ரஜத்

ஈஸ்வரன் கோவிலிலிருந்து நேராக ஒரு பர்லாங்கு நடந்தால் மணிக்கூண்டு பஸ் ஸ்டாப் வரும். காலையில் கோவிலில் கூட்டம் குறைந்ததும் நடந்து இங்கு தான் வருவேன். அதுக்கே எப்படியும் மணி பன்னிரெண்டு, ஒன்று ஆகிவிடும். சில நாட்கள் கோவிலில் யாரவது சாப்பாட்டு  பொட்டலம் கொடுத்திருந்தால் அதை கீதா கஃபே ஓரமாக நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சித்த நேரம் வேடிக்கை பார்த்தால் மணி நான்காகிவிடும். அப்புறம் கிளம்பி மார்க்கெட்க்கு போகும் சந்தில் நடந்து பழமண்டிக்கு வருவேன். சாயந்திரம் தான் லோடு வரும். லோடு இறக்குவதற்கு முன்னர் மண்டியை கூட்டி, தார்பாய் போட்டு வைப்பது தான் என் வேலை.

இந்த நாலு மாசமா தான் பழமண்டி வேலை. இதுக்கு முன்னாடி கட்டடவேலை. போன சித்திரை மாசம் பொங்கல் முடிஞ்சு வேலைக்கு போன அன்னிக்கு தான் மணல் லாரியில் இருந்து மணல் சரிக்கும் போது, மணல் முழுதாக என் மேல் கொட்டியதில், மூச்சே நின்றுவிட்டது. உடனே கட்டிடத்துகாரர்  ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டி கொண்டு தான் போனார். ஆனால் என் கெட்ட நேரம் இடது கை விழுந்து விட்டது, உள்ளே ஏதோ ஒரு நரம்பு நசுங்கிவிட்டது என்று டாக்டர் சொன்னார். வீடு காட்டுபவர் இவ்வளவு வைத்தியம் தான் பார்ப்பார். அவரை குறை சொல்ல முடியாது. கான்கிரீட்டு போடற வரைக்கும் தான் அந்த கட்டிடத்தில் நான் வேலை பார்த்தேன் அதுக்கே வீட்டுக்கு பால் காய்ச்சும் போது  மத்த ஆளுங்களோடு சேர்த்து எனக்கும் வேட்டி சட்டை எடுத்து தந்திருந்தார். மேஸ்திரி தான், மகள் வீட்டில் கொடுத்துவிட்டு போய் இருந்தார்.

எங்க, அதுக்கு அப்புறம் மகள் வீட்டுக்கும் சரியாக போவதில்லை. மருமகன் நல்லவன் தான், ஆனா அவனே தறி ஓட்டப்போனா தான் கூலி.  

நாம போனா புள்ளைக்கு ஏதாவது  முன்ன மாதிரி செய்யறதா இருந்தா போலாம். அப்போ அப்போ எட்டி பாக்கிறதோட சரி. அவங்களும் நான் மண்டியிலேயே சௌகரியமா தான் இருக்கறதா நெனச்சுக்கிட்டு இருக்காங்க, இல்லைன்னாலும் அதப் பத்தி கேட்டுக்கறதும் இல்லை.

கை விழுந்ததுக்கு அப்புறம் மேஸ்திரிதான் மண்டில சேர்த்துவிட்டாரு. நல்லவேளை வலது கை நல்லா இருக்கப்போய் இந்த வேலையாவது கெடச்சுது. 

ஈஸ்வரன் கோவில் முன்னாடி சுத்திகிட்டு இருக்கறத பாத்தா மேஸ்திரி தான் சத்தம் போடுவார். ” நீ ஏன் யா அங்க சுத்தற அந்த பிச்சைக்கார பயலுவலோட” என்பார். 

நான் எதில் சேர்த்தி என்று எனக்கே தெரியவில்லை.

பிச்சையெல்லாம் எடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள். காலைல ஈஸ்வரன் கோவில் வீதியில ஜவுளி கடை வைத்திருக்கும் சேட்டுமாறுங்க தினுசு தினுசா தானம் பண்ணுவாங்க. அதுல ஒருத்தரு கோவில் வாசல் பக்கம் ஒரு கேன் டீயுடன் திங்கள் கிழமை திங்கள் கிழமை வருவார். வழியில் போவோர் நேராக அவரிடம் சென்று ஒரு பிளாஸ்டிக் கப்பில் டீ கூடவே ஒரு பன்னும்  வாங்கிக்கொள்ளலாம். 

வியாழனன்று, வெள்ளைசீலக்காரம்மா ஒருத்தரு எலுமிச்சை சோறும் சுண்டலும் காலையிலேயே விநியோகிப்பார். ஞாயித்துக் கிழமை காலபைரவர் அபிஷேகம் முடிஞ்சதும் தயிர் சோறு தருவாங்க. கூப்பிட்டு  குடுக்கிறவங்ககிட்ட வாங்குனா என்ன தப்பு, சொல்லுங்க.

மத்தபடி நமக்கு இந்த கூட்டத்துல முந்திகிட்டு வாங்குற பழக்கம் எல்லாம் இல்லிங்க. நமக்கு அதுக்கு கை வராது.

ஏதோ இப்படி  ஜனங்க முன்ன விட இப்போ பரிகாரம், தானம்ன்னு நிறைய பண்றதால எனக்கு காலைல சாப்பாட்டு பிரச்னை இல்ல.

மண்டில முதலாளி நல்லவரு, நைட்டு சில நாள் பரோட்டா வாங்கி தருவார். பார்ட்டி வந்தா டீ வாங்கிட்டு வர சொல்வார், எனக்கும் சேர்த்துதான் வாங்கிக்கச் சொல்வார்.

அங்கேயே படுத்துக்க இடம் கொடுத்திருக்கார். 

மார்க்கெட் முக்குல அடிபைப்பு இருக்குது, நைட்டு அதுல தண்ணிய புடிச்சு வச்சுக்குவேன்.  அதுலேயே கை கால கழுவிகிட்டு கோவிலுக்கு போயிருவேன். எப்போவாவது ஒரு நாள் விடியகாத்தால கோணவாய்க்காலுக்கு போய் குளிச்சுட்டு போவேன்.

அந்த வருஷம் ஐப்பசில வர மழை ஆவணியிலேயே பெஞ்சுது. 

ஐப்பசில குளிர் எப்படி இருக்கப்போகுதோ. இந்த  மழை குளிருக்கே காய்ச்சல் வர மாதிரி கை  கால் எல்லாம் கொடையுதுன்னு செட்டியாரம்மா கடைல நீலகிரி தைலம் வாங்கி தினமும் ராத்திரி காலுக்கு தடவிகிட்டு படுத்தா தான் கொஞ்சம் தூக்கம் வருது.

புரட்டாசி மாசம் இருக்கும், மணிக்கூண்டு பஸ் ஸ்டாப்ல வழக்கம் போல கீதா கஃபே ஓரமாக உட்கார்ந்திருக்கும் போது தான் ரஜத்தை பார்த்தேன். வடநாட்டுக்காரன்னு பாத்த உடனே தெரிஞ்சிருதுல்ல. கூட அவன் பொண்டாட்டி, ரெண்டு பொடுசு புள்ளைங்க, பெரிய கம்பளி மூட்டை ஒன்னு, சமையல் சாமான் செட்டுன்னு எப்படி தான் இத்தனையும் தூக்கிக்கிட்டு ஊரு ஊரா போறாங்களோ என்று நினைத்தவாறே பீடியை பற்றவைத்தேன்.

அன்று தான் வந்திருப்பான்போல, ஒன்றும் செய்யாமல் மணிக்கூண்டு ரோட்டிலேயே கிழக்கும் மேற்கும் நடந்தான். ரோடு முடியும் திருப்பத்தில் வடக்கத்தி பலகார கடை ஒன்று உண்டு. அங்கு சென்று என்னவோ பேசினான். பேசிவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளை இழுத்துக்கொண்டு மூட்டைகளுடன் சென்றான்.

எனக்கும் மண்டிக்கு போக நேரமானதால் எழுந்து நடந்தேன்.

அடுத்த நாள் பார்த்தால், ரஜத் பெண்டாட்டி அந்த பலகார கடையை ஒட்டி இருக்கும் படிக்காட்டின்கீழ் பம்ப் ஸ்டவ்வில் சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தாள். ரஜத் பஸ் ஸ்டாப்பில் ஓரமாக கம்பளி கடை போட்டு வியாபாரத்தை துவக்கிவிட்டிருந்தான். 

அப்பா, இந்த வடக்கத்திகாரங்க எவ்ளோ சுறுசுறுப்பா இருக்கிறாங்க என்று எண்ணியவாறு அருகில் சென்று என்ன கம்பளி என்று பாக்கலாம் என்று எழுந்தேன், போலீஸ்காரர் ஒருத்தர் ரஜத்திடம் பேச்சு கொடுப்பதை பார்த்தவுடன் நின்றுவிட்டேன். 

அவரிடம் இவன் பெயர் சொல்லும் போது தான் ரஜத் என்பது இவன் பெயர் என்று எனக்கு கேட்டது.

சலிப்பாக பஸ் ஸ்டாப்பில் வேடிக்கை பார்த்த எனக்கு ரஜத் வந்தபின் அவன் வியாபாரம் செய்வதைப் பார்ப்பது ஏதோ ஒரு உற்சாகத்தை தந்தது.

இத்தனைக்கும் மண்டி முதலாளி வியாபாரிகளிடம் பேசி லோடு முடிப்பதை தினமும் தான் பார்க்கிறேன் ஆனால் அவர் என்ன பேசுகிறார் என்றே காதில் விழாது.

ரஜத் தெரிஞ்ச ரெண்டு தமிழ் வார்த்தையை வைத்துப் பேசிப் பேசி கம்பளியை விற்கும் சாமர்த்தியத்தை பார்க்கும் போது பையன் என்ன உசாரு என்று தோன்றும்.

அந்த வருடம் இருந்த குளிருக்கு ஜனங்களும் கம்பளி வாங்கத்தான் செய்தார்கள்.

எனக்கு குளிருக்கு மண்டியில் ரெண்டு கித்தான் பை தான். அது எங்க குளிர் தாங்குது.

அன்று வெள்ளிக்கிழமை, மண்டிக்கு நகராட்சியில் இருந்து மருந்து அடித்ததால் ஒரு நாள் விட்டு லோடு இறக்கலாம் என்று முதலாளி எனக்கு லீவு கொடுத்தார்.

நமக்கு என்ன மண்டிவிட்டா மணிக்கூண்டு தான். 

மாலை முழுதும் ரஜத்தைதான் வேடிக்கை பார்ப்பதும் பீடி பிடிப்பதுமாக இருந்தேன்.

இருட்ட துவங்கியது, மூட்டையை கட்டியவன், அவனே தலைக்கு முட்டு கொடுத்து தோளில் மூட்டையை தூக்கிக்கொண்டு நடந்தான். ஒரு இருபதடி போய் இருப்பான் மூட்டையிலிருந்து ஓரத்தில் துருத்திக்கொண்டிருந்த கம்பளி ஒன்று குப்பை தொட்டிக்கருகில் கீழே விழுந்தது.

அவன் கவனிக்காமல் மேலே நடந்தான். யாராவது எடுத்து கொடுப்பார்கள் என்று நானும் இங்கேயே உட்கார்ந்து பீடியை பிடித்தேன்.

யாரும் கம்பளியை கண்டுகொண்டமாதிரி தெரியவில்லை. மெல்ல எழுந்து போய் கம்பளியை கையில் எடுத்தேன். விருட்டென்று மார்க்கெட் சந்தில் நுழைந்து மண்டியை நோக்கி நடக்கலானேன்.

நேராக மண்டிக்கு வந்தவன் கம்பளியை மற்ற சட்டை துணிமணி வைக்கும் சாக்குப்பைக்குள் போட்டு மண்டியில் பழுதான பழைய எடை மிஷின் ஒன்று கடைசியில் கிடக்கும், அதன் சந்தில் வைத்தேன்.

எப்படியும் குளிர் காலம் முடிந்தவுடன் ரஜத் கிளம்பிருவான் அப்புறம் எடுத்துக்கலாம், அடுத்த வருஷ குளிருக்காவது ஆகும் என்று எண்ணிக்கொண்டாலும், உண்மையில் அந்த கம்பளி தேவையா என்று ஒரு ஓட்டமும் உள்ளுக்குள்ளே ஓட தான் செய்தது.

அடுத்த நாள், கீதா கஃபே ஓரமாக உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்த போது, ரஜத் கம்பளியை எண்ணி எண்ணி பார்ப்பதும், சுற்றும் முற்றும் பார்ப்பதுவுமாக விடுபட்ட கம்பளிக்கு என்ன என்னவோ கணக்கு போட்டு பார்ப்பதை பார்த்தேன். எனக்கு அன்னக்கி சோறே இறங்கவில்லை.

பேசாம குப்பை தொட்டிக்கு பக்கத்துலேயே கொண்டு வந்து போட்டுவிடலாமா  என்றும் ஒரு யோசனை.

இப்படி யோசித்தாலும், வெறும் யோசனையிலேயே தான் நின்னேன்.

ஐப்பசி வந்தது, கித்தானுக்கு ஆச்சு எனக்காச்சு என்று குறுக்கி குறுக்கி குளிரை விரட்டினேன். எடை மிஷினின் பின்புறம் ஒளித்து வைத்த கம்பளி நினைப்பு இருந்தாலும் எடுத்து போர்த்திக்கொள்ள  நாட்டம் வரவில்லை.

பயமா, ஏது கம்பளி எல்லாம் என்று யாராவது கேட்டால் “நான் தான் வாங்குனேன்” ன்னு சொல்ல கண்டிப்பாக வாய் வராது என்ற நினைப்பா , கருமத்தை அன்னிக்கே அங்க போட்டுவிட்டு வந்திருக்கணும் என்ற அங்கலாய்ப்பா, தெரியவில்லை ஆனால் ஏதோ ஒண்ணு.

அந்த கார்த்திகையில் நல்ல வியாபாரம் போல, ரஜத் பெண்டாட்டி வந்தபோது இருந்ததை விட கொஞ்சம் சுத்த பத்தமாக நல்ல ஒரு புடவை உடுத்தி இருந்தாள். பேசாமல் அவள் சப்பாத்தி சுடும் படிக்கட்டில் வைத்து விடலாமான்னும்  நினைப்பேன்.

கார்த்திகை கடைசில, இருக்கும் கோவிலில் ஐயப்ப மலைக்கு மாலை போட்டிருந்தவர்கள் விநியோகம் செய்த இட்லி மெதுவடையை வாங்கிக்கொண்டு கீதா கஃபே அருகில் வந்தவன் ரஜத் இல்லாததை கண்டும், வடையை திங்கும் ஆர்வத்தில் சாப்பிட ஆரம்பித்தேன்.

பாதி சாப்பிடும் போது தான் ரஜத்தும் அவன் பெண்டாட்டியும்  இருக்கும் படிகட்டின்கீழ் நாலைந்துபேர் நிற்பதை பார்த்தேன். சாப்பிட்டுவிட்டு அருகில் சென்று பார்த்த போது ரொம்ப சத்தமெல்லாமில்லாமல் அவன் பெண்டாட்டியும் அவனும் அவன் பிள்ளை ஒன்றை கையில் வைத்து அழுதுக்கொண்டிருந்தார்கள்.

 எனக்கு கையெல்லாம் வியர்த்துவிட்டது. 

பலகார கடை சேட்டும் வந்துவிட்டார். பையன் இரவு ஜன்னி கண்டு இறந்துவிட்டிருக்கிறான். 

மார்க்கெட்டின் பின்புறம் இருக்கும் இடுகாட்டில் பையனை புதைப்பது என்று முடிவானது. 

என்ன செய்வது என்று திகைத்து நின்ற நான் வேகமாக மண்டிக்கு ஓடி சென்று எடை மெஷினின் பின்புறம் இருந்த சாக்கிலிருந்து கம்பளியை வெளியே எடுத்தேன்.

இரண்டு இடத்தில் எலி கடித்திருந்தது. பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பையில் கம்பளியை போட்டுக்கொண்டு இடுகாட்டுக்கு போனேன்.

ரஜத் ஒரு பக்கம் பையனை தராமல் கத்த அவன் பெண்டாட்டி ஒரு பக்கம் கத்த,  “பையன வாங்குங்க” என்று பொதுவாக பலகார கடைக்காரர்  சொல்லவும், பிளாஸ்டிக் பையை இடது கையில் மாட்டிவிட்டுக்கொண்டு நான் பையனை வாங்க முன்னேசென்றேன்.

வெடுக்கென்று ரஜத்திடம் இருந்து ஒரு கையால் பையனை வாங்கி குழிக்கு அருகில் சென்றதும் கையை உதறி பையிலிருந்த கம்பளியை காலால் குழிக்குள் தள்ளினேன்.

வெட்டியான் பையனை கம்பளியின் மேலே வைத்து மண்ணை தள்ளும் போதுதான் ரஜத்தின் பெண்டாட்டி வாய் விட்டு கத்தி அழுதாள். 

இது எல்லாம் நடந்திருக்க வேண்டும் என்று தான் என் மனம் உண்மையில் விரும்பியது 

ஆனால் என்ன செய்வது என்று திகைத்த நான் சொன்ன மாதிரியே வேகமாக மண்டிக்கு ஓடி கம்பளியை மெஷின் பின்புறம் இருந்து எடுத்ததெல்லாம் எடுத்தேன். எலி கடித்த கம்பளியை பிளாஸ்டிக் பையில் போடுவது வரை நடந்தது.

இடுகாட்டு பக்கம் திரும்பி பார்த்த போது, நான் நினைத்த மாதிரி கம்பளியை பிளாஸ்டிக் கவரில் இருந்து எடுத்து குழிக்குள் போடுவதை யாரும் இருக்கிற துக்கத்தில் கவனிக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் கூட்டம் இல்ல, அங்கே நின்றுகொண்டிருந்தது மூன்றே பேர்தான். மண்டிக்கு பின்புறம் நின்று பார்த்துவிட்டு, கம்பளியை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வந்தேன் அவர்கள் சென்ற பின்னர் கொஞ்சம் அரளி பூவை குழிமீது வைத்துவிட்டு பேசாமல் வந்துவிட்டேன். அந்த வருட குளிருக்கும் கித்தான் தான்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.