மானிடராய்ப் பிறத்தல் அரிது. நெருப்பைக் கண்டறிந்த மனிதன் ஐந்தறிவு உயிர்களிலிருந்து மேம்பட்டது அவனுள் இயங்கும் சிறப்பு ஆற்றலால் தான். இயற்கையைக் கொண்டு செயற்கையை மனிதன் உருவாக்கி வருகிறான். ஆம், பறவையைக் கண்டு விமானம் படைத்தான், எதிரொலி கேட்டான், வானொலி அமைத்தான், புது நிலம், புது மொழி, புதுச் சட்டம் எதுவுமே அவன் தேடல்களின் பயன். விஞ்ஞானியும், மெய்ஞானியும் தேடுவது ஒன்று, வழிகள் வேறு. திரிசங்கு என்ற புது விண்கோளைப் படைத்த விஸ்வாமித்ரனும், பொதிகை மலை அடைந்த அகத்தியரும் காவி உடை பூண்ட சன்னியாசிகள் மட்டுமல்ல, புதிதைத் தேடியவர்களும் கூட.
செயற்கை நுண்ணறிவு இன்று ஏழாம் அறிவாகக் கருதப்படக் கூடிய நிலையை நோக்கிப் பயணிக்கிறது. குற்றச் செயல் முறைகளை ஆராய்தல், மின்னகங்களில் ஏற்படக்கூடிய வெடிச் சிதறல்களைக் தவிர்த்தல், தீவிர அபாய நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவில் கிட்ட வேண்டிய மருத்துவம் மற்றும் சில முக்கிய உதவிகள் ( உதாரணமாக போக்குவரத்து ஏற்பாடுகள்- இந்தியாவில் சமீபத்தில் மதுரையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் கண், குடல், இருதயம், சிறு நீரகம் போன்றவை சென்னைக்கு 20 நிமிட விமானப் பயணமாகவும், 20 நிமிட துரித ஊர்திப் பயணமாகவும் வந்து சேர்ந்து ஆறு நபர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஜி பி எஸ் சின் துணையின்றி இத்தகைய செயல்பாடு சாத்தியமாகி இருக்காது.) போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவு செயல்படும் சாத்தியங்களையும், முக்கியமாக மனிதர்களைப் பாதிக்கும் துறைகளில் அதன் பயன்பாடு எத்தகையதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் எனவும் ட்யூக் பல்கலையின் (Duke University) கணினி அறிவியலாளர் சிந்தியா ரூடின்(Cynthia Rudin) அறுதியிட்டுக் கூறுகிறார்.
சமுதாயப் பொறுப்புள்ள செயற்கை அறிவிற்கான ஒரு வியத்தகு முன்னணி ஆய்வாளராக அவர் AAAI (Association for the Advancement of Artificial Intelligence (AAAI)) $1 மில்லியன் Squirrel AI விருது பெற்றுள்ளார். செயற்கை அறிவுத் துறை செயல்பாடுகளுக்கென வழங்கப்படும் இவ்விருது நோபல் பரிசிற்கு இணையான ஒன்று. இவரே சொல்வதைப் போல மனித நல் வாழ்விற்கான செயற்கை அறிவிற்கான பரிசு இது. சமூக நீதி, மருத்துவ நோய்க்கூறு ஆய்வுகள், நிகழ்ச்சிகளின் நம்பக மற்றும் உண்மைத்தன்மை போன்றவற்றை, செயற்கை அறிவில் விளக்க வெளிப்படைத்தன்மையை இணைத்ததன் மூலம் இவரது செயல் முறை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் இவ்விருதைப் பெறும் இரண்டாம் நபராவார். ஆழ்ந்து அறியும் நுணுக்கச் செயல் முறைகளுக்காக இன்பார்ம்ஸ் (INFORMS) வழங்கும் சிறந்த படைப்பூக்கம் கொண்டதும், புது வகைக் கண்டுபிடிப்புக்களுக்குமான விருதுகளை மூன்று முறை பெற்றவர் இவர். கணிதப் புள்ளியியல் அமைப்பு (Institute of Mathematical Statistics) மற்றும் அமெரிக்கன் புள்ளியியல் கூட்டமைப்பின் (American Statistical Association) சிறப்பு அறிஞருமாவார்.(Fellow)
உலகெங்கும் கணிதத்திற்கும், சங்கீதத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் ஆராயப்பட்டு வருகின்றன. நமது சி வி இராமன் அவர்கள் மிருதங்கத்திற்கும் இயற்கையின் தாள ஒத்திசைவுகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமைகளைப் பற்றி ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. நம்முடைய சம்ஸ்க்ருத சந்தங்களும், தாள லயங்களும், சூத்திரங்களும் கணினியின் மொழிக்கு ஏற்ற ஒன்றாக இருப்பதாக ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இவரும் கணித இயற்பியலும், சங்கீதமும் தன் இளங்கலையில் படித்து பின்னர் கணக்கீட்டு கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 2017-ம் ஆண்டு முதல் ட்யூக் பல்கலையில் பேராசிரியராகப் பணி புரிகிறார்,
இவரது தனித்துவம் என்று எதைச் சொல்வது என்றால் பேராபத்தும், அதில் சிக்கிவிடும் மனிதர்களுக்குமான சூழலில் வெளிப்படைத்தன்மையை செயற்கை அறிவின் துணை கொண்டு நிறுவுவது எனச் சொல்லலாம். இவரது முதல் வேலை கான் சிஸ்டம்ஸ் (Con Systems) என்ற ந்யூயார்க் நகரின் மின் வினியோகக் குழுமத்துடன் இணைந்து அதிக மின்னழுதத்தால் மின்னிணைப்பு பிளவு பட்டு எந்தப் புழை (Manhole) வெடிக்கும் நிலையிலுள்ளது என்பதை இயந்திர மொழியைப் பயன்படுத்தி அறிவிக்கும் செயற்கை நுண்ணறிவின் செயல்பாட்டுத் தளமாக இருந்தது.. ஆனாலும், எத்தனை எச்சரிக்கை மணி ஒலிகளை இணைத்தாலும், எத்தனை ‘விசில் போட்டாலும்’ எடிசன் காலத்திலிருந்து வரும் தகவல்கள், கையெழுத்தில் வரும் விவரங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் இயந்திர மொழியின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவில் நிறைவைத் தரவில்லை. ‘இவ்வாறு நடக்கக்கூடும் என்ற மாதிரிகளை’’ அவை எந்தத் தகவல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவது தேவையான ஒன்று என இவர் கருதினார். செயல் முறைகளை பகுத்தறிவதன் மூலம் (ஆதார விளக்கம் கொண்டவை) கணிப்புகள் துல்லியமாக அமைந்தன. இதன் அடிப்படையே இவரது ஆய்வகம்.

அடுத்த பத்தாண்டுகளில் மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கணிப்பு மாதிரிகளில் (Prediction Models) அவர் இயந்திர மொழியை சீர்படுத்தினார். அதாவது அவைகள் எவ்வகையில், எதன் அடிப்படைத் தகவல்களில். அந்த அடிப்படைத் தகவல்கள் எந்த ஆதாரத்தின் பேரில் அமைக்கப்பட்டன போன்றவை மனிதர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற இவரது உன்னத நோக்கம் செயற்கை அறிவின் பயன்பாட்டை மனிதனுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தது. இதற்கான சூத்திரங்களை எழுதுவது சிக்கலான, நவீனமான ஒன்றாக இருந்தாலும், அவை, மனிதர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் உருவாகின. ஒரு குறியீட்டு அட்டையில் (Index Cards) எழுதக்கூடிய அளவில் வடிவ எளிமையும் கொண்டிருந்தன.
இவரது விளக்கம் இணைந்த இயந்திர மொழியானது (Interpretable Machine Language) பல செயல்பாடுகளில் சிறந்த பலன்களைத் தந்துள்ளது. மாஸ்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில்,(Massachusetts General Hospital) பிராண்டன் வெஸ்டோவர் (Brandon Westover), ஆரோன் ஸ்ட்ரக் (Aaron Struck) மற்றும் இவரது முன்னாள் மாணவர் பெர்க் உஸ்டன் (Berk Ustun) ஆகியோருடன் இணைந்து சில எளிய புள்ளிகளைக் கொண்டு, எந்தெந்த நோயாளிகள், மூளைக் காயங்களுக்குப் பிறகோ, பக்கவாதத்திற்குப் பிறகோ வலிப்பு நோய்க்கு உள்ளாகும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை இவர் கணித்துத் தந்தது மேலும் அதிக அபாயங்களுக்கு அந்த நோயாளிகள் ஆட்படாமல் தவிர்க்க உதவியது.
குற்றவாளிகளைக் காவல் துறை எப்படி அடையாளம் காண்கிறது? சில இடங்கள், சில பிரிவினர், சில நிறத்தினர், சில குறிப்பிட்ட முக அமைப்புகள், சில கண் அமைப்புகள் போன்றவை உள்ளீடாக அவர்களுக்கு உதவுபவை. அவர்கள், பல நேரங்களில், நபர்களை இத்தகைய உந்துதல்கள் கொண்டு பிடித்து விட்டு, பின்னர் அந்தக் குற்றங்களை அவர்கள் மேல் சுமத்தி, அதற்கான சான்றுகளை உருவாக்கி தங்கள் ரேங்க்கை ஏற்றிக் கொள்வார்கள். இந்த முறை முழுவதும் சரியில்லை எனச் சொல்ல முடியாது- ஆனால், முற்றிலுமாகச் சரியா என்று சொல்லவும் முடியவில்லை. குற்றவாளிகள், குற்றத்தின் கவர்ச்சியால் ஆட்கொள்ளப்படுவார்கள் என்பது இதன் உளவியல் ஆதாரம்.
தன்னுடைய முன்னாள் மாணவரான டோங் வாங் (Tong Wang), மற்றும் கேம்ப்ரிட்ஜ் காவல் துறையுடன் சேர்ந்து சிந்தியா வடிவமைத்த ‘பேட்டர்னைசர் அல்காரிதம்’(Patternizr Algorithm) புதிதாக நடந்துள்ள இந்தக் குற்றமானது பழைய குற்றத்துடன் தொடர்புடைய ஒன்றா என்பதை அலசி ஆராய்ந்து சொல்லி விடும். உள்ளுணர்வும், சந்தேகமும் முன்னணி வகித்த குற்றப் புலனாய்வு, இந்தக் கணினி இயந்திர மொழி வாயிலாக அறிவியல் நிரூபணத்துடன் வருவது மிகச் சிறப்பான ஒன்று. குற்ற ஆய்வுகளையும், காவல் கண்காணிப்புகளையும் இது சிறந்த முறையில் அணுகும் ஒன்று என்றும், மனச்சாய்வு சார்ந்த, தகுந்த நீதியினைத் தரும் என்ற கருத்தை ஏற்படுத்தாத ‘கறுப்புப் பெட்டி’(Black Box) எனப்படுவதற்கு மாற்றான ஒன்று என்றும் கேம்ப்ரிட்ஜ் காவல் துறை துணை ஆய்வாளர் டேனியல் வாக்னர் (Daniel Wagner) சொல்கிறார். மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுதல்களுக்கு ஆளாகும் நபர்களுக்கு இந்த விளக்க இயந்திர மொழி பயன்தரும் அதே வேளையில் காவல் துறைக்கும் அவர்கள் தேட வேண்டிய விஸ்தீரணம் குறையும். முக்கியமாக மனிதனுக்கு மாற்றாக இல்லாமல், மனிதனுக்கு உதவும் ஒன்றாக இந்த விளக்க இயந்திர மொழி பயன்படும். அதுதான் இவரின் குறிக்கோளும் கூட.
‘காம்பஸ்’ (Compas) என்ற செயற்கை குறியீட்டு மொழியில் இனம் என்பதும் ஒரு காரணியாக எடுத்தாளப்படுகிறது என்பதால் அதில் சாய்வுகளுக்கு அதிக இடமிருக்கிறது என ப்ரோபப்ளிகா (Propublica) அறிவித்தது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பது கடினம்; மேலும் அந்த செயற்கை நுண்ணறிவின் முக்கிய சில அம்சங்கள் உரிமையாளருக்குச் சொந்தம் என்பதால் அதில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. சிந்தியாவின் எளிய ‘மாதிரி’ அதன் விளக்க அம்சங்களோடு.தேவையான தரவுகளின் அடிப்படையில், அந்தத் தரவுகளின் சீர்பார்த்தலோடு அமைந்துள்ளது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இவர் தன் ஆராய்ச்சிகளைத் தொடங்கிய கால கட்டத்தில் ‘தகவல் அறிவியல்’, ‘விளக்க இயந்திர மொழி’ போன்ற சொற்றொடர்களில்லை. இவரது கட்டுரைகளை, இந்த விளக்கமும் இணைந்த இயந்திர மொழிக் குறியீடுகளை எந்தப் பகுதியில் இணைப்பது என்பதே கேள்வியாக இருந்தது. ஆனால், இதன் எளிமையும், இதை இவர் பரவலாக அனைவருக்கும் வழங்கியதும், ‘ கறுப்புப் பெட்டி’யின் பால் வளர்ந்து வந்த விருப்பமின்மையும் இவருடைய வழி வகைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
அறிவு வெறும் அனுபவச் சேர்க்கையாக அமைந்து விடுதல் பல நேரங்களில் ஏற்படுகிறது. அனுபவங்கள் அந்தந்தச் சூழலில் நாம் எப்படி உணர்கிறோமோ அப்படியே அமைந்து நிலை பெறுகிறது. இதில் நம் முன் தீர்மானங்களும், தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற தெளிவில்லாமலேயே நாம் எடுக்கும் முடிவுகளும் முழுதும் சரியாக இருக்கும் வாய்ப்புக்கள் குறைவு, செயற்கை அறிவின் துணை பல சிக்கலானச் செயல்பாடுகளுக்குத் தேவையாகிறது. அதில் வெளிப்படைத்தன்மை என்பதும், எளிதில் அதன் உள்ளீட்டுத் தரவுகளை அறிந்து கொள்ள முடியுமென்பதும் நலம் தரும் செயலல்லவா?
–உத்ரா