பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்

This entry is part 4 of 23 in the series புவிச் சூடேற்றம்

(விஞ்ஞானத் திரித்தல் – பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்)

பூமியின் காற்று மண்டலம் என்பது ஒரு மிகச் சன்னமான வாயுக்களால் நிரம்பிய அடுக்கு. இதென்ன புது வம்பு?

“காற்றுள்ளவரை என் இசை உலவும்.”

– என்று ஆயிரம் சினிமா பாடல்களைக் கேட்டிருப்போம். காற்று என்பது எக்காலத்திலும் இருக்கும்; உலகம் (பூமி) மிகப் பெரியது – இதை எல்லாம் நமக்குப் பல கவிதைகள் சொல்லியுள்ளன. எப்படியோ நாம், உலகின் அளவைக் காற்றின் அளவுடன் ஒன்று சேர்த்துவிடுகிறோம். மனிதர்களின் அளவுடன் ஒப்பிட்டால், இயற்கையின் படைப்பான பூமி, காற்று மண்டலம், மலைகள், நதிகள், கடல் யாவுமே பெரிதுதான். ஆனால், பூமியின் அளவைக் காற்று மண்டலத்துடன் ஒப்பிட்டால், அது எவ்வளவு சன்னமானது என்று புரியவரும். பூமியின் விட்டம் 8,000 மைல்கள். ஆனால், காற்று மண்டலத்தின் விட்டம் வெறும் 60 மைல்கள்தான். அதாவது, பூமியை ஒரு கூடைப்பந்தின் அளவு என்று வைத்துக் கொள்வோம். காற்று மண்டலம் என்பது, கூடைப்பந்தைச் சுற்றியுள்ள மிகச் சன்னமான ஒரு பிளாஸ்டிக் பை போன்றது. இந்தச் சன்னமான அடுக்குடன் மனிதர்கள் செய்த விஷப் பரீட்சைகள், இன்று நாம் எதிர்பார்க்காத விளைவுகளை உண்டாக்கியுள்ளதே புவி சூடேற்றம்.

புவியின் ஈர்ப்பு சக்தி, காற்று மண்டலத்தைப் பூமியுடன் வைத்திருக்கிறது. காற்று மண்டலத்திற்குள் வெப்பம் மற்றும் குளிர்ச்சி, இரு விஷயங்களைத் தீர்மானிக்கின்றன. முதல் விஷயம், அன்றாட வானிலை; மற்றொன்று, நான்கு மாதத்திற்கு ஒரு முறை மாறும் பருவநிலை. நீரால் அமைந்தது உலகம் – இதனால் உலகின் கடல்கள், பெரும் மலைகள், பனிப்பாறைகள் என்று பலவித விஷயங்கள், சிக்கலான காற்றுமண்டலத்தின் நிலையை முடிவு செய்கின்றன. நொடிக்கு நொடி மாறும் விஷயம் இது. காற்று மண்டலம் 60 மைல்கள் வரை என்று சொல்லியிருந்தேன். காற்று மண்டலம் இந்த 60 மைல்கள் ஒரே மாதிரியாக இருக்காது. உயரே செல்லச் செல்ல காற்றும், அதன் அழுத்தமும் குறைந்துகொண்டே வரும். அதேபோல, வெப்பமும் குறைந்துகொண்டே வரும். புவிச் சூடேற்றம் என்பது புவியின் சராசரி வெப்பத்தைப் பற்றிய ஒரு தொலை நோக்கு. இதற்கு, அன்றாட வானிலை மற்றும் வருடத்தில் நான்கு முறை மாறும் பருவநிலைகளைத் தாண்டி, மிகவும் நீண்ட ஒரு காலப் பார்வை தேவை. இந்தக் காலப் பார்வைக்கு, குறைந்த பட்சம், நம் காற்று மண்டலம் பற்றிய மேலோட்டமான விஞ்ஞானப் புரிதல் அவசியம்.

.

தரையிலிருந்து விமானம் உயரே பறக்கத் தொடங்கியவுடன், இருக்கை வாரை (seat belt) எப்பொழுது கழட்டலாம் என்று நமக்கெல்லாம் தோன்றுவது இயற்கை. சம அளவில் பறக்கத் தொடங்கிய விமானத்தில், யாருமே பொருட்படுத்தாத, ஓர் அறிவிப்பை எப்பொழுதும் செய்வார்கள் – ”நாம் தரையிலிருந்து 35,000 அடிக்கு வந்துவிட்டோம். வெளியே வெப்ப நிலை மைனஸ் 40 டிகிரி.” இந்த உயரம், அதாவது தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை, உள்ள பகுதி காற்று மண்டலத்தின் அடிவளிமண்டலம் (troposphere) என்று சொல்லப்படுகிறது. இதன் நடுமட்ட அளவு, அதாவது எட்டு கி.மீ. என்பது எவரஸ்ட் சிகரத்தின் உயரம். உயரம் அதிகமாக அதிகமாக, வெப்பம் குறைந்துகொண்டே வரும். பூமியின் சராசரித் தரையளவு வெப்பம் 15 டிகிரி; படிப்படியாக, இது குறைந்து அடிவளிமண்டலத்தின் விளிம்பில் -50 டிகிரி செல்சியஸுக்கு வந்துவிடுகிறது. காற்றழுத்தமும் மிகவும் குறைந்துவிடும். (1,000 மில்லிபாரிலிருந்து 300 மில்லிபார்.) இதனால்தான், விமானங்களுக்குள்ளே காற்று அழுத்தம் ஏற்றப்படுகிறது.

அடிவளிமண்டலத்துக்கு அடுத்த அடுக்கு, தரையிலிருந்து16முதல் 48 கி.மீ. வரையிலான மேல்வளிமண்டலம் (Stratosphere) என்று சொல்லப்படுகிறது. இங்கு அடிவளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் இருந்தாலும், இதன் முக்கியப் பங்கு, பூமியின் 95% ஓஸோன் அடுக்கு இங்குள்ளது. நாம் முன்னமே ”ஓஸோனில் ஓட்டை”, பகுதியில் சொன்னதுபோல, புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருக்க உதவும் வேலையை இந்தப் பகுதியாகிய அயனவளிமண்டலம் (ionosphere) செய்கிறது. இங்கு வெப்பநிலை சற்று வித்தியாசமானது. அடிவளிமண்டலத்தைப் போலல்லாமல், -50 டிகிரியிலிருந்து, -5 டிகிரி வரை வெப்பம் உயரும். இதற்குக் காரணம், புறஊதாக் கதிர்களை உள்வாங்கும் தன்மை.

 

புவிச் சூடேற்றத்திற்கும், இவற்றிற்கும் சம்பந்தம் இல்லை. காற்று மண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கையும் வைத்துப் பார்த்தால், நம்முடைய நிலத்தின் வெப்பம் சராசரி -15 டிகிரியாக இருக்க வேண்டும். எப்படிப் 15 டிகிரியானது? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியக் காரணம், உலகின் மிக முக்கியச் சூடேற்றும் வாயுவான நீராவி ஆகும். மேகங்கள் (நீராவி) நம் பூமி உறையாமல் இருக்க முக்கியக் காரணம். பாலைவனப் பகுதிகளில் அதிக மழை கிடையாது. அங்கு இரவு மிகவும் குளிராகவும், பகல் மிகவும் சூடாகவும் இருக்கக் காரணம், அதிக மேகங்கள் இல்லாதது. கனடா போன்ற குளிர் நாடுகளில், குளிர் காலத்தில், நீல வானம் துல்லியமாகத் தெரியும் நாள்கள் மிகவும் குளிரானவை. ஏனென்றால், வானில் மேகமூட்டம் இல்லை.

நமக்கருகே வானத்தில் இருக்கும் சந்திரனுக்கு, பூமியைப்போலக் காற்று மண்டலம் என்று ஒன்று கிடையாது. மிகவும் டெக்னிகலாக ஆராய்ந்தால், சில வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரனின் ஈர்பு சக்தியும், பூமியைவிட ஆறில் ஒரு பங்குதான். இதனால், பூமியுடன் ஒப்பிட்டால், சந்திரனில் காற்று மண்டலம் என்ற ஒன்று கிடையாது என்று தாராளமாகச் சொல்லலாம். இதை இங்கு சொல்லக் காரணம், காற்று மண்டலமற்ற ஓர் இயற்கைக் கோள், அதுவும் சூரியனிலிருந்து ஏறக்குறைய அதே தொலைவில் இருக்கும் சந்திரனின் சராசரி வெப்ப நிலை என்ன? அதன் சராசரி வெப்ப நிலை -18 டிகிரி. சூரியனின் கதிர் அதைத் தாக்கும்போது அதன் வெப்பம் 100 டிகிரி. சந்திரனின் மிகவும் குளிரான பகுதியில் வெப்பம் -170 டிகிரி. பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி. அதிகபட்ச வெப்பநிலை 71 டிகிரி. அதிகபட்ச குளிர்நிலை -89 டிகிரி. காற்று மண்டலம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த வெப்ப நிலைகள் தெளிவாக்கியிருக்கும்.

பூமியின் ஒளி மற்றும் வெப்பம் சூரியனிடமிருந்து வருகிறது. சூரிய ஒளி, நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தைத் தாண்டி பூமியைச் சூடேற்றுகிறது. பூமியில் சூடேற்ற வாயுக்கள் இல்லையென்றால், தான் உள்வாங்கிய அத்தனை வெப்பத்தையும் விண்வெளிக்குப் பிரதிபலிக்க வேண்டும். ஆனால், புறஊதா போன்ற விஷயங்களைத் தவிர்த்து, இயற்கை சூரிய வெப்பத்தைக் காற்று மண்டலத்திற்குள் பாதுகாக்கிறது. விண்வெளிக்குச் சூரிய வெப்பம் போகாமலிருக்க உதவுவதே சூடேற்றும் வாயுக்களின் பணி. இதனால், மனித, விலங்கு, பறவை, மீன் மற்றும் மரங்கள், செடிகள் என்று பூமி செழிப்பாக உள்ளது. அத்துடன், பூமியின் சராசரி வெப்ப அளவும் 15 டிகிரியாக உள்ளது.

இந்த விஞ்ஞானப் பார்வையுடன், இன்னும் சற்று விரிவாக அலசுவோம்.

  1. சூரியனின் ஒளியில், நீண்ட மற்றும் குறுகிய அலை நீளக் கதிரியக்கம் என்ற இரண்டும் உண்டு.
  2. இந்த இரண்டு வகைக் கதிரியக்கமும், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளை எதுவும் செய்வதில்லை.
  3. சூரிய ஓளியில், புறஊதாக் கதிரியக்கத்தைத் தவிர, மற்ற ஒளி பூமியைச் சேர்ந்தடைகிறது.
  4. இதில், வெறும் 30% கதிரியக்கம்தான், விண்வெளிக்குப் பூமியால் பிரதிபலிக்கப்படுகிறது. – இந்தக் கதிரியக்கம், பூமியை வந்தடைவதே இல்லை.
  5. சூரியனிலிருந்து பூமியைச் சென்றைடையும் 70% கதிரியக்கத்தைக் காற்று மண்டல வாயுக்கள் (புறஊதாக் கதிரியக்கத்தை, ஓஸோன் அடுக்கு உள்வாங்கிவிடுவதைத் தவிர) ஒன்றும் செய்வதில்லை.
  6. இந்த 70% கதிரியக்கத்தில், மூன்றில் ஒரு பங்கைக் கடல் நீர், பனி மற்றும் ஆறு / ஏரி நீரை ஆவியாக்குவது போன்ற விஷயங்களுக்குப் பூமி பயன்படுத்துகிறது. (Hydrologic cycle.) பாக்கியிருக்கும் மூன்றில் இரண்டு பங்கு நிலம், கடல் போன்ற அமைப்புகளைச் சூடேற்றுவதற்குப் பயன்படுத்துகிறது.
  7. இதில் இன்னொரு விஷயமும் அடங்கியுள்ளது. நாம் மேலே சொன்ன 70% கதிரியக்கத்தில், 51% பூமியால் உள்வாங்கப்படுகிறது. மீதமுள்ள 19% மேகங்களால் உள்வாங்கப்படுகிறது.
  8. பூமி வெப்பமைடைந்து, அந்த வெப்பத்தை, நீண்ட அலை (அகச்சிகப்புக்) கதிரியக்கமாய் வெளியேற்றுகிறது. இந்தக் கதிரியக்கத்தைக் காற்று மண்டலத்தில் உள்ள நீராவி மற்றும் மீதேன், கரியமில வாயுக்கள் மீண்டும் பூமிக்கே பிரதிபலிக்கின்றன. இது பசுங்கூட விளைவு (Greenhouse effect) என்றழைக்கப்படுகிறது.

அட, புவிச் சூடேற்றம் நல்ல விஷயம்போல இருக்கிறதே என்று தோன்றலாம். புவிச் சூடேற்ற வெப்பங்கள், நம் பூமியை உயிர் வாழத் தகுந்த கிரகமாக மாற்ற மிக முக்கியம் ஆகும். இந்த அளவு பல மில்லியன் வருடங்களாக மிகச் சிறிய வேறுபாடுகளைத் தவிர்த்து, கட்டுக்குள் இருந்தது. சூரியனிலிருந்து வரும் சக்தியும், பூமியிலிருந்து வெளியேறும் சக்தியும் சமநிலையில் இருக்க வேண்டும். (Radiative equilibrium of earth.) மீண்டும் மீண்டும், அதன் அகச்சிகப்புக் கதிரியக்கத்தைப் பூமிக்குப் பிரதிபலிக்கும் வாயுக்கள் அதிகமானால், பூமி மேலும் சூடாகிறது. அத்துடன், இயற்கை ஒரு புதிய சக்திச் சமநிலையை நோக்கிப் பயணிக்கும். அளவிற்கு அதிகமான கரியமில வாயு, மீதேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட், புதிய சமநிலைக்குப் பூமியைப் பயணிக்க வைத்தால், மனிதர்கள் வாழ அது சரியானதா, இல்லையா என்பதை எளிதில் சொல்லிவிடலாம். வீனஸ் (புதன்) கிரகத்தில் ஏராளமான கரியமில வாயு (94%) உண்டு. அங்கும் அடர்த்தியான மேகங்கள் உண்டு. அதன் சராசரி வெப்பநிலை 188 டிகிரி!

நம்முடைய பூமியில் அதிகமாக இருக்கும் வாயுக்கள் நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஆகும். இரண்டிற்கும் சூடேற்றும் தன்மை இல்லை. புவிச் சூடேற்ற வாயுக்கள் என்பவை பெரும்பாலும்:

  1. நீராவி
  2. கரியமில வாயு
  3. மீதேன் வாயு
  4. நைட்ரஸ் ஆக்ஸைட்

ஆகியவையே. பெரும்பாலான சர்ச்சைகள் கரியமில வாயுவைப் பற்றியே இருப்பது நிதர்சனம். கரியமில வாயு என்பது, நமது காற்று மண்டலத்தில் வெறும் 0.03%தான். மனிதர்கள் மற்றும் விலங்குகள் இந்த வாயுவை வெளியேற்றுகின்றன. இதன் விஞ்ஞான மதிப்பீடு, வருடத்திற்கு 15 கிகா டன்கள். அதைத் தவிர நிலம், கடல் மற்றும் மலைகளும் கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. இதன் விஞ்ஞான மதிப்பீடு, வருடத்திற்கு 780 கிகா டன்கள். மரங்கள், செடிகள் கரியமில வாயுவை ஆக்ஸிஜனாகச் சூரிய ஒளிகொண்டு மாற்றுகின்றன. இதனால், காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயு, பல மில்லியன் ஆண்டுகளாக 0.03% அளவிலேயே இருந்தது. கடந்த 170 ஆண்டுகளாக (1850 முதல்) இந்த விகிதம் மாற ஆரம்பித்தது. இதற்கான ஆதாரங்கள் பலவற்றையும் விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளார்கள். (இதையும் இன்னொரு பகுதியில் பார்ப்போம்.) 170 ஆண்டுகளுக்குமுன் ஆரம்பித்து இன்றுவரை தொடர்வது தொழில் புரட்சி. முதலில் சக்திக்காகக் கரியைப் பெருவாரியாக எரித்தோம். கார்கள், கப்பல்கள், விமானங்கள் கடந்த 100 ஆண்டுகளில் பெருவாரியாக அதிகரித்துக் காற்று மண்டலத்தில் ஏராளமான கரியமில வாயுவைக் கூட்டின. இன்று சராசரியாகக் காற்றில் ஏறக்குறைய 0.06% கரியமில வாயு உள்ளது.

இதை இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், மில்லியன் அணுக்கூறுகளில் 180 கரியமில அணுக்கூறுகள் என்ற அளவில் மில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் இருந்தது. இன்று, அது 400 என்ற அளவை எட்டிவிட்டது. மனித நடவடிக்கைகள், வருடத்திற்குப் 15 கிகா டன்கள் அதிகமாகக் கரியமில வாயுவைச் சேர்க்கின்றன. இதை எப்படி விஞ்ஞானிகள் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்? இயற்கையாக உருவாக்கப்படும் கரியமில வாயு, காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதன் முக்கிய அம்சம் கார்பன் 13 என்ற ஓரிடமூலகம். (isotope C-13.) இதை விஞ்ஞானிகள் துல்லியமாக அளவிட்டுள்ளார்கள். கார், தொழிற்சாலை மற்றும் இதர தொல்லெச்சப் பொருட்களை எரிப்பதால் உருவாகும் உமிழில் C13 கிடையாது. நமது காற்று மண்டலத்தில் C13–ன் அளவு குறைந்துகொண்டே வருகிறது. தொல்லெச்ச உமிழ் கூடக்கூட, இயற்கையாக உருவாகும் C13 குறைவது மனித நடவடிக்கைகளால் வந்தது என்பது இதனால் தெளிவாகிறது.

காற்று மண்டலத்தில், கரியமில வாயுவைவிட அதிக நீராவி உள்ளது என்பது உண்மை. இத்தனை நீராவி இருக்கையில், கரியமில வாயுவை வைத்துக்கொண்டு, ஏன் புவிச் சூடேற்றம் என்றவுடன், விஞ்ஞானிகள் இதற்கு மனித நடவடிக்கைகளே காரணம் என்று சொல்லுகிறார்கள்? நியாயமான கேள்விதான். நீராவி நிறைய இருந்தாலும், அதன் அளவு ஓரளவிற்கு மேல் போவதில்லை. ஆனால், கரியமில வாயு அதிகமாகியதால், இதன் தாக்கம் மிகவும் பெரியதாகிவிடுகிறது.

  1. கரியமில வாயுவின் அளவு 0.03% -லிருந்து 0.06% அதிகமானவுடன், பூமியின் சராசரி வெப்பம் ஒரு டிகிரி அதிகமாகியுள்ளது என்று பார்த்தோம்
  2. ஒரு டிகிரி சராசரி வெப்பம் அதிகமானதுடன், பனிப்பாறைகள் அதிகமாக உருகத் தொடங்குகின்றன
  3. பனிப்பாறைகள், வழக்கத்திற்கு அதிகமாக உருகுவதால், அதிக நீர் மற்றும் அதிக நீராவியும் அதனுடனே உருவாகிறது
  4. இதனால், காற்று மண்டலத்தில் நீராவி மற்றும் கரியமில வாயு இரண்டுமே அதிகமாகிவிடுகிறது
  5. இரண்டு புவி சூடேற்றும் வாயுக்கள் அதிகமாகுகையில், அதிக வெப்பம் பூமிக்குள் தங்கிவிடுகிறது
  6. இதுவே இந்த வெப்பச் சுழற்சிக்குக் காரணம்

கரியமில வாயு மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைப் பற்றி மற்றொரு பகுதியில் விரிவாகப் பார்ப்போம். புவிச் சூடேற்ற வாயுக்களில் அதிகம் ஆராயப்படாத இரண்டு வாயுக்கள், மீதேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் ஆகியவை.

நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுவைப் பற்றிச் சில விஷயங்கள் தெளிவாகத் தெரியும்:

  1. இதன் சூடேற்றத் தன்மை கரியமில வாயுவைவிட 25 மடங்கு அதிகம்
  2. யுரியா போன்ற உரங்கள், மாட்டுச் சாணம், கார், லாரிகளின் உமிழ் புகை, மரங்களை எரித்தல் – இவை யாவும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுவை உற்பத்தி செய்கின்றன

மீதேன் வாயுவைப் பற்றிய சில விஷயங்கள் தெளிவாகத் தெரியும்:

  1. இதன் சூடேற்றத் தன்மை கரியமில வாயுவைவிட 84 மடங்கு அதிகம்
  2. நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக மீதேன் வாயு, காற்று மண்டலத்தில் அதிகரித்து வருகிறது
  3. பல்லாயிரம் வருடங்களாக மனிதர்கள் மீதேன் வாயுவை உருவாக்கி வந்துள்ளார்கள். உதாரணத்திற்கு, நீரில் மிதக்கும் நெல் பயிர், மீதேனை வெளியேற்றுகிறது. விவசாயத்திற்காக, எரிக்கப்படும் காடுகள் மீதேன் வாயுவை வெளியேற்றுகின்றன. மாடுகள், ஆடுகள், பன்றிகள் மீதேன் வாயுவை வெளியேற்றுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், கிராமத்து வாழ்கை மீதேன் இன்றி இயங்காது
  4. கரியமில வாயுவைப் போலல்லாமல், மீதேன் வாயு காற்று மண்டலத்தில் 10 வருடங்களுக்குமேல் இருப்பதில்லை. விண்வெளிக்குச் சென்றுவிடுகிறது. இதனால், கரியமில வாயுவைப்போல காற்று மண்டலத்தில் சுற்றிக்கொண்டே இருப்பதில்லை
  5. காற்று மண்டலத்தில் உள்ள மீதேன் வாயுவில் 60% மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டது
  6. 2006–க்குப் பிறகு, காற்று மண்டலத்தில் மீதேன் அதிகமாகி வருகிறது. இதற்கான காரணங்கள் முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை. சில விஞ்ஞானிகள், இயற்கை வாயு மற்றும் பாதாள நீரழுத்த நிலமுறிவு (fracking) காரணம் என்கிறார்கள்

இந்த இரண்டு வாயுக்களின் புவிச் சூடேற்றத் தாக்கம் பற்றி நாம் முழுவதும் ஆராய்ந்து முடிவிற்கு வரவில்லை. குறிப்பாக:

  1. கரியமில வாயுவைவிட அதிகமாக தாக்கம்கொண்ட மீதேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியம்?
  2. கரியமில வாயுவைக் கட்டுப்படுத்திவிட்டு, மீதேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் அதிகமாவதைப் புறக்கணிக்கலாமா?
  3. பத்து வருட காலமுள்ள மீதேன் தானாகவே சரி செய்துகொள்ளும் விஷயமா?
  4. தொல்லெச்ச எரிபொருள்களிலிருந்து ஆற்றலை உருவாக்குவதைத் தவிர்த்தால், எல்லா புவிச் சூடேற்ற வாயுக்களும் கட்டுக்குள் வருமா?

இதுவரை, புவிச் சூடேற்றத்தில் நீர் மற்றும் காற்றின் பங்கைப் பார்த்தோம். அடுத்த பகுதியில் நிலத்தின் பங்கைப் பார்ப்போம்.

பி.கு.: இக்கட்டுரைகளின் ஆராய்ச்சிப் பின்புலம் ஐ.நா.-வின் IPCC என்ற அமைப்பின் விஞ்ஞான வெளியீடுகள் ஆகும். இந்த வெளியீடுகள் யாருக்கு வேண்டுமானாலும் இணையத்தில் கிடைக்கும். அனைத்து நாடுகளின் புவிச் சூடேற்ற விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

Series Navigation<< புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.