- 20xx- கதைகள்: முன்னுரை
- இருவேறு உலகங்கள்
- 2084: 1984+100
- 2015: சட்டமும் நியாயமும்
- 2010- மீண்டும் மால்தஸ்
- 2019- ஒரேயொரு டாலர்
- 2016 – எண்கள்
- பிரகாசமான எதிர்காலம்
- நிஜமான வேலை
- அவர் வழியே ஒரு தினுசு
- என்ன பொருத்தம்!
- மிகப்பெரிய அதிசயம்
- அன்புள்ள அன்னைக்கு
- வேலைக்கு ஆள் தேவை
- கோழிக் குஞ்சுகள்
- விலைக்குமேல் விலை
- எதிர்வளர்ச்சி
2021-2
எட்டு ஆண்டுகளில் வீட்டின் தரைத்தளப் பகுதிக்குள் அவள் நுழைந்ததை விரல்விட்டு எண்ணலாம். அங்கே அவள் போகாமல் இருந்தது அப்படியொன்றும் சிரமமான காரியம் இல்லை. கராஜில் காரை நிறுத்தி இரண்டு வரிசைகளில் பதினான்கு பலகைப்படிகள் ஏறினால் வீட்டின் புழங்கும் இடம். குடும்ப அறை, அதன் வழியாக சமையலறை, சாப்பிடும் இடம், வரவேற்புக் கூடத்தை ஒட்டிய நடைவழி, சின்ன நூலக-பூஜை அறை, மூன்று படுக்கை அறைகள் எல்லாம் மேல் தளத்தில்.
சுபா சொன்னதற்காக அன்று கீழ்த்தளத்துக்குப் போக வேண்டி நேரிட்டது. காரின் முன்புறமாக வந்து அப்பகுதியின் கதவை அதற்கான சாவியால் திறந்தாள். அங்கே கடைசியாக வந்தது? ‘கோவிட்’டுக்கு முன்னால்? வைரஸ் புகுவதற்கு வாய்ப்பு இல்லை யென்றாலும் அதை சாக்கிட்டு அவள் அங்கே வரவில்லை. நுழைந்ததும் ஒரு கணிசமான சதுர அறை. அதில் ஒரு ஒற்றைப்படுக்கை. அதன் தலைப்பகுதியை ஒட்டி ஒரு சிறு மேஜை. ஒரு காலத்தில் அதன் மேல்.. அதையெல்லாம் நினைக்கக்கூடாது என தன்னைத் திருத்திக்கொண்டாள். தெருவை நோக்கி இரண்டு ஜன்னல்கள். அவற்றுக்கு நடுவில் சுவர் ஓரமாக ஒரு சாய்வு நாற்காலி. அதில் உட்கார்ந்தால் வீட்டின் முன்வட்டம் நன்றாகத் தெரியும். அங்கிருந்து குழந்தைகள் விளையாடுவதையும், நாய்களை இழுத்து நடப்பவர்களையும் வேடிக்கை பார்த்தால் எலும்புகளை உருக்கும் வலியையும் வேதியியல் மருந்துகளால் துளைக்கப்பட்ட வயிற்றின் வேதனையையும் கொஞ்சம் மறக்கலாம். மறுபடி நினைவு அங்கேயே போகிறது. அதற்காகத்தான் அங்கே வருவதைத் தவிர்த்திருந்தாள்.
நுழைவுக் கதவுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு எளிமையான குளியலறை. அதையும் தாண்டி சிறு சமையலறை. அதன் நடுவில் நின்று அடுப்பு, அலமாரி, நீர்த்தொட்டி எல்லாவற்றையும் கைநீட்டித் தொடலாம். சில ஆண்டுகளுக்கு முன் சமையலறையைப் புதுப்பித்தபோது பழைய ஆனால் பழுதுபடாத அடுப்பும் ரெஃப்ரிஜெரேடரும் அங்கே வந்தன. பின்னது உபயோகத்தில் இல்லாததால் அதன் கதவுகள் மூடாதபடி ஸ்டைரோஃபோம் கட்டைகள். முன்னறையில் கண்ணில்பட்ட இடங்களைத் தூசி தட்டி, தரையை சுத்தம் செய்தாள். பின்-அறைகளை நுரைசோப் பரப்பி ஈரத்துணியால் துடைத்தாள். பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தவில்லை என்றாலும் படுக்கையின் மேல்-விரிப்பையும் தலையணை உறைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைத் துவைத்து உலர்த்தி படுக்கையின் மேல் பரத்தியதும் வசிக்கும் இடம் போல் வாசம் வந்தது. வேலை முடிந்ததாகச் சுற்றிலும் பார்வையை ஓட்டியபோது தான் கவனித்தாள். படுக்கையின் தலைச்சட்டத்தக்கு மேல் சுவரில் ஒரு வெளிறிய செவ்வகம். முன்னொரு சமயம் அங்கே ராமர் பட்டாபிஷேகப் படம் மாட்டியிருந்ததற்கு அடையாளம். படுத்திருந்தவரின் உடல் வலியையும் மனவேதனையையும் குறைத்து அவரைத் தூக்கத்துக்கு அழைத்துப்போகும் என்ற நம்பிக்கை. அந்த இடத்தை மறைக்க.. குடும்ப அறையில் மாட்டியிருக்கும் ஒரு பெரிய புகைப்படம்? அதை வீட்டின் வாசல் வழியாக ஜாக்கிரதையாக எடுத்துவந்து..
கீழ்த்தளத்தையும் பார்க்கும்படி செய்தாகிவிட்டது. வீடு விற்பதற்குத் தயார்.

வீட்டுக்கு வெளியேவந்து தெருவைப் பார்த்து நின்றாள்.
இதேபோல கோடையின் நீண்ட மாலைநேரம். ஆனால், முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்னால். அந்த வட்டத்தில் கால்வைத்தபோது இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. பத்துவயது சுபாவும் ஏழு வயது சுமனும் அங்கே விளையாடிய மற்ற குழந்தைகளை ஆர்வத்துடன் பார்த்தார்கள். அவர்களுடன் சுகுமாரனுக்கும் சுகந்திக்கும் அந்த இடம் பிடித்துவிட்டது. அவன் கல்லூரி பதினைந்து நிமிடங்களில், அவள் மாநில அலுவலகம் போக ராலே அகநகருக்கு பஸ் வதி. மனை தான் சரிப்பட்டு வரவில்லை. தெருவின் மட்டத்தில் தொடங்கிய நிலம் தாறுமாறாக உயர்ந்து மூன்று மீட்டர் உயர மேட்டில் முடிந்தது. சமதள மனைகளுக்குப் பழக்கப்பட்ட அவர்களுக்குத் தயக்கம். அங்கே எப்படி வீடு கட்ட முடியும்? அவர்களை அழைத்துவந்து காட்டிய விற்பனை மங்கைக்கு அந்தவொரு காரணத்தால் விவகாரம் தட்டிப்போவதில் விருப்பம் இல்லை. அவன் கணிதப் பேராசிரியர், அவளுக்கு நிரந்தர வேலை. வீட்டுக்கடன் கிடைப்பது நிச்சயம். கௌரவமான குடும்பம். காலியாக இருந்த அந்த இடத்தில் அவர்களின் இல்லத்தால் நிரப்பினால் நாற்பது வீடுகள் கொண்ட ‘ஃபாக்ஸ் டென்’ தொகுதி நிறைவு பெற்றுவிடும்.
“இம்மாதிரி மனைகளுக்கு என்றே ப்ளான்கள் இருக்கின்றன.”
காரின் பின்னால் இருந்து தடியான புத்தகத்தை எடுத்துத் தடதடவெனப் பிரித்தாள். மனையை ஒரு முறை நோட்டம் விட்டு ஒரு வரைபடத்தை இருவரும் பார்க்கும்படி காட்டினாள்.
“இது எப்படி?” என்று ஆள்காட்டி விரலை நகர்த்தினாள்.
“இங்கே தெருவின் மட்டத்தில் காரை நிறுத்தும் இடம். அங்கிருந்து படிகள் வழியாக மேல்தளத்தில்..”
வெளியே போகப் படி இறங்க வேண்டும். சாமான்கள் வாங்கினால் அவற்றை எடுத்துக்கொண்டு படியேற வேண்டும். மற்றபடி அவர்களுக்குப் போதுமான இடம்.
“வீட்டின் முன்வாயிலுக்கு எப்படி நுழையவது?” சுகந்திக்கு வீடு என்றால் வாசற்படி இருக்க வேண்டும்.
“வீட்டுப்பாதையில் இருந்து முகப்புக்கு படிகள் இருக்கும்” என்று கட்டப்பட்ட வீட்டின் படத்தைக் காட்டினாள்.
“வரைபடத்தில் சரியாகத் தெரியவில்லை. தாங்க்ஸ்.”
“கீழ்த்தளத்தில்..” என்றான் சுகுமாரன்.
“கராஜ் மட்டும்.”
“அதை ஒட்டி ஒரு சின்ன வசிப்பிடம் கட்ட முடியுமா?”
சுகந்தியிடம், “அம்மா வந்தா. மடியா தனியா இருந்துக்கலாம்” என்றான்.
“நிச்சயம் முடியும் – இருபதாயிரம் டாலருக்கு” என்றாள் விற்பனை மங்கை புன்சிரிப்புடன்.
அம்மா வரவில்லை. ஆனால் அப்பகுதி அவனுக்கு ஒரு காலத்தில் உதவும் என்று அப்போது அவர்கள் நினைக்கவில்லை.
ஐந்தரை மாதத்தில் வீடு கட்டிமுடித்து கையெழுத்து ஆனதும் சுகுமாரன் குடும்பம் அதன் முன்னால் நிற்க, புகைப்படக்காரர் படம் எடுத்தார். சுகுமாரனுக்கு வழுக்கை இன்னும் விழவில்லை. சுகந்திக்குக் கருமையான நீண்ட கூந்தல். சுபா இன்னும் தலைமயிரை வெட்டிக்கொள்ளவில்லை. சுமனுக்குக் குழந்தைத்தனம் போகவில்லை. எல்லாருடைய முகத்திலும் புதிய உலகில் நுழையும் பரவசம். பர்ஸில் நுழைக்கும் அளவில் இருந்து பல பிரதிகள். ஒன்று மட்டும் தொலைக்காட்சித் திரைபோல. அது குடும்ப அறையின் சுவரை அலங்கரித்தது.
வீட்டின் பக்கம் திரும்பி நின்றாள்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த வீட்டில் இருந்து பிரிவதற்கு ஒரு சாத்தியம் வந்தது. அப்போது சுமன் ரிச்மண்டில் தனிமரமாக இருந்தான். ஓராண்டு காலம் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் அம்மாவுக்குத் துணையாக வந்து போவான். அப்போது கம்பளம் மாற்றி, மேல் தளத்து சுவர்களுக்கு வர்ணம் பூசி, சமையலறையைப் புதுப்பித்து, அடுப்பில் இருந்து துணி உலர்த்தும் இயந்திரம் வரை புதிதாக வாங்கி, புதுக்கூரை போட்டு.. அவன் துணைசேர்த்து நியு யார்க் போனதும்,
“வீடு பார்க்கறதுக்கு புதுசா இருக்கு. விலைக்குப் போட்டுப்பார்க்கலாம்” என்றாள் சுபா.
“ரியால்டர் ரீடாவை நாளைக்குக் கூப்பிடறேன்.”
“அவளுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். யாராவது வீட்டைப் பார்க்க வரும்போது குடும்பப்படம் கண்ணில் படாம இருக்கறது நல்லது.”
“அதைக் கழட்டி படுக்கைக்குக் கீழே வச்சுடறேன். ஆனா, பெருமாள் படங்களை யெல்லாம் எடுக்கச் சொல்லாதே!”
ரீடா, ‘வீட்டைக் காட்டுவதற்காக சிலரை அழைத்துவரப் போகிறேன்’ என்று அலைபேசியில் தகவல் பதித்தால், சுகந்தி எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, இந்திய சமையல் வாசனை இல்லாதபடி ஜன்னல்களைத் திறந்துவைத்து, கோவிலுக்கோ கடைக்கோ போவது வழக்கம்.
அப்படி மூன்று மாதம் செய்ததின் முடிவு, வாங்குகிறவர்களின் கையோங்கி இருந்ததால் அதன் மதிப்புக்கு பதினைந்து இருபது சதம் குறைவாகத்தான் வீடு விலைபோகும். எதற்கு நஷ்டப்பட வேண்டும்? வெளிப்புறத்தில் புல்வெட்டவும் இலை வாரவும் ஒரு பணியாளன். வீட்டிற்குள் அவள் புழங்கும் இடத்தை அவளால் சுத்தமாக வைக்க முடியும்.
“வேலைக்குப் போற வரைக்கும் இங்கியே தனியா இருந்துடறேன்.”
அதை சுபா ஞாபகம் வைத்து, முந்தைய தினம் ஓய்வு வாழ்க்கைக்கு வழியனுப்பும் விருந்து முடிந்து சுகந்தி வீட்டிற்கு வந்ததுமே அம்மாவை அழைத்தாள்.
“இப்ப வீட்டு விலையெல்லாம் கிடுகிடுன்னு ஏறிண்டு இருக்கே. நியூஸ் பார்க்கலே?”
“அதுக்கெல்லாம் எனக்கு ஏதுடி நேரம்? சனிக்கிழமை கோவில், மறுநாள் கீதை வகுப்பு, மறுபடி திங்கள்கிழமை..”
“இனிமே உனக்கு திங்கள்கிழமை கிடையாது.”
“திங்கள்கிழமை காலையில அதை ஞாபகப்படுத்து!”
“நான் கூப்பிட்டது அதுக்காக இல்ல. ‘உன் வீட்டுக்கு என்ன விலைன்னாலும் சொல்! முழுப்பணம் கொடுத்து வாங்கிக்கறேன்’னு ஈ-மெய்ல், பழைய மெய்ல் நிறைய வந்திருக்குமே.”
“நான் அதையெல்லாம் பிரிக்கறதே கிடையாது.”
“சரி, நான் சொல்றேன். வீட்டை விற்க இப்ப சரியான நேரம்.”
“வித்துட்டு..”
“இங்கே வந்துடு!”
ஷார்லெட்டில் சுபாவின் கணவன் குடும்பத்தினர் அனைவரும் அடுத்தடுத்த வீடுகளில்.
“உனக்கு தனியா ஆயிரம் சதுர அடியில ஒரே தளத்தில வீடு தயாரா இருக்கு. மாடிப்படி ஏற வேண்டாம். நான் உன் பேருக்கு மாத்தித்தரேன்.”
இப்போதைய வீட்டில் பாதி, அவளுக்கு நிச்சயம் போதும்.
“நீ சுமன் பக்கம் போனால், அவன் பெண்டாட்டியின் அதிகாரத்துக்கு அடங்கிப்போகணும். இங்கே நீ, உன் வீடுன்னு சுதந்திரமா இருக்கலாம்.”
சுபாவே தீர்மானித்துவிட்டாள்.
“வீட்டைப் பார்க்க நாளை மாலை ஒருவன் வருவான்.”
அதுவும் அவள் தீர்மானம்.
“எல்லாம் சுத்தமா இருக்கணுமா?”
“இருந்தா நல்லது.”
சுபா சொன்னபோது முப்பத்திநான்கு வருஷ உறவை முறிப்பதா என்று இருந்தது. செய்து தானே ஆக வேண்டும் என்று பிறகு வந்த விவேகம். அத்தனை காலம் செய்துவந்த மாநில அரசின் வேலையில் இருந்து விடுபட்டது போல. இரண்டும் ஒன்று தான். வேலைக்குப் போக வீடு. வீட்டுக்கடனை அடைக்க வேலை. அதைவிட எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய திட்டமிடாத பிரிவு. அதில் இருந்து அவள் மீளவில்லையா?
கோடையின் ஆரம்பத்தில் நண்பர்களுடன் விருந்து. சாப்பாடும் அரட்டையும் முடிந்து இருவர் இருவராக விடைபெற்று படியிறங்கிப்போக, கடைசியில் மணிவாசகமும் விஜயாவும். அவர்களுடன் முன்வட்டத்தில் அவர்கள் கார் வரை சுகந்தியும் சுகுமாரனும் வந்தார்கள். அவனும் மணிவாசகமும் சென்னையில் ஒரே கல்லூரியில் பத்தாண்டுகள் பணிபுரிந்தவர்கள். அந்த நெருக்கத்தில் அவர்,
“பொங்கலுக்கு அப்புறம் இப்பதான் பார்த்துக்கறோம். நீ ரொம்ப இளைச்சிட்ட மாதிரி தெரியுது.”
“சரியான நேரத்துக்கு சாப்பிடறது இல்ல. கிட்டத்தட்ட பத்து பவுண்டு இறங்கிட்டார்” என்று வருத்தத்துடன் சொன்னாள் சுகந்தி.
“எனக்கு அவ்வளவு குறைஞ்சா நல்லா இருக்கும். நீ ஏற்கனவே ஒல்லி. எதுக்கும் டாக்டர் கிட்ட காட்டறது நல்லது.”
“நானும் அதையே தான் சொல்லிண்டிருக்கேன். செமெஸ்டர் முடியட்டும்னு தள்ளிப் போட்டிண்டே இருக்கார். நீங்க தான் அவருக்கு சொல்லணும்!”
“சொல்றேன். பெண்டாட்டி பேச்சை கேட்டு நடக்கறது புத்திசாலித்தனம்.”
“அறிவுரை கொடுக்கற ஆளைப்பார்!” என்றாள் விஜயா.
மறுநாள் வெளியே போக படி இறங்குவதும் திரும்பிவந்து மேல்தளத்துக்கு ஏறுவதும் சுகுமாரனுக்கு சிரமமாக இருந்தன. சுகந்தி ரெக்ஸ் மருந்தகத்தை அழைத்தாள். இரண்டு நாட்களுக்குப்பிறகு பொதுமருத்துவப் பிரிவில் அவள் காத்திருக்க, அவனைப் பரிசோதிக்க அழைத்துப்போனார்கள். நேரம் செல்லச்செல்ல அவளுக்குத் தவிப்பு அதிகமானது.
‘வேளாவேளைக்கு ஆரோக்கியமா சாப்பிடு! வயசானதுக்கு தினம் ஒரு வைட்டமின் மாத்திரை.’ இதற்கு இவ்வளவு நேரமா?
இரண்டு மணிக்குப் பிறகு அவன் ஆன்காலஜிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வரவேற்பு மங்கை தெரிவித்தாள். அங்கே இன்னொரு மூன்று மணி. அவனைப் பார்க்க சுகந்தி அனுமதிக்கப்பட்டபோது, நோயாளி ஆடையில் இருந்த அவன்,
“ஒரு ராத்ரி நான் இங்கேயே தங்கணுமாம். சும்மா ஆப்சர்வேஷனுக்கு.”
அவளுக்காக அவன் குரலில் நம்பிக்கை நிரம்பியிருந்தது.
அவள் தனியே திரும்பிவந்தாள். இரவில் அந்த வீட்டில் அவள் மட்டும் இருந்தது அது தான் முதல்முறை. வருங்காலத்துக்கு ஒரு முன்னுரையோ? ஒரு இரவு ஒரு வாரம் ஆனது. மருந்தகத்தில் இருந்து சுகுமாரனை அழைத்துவருமுன்பே சுகந்திக்குக் காலத்திரை சற்று விலகிவிட்டது. மேல் தளம் அவனுக்கு எட்டாத உயரத்தில். கண்ணீரைக் கட்டுப்படுத்தி கீழ்த்தளத்துக் குளியலறையைச் சுத்தம்செய்தாள். படுக்கைக்குப் புதிய விரிப்பு, போர்வை, இரண்டு தலையணைகள். அதன் தலைப்பகுதியில் மருந்துகள், சில்லறைப் பொருட்கள் மற்றும் சாப்பாட்டுத்தட்டுகள் வைக்க ஒரு சிறு மேஜை. தரையில் நீண்ட கம்பளங்கள், ஜன்னல்களுக்கு நடுவே ஒரு சாய்வு நாற்காலி.
முக்கியமாக.. பூஜை அறையில் இருந்து பக்தி சிரத்தையுடன் எடுத்துவந்து சுவரில் மாட்டிய படம். அனுமன் பணிந்திருக்க, இலக்குவன் துணையிருக்க, சீதை அருள் புரிய, இராமனின் ஆட்சியில்..
சுகுமாரனின் உடல் கதிரியக்கத்தின் உதவியிலும் சுகந்தி வேளைக்குக் கொடுத்த சாப்பாட்டிலும் இரண்டு செமெஸ்டர்களைத் தாண்டியது. வாரத்தில் இரண்டு வகுப்புகள் மட்டும். மணிவாசகம் அவனைக் காரில் அமர்த்தி கல்லூரியின் அறிவியல் கட்டடம் வரையில் அழைத்துப்போய் அவனுடன் இருந்து திரும்ப அழைத்துவந்தார்.
“பென்ஸீனை தினம் வாசனை பார்த்த எனக்கு லுகீமியா வந்தா காரணம் இருக்கு. உனக்கு ஏன்?”
பிரபஞ்சத்தில் பதில் இல்லாத பல கேள்விகளில் ஒன்று.
அடுத்த கோடையில் ஒரு நாள்.
‘கதிரியக்கமும் வேதியியல் மருந்துகளும் நோயாளிக்கு இனி உதவாது, வலியை மந்திக்கவைக்கும் மருந்துதான் விமோசனம்’ என்று மருத்துவர் சொல்வதற்குமுன், சுகுமாரனே,
“சுபாவையும் சுமனையும் வரச்சொல்!”
குடும்பத்தினர் சூழ்ந்திருக்க, பல ஆண்டுகள் வகுப்பறைகளை நிரப்பிய கணீர் குரலுக்குக் கடைசி சக்தி.
“இப்பவே சொல்லிட்டேன். யாராவது அழுதா எனக்குப் பிடிக்காது. நான் பார்த்திண்டே இருப்பேன். நீங்க கண்ணீர்விட்டா எனக்கு வருத்தமா இருக்கும். ஏன் அழணும்? இந்த பொறுக்க முடியாத வலியில் இருந்து எனக்கு விடுதலை. நீங்க எல்லாரும் நல்ல நிலையில இருக்கேள். சுகந்தி உனக்கும் தான் சொல்றேன். இன்னும் பத்துப்பதினைஞ்சு வருஷம் இருந்தா நன்னாத்தான் இருக்கும். சதாபிஷேகம் பண்ணிக்கலாம். இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு? முப்பத்தாறு வருஷம் சந்தோஷமா இருந்தோம். அதை நினைச்சு மனசை தேத்திக்கோ! உனக்கு குழந்தை மனசு. பெருமாள் இதுக்குமேல எந்த கஷ்டமும் தரமாட்டார். என் ஞாபகம் வரும்போது பாதியாக் கிழிச்ச உடம்பையும் திராட்சை யாட்டம் சுருங்கிப்போன முகத்தையும் மறந்துடுங்கோ! வீட்டுக்கு முன்னால நாம எல்லாரும் நிக்கற ஃபோட்டோவை நினைச்சுக்கணும். சரியா?”
மணிவாசகத்தின் உதவியுடன் கரோலைனா ஹாஸ்பைஸ். அங்கே மூடிய கண்களுடன் இரண்டு வாரங்கள். சுகுமாரனின் கணக்குப் பாடம் இனி வேறொரு உலகத்தில்.
உயரமான ஒரு பென்ஸ் சுகந்தியைப் பார்த்து எட்டி நின்றது. இறக்கிய ஜன்னல் வழியாக,
“மிஸ் சுகுமார்?”
“நான் தான்.”
“ஹாய்! நான் க்ரிஸ் கெய்ன்ஸ். ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ நிறுவனத்தில் இருந்து வருகிறேன். சுபா படேல் அனுப்பிய தகவலின்படி..”
அவள் ‘க்ரோயிங் சர்க்ல் பாங்க்’கின் ஷார்லெட் கிளைக்குத் தலைவி.
“ஹாய் க்ரிஸ்! உன்னை எதிர்பார்த்து வீட்டு வாசலில் காத்திருக்கிறேன்.”
“நீ எனக்கு ஒரு தப்படி முன்னால்” என்ற பாராட்டுடன் ஊர்தியில் இருந்து இறங்கினான்.
வீட்டை மதிப்பிட வந்தவன் விரிசல் இல்லாத பாதை, புல் தரை, பூச்செடிகள் எல்லாவற்றையும் திருப்தியுடன் பார்த்தான். நுழைவிடத்தின் கூரை விளக்கு அவனுக்குப் பிடித்திருந்தது. எல்லா அறைகளிலும் நடைபயின்றான். குழாய்களைத் திருப்பினான். கதவுகளைத் திறந்து மூடினான். ஜன்னல்களைத் திறந்து பார்த்தான். வெளியே சென்று கூரையையும் சுவரையும் நோட்டம் விட்டான். சமையலறையில் காத்திருந்த சுகந்தியிடம்,
“எல்லாம் நல்ல நிலையில்.”
அந்த பாராட்டை வீட்டின் சார்பிலும் சுமன் சார்பிலும் அவள் ஏற்றுக்கொண்டாள்.
“கீழ்த்தளத்தையும் பார்க்கலாமா?”
“ஓ! ஷுர்.”
கராஜ் கதவைத் திறந்துவிட்டு படி இறங்கினள். க்ரிஸ் இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்.
கீழ்ப்பகுதியின் முழு நீளத்தையும் பார்வையால் அளந்த அவன்,
“மதர்-இன்-லா ஸ்வீட்?”
“அந்த எண்ணத்தில்தான் இதைச் சேர்த்தோம்.”
ஒரு ஜன்னலைத் திறக்க அதன் தாழ்ப்பாளை க்ரிஸ் திருகினான். அது அவன் கையோடு வந்துவிட்டது. இன்னொரு ஜன்னலின் தாழ்ப்பாள் வழிவிட்டாலும் அதன் கீழ்ப்பாதி மேலே உயராமல் அடம் பிடித்தது.
“என் கைக்கு வலு இல்லாததால் பல ஆண்டுகளாகத் திறக்கவில்லை.”
நிஜமான காரணம் அவனுக்கு ஏன் தெரிய வேண்டும்? சமாதானமாக,
“இரண்டு ஜன்னல்களையும் மாற்றுவதற்கான செலவை ஏற்கிறேன்.”
மற்றபடி அப்பகுதியில் அவன் குறை கண்டுபிடிக்கவில்லை.
க்ரிஸ் தெருவுக்கு வந்து, “சுபா உன்னை விரைவில் அழைப்பாள்” என்றான்.
“ஒன்றும் அவசரம் இல்லை.”
சுபாவுக்குத்தான் அவசரம்.
‘இன்று ஞாயிறு நிதானமாக எழுந்திருக்கலாம், ம்ம்.. இனி எல்லா நாட்களுமே எனக்கு ஞாயிற்றுக்கிழமைகள் தான்’ என்று படுக்கையில் படுத்தபடி சுகந்தி அசைபோட்டபோது, சுபா அழைத்தாள்.
“நானூற்றி நாற்பத்தி நாலு.”
“இந்தியாவில் கான்ஸ்டப்ளைத்தான் அப்படி கூப்பிடுவாங்க.”
“உன் வேடிக்கை பேச்சைக் கேட்டு சந்தோஷம். நான் சொன்னது வீட்டின் மதிப்பு, ஆயிரத்தில்.”
“ஏழு ஆண்டுகளுக்கு முன் அதில் பாதிகூட கிடைச்சிருக்காது.”
“நீ காத்திருந்தது நல்ல காரியம்.”
“சரி, இரண்டு கீழ் ஜன்னலுக்கும் என்ன கழிச்சிருக்கான்?”
“பூஜ்யம்.”
“ம்ம்..”
“கூடத்தின் தரைக்கம்பளத்தில் மெழுகுவர்த்தி விழுந்து ஒரு சின்ன கரி இருக்குமே. அதற்கு மட்டும் நாற்பது டாலர்.”
“அதைக் கவனித்தவன் இரண்டு ஜன்னல்களையும் ஏன் விட்டுவிட்டான்? மாத்த ஐநூறு டாலராவது ஆகுமே.”
“நீ என்னத்துக்கு அலட்டிக்கிறே? ஸில்லோ போட்ட மதிப்புக்கு பத்து பர்சென்ட் அதிகம். சரின்னு சொல், உடனே பணம் கைமேல.”
“அதாவது, ‘க்ரோயிங் சர்க்ல் பாங்க்’லேர்ந்தே காசை எடுத்து ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ எனக்குக் கொடுக்கும்.”
“யார் பணமா இருந்தா என்ன? உன் பென்ஷன் மாச செலவுக்குப் போதும். வர்ற பணத்தை அப்படியே சேவிங்ஸ்ல போட்டு இங்கே வந்து நிம்மதியா இரு.”
“யோசிச்சு சொல்றேன்.”
“யோசிக்க என்ன இருக்கு?”
“நான் இன்னும் காப்பியே குடிக்கலியே.”
காப்பி, தோசை, மதியத்துக்கு பீன்ஸ் கறியுடன் ரசம் சாதம் என நாள் நகர்ந்தது.
யோசிக்க என்ன இருக்கிறது? ஊர் மாற வேண்டும் அவ்வளவுதான். நண்பர்களைப் பிரிந்து. கடந்த எட்டு ஆண்டுகளில் அவளுக்குத் துணையாக இருந்த மணிவாசகம் விஜயா.. அமெரிக்க வாழ்வில் நண்பர்கள் வருவார்கள் போவார்கள். அவள் போகப்போகும் ஊரிலும் கோவில் இருக்கிறது. கீதை பிரசங்கங்களும் இருக்கும். அவற்றில் ஒரு சிலரின் பரிச்சயம் கிடைக்கும்.
ஓய்வு வாழ்க்கைக்கு அடையாளமாக பிற்பகல் குட்டித்தூக்கம். பிறகு இன்னொரு கோப்பை காப்பி.
இலவச வீடு. பென்ஷன். பணக்கவலை இராது. வீட்டை விற்றுவரும் பணத்துக்கு சுபா சொன்னதுபோல் உடனடித்தேவை இல்லை. அதை சேமிப்பில் சேர்த்தால்.. அதாவது அவளுடைய ‘க்ரோயிங் சர்க்ல் பாங்க்’கிலேயே. அங்கே இருந்து ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ கடன்வாங்கிய பணம் அவள் வழியாக மறுபடி அங்கேயே திரும்பிப்போனால்.. வெறும் மின்-எண்கள் தானே, பணத்தின் பயணம் நொடியில் நிகழ்ந்து வட்டம் முழுமை பெற்றுவிடும். வேடிக்கையாக இல்லை? இந்தப் பண-சுழற்சியில் யாருக்கு லாபம்?
அந்த சுழற்சியில் வீட்டிற்கும் முக்கியமாக கீழ்த்தளத்திற்கும் அவளுக்கும் இருந்த பந்தம் முடியப்போகிறது. வருத்தம் இருக்கத்தான் செய்யும். வீட்டின் எல்லா அறைகளுக்கும் போனாள், ஒவ்வொரு ஜன்னலுக்குப் பக்கத்திலும் நின்றாள். கடைசியில் கீழ்த்தளம். உபயோகப்படுத்தாமல் உறைந்துவிட்ட ஜன்னல்களை வீடு விற்பதற்கு முன் அவளே மாற்றினால் என்ன? மனசாட்சி நிர்மலமாக இருக்கும். அத்துடன், அவளால் அவற்றை ஏற்றி இறக்கவும் முடியும். அதனால்..
அவள் சிந்தனையைக் கலைக்க முன்வட்டத்தில் ஒரு குடும்பம். காலிமனையைப் பார்த்த சுகுமாரன் குடும்பத்தை நினைவுபடுத்தும் விதத்தில் கணவன், மனைவி, எட்டு வயதில் ஒரு பெண், ஒரு சிறு பையன். அந்தக் குழந்தைகளுக்கு ஆசிய ஆப்ரிக ஐரோப்பிய ஜீன்களின் கலவை கொடுத்த தோற்றம். அதை நிரூபிப்பது போல் அவனுக்கு ஆசியக்களை, அவளுக்கு ஆப்ரிக வெள்ளை முகம். வட்டத்தை நாலைந்து தடவை பிரதட்சணம் செய்து அவள் வீட்டைப் பார்வையால் அளந்தார்கள். கடைசியில் வீட்டு வாசலில் நின்றார்கள். கராஜின் கதவைத் திறந்து வெளியே வந்த சுகந்தி,
“உங்களுக்கு என்ன வேண்டும்?”
பெண் சிரிப்புடன், “ஒரு வீடு” என்றாள்.
‘விற்றாகிவிட்டது ‘ என்று சொல்லத் தோன்றவில்லை.
“விற்பதாக ஒரு எண்ணம் இருக்கிறது.”
தெருவின் எதிர்மூலையில் ஒரு வீட்டை அந்தப்பெண் காட்டினாள். அதன் முன்புறப் புல்தரையில் ‘விற்பனைக்கு’ பலகை இரண்டே இரண்டு நாள் மட்டுமே குடியிருந்ததை சுகந்தி கவனித்திருந்தாள்.
“கேட்டதற்கு ஐந்து சதம் கூடக்கொடுப்பதாகச் சொன்னோம். அதைவிட மிக அதிகமாகக் கொடுத்து தட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.”
“ஐ’ம் சாரி.”
“ஏமாற்றம் பழகிவிட்டது.”
“இது பத்தாவது” என்றான் கணவன். “கடந்த சில மாதங்களாக ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ தரகர்கள் நகரத்தின் இப்பகுதியில் தனி வீடுகளை முதலீடாக மாற்றிவருகிறார்கள்.”
“அதாவது, வாங்கி வாடகைக்கு விட.”
“கரெக்ட். அந்த வீடு கைநழுவிப்போனாலும் நகரத்தின் இப்பகுதி எங்களுக்குப் பிடித்திருப்பதால் அங்கே வசிக்கலாம் என்றால் அதன் வாடகை நாலாயிரம் டாலர். எங்கள் சக்திக்கு மீறியது.”
கொடுத்த பணத்துக்கு பத்துசதம் வருமானம். சற்றுமுன் யாருக்கு லாபம் என்ற அவள் மனக்கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. ‘க்ரோயிங் சர்க்ல் பாங்க்’கில் புறப்பட்ட பணம் அதன் உறவு நிறுவனம், சுகந்தி வழியாகத் திரும்பவும் அங்கேயே போகப்போகிறது. சுகந்திக்கு ஒரு சதம் வட்டி. ‘க்ரோயிங் சர்க்ல் காபிடலு’க்கு பத்து சதம் வருமானம், அத்துடன் ஒரு வீடு சொந்தம். நஷ்டம்? வசிப்பிடம் தேடும் குடும்பங்களுக்கு. இதோ! அவள் எதிரிலேயே ஒன்று.
“நாங்கள் கடனுக்கு விண்ணப்பம் போட்டு பணம் வாங்க இரண்டு மாதமாவது ஆகும். அவர்களிடம் பணத்துக்கு பஞ்சம் இல்லை” என்றாள் அவள்.
“உள்ளே வந்து இந்த வீடு பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்!”
பெண் முகத்தில் நம்பிக்கையின் பிரகாசம்.
“நான் டெய்லர். என் கணவன் நாகஷிமா, ஆக்னஸ் கல்லூரியில் கணக்கு சொல்லித்தருகிறான்.”
“நான் சுகந்தி. என் கணவர் பல ஆண்டுகள் அங்கே மாத் ப்ரொஃபசராக இருந்தார்.”
“ஓ! அப்படியென்றால்.. டாக்டர் சுகுமார்? அவர் பெயரை பலர் மரியாதையுடன் உச்சரிப்பதைக் கேட்டு இருக்கிறேன்” என்றான் நாகஷிமா.
சுகந்திக்குப் பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது. மனதில் கணவனுக்கு ஒரு அஞ்சலி.
டெய்லரும் அவள் கணவனும் பின்தொடர சுகந்தி படியேறி முன்வாசலில் நின்றாள். கதவைத்திறந்து சற்றே தயங்கிய பெண்ணிடம்,
“நான் உங்களை நம்புகிறேன்.”
பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார்கள்.
“கன கச்சிதம். எங்கள் குடும்பத்துக்கு அளவெடுத்த மாதிரி” என்றான் அவன்.
“கீழே ஒரு சின்ன இடம் இருப்பதாகத் தெரிகிறது” என்றாள் அவள்.
படியிறங்கி கார் நிறுத்தும் இடம் வழியாக அதில் நுழைந்தார்கள்.
சுகந்தி ஜன்னல் பக்கத்தில் நின்று வெளியே பார்த்தாள். பெரியவர்கள் விவகாரங்களின் நிழல் படாமல் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் அங்கே விளையாடிய குழந்தைகள் பெரியவர்கள் ஆகி வெளியேறிவிட்டதால் முன் வட்டத்துக்கு மயானக்களை. அதற்கு உயிர்வந்தது போல இருந்தது. இப்படியே நேரம் போனால் என்ன?
மற்ற இருவரும் சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்தபடி சிறுநேரம் மௌனமாக நின்றார்கள். அந்த வீட்டின், சுகந்தியின் சரித்திரத்தை அவர்கள் ஊகித்திருக்க வேண்டும்.
“மிஸ் சுகுமார்! இந்த வீடு எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், எங்களால் ஹெட்ஜ் ஃபன்ட் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் பல காலம் வாழ்ந்து அனுபவித்து, உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் இல்லத்தை நாங்கள் நன்றாக கவனித்துக்கொள்வோம்” என்றான் நாகஷிமா உருக்கத்துடன்.
அவன் சொல்வது போல் சுகந்திக்கும் அந்த வீட்டிற்கும் ஒரு நீண்டகால உறவு. வீட்டில் அந்த அறை அவள் வாழ்க்கையின் ஒரு சோகமான அங்கம். திரும்பி குடும்பப்படத்தைப் பார்த்தாள்.
‘என் ஞாபகம் வரும்போது வீட்டுக்கு முன்னால நிக்கற ஃபோட்டோவை நினைச்சுக்கணும்!’
கீழ்த்தளம் முழுவதுமே சோகம் நீங்கி சிரிப்பது போல் இருந்தது.
“மேல் தளத்தை மட்டும் தனியாக விற்பது இப்போது சாத்தியம் இல்லை. விருப்பப்பட்டால் நீங்கள் அங்கே வாடகைக்கு வரலாம். மாதம் இரண்டாயிரம் டாலர் அதிகம் இல்லை என நினைக்கிறேன்.”
ஏமாற்றம் கலந்த சந்தோஷத்தை அவர்கள் மறைக்கவில்லை. ஒருவரை ஒருவர் ஒப்புதலுடன் பார்த்துக்கொண்டார்கள்.
“நீங்கள் ஆயிரத்தில் ஒருத்தி.”
“அந்த மதிப்பீட்டுக்கு நன்றி! ஆனால், என் தீர்மானத்துக்குக் காரணம் – என் கணவரைப்போல நானும் இந்த நாற்காலியில் அமர்ந்து வெளியே குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க ஆசை.”
***