உச்சி

1

வேதி தனது எட்டு வயது மகன் மாலனுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

 “அம்மா எங்க போறோம்?”

“கொளத்துக்கரயில ஒரு ஆஃபீஸ் இருக்குல்ல”

“ம் “

“அங்கதான்” 

“எதுக்கு?”

“அப்பா சாமிகிட்ட போயிட்டாருல்ல”

“ஆமா”

“அத ஆஃபீசில சொல்லணும்”

“ஏன்?”

“சொல்லணும்”

“அத சாமி வந்து சொல்லாதா?”

“சொல்லாது”

“ஏன் சொல்லாது?”

“அதுக்கு வேற வேலை இருக்கு”

2

“ஆனா அப்பா சாமிய பாக்கதான போச்சு, அப்போ சாமிதான் சொல்லணும்”

“ஆமா”

“அப்போ வந்து சொல்லேண்டியதுதானே”

“சொல்லாது”

“சரி, ஏன் ஆஃபிஸில் சொல்லணும்?”

“சொன்னாதான் அப்பா சாமிட்ட போனது தெரியும்”

“இல்லாட்டி தெரியாதா?”

“தெரியாது”

“எப்படி?அப்பாவ யாரும் தேட மாட்டாங்களா?”

“மாட்டாங்க”

“ஏன்?”

“எல்லாருக்கும் வேற வேலை இருக்கு”

3

“ஆஃபீஸுல யாருகிட்ட சொல்லணும்?”

“யாருக்கிட்டானாலும் சொல்லலாம்.”

“சொல்லாட்டி என்ன?, அதான் யாரும் தேட மாட்டாங்கல்ல”

“தேடமாட்டா, ஆனா சொல்லணும்”

“அதுக்கு அப்பறம்”

“ஒன்னும் இல்ல, அப்பா இல்லனு அங்க சொன்னா போதும்”

“அதான் சாமி இருக்குல்ல, அப்பா அது கூடதானே இருக்கு”

“ம் இருக்கு “

இருவரும் குளக்கரையை அடைந்தனர்.

மாபெரும் அரசமரம் மிரட்டும் தொனியில் கிளை பரப்பி இருந்தது.

வேதி மாலனிடம் “நீ சுள்ளி பொறக்கிட்டு இரு, நா ஆபிசுல பேசிட்டு வரேன்”

“ம்ம்” என்றான் மாலன்.

வேதி தலையாரியை பார்த்து ” அண்ணே, என்ன ஆச்சு? death certificate கொடுத்து 2 மாசம் ஆச்சு” என்றாள்.

தலையாரி “இன்னிக்கு முடிஞ்சுரும் ஆச்சிமா” என அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

கிராம அலுவலர் பாஸ்கரனை பார்த்து ” அந்தம்மா வந்துருக்குங்க” என்றார்.

பாஸ்கரன் சன்னல் வழியே வெளியே நோக்கி வந்திருப்பதை உறுதி செய்து கொண்டு  அசட்டையாக தொனியில் “அதுக்கென்னய்யா இப்போ?”

“இல்ல ரெண்டு மாசமா ரெண்டுங்கெட்டான் பிள்ளய வச்சிக்கிட்டு ஒத்தையுல அங்கிட்டும் இங்கிட்டும்  அலையுதுங்க, பாவம்” என்றார் தலையாரி.

“அதுக்கு, நீங்க கேட்ட உடனே certificate குடுக்கணுமோ?”

“இல்லீங்க, 10 பாஸ் பண்ணிருக்கு, நீங்க விதவை certificate கொடுத்தா ஏதும் கௌரதியான வேலைக்கு போகும்”

“இப்போ என்ன செய்யுது?”

“ஏனம் விளக்குதுங்க”

“எங்க?”

“அவுக ஆட்கள் இருக்க தெருவுலயே, 6 வீட்டுல”

“சரி அதன் வேலைக்கு போகுதுல்ல அப்றமென்ன?

“இல்லீங்க”

“சரி சரி அந்தம்மா பைலை எடு.” என்றார் பாஸ்கரன்.

“இந்தா வரனுங்க” என்றார் தலையாரி.

கோப்புகளை சரிபார்த்து விட்டு “ஆதரவற்ற விதவை” னு கொடுக்க முடியாது என்றார் பாஸ்கரன்.

“ஐயா, பாவமுங்க அதுக்கு நாதி இல்ல” என்றார் தலையாரி.

“நாதி இல்லையா? எங்க கூப்பிடு அந்தம்மாவ” என்றார் பாஸ்கரன்.

வேதி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தாள்.

” இந்தா பாரும்மா, உனக்கு அந்த certificate கிடைக்காது. வீணா அலையாதே. கேட்டியா?” என்றார் பாஸ்கரன்.

தலையாரியின் கண்கள் கலங்கின.

வேதி எப்போதும் அது கிடைக்கும் என் நம்பியதில்லை. தலையாரி வலிந்து உதவியதால் மட்டுமே விண்ணப்பித்திருந்தாள். வேதி வெறித்த கண்களுடன் அலுவலரை பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.

தலையாரி “ஐயா இது மகா பாவமுங்க” என்றார்.

பாஸ்கரன் “எனக்கு பாவ புண்ணியம் லாம் கணக்கில்ல பாத்துக்க?, என் கையெழுத்து இல்லாம ஒன்னும் முடியாது” என்றார்.

தலையாரி ” ஏன்னு ஒரு காரணம் சொல்ல முடியுங்களா?” என்றார்.

“உனக்கு காரணம் சொல்லனுமுனு அவசியம் இல்ல கேட்டியா” என்றார் பாஸ்கரன்.

வேதி ஒரு வார்த்தையும் உதிர்க்காமல் நின்றாள்.இது எதுவும் அறியாதவனாக மாலன் சுள்ளிகளை சேர்த்து, வாழை நாரினால் கட்டிக்கொண்டு இருந்தான். 

வேதியை பார்த்து தலையாரி “அம்மா இனொரு வழி உண்டு, சர்க்கார் வேலை கிடைக்காது. ஆனா சர்க்கார்கிட்டே பத்தாயிரம் வாங்கலாம். அது வேணா முயற்சி பண்ணி பாப்போமா?”

” இல்லண்ணா, நீங்க இதுவரை செஞ்ச உதவியே போறும்” என்றாள் வேதி.

கையாலாகாதவனாக இருக்கும் தன்னை நொந்து தலையாரி தலையில் அடித்துக்கொண்டார்.

வேதி மாலனை அழைத்துக்கொண்டு, சுள்ளிக்கட்டை ஒக்கலில் வைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.

“சொல்லிட்டியாமா?”

” சொல்லியாச்சு”

“ஆஃபிஸில் என்ன சொன்னா”

“ஒன்னும் சொல்லல”

“ஒன்னுமே சொல்லலியா?”

“இல்ல”

“அப்போ ஏன் அவங்ககிட்ட போயி சொல்லணும்?”

“சொல்லணும்”

“சொன்னா மட்டும் போதுமா”

“ஆமா போதும்”

“ஏன் அவங்க பதிலுக்கு ஒன்னும் சொல்லல?”

“அவங்களுக்கு வேறவேல இருக்கு”

***

2 Replies to “உச்சி”

  1. வாழ்த்துக்கள் இலட்சுமிநாராயணன்,
    எளிய நடையில் ரசிக்கும்படி ஒரு கதையை படைத்ததற்கு.. தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி
    அன்புடன்
    இரா. கண்ணன்

    1. நான் ஒரு அரும்பும் எழுத்தாளன்.
      நீங்கள் அளிக்கும் சிறு ஊக்கம் எனக்கு எப்போதும் இயங்கும் ஆற்றல் அளிக்கும்.
      அன்பும் நன்றியும்
      இலட்சுமி நாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.