ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்

This entry is part 48 of 48 in the series நூறு நூல்கள்

இலங்கையில் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர் அது ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே இன முரண்பாட்டையும், போர் அரசியலையும் பற்றியே அதிகம் பேசத் தொடங்கின. அந்தப் பண்பேற்றம், குறித்த காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கிய அலையாக எழுந்தது. போர் நடைபெற்ற காலப்பகுதியிலும், இப்போது போர் முடிவடைந்த பின்னரும் ஈழ அரசியல் நாவல்கள் இத்தகைய பின்புலத்திலிருந்து கனிசமானளவு வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

சமகால ஈழத்து அரசியல் நாவல்கள் மீது ஒரு தனியான கவனத்தை ஏற்படுத்தியது ஷோபாசக்தியின் நாவல்கள் தான். அவரது கொரில்லா இந்தத் தளத்தில் ஒரு கவனயீர்ப்புக்குரிய படைப்பு. நோயல் நடேசன், தமிழ்நதி, சயந்தன், தேவகாந்தன், குணா கவியழகன், தமிழ்க் கவி, விமல் குழந்தைவேல், அகரமுதல்வன், சேனன், வாசு.முருகவேல், யோ.கர்ணன், சாத்திரி, ரவி போன்றோர் இந்தத் தளத்தில் மேலும் பங்களிப்புகளை மேற்கொள்பவர்கள். இந்த ஈழப்படைப்பாளிகள் வரிசையில் இடம்பெறுபவர்களில் ஒரு தரப்பார் ஒருதலைப்பட்சமான கருத்தியல் தளத்தை தங்களது படைப்புகளுக்கூடாக கட்டியெழுப்புபவர்கள். அரசியலை இலக்கியமாக்குவதிலிருந்து விலகி இலக்கியத்தை அரசியலாக்கும் ஒருவித சூத்திரத்துக்குள் இயங்குபவர்கள். ஒரு பக்கம் சாய்தல், ஒரு தரப்பு நியாயத்தை மட்டுமே ஒலிக்கவிடல், ஈழப் போர்ச் சூழலை விமர்சன மனப்பாங்கற்று ஒரு தட்டையான அணுகுமுறைக்கூடாக முன்வைத்தல், ஒரு குரலை மய்யத்துக்கு கொண்டு வரல், ஏனைய குரல்களை அடையாளமிழக்கச் செய்தல், வாசகனையும் ஒருதலைப்பட்சமான ஒற்றை ஆதரவை நோக்கித் திருப்புதல் போன்றவை ஈழ அரசியல் நாவல்கள் சிலவற்றின் பண்பேற்றமாக உள்ளன. இந்த நிலைமை ஒரு படைப்பின் இலக்கிய அழகியலிலிருந்தும் அவற்றைத் தூரமாக்கி வெறும் அரசியல் ஆவணங்களாக சுருக்கி வைக்கின்றன. இது ஒரு இலக்கியப் படைப்பை பலவீனப்படுத்தும் மிக மோசமான இடையூறாகும். இந்த அபத்தத்திலிருந்து பெரிதும் தன்னை தற்காத்துக் கொண்டு முன்செல்பவர் ஷோபாசக்தி. 

ஷோபாசக்திக்கு முன்னரும் ஈழத்திலிருந்து மாற்று அரசியல் நாவல்கள் வெளிவந்திருந்தன என்பதும் இங்கு கவனங்கொள்ளத்தக்கது. குறிப்பாக கோவிந்தனின் புதியதோர் உலகம் இந்தவகையில், கவனத்துக்குரிய படைப்பு. ஈழப்போர்ச் சூழல் குறித்து பொதுவாக தமிழ்ச் சூழலில் நிலவிய மாயைகளை உடைத்த குறிப்பிடத்தக்க படைப்பு அது. அதன் தொடர்ச்சியாக ஷோபா சக்தியின் படைப்புகள் அந்தப்பங்களிப்பைச் செய்தன. ஈழத்து அரசியல் நாவல்வெளியில் எதிர்க்குரலை அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் பதிவுசெய்தவர் ஷோபாசக்தி. இந்தியப் படைகள், இலங்கை இராணுவம் மற்றும் புலிகள் என அனைத்து ஆயுதத் தரப்பாரையும் தன் நாவல்களில் வெளிப்படையாகப் பேசினார். ஆயுதப் படைகள் VS மக்கள் எனும் நிலைப்பாட்டிலிருந்து தன் புனைவுகளைப் படைத்தார். இதுவரை ஷோபாவிடமிருந்து நான்கு அரசியல் நாவல்கள் வெளிவந்துள்ளன. கொரில்லா, ம் ஆகிய இரண்டு நாவல்களும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலும் பொக்ஸ் கதைப் புத்தகம் மற்றும் இச்சா ஆகியன போர் முடிவுக்கு வந்த பின்னரும் வெளிவந்தன. கொரில்லா, ம் ஆகிய நாவல்களில் வெளிப்பட்ட அரசியல் தீவிரமும் கூர்மையான விமர்சனமும் பொக்ஸில் இல்லை. அந்தக் கதைக்கு அந்தத் தீவிரம் உண்மையில் தேவையற்றதுதான். அதேவேளை, ஷோபாவின் வழக்கமான கிண்டல் விமர்சனமும் மொழிச் சுவையும் குன்றாமல் அப்படியே தொடர்ந்து வந்திருக்கிறது. 

சமகால ஈழத்து அரசியல் நாவல்கள் முழுக்க இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற யுத்தம், அதற்குள் சிக்கிக்கொண்ட மக்களின் துயர வாழ்வு, இன முரண்பாட்டால் மலையக மக்கள் சந்தித்த பிரச்சினைகள், இந்திய இலங்கை இராணுவத்தினரின் மக்கள் எதிர் நடவடிக்கைகள் மற்றும் விடுதலைப்புலிகளின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் என இலங்கையில் இடம்பெற்ற போர்க்காலத்தை இயலுமானளவு முழுமையாகப் பதிவு செய்கின்றன. அனைத்து நாவல்களினதும் சாரம் மானுடத் துயரமாகவே எழுந்து நிற்கிறது. இன்னொரு பக்கம் சமகால ஈழத்து அரசியல் நாவல்கள் பொதுவாக புலி ஆதரவு, புலி எதிர்ப்பு எனும் இரு முரண்நிலைகளில் வைத்து நோக்கப்பட்டது. இந்தப் பகுப்பு நாவலின் இலக்கியத்தன்மைக்கும், படைப்பாளிக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். புலிகள் இயக்கம் தொடர்பில் தமிழ்ச் சமூகத்துக்குள்ளும், அதற்கு வெளியேயும் காணப்பட்ட இரண்டு அரசியல் நிலைப்பாடுகளை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த இலக்கியப் பகுப்பு மிகப் பலவீனமானது. இது ஒரு படைப்பிலிருந்து அதன் மய்யமான இலக்கியத்தை புறக்கணித்து அதன் அரசியலை மட்டுமே வைத்து நாவல்களை மதிப்பிடுவதாக அமைந்தது. என்னைப் பொறுத்தவரை ஈழ அரசியல் நாவல்களுக்கு வேறொரு பகுப்பை நோக்கி நாம் நகர வேண்டி இருக்கிறது. 

சமகால ஈழத்து அரசியல் நாவல்களை அவற்றின் உள்ளீடு சார்ந்து பெரும்பாலும் ஒரே வரிசையில் வைத்துப் பார்க்க முடியும். அவற்றுக்கிடையில் மிக நுண்மையான வித்தியாசங்களையே வாசகன் கண்டடைகிறான். அவற்றின் மய்யமான குரலும், வாசகனுக்கு அவை கொடுக்கும் அனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவை பேசும் மக்களும், மண்ணும், கனவும், துயரமும், இழப்பும், மகிழ்ச்சியும் ஏக்கமும், உறவும், முரணும் என அனைத்தும் ஒரே கோணத்தில் ஒரே காலத்தில் நிகழ்ந்திருப்பதும், ஈழப்படைப்பாளிகள் பெரும்பாலும் தங்களின் சுய அனுபவங்களிலிருந்தும் அல்லது தாங்கள் செவியுற்ற அனுபவப் பகிர்வுகளிலிருந்துமே நாவல்களை எழுதுவதற்கான ஊட்டத்தைப் பெற்றிருப்பதுமே இந்த நிலைமைக்கான காரணம். இதுவே, அண்மையில் ஈழ இலக்கிய சூழலில் ஷோபாசக்தியின் இச்சாவுக்கும் சேனனின் சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் நாவலுக்குமிடையிலான பரஸ்பர ஊடாட்டங்கள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் மேற்கிளம்ப காரணமாக அமைந்தன. சேனனின் நாவலை இன்னும் நான் வாசிக்கவில்லை என்பதால் அந்த விவாதத்துக்குள் நுழையவில்லை. போரின் அனுபவங்கள் கொத்துக்கொத்தானவை. அவற்றிலிருந்து சில துளிகளே இந்தப் படைப்புகள். யார் அள்ளினாலும் அந்த ஆற்றிலிருந்துதான் அள்ள வேண்டும். ஒரே ஆறுதான் என்பதால் தண்ணீரின் குளிர்ச்சியும், வெம்மையும் சரிசமனாகத்தான் இருக்கும். ஈழத்து அரசியல் நாவல்களின் ஊற்று ஒன்றுதான் என்பதால் இதுபோன்ற படைப்பொற்றுமைகள் ஒரு இலக்கியப் போக்காகவே வளர்ந்து வருகின்றன. ஈழப் படைப்பாளிகளும் போர் அனுபவங்களை பரந்த வரலாற்றுத் தத்துவார்த்த தளத்தில் வைத்து நோக்குவதிலும், அதனை பெரும் வரலாற்றனுபவமாக, உத்வேகமான படைப்பாக முன்வைப்பதிலும் தோல்வி கண்டுள்ளனர். தத்துவம், சமூகம், வரலாறு என விரிந்த தளத்திலான வாசிப்பு ஈழப்படைப்பாளிகளுக்கு மிகக் குறைவு. அவர்கள் வெறும் அரசியல் பார்வையுடன் மட்டுமே எழுதத் தொடங்குகின்றனர். சமூக-இலக்கிய மட்டத்தில் கிடைக்கும் அங்கீகாரங்களின் அடிப்படையில் அதே வழியில் தொடர்கின்றனர். இன்னொரு புறம்  படைப்பூக்கம் குன்றுவதற்குள் பதிவுசெய்துவிட வேண்டும் என்ற அவசர மனநிலையும் பெரும்பாலான ஈழத்து அரசியல் நாவல்கள் தட்டையான ஊள்ளீடுகளுடனும், சம்பவ ஒற்றுமைகளுடனும் சுருங்கிவிடக் காரணமாகின்றன. 

இச்சா நாவல் வெள்ளிப்பாவை எனும் ஆலா எனும் வாழ்வு மறுக்கப்பட்ட அப்பாவிச் சிறுமியின் சிறுபராயம் முதல் அவள் அடைய விரும்பிய மாட்சிமை பொருந்திய சாவு வரைக்குமான வாழ்க்கையை பேசுகிறது. இதில் ஆலாவைப் போன்றே சமூகத்தின் விளிம்புத் தளத்திலிருந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என சில மனிதர்களுக்கு தெளிவான முகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் நாவல் முழுவதும் கனத்த துயரம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது. ஒடுக்குமுறை, புறக்கணிப்பு, ஏமாற்றுதல், துரோகம் போன்ற கீழ்மைகள் கதை முழுதும் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. ஈழப்போரின் மானுடத்துயரை ஆலாவின் வாழ்வை ஊடறுத்துச் செல்லும் பல்வேறு காலகட்டங்கள், பல்வேறு மனிதர்கள் வழியே கதையாடுகிறது இச்சா. 

போரும் அது அழித்துக் கடந்த மானுட வாழ்வும் குறித்து நாவல் கிளர்த்தும் உணர்ச்சிகள் உக்கிரமானவையாக எழுந்து தாக்குகின்றன. கிழக்கிலங்கையின் ஒரு பின்தங்கிய இலுப்பங்கேணி எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுமியான வெள்ளிப்பாவை எனும் ஆலா அவளது கிராமத்தை ஒட்டி இடம்பெற்ற நில அபகரிப்பு, கொலை போன்ற சிங்கள இனவாத செயல்பாடுகள், அவளது குடும்ப சமூக நிலைமைகள், நல்லித் தம்பி அப்பாச்சியின் பாலியல் தொந்தரவுகள் என்பன அவளை புலிகள் இயக்கத்தில் இணைவதற்கான சூழலை உருவாக்கிவிட்டன. அது அவள் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வல்ல. புறத்திலிருந்து நிர்ப்பந்தத்தால் வேறு வழியின்றி கிட்டத்தட்ட மரணத்தைத் தேர்ந்தெடுப்பது போல் அவள் தேர்ந்தெடுத்துக் கொண்டது. பின்னர் இயக்கத்தில் ஒரு கரும்புலியாக உயர்ந்து கெழும்பில் புலிகளால் குறிக்கப்பட்ட இலக்கில் வெடிப்பதற்காக கரும்புலியாக ஆலா கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். வெடிப்பதற்கு குறிக்கப்பட்ட காலம் வரையிலான அவளது கொழும்பு வாழ்வும், சிங்கள மக்கள் பற்றிய அவளது புரிதலும் வேறு விதமாக உள்ளூர நிகழும் தருணமாக இந்தக் கட்டத்தை நாவலுக்குள்ளிருந்து வாசகன் உணர்கிறான். ஆலா வெடிக்கவிருந்த தினத்தில் அவளை இலக்கில் வெடிக்காது யாருக்கும் சேதமில்லாமல் ஒதுக்குப் புறமாக சென்று வெடித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமாறு அவளுக்கு புலிகளிடமிருந்து ஏவல் வருகிறது. அந்தக் கட்டளை அவளது உள்ளுணர்வைச் சீண்டுகிறது. அவளைப் போன்றவர்களுக்கு புலிகளிடம் இருந்த உண்மையான இடம் என்ன என்பதை அவள் புரிந்துகொள்ளும் தருணமாக இருக்கிறது. அந்த சலிப்பிலேயே அவள் இராணுவத்திடம் பிடிபட்டு விடுகிறாள். சிறை எனும் வதை முகாமில் அவள் சித்ரவதைபட்டு பின்னர் அங்கேயே செத்தும் விடுகிறாள். இதுவே ஆலா எனும் வெள்ளிப்பாவையின் உண்மையான வாழ்க்கை வரைபடமாகும். ஆனால், ஷோபா தன் புனைவில் அவளது வாழ்வை மேலும் நீட்டிக்கிறார். புலம்பெயர் ஊடகவியலாளர் வாமதேவனின் தயவால் விடுதலையாகி அவரையே திருமணம் முடித்து மீண்டும் ஒரு குடும்பச்சிறை வாழ்க்கை வாழ்ந்து கடைசியில் அந்தப் போராட்டத்தில் இறந்தும் போகிறாள். ஆனால் கடைசியில் அவளுக்குக் கிடைத்தது அவள் விரும்பியிருந்த மாட்சிமை பொருந்திய மரணமல்ல. நாவலின் இந்த அத்தியாயங்கள் புலம்பெயர் சூழலில் ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட இளைஞர், யுவதிகள் உண்மையில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிச்சமாக்குகிறது. சில மர்மமான பக்கங்களைத் துலக்குகிறது. வாமதேவனால் கொடுமைப்படுத்தப்படும், புறக்கணிக்கப்படும் ஆலா கடைசியில் வாமதேவனின் சிறையிலிருந்து தன்னையும் தன் குழந்தையையும் மீட்க நடத்தும் போராட்டம் ஒரு பெண்ணிய நாவல் போன்று இச்சாவை இடமாற்றுகிறது. நாவலின் இந்த இடம் போரில் தொடங்கி குடும்ப வன்முறை வரைக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை முன்வைக்கும் ஒரு பெண்ணிய அவல நாவலாகக் கூட இச்சாவை அணுகத் தூண்டுகிறது. அழுகை முட்டிக்கொள்ளும் துயரம் நாவலை நிறைத்து நிற்கிறது. இந்த மானுட அவலம் ஷோபாவின் நாவல்களுக்குப் புதிதல்லதான். ஆனால், இச்சாவுக்குள் நிரம்பி வழியும் துயரம் அவரது பழைய வாசகனைக்கூட புதிதாகத் தாக்கும் உக்கிரத்துடன் இயங்குகிறது. மனித ஆன்மாவைத் தொந்தரவு செய்யும் மானுட அவலத்தை இவ்வளவு அழுத்தமாக முன்வைக்கும் போது, படைப்பின் அழகியல் அனுபவத்தின் மெய்யான சாத்தியங்களைத் தவறவிடும் தேக்கமும் இச்சாவின் இன்னொரு பக்கமாக உள்ளது. 

இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகள் மற்றும் ஈழத்தமிழர் புரட்சியின் விளைவாலும் சிதைந்த தமிழ் மானுடத் துயரை நாவலின் மய்யமாக முன்வைக்கும் ஷோபாசக்தி இன்றைய சூழலில் பெரும் குறிக்கோள்களைக் கொண்ட புரட்சிகள் தோல்வியடையும் என்பதை ஆலாக்களின் வாழ்க்கைகளைக் கொண்டு நிறுவுகிறார்.   

தங்களின் அன்றாட சாமான்ய வாழ்க்கையிலிருந்தும் வேண்டுமென்றே பிடுங்கி எறியப்பட்ட ஆலா அவள் போன்ற பல மனிதர்களின் பிரதிநிதியாகிறாள். சாதாரணமான பொது வாழ்விலிருந்தும், கனவுகளிலிருந்தும் அவள் வாழ்வு யாரால் தூரமாக்கப்பட்டது? அவள் வாழ விரும்பிய வாழ்க்கையை அவளிடமிருந்து யார் பறித்தது? அவளது கனவுகளைக் கலைத்தது யார்? சிறுமிப்பராயத்திலிருந்தே அவளை பல தடவைகள் பாலியல் கொடுமை புரிந்து வந்த நல்லித் தம்பி அப்பாச்சி, அவளது கிராமத்தை அழித்து ஏப்பமிட்ட இனவாதம், அதன் பிரதிநிதிகளாய் செயற்பட்ட காக்கிலால் போன்ற ஊர்காவல் படையினர், விடுதலைப் புலிகள், சிங்கள அரசு, பிரேமதோசா, பிரபாகரன், சுல்தான் பப்பா என நாவலுக்கு உள்ளே இருப்பவர்களும், நாவலுக்கு வெளியே இருப்பவர்களும் பொறுப்புச் சொல்ல வேண்டிய மாபெரும் அவலத்தின் இரத்தசாட்சியாக ஆலா உறைந்திருக்கிறாள். 

இச்சா நாவல் எதைப் பற்றியது. இந்நாவலில் அவர் வழக்கமாகப் பேசும் அரசியலுக்கு அப்பால் மேலும் சில பரிமாணங்களும் தென்படுகின்றன. அதாவது இச்சாவை வெறும் ஓர் அரசியல் நாவலாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. ஒரு சமூகத்தின் தொன்மங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டியல் சார்ந்த நாட்டாரியல் பரிமாணம் இச்சாவுக்குள் இருக்கிறது. அதேநேரம் பெண்ணியப் பரிமாணமும் இருக்கிறது. அதேநேரம் பெரும் இயக்க மற்றும் அரசியல் நிலவரங்களால் விளிம்புக்குள்ளான மனிதர்கள் மீதான கவனயீர்ப்புக் குரலும் நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் இச்சா பல உள்விரிப்புகளைக் கொண்ட கதையாகிறது. நாவல் என்பது ஒரு பெருங்கதைதான். பல மனிதர்களால், பல கனவுகளால், பல வாழ்க்கைகளால் ஆனது. 

நாவலின் தொடக்கப் பகுதிகள் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு அம்பாறையை அண்டியுள்ள இலுப்பங்கேணி என்ற பாரம்பரியத் தமிழ்க்கிராமத்தின் மீதான இன மேலாதிக்க அரசின் நில அபகரிப்பையும், சிங்களக் குடியேற்றங்களையும் உள்நோக்கமாகக் கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள், அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அந்நிலத்தின் பூர்வ குடிகளான பரவணித் தமிழ்க்குடிகள் தங்களது மந்திரத் தொழிலாளர்கள் மூலம் வன்முறையாளர்கள் உள்நுழையக்கூடிய கிராமத்தின் நான்கு மூலைகளுக்கும் நாகங்களை ஏவி தங்களைக் காத்துக்கொள்ளும் சம்பவம் ஒரு அதிர்ச்சியான தகவலாக நாவலில் பதிவாகிறது.

நாவலின் மய்யக் கதாபாத்திரமான இலுப்பங்கேணிச் சிறுமியான ஆலா பதுமர் குடியைச் சேர்ந்தவள். கிழக்கிலங்கைத் தமிழர்களின் இந்தக்குடி வழக்காறு நாவலில் சொல்லப்படுகிறது. அது நாவலின் சமூகவியல் பரிமாணமாக நிலைப்பெடுக்கிறது. இலுப்பங்கேணி பதுமர் குடித் தமிழ் மக்கள் இந்த மந்திரத் தொழில் மூலம் இன அழிப்பிலிருந்து மட்டுமல்ல நோய், இயற்கைச் சீற்றம் மற்றும் கொடிய வனவிலங்குகளின் தாக்குதல்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும் நாவலில் சொல்லப்படுகிறது. மட்டக்களப்புத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக்கூறாக மந்திர வழக்காறுகள் இருப்பதாக மட்டக்களப்புக்கு வெளியே குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்து வருகிறது. அந்த நம்பிக்கையையே இச்சாவின் இந்தப் பக்கங்கள் பேசுகின்றன.   

இச்சா நமக்குள் ஒருவித கொந்தளிப்பையும் நிலைமாற்றத்தையும் தூண்டும் கதையாக மட்டுமே சுருங்காது ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வையும் ஒரு உபரிமதிப்பாக வாசகனுக்கு கொடுக்கிறது. வரலாற்றை நேர்மையாகப் பதிவுசெய்யும் ஈழ நாவல்கள் இலக்கிய வரலாற்று ஆதாரமாக பல தசாப்தங்களுக்குப் பின் வரப்போகும் நமது தலைமுறையினருக்கு போர்க்காலத்தையும், அக்கால மக்களின் வாழ்க்கையையும், ஆயுதக்குழுக்களின் உள் அரசியலையும், அரசின் ஏமாற்றுத் தனங்களையும் உண்மைக்கு நெருக்கமாக நின்று புரிந்துகொள்ள ஓரளவு வரலாற்றின் பணியையும் ஆற்ற முடியும் என நம்புகிறேன். இன்றைய நமது அனுபவத்தின் சுவடுகளை மீட்டும் வரலாற்றுக் கதாபாத்திரங்கள் கொரில்லாவில் உள்ளனர். ம், பொக்ஸ் இச்சா என எல்லா நாவல்களிலுமே வந்து போகின்றனர். சிலர் கணத்தில் முடிபவர்களாகவுள்ளனர். சிலர் வரலாற்றில் நிலைப்பவர்களாக உள்ளனர். ஆலா அத்தகையதொரு நிலைத்து நிற்கும் கதாபாத்திரமாகவே இருக்கிறாள். 

ஷோபாவின் நாவல்களில் இருக்கும் வரலாற்றுத் தன்மையும், உணர்வும் ஒரு தலைப்பட்சமானதல்ல. எல்லாத்தரப்பாரின் நியாயங்களுக்கும், அநியாயங்களுக்கும் அவரது நாவல்களில் ஓர் உருவரைவு கொடுக்கப்பட்டிருக்கும்.  எல்லாத் தரப்பாருக்கும் குரல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வரலாற்றைச் சிதைத்து அதை உருமாற்றி வாசகன் முன்வைப்பது அபத்தமானது. நாவல் ஒரு காலகட்டத்தின் உண்மையான சாட்சியாக இருக்க வேண்டும் என்ற நாவலின் உள்ளீடுசார்ந்த உண்மைகளுக்கு ஷோபா நேர்மையாவே அவரது ஒவ்வொரு நாவலிலும் இருந்து வருகிறார். இச்சாவில் கூட ஆலா அடைக்கப்பட்டிருந்த சிறையின் தலைமையதிகாரியான லொக்கு நோனா ஆலா மீது காட்டும் பரிவும் மனிதாபிமானமும் எங்கும் மானுடத்தின் மீதான நேயம் மலர்ந்திருப்பதைக் காட்டுகிறது. 

ஈழத் தமிழ்க் கிறிஸ்தவ வாழ்க்கையையும் போரின் நிழலில் நின்று பதிவுசெய்துவிட வேண்டும் என்ற ஆர்வம் ஷோபாவுக்குள் எப்போதும் இருந்தே வருகிறது. அவரது நாவல்களில் ஒருவித கிறிஸ்தவ கலாசாசாரச் சார்பு மனம் மெலிதாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஈழத்துத் தமிழ்ச் சூழலில் தமிழ்க் கிறிஸ்தவ பண்பாட்டுக்கான இலக்கிய அடையாளத்தையும் வடிவத்தையும் பெற்றுக்கொடுப்பதில் அவருக்குள் ஒரு அவா சதாவும் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை பொக்ஸ் நாவலில் அதிகம் காணலாம். இச்சா நாவலும் இயேசுக் கிறிஸ்துவிலிருந்துதான் தொடங்குகிறது.

ஈழத்து அரசியல் நாவல்கள் சமூக வரலாற்றை ஆழமாக முன்வைப்பதில்லை. சமூகப் பண்பாட்டு மாற்றத்தை நோக்கி வரலாறு எப்படி இயங்கி வந்திருக்கிறது போன்ற ஒரு தத்துவார்த்த வரலாற்று விசாரணையை எந்த ஈழ நாவலும் முன்வைப்பதில்லை. வெறும் நடைமுறை அரசியல் வரலாற்றின் மீதே அவை ஓரளவு கவனங்கொள்கின்றன. ஷோபாவின் நாவல்களும் நடைமுறைசார்ந்த ஈழத்துப் போர் அரசியலைப் பேசுபவைதான். அதற்கு அப்பால் அவரது படைப்புகளுக்கான சமூகத் தன்மை இல்லை. ஆனாலும் அந்தக் குறையை தவிர்ப்பதற்கான எத்தனங்கள் அவரது நாவல்களுக்குள் உள்ளன. அவரது பொக்ஸ் நாவலில் வரும் பெரிய பள்ளன் குளத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வரலாறும் இருப்பும் பற்றிய விவரணம் சமூக வரலாற்றுப் பதிவை தன் நாவல்களில் இடம்பெறச் செய்வதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் பிரயாசைக்கு எடுத்துக்காட்டாகும். பொக்ஸ் நாவலில் அந்த விவரணம் நாவலின் இயல்பான அரசியல் கதைப் போக்குக்கு சற்று இடையூறு போன்று தன்னளவில் சுருங்கிக் கொண்டாலும் அவை நாவலை ஒப்பேற்றுவதற்கான எத்தனங்களல்ல. அது சமூக வாழ்வியலை முன்வைப்பதற்கான ஒரு படைப்பாளியின் தீராத வேட்கையாகும்.

அரசியல் நிகழ்வுகளை உயிரோட்டமான புனைவுச் சம்பவங்களாக்குவதென்பது புனைவின் கதைப் பண்புக்கு மிகச் சவாலானது. ஈழப்படைப்பாளிகள் பலரும் புனைவில் சறுக்கும் புள்ளி அதுதான். ஷோபா சக்தியின் நாவல்களில் முரண்கள் அதற்கான அழகியலோடு இயல்பாக அமைகின்றன. வாழ்க்கையைக் கலைப்படைப்பாக்கும் போது ஒரு கலைஞன் எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து நுட்பமாக தேறுகிறார் ஷோபா. அவரது நாவல்களில் உண்மைக்கும், புனைவுக்குமிடையிலான வித்தியாசங்களை சிலவேளைகளில் வாசகனால் கண்டடைய முடிவதில்லை. உண்மையே புனைவாக மாறியிருப்பதாகத் தோன்றுகிறது.

Series Navigation<< நீர்ப்பறவைகளின் தியானம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.