மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

சொல்வனம் 232-ம் இதழில் (11-10-2020) தீ நுண்மியும் தாயும், மகவும் என்ற கட்டுரையில், கோவிட் தொற்றானது இளம் தாய்களையும், கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் பாதித்து அவர்களது நல வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் இந்தியாவின் நிலையை சற்று நெருங்கிப் பார்ப்போம்.

குழந்தைகள் மனிதர்களின் தந்தை எனச் சொல்லப்படுவது அவர்கள் ஆயிரங்காலத்துப் பயிர் என்பதன் பொருளும் கூட. உடல் வன்மை, மனத் திண்மை, நல் ஒழுக்கம், சிறந்த சூழ் நிலை அனைத்துமே ஒருவரின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அதிலும், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள, வளர்ந்து வரும் நாடுகளில் தாய்-சேய் நலம் என்பது அரசின் நிதி ஆதாரத்துடன் பிணைந்துள்ளது. தீ நுண்மியினால், அரசின் சிறப்புக் கவனமும், நிதி ஒதுக்கீடுகளும் பெருந்தொற்றிற்குப் பெருமளவில் செல்ல, குழந்தைகளுக்கான போலியோ சொட்டு, தடுப்பூசி திட்டங்கள், அன்னையரின் சுகாதாரம், இருவருக்குமான சத்துணவுகள் ஆகியவை பின்னடைவை சந்தித்தன.

மனித வளத்திலும், பொருளாதாரத்திலும் சிறந்த முன்னேற்றத்தை கடந்த பத்தாண்டுகளாகக் காட்டி வந்த இந்தியாவில், தற்சமயம் இளம் தாய்மார்களும், குழந்தைகளும், சிறுவர் சிறுமியரும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு (Comprehensive National Nutrition Survey) மற்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு,(National Family Health Survey),  ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் குறை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மூன்றில் ஒரு பங்கினர் குறைந்த எடை கொண்டவர்களென்றும், பத்தில் இரு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதில்லையென்றும், பலவகையான மானுடவியல் குறைபாடுகள் பரவலாக உள்ளதென்றும் தெரிவிக்கின்றன. அதே நேரம், உடற்பருமன், அதிக எடை, நுண் சத்துக் குறைவு ஆகியவைகளும் காணப்படுகின்றன. தீநுண்மியின் தாக்குதலால், முன்னர் அடைந்த முன்னேற்றங்கள் தேக்க நிலையடைந்து சரிகின்றன.

தீநுண்மி பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியதால், உற்பத்தி, வழங்குச் சங்கிலி போன்றவை வழக்கம் போலச் செயல்படவில்லை. பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பொருள் உற்பத்தி குறைந்து விலை ஏறி வாங்கும் சக்தி குறைந்தது. உலக ஆய்வின் தரவுகள் படி 14.3% சத்துக்கள் யாருக்கும் பயன்படாமல் வீணாயின. இந்தியாவில், கோவிடினால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுகளைப் பற்றிய தரவுகள் வெளியாகவில்லை. ஆனால், அனைத்துத் தொற்றுக்களையும் போலவே இதுவும் எதிர்மறையாக குழந்தைகளின் சத்து நிலையைப் பாதிக்கிறது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு நிறைவு தரும் மற்ற உணவுகளும் தாய்ப்பாலுடன் குழந்தைக்குத் தேவை.. வளரும் மூளைக்கும், உடலிற்கும் இது அத்தியாவசியமான ஒன்று. உணவு பாதுகாப்பின்மை, மலிவான உணவுகளை நோக்கி பெற்றோரைச் செலுத்தக்கூடும்; அதனால் மிகப் பெரிய அவலத்தை வருங்காலத்தில் சந்திக்க நேரிடலாம்.

கிட்டத்தட்ட இரு வருடங்களாக அங்கன்வாடி மையங்கள், சத்து உணவு மையங்கள், கிராம நல சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாட்கள் (VHSND-Village Health Sanitation and Nutrition Days) போன்றவை சரிவர இயங்கவில்லை. 2020 மற்றும் 2021-ல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், இரும்புச் சத்து மாத்திரைகள் சிறுவர்களுக்கு வழங்கப்படவில்லை. சத்துணவு பற்றிய பரப்புரைகள் நிகழ்த்தப்படவில்லை. நல ஊழியர்கள் இந்தச் செயல்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு கோவிட் தொடர்பான சேவைகளில் பங்கேற்கும் சூழல் வந்தது. தடுப்பூசிகளும், அதன் ஏற்றுமதி- இறக்குமதியும், மருத்துவர்களும், மருத்துவக் கருவிகளும், உதவியாளர்களுமென மாபெரும் திரள் இந்தத் தீ நுண்மிக்கெனவே தேவைப்பட்டது. (மற்ற உடல் நலக் குறைபாடுகளுக்கும் சிறப்பு கவனம் மற்றும் மருத்துவத் தேவை உள்ளது என்றும், இதில் அரசு அலட்சியமாக நடந்து கொள்கிறது என்றும் போடப்பட்ட பொது நல மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.)

இந்திய அரசு ‘போஷன் அபியான்’(Poshan Abhiyan) மூலம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, இளம் தாய்மார்களின் உடல் நலம், அவர்களுக்குத் தேவையான போஷாக்கு போன்றவற்றிற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘கிராம நல சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாட்கள்’ தேசியக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலை நிற்கும் வளர்ச்சி(Sustainable Development Goals) அதன் குறிக்கோள். சுய உதவிக் குழுக்கள், சமூக நல அமைப்புகள், கிராம முன்னேற்ற அமைப்பு, தாய் சேய் நல கேந்திரங்கள், குடும்ப நலம் மற்றும்  வளர்ச்சி, பஞ்சாயத்து சபைகள், நல்ல குடி நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றும் அமைப்புகள் போன்றவைகளில் உள்ளவர்கள் ‘இந்த நாட்களில்’ பங்கேற்கின்றனர். ஒன்றியம், வட்டம், மாவட்டம் மானில அரசு என்று அனைவரும் பங்கு பெறும் இதில் ‘போஷன் அபியானுக்காக’ வகுத்துள்ள திட்டத்தைப் பார்ப்போம்.

மாதம்செயல்
ஜனவரிமுழு நோய் எதிர்ப்பு, A உயிர்ச்சத்து மாத்திரைகள் வழுங்குதல்
பிப்ரவரிஉணவிற்கு வலுவூட்டல், குடற் புழு நீக்கம், நுண்சத்துக்களின் அவசியத்தை உணர்த்துதல்
மார்ச்பெண் கல்வி, உணவு, திருமண வயது
ஏப்ரல்கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்துக்கள், பிரசவத்திற்கு முன்பான பரிசோதனைகள், கால்சிய மாத்திரைகள், மருத்துவ மனைகளில் பிள்ளை பெறுதல், தாய்ப் பால் கொடுப்பது போன்றவை
மேகுழந்தைப் பராமரிப்பு, கல்வி
ஜூன்வயிற்றுப் போக்கு தடுப்பு, உணவு
ஜூலைகுடும்பக் கட்டுப்பாடு, இரத்தச்சோகை தடுப்பு
ஆகஸ்ட்தாய்ப்பால் கொடுக்கும் முறைகள், குடற் புழு நீக்கம்
செப்டம்பர்வீட்டுத் தோட்டங்கள், ஊட்டச்சத்து பயிர்கள்
அக்டோபர்சுத்தமான, சுகாதாரமான குடி நீர்
நவம்பர்வளர்ச்சி கண்காணிப்பு, குழந்தைகளின் நலம், மூச்சுத் திணறல் தடுப்பு போன்றவை, குடும்பக் கட்டுப்பாட்டில் ஆண்களின் பங்கு
டிசம்பர்தேவையான மற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது

திட்டங்கள் வெற்றியடைய  என்ன செய்ய வேண்டும்?

  • உணவு, வருமானம், ஊட்டச் சத்து இவற்றில் ஒன்றியம் தொடங்கி நடுவண் அரசு வரை நிர்வாகத் திறமையுடன் செயல்படும் நபர்கள் தேவை
  • குழந்தைகள், வளர் இளம் பெண்கள், இளம் தாய்மார்கள், கர்ப்பிணிகள் இவர்களின் ஊட்டச் சத்து தேவையை உணர்ந்து இடையில் தொய்வுகள் ஏற்படாமல் தொடர்ந்து கிடைக்க வழி செய்ய வேண்டும்.
  • உற்பத்தி மற்றும் வழங்குதலில் கால விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • வறுமைக் கோட்டிலும், அதன் கீழே உள்ளவர்களுக்கும் சத்தான உணவு கிடைக்க அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும்.
  • புலம் பெயர் தொழிலாளிகள், நகர்ப்புற ஏழைகள் இவர்களுக்கும் நல்ல சத்தான உணவு கிடைக்க வேண்டும்.

உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்கும் அன்னையர் நலம் பெற்றால், பிள்ளைகளும் வளம் பெறுவார்கள். ஏட்டளவில் நிற்காமல் செயல் பட்டோமென்றால் பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு எனப் பாராட்டிக் கொள்ளலாம்.

(யூனிசெஃப் இந்தியா ஊட்டச்சத்து தலைவர் அர்ஜான் டி வாக்டையின் (Arjan De Wagt) பேட்டி மற்றும் VHSND கையேட்டை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.