தோண்டிக்கு செல்லும் பெருந்து

எனக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. அதனால்தானோ என்னவோ நான் எப்பொழுதும் கொம்புகளாலும் கால்களாலும் தமிழை துவைத்துவிடுவேன்.

என் புலமை கே.ஜி. வகுப்பில் என்னை சேர்த்தபோதே துவங்கிவிட்டது. விஜயதசமியன்று பள்ளியில் சேர்த்து ஒன்றரை மாதத்தில் அரையாண்டுத் தேர்வு. தமிழ் எழுத்துகள் டிக்டேஷனில் அனைத்து எழுத்துகளுக்கும் o o o என்று எழுதியதால் மதிப்பெண்ணும் அவ்வாறே அமைந்தது. அந்தக் கோழி முட்டையை சுருக்கி கோமு என்று எனக்கு பட்டப் பெயர் வைத்தார் என் சித்தப்பா.

இரண்டாம் வகுப்பில் வேறு பள்ளி மாறியபோது நுழைவுத்தேர்வு இருந்தது. நான் உள்ளே எழுதிக்கொண்டிருக்க என் அம்மா வெளியே காத்திருந்தார். மீண்டும் டிக்டேஷன். இம்முறை ‘மோர்.’ நான் சத்தமாக “அம்மா, m o r e தானே?” என்று கேட்க அங்கே சிரிப்பு அடங்கி மீண்டும் தேர்வு தொடர நெடுநேரம் ஆனது. அப்படியும் அந்தப் பள்ளியில் என்னை சேர்த்துக்கொண்டார்கள்!

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் தொண்டிக்கு சுற்றுலா போவதாக அறிவித்தார்கள். நான் அம்மாவிடம் சொல்லவில்லை. அம்மா கண்டிப்பாக சம்மதிக்கமாட்டார். வெளியூரில் வேலை செய்யும் அப்பா வார இறுதியில் வந்தவுடன் அவரை கேட்டேன். நான் எப்போதுமே அப்பாசெல்லம். என்னை ஒரு இளவரசியைபோலத்தான் அவர் நடத்துவார். ஆனால் அவருக்கும் என்னை தனியாக அனுப்ப மனமில்லை. மறுக்கவும் முடியவில்லை.

“சரி, அனுப்பறேன். ஆனா நீ தொண்டின்னு சரியா எழுதிக் காட்டினா போகலாம்.”

அட, இவ்வளவுதானே! வேகமாக ஒரு தாளில் Thondi என்று எழுதிக்காட்டினேன்.

“குட்டி, தமிழில் எழுது” என்று சிரித்தார்.

“நிச்சயமா அனுப்புவியா?”

“நிச்சயமா. ஆனா தப்பா எழுதினா கிடையாது, சரியா?”

“சரி.”

கவனமாக யோசித்து எழுதி, சரிபார்த்து, எடுத்துச்சென்று நீட்டினேன். வாங்கிப் பார்த்தவர் அடக்க முடியாமல் சிரித்தார். அக்கா வந்து எட்டிப் பார்த்து வாசித்தாள் “தோண்டி!”

சிரிப்பினால் அவளுக்கும் அழுகையில் எனக்கும் கண்கள் நிரம்பின. ஆயினும் நான் கொடுத்த வாக்கை மாற்றவில்லை. சுற்றுலா செல்லவில்லை.

ஆறாம் வகுப்பிலிருந்து வள்ளுவனும் பாரதியும் கம்பனும் இளங்கோவும் இன்ன பிறரும் அவர்தம் நற்பயனால் எனக்கு அறிமுகமானார்கள்.

யாகாவாராயினும் நா கக்க காவாக்கால்

சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

சொந்தமிழ் நாடெனும் போதினிலே

இன்பத்தேன் வந்து பயுது காதினிலே.

இந்த இப்பிறவிக்கு இரு மதரை

சிந்தையாலும் தெடேன்.

திங்கள் மலை வெண்குடையான்

சென்னி செங்கேல் அது ஓச்சி.

என் விடைத்தாளை கொடுக்கும்போது தமிழாசிரியை சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் திண்டாடுவார். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி எதையும் விடமாட்டேன். இலக்கண வகுப்பில் வெண்பாவை விளக்கிவிட்டு அனைவரையும் ஒரு வெண்பா எழுதச் சொன்னபோது முதலில் முடித்தது நான்தான். ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் வகுப்பு நடத்துவோம். ஒன்பதாம் வகுப்பில் நான் பாஞ்சாலி சபதம் நடத்தினேன். மதிப்பெண் நிறைய பெறவேண்டி பலர் தமிழுக்கு பதிலாக ஃப்ரென்சும் ஹிந்தியும் படிப்பார்கள். என் தந்தை என்னையும் ஹிந்தி படிக்கச் சொன்னபோது நான் தீர்மானமாக மறுத்துவிட்டேன்.

“கட்டுரையெல்லாம் சொந்தமா எழுதற. மேற்கோளெல்லாம் நல்லா சொல்ற. ஏம்பிள்ள, கொஞ்சம் கவனமா எழுதினா பிழையில்லாம எழுதலாம்ல” என்று தமிழாசிரியை எப்போதும் வருந்துவார். நானும் உண்மையாகவே முயல்வேன். ஆனாலும் கொம்புகளும் கால்களும் எனக்கு வசப்பட்டதேயில்லை.

என் தமிழை பிழைக்க வைக்க வார இதழ்களில் கதை படிக்க அம்மா பழக்கினார். நான், அம்மா, அக்கா மூவரும் தொடர்கதைகளைப் பற்றி விவாதிப்போம்.

பி.வி.ஆர். எழுதிய ஒரு தொடர்கதை முடிந்தபோது நான் திருவாய் மலர்ந்தருளினேன் “கதை நல்லா இருந்தது. ஆனா ஒருத்திக்கு ஏன் கோமாளின்னு பேர் வெச்சார்?”

“நீதாண்டி கோமாளி, அது கோமளி” என்று கூறிய அக்கா “ஐயோ, சித்தப்பா இல்லியே” என்று வருந்தினாள்.

சித்தப்பாவிற்கும் அவளுக்கும் பொழுதுபோக்கே என் தமிழ் விடைத்தாள்களும் சொல்லாட்சியும்தான்.

கல்லூரி இறுதி ஆண்டின்போது டெலிபோன் ஆப்பரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். தேர்வின் ஒரு பகுதியாக அடுத்த அறையிலிருந்து தொலைபேசியில் சொல்லப்படும் தமிழ், ஆங்கில உரைகளை காதால் கேட்டு எழுதவேண்டும். எழுதி முடித்துவிட்டு வழக்கம்போல் ஒருமுறை சரிபார்த்துவிட்டு கொண்டு கொடுத்தேன்.

படித்துப் பார்த்த ஆய்வாளர் “உங்களுக்கு தாய்மொழி தமிழ்தானா?” என்றார்.

“ஆமா சார், ஏன்?”

“மன்னர் லூயின்னு சொன்னா லுயின்னு எழுதியிருக்கீங்க” என்று புன்னகைத்தார்.

ஆஹா, அக்காவிற்கும் சித்தப்பாவிற்கும் நான் என்றென்றும் இனிமையானவளாகவே இருப்பேன் போலும்.

அக்காவின் மகள் என்னுடைய செல்லம். என்னையே சுற்றி வருவாள். அவள் பள்ளி செல்லும் முன்பே தமிழ், ஆங்கிலம் எழுத்துக்களை எழுதப் பழக்கியிருந்தேன். ஒருமுறை அவளுக்கு மிகுந்த சளி பிடித்தபோது டாக்டர் சில நாட்களுக்கு இனிப்புகள் கொடுக்கவேண்டாம் என்று கூறினார். வீட்டிற்கு வந்ததும் அவள் தன்னுடைய போர்டில் எழுதினாள் “பால்கெவா சபிடகுடது.” எங்கள் வீட்டு வம்பன்(என் சித்தப்பாதான்) சொன்னார் “தமிழ் ஓதுவித்து இவளை வளர்த்ததுவும் கோமு காண்!”

எனக்கு திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாளே சித்தப்பா வந்துவிட்டார். அக்கா காத்துக்கொண்டிருந்தாள்.

“சித்தப்பா, ஒனக்கு விஷயம் தெரியுமா? மாப்பிள்ளை தமிழ் எம்.ஏ., எம்.ஃபில்.”

“ஓ!”

இரண்டு பேரும் நினைத்து நினைத்து சிரித்தார்கள்.

“அவ பரீட்சை பேப்பர்லாம் பத்திரமா இருக்கில்ல? மாப்பிள்ளைக்கு அதுதான் கல்யாணப்பரிசு” என்றார் சித்தப்பா.

அப்பா வந்து “டேய் வெட்டிப்பயலே, எனக்கு ஒத்தாசைக்கு வந்தியா இல்ல சின்ன பசங்களோட கூத்தடிக்க வந்தியா?” என்று கேட்கும்வரை அவர்கள் பேச்சும் சிரிப்பும் ஓயவில்லை.

திருமணமாகி வந்த பின்னர் ஒருமுறை மாமியார் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு ஊருக்கு சென்றிருந்தார். சில மளிகை பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. கணவரிடம் கூறியபோது “லிஸ்ட் எழுதிக்குடு. சாயங்காலம் வரும்போது வாங்கிட்டு வரேன்” என்றார். நானும் அப்பாவியாக எழுதிக்கொடுத்தேன்.

மாலை வந்தவர் நேராக தொலைபேசியை கையில் எடுத்தார். என் அக்காவை அழைத்தார்.

“தோண்டியோட இன்றைய இன்சொல் என்ன தெரியுமா? பசிப்பருப்பு!”

யூ டூ ஃப்ரூடஸ்!

கல்கி முதல் ஜெயமோகன் வரை என் வாசிப்பு விரிந்திருந்தாலும் நான் வீட்டில் இன்றும் தோண்டிதான்.

என் மகன் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு தமிழ் உள்பட பாடம் சொல்லித்தருவது நான்தான்.

காலை முதலே நான் பயங்கர பரபரப்புடன் இருந்தேன். வீட்டு வேலைகளையெல்லாம் விரைவாக முடித்துவிட்டு என் மகனை இழுத்துக்கொண்டு அறைக்கதவை மூடிவிட்டு அவன் புத்தகங்களுடன் அமர்ந்தேன். நாளை தமிழ்த் தேர்வு. உயிர்மெய் எழுத்துக்களுக்கான புதிய வார்த்தைகள்.

பே-பேருந்து.

“வாசிடா.”

“பெருந்து.”

“டேய், ஒழுங்கா பாத்து வாசி.”

“பெருந்து தானேமா போட்டிருக்கு!”

“ஒவ்வொரு எழுத்தா வாசி.”

“பே ரு ந் து.”

“குட். இப்போ சேத்து சொல்லு.”

“பெருந்து.”

“இல்லடா, மொதல் எழுத்து என்ன?”

“பே.”

“அப்போ அந்த வார்த்தைய எப்படி சொல்லுவ?”

“பெருந்து.”

ஆத்திரத்தில் அடிக்க கையை ஓங்கியவள் நிறுத்திக்கொண்டேன்.

தோண்டிக்கு பிறந்தது பேருந்து ஆகுமா!

4 Replies to “தோண்டிக்கு செல்லும் பெருந்து”

  1. உங்கள் முதல் கதையின் எந்த சாயலும் , காத்திரமும் இல்லாமல் , நேர் எதிராக அருமையான குழந்தை தன்மையுடனான ஒரு கதை, மேலும் பல புதிய முயற்சிக்கு வாழ்த்துக்களும் அன்பும்.

    THANKS
    SOUNDAR.G

  2. சில நேரங்களில் நாம் நேசிக்கும் மொழியை பேசும்போதும், எழுதும் போதும், சரியாக உச்சரிக்கவும்,எழுதவும் முடியவில்லை என்றாலும், நாம் காதலிப்பது எதுவோ அது தமிழை மட்டும்தான். அதற்கு சான்று இந்த கதை அருமை.

  3. என்னதான் தோண்டியாகவோ பெருந்துவாகவோ இருந்து விட்டுப்போகட்டும், தமிழ் மீது அளவிலா காதல் என்றார்களே அதுதான் கதையின் சாராம்சம். தாய்மொழியை மறந்து பிரெஞ்சு, ரஷ்யன் என்றெல்லாம் அலைகிறார்களே, அவர்களுக்கு ஒரு அற்புதமான தகவல் இந்த அருமைக்கதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.