தமிழில்: சஞ்ஜெயன் சண்முகநாதன்

நாளை கி.பி முதலாம் ஆண்டு ஆரம்பிக்கிறது, ஆனால் அவனிடம் யாரும் சொல்லவில்லை. அப்படி யாரும் சொல்லியிருந்தாலும் அவனுக்கு அது புரிந்திருக்கபோவதில்லை, ஏனெனில் அவன் அது பேரரரசரின் ஆட்சியில் நாற்பத்து மூன்றாம் வருடம் என எண்ணிக்கொண்டிருந்தான், அதை விட, அவனது எண்ணங்களில் வேறு விடயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவனது தாயாருக்கு இன்னும் அவன் மீது கோபம் இருந்தது. ஒரு சராசரி பதின்மூன்று வயது சிறுவனை விடவும் தான் அன்று அதிக குறும்புத்தனம் செய்துவிட்டதை அவனும் ஒத்துக்கொள்ளத்தான் செய்தான். அவனது தாயார் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க கொடுத்தனுப்பிய குடத்தை உடைக்கவேண்டும் என அவன் நினைக்கவில்லை. காலில் கல் தடுக்கியது தன் தவறு அல்ல என தாயாருக்கு விளக்கமுற்பட்டான், அது உண்மை தான். ஆனால் தான் ஒரு தெருநாயை விரட்டிக்கொண்டு செல்லும் போது தான் கால் தடுக்கியது என்பதை அவரிடம் சொல்லவில்லை. அதை விட அந்த மாதுளம்பழ சிக்கல் வேறு. அது தான் வீட்டிலிருந்த கடைசி பழம் என்றும் அதை அவன் தந்தை தனக்காக எடுத்து வைத்திருந்தார் என்றும் அவனுக்கு எப்படி தெரியும்?
தந்தை வீடு திரும்பியதும் இன்று மறுபடியும் தனக்கு கசையடி விழப்போகிறதோ என்பதை எண்ணி கலங்கிக்கொண்டிருந்தான் அந்த சிறுவன். கடந்த முறை கிடைத்த அடி அவனுக்கு இன்னும் ஞாபகம் இருந்தது. இரண்டு நாட்கள் வலி இல்லாமல் உட்காரகூட முடியவில்லை. அந்த மெல்லிய, சிகப்பு தழும்புகள் முழுதாக மறைவதற்கு மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டன.
அவனது அறையின் நிழலான பகுதியில் ஜன்னல் விளிம்பில் அமர்ந்துகொண்டு எப்படி தன் தாயாரின் மதிப்பை மீளப்பெற்றுக்கொள்வது என்று சிந்தித்துகொண்டிருந்தான். அவனது ஆடையில் சமையல் எண்ணையை கொட்டிகொண்டதால், வெளியே சென்று விளையாட சொல்லி சமயலறையில் இருந்து விரட்டிவிட்டார் அவன் தாயார். வெளியில் சென்று யாருடன் விளையாடுவது? தனியாக விளையாட மட்டுமே அவனுக்கு அனுமதியளிக்கபட்டுள்ளது. உள்ளூர் சிறார்களுடன் கலப்பதற்கு அவன் தந்தை தடைவிதித்திருக்கிறார்.
இந்த புதிய ஊர் அவனுக்கு பிடிக்கவேயில்லை. அவனது ஊராக இருந்தால் நண்பர்களுடன் சேர்ந்து எவ்வளவோ விடயங்களை செய்யலாம். இன்னும் மூன்று வாரங்களில் அவன் மீண்டும்…கதவை திறந்து கொண்டு அவன் தாயார் உள்ளே வந்தார். உள்ளூர்வாசிகளை போல அவரும் மெல்லிய கருப்பு நிற ஆடைகளையே அணிந்திருந்தார். அவை தாம் குளிர்மையாக இருக்க உதவுவன என அவன் தந்தையாருக்கு விளங்கப்படுத்தி உள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால், அவர் மாலையில் வீடு திரும்புவதற்குள் அரச வம்சத்தினரின் உடைகளுக்கு மாறிவிடுவார்.
“நீ இங்கே தான் இருக்கிறாயா?” என குனிந்திருந்த அவனை விளித்தார்.
“ஆமாம், தாயே”
“வழக்கம் போல் பகல் கனவு காண்கிறாயா? எழுந்திரு, கிராமத்திற்குள் சென்று எனக்கு சில உணவு பொருட்களை வாங்கவேண்டி இருக்கிறது”
“ஆமாம் தாயே, இப்பொழுதே செல்கிறேன்” என்று கூறிக்கொண்டே ஜன்னல் விளிம்பிலிருந்து கீழே குதித்தான்.
“எனக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளாமலே செல்ல போகிறாயா?”
“மன்னியுங்கள், தாயே”
“சொல்கிறேன் கேள், கவனமாக கேள்” விரல்களை எண்ணிக்கொண்டே பேச ஆரம்பித்தார். “ஒரு கோழி, கொஞ்சமாக முந்திரிப்பருப்பு, அத்திபழங்கள், பேரீச்சம்பழங்கள்…வேறு..ஆஹ் இரண்டு மாதுளம்பழங்கள்”
மாதுளம்பழங்கள் என்றதும் அவன் முகம் சிவந்தது, தாயார் இந்நேரம் மறந்திப்பாரா என எண்ணிகொண்டே பார்வையை கீழே தாழ்த்தினான். அவனது தாயார் அவரது இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பைக்குள் கையவிட்டு இரண்டு சிறிய நாணயங்களை எடுத்து அவனிடம் நீட்டி தான் கேட்டவற்றை திரும்ப சொல்ல சொன்னார்.
“ஒரு கோழி, முந்திரிப்பருப்பு, அத்திபழங்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் இரண்டு மாதுளம்பழங்கள்” நவீன புலவர் வெர்ஜிலை ஒப்புவித்து போல ஒப்புவித்தான்.
“சரியான மீதிப்பணத்தை தருகிறார்களா என்பதை உறுதிப்படுத்து” என்றவர், “இந்த உள்ளூர்வாசிகள் எல்லோரும் கள்வர்கள் என்பதை ஒரு நாளும் மறவாதே” என்பதையும் சேர்த்து சொன்னார்.
“ஆமாம் தாயே” என்றவன் கொஞ்சம் தயங்கினான்.
“நான் சொன்னதை எல்லாம் மறக்காமலும் சரியான மீதி பணத்தை கொண்டும் வந்தாயானால் உடைந்த குடத்தையும், மாதுளம்பழத்தையும் பற்றி உன் தந்தையிடம் சொல்லாமல் நானும் மறந்துவிடுவேன்”
அந்த சிறுவன் சிரித்துக்கொண்டே, இரண்டு சிறிய வெள்ளி நாணயங்களையும் மேலங்கி பைக்குள் பத்திரப்படுத்திகொண்டு மதிற்சுவர்களால் சூழப்பட்ட வீட்டின் வெளிமுற்றத்திற்கு ஓடினான். வாயிற் கடைமையிலுருந்த காவலாளி பெரிய மரகடவையை நீக்கி அந்த பிரம்மாண்டமான வாயிற்கதவை திறக்க தொடங்கினான். கதவு சிறிது திறக்க ஆரம்பித்ததும் அந்த இடைவெளியால் புகுந்து வெளியே சென்ற சிறுவன் காவலாளியை பார்த்து புன்னகைத்தான். “மறுபடியும் ஏதாவது குறும்பு செய்து மாட்டிக்கொண்டாயா” காவலாளி அவனை பார்த்து சத்தமாக கேட்டான்.
“இல்லை இந்த முறை இல்லை” சிறுவன் பதிலளித்தான். “நான் ரட்சிக்க படபோகிறேன்”
காவலாளிக்கு போய் வருவதாக கையசைத்த சிறுவன், அவனது சொந்த ஊரை நினைவுபடுத்தும் பாடலை பாடியபடி, கிராமத்தை நோக்கி நடையின் வேகத்தை கூட்டினான். வளைந்து நெளிந்து சென்ற புழுதி தோய்ந்த பாதையின் நடுப்பகுதியால் நடந்து சென்றான். அவனது பாதணிக்குள் சிக்கிகொள்ளும் சிறிய கற்களை எடுத்து போடவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. என்ன துணிவில் இந்த உள்ளூர்வாசிகள் இதனை ஒரு பாதையாக அழைக்கிறார்கள். அவன் தந்தை மட்டும் இந்த ஊரில் ஒரு குறிப்பிடத்தக்க காலம் பணியில் நியமிக்கப்பட்டால் சில மாற்றங்களை செய்து ஒரு உண்மையான, நேரான, ஒரு ரதம் செல்லக்கூடிய பரந்த பாதையை அமைத்திருப்பார். அதற்கு முன் அவன் தாயார் இந்த சேடி பெண்களுக்கு எப்படி வேலை செய்வது என்று கற்றுத்தரவேண்டும். ஒருத்தருக்கு கூட எப்படி உணவு மேசையை ஒழுங்குபடுத்துவது என்பதோ, எப்படி தூய்மையான உணவை தயார் செய்வது என்பதோ தெரியவில்லை. அவனது வாழ்க்கையில் முதல் தடவையாக அவன் தாயாரை சமையல் அறைக்குள் இப்பொழுது தான் காண்கிறான். ஆனால் அவனது தந்தையாரின் இந்த பணி நிறைவு பெரும் தருவாயில் இருப்பதால், அவர்கள் தமது ஊருக்கு திரும்பிவிட்டால் இதுவே கடைசி தடவையாகவும் இருக்கும்.
மாலை நேர சூரிய ஒளி அவன் மேல் விழுந்துகொண்டிருந்தது. அவனது மேலாடை நிறத்தை ஒத்த சிகப்பு நிறத்தில் மிகபெரியதாக இருந்த அந்த சூரியனின் வெப்பதால் வியர்த்து கொட்டிய அவனுக்கு ஏதாவது குடிக்க வேண்டும் போல இருந்தது. தேவையான அளவு மீதிப்பணம் கிடைக்கும் பட்சத்தில் தனக்கென ஒரு மாதுளம்பழம் வாங்கலாம். இந்த காட்டுமிராண்டிகளின் ஊரில் விளையும் மாதுளம்பழத்தை எடுத்துசென்று தன் ஊரிலுள்ள நண்பர்களுக்கு காட்ட அவனுக்கு ஆசையாக இருந்தது. அவனது உற்ற நண்பன் மார்கஸிற்கு அவை எவ்வளவு பெரியன என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும், ஏனெனில், அவனது தந்தை ஒரு பெரிய படைக்கு தலைவராக இந்த ஊர்களில் இருந்திக்கிறார். ஆனால் வகுப்பிலுள்ள மற்றவர்கள் நிச்சயம் அசந்து தான் போக போகிறார்கள்.
அவனது தாயார் அவனை அனுப்பிய அந்த கிராமம் அவர்களது மதிற்சுவர்களிலிருந்து இரண்டு மைல்கல் தூரத்தில் இருந்தது. அவன் சென்றுகொண்டிருந்த புழுதி நிறைந்த பாதை ஒரு பெரிய பள்ளத்தாக்கை வியாபித்திருந்த மலையின் அருகே அமைந்திருந்தது. அந்த கிராமத்தில் தங்குமிடம் தேடிவந்திருந்த பயணிகளால் பாதை நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. பேரரசரரினால் அளிக்கப்பட அதிகாரத்தின்படி அவனது தந்தை பிறப்பித்த அவசர ஆணையினால் தான் இந்த மக்கள் அனைவரும் மலை நாட்டிலிருந்து கீழிறங்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அவனுக்கு பதினாறு வயது வந்ததும் அவனும் பேரரசரிற்கு சேவை செய்ய தொடங்கிவிடுவான். அவனது நண்பன் மார்கஸ் ஒரு போர் வீரனாகி மீதியுள்ள தேசங்களை எல்லாம் கைப்பற்ற எண்ணி இருக்கிறான். ஆனால் அவனுக்கோ சட்டத்தின் பாலும் அவனது நாட்டின் வழக்கங்களை விசித்திரமான தூர தேசங்களில் வாழும் பிறஜாதி மக்களுக்கு கற்பிப்பதன்பாலுமே நாட்டம் இருந்தது.
மார்கஸ் ஒரு முறை சொல்லியிருக்குறான், “நான் அவர் தேசங்களை எல்லாம் கைப்பற்றுவேன், அதன் பின் நீ அவர்களை ஆட்சி செய்யலாம்” மூளைக்கும், உடல் வலிமைக்குமான சமமான பிரிப்பு என்று அவன் சொன்னதை அவன் நண்பன் சட்டை செய்யாமல் விளையாடிகொண்டிருந்தான்.
மலை முகடுகளுக்குள் சூரியன் மறைவதற்கு முன்பாக அவன் மதிற் சுவர்களுக்குள் திரும்பி சென்று விடவேண்டும் என்பதால் தன் நடையின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான். சூரியன் மறைவதற்கு முன் அவன் எப்படியும் அவர்கள் இடத்திற்கு பாதுகாப்பாக திரும்பிவிடவேண்டும் என அவனது தந்தை பல முறை சொல்லி இருக்கிறார். உள்ளூர்வாசிகளுக்கு அவன் தந்தையை அவ்வளவு பிடிப்பதில்லை என்று அவனுக்கு தெரியும். பகல் வேளையில் அடுத்தவர்கள் பார்க்கும்படியாக யாரும் அவனுக்கு தீங்கு செய்ய துணியமாட்டார்கள் ஆயினும் இருட்டிவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என அவன் தந்தை எச்சரித்திருக்கிறார். தான் பெரியவன் ஆனதும் வரி அறவீட்டாளராகவோ, மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் பணிமனையிலோ கடமையாற்ற கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.
அவன் அந்த கிராமத்தை அடைந்த போது சிறிய, வெள்ளை நிற வீடுகளின் இடையே நெளிந்து வளைந்து ஓடிய ஒடுக்கமான வீதிகளில் அவனது தந்தையின் கட்டளைக்கு அடங்கி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக அயல் தேசங்களில் இருந்து வந்த மக்கள் குவிந்திருப்பதை கண்டான். அவர்களிடம் பின்நாட்களில் வரி அறவிடும் நோக்கத்தில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளபடுகிறது. அவன் அந்த கீழ்ஜாதியினரை தன் நினைவுகளிலிருந்து ஓட்டிவிட்டு (பிற தேசத்தவர்களை கீழ்ஜாதியினர் என்று அழைக்க சொல்லி மார்கஸ் தான் அவனுக்கு சொல்லி கொடுத்திருந்தான்) சந்தை தொகுதிக்குள் நுழைந்தான். இப்பொழுது மார்கஸையும் தன் நினைவிலிருந்து ஓட்டிவிட்டு அவன் தாயார் வாங்க சொன்ன பொருட்களின் பக்கம் கவனத்தை செலுத்தினான். இந்த முறை அவன் எந்த தவறும் செய்துவிடலாகாது, இல்லையேல் கண்டிப்பாக கசையடி நிச்சயம். சுறுசுறுப்பாக கடைகளுக்கிடையில் ஓடி ஒவ்வொரு கடையிலும் இருந்த உணவு பொருட்களை கவனமாக நோட்டம் விட்டான். உள்ளூர் மக்களில் சிலர், மாநிறமான அந்த சிறுவனையும் அவனது சுருண்ட பழுப்பு நிற கேசம் மற்றும் நேரான, நிலையான மூக்கையும் உற்று நோக்கினர். அங்கிருந்த பலரை போல எந்த நோய்க்கான அறிகுறியோ, அலங்கோலமோ அவனிடம் இருக்கவில்லை. மற்றவர்கள், தம்மை ஆட்சி செய்பவர்களின் நாட்டிலிருந்து வந்த அவனை பார்க்க பொறுக்காமல் தம் பார்வையை திருப்பினர். இது எதுவும் அவனது சிந்தனையில் இருக்கவில்லை. அவனது பார்வைக்கு அதிகளவு சூரிய ஒளியினால் வறண்டு, வரி விழுந்து போயிருந்த அவர்களது தோல்கள் மட்டுமே தெரிந்தன. அதிகளவு சூரிய ஒளி நமது உடலுக்கு நல்லதல்ல, அது காலம் வரும் முன்னரே நம்மை மூப்படைய செய்துவிடும் என்று அவனது ஆசிரியர் அவனுக்கு எச்சரித்திருக்கிறார்.
சந்தையின் முடிவிலிருந்து கடையில் வயதான பெண்மணி ஒருவர் அசாதாரணமாக கொழுத்திருந்த உயிருள்ள ஒரு கோழியினை பேரம் பேசிகொண்திருப்பத்தை கண்டவன், அவர்களை நோக்கி நடந்தான். அவன் வருவதை கண்ட அந்த பெண்மணி பயத்தில் கோழியினை விட்டுவிட்டு ஓடிவிட்டார். பேரம்பேசுவது தனது தகுதிக்கு உகந்ததல்ல என்று கருதியவன், கோழியினை சுட்டிக்காட்டி கடைகாரரிடம் ஒரு டெனெரியஸ் நாணயத்தை வழங்கினான். அந்த சிறிய, வட்டமான வெள்ளி நாணயத்தை கடித்துபார்த்த கடைக்காரன் அதில் பொறிக்கப்பட்டிருந்த பாதி உலகை ஆளும் அகஸ்து சீசரின் உருவத்தை பார்த்தான். (ஒரு வரலாற்று பாட வகுப்பில் பேரரசரின் சாதனைகளை அவனது ஆசிரியர் பட்டியலிட்டபோது, தான் இணைத்துக்கொள்ளும் முன்னர் சீசர் முழு உலகையும் கைப்பறிவிடக்கூடாது என அவன் நினைத்தது ஞாபகம் வந்தது). கடைக்காரன் இன்னும் அந்த வெள்ளி நாணயத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஹ்ம்ம் ஹ்ம்ம் சீக்கிரம், எனக்கு நிறைய அலுவல்கள் இருக்கின்றன” அவனது தந்தையின் தொனியில் சொன்னான் அந்த சிறுவன்.
அந்த உள்ளூர்வாசி எதுவும் பதிலளிக்கவில்லை. அவனுக்கு அந்த சிறுவன் பேசிய மொழி புரியவில்லை, ஆனாலும் ஒரு ஆக்கிரமிப்பாளனை பகைத்துக்கொள்வது நல்லதல்ல என்று நன்றாக புரிந்தது. கோழியின் கழுத்தை பலமாக பிடித்து தூக்கிய கடைக்காரன் அவனது இடுப்புபட்டியிலிருந்த கத்தியை எடுத்து அதன் தலையை ஒரே வெட்டாக வெட்டிவிட்டு உயிரற்ற கோழியை சிறுவனிடம் கொடுத்தான். பின்னர் தன்னிடமிருந்த உள்ளூர் நாணயங்கள் சிலவற்றை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான். அந்த நாணயங்களில் “ஒன்றுக்கும் உதவாத ஏரோது” என்று அவனது தந்தையால் குறிப்பிடப்படுபவரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சிறுவன் இன்னமும் உள்ளங்கையை நீட்டியபடியே இருந்ததனால் கடைக்காரன் தன்னிடம் இருந்த அனைத்து பித்தளை நாணயங்களையும் அவனிடம் கொடுத்தான்.
அங்கிருந்து நகர்ந்த சிறுவன் இன்னொரு கடைக்கு சென்று முந்திரிப்பருப்பும், அத்திபழங்களும், பேரீச்சம்பழங்களும் இருந்த பைகளை சுட்டிக்காட்டினான். இந்த புதிய கடைக்காரன் அவனுக்கு தேவையானவற்றை அளந்து கொடுத்ததும் ஒவ்வொன்றுக்கும் ஐந்து “ஒன்றுக்கும் உதவாத ஏரோதுகள்” பொறித்த நாணயங்கள் கிடைத்தன. கடைக்காரன் மறுப்பு தெரிவிக்க முனைந்த போது அந்த சிறுவன் அவன் தந்தை அடிக்கடி செய்வது போல கடைக்காரனின் கண்களை உற்று நோக்கினான். கடைக்காரன் பின்வாங்கி தலையை குனிந்து கொண்டான்.
இன்னும் என்னே வேண்டும் என்று தாயார் சொன்னார்? அவன் மூளையை கசக்கினான். ஒரு கோழி, முந்திரிப்பருப்பு, அத்திபழங்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும்…. ஆஹ் இரண்டு மாதுளம்பழங்கள். அவன் அங்கிருந்த பழங்கள் விற்கும் கடைகளை தேடி மூன்று மாதுளம்பழங்களை வாங்கிக்கொண்டான். அவனிடம் மீதமிருந்த இறுதி இரண்டு உலோக நாணயங்களை கடைக்காரனிடம் கொடுத்து விட்டு ஒரு மாதுளம்பழத்தை உடைத்து சாப்பிட தொடங்கினான். இன்னமும் ஒரு வெள்ளி டெனாரி மீதம் இருக்க அவன் தாயார் கேட்டவற்றை எல்லாம் வாங்கி கொண்டு வீடு சொல்லப்போவதை நினைக்க அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தந்தை கூட அவனை மெச்ச கூடும். பழத்தை சாப்பிட்டு முடித்ததும் வாங்கிய பொருட்களை தூக்கிக்கொண்டு சந்தையிலிருந்து வெளியேறி அவர்களது மதிற் சுவர்களை நோக்கி செல்ல தொடங்கினான். வழியில் தெரு நாய்கள் அடிக்கடி அவன் கால்களுக்குள் வந்து தொந்தரவு செய்தன. சில நாய்கள் அவனை பார்த்து குரைத்தன, சில கடிக்க வந்தன. அவைகளுக்கு அவன் யார் என்பது தெரிந்திருக்கவில்லை.
அவன் அந்த கிராமத்தின் எல்லையை அண்மித்ததும் சூரியன் மலைகளுக்கு பின்னே மறைய ஆரம்பித்து விட்டதை கண்டான். இருள் சூழ்வதற்கு முன் வீடு திரும்பிவிட வேண்டும் என்று அவன் தந்தை சொன்னது ஞாபகம் வந்ததும் வேகமாக நடக்க தொடங்கினான். கற்கள் நிறைந்த அந்த பாதையில் அவன் நடந்து போகையில் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்த மக்கள் மரியாதையுடன் விலகி அவனுக்கு வழிவிட்டனர். கைகளில் பாரத்தை சுமந்து நடந்துகொண்டிருந்ததால் அவனால் அதிக தூரம் பார்க்க முடியவில்லை. ஆயினும் அவனுக்கு முன்னால் சற்று தூரத்தில், தாடி வைத்த ஒரு ஆடவன், தயக்கத்துடன் நடக்கும் கழுதை மீது, உடல் பருத்த ஒரு பெண்ணை அமர்த்தி இழுத்து வருவதை காணக்கூடியதாக இருந்தது. தாடி வைப்பது ஒரு சுகாதாரமற்ற, சோம்பேறிகளின் பழக்கம் என்று அவன் தந்தை சொல்லி இருக்கிறார். அந்த ஆடவன் அணிந்திருந்த கந்தல் துணிகளாலான ஆடை அவன் தாவீதின் வழிமரபினன் என்பதை உணர்த்தியது. அவர்களது வழக்கத்தின் படி அந்த பெண் தலை முதல் கால் வரை கறுப்பு நிற ஆடை அணிந்திருந்தாள். சிறுவன் தனக்கு வழிவிடுமாறு அவர்களை கட்டளையிட நினைக்கையில், அந்த ஆடவன் தங்கும் விடுதி என்று பெயர்பதாகை இடப்பட்டிருந்த ஒரு வீட்டின் அருகில் கழுதையை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.
அவனது சொந்த நாடாக இருந்தால் இப்படியான ஒரு கட்டடம் பயணிகள் கட்டணம் செலுத்தி தங்குவதற்கு ஏதுவான விடுதியாக ஊராட்சி அதிகாரிகளால் ஒரு நாளும் அனுமதிக்கபட்டிராது. ஆனாலும் இங்கு, குறிப்பாக இந்த வாரத்தில் தலை வைத்து உறங்க ஒரு பாய் கிடைத்தால் கூட அது பெரும் பேராக அமையும் என்பது அவனுக்கு விளங்கியது. தாடி வைத்த ஆடவன் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்தான். அந்த விடுதியிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிந்தது.
அந்த சிறுவனை கேட்டிருந்தால் அந்த ஆடவன் உள்ளே செல்லமுதலே அங்கே இடம் கிடைக்காது என்று சொல்லியிருப்பான். இனி அந்த ஆடவன் என்ன செய்ய போகிறான், இது தான் அந்த வீதியில் இறுதி வீடு ஆயிற்றே? அவர்கள் மேல் அவனுக்கு பெரிய கரிசனை எதுவும் இல்லை. அவர்கள் மலையில் உறங்கினால் கூட அவனுக்கென்ன. அவர்கள் இருவரையும் பார்த்தால் அதற்கு தான் தகுதியானவர்கள் போல இருந்தனர். அந்த தாடி வைத்த ஆடவன் அந்த பெண்ணிடம் விடுதிக்கு பின் புறமாக கைகாட்டி எதையோ சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் கழுதையை அவன் காட்டிய பக்கமாக இழுத்துபோனான்.
அந்த விடுதியின் பிற்புறம் அப்படி என்ன இருக்கும் என்று சிந்தித்த சிறுவன், அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான்.
அவன் அந்த வீட்டின் முனையை அடைந்த போது, விலங்குதொழுவம் போல் தெரிந்த ஒரு கட்டடத்தின் திறந்திருந்த கதவின் வழி அந்த ஆடவன் கழுதையை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளுவது தெரிந்தது. அந்த விசித்திரமான மூன்று பேரையும் தொடர்ந்து சென்ற சிறுவன் கதவு இடைவெளியால் உள்ளே நடப்பதை எட்டி பார்த்தான். அந்த விலங்குதொழுவத்தின் தரை முழுதும் அழுக்கான வைக்கோலால் நிரம்பியிருந்தது. எங்கு பார்த்தாலும் கோழிகளும், செம்மறி ஆடுகளும், எருதுகளுமாக இருந்தன. அந்த சிறுவனது நாட்டில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து வருவது போன்ற துர்நாற்றம் அடித்தது. அவனுக்கு வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. அந்த ஆடவன் தொழுவத்தில் நடுப்பகுதியில் தரையிலிருந்த வைக்கோலை அப்புறப்படுத்தி அவர்கள் ஓய்வெடுக்க ஒரு சிறிய இடத்தை தயார்படுத்திகொண்டிருந்தான். அவனால் முடிந்தளவு சுத்தம் செய்ததும் கழுதையிலிருந்த பெண்ணை தூக்கி மெதுவாக தரையில் அமர்த்தினான். பின்னர் தொழுவத்தின் மறுபக்கத்தில் ஒரு எருது தண்ணீர் அருந்திகொண்டிருந்த தண்ணீர் தொட்டிக்கு சென்றான். இரு கைகளையும் சேர்த்து தொட்டியிலிருந்த தண்ணீரை மொண்டு அந்த பருத்த பெண்ணின் அருகில் வந்தான்.
சிறுவனுக்கு இப்பொழுது அலுப்பு தட்ட ஆரம்பித்தது. அங்கிருந்து சென்றுவிடலாம் என்று நினைக்கையில் அந்த பெண்மணி அந்த ஆடவனின் கையிலிருந்த தண்ணீரை அருந்த முன்னால் குனிந்தாள். அவளது தலையை மூடியிருந்த சால்வை கீழே சரிந்தது. முதல்முறையாக அவளது முகத்தை கண்ட சிறுவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
அப்படி ஒரு அழகை அவன் அதற்கு முன் கண்டதில்லை. அவர்களது இனத்தை சேர்ந்தவர்களை போலல்லாது அந்த பெண்மணியின் முகம் பிரகாசித்தது, கண்களில் ஒரு ஜோதி தெரிந்தது. அவள் உட்கார்ந்திருந்த விதமே அதிசயிக்கத்தக்கதாக இருந்தது. அவன் ஒரு முறை செனட் சபைக்கு அகஸ்து சீசர் உரையாற்றுவதை பார்க்க சென்றறிந்தபோது கூட இவ்வளவு பிரமிப்பு அடைந்ததில்லை.
அந்த சிறுவன் ஒரு நொடி அப்படியே மதிமயங்கி நின்றான். அடுத்தநொடி தான் என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டான். திறந்திருந்த கதவின் வழியாக அந்த பெண்மணியை நோக்கி சென்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து தன்னிடம் இருந்த கோழியை அவளுக்கு காணிக்கையாக செலுத்தினான். அந்த பெண் அவனை பார்த்து புன்னகைத்தாள். மாதுளம்பழங்களையும் அவளிடம் ஒப்படைத்தான். அவள் மறுபடியும் புன்னகைத்தான். அவன் தன்னிடமிருந்த அத்தனை உணவு பொருட்களையும் அவள் முன்னால் வைத்தான். அவள் எதுவும் பேசவில்லை. கை நிறைய தண்ணீருடன் தொட்டியிலிருந்து திரும்பி வந்த அந்த தாடி வைத்த ஆடவன் இந்த சிறுவனை கண்டதும் மண்டியிட்டு அமர்ந்தான். கையிலிருந்த நீரை வைக்கோலில் சிந்திவிட்டு முகத்தை மூடிக்கொண்டான். இன்னும் சிறிது நேரம் அப்படியே முழங்கால்களில் மண்டியிட்டு அமர்ந்திருந்த அந்த சிறுவன் மெல்ல எழுந்து வாசலை நோக்கி நடந்தான். வாயில் கதவை அடைந்ததும் திரும்பி அந்த பெண்ணின் அழகிய முகத்தை இன்னும் ஒருமுறை பார்த்தான். அவள் அப்பொழுதும் எதுவும் பேசவில்லை.
ஒரு நொடி மட்டும் தயங்கிய அந்த ரோம தேசத்து இளைஞன் தலை தாழ்த்தி அவளை வணங்கினான்.
அவன் மீண்டும் அவர்களது மதிற்சுவர்களை சென்றடையும் வளைந்து நெளிந்த பாதைக்கு ஓடி வந்துசேர்ந்த போது ஏற்கனவே இருட்ட தொடங்கி இருந்தது. ஆனால் அவன் பயப்படவில்லை. அவன் ஒரு நெற்செயலை செய்துவிட்டு வந்திருப்பதால் எந்த தீங்கும் அவனுக்கு வரப்போவதில்லை. அவன் தலையை உயர்த்தி வானத்தை பார்த்தான். அவனுக்கு சரியாக மேலே கிழக்கு வானில் முதல் நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. வேறு எந்த நட்சத்திரத்தையும் அவனால் காணமுடியவில்லை. ஏன் தன்னால் வேறு நட்சத்திரங்களை காணமுடியவில்லை என்று சிந்தித்தான். அவனது தந்தையார் வேறு வேறு தேசங்களில் வெவ்வேறு நட்சத்திரங்கள் தெரியும் என்று கூறியது ஞாபகம் வந்தது. எனவே அதை பற்றி கவலைபடாமல் மேலும் இருள் சூழ்வதற்கும் எப்படி வீடு சென்றடைவது என்று நினைக்கலானான். அவனுக்கு முன்னால் இருந்த பாதை இப்போது காலியாக இருந்ததால் வேகமாக நடக்ககூடியதாக இருந்தது. இன்னும் சிறுது நேரத்தில் மதிற்சுவர்களை அடைந்துவிட்டால் ஆபத்தில்லை என்று நினைக்கும் போது ஏதோ பாட்டு சத்தமும், கூச்சலும் கேட்டது.
அவன் சட்டென்று திரும்பி எந்த பக்கத்திலிருந்து ஆபத்து வருகின்றதென்று பார்க்கும் பொருட்டு மலைசாரல்களை நோக்கினான். முதலில் அவன் கண்ட காட்சி அவனுக்கு புரியவில்லை. பின்னர் சற்று ஆச்சரியத்துடன் உற்று நோக்கிய போது ஒரு குறிப்பிட்ட புல்வெளியில் இடையர்கள் கைகளை தட்டி, துள்ளி குதித்து பாடுவதும் கூச்சலிடுவதும் தெரிந்தது. அவர்கள் மேய்த்த செம்மறி ஆடுகள் புல்வெளியில் ஒரு மூலையில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருப்பது அவனுக்கு தெரிந்தது. அப்படி இருக்கையில் எதற்காக பயப்பிடுகிறார்கள் என்று அவனுக்கு தெரியவில்லை. அவனது நண்பன் மார்கஸ் இந்த பகுதிகளில் வாழும் இடையர்கள், இப்படி இரவு நேரங்களில் கூக்குரலிடுவது துர்ச்சக்திகளில் இருந்து தம்மை பாதுகாப்பதாக நம்புவதாக கூறியுள்ளான். இப்படியும் மடையர்கள் யாராவது இருக்கமுடியுமா என்று அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஒரு மின்னல் வானத்தை கிழித்தது. அந்த புல்வெளி முழுதும் ஒளிவெள்ளம் பாய்ந்தது. அந்த இடையர்கள் முழங்காலில் மண்டியிட்டு அமைதியாக வானத்தை அண்ணாந்து பார்த்து எதையோ கவனமாக கேட்டுக்கொண்டிருப்பது போல தோன்றியது. சில நிமிடங்களில் மறுபடியும் அந்த இடத்தை இருள் சூழ்ந்துகொண்டது.
அந்த சிறுவன் தன்னால் இயன்றளவு வேகமாக அவர்களது மதிற்சுவர்களை நோக்கி ஓடதொடங்கினான். அவர்களது பிரம்மாண்டமான கதவுகள் அவனுக்கு பின்னால் மூடப்பட்டு அந்த பெரிய மரக்கடவை போடுப்படும் சத்தத்தை கேட்டால் தான் நிம்மதி என்று நினைத்தான். ஆனால் மூச்சிரைக்க ஓட முயன்றவனை அவன் கண்ட காட்சி சடுதியாக நிற்கவைத்துவிட்டது.
அவனது தந்தை ஆபத்தை எதிர்கொள்ளும்போது ஒரு நாளும் பயத்தை வெளிக்காட்டலாகாது என்று அவனுக்கு கற்பித்திருக்கின்றார். மூச்சிரைப்பது பயத்தின் அறிகுறியாக அவர்களுக்கு தெரியலாம் என்று நினைத்து மூச்சை அடக்கிகொண்டான். அவனுக்கு பயமாக இருந்தது, இருந்தாலும் தைரியமாக முன்னே சென்றான். பாதையை விட்டுவிலகி அவர்களுக்கு வழிவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான். ஆனால் அவர்களை நேருக்கு நேர் சந்தித்தபோது அதிசயித்துப்போனான்.
அவனுக்கு முன்னால் மூன்று ஒட்டகங்களும், ஒவ்வொரு ஒட்டகத்தின் அருகிலும் ஒவ்வொருவருமாக மூன்று மனிதர்களும் அவனை பார்த்தபடி நின்றனர். முதலாமவர் பொன்னிறத்திலான ஆடைகளை அணிந்து ஒரு கையால் மேலாடையின் உள்ளே மறைத்து வைத்தைருந்த எதையோ அரவணைத்தபடி இருந்தார். அவரது இடுப்பில் ஒரு நீண்ட வாள் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த வாளின் உறை பல்வேறுபட்ட இரத்தின கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவற்றின் சிலவற்றின் பெயர் கூட அந்த சிறுவனுக்கு தெரிந்திருக்கவில்லை. இரண்டாமவர் வெள்ளை நிறத்தினாலான ஆடைகள் அணிந்து ஒரு வெள்ளி பெட்டியை மார்பிற்கு நேரே தாங்கிக்கொண்டு இருக்க மூன்றாமவர் சிவப்பு நிறத்தினாலான ஆடைகளை அணிந்து ஒரு பெரிய மரப்பெட்டியை காவியபடியும் இருந்தார். பொன்னிற ஆடை அணிந்திருந்த மனிதர் தன் கையை உயர்த்தி அவன் இதுவரை ஒருபோதும் கேட்டிராத ஒரு பாஷையில் அவனிடம் ஏதோ சொன்னார். அவனது ஆசிரியர் கூட இந்த பாஷை பேசி அவன் கேட்டதில்லை. இரண்டாமவர் ஹீப்ரூ பாஷையிலும், மூன்றாமவர் இன்னுமொரு பாஷையிலும் பேசமுயன்ற போதும் அந்த சிறுவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அந்த சிறுவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு தான் யார் என்பதையும், தான் எங்கே சென்றுகொண்டிருக்கின்றான் என்பதையும் சொல்லி அவர்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றும் கேட்டான். அவன் உரத்து பேசிய தொனியில் அவன் பயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று நினைத்தான். பொன்னிற ஆடை அணிந்திருந்தவர் அவனது பாஷையிலேயே அவனுக்கு பதிலளித்து,
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் கிழக்கு வானில் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்.
“ஏரோது மன்னர் அந்த மலைகளுக்கு அப்பால்….”
“நாங்கள் ஏரோது மன்னனை பற்றி கேட்கவில்லை ஏனெனில் அவரும் எங்களை போலவே மனிதர்களின் அரசர் தான்” என்று இரண்டாமவர் சொல்ல
மூன்றாமவர், “நாங்கள் அந்த அரசர்க்கெல்லாம் அரசரை தரிசித்து அவருக்கு பொன்னும், சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்த வந்திருக்கின்றோம்” என்றார்.
“எனக்கு எந்த அரசர்க்கெல்லாம் அரசரையும் தெரியாது” அந்த சிறுவனுக்கு இப்பொழுது கொஞ்சம் பயம் தணிந்தது.
“நான் தேசாதி தேசங்களை எல்லாம் ஆளும் பேரரசர் அகஸ்து சீசரை மட்டுமே அறிவேன்” என்றான்.
அந்த பொன்னிற ஆடை அணிந்த மனிதர் சலிப்புடன் தலையை ஆட்டிவிட்டு, வானத்தை சுட்டிக்காட்டி அந்த சிறுவனிடம் கேட்டார்,
“அதோ அந்த கிழக்கு வானில் பிரகாசமாக எரியும் விண்மீன் தெரிகிறதல்லவா? அது எந்த கிராமத்தின் மீது ஒளி வீசுகிறது?”
அந்த சிறுவன் தலையை உயர்த்தி நட்சத்திரத்தை பார்த்தான், உண்மையிலேயே அந்த கிராமம் சூரிய வெளிச்சத்தில் இருந்ததை விடவும் மிக தெளிவாக தெரிந்தது. சிறுவனுக்கு சிரிப்பு வந்தது “அது பெத்லகேம் கிராமம் அல்லவா, அங்கே எந்த அரசர்க்கெல்லாம் அரசரும் இருக்கப்போவதில்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
“இல்லை அங்கே தான் அவரை காணப்போகிறோம்” என்ற இரண்டாவது மனிதர் மேலும் தொடர்ந்தார் “அது தான் ஏரோதுவின் தலைமை குருக்கள் சொல்லி இருக்கிறாரே:
யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்”
“இல்லை அப்படி இருக்க வாய்ப்பில்லை” சிறுவன் கத்தினான் “இஸ்ரேலையும், இந்த உலகின் மற்ற தேசங்களையும் ஆள்பவர் அகஸ்து சீசர் மட்டுமே”
அவன் சொன்னவை எதையும் சட்டை செய்யாத அந்த மூன்று மனிதர்களும் பெத்லகேமை நோக்கி பயணிக்க அரம்பித்தனர்.
அந்த சிறுவனுக்கு எல்லாம் புதிராக இருந்தது. மறுபடி அவனது வீட்டை நோக்கி செல்ல தொடங்கினான். வானம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது. ஆனால் அவன் தலையை திருப்பி பார்த்த போதெல்லாம் பெத்லகேம் கிராமம் மட்டும் அந்த விண்மீனின் ஒளிவெள்ளத்தில் தெளிவாக தெரிந்துகொண்டிருந்தது.
தூரத்தே அவர்களின் மதிற்சுவர்களை கண்டவன் வேகமாக ஓடிச்சென்று வாயிற்கதவை பலமாக தட்டினான். ஒரு காவல்படை வீரன் உருவிய வாளுடன், மறுகையில் தீப்பந்ததுடனும் வந்து கதவைத்திறந்து யார் என்று பார்த்தான். சிறுவனை கண்டவன், நெற்றியை சுருக்கினான்.
“உனது தந்தையார் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். பொழுது சாயும் நேரத்திற்கே அவர் திரும்பிவந்துவிட்டார். உன்னை கண்டுபிடிக்க ஒரு தேடுதல் படையை அனுப்ப ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்”
சிறுவன் காவலாளியை தாண்டி அவர்கள் குடியிருந்த வீட்டை நோக்கி ஓடியபோது அவனது தந்தை காவல்படை தலைவருடன் உரையாடிக்கொண்டிருப்பதை கண்டான். அவனது தாயார் அவரருகே நின்று அழுதுகொண்டிருந்தாள்.
அவன் வருவதை கண்ட அவன் தந்தை கோபத்தில் கத்தினார், “எங்கே சென்றுவிட்டு வருகிறாய்?”
“பெத்லகேமிற்கு”
“ஆமாம், அது எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு தாமதமாக திரும்பிவருவதற்கு என்ன காரணம். இருட்டுவதற்கு முன் மதிற்சுவர்களுக்குள் வந்துவிடவேண்டும் என எத்தனை தடவைகள் சொல்லி இருக்கிறேன்? இப்பொழுதே என் அறைக்கு வா”
அவன் செய்வதறியாது தன் தாயாரை பார்த்தான். அவர் இன்னும் சத்தமாக அழுதுகொண்டு அவன் தந்தையை பின்தொடர்ந்து அவரது அறையை நோக்கி சென்றார். காவல்படை தலைவன் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு அங்கிருந்து சென்றான். இப்பொழுது யாரும் தன்னை காப்பாற்றப்போவதில்லை என்று அந்த சிறுவனுக்கு தெரிந்தது. அவனது தந்தை அறைக்குள் நுழைந்து அவரது மேசைக்கு அருகிலிருந்த முக்காலியில் அமர்ந்துகொண்டார். அவரை தொடர்ந்து சென்ற அவனது தாயார் கதவுக்கு அருகில் அமைதியாக நின்றுகொண்டார்.
“இப்பொழுது எதையும் மறைக்காமல் இவ்வளவு நேரம் எங்கே சென்றுவிட்டு வருகிறாய் என்ற உண்மையை மட்டும் கூறு”
தந்தையின் முன் நின்ற சிறுவன் தான் எப்படி கிராமத்திற்கு சென்றான் என்பதையும் எப்படி மிகுந்த அவதானத்துடன் உணவு பொருட்களை வாங்கி தாயார் கொடுத்தனுப்பிய பணத்தில் பாதியை மீதப்படுத்தினான் என்பதையும் கூறினான். பின்னர் எப்படி திரும்பி வரும் வழியில் தங்குமிடத்தில் இடம் கிடைக்காது அவதியுற்ற கழுதையில் இருந்த பெண்ணை கண்டான் என்பதையும், தான் ஏன் அந்த உணவு பொருட்களை அவளுக்கு அளித்தான் என்பதையும் விளக்கினான்.
அதன் பின்னர் எப்படி இடையர்கள் தம் நெஞ்சினை தட்டி கூக்குரலிட்டு கத்தினார்கள் என்பதையும், வானில் ஒரு பெரும் வெளிச்சம் தோன்றியதும் எப்படி அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தார்கள் என்பதையும் இறுதியாக அரசர்க்கெல்லாம் அரசரை தேடி வந்திருந்த மூன்று நீளமான ஆடைகளணிந்த மனிதர்களை சந்தித்ததையும் தெரிவித்தான்.
அவன் சொன்னவற்றை கேட்ட அவன் தந்தைக்கு கோபம் இன்னும் அதிகமாயிற்று
“ஆஹா என்ன அருமையான கதை” என்று கத்தியவர், “எங்கே சொல், அந்த அரசர்களின் அரசரை நீ கண்டுபிடித்தாயா இல்லையா?” என்றார்.
“இல்லை தந்தையே, இல்லை”
அவர் எழுந்து அறையை சுற்றி நடக்க ஆரம்பித்தார்.
“அப்படியானால் கதை அளக்காமல் உனது கைகளிலும், முகத்திலும் மாதுளம்பழ சாற்றின் சிவந்த கறை எப்படி வந்தது என்று சட்டென்று சொல்லிவிடுகிறாயா?”
“தந்தையே, நான் அதிகமாக ஒரு மாதுளம்பழத்தை வாங்கி உண்டது உண்மை தான். ஆனால் அதன் பின்னரும் ஒரு டெனெரியஸ் வெள்ளி மீதம் இருக்கின்றது, இதோ பாருங்கள்” என்று கூறிய சிறுவன் அந்த வெள்ளி நாணயத்தை தன் தாயாரிடம் கொடுத்துவிட்டு, தான் சொன்னவை எல்லாம் உண்மை என்பது இப்பொழுது அவர்களிற்கு புரிந்துவிடும் என்று நம்பினான்.
ஆனால் அந்த நாணயத்தை கண்டதும் அவனது தந்தையின் ஆத்திரம் இன்னும் அதிகரித்தது. நடப்பதை நிறுத்தியவர் அவனது கண்களை உற்றுநோக்கினார்.
“மற்றைய ஒரு டெனெரியஸ் நாணயத்தை முழுவதும் உனக்காக செலவழித்துவிட்டு, எந்த பொருட்களையும் வாங்காமல் வந்து கதை விடுகிறாயா?”
“அப்படி இல்லை தந்தையே, அது வந்து, நான்…”
“அப்படியானால் உண்மையை உரைப்பதற்கு நான் உனக்கு இன்னொரு வாய்ப்பு தருகின்றேன்” என்று சொன்னவர் மறுபடி அமர்ந்துகொண்டு “ஆனால், மறுபடியும் பொய்யுரைத்தாயானால் வாழ்நாளில் நீ மறக்கவே முடியாத அளவு கசையடியை உனக்கு தருவேன்” என்றார்.
“நான் இதுவரை உண்மையை மட்டுமே உரைத்தேன் தந்தையே”
“கவனமாக கேள் மைந்தனே, நாங்கள் ரோமர்கள், இந்த உலகத்தை ஆள்வதற்காக பிறந்தவர்கள். எங்களது சட்டதிட்டங்களும், பழக்கவழக்கங்களும் எல்லோராலும் ஏற்கப்படுவன ஏனெனில் அவை முழுக்க முழுக்க நேர்மையினால் கட்டமைக்கப்பட்டவை. ரோமர்கள் ஒருபோதும் பொய் பேசுவதில்லை. எமது பெரும் பலமாகவும், எங்கள் எதிரிகளின் பலவீனமாகவும் இருப்பது அது தான். அதனால் தான் நாங்கள் ஆள்பவர்களாகவும், மற்றவர்கள் ஆளப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். எங்களது இந்த பண்பு மாறாத வரை ரோம பேரரசு ஒரு நாளும் வீழ்ந்து விடாது. நான் சொல்வது உனக்கு புரிகின்றதா மகனே?”
“ஆமாம், தந்தையே, எனக்கு புரிகின்றது”
“அப்படியானால் உண்மை பேசுவது எவ்வளவு முக்கியமானது என்றும் உனக்கு புரியும்”
“ஆனால் நான் பொய் சொல்லவே இல்லையே, தந்தையே”
“அப்படியானால் உன்னை எவராலும் காப்பாற்ற முடியாது” என்று ஆத்திரத்தோடு கூறியவர், “இந்த விடயத்தை தீர்ப்பதற்கு ஒரே ஒரு வழியை தான் நீ எனக்கு தந்திருக்கிறாய்” என்றார்.
அவனது தாயார் அவனுக்கு உதவவேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரது எந்த முயற்சியும் பலனளிக்காது என்று அவருக்கு தெரியும். அவனது தந்தை எழுந்து அவரது இடுப்பை சுற்றி இருந்த தோலினால் செய்யப்பட இடுப்புப்பட்டியை கழற்றினார். அதில் பதிக்கப்பட்டிருந்த பித்தளை அலங்காரங்கள் வெளியில் இருக்கும்படியாக இடுப்புப்பட்டியை இரண்டாக மடித்துவிட்டு அந்த சிறுவனை கால் கட்டைவிரல்களை தொடும்படியாக குனிந்து நிற்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவன் எந்த தயக்கமுமின்றி அவரது கட்டளைக்கு அடிபணிந்ததும், கழுத்துப்பட்டியை தலைக்கு மேலே உயர்த்தி, அவரது பலம் எல்லாம் சேர்த்து கீழே அடித்தார். அந்த சிறுவன் முகத்தில் எந்த வலியையும் காட்டவோ, அழவோ இல்லை. அவனது தாயார் வேறு பக்கமாக பார்வையை திருப்பி அழுதுகொண்டிருந்தார். பன்னிரண்டு கசையடிகள் கொடுத்து முடித்ததும் அந்த சிறுவனை அவனது அறைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அவன் எதுவும் பேசாது அங்கிருந்து சென்றான். அவனது தாயார் அவன் பின்னால் சென்று அவன் மாடிப்படியேறி மேலே செல்வதை கண்டார். பின்னர் சமயலறைக்கு ஓடி சென்று ஆலிவ் எண்ணெயும், வேறு சில களிம்புகளையும் எடுத்துக்கொண்டார். அவரது மகனின் காயங்களை ஆற்ற அவை உதவும் என்று நினைத்துக்கொண்டு அவனது அறைக்கு சென்றபோது அந்த சிறுவன் கட்டிலில் படுத்தபடி இருந்தான்.
அவர் அவனருகில் சென்று அமர்ந்து அவனது போர்வையை விலக்கினார். அவர் எண்ணெய்களை பூசுவதற்கு தயார்படுத்தியபோது அந்த சிறுவன் முதுகு தெரியும் படி குப்புற படுத்து கொண்டான். பின்னர் அவனது தாயார் அவனது மேலாடையை அவனுக்கு வலிக்காவண்ணம் மிகுந்த கவனத்துடன் மேலே உயர்த்தினார்.
என்ன ஆச்சரியம். அவனது முதுகில் ஒரு தழும்பு கூட இருக்கவில்லை.
அவனது முதுகை தன் கைவிரல்களால் தடவி பார்த்தார். இப்பொழுது தான் குளித்து போல அவன் சருமம் மிருதுவாக இருந்தது. அவனை முன்பக்கமாக திருப்பி பார்த்தார். அவனது உடலில் எங்கேயுமே ஒரு தழும்பு கூட இருக்கவில்லை. உடனடியாக போர்வையை இழுத்து மூடினார்.
“இதை பற்றி உன் தந்தையிடம் எதுவும் சொல்லாதே, அவருக்கு தெரிந்தால் இன்னும் ஆத்திரம் தான் அடைவார். நீயும் உனது நினைவுகளிலிருந்து இந்த சம்பவத்தை முற்றாக அழித்துவிடு,”
“அப்படியே செய்கிறேன், தாயே”
அவனது தாயார் கட்டிலுக்கு அருகிலிருந்த மெழுகுதிரியை அணைத்துவிட்டு, உபயோகமற்றுப்போன எண்ணெய் குப்பிகளை சேகரித்துக்கொண்டு சத்தம் செய்யாமல் கதவை நோக்கி சென்றார். பின்னர் அந்த சிறுவனை திரும்பி பார்த்து:
“பொன்டியஸ், நீ சொன்னதெல்லாம் உண்மை என்று இப்பொழுது நம்புகின்றேன்”

ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய “The First Miracle” என்ற சிறுகதையின் தமிழாக்கம்
One Reply to “முதல் அற்புதம்”