
தெக்குப்பண்ணையின் வயலில் அறுவடைக்கு பின்னாக எஞ்சும் வைக்கோலை தனது மாடுகளுக்காக கேட்பதற்கு வந்த பெரியசாமி,
“வைக்கல் எப்போ கெடைக்கும்?” என்றார்.
தெக்குப்பண்ணை “இப்போதான் பயறு மூடையல்லாம் லோடு போயிருக்கு, ஆள் ஒன்னும் கிடைக்கல, எடுத்துக் கட்ட இன்னும் ரெண்டு நாள் ஆகும் பெரியசாமி, ஆள் இருந்தா நீயே பாத்து கட்டிக்கிறியாப்பா” என்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வெள்ளையன், மாசானத்தை நடு ரோட்டில் போட்டு அடிக்க ஆரம்பித்தான். பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் இடையில் திடுமென ஏற்பட்ட கரைச்சலால் சற்று அதிர்ந்த தெக்குப்பண்ணை,
ஏ வெள்ள என்ன டே ஆச்சு? விடுப்பா ? அவ அடி தாங்குற மாறியா இருக்கா? பாவம் டே.. வேண்டாம் விடு டே .. சொன்னா கேக்க மாட்டியா? என கத்தினார் .
அதற்குள் மாசானம் வாங்கிய அடியில் முகமும் கழுத்தும் ரத்த விளாறை அப்பிக்கொண்டன. வெள்ளையன் பண்ணையின் குரலுக்கு செவி மறுத்ததாக தெரியவில்லை.
“சாவுடி, முண்ட சாவு, உனக்கு அவ்ளோ ஆகி போச்சா ..
“அரத முண்ட, சாவு , உன்ன அறுத்து போட்டுதான் நா அடங்குவேன்”.
உடனே பெரியசாமி “ஏ, வெள்ளையா என்னப்பா, எதுனாலும் வீட்டுக்குள்ள வச்சி பேசு டே, நாலு பேரு முன்னாடி இப்படியா பண்ணுவ. சரி இல்ல டே. இப்படி அந்த புள்ளய போட்டு அடிக்கலாமா? நல்லா இல்ல வெள்ள” என வெள்ளையனை பிடித்து தள்ளினார்.
“ஏட்டி நீ என்ன அவன் அடிச்சா வாங்கிட்டு நிக்க, ஓடண்டாமா? அடி வாங்கயா உங்கப்பன் பெத்து விட்டான்? நின்னு வாங்கிட்டு இருக்கே”.
மாசானம் ஏதும் பேசாமல் நின்றாள். “போட்டி போ, அங்க மாரி இருக்காளா பாரு. போ” என்று விரட்ட பெரியசாமியின் வீட்டை நோக்கி மாசானம் நடந்தாள்.
வெள்ளையன் அவளை அடித்து களைத்தவனாக அமைதியோடு அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான். எதையும் பேசவில்லை.
“நல்ல கேளு பெரியசாமி, இவன் அடங்கவே மாட்டான் நா அவ்வளோ சொல்லுதேன் நிறுத்துதானே பாரேன், எப்படி போட்டு அந்த புள்ளய அடிக்கான்”
வெள்ளையனை இழுத்து வந்து தெக்குபண்ணையின் வீட்டின் முன்பிருந்த திண்ணையில் அமரவைத்தார் பெரியசாமி. வெள்ளையன் மௌனமாய் இருந்தான்.
ஏ வெள்ள என்னப்பா நீ? என்ன ஆச்சு ? நீ இப்படி பண்ணலாமா டே ? இது தப்பு. ஒனக்கு தெரியாத விசயமில்ல.. நா சொல்றத சொல்லிட்டேன். பாத்துக்க. என்றார் பெரியசாமி.
வெள்ளையன் ஒன்றும் பேசவில்லை.
தெக்குப்பண்ணை “அவ எது பண்ணிருந்தாலும் இது தப்பாக்கும் வெள்ள. பாவம் டே. அதும் பொம்பள பாவம். சும்மா விடாது.
வெள்ளையன் ஒன்றும் பேசவில்லை.
“பாவம் அவ அவ்ளோ அடி வாங்கிட்டும் புள்ள ஒரு சொல்லு சொல்லல” என்றார்.
வெள்ளையன் ஏன் இப்படி செய்தான் என யாருக்கும் விளங்க வில்லை. பெரியசாமியும் தெக்குபண்ணையும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
வெள்ளையன் அமைதியாக இருவரையும் பார்த்தான்.
“வெள்ள நீ பாட்டுக்கு பயத்தங்காயை அறுத்தியா, அவிச்சியா, காயவெச்சியா, மூட்டைகட்டி விட்டியானு இருடே. அதான் உனக்கு சரிப்படும். இப்படி குடிச்சிட்டு அந்த புள்ள மேல காய் வைக்க சோலி ஒனக்கு வேண்டாம் கேட்டியா? எப்படி அந்த புள்ளய அடிக்க ஒனக்கு இவளோ தைரியம். ஞாயித்துகெழம ரேசன் கடைக்கு எண்ண ஊத்த போறேன்னு சொல்லிட்டு நீ ஒனக்கு எண்ண ஊத்திருக்க இல்ல. அதான் கண்ணு மண்ணு தெரில”.
“இதெல்லாம் சரி இல்ல வெள்ள பாத்துக்கோ”.
“அதில்லே” என்றான் வெள்ளையன்.
“அட பாத்துக்கோ பெரியசாமி, முத்து உதுறுதுல்லா?”
“சொல்லு வெள்ள என்ன சமாச்சாரம், சொல்லு ” என்றான் பெரியசாமி.
“தெக்க மாயன் இருக்காம்ல”
“அவனுக்கென்ன”
” அவென் சரியில்லீங்க”
” அவனா? அவென் என்னடே பண்ணுனா?”
“இல்லீங்க அவென் சரியில்ல”
“ஏ அவனே ஒரு லோடு வண்டி வச்சிக்கிட்டு அல்லாடுதான், அவென் என்னடே சரியில்லே?”
பெரியசாமியும் பண்ணையும் ஒன்றும் புரியாதவர்களை பார்த்துக்கொண்டனர்.
பெரியசாமி வீட்டுக்கு சென்ற மாசானத்தை அவன் மனைவி, மாரியம்மாள் திண்ணையில் அமரவைத்து,
“ஏப நீ இரு, நா தண்ணி மோண்டுட்டு வாரென்” என்று உள்ளே சென்றாள்.
இரு சொம்பு நிறைய நீரை மண்டிக் குடித்தாள் மாசானம்.
மாரியம்மாளை பார்த்தாள். கண்ணில் கண்ணீர் நிற்கவே இல்லை.
“விடு மாசானம் இவ்வோ ஆக்கம் நமக்கு தெரியாதா என்ன?”
“நீ ஒன்னும் சொல்ல வேணாம்.சோறு வடிக்க போறேன் சாப்புடுதியா?”
மாசானம் ஒன்றும் பேசவில்லை.
அழுகை நின்றிருந்தது.
சோற்றுக்கஞ்சியை வடித்துக்கொண்டே மாரி கேட்டாள்,
“நான் ஒண்ணு கேட்டா சொல்லுவியா?”
மாசானம் ஒன்றும் பேசவில்லை
” ஆமா அவ்வோ அந்த அடி அடிச்சிருக்கவோ நீ வாங்கிட்டே நின்னியா?”
மாசானம் புன்னைகைத்தாள்.
“மூஞ்சி வீங்கி போயி இருக்கு, பல்லக்காட்டுமானம் வேற? ஏப, ஒனக்கு வலி இல்லையா இப்படி இளிக்க”
மாசானம் அமைதியானாள்.
மாரி அவள் கைகளைப்பற்றி “கொஞ்சம் ஏனம் வெளக்கணும். வா” என தொழுவத்திற்கு கூட்டிச் சென்றாள். மாசானத்தை ஒரு ஓரமாக உட்கார சொன்னாள்
“ஏப அங்க உக்காரு”
பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள் மாரி .
“ம் சொல்லுப “
“என்ன சொல்லணும்”
“அவ்வோ எதுக்கு உன்ன அடிச்சாவ?”
மசானத்தின் கண்கள் கலங்கின.
“அழுவாம சொல்லுதா இருந்த சொல்லு, தொழுவத்துல உக்காந்து அழுவலாமா? நீயே சொல்லுட்டி”
“இல்ல நா பயித்தங்கா லோடு ஏத்தி அனுப்புதம்லா?”
“ம் ஆமா அதுக்கென்ன இப்ப?”
” நாமளே லோடு ஏத்தி, நாமளே லோடு இறக்குனா ரெட்ட கூலில்லா”
” ஆமா”
“அப்போதான் குத்தகைக்கு மேல கைல காசு நிக்கும்”
“இது தெரிஞ்சதுதானே, காசு யாருக்குதான் வேண்டாம், வெள்ளண்ணன், காசுக்குதானே ரேசன்ல எண்ண ஊத்த போகுது, இல்லனா யாரு போவா அந்த வேலைக்கு.
“இல்ல மாரி, அதில்லே. அப்படி லோடுக்கு போறப்ப மாயன் கூட பழக்கம் ஆயிடுச்சி. வேணும்னு ஏதும் பண்ணல”
பாதி கழுவிக்கொண்டிருந்த பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டு
“நா அப்புறமா ஏனத்த கழுவிக்கிடுதேன், நீ இங்க வா” என மாசானத்தின் கைகளை பற்றி கொண்டு வீட்டின் பின்புறம் இருந்த வைக்கப்படப்பிற்கு கூட்டிச்சென்றாள்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ,
“ஏட்டி, ஒனக்கு என்ன கொறை, குத்தக இருக்கு , நல்ல தண்ணி கெடக்கு, இது எல்லாம் போக வெள்ளண்ண இருக்கு. அந்த அண்ணே தங்கம் அது உனக்கும் தெரியும்லட்டி. இது ஒனக்கு சரிப்படாது.”
மாசனத்தின் கண்களில் நீர் நிறைத்தது.
“சரி விடு ஆனது ஆயிப்போச்சு” என மாசானத்தை தேற்றினாள் மாரி.
வெள்ளையன் பண்ணையையும், பெரியசாமியையும் பார்த்தவாறே தொடர்ந்தான்.
” இன்னிக்கி அவன ரேசன் கடைல வச்சி பாத்தேன்”
“நீதான் அங்க எல்லாரையும் பாப்பியே, விசயத்தைச் சொல்லு”
“நா மண்ணெண்ணை அளந்து ஊத்தப்போ ராசு சொல்லுதான், தெக்க உள்ள மாயன் வந்துருக்காம் டே , கொஞ்சம் பாத்து அள”
“இதுலே என்னடே வெள்ள”
“இல்லீங்க அதுக்கு அப்பொறம்தான், அரசல் பொரசலா எனக்கு விசயம் தெரிஞ்சுது”
“இந்த அரதலி முண்ட , அந்த மாயன் கூட தெக்க வாழைத்தோப்புக்குள்ளருக்க காணுக்குள்ள ஒண்ணா முண்டமா கெடந்துருக்கா. அத தெரிஞ்சிக்கிட்டுதான் இந்த நாயுக இப்படி பேசுதுக”
“சரி டே நீ அவட்ட விசாரிச்சியா?“ என்றார் பெரியசாமி.
“அண்ணே , இதுல விசாரிக்க என்ன கெடக்கு, அவ என்ன சொல்ல போறா , எனக்கு தாங்கல”
“சரி சரி, நா அவகிட்டே பேசி அனுப்புதேன், நீ இனிமே கைநீட்ட கூடாது கேட்டியா? என்றார் பெரியசாமி.
தெக்குப்பண்ணையிடம் சொல்லிவிட்டு தன்வீட்டுக்கு சென்றார் பெரியசாமி.
மாரியம்மாள் சோற்றுக்கஞ்சியை வடித்துக்கொண்டிருந்தாள்.
மாசானத்தை பார்த்த பெரியசாமி,
“ஆனது ஆயிப்போச்சு. இதெல்லாம் சரிப்பட்டு வராது கேட்டியா.”
மாசானம் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
மாரியம்மாளிடம் “ஏட்டி சாப்பாடு கொண்டு கொடேன் இவளுக்கு” என்றார்.
கொதிக்கும் புளிக்குழம்பை வடித்த சோற்றில் அள்ளி விட்டு, இருவருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள்.
“வேணாம் மாரி”
“சும்மா சாப்புடு மாசானம். உனக்கு புடிச்ச புளித்தண்ணிதான்”
மேலும் ஏதும் பேசாமல் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை யாரும் ஏதும் பேச வில்லை.
“இந்த கரைச்சல்லாம் நமக்கு வேணாம் மாசானம். நா அவென்டே பேசிக்குறேன். நீ பாத்து நடந்துக்க”
“மாரி, வெள்ளைக்கு சோத்த போட்டு குடு. கொண்டு போவா”
ஒரு தூக்கு நிறைய சோற்றை நிரப்பி, புளித்தண்ணி விட்டுக் கொடுத்தாள் மாரி.
அதை வாங்கிக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள் மாசானம்.
வீட்டுத்திண்ணையில் கருப்பன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். அவனது தலைமாட்டில் கொண்டுவந்த தூக்குச்சட்டியை வைத்து வீட்டுக்குள் சென்று படுத்தாள்.
மறுநாள், காலைக்கருக்களில் வெளியே வந்து பார்த்தாள். வெள்ளையன் திண்ணையில் இல்லை.தூக்குச்சட்டி காலியாயிருந்தது. அதை அடுத்து கழுவி வைத்தாள். வீட்டை சுத்தம் செய்து விட்டு, வயக்காட்டை நோக்கை நடந்தாள்.
தூரத்தில் வெள்ளையன் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து முன் சென்றாள். வெள்ளையன் பெரியசாமியின் உழவுமாடுகளை தனது ஏருக்குள் பூட்டிக்கொண்டிருப்பதை கண்டாள். வெள்ளையன் மாசானத்தை பார்த்து உரத்த குரலில்
“ஏட்டி, இன்னிக்கி இங்க வேல கெடக்கு. மதியத்துக்கு சோத்தை கட்டி கொண்ட்டு வாரியா?” என்றான்.
மாசானம் “சரி, கொண்டாறேன்” என்று உரக்க பதிலளித்து திரும்பி நடந்தாள்.
பொழுது விடிந்திருந்தது.