன்னுடனேயே வைத்துக் கொள்வாள் என்றும் கூறினாள். காய்கறிக் கடைக்காரர் வாடகைக்கு வீடு பார்த்து விட்டதாகவும் கூறினாள்.
நானும் சந்தோஷமாக சீனாவுக்கான சீர் சாமான்களை சேகரிக்க ஆரம்பித்தேன். வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள், கம்பளி, போர்வை, தலைகாணி, நிஷாவுக்கும், சீனாவுக்கும் அவளது வருங்கால கணவருக்கும் துணிமணிகள் வாங்கினேன். குளிர்காலமாக இருந்ததால் சீனாவின் கணவருக்கு ஸ்வெட்டரும் வாங்கியிருந்தேன். என் மகள் மீத்தாவின் சங்கிலியை சீனாவுக்கு கொடுத்தேன். பிரஷர் குக்கர், பாய், படுக்கை போன்ற எல்லாவற்றையும் சேகரித்து, சீனாவை அனுப்பி வைத்தோம். போகும்போது சீனாவின் கண்களில் கண்ணீர் தளும்பியது. குழந்தை நிஷாவின் கண்களிலும் புரிந்தும் புரியாத ஏதோ ஒரு பாவம். என்ன இருந்தாலும் அம்மாவின் இடத்தை யார் எடுத்துக் கொள்ள முடியும்! ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்ந்தாலும், நாங்கள் கனத்த மனதுடன் அவளை விடையனுப்பி வைத்தோம்.
(தொடரும்)