விலக்கம்

இரண்டுஆண்டுகள் கழித்து வீட்டிற்குள் நுழைந்த சுபாவை சாமி அறையின் குறுகிய வாசல்படி வழியே, “ வாப்பா,” என்று அழைத்தது சத்யாவின் மெல்லியக் குரல் . அவள் கலகல சிரிப்புடன் திரும்பி,  வரேங்க,” என்றபடி உள்ளே சென்றாள். மயில்பச்சை நிற சில்க்காட்டன் புடவை. எப்பொழுதும் போல முன்னால் விடப்பட்ட நீண்ட சடையுடன் டிசைனர் பிளவுஸ். குட்டிப்பயல் அவள் பின்னால் ஓடினான்.

சாம்பிராணி போடுவதற்கான கங்குக்காக சத்யா கரியுடன்  போராடிக்கொண்டிருந்தாள். கரித்துண்டுகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட கற்பூரங்கள் எரிய மறுத்து அடம்பிடித்தன. மெதுவாக கரியை தள்ளித்தள்ளி பற்ற வைத்துக்கொண்டிருந்தாள். முன்னால் பிள்ளையார் குறும்புப்பார்வையுடன் கங்கு வருமா வரதா என்று உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்.

“பிள்ளையாரை திட்றாப்ல இருக்கு,”என்றவாறு கலீங் குரலுடன் சுபா உள்ளே வந்தாள். அவளின்  சுறுசுறுப்பான அசைவுகளால் வளையல், கொழுசு, நகைகளுடன் கேட்கும் சலசலஒலிகள் புன்னகையை வரவழைத்தன.

“சத்யா…சாம்பிராணிக்கு கரியை கனிய வைக்கச் சொன்னனே…”என்று அத்தையின் குரல் எங்கிருந்தோ அதட்டியது.

சுபா, “பண்றாங்கம்மா…”என்று பதில் கொடுத்துவிட்டு அமர்ந்தாள். இன்னும் நேரமிருந்தாலும் அவரசரப்படுத்தாமல், பறக்காமல் மூத்தவர்களுக்கு விழாக்கள் நிறையாது. 

“எப்படியிருக்கீங்க…சகஜமா  பேசி ரெண்டு வருஷமாச்சுல்ல…”

“ம்…நீ எப்படிப்பா இருக்க,”

“இந்த சுழிப்பயல மேய்க்கவே சரியா இருக்குங்க. பிள்ளைகளுக்கு ரெண்டு சுழி இருக்கக்கூடாதுங்க…வீட்ல எந்த நேரமும் அடிதடிதான். எதையாவது  உடைக்கறதும்…கத்தறதும் தாங்கமுடியல…”என்று சிரித்தாள்.

பெரும்பாலும் சிரித்துக்கொண்டிருக்கும் இவளின் இயல்பு மாறவில்லை.

“உங்களுக்கும் ஒடம்பு  லைட்டா சதைப்போட்ருச்சே… வயசுக்கேத்த ஒடம்புதான் அழகு தெரியுங்களா,” என்று மறுபடி சிரிப்பு.

“இந்தப்புடவை உனக்கு நல்லாருக்கு,”என்று சிரிக்கும் சத்யாவின் முகத்தையே சுபா பார்த்தாள்.

“என்னப்பா…”

“நீங்க ரொம்ப மாறீட்டீங்க சத்யா. என்ன பேசினாலும் சிரிப்பு மாறாம ஆயிட்டீங்களே…ரெண்டு சூடத்தை கரிமேல உதுத்துவிடுங்க… ”என்றவளின் முகம் சுருங்கியது. சேலையை சரிசெய்வதைப்போல சுதாரித்துக்கொண்டாள்.

“புடவை கட்டினா என்ன? எப்பப் பாத்தாலும் சுடிதார்தானா.. எனக்கு இந்த ப்ளவுஸ் நல்லாருக்குங்களா,” என்றபடி சுபா முதுகை திருப்பிக் காண்பித்தாள். பட்டுசேலைக்கான வேலைபாடுகளுடன் இருந்தது.

“அழகாயிருக்குப்பா…”

“நானே ஸ்டிச் பண்ணினேன்…”

“நல்லா தச்சுருக்க. பெங்களூர்லதானே மிஷின் இருக்கு,”

“இங்க அத்தையோட பழையமிஷின சரிப்பண்ணி ரெண்டுவருஷமா ஒட்றேன்…தைக்கறத விட்டா மறந்து போகும்.”

மெதுவாக எரிந்த கற்பூரங்களால் கங்கு துலங்கத்தொடங்கியது. அவள் ஊதினாள்.  கங்கு சிவந்தது. மீண்டும் சாம்பல் பூத்தது. சுபா பெரிய கதம்பப் பூக்களின் சுருளை சிறுசிறு பூத்துண்டுகளாக  வெட்டினாள். சத்யா எழுந்து சாமிப்படங்களுக்கு சந்தனம் குங்குமம் வைக்கத்தொடங்கினாள். இருவரும் பேச்சின்றி அமைதியானார்கள்.

அன்று திருச்சி சாரதாஸ் பட்டுப்பிரிவில் கூட்டம் திணறிக்கொண்டிருந்தது. மின்விளக்குகளின் ஔியில் பளபளத்த பட்டுப்புடவைகளுக்கிடையே அக்கா குழம்பி அமர்ந்திருந்தாள். அக்காவின் நாத்தனாராக வரப்போகிறவள் ஒவ்வொரு புடவையாக எடுத்து காண்பித்துக்கொண்டிருந்தாள். ஓர்ப்படியாள் இன்னொரு பக்கம் அமர்ந்து புடவைகளை பார்த்துக்கொண்டிருக்க ,இன்னொரு குடும்பத்தின் நடுவே அக்கா அமர்ந்திருந்தாள். 

ஒரு ஓரமாக அம்மாவும்,பெரியம்மாவும்  அக்காவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல இருவீட்டு ஆண்களும் புடவை எடுப்பதற்கு ஆகும் நேரம்குறித்து கேலி பேசிக்கொண்டிருந்தார்கள். அக்காவின் கணவராக வரப்போகிற மாமா சிறிய அலைபேசியை கைகளிலேயே வைத்துக்கொண்டிருந்தார். இதற்கு அவர் நாகர்கோவில் புலனாய்வுத்துறை அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். 

“சத்யா… பாத்தது போதும்…வா,”என்று அண்ணன் அவள் கையைப்பிடித்து இழுத்து வந்து ஓரமாகக்கிடந்த நாற்காலியில் அமரவைத்தான். கூட்டத்திலிருந்து ஒதுங்கி வந்ததும் மக்களின் குரல்கள் இணைந்து இரைச்சலாகக் கேட்டது.

“நான் சாரீஸ் பாக்கனுண்ணா…”

“உனக்கா கல்யாணம்…இல்ல நீ சொல்றதையா வாங்கப் போறாங்க…”

“சாரீஸ் பாக்கறதுக்கே ஆசையா இருக்கும். வாங்கனுன்னு இல்ல. அதனால உனக்கென்ன…”

அண்ணன் சுற்றுமுற்றும் பார்த்தபடி பக்கத்தில் அமர்ந்தான்.

“அக்காவுக்கு கல்யாணம் முடியப்போகுது…அடுத்தது எனக்குதானே…”

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள் அவனை திரும்பிப் பார்த்தாள்.

“நான் மகாவை லவ் பண்றேன்…”

அவள் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து அவன் பக்கம் திரும்பிஅமர்ந்தாள். குளிர்காற்றிலும் வியர்ப்பதை போலிருந்தது.

“அய்யோ…லவ்வெல்லாம் பெரிய பிரச்சனை. உனக்கெதுக்கு அதெல்லாம்…”

“உன்னாலதான்…நீயும் மகாவும் ஒன்னாவே இருந்ததாலதான். எனக்கு ஸ்கூல் படிக்கையிலருந்தே பிடிக்கும்…

“ஸ்கூல் படிக்கையில இருந்தா…”

“நீ சும்மா ஒவ்வொன்னுக்கும் ஓவர் ரியாக்ட் பண்ணாத…”

அவள் எரிச்சலாகி எழுந்து செல்ல எத்தனித்தாள். 

அவன், “ப்ளீஸ்டா…ப்ளீஸ்…”என்று அமரவைத்தான்.

“மகாவுக்கு மாப்பிள்ளை பாக்கறாங்களாம்…”

“உனக்கு எப்படிண்ணா தெரியும்… பி.ஜீ படிக்கறதுக்கு நாங்க ரெண்டுபேரும் அப்லை பண்ணியிருக்கோம்…”

“கல்யாணப் பத்திரிக்கை வைக்கறதுக்கு அவங்க வீட்டுக்கு போனோம். அம்மாக்கிட்ட மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்கன்னு அவங்கம்மா சொன்னாங்க…நீதான் நம்ம அம்மாக்கிட்ட சொல்லனும்…”

“அய்யோ…ஏண்டா இப்படி பண்ற. பயமா இருக்குண்ணா…”

“மகாவை ரொம்பப் பிடிக்குண்டா…ப்ளீஸ்…ஒருவாரமா நைட் தூக்கமே வரமாட்டிக்குது,”

அதற்குள் மாமா அருகில் வந்து என்ன அண்ணனும் தங்கச்சியும் பரபரன்னு பேசிக்கிட்டிருக்கீங்க…எதாச்சும் காதல் விஷயமா என்றார். புலனாய்வுத்துறை சரியாக கணித்துவிட்டதை நினைத்துப் பதறி எழுந்தவளின் கைகளை அண்ணன் அழுத்திப்பிடித்தான்.

அக்கா திருமணத்திற்கு மூன்றுநாள் இருக்கும் போது மாடியில் துணிகளைக் காயவைக்கச் சென்ற பெரியம்மாவின் பின்னால் அண்ணனும் சத்யாவும் சென்று நின்றார்கள். 

“ம்மா…அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணனும் தானே…”என்றபடி தானும் ஒருதுணியை எடுத்தாள்.

“ஆமா…அதுகென்ன இப்ப…”

“அவனுக்கு நம்ம மகாவை கல்யாணம் பண்ணலாம்மா…”

“என்னது…” என்றபடி அம்மா திடுக்கிட்டு திரும்பி இருவரையும் முறைத்தாள்.

“வேலைக்குப்போய் ஒரு வருஷந்தான் ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா? உனக்கு வயசென்னடா…அவனுக்கு நீ தூதா…கழுத…”

அவள் எதுவும் சொல்லாமல் நின்றாள்.

“அவளுக்கு வேப்பந்தட்டையில மாப்பிள்ளை பாத்தாச்சு…ஒழுங்குமரியாதையா நீ பொழப்பப்பாரு. நீ காலேஜ்ல போய் படிப்பப்பாரு…”

கண்கள் நிறைந்து நின்ற அவனை சத்யா சட்டென்று எட்டி கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவன் உடலில் மெல்லிய நடுக்கம் தடதடத்தது.

“அழாதண்ணா…ப்ளீஸ்… அவளப்பத்தி உனக்குத்தெரியாது…அவ ரெண்டுசுழி உள்ளவன்னு அம்மா சொல்வாங்க,”

“உன்னால பாப்பாவும் அழுதுடா…விடுடா அவள…அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா ரெண்டும் பேரும் தொலைஞ்சீங்க…மரியாதையா கல்யாணவீட்ல கலகலன்னு இருக்கனும். இங்கபாரு இவளே…ஊர்உலகத்துல பயலுங்க இப்படிதான் இருப்பானுங்க. உம் பாசமலருக்காக மூஞ்சதூக்கி வச்சுகிட்டு இருந்தா நல்லாருக்காது…ரெண்டும் பேரும் கூட்டுக்களவாணி. இவம் பெரிய மன்மதன். இன்னும் ஒழுங்கா மீசக்கூட மொளக்கல…”என்றபடி சென்றாள்.

அடுத்துவந்த ஒவ்வொரு விடுமுறையிலும் சத்யா  அவனுக்காக பரிசுப்பொருள் எதையாவது தேடித்தேடி வாங்கினாள். அவள் கைகளால் செய்தனுப்பிய வாழ்த்துஅட்டைகளும்,பரிசுபொருட்களாலும் அவன் அறையில் அவள் நிறையத் தொடங்கினாள்.

“காசப் பிடிச்சக்கேடு…எதுக்கு அவனுக்கு கண்டதை வாங்கற…”என்று பெரியப்பா ஒவ்வொரு முறையும் திட்டுவார்.

அன்று கல்லூரி விடுமுறையில் விடுதியில் வெளியே செல்ல அனுமதி வழங்கியிருந்தார்கள்.  பெரம்பலூரின் தகிக்கும் வெயிலில் அமராவதி நிறுத்தத்தை அடுத்து புதிதாகத் தொடங்கியிருந்த ஜவுளிக்கடையின் ,ஆண்கள் சட்டை பிரிவுக்குள் சென்றாள். அவளும் தோழியும் விழித்துக் கொண்டு நிற்பதைக் கண்ட ஒரு விற்பனையாளர் அவர்களை அழைத்தார்.

“என்ன வேணும்…”

“சர்ட்…”

“என்ன மாதிரி…

“ஓட்டோ….அப்புறம்…”

“ரெய்மண்ட்டீ…”

“ஆமாமா…பேரு மறந்துபோச்சுண்ணா…”

அவர் சிரித்துக்கொண்டே,“யாருக்கு வாங்கறீங்களா அவங்கக்கிட்ட கேட்டுட்டு வந்திருக்கலால்ல…” என்றார்.

“அண்ணன் பிறந்தநாளுக்குதான் சர்ப்ரைஸ்…அவன்ட்ட எப்பிடி கேக்கறதுண்ணா…”

“என்ன சர்ப்ரைசோ…அளவு சரியா இல்லாட்டி இவ்வளவு விலைபோட்டு எடுத்து என்னாப் பண்றது…காசு கஸ்ட்டம் தெரியாத பிள்ளைங்க…சரி சைஸ் சொல்லுங்க…”

“தெரியாதே…”

“இங்க நிக்கற பசங்களைப் பாத்து சொல்லுங்க…”

சத்யா விழித்தபடி நின்றாள்.

“நாஞ்சொல்றேன்…நீங்க பாருங்க…”என்று ஒவ்வொருவராகக் காட்டி வியாபாரத்தை முடித்தார்.

பிறந்தநாளன்று சாயுங்காலம் விடுதியின் தொலைபேசியிலிருந்து அவள் பேசும்போது அண்ணன், “ஆஃபீஸ்ல சர்ட் நல்லாருக்குன்னு சொன்னாங்க…எங்கடா வாங்கின,” என்றான்.

“ஏழு கடல்தாண்டி….ஏழுமலைத்தாண்டி…ஒரு கிளிக்கிட்ட இருந்து,” என்றாள். அவன் வேகமாகச் சிரித்தான்.

“நெஜம்மா உனக்கு பிடிச்சுருக்கா…”

“ரொம்ப பிடிச்சிருக்கு…”

“ம்…சரி…”

“உனக்கு ஏன் லூசு வாய்ஸ் உள்ள போகுது…

“லைன் சரியா இல்லண்ணா…”

ஞாயிறன்று திரைப்படம் பார்த்த இரவில் கனவு கண்டு பதறி எழுந்தாள். அடுத்தநாள் காலையில் விடுதிகாப்பாளருக்கான விண்ணப்பக்கடிதத்துடன் அவர் அறைக்கு முன்பிருந்த முதல்தளத்து படிக்கட்டுகளில் அமர்ந்தாள். மார்கழி பனி இன்னும் விலகாமல் நின்றது. முந்தின நாளின் பாடக்குறிப்பை திருப்பிக்கொண்டிருந்தாள். கண்முன்னால் புங்கையின் இலைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. காலை வேளைகளை முடித்துவிட்டு காப்பாளர் அவளை உள்ளே அழைத்தார்.

அறைக்குள் மூன்று விரிவுரையாளர்கள் தேநீர்கோப்பைகளுடன் அமர்ந்திருந்தார்கள்.

“லிசன் ப்ளீஸ்…”என்றபடி காப்பாளர் கிண்டலான சிரிப்புடன் வாசிக்கத்தொடங்கினார்.

அண்ணனுக்கு உடல் நிலை சரியில்லை. அவன் பெங்களூரில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறான். அவனுக்கு கடிதம்  எழுதவும், அவனிடமிருந்து வரும் கடிதங்களை என்னிடம் தரவும் அனுமதி வேண்டுறேன்.

“உங்கண்ணாவா…”

“பெரியம்மா பையன்…”

“அதெல்லாம் முடியாதும்மா…

“சன்டே அப்பா வருவாரு மேம். அவர் கிட்ட கையெழுத்து வாங்கித் தர்றேன்…”

“சரி…அண்ணனுக்கு உடம்புக்கு என்னாச்சு…”

“அவனுக்கு டிப்ரஷன்னு டாக்டர் சொன்னார்….நம்மதான் அவன ப்ளஷரா வச்சிக்கனுமாம்…அதனால வாரம் ஒரு லெட்டர் எழுதலாமா மேம்? லெட்டர் வந்தா நமக்கு எவ்வளவு ஹேப்பியா இருக்கு…”

“நான் படிச்சுட்டு போஸ்ட் பண்ணவா…”

“சரிங்க மேம்…”

காப்பாளர் தன் அறைக்கு வெளியே வந்து தூணில் சாய்ந்துகொண்டு , “லெட்டரை ஒட்டியே கொண்டு வா…”என்று அவள் கன்னத்தைக் கிள்ளினார்.

இரவு பத்தரைமணிக்கு படிக்கும் நேரம் முடியும். மணிஒலித்த பின் விடுதி நடைபாதையில் அமர்ந்து கடிதங்கள் எழுதத் தொடங்குவாள். ஒருகடிதம் எழுத நான்கு நாட்களாகும். எழுதிய கடிதங்களைக் கொடுப்பதற்காக, வரும் கடிதங்களை வாங்குவதற்காகச் செல்லும் போது காப்பாளர் அவளிடம் நின்று பேசத்தொடங்கினார்.

“கவர்க்குள்ள டெய்ரி மில்க் ஏதும் வச்சிருக்கியா…வெயிட்டா இருக்கே…”

“சாக்லெட் வைக்கலாமா மேம்…”

“ வச்சுத்தொலைச்சிராத…உங்கண்ணாவுக்கு ஃபைன் போட்டுவாங்க…எத்தனப்பக்கம் எழுதுவ…”

“ஆறு…ஏழு…இந்தலெட்டர் பத்துப்பக்கம்…”

“அடிப்பாவி…உங்கண்ணன் என்ன அட்ரெஸ்ஸே தமிழ்ல்ல தப்பா எழுதறான்,”

“அடிச்சு திருத்திதான் எழுதுவான். அவன் பெரிய மெட்ரிக்குலேசன் ஸ்கூல்ல படிச்சான். ஒருதடவ என்னைய கூட்டிட்டுபோனான். அவ்வளவு பெரிய ஸ்கூல் மேம்…அவனுக்கு தமிழ்தான் வராது…நல்லா படிப்பான்…எனக்கு பிடிக்குன்னுதான் அட்ரெஸ்ஸ தமிழ்ல எழுதறான்…”

காப்பாளர் அவள் தலையில் தட்டி சிரித்தார்.

 கல்லூரி காலமெல்லாம் கடந்து முடிந்து வேலைக்கு சென்றபின்பும் கடிதங்கள் நின்றபடில்லை. தொடுதிரை கைப்பேசி புழக்கத்திற்கு வரத்தொடங்கியும் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தாள். அவன் திருமணத்திற்காகப் பார்க்கும் பெண்களை எல்லாம் கொஞ்சநாள் போகட்டும் என்று தள்ளிக்கொண்டிருந்தான்.

சுபா பீ.டெக் முடித்த ஆண்டில் அவளைப் பெண்பார்க்கச் சென்றார்கள். அவள் சிரிப்புடன் இயல்பாக தேநீர் கொடுத்தாள். 

அண்ணனின் முகத்தைப்பார்த்துவிட்டு பெரியம்மா,“பொண்ணைக் கேட்டுச்சொல்லுங்க…எங்களுக்கு சம்மதந்தான்…”என்றார்.

“எனக்கு பிடிச்சிருக்கு…”என்ற சுபாவை பார்த்து அனைவரும் சிரித்தோம்.

அவளின் அம்மா, “ என்னடி இது?” என்பதற்குள் அண்ணனும் பிடிச்சிருக்கு என்றான். பெரியப்பா இன்னும் வேகமாகச் சிரித்தார்.  காரில் திரும்பும் போது, அன்றுதான் முதன்முதலாக பெண்பார்க்க சென்ற இடத்தில், பெண் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனே பதில் சொல்வதைப் பார்த்ததாக, வரும் வழிமுழுக்க அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சத்யாவின்  முகத்தைப் பார்த்த அண்ணன், “உனக்கு ஓ.கே வா, ” என்றான்.

“ம்…”

“உம்முன்று இருக்க…”

“சும்மா…”

“என்ன பொசசிவ்வா… ”என்று மண்டையில் கொட்டினான். 

“பொசசிவ்வா ….எனக்கா…இதப்போய் சுபாக் கிட்ட கேளு,” என்றபடி இருவரின் இடையில் சிக்கியிருந்த புடவை முந்தானையை  இழுத்து மடியில் வைத்தாள். வண்டியில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். அவளின் தோளில் கைப்போட்டிருந்தவன் முதுகில் அடித்தபடி, “இவங்க என்னைக்கும் ப்ளாக் அண்ட் வொய்ட் ஹீரோயின்…எதையும் வெளியக்காட்டிக்க மாட்டீங்க….எதுவரைக்குன்னு பாக்கலாம்…”என்றான்.

பெரியப்பா மட்டும், “இப்பிடியே இருக்கனும் சத்யா…பயலுங்கள நம்பாத..இன்னிக்கு இவனப் பாத்தியா…உன்னையக்கூட திரும்பிப் பாக்கல. உம்பக்கமாச்சும் திரும்பறானான்னு பாத்துக்கிட்டே இருந்தேன்,”என்று தன் அழுந்திய குரலில் சொன்னார்.

திருமணத்திற்கு டெல்லியில் இருந்து அக்கா வரமுடியாததால் அனைத்து சடங்குகளும் இவள் செய்ய வேண்டியிருந்தது. அவன் சொன்னது போலவே சிரமமாகத்தான் இருந்தது. எப்பொழுதும் அருகிலிருந்தவனிடமிருந்து தள்ளி நிற்கவும், எந்தக் கூட்டத்திலும் அருகில் நின்று பேசிக்கொண்டேயிருக்கும் ஒருவனைத் தனியாக நின்று கூட்டத்திலிருந்து பார்ப்பதும் சவாலாகத்தான் இருந்தது. இவளின் தடுமாற்றங்களை அவனைவிட சுபா கண்டுகொண்டாள்.

 சொந்தபந்தங்கள் வேறு, “ சத்யா… இனிமே அண்ணன் ஆட்டுக்குட்டின்னு வாலாட்டாம இருக்கனும்,” என்று அவள் முன்னாலேயே  எதையாவது சொல்லி வைத்தார்கள். 

திருமணம் முடிந்ததும் அவள் தனியே அமர்ந்து அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தாள். மண்டபத்தின் மேல்கூரையில் கட்டப்பட்டிருந்த தாள்களின் தடதடப்பு ஒருநொடியும் குறையாமலிருந்தது. எங்கிருந்தோ வந்த பெரியப்பா அவளின் தோளில் கைவைத்து, “வாம்மா…சாப்பிடலையா…கடைசிப் பந்தி முடியப்போகுது,” என்று தன்பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்.

அவனுடைய முதல் திருமணநாளிற்கு இவள் அனுப்பிய வாழ்த்தை சுபா லாஃப்ட்டில் போட்டுவிட்டாள். அனைவரும் சேர்ந்திருந்த ஒருநாளில் பேச்சுப் போக்கில் அண்ணன் விசாரித்துத் தெரிந்துகொண்டான். உண்மை தெரிந்ததும் சுபாவை கோபமாகப் பேச எத்தனித்த நேரத்தில் குறுக்கிட்ட மாமா, “வாட்ஸ்ஆப்… இ.மெயில் அனுப்பறத விட்டுட்டு வாழ்த்துமடல்ன்னு போனா இப்பிடிதான். போய்ச் சேராது…”என்று கிண்டலடித்து சமாளித்தார். சுபா சுருங்கிய நெற்றியுடன் சத்யாவையே சற்றுநேரம் பார்த்தாள்.

கை ஈரம் அங்கங்கே திட்டுதிட்டாக இருந்த அந்த இளம்நீலநிற வாழ்த்துமடல் சத்யாவின் கண்முன்னால்  வந்து மறைத்தது.

“என்னங்க…குத்து விளக்குக்குப் பொட்டு வைக்கட்டா…”என்ற சுபாவின் குரலால் திரும்பினாள்.

“வைப்பா…”என்றபடி கங்கை ஊதினாள். புகை கண்களை கரித்தது.

“உங்கண்ணனப் பத்தி எதுவுமே கேக்க மாட்டீங்களா…”

சத்யா புன்னகைத்தாள்.

“உனக்கு சின்னவயசிலருந்தே தையல்ல இன்ட்ரெஸ்ட்டா…”

“இல்லல்ல. உங்கண்ணன் இதுக்கு மட்டும்தான் சரின்னார்…பையனுக்காக வேலைக்கு போகக்கூடாதுன்னு பிடிவாதமா சொல்றார்…”

“உனக்குன்னு ஒரு விஷயத்துல விருப்பம் இருக்கறது நல்லதுதான் சுபா… தையலை விட்டுடாத…”

“ஆமாங்க…ப்ளவுஸ்லயே எவ்வளவு டிசைன்ஸ்  இருக்குங்க. முடிஞ்சவரைக்கும் கத்துக்கனும்…உங்கண்ணன் கால் பண்ண சொன்னார். உங்களப்பாத்ததும் மறந்துட்டேன். மொபைல சுழிப்பயல் வச்சிருக்கான்…”

சுபா தன்  மொபைலை நீட்டினாள்.

“அல்ஃபபெட்ல தேடாதப்பா…முதல் கான்டாக்ட்…அண்ணன்னு இருக்கும்….”

அலைபேசியில் எண்களைப் பார்த்தப்பின் சுபா சத்யாவை விரிந்த விழிகளால் பார்த்தாள்.

“கால் போகலையா…”

“இந்த நம்பரை அவர் மாத்திட்டார். ஒருவருஷத்துக்கு மேல ஆகுதே…”என்றபடி புதிய எண்களைத் தொட்டாள்.

“இந்தாங்க பேசுங்க…”

“சாயங்காலமா பேசிக்கிறேன்,”

“பேசுங்கன்னு சொன்னேன்…பேசுங்க,”

சத்யா அலைபேசியை காதில் வைத்தாள்.

“சத்யா…பேசுடா…”

“…..”

“அதான் நீ நெனச்சமாறியே உன்னோட அண்ணியே சொல்றால்ல….தண்ணி குடிச்சுட்டு கொஞ்சநேரம் கழிச்சு பேசறியா?”

கங்கில் தூவிய சாம்பிராணியின் புகை பரவத்தொடங்கியது. சுபா கண்களை துடைத்துக்கொண்டாள். சத்யா சுபாவின் தோள்களில் கையூன்றி எழுந்து நின்றாள். பிள்ளையார் புகைசூழ தும்பிக்கையை சப்பிக்கொண்டிருந்தார்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.