ஜெயந்தி டீச்சர்

‘க. செல்வன். VIII – ஆ’

புதுசா கொடுத்த தமிழ் புஸ்தகத்தில் ஜெயந்தி பேர் எழுதிக் கொடுத்தாள்.  ஜெயந்தி எழுத்து சூப்பரா இருக்கும். செல்வன் மட்டுமில்லை. அந்த கிளாஸ்ல நெறைய பிள்ளெங்க இப்படி எழுதி வாங்குவாங்க.  ”ஜெயந்தி சின்ன ஸ்கூல்லயே மைப் பேனால எழுதுனவ. அதான் எழுத்து இவ்ளொ அழகா வருது,” தேன்மொழி டீச்சர் அடிக்கடி சொல்வார். 

ராசாத்தி டீச்சர் ஒரு முறை, ஜெயந்தி நோட்டை வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் மகளிடம் காட்டி அவளை நாலு சாத்து சாத்தியிருக்கிறார். ‘பீஸ்கட்டி சேத்து என்னா ப்ரோசனம்.?’ என டியூசன் பிள்ளைகளை வைத்துக்கொண்டே செம டோஸ். 

ஜெயந்திக்குத்தான் கிளாஸ் டீச்சர் போர்டு இன்சார்ஜ் கொடுத்திருந்தார். அதாவது சார்கள் இல்லாத நேரத்தில் போர்டில் யாரும் எதையும் கிறுக்காமல் பாத்துக்கனும்; காலையில் வந்ததுமே தேதி மாத்தனும்; பதிவு, வருகை எத்தனை என எழுதி வைக்கனும்; போர்டில் வலது மூலையில் கட்டம் போட்டு அதைச் சுற்றிப் பூ வரஞ்சு வச்சிக்கலாம். அப்படி பூப்பூவா வரையிரது ஜெயந்தி இஸ்டம் தான். ஒவ்வொரு திங்கக்கிழமையும் கலர் சாக்பீஸ் எடுத்து வந்து வாட்டர் கேன் மூடியில் தண்ணீர் ஊற்றி சாக்பீஸ் தூண்டுகளை நனைத்தெடுத்து எழுதுவாள். எழுதிப் போகப் போக அது காய்ந்து பளிச்சென அழகு காட்டும். அச்சு மாதிரி அழகான வளைகோடுகளை வரைந்து தள்ளுவாள்.  மத்த கிளாஸ்சை விட எயித் பி’ தான் போர்டில் இப்படி பூப்போட்டு வைப்பதில் சூப்பரா செஞ்சு வச்சிருக்கும். புது ஹெச்சம் வந்த முதல் வாரத்திலேயே ப்ரேயரில் இதைச் சொல்லிப் பாராட்டினார். ஜெயந்தி பேர் தெரியாததால் “எயித் பி’ கிளாஸ் லீடர்” என்று பேசினார். ஸ்கூலே கைதட்டியது. எயித் பி’ பசங்க ஓங்கி ஓங்கி தட்டுனாங்கெ. போதும் என்பது போல் பீட்டி சார் கை காட்டியதும் ஒலி அடங்கியது. இதை லஞ்ச் வரை ஜெயந்தி குரூப்ஸ் பேசிக் கொண்டு திரிந்ததுகள். டீச்சர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஜெயந்தி போன்ற பிள்ளைகளைச் சுற்றி எப்போதும் ஒரு குரூப் உருவாகியிருக்கும். 

போர்டின் உச்சியில்  எதாவது பொன்மொழி எழுதி வைப்பாள். வலது பக்கத்தில், வகுப்பை எந்த பெஞ்ச் கூட்ட வேண்டும் என்பதை ‘இன்று’ என பெரிதாக எழுதி கீழே ஒரு வட்டம் போட்டு வைத்திருப்பாள். வட்டத்திற்குள் அந்த பெஞ்ச்சின் நம்பரை தினசரி மாற்றி  எழுதுவாள். அதற்கு கீழ் ‘வீட்டுப் பாடம்’ என தலைப்பிட்டு கீழே அலைபோல கோடு போட்டிருப்பாள்.  அந்த வீட்டுப் பாடம் என்னான்றதை மட்டும் சாயந்தரம் மாத்தினால் போதும். எட்டாம் பீரியட் முடிந்ததும் எல்லாரும் நின்று அதைப்பார்த்து எழுதிட்டுப் போவார்கள். காலையிலிருந்து எந்தெந்த சார்? என்னென்ன சொன்னாங்க? சரியா ஞாபகம் வச்சி எழுதியிருப்பாள். சிவாஜி சார் மட்டும் சில நேரம் இவளை எழுப்பி எல்லாரையும் கைதட்டச் சொல்லி மகிழ்விப்பார்.   மத்த கிளாஸ் பிள்ளைகள் லஞ்ச் அவரில் கெஞ்சி கெஞ்சி ஜெயந்தியை போர்டில் பூ வரைய கூட்டிப் போகுங்கள்.

செல்வன் தான் ஜெயந்திக்கு பெஸ்ட் ஃபிரண்ட். ஒரு முறை அவன் சொல்லி நைன்த் சி’க்கு போர்டில் வரையப் போனாள். அந்த கிளாஸ் டீச்சர் வந்து பாத்திட்டு, ”வார வாரம் இங்கயும் வந்து அழிச்சிட்டு மாத்திடனும் சரியா?” உத்தரவு போட்டார். டீச்சர் சொல்லை எப்படித் தட்ட முடியும்? 

இந்த வகையில் ஜெயந்தி ஸ்கூலில் ரொம்ப பிஸியான ஆள்தான். போர்டு விசயத்தில் மட்டுமில்லை.  காப்பரிச்சை, அரப்பரிச்சை, மிட்டெர்ம் டெஸ்ட் என எந்த மார்க் லிஸ்ட்; ரேங்க் கார்டு எழுதனும்னாலும் சரி எயித் பி’க்கு ஜெயந்தி தான்.  கீழே கையெழுத்து மட்டுந்தான் டீச்சர் போடுவாங்க. சில நேரம் பாராட்டும் சாக்கில் வேற கிளாஸ் சாரும் ஜெயந்தியின் உதவியைக் கோருவதுண்டு. அதில் செந்தில் சார் கெட்டிக்காரர். அவர் தான் இவள் ஆறாவது வந்த புதிதில் சரியான ஆளென கண்டுபிடித்து பயன்படுத்தியவர். சில நுட்பங்களையும் கற்றுக் கொடுத்துவிட்டார். மார்க் லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்கையில்  ஹெச்சம் வராண்டாவில் நடந்து வந்தால் மூடி வைத்து விட வேண்டுமென சரியாக பயிற்சி கொடுத்திருந்தார். ஆறாங்கிளாசிலேயே ‘இந்த வகை’ டீச்சர் ட்ரெயினிங்கை முடித்துவிட்டாள் ஜெயந்தி.

ஜெயந்தி ஒரு வகையில் டீச்சர்; ஃபஸ்ட் ரேங்க் காரி; நிரந்தர கிளாஸ் லீடர்; ப்ரேயரில் செய்தி வாசிப்பவள்; வினாடி வினா, கோலப் போட்டி, ஓவியப் போட்டிகளில் மிளிர்பவள்; ஸ்டாப் ரூம் பிரபலம் என ஸ்கூலில் முக்கியப் புள்ளி.

இப்படி விஐபியாக இருப்பதாலேயே வயசுக்கு வந்து ஒரு வாரம் லீவ் போட்டது ஸ்கூல்பூராம் தெரிந்து விட்டிருந்தது.

புது வளையல், பவுன்ல தோடு, திருத்திய புருவம், மூஞ்சில ரோஸ் பவுடரோட ரொம்ப அழகாக வந்திருந்தாள். ஸ்கூல் யூனிபார்மிலும் விசேச நாள் பொலிவு அவளிடம் இருந்தது. 

“இனி இப்படி மினிக்கிட்டு வரக்கூடாது.” ராசாத்தி டீச்சர் சொன்னது சுருக்கென்று இருந்தது. இதற்கு முன் இப்படி பேச்சு வாங்கி பழக்கமில்லை. பீட்டி சாரோ, பன்னெண்டாப்பு டீச்சர்களோ இப்படி சொல்லியிருந்தால் கூட அது பாதித்திருக்காது. அவர்களுக்கு ஜெயந்தி அருமை தெரியாது. ராசாத்தி டீச்சர் இப்படி சொல்லிட்டாங்களே! கிளாஸ் பிள்ளைகளுக்கும் அது ஆர்ச்சர்யமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. ஒருவாட்டி வீட்டுப்பாடம் எழுதாமல்  வந்தப்ப கூட ஜெயந்தியை மட்டும்  விட்டுவிட்டார். ஆனா இந்தமுறை… ராசாத்தி டீச்சர் அப்படி சொல்லும் போது முகத்தில் அவ்வளவு சிடுசிடுப்பு.  இவளுக்கு ஆறுதல் சொல்வதாகவே ஜெயந்தி குரூப்ஸ்க்கு அன்றைய நாள் கழிந்தது. இந்த சின்ன காயத்தைச் சுமக்க முடியாமல் ஜெயந்தி தவித்தாள். நாள் பூராம் உம்மென்றே திரிந்தாள். பீட்டி பீரியடில் கூட தனியே போய் மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள். சாந்தரம் வீட்டுக்குப் போகும் போது சொணங்கிப் போயிருந்தாள். வீட்டுக்குப் போன சோருக்கு காய்ச்சல் கண்டிருந்தது. இரவு சாப்பிடவே முடியவில்லை. ராசாத்தி டீச்சர் முகம் அதே சிடுசிடுப்போடு முன்னால் வந்து நின்று வருத்தியது. போர்வைக்குள் குலுங்கி குலுங்கி அழுதாள். மெடிக்கலில் சொல்லி அம்மா மாத்திரை வாங்கி வந்திருந்தாள். தூங்கி எழுந்ததும் மனசும், ஒடம்பும் தேவலாம் என்றிருந்தது.

 ”ஸ்கூல்க்கொன்னும் போவேணாம். லீவ் போடுறீ”

”ம்ம்கூம் போனும்”

“அதான என்னெக்கு காச்சன்னு  லீவ் போட்ட?”

“அம்மா..”

“ம்ம்”

“இந்த பவுன் தோடு வேணாம்மா..”

“ஏன்..? சடங்காயி ரெண்டு நாள்ல எந்தம்பி போட்டத கழட்றீயா? கொன்னே புடுவேன். சும்மா போட்றீ..”

“ஸ்கூல்ல திட்றாங்க மா..”

“ஏன் அவளுக போட்டு வர்லாமா?” 

“ம்மா.. ஏம்மா….!!”

கடைசியில் அப்பா தயவால் கழட்ட முடிந்தது. 

மறுநாள்  வரும் போது தோடு மட்டும் ரப்பர் தோடாக மாறியிருந்தது.  விசேசத்திற்காக  திருத்திய  புருவத்தை சட்டென முளைக்க வைக்க முடியாதில்லையா? தலைக்கு எண்ணெய் தேய்த்து படிய வாரிக் கொண்டாள். சித்தப்பா எடுத்துக் கொடுத்த புது யூனிபார்ம் ரெண்டு இருந்தும் பழசையே எடுத்துப் போட்டுக் கொண்டாள். பவுடர் பூசாமல் எண்ணெய் வடிஞ்சு போக பிடிக்கவில்லை. லேசாய் பட்டும் படாமல் போட்டுக் கொண்டாள். 

போர்டில் தேதி மாத்தும் போது, ‘உன் புருவம் அழகா இருக்குடி’ என பாத்திமா சொன்னதும் கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. நேற்று சொல்லும் போது இப்படியில்லை.  

வீட்டிலிருந்த ஒரு வாரமும் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் வில் போல வளைந்த புருவத்தை பார்த்துப் பார்த்துப் பூரித்தவள். இப்போது அதே புருவம் மிரட்டியது. விரலில் தடவிப்பார்த்துக் கொண்டாள். மயிர்கள் முள்ளாக குத்தும் படி சிறுக முளைத்திருந்தன. ராசாத்தி டீச்சர் பீரியட் இன்னும் வரவில்லை. டீச்சர் இவள் முகத்தை பார்த்து எந்த ரியாக்சனுமில்லாமல் சாதாரணமாக கடக்கனும்!. அந்த  நொடிகளை நோக்கி மனசு படபடத்துக் கொண்டே இருந்தது.  அவளுக்கென்ன கெட்ட நேரமோ இன்டர்வெல் பீரியடில்  பக்கத்துக் கிளாஸ் வாணியும்  ‘புருவம் நல்லாருக்குடீ’ன்னு சொல்ல,  பயம் எகிறியது. மூணாவது பீரியட் ராசாத்தி டீச்சர் நுழைந்ததும் ஜெயந்தியை அழைத்து கப்போர்டிலிருந்த கட்டுரை நோட்டுகளை  எல்லாருக்கும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். மீத நோட்டை கொண்டு வந்து மேஜையில் வைக்கையில் முகத்தை நேராக பார்த்த டீச்சரிடம் எந்த கோவமும் இல்லை. சொல்லப் போனால் சிரித்த முகத்தோடு அழகாக இருந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்கு ஊத்திய எடுப்போடு  டீச்சர் பளிச்சென தெரிந்தார். 

அதற்காக ‘அதை மறந்துட்டாங்க’ என  அவளால் விட்டுவிடவும் முடியாது. அதிரப்பதிந்த  அச்சிடுமுகம் எப்போது வேணுமானாலும் வெளிப்படலாம் எனத் தோணியது. 

லஞ்ச் அவரில் செல்வனும் புருவத்தை பற்றி அப்படி சொல்லிப் போனது அவளை என்னமோ செய்தது. “புருவத்த என்னாம்மே பண்ண? சூப்பராருக்கு!”

அம்மா பாடம் போல சொல்லி அனுப்பியதை இணைத்து முகம் சிவந்து கொண்டாள். வீட்டில் அம்மா சொன்னதையும், பள்ளியில் டீச்சர் சொன்னதையும் சின்னதாக மீறிப் பார்ப்பதில் அலாதி இன்பமிருந்தது. புருவத்தை விரலால் தொட்டு பார்த்துக் கொண்டாள். 


ஜெயந்திக்கு நேர்ந்தது  நல்லதோ? கெட்டதோ?  மனசுக்குள் அதை திரும்பத் திரும்ப ஓட்டிப்பார்த்து அதே உணர்வில் கிடந்து புரள்வது ரொம்ப சின்ன வயதிலிருந்தே பழக்கமாக இருந்தது.  ராசாத்தி டீச்சரின் கணநேர சிடுமுகத்தை அவளால் நினைவிலிருந்து அவிழ்க்கவே முடியவேயில்லை. பசங்களோடு பழகுவதில் புதுசாய் வந்திருக்கும் உணர்வுக்குழப்பம் மேலும் அதன்மீது படிந்து பயமாக மாறி சாமத்தில் அச்சுறுத்தும் கனவுகளாக வந்து தூக்கத்தைக் கெடுத்தது. அம்மாவிடம் சொன்னால் வையும் என்பதால் போர்வைக்குள்ளாகவே நனைந்து கொண்டாள். வேறு வகுப்புக்கு போர்டில் எழுத போவதையெல்லாம் குறைத்திருந்தாள். நாலுகோடு நோட்டில் இங்கிலீஸ் சார் இந்த முறை குட் போடாதது வருத்தமாக இருந்தது. ப்ரேயரில் செய்தி வாசிக்கும் போது எப்போதுமில்லாமல் ரெண்டு முறை திக்கினாள். கூட நிற்கும் பிள்ளைகள் திரும்பிப் பார்த்துச் சிரித்தது இவளுக்கு அசிங்கமாக இருந்தது. எண்ணெய் வடியும் முகத்தோடு ஜெயந்தி உம்மென்று ஆகிவிட்டதை கிளாஸ் பிள்ளைகள் பரிதாபமாக பார்த்ததுகள். ஜெயந்தி முன்பு போலில்லை என்பது அவளுக்கே புரிந்தது. பீட்டிபீரியடில் மரத்தடியில் தனியா உக்கார்ந்து கொள்வது வழக்கமாகியிருந்தது.  ஒரு திங்கக்கிழமை காலை போர்டில் ஈரச் சாக்பீசில் எழுதியவை நினைத்தபடி வராததால் அழித்து அழித்து எழுதினாள்.  காய்ந்தபின் எழுத்துகளுக்கு ஊடாக  வெள்ளை வெள்ளைத் திட்டுக்களாக அழித்த தடம்  தெரிந்தது.  எட்டு பீரியடும் அவள் எழுத்தை அழகு குறைந்ததாக பிளாக்போர்டு காட்டிக் கொண்டேயிருந்தது. சிறுவர் கதைகளில் வருவதைப் போல அவளிடம் இருந்த பவர் போய்விட்டதாக தன் உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டாள்.  முளைத்தும் முளைக்காத முந்தைய புருவம் பார்க்கவே ஒருமாதிரி இருந்தது. விரலில் தடவிப் பார்த்துக் கொண்டாள். 

அதுவொரு சனிக்கிழமை. சிவாஜி சார் ஸ்பெசல் கிளாஸ் வைத்திருந்தார்.  பிள்ளைகள் எல்லாம் கலர் ட்ரஸில் வந்திருந்ததுகள்.  மதியம் கிளாஸ் முடியிற நேரம் பார்த்து புதுஹெச்சம் உள்ளே நுழைந்தார்.  செம ஜாலியாக பேசினார். ஒரே நாளில் அந்த கிளாசுக்கே புது ஹெச்சம்மை பிடித்து விட்டிருந்தது. பேச்சின் ஊடாக ஜெயந்தியை பார்த்து, ”என்ன ஜெயந்தி டீச்சர், நீங்க என்ன சொல்றீங்க?” என கிண்டலாகச் சொன்னதை மற்றவர்கள் அந்நேர ஜாலியில் கடந்து விட்டார்கள். ஜெயந்திக்கு அது அப்படியில்லை. பூரித்துப் போனாள். சின்ன ஸ்கூலில் எல்லாரும் எழுந்து நின்று ஆம்பிசன் சொல்லும் போது இவள் ‘டீச்சராகனும்!’ எனச் சொன்னது ஞாபகம் வந்தது. டீச்சர் விளையாட்டில் நிறையவாட்டி டீச்சர் பாத்திரத்தில் நடித்து விளையாடியதெல்லாம் காட்சிகளாக மனசுக்குள் ஓடின. அவளுக்கு பிடித்த அன்னக்கிளி டீச்சரின் சாயலில் மூக்கு கண்ணாடி அணிந்து, காட்டன் புடவை உடுத்தி,  சாக்பீஸ் சகிதமாய் ஒரு சித்திரத்தை மனதில் வரைந்து வைத்துக் கொண்டாள். அக்கணம் ராசாத்தி டீச்சரின் சிடுமுகம் வெளியேற்றி புடவையுடுத்திய ஜெயந்தி டீச்சர் முகம் அமர்ந்து கொண்டது. 

இக்குதூகல உணர்வை யாரிடமும் பகிர்ந்து கொண்டாடக் கூச்சப்பட்ட ஜெயந்திக்கு, ஒருநாள் லஞ்ச் ரவுண்டில் மாரிச்செல்வி இதை சொல்லிக் காட்டியது ரொம்ப சந்தோசமாக இருந்தது. எல்லாரும் புதுஹெச்சம் சொன்னது போல ”ஜெயந்தி டீச்சர்ர்ர்…!” என கோரஸாக கிண்டலடித்ததுகள்.  

வகுப்பில் இவளுக்கு முன்னால் வயதுக்கு வந்த ஒரே மாணவி மாரிச்செல்வி. சின்ன ஸ்கூலில் இருந்து ஜெயந்தி குரூப்சில் இடம் பெறுபவள். ஓங்கி வளர்ந்த மேனி. படிப்பில் மத்துவம். கிராமர், கணக்குச் சூத்திரம் என அடிப்படைகளை இவளுக்கு புரியும் படி குரூப்பில் சொல்லித்தந்தவள் ஜெயந்திதான். சாயந்தரம் ஸ்கூல் விட்டதும் ஸ்கூல் பேக்கை எடுத்துக் கொண்டு ஜெயந்தி வீட்டுக்கு நடந்துவிடுவாள். சேர்ந்து தான் வீட்டுப்பாடம் செய்வது.

“நிசமாவே நீ எனக்கு டீச்சர் தான்ப்பா!” என மாரி சொல்லியது பிடித்திருந்தது.  இருவரும் தெருவில் நடக்கும் போதே  டீச்சர் விளையாட்டை மீண்டும் விளையாடிக் கொண்டார்கள்.  டீச்சராக மாறிய ஜெயந்தி மாரியிடம்  நிறைய பேசினாள்.  பேச்சு வளர்ந்து அந்த’  நாட்கள் பற்றிப் போனது. வீட்டுப்பாடம் எழுதும் போது டீச்சர் ரோல் ஒரே முறை மாரிக்கு போனது. மாரி தன் மாதாந்திரப் பிரச்சனைகளைப் பேசினாள்.  கிளாசிலிருந்து பேக் எடுத்துக் கொண்டு நாப்கின் வாங்கப் போகும் போது மாரியின் டீச்சர் ரோல் தொடர்ந்தது. நைன்த், டென்த் அக்காக்கள் வழி அறிந்தவைகளைப் பகிர்ந்து கொண்டாள். மாரி வழியாக பொம்பளப் பிள்ளைகள் படும் கஷ்டங்களை நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது; திகைப்பாகவும், பயமாகவும் இருந்தது. அப்பருவத்திற்கான சில சுதாரிப்புகளையும் ஜெயந்திக்கு கற்றுக் கொடுத்தாள்.

”ம்ம்.. நீயும் டீச்சர் தான்டீ” என்றாள் ஜெயந்தி.

”போடி லூசு”

”என்னடி ஒரு டீச்சர பாத்து லூசுன்ற?”

”சொல்ல முடியுது சொல்றேன்”

ரெண்டு பேரும் அன்னார்ந்து கெக்கெக்கென சிரித்துக் கொண்டதுகள். சிரித்து அடங்கிய ஜெயந்தி, மாரி சொன்னதையெல்லாம் மீண்டும் அசைபோட்டு,

“உண்மைலயே கேள்ஸ் பாவம்டீ” என்றாள்.

அதில் மாரி  சொன்னது போலவே ஸ்கூலில் இரண்டாவதாய் ஒரு சம்பவம் நடந்தது. எயித் ’பி’ வசந்தி ஏஜ் அட்டன் பண்ணிட்டாள். நல்ல வேளையாக அது இன்டர்வல் பிரியட். வழக்கம் போல டீச்சருக்கு தகவல் போனது. ஜெயந்திதான் ரிஜிஸ்டர் எடுத்துவந்திருந்தாள்.  அதிலிருந்த நம்பரெடுத்து சொல்லச் சொல்ல டீச்சர் டயல் செய்தார். அப்புறம் ஒரு பன்னெண்டாப்பு அக்கா  பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூம் ஓடினாள். 

மதியம் சிக்ஸ்த் பீரியட்.  தேன்மொழி டீச்சர் ஸ்டாப் ரூம் வரச்சொல்லி ஜெயந்தி போயிருந்தாள். சிசிஇ ரிஜிஸ்டரில் கிரேடு போடனும்.’ டீச்சர் ச்சேருக்கு பக்கத்திலேயே கால்களை மடித்து தரையில் பரசலாக உக்கார்ந்தபடி  கவிழ்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். 

வராண்டாவில் ஹெச்சம் குரல்.  நேராக இங்கே தான் வருகிறார். அந்நேரம் உள்ளே இருந்த நாலு டீச்சர்ஸ்ம் எழுந்து நின்றார்கள். ஜெயந்தி தலையை மேலும் கவிழ்த்திக் கொண்டாள்.  எதிரேயிருந்த மரபெஞ்சும் அதன் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரெக்கார்டு நோட்டுகளும் இவளை முழுதும் மறைத்திருந்தன. 

வராண்டாவில் வரும் போதே சத்தமாக பேசிக் கொண்டே வந்தவர். நுழைந்ததும் மேலும் உரத்துப் பேசினார். ஏதோ கோவத்தில் இருக்கிறாரெனவும், திட்டுகிறார் எனவும் மட்டும் புரிந்தது. அவர் பிரயோகிக்கும் ஆங்கிலம் கலந்த தமிழ் இவளுக்கு இட்டு நிரப்பிக் கொள்ளும் படி இருந்தது. அப்புறம்மேல் வசந்தி மேட்டரைத் தான் பேசுகிறார் என புரிந்தது. 

“நம்மளால பத்து நிமிசம் அங்க நிக்க முடியுமா டீச்சர்?  எல்லாம் சரிபண்ணி,  இங்க ரூமுக்கு கூட்டி வர முடியலைண்ணாதான் இன்னும் வேகமா ஸ்டெப் எடுத்திருக்கனும். சரி அப்டி ஆயிடுச்சுன்னா.. இன்னொரு ஸ்டூடெண்ட ஏன் வீட்டுக்கு அனுப்புறீங்க. என்ன பழக்கம் இது? 

டீச்சர்கள் வாயடைத்து நின்றிருந்தார்கள். 

ஜெயந்திக்கு, மாரிச்செல்வி சொன்ன ட்ரஸ் மேட்டர் நினைவுக்கு வந்தது. கவனமாய்க் காது கொடுத்தாள். 

“பேரண்ட்ஸ கான்டெக்ட் பண்ண முடிலைன்னா? ஒரு ஆட்டோ பிடிச்சு ரெண்டு டீச்சர் கூட போய் வீட்ல விட்டு வந்தாதான் என்ன? வருசதுக்கு நாலஞ்சு பேருக்கு இப்டி நடக்குமா?  அதுல ஒன்ரெண்டு கேஸ்தான் இப்டி ஆகும். பேரண்டல்கேர் எல்லாப் பிள்ளைங்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும்ன்னு எதிர்பாக்க கூடாது.  அப்டி கூட போயி விட்டு வந்திங்கன்னா அந்த குழந்தை மனசுல வாழ்நா முழுக்க நீங்க இருப்பிங்க… இல்ல வேறேதும் பிரச்சன இருந்தா சொல்லுங்க. தீட்டுக்கணக்கு ஏதும் பாக்குறீங்களா? இல்ல கேஸ்ட் பிரச்சனையா?”

”சார்..சார்..சார்..” என கோரஸ்சாக நாலு டீச்சர்ஸ்ம் மறுக்க, அறையில் மனநிலை கலவரமானது. ஜெயந்தி மேலும் கவிழ்ந்து தரையில் படுத்தேவிட்டாள்.

ஹேண்டில் பண்ண ரெண்டு டீச்சர்ஸ் பேரை  மாறி மாறி சொல்லத் தொடங்கினார்கள். ஹெச்சம் குரல் இறக்கி கோரிக்கை போல பேசத் தொடங்கியிருந்தார். ”. கொஞ்சம் யோச்சு பாருங்க. நம்ம பிள்ளைகன்னா இப்டி விட்ருவமா? இனி பேரண்ட்ஸ காண்டெக்ட் பண்ண முடியலைனா இமீடியட்டா என்ட்ட சொல்லிடுங்க. ஆட்டோ அரேன்ஜ் பண்றேன்.  ரெண்டு லேடி டீச்சர்ஸ் கூடவே போய் வீட்ல விட்டு வரணும். நெலமைக்குத் தக்கன ஜென்ஸ்டாப் கூப்டுக்கலாம்.”

கொஞ்சம் எக்கி, அடுக்கியிருந்த ரெக்கார்டு நோட் வரிசைகளுக்கு இடையிலிருந்த கேப்பில் அவரைப் பார்த்தாள். மறைந்திருக்கும் பயத்திலும் மனசுக்குள் கைதட்டிக் கொண்டாள். 

டீச்சர்கள் சாரி சொல்லி,  குறிப்பிட்ட ரெண்டு டீச்சர்களின் அலட்சியத்தை ஒப்புக் கொண்டதற்கு  பிறகே அங்கிருந்து கிளம்பினார். அறை குளிர்நிலைக்கு வந்த பிறகு பதுங்கியிருந்தவள் மெல்ல வெளிவந்தாள். 

கையிலிருந்த குச்சியை சிலம்பம் போல சுத்திக் கொண்டே வரண்டாவில் நடந்து போய் கொண்டிருந்தார். அவர் அப்படிச் சுற்றுவது ஜெயந்திக்குப் பிடித்திருந்தது. ஏதோவொன்றை யோசித்து எழுந்த மஹா மிஸ் ஓட்டமும், நடையுமாக போய் அவரிடம் ஏதோ பேசினார். அவரும் ஆமோதிப்பது போல் தலையசைத்து  விட்டு நடந்து போனார். 

ஜெயந்தியும், மாரியும் சாய்ந்தரம் ஸ்கூல் விட்டு போகும் போது கேட்டில் நின்றிருந்த ஹெச்சம் சாருக்கு  தேங்க்யூ சொல்வதற்காகவே அவர் நிற்கும் பக்கமாக மாறி நடந்து போனதுகள். அவர் ஜெயந்தியைப் பார்த்ததும், “என்ன ஜெயந்தி டீச்சர். அடுத்த வாரம் குடியரசு தினத்துக்கு ரெடியாய்க்கங்க. கோலப் போட்டி இருக்கு. நல்ல நல்ல ப்ரைஸ் அரேன்ஜ் பண்ணிருக்கேன். நோட்டீஸ் போர்ட்ல வொர்க் இருக்கும். சிவாஜி சாருக்கு கெல்ப் பண்ண ப்ளஸ் டூ ராணியையும் , ஒன்னையும் தான் சொல்லிருக்கேன். அலங்காரம் பண்ணிடனும்” “ஒகே சார். பண்ணிடலாம் சார். தேங்க்யூ சார்” இப்படி பொறுப்பு கொடுத்தது ஜெயந்திக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. 

போர்வைக்குள் ‘ஜெயந்தி டீச்சர்’ கனவு மிதந்தது. அடுக்கி வைத்த ரெக்கார்டு நோட்டின் இடைவெளி பெரிதாகி புகைமூட்டத்தோடு காட்சிகள் விரிந்தன.  புது ஹெச்சம் சொன்னது போல ஏஜ் அட்டன் பண்ண ஒரு மாணவியை ஆட்டோல கூட்டிட்டு போகிறாள் ஜெயந்தி டீச்சர்.  பயந்த சுபாவத்தோடு கிட்ட உக்கார்ந்திருந்த அம்மாணவியை, ஒண்ணுல்ல’ என்பது போல அணைத்துத் தேற்றுகிறாள். மாணவி வீட்டில் இவளுக்கு ராஜ மரியாதை. பெருமிதத்தோடு  திரும்புகையில் ஆட்டோ லேசாய் குலுங்க சைடுமிரரில்  புடவை கட்டிய ஜெயந்தி டீச்சரின் சிரித்த முகம்  தெரிகிறது. வில் போல வளைந்த புருவம் பார்க்க அழகாக இருந்தது. தூக்கத்தில் அனிச்சையாக அவள் விரல்கள் புருவத்தை தடவிப் பார்த்துக் கொண்டன.

****.

One Reply to “ஜெயந்தி டீச்சர்”

  1. எனது பள்ளிப்பருவ நினைவுகளைக் கிளப்பி விட்டது இக்கதை; இரு பாலர் பள்ளியான எங்கள் வகுப்பில் 7, 8 வகுப்புகளில் பல தோழிகள் இப்படி வீட்டுக்கு உடனே பெண் ஆசிரியருடன் அனுப்பி வைக்கப் படும்போது பசங்களாகிய நாங்கள் குடுகுடுவென முன்னால் அவர்கள் வீட்டுக்கு ஓடிப் போய் விசயத்தை அரைகுறையாய் உளறிக் கொட்டியது இன்று நினைத்தால் கூட ஒரு அசட்டு சிரிப்புதான் வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.