- கி ரா : நினைவுகள்
- கி.ரா – நினைவுக் குறிப்புகள்
- ”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”
- “பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மட்டும் மரியாதெ செய்யுது?”
- கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30
- கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31
- கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33
- ”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.”
- கிராவின் திரைப்பட ரசனை
- பேரா.சுந்தரனார் விருது
11
பல்கலைக்கழகத்திற்குச் செய்யும் பணித்திட்டம் ஒன்றை உருவாக்கினார். இதுவரை எழுத்துலகம் கவனிக்காத பெண்மனங்களைப் பதிவுசெய்யும் நாட்டார் கதைகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் திட்டம் அது. அதற்கு உதவியாக ஆய்வுப்பணியாளர் ஒருவரும் அனுப்பப்பட்டார்.
காதல், காமம், முறைப்படுத்தப்படாத ஆண் -பெண் உறவு என ரகசியம் பேணப்பட்ட கதைகள் அவரிடம் ஏற்கெனவே நிறைய இருந்தன. ஆனால் அவற்றைப் பதிப்பிப்பதைவிடவும் புதுவை வட்டாரத்துக்குரியதாகப் பதிப்பிக்கலாம் என்பதற்காகப் புதிய கதைகளைத் தொகுக்க ஆரம்பித்தார். அப்படித் தொகுத்த நாட்டாரியல் மரபுகளே பெண் மனமாகவும், வயதுவந்தவர்களுக்கு மட்டும் எனப் பதிப்பிக்கப்பட்டன. அதுவரைக் கல்விப்புலம் பேசாமல் இருந்த பலவற்றை அவை பேசத்தூண்டின. அந்த வகையில் கி.ரா.வின் வருகைதரு பேராசிரியர் பணி ஒரு புரட்சிகரமான பணி.
அவர் அங்கு இருந்த காலச்சூழல் பாண்டிச்சேரியில் பல கலகங்களும் புரட்சிகரச் சிந்தனைகளும் கிளர்ந்துகொண்டிருந்த நேரம். நிறப்பிரிகையின் கூட்டுவிவாதங்கள், தலித் அரசியல் விவாதங்கள், புதிய அரசியல் சிந்தனைக் களங்கள், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியின் நிகழ்த்துமுறைச் சோதனைகள் எனப் பலப்பலவாய் ..
புதுவை மிஷன் வீதி கல்வே கல்லூரியில் ஒருநாள் கி,ரா,வின் எழுத்துகளை மையமிட்டு முழுக் கருத்தரங்கம் அவரது பன்முக ஆளுமையைக் காட்டிய கருத்தரங்கமாக நடந்தது.

12
புதுச்சேரி இலாசுபேட்டைக்குப் போன பிறகு வேறெங்கும் வீடு தேடவில்லை. பல்கலைக் கழகப் பணியில் இருந்ததுவரை தாகூர் கலைக்கல்லூரிச் சாலையில் தங்கியிருந்தார். அவர் வந்தபோது புதுவைப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் அலுவலகம் ரங்கப்பிள்ளை வீதியில் இருந்தது. அதன் இரண்டாவது மாடியில் நான் பணியாற்றிய நிகழ்கலைத்துறையின் வகுப்புகள் நடக்கும். எப்போதாவது அங்கு வந்து நாடக வகுப்புகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்.
அப்படியொருநாள்வருகைதரும்போது அவரும் எம் துறையின் தலைவர் இந்திரா பார்த்தசாரதியும் சமகாலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துகளைக் குறித்துப் பேசத்தொடங்கினார்கள். பேச்சினூடாக எனது கருத்தையும் கேட்டுக்கொண்டார்கள். பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி,ந.ரவீந்திரன், பாரதி பாஸ்கர், கண்டராதித்தன். பவா.செல்லத்துரை, சூர்யகாந்தன், இரா.முருகன் எனப் பேச்சு சுத்தி வந்தது.
அதன் பிறகு பையிலிருந்து ஒரு கட்டுக் கையெழுத்துப் பிரதிகளை எடுத்து வைத்தார் கி.ரா. பெரும்பாலும் கையால் எழுதப்பெற்ற பிரதிகள். நாவல் போட்டிக்கு வந்த நாவல்கள் என்று சொல்லிவிட்டு ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டார்கள். இரண்டுபேர் மட்டும் டைப்செய்து அனுப்பியிருந்தார்கள். இருவரும் அதன் நடுவர்களாக இருக்கப்போவதாகவும் சொன்னார்கள். மூன்றாவது நடுவர் அப்போது தஞ்சையில் இலக்கியத்துறையின் பேராசிரியர் தா.வே.வீராச்சாமி. நீங்களும் வாசித்துப் பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
ஒரு மாதம் ஓடியிருக்கும். திரும்பவும் கி.ரா. , ரங்கப்பிள்ளை வீதிக்கு வந்தார். நாவல்களைப் பற்றிப் பேசினார்கள். இருவருமே ஜெயமோகனின் எழுத்து பற்றி விவாதித்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீங்க என்று என்னிடம் கேட்டார்கள். வட்டார எழுத்து என்பதைத் தாண்டிய தன்மை இருக்கிறது. பாத்திரங்களை உருவாக்கி முன்வைப்பதில் கவனம் இருக்கிறது என்று சொன்னேன். அந்த வருட அகிலன் நினைவுப் போட்டியில் ஜெயமோகனின் ‘ரப்பர்’ பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்பட்டது. அதிகாரப்பூர்வமற்ற நடுவர்களில் ஒருவராக நானும் இருந்ததாக அப்போது நினைத்துக்கொண்டேன்.
13
”கரிசல் மண்ணை விட்டு ஒருநாள் கூட இருக்கமுடியாத ஆள் நான்” என்று மணிவிழாவின்போது சொன்னவர். திரும்பவும் ஊருக்குப் போகப்போவதில்லை; புதுச்சேரியிலேயே இருந்துவிடுவது என முடிவு எடுத்தார். பல்கலைக்கழகத்தோடான ஒப்பந்த காலம் முடிந்தபின்னும் பாண்டிச்சேரியிலேயே இருப்பது எனக் கி.ரா. எடுத்த முடிவு ஆச்சரியமூட்டிய ஒன்று.
புதுச்சேரி – வேதபுரம்; இங்கு வந்தவர்களுக்குத் திரும்பிச் செல்லும் ஆசையே வராது என்றார். எட்டயபுரத்திலிருந்து வந்த பாரதிக்குப் புதுவையைவிட்டுப் போக மனம் இருக்கவில்லை. தூத்துக்குடியிலிருந்து வந்து சேர்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் திரும்பிப் போகவில்லை. அவரது நினைவிடம் கருவடிக்குப்பத்தில்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டுமல்ல; அரவிந்தர் வங்காளத்திலிருந்து வந்தவர் தானே? அவரோடு வந்தவர்கள் பெயர்களெல்லாம் நமக்குத் தெரியாது தானே. நானும் இங்கேயே இருந்துவிடப் போகிறேன். வேதபுரத்தார்க்குக் குறிசொல்லும் வேலையை எடுத்துக் கொள்வேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ஒரு தடவை. இப்போது அவரது உயிரில்லா உடல் இடைசெவல் நோக்கி வந்துகொண்டிருக்கிறது. பிறந்த ஊருல உடலை வச்சுப்பாக்கிறதும் ஒரு வழமைதான்.
14
அங்காளம்மன் நகரிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நானும் இலாசுப்பேட்டை, ராஜாஜிநகருக்கு நகர்ந்தேன். அவரும் அதே ஔவை நகரில் தான் இருந்தார். இலாசுபேட்டை அப்போது அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் நிரம்பிய இடம். கி,ரா,வுக்குப் பக்கமாக இருந்தவர் திறனாய்வாளர் பஞ்சு. அடுத்த தெருவில் ஒரு பிரெஞ்சுப் பேராசிரியர். இடது பக்கம் பிரெஞ்சுமொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும் நாயகர் இருந்தார். அரசு மருத்துவமனையில் மட்டுமே மருத்துவம் பார்த்த மருத்துவர் ஒருவர் இருந்தார். அசோக்நகரில் நிறப்பிரிகை ரவிக்குமார் இருந்தார். அதற்கடுத்த தெருவில் ராஜ்கௌதமன்.
காலையில் ஒரு சுற்றுலா; மாலையில் ஒரு சிற்றுலா என்பது கிராவின் நடைப்பயிற்சி. நானிருந்த ராஜாஜி நகரில் தான் தபால் அலுவலகம். அவருக்குத் தினசரி நாலைந்து கடிதங்களாவது வரும். ஒன்பது மணிக்கு பல்கலைக்கழகம் கிளம்பும்போது வீட்டுக்கு வந்து அன்றைய தினசரியை வாசித்து முடிப்பார். அங்கிருந்து தபால் அலுவலகம் போய் தனக்கு வந்த கடிதங்களைத் தானே பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்புவார். அங்கே உடைத்து வாசிக்கமாட்டார். வீட்டுக்குப் போகும் பாதையில் கோவில்பட்டிக்கார வீடு ஒன்று இருந்தது. அங்குபோய் ஒரு செம்பு தண்ணி குடித்துவிட்டு அங்கு உட்கார்ந்து கடிதங்களைப் படிப்பார். அங்கிருக்கும் பெண்களோடு பேசிக்கதைகளை உருவாக்கிக் கொள்வார். அவர்கள் இல்லையென்றால் பஞ்சாங்கம் வீட்டில் அது நடக்கும். எங்கள் தெருவில் இருந்த கணிதப் பேராசிரியர் முருகானந்தம் மனைவிக்கு மருத்துவ ஆலோசனைகள் சொல்லிவிட்டுப் போவதுமுண்டு.
தபால் அலுவலகத்தைக் காரணமாக்கி ஒன்பது மணிக்கு நடக்கத் தொடங்கித் திரும்பும்போது 12 மணி ஆகியிருக்கும். குறைந்தது நாலைந்து பெண்களிடமாவது கதைபேசி, சிரித்துவிட்டுப் போய்க் கணவதி அம்மாவிடம் பேசிய கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். மாலையில் அம்மாவையையும் அழைத்துக்கொண்டு விமான நிலையச்சாலையில் ஒரு சிற்றுலா வருவார். பெரும்பாலும் இவ்விரண்டு உலாக்களும் மாறாமல் இருந்தன.
16
அதிகமும் தனித்தமிழ் இயக்கவாதிகள் இருப்பதுபோலத்தோற்றம் தரும் புதுச்சேரியில் வாரக்கடைசிகளில் இலக்கிய, சமூக இயக்கங்கள், அரசியல் கூட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காது. ஒவ்வொருவருக்கும் புனைபெயர்கள் இருக்கும். அவை பெரும்பாலும் தனித்தமிழ்ப் பெயர்கள். அவற்றைவிட்டால் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நலன்களை முன்வைக்கும் மார்க்சியப் பின்புலம் கொண்ட மனித உரிமை அமைப்புகள், திராவிட இயக்கப்பார்வை கொண்ட பேரவைகள் எனப் பலவிதமான அமைப்புகளின் செயல்பாடுகள் நடந்துகொண்டே இருக்கும். 1990 களுக்குப் பிறகு தலித் இயக்கத்தின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் திரட்சியைத் தனதாக்கிக் கொண்ட இடமும் புதுச்சேரிதான். அமைப்புகளைப் போலவே சிற்றிதழ்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகம். மொழிக்காக, சமூகவிழிப்புணர்வுக்காக, இலக்கியத்திற்காக எனப் பலவிதமான இதழ்களும் வந்துகொண்டிருந்த நேரம். எதிர்வு, நிறப்பிரிகை, ஊடகம், கிரணம், என்ற மூன்று இதழ்களும் புதுச்சேரியை முகவரியாகக் கொண்டு தமிழ்ச் சிற்றிதழ்ப் பரப்பில் தாக்கம் ஏற்படுத்தியவை.
எதிர்வு இதழை நடத்திய சிவக்குமாருக்கு அமைப்பியல், குறியியல் எனத் தமிழவனின் திறனாய்வுக் கருத்தியல்களை முன்வைக்கும் நோக்கம் இருந்ததை முதல் இதழில் வெளிப்படுத்தினார். எதிர்வு இதழின் சார்பில் மாதாந்திரம் ஒரு கூட்டம் நடத்துவதையும் தொடங்கினார்.
முதல் கூட்டம் ரெட்டியார் பாளையத்தில் மருத்துவர் வீட்டில் நடந்ததாக நினைவு. அதற்கு எனது மிதிவண்டியில் போய்வந்தேன். இரண்டாவது கூட்டத்திற்கு அசோகமித்திரன் வருவதாகத் தகவல் வந்தது. கி.ரா. தொடர்பு ஏற்படுத்தித் தந்ததால் அவரது வருகை உறுதியானது எனத் தெரிந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு பெரிய அளவில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்திற்குக் கடலூர், விழுப்புரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி எனப்பக்கத்துச் சிறுநகரங்களிலிருந்தெல்லாம் வருவார்கள் என்பதும் தகவல்.அதற்குப் பாவண்ணன் பெங்களூரிலிருந்து வருகிறார் என்று நண்பர்கள் சொன்னார்கள்.
எழுத்தாளர் பாவண்ணன் புதுவைக்காரர்தான். நான் புதுச்சேரிக்குப் போனதற்குச் சில மாதங்கள் முன்பு அவர் கர்நாடகா தொலைபேசித்துறையில் பொறுப்பேற்றுச் சென்றுவிட்டார். அவரது சொந்தக்கிராமம் புதுவை – விழுப்புரம் சாலையில் வளவனூர் பக்கம் . அவ்வப்போது புதுச்சேரி வருவார்.
நல்ல மிதிவண்டி இருந்தால் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் போய்வந்துவிடலாம். இந்தக் கூட்டமும் ரெட்டியார் பாளையத்தில்தான் என நினைத்துக்கொண்டு மிதிவண்டியில் கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கு போனபிறகு தான் தெரிந்தது. வில்லியனூரில் தான் கூட்டமென்று. மிதிவண்டியைத் திரும்பவும் மிதித்து ஓட்டிப்போகச் சரியாக இருந்தது நேரம். போனபோது தெரியாத தூரம் வரும்போது அதிகமாகத் தெரிந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு எதிர்வு கூட்டங்களும் இல்லை. எதிர்வும் வரவில்லை.
16
எழுத்துத்தமிழ் அல்லது பொதுத்தமிழ், பேச்சுத்தமிழ் என இரண்டு நிலைகள் தமிழ்மொழியின் சிறப்பு எனவும், சிக்கல் எனவும் சொல்வார்கள். புதிதாகத் தமிழைக் கற்க நினைக்கும் வேற்றுமொழிக்காரர்கள் இந்த வேறுபாட்டால் அதிகமும் திணறுகிறார்கள் என்பது மொழியியலாரின் வாதம். வட்டார இலக்கியம் எழுதும் எழுத்தாளர்கள் எப்போதும் பேச்சுத்தமிழின் ஒலிச் சிறப்பை விதந்து பேசுவார்கள். தமிழ்நாட்டின் மொத்தப்பரப்புக்கும் எழுதுவது புரிய வேண்டும் என்பவர்கள் பொதுத்தமிழின் பக்கம் நிற்பார்கள்.
இந்த எதிர்வில் கி.ரா. பேச்சுத்தமிழின் பக்கம் நிற்பவர். தனது கதைகளில் பாத்திரங்களின் உரையாடல்களைப் பேச்சுத்தமிழிலும், கதைசொல்லியின் விவரணைகளைப் பொதுத் தமிழிலும் எழுதிக்கொண்டிருந்தார். பேசுவதுபோல எழுதவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர். அதுதான் மக்கள் தமிழ் எனப் புதுவைக்கு வந்தபின் வாதிடத்தொடங்கினார். பேசுவதுபோலவே எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்றும் சொல்லத்தொடங்கினார்.
புதுவை வணிக அவையில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின் அதன் முன்னிருக்கும் பாரதி பூங்காவில் மதிய உணவுக்குப் பின் அமர்ந்திருந்தார் கி.ரா. அந்தக் கூட்டத்திற்குக் கவி. பழமலய்யும் வந்திருந்தார். உரையாடல் மக்கள் தமிழ் பக்கம் நகர்ந்தது. அப்போது பழமலய் கி.ரா.விடம், “ நீங்கள் சொல்லும் மக்கள் தமிழில் எழுதுவது என்ற நோக்கம் நல்லதுதான். அது சாத்தியமா?” என்று கேட்டார். ‘ பேசுவதுபோல எழுதுவதில் என்ன சிக்கல்?’ என்று கேட்டார். தொடர்ந்த பழமலய், “வீட்டில் பேசுவதுபோல எழுதுவது என்றால், நீங்கள் வீட்டில் தெலுங்கு பேசிறீங்க. அதைத்தானே எழுதணும்; அதைத் தமிழ் வரிவடிவத்தில் எழுதினால் மக்கள் தமிழ் ஆகுமா?” என்று கேட்டார். அந்த உரையாடல் அப்போதைக்கு நின்றுபோனது.
17
கரிசல், கதைசொல்லி என்னும் கலைச்சொற்கள்
தொல்காப்பியச் சொல்லதிகாரம் சொற்களை வகைப்படுத்தும்போது பொது, சிறப்பு, காரணம், இடுகுறி என்ற நான்கைக் கூறி, அதற்கு மேலும் காரணப்பொதுப்பெயர், காரணச்சிறப்புப்பெயர், இடுகுறிப்பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என விரித்துப் பேசும். இவ்வகைப்பாடு சொற்களை வகைப்பாடு செய்வதற்கான இலக்கணம் மட்டும் என்று நினைக்கவேண்டியதில்லை. தமிழில் சொற்களை – குறிப்பாகக் கலைச்சொற்களை உருவாக்குவதற்குமான இலக்கணமாகவும் கொள்ளவேண்டிய வரையறைகள். தொல்காப்பியமும் அதன் உரைகாரர்களும் இதனை விரிவாகப் பேசியுள்ளனர்.

ஒரு பொதுச்சொல்லைச் சிறப்புச் சொல்லாக மாற்றுவதற்குப் பின்னால் அந்தக் காலகட்டத்தின் தேவையும் நெருக்கடிகளும் இருக்கின்றன. கரிசல் என்ற சொல் நிலத்தின் பெயராக இருக்கும்போது பொதுச்சொல். ஆனால் இலக்கியம் என்னும் இன்னொரு பொதுச்சொல்லோடு சேரும்போது சிறப்புச் சொல்லாக – காரணச்சொல்லாக மாறுகிறது. அதாவது கலைச்சொல்லாக மாறுகிறது. எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகப் புரிந்துகொள்ளக் கூடாது; சிறப்பான அர்த்தங்களோடும், காரணங்களோடும் வினையாக்கங்களோடும் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கோருகிறது இந்த மாற்றம். நிலம் என்பது அதன் நிறம், அங்கு வாழும் மனிதர்களின் பாடுகள், நிலவியல் அடையாளங்களை உருவாக்கும் தட்பவெப்பம், கருப்பொருட்கள், பண்பாடு என எல்லாம் இணைந்தனவாக மாறுகின்றன.
இதே தன்மையில் உருவானதல்ல கதைசொல்லி என்னும் கலைச்சொல். Performance, Narrative என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அரங்கியல் பலவிதமாகப் பயன்படுத்தத் தொடங்கிய நவீனத்துவ காலகட்டத்துக் கலைச்சொல் சொல்லுதலை நிகழ்த்துதலாக மாற்றிய காலகட்டத்தின் தேவையை உணர்த்தும் சொல். நிகழ்த்துதல் கோட்பாடு
என்னும் அரங்கியல் சிந்தனையின் வழியாக இலக்கியவியலுக்குள் நுழைந்த அச்சொல்லுதலின் தீவிரம் எல்லாவற்றையும் நிகழ்த்துதலாக்க நோக்கத்தோடு இணைத்தது. நிகழ்த்துதலுக்கேற்ப சொல்லப்படும் மொழியின் பண்புகளும் அடுக்குகளும் மாறவேண்டும் என்று வலியுறுத்தியது. இத்தகைய பின்னணிகளை- படைப்பாக்க நுட்பத்தைப் புரியாமல், படித்த கதையைத் தனது சொல்முறைப்படி திருப்பிச் சொல்லும் ஒருவர் தன்னைக் ”கதைசொல்லி” என அழைத்துக் கொள்ளத்தொடங்கியதின் விளைவு அச்சொல் தமிழில் அர்த்தமிழந்த சொல்லாக மாறிப்போய்விட்டது.
கி.ரா. நினைவுகள் -18

இடைசெவலுக்கு வந்துபோன சினிமாக்காரர்கள் பற்றி அவரிடம் துருவித் துருவிக் கேட்டாலும் அதிகம் சொல்ல மாட்டார். பாரதிராஜாவின் ‘ முதல் மரியாதை’ படத்தின் காட்சிகளும், உச்சநிலைத் திருப்பமும் அவரது கிடையும், கோபல்ல கிராமமும் என்பதைச் சொல்லிக் கேட்டபோதும் ‘அது முடிந்துபோன சங்கதி என்று சொல்லிக் கடந்துவிடுவார். அந்தப் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட ‘நன்றி’க்குப் பின்னால் இருந்த சங்கதிகளை அவர் அதிகம் சொல்ல நினைத்ததில்லை.
திரும்பவும் இடைசெவலுக்குப் போகப்போவதில்லை, புதுச்சேரியிலேயே இருந்துவிடப்போகிறார் கி.ரா. என்ற தகவல் சென்னையிலிருக்கும் பத்திரிகையாளர் களைவிடச் சினிமாக்காரர்களுக்கே அதிக வசதியாகத் தோன்றியது. அவ்வப்போது பலரும் வந்து போய்க்கொண்டே இருந்தார்கள். எப்போதும் அவரது எழுத்தின் மீது பிரியமும் முன்னோடியாக நினைக்கும் வாஞ்சையும் கொண்ட சினிமாக்காரர் தங்கர் பச்சான் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார். அவரைச் சினிமாக்காரர் என்பதைவிட எழுத்தாளராகவே கி.ரா.வும் நினைத்தார்; நாங்களும் நினைத்தோம். கி.ரா.வுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்றால் தயங்காமல் செய்யும் விருப்பம் அவருக்குண்டு.
அவரைத் தாண்டி முதன் முதலில் புதுவையில் வந்து அவரைச் சந்தித்துப் போன சினிமாக்காரர் இயக்குநர் பாலச்சந்தரின் மகன் பால கைலாசம் என்றே நினைக்கிறேன். கிராமியம் வரலாற்றுப் பின்புலமும் கொண்ட கதையொன்றைத் தொடராக எடுக்க நினைப்பதாகவும் அதற்கான கதையாக அவரது நாவல்களைப் பயன்படுத்த நினைத்து வந்து கேட்டாராம். அதற்கு ஏற்கெனவே எழுதிய கதைகளைவிடப் புதிதாக ஒன்றைத் தருகிறேன் என்று சொல்லி ஒரு கதை சொல்லியிருப்பதாகச் சொன்னார். அந்தக் கதையைச் சுருக்கமாக என்னிடம் சொன்னார். இதையெல்லாம் எடுக்க வாய்ப்பில்லை என்று நான் சொன்னபோது ‘பார்ப்போம்; அவங்க எடுக்கலையின்னா, தொடர்கதையா எழுதிடலாம்’
அவர்கள் தொலைக்காட்சித் தொடராக எடுக்க நினைத்துக் கேட்டுப்போன கதைதான் பின்னர் ‘அந்தமான் நாய்க்கர்’ என்ற தொடராக வந்து நூலாக மாறியது.
19
சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக வந்த நடிகர் நாசர், கி.ரா.வைப்பார்க்க விரும்பினார். அப்போது அவரது அவதாரம் வந்திருந்தது.
கடலைமிட்டாய்,கைமுறுக்கு, கடுங்காப்பி எனத் தந்த கணவதியம்மாவையும் உட்காரவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து, பேசிக்கொண்டே இருந்தார். இடையில் எனது பிள்ளைகளை அழைத்துப் போய் நாசரைக் காட்டினேன். ஆனால் அவர்கள் பேச்சு ஒன்றைத்தொட்டு ஒன்றாய்ப் போய்க்கொண்டே இருந்தது. அவரிடம் கதை கேட்க நினைப்பவர்கள் இப்படிப் பேசிப்பேசிக் கதைகளை உள்வாங்கிக் கொள்வதைவிட, காட்சிகளை வடிவமைத்துக் கொள்வார்கள். சொல்ல நினைக்கும் ஒவ்வொரு செய்தியையும் ஒரு கதையின் துணுக்காக ஆரம்பம், உச்சம், முடிவு எனச் சின்னச் சின்ன அலகாகச் சொல்லிமுடிப்பார். அப்படி அவரிடம் கேட்டுக் கொள்ளும் ஒரு கதைத்துணுக்கை – காட்சித்துணுக்கை உருவாக்க நட்சத்திர விடுதியில் பத்துப்பன்னிரண்டு பேர் சில நாட்களைச் செலவழிக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் பலரும் அறிந்தே இருந்தார்கள்.
அவரிடம் பேச்சுக்கொடுத்துக் காதில் திணித்துக் கொள்ள வரும் இயக்குநர்கள் சிலரென்றால், அவரையே சென்னைக்கு அழைத்துப் போய்த் தங்கவைத்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பும்போது பரிசுப்பொருட்களோடு கொண்டுவந்து விட்டுப் போகும் இயக்குநர்களும் உண்டு.
ஒரு தடவை ஔவை நகர் வீட்டில் படியேறிப்போனதும் ஒருநாள் நாலடி உயரமும் ஐந்துகிலோ எடையும் கொண்ட பேனா ஒன்று காட்சி தந்தது. பழைய நேவி பேனாவின் வடிவம். யார் தந்தது என்று கேட்காமலேயே சொல்லத்தொடங்கினார். எதையும் புதுமையாகச் செய்யும் விருப்பம் கொண்ட பார்த்திபன் பரிசு என்றார். அந்தப் பேனாவில் ஒரு எழுத்தும் எழுதமுடியாது. ஒரு மதிலில் அலங்காரமாகத் தொங்கவிடலாம்.
இன்னொரு தடவை நடிகர் பாக்கியராஜ் அழைத்துப் போய் அவர்களின் திருமணநாள் பரிசாகப் பட்டுவேட்டி, பட்டுச்சேலையோடு கொண்டுவந்து விட்டுப் போனார். ஆனால் அவர் தங்கியிருந்த இரண்டு நாட்களில் ஏராளமான கதைத் துணுக்குகளைக் கிரகித்துக் கொண்டிருப்பார். அறியப்பெற்ற இயக்குநர்களுக்கப்பால், அறியப்படாத இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் அவரிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக – கதைகளைத் திரட்டிக்கொள்வதற்காக வந்துகொண்டே இருப்பார்கள். கி.ரா. ஒரு கதைச் சுரங்கம் என்பது முழுமையாக உணர்ந்தவர்கள் சினிமா இயக்குநர்கள் என்றே சொல்ல வேண்டும்.
20
இலாசுபேட்டை, ராஜாஜி நகர் முகவரியிலிருந்து – எனது முகவரி- ஊடகம் என்ற இதழைக் கொண்டுவந்தோம். அதுவரை பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, தொலைபேசி எனத் தனித்தனியாகவும், மொத்தமாகச் சொல்லும்போது தகவல் பரப்பும் சாதனங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையை மாற்றி அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக ‘ஊடகம்’ என்ற சொல்லைப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோம்.
நான்கு இதழ்கள் தான் வந்தது என்றாலும் வெகுமக்கள் அரசியலும் ஊடகங்களும் இணைந்து செல்லும் நிலையைப் பலவித ஆய்வுகள் வழியாகவும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வழியாகவும் கருத்தியல் விளக்கக் கட்டுரைகள் வழியாகவும் எழுதும் நண்பர்களின் மொழியைக் கி.ரா.வால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. வெளிப்படையாகவே என்னய்யா பத்திரிகை நடத்திறீங்க; ஒன்னுமே விளங்கலையே என்று சொல்லிவிட்டு, ‘ எனக்கு விளங்கல என்பதற்காக இப்படி ஒன்னு வரக்கூடாதுன்னு சொல்லமாட்டேன். தமிழுக்கு இப்படியான பத்திரிகைகளும் வரவேண்டும்’ என்று சொன்னார்.
என்னிடம் அப்படிச் சொன்னவர், அவரைச் சந்திக்கவரும் ஒவ்வொருவரிடம் அதனை காட்டி அதன் சிறப்புகளையும் கவனப்படுத்தும் துறைகளையும் சரியாகவே முன்வைத்தார். அவரது அறிமுகம் மூலம் கிடைத்த நன்கொடைகள் உண்டு. சந்தாக்களும் உண்டு.
ஊடகம் வந்து நின்ற பிறகுதான் அவரது கதைசொல்லி வரத்தொடங்கியது. அதில் நானெல்லாம் ஒன்றும் எழுதவில்லை. அதற்காக நிறைய வேலை செய்தவர்களாகப் பஞ்சாங்கத்தையும் பிரேமையும் சொல்ல வேண்டும். பிரேம்:ரமேஷ் இருவரும் இணைந்து அவரது ஒட்டுமொத்த எழுத்துகளையும் வாசித்துக் கலைஞன் பதிப்பகத்திற்காகச் செய்து தந்த ‘ கி.ராஜநாராயணன் : எழுத்துலகம்‘ முக்கியமான ஒன்று. அதுபோல பஞ்சாங்கம் கி.ராவின் பங்களிப்புகளையும் படைப்புகளையும் குறித்துத் தொடர்ச்சியாக எழுதினார். தனியொரு நூலே – கி.ரா. என்னும் கதைசொல்லி’ கொண்டுவந்தார். இவற்றின் சாராம்சங்களை ஆங்கிலத்தில் தந்திருந்தால் அவருக்கு ஞானபீட விருது வழங்க நினைத்து தெரிவுக்குழுவிற்கு அவரது பன்முக ஆளுமை தெரியவந்திருக்கும்.
இந்திரா பார்த்தசாரதி ஒருமுறை சொன்னார்: நமக்குள் தரம், தகுதி பற்றிய ஆயிரம் சண்டைகள் போடலாம். அதே நேரத்தில் தேசிய அளவில் -மற்றமொழிகளோடு போட்டி போடும்போது அதையெல்லாம் காட்டாமல் தமிழுக்குக் கிடைக்கிறது என்று பார்க்கவேண்டும். தமிழ்நண்டுகளாக இருப்பதைக் கைவிடாமல் தேசிய அளவு விருதுகளை எதிர்பார்க்கக் கூடாது. அவர் சொன்னதைத் தமிழ் எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
***