[பேய் அரசு செய்தால்…. கட்டுரைத் தொடரின் பாகம் -5]
பட்டணத்தில் பூதம் என்றொரு பழைய படத்தை சமீபத்தில் சின்னத் திரையில் பார்த்தேன். அதில் ஒரு போட்டி- உலகத்தில் சிறந்தது எது என்று போட்டியாளர்கள் பாடல் மூலம் சொல்வார்கள். ஒருவர் வட்டி தான் உலகில் சிறந்தது எனப் பாடுவார். உறங்கும் பணம், மற்றொருவர் உழைப்பில், உங்களுக்கு வட்டியாக வருவது சிறந்ததுதான். உறங்கும் உங்கள் பணமும் ஏதோ ஒரு வகையில் உங்களின் உழைப்பிலிருந்து / பிறப்பிலிருந்து வந்திருக்கக் கூடும்.

தொழில் நுட்பத் தொடரேடு தெரியும், அதென்ன ப்ளாக்ஃபை?
‘ப்ளாக்ஃபை (Blockfi)- இணைய வங்கி- தொடர் சங்கிலி தொழில் நுட்பக் கட்டமைப்பு- உங்கள் இணைய வலைத்தள வணிகம் மற்றும் வங்கி சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் உதவுகிறது. இந்த இணைய வங்கியை ஒரு இணைப்புப் பாலமெனச் சொல்லலாம். இது ஐக்கிய அமெரிக்க நாட்டின் வர்த்தகப் பங்குச் சந்தை அமைப்பு மற்றும் அந்த நாட்டின் மாநில வர்த்தகப் பரிமாற்ற சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல் புரிந்தாலும், எஃப் டி ஐ சி (FDIC- Federal Deposit Insurance Corporation) வழங்கும் $2,50,000 காப்பீடோ, எஸ் ஐ பி சி(SIPC- Securities Investors Protection Corporation) வழங்கும் தரகுப் பணக் காப்பீடோ இதற்குக் கிடையாது. இதன் பாதுகாவலரான (Custodian) ஜெமினி (Gemini) என்ற நிறுவனம் ந்யூயார்க் நிதி சேவையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இது இணைய நாணயங்களின் வங்கி. இது இலக்கமுறை நாணயங்கள் (பிட் காயின், எதீரியம், லிங்க்- Bit coin, Ethereum, Link போன்ற தமக்கென மதிப்பு நிலையாக இல்லாது, சந்தையில் பெறும் மதிப்பீட்டை நம்பும் நாணயங்கள்), நிலையான நாணயங்கள் [Stable coins- அமெரிக்க டாலரைப் போன்ற உலக ஏற்புடைய பணத்தோடு நிலைத்த மதிப்புடன் இணைக்கப்பட்ட இலக்கப் பணம் (டிஜிடல் காயின்)] மற்றும் அமெரிக்க டாலர் போன்றவற்றில் சேமிப்புகளைப் பெறுகிறது, அதற்கு வட்டி வழங்குகிறது, கடன் வழங்குகிறது, வணிகக் கொடுக்கல் வாங்கலுக்கும் பயனாகிறது.
குறைந்த வட்டியில் கடன், வணிகப் பரிமாற்றங்களுக்கு கட்டணமின்மை, சேமிப்புக் கணக்கில் குறைந்த பட்ச இருப்பு எப்போதும் இருக்க வேண்டிய தேவையின்மை, மறைமுகக் கட்டணம் இல்லாதது போன்றவை இந்த வங்கிகளின் சிறப்பெனச் சொல்லப்படுகிறது.
ஆனால், நீங்கள் தனி நபர் கணக்கு அல்லது குழுமக் கணக்குதான் வைத்துக் கொள்ளலாம். குடும்ப அங்கத்தினர்கள் உங்களுடன் இணைந்து ஒரே கணக்காக வைத்துக் கொள்ள முடியாது. வட்டி தரும் கணக்கிலிருந்து உங்கள் பணத்தை எடுப்பதற்கும் கால வரையறை உள்ளது- அதாவது ஒரு மாதத்தில் ஒரு முறையே கட்டணமில்லாமல் எடுக்க முடியும்.
இந்த வங்கிகள் வீழ்ந்து விட்டால் உங்கள் சேமிப்பை மறந்து விட வேண்டியதுதான். உங்கள் சேமிப்பிற்கு 3% முதல் 8.6% வரை கூட்டு வட்டி தருகிறார்கள். நீங்கள் பெறும் கடன் இந்த வட்டியையும், இணையப் பணங்களின் நிலையற்ற ஏற்ற இறக்கங்களையும் பெரிதும் சார்ந்திருக்கிறது. உங்கள் சேமிப்பை ஈடாக வைத்தோ, உங்கள் இணையச் சொத்துக்களின் மீதோ நீங்கள் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.
நடைமுறையில் உள்ள வங்கிகளும், புதிதாகப் பிறந்துள்ள இணைய வங்கிகளும்
இன்று உலகில் ஆயிரக்கணக்கில் இணையப் பண வகைமைகள் உள்ளன. இவைகளுக்கென்று சந்தைகள் உள்ளன. மரபில், பணம் என்பது அந்தந்த நாட்டு அரசுகளின் பொறுப்பைச் சேர்ந்தது. பணம் அச்சடித்தல், வங்கிகள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய இருப்பு நிதிகள், (Like CRR, SLR- Cash Reserve Ratio, Statutory Liquidity Ratio) அவைகள் கடன் வழங்கும் துறைகள், அதற்காக அனுமதிக்கப்பட்ட ஈட்டுச் சொத்து அடமானங்கள், அந்தந்த நாட்டின் தங்கம் போன்ற மதிப்புமிக்க இருப்புகள் மற்றும் வளம், உலகின் தலைசிறந்த நிதியரசுகளின் நாணயங்களிருப்பு, போன்ற நிதி நிர்வாக மேலாண்மை மற்றும் சேவைகள் அரசு சார் அமைப்புகளிலிருந்து ‘உருண்டோடிடும் பணம் காசெனும்’ தொங்கு நிலையை அடைந்து, இணையப் பணங்களின் ஆதிக்கத்திற்கு நழுவி வருவதை உலகெங்கும் சற்று அச்சத்துடனும், கவலையுடனும் பொருளியலாளர்களும், நிதி நிர்வாகத்தினரும், வரி விதிப்பு அதிகாரிகளும் பார்த்து வருகின்றனர்.
இந்தியாவில் வட்டி என்பது கொடுப்பதிலும், பெறுவதிலும் வாழ்க்கையை, வணிகத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தி. அரை சதவீதம் அதிக வட்டி கிடைக்குமென்றால், ஐம்பது வருட வங்கித் தொடர்பையும் பொருட்படுத்தாமல் வெளியேறும் மனிதர்கள் அதிகம் இங்கே. அதைப்போலவே கடன் கணக்குகளில் வட்டி அரை சதவீதம் குறைவு மற்றோர் இடத்தில் என்றால் கடன் கணக்குகளும் இடம் பெயரும். இது பொருளாதாரக் கோட்பாடு என்பதையும் தாண்டி, நுகர்தலில் இருக்கும் மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது.
இந்த இரு வழிச் சேமிப்பு (!) என்னவாயிற்று என்பது லாட்டரியில் கோடி ரூபாய் பெற்றவர் இன்னமும் ஏன் சுமாரான வாழ்க்கைத்தரத்தில் இருக்கிறார் என்ற கேள்விக்குக் கிடைக்காத பதிலைப் போன்றது.
இந்த இலக்க நாணய வங்கிகள் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக வட்டியை நமக்குத் தருகின்றன. 50% வரை நம் இலக்கச் சொத்துக்களை ஈடாகப் பெற்றுக் கொண்டு குறைந்த வட்டியில் கடனும் தருகின்றன.
உலகமெங்கும் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்!
யார் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்?
அறிவியல் புனைவு அமைப்புகள் போன்றவையிலிருந்து நேற்று முளைத்த நிறுவனங்கள் வரை இதில் இருக்கிறார்கள். உரிமம் பெற்று இயங்கும் ப்ளாக்ஃபை இதில் இருக்கிறது. அவர்கள் சட்டப்படி குறிக்கப்பட்டுள்ள இருப்பு நிதியை ‘ஜெமினி’ போன்ற காப்பாளரிடம் வைத்திருப்பதாகச் சொல்கின்றனர். இதைப் போன்றே க்ராகென் வங்கி (Kraken Bank)[i], அமெரிக்காவில் உள்ள வயோமிங் மாநிலத்தின் வங்கி நடைமுறை சட்டங்களுக்கு உட்பட்டு தனி நபர் சேவையோடு, இலக்க முறை சேமிப்புக் கணக்குகள் துவங்குதல், இணையப் பணத்தில் கடன் வழங்குதல் ஆகியவற்றைத் தொடங்குகிறது. இது வணிக வர்த்தக இலக்க முறை பரிவர்த்தனை போன்றவற்றை கணினிக் குறியீடுகளால் (Computer codes) கட்டுப்படுத்தப்படும், பயனர்களின் குறியீட்டு அட்டைகளால் (Tokens) வழிமுறைப்படுத்தப்படும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது.
2018-ல் தொடங்கப்பட்ட காம்பவுன்ட் (Compound) என்ற அதிகாரம் பரவலாக்கப்பட்ட, தானியங்கும் கடன் வழங்கும் அமைப்பிடம் உள்ள வட்டி ஈட்டும் சொத்துக்கள் $18 பில்லியனுக்கும் மேலாம்![ii]
இந்த இணைய வங்கிகளுக்கும், இதர வணிக வங்கிகளுக்கும் என்ன வேறுபாடு?
இரண்டின் அடிப்படை நோக்கமும் ஒன்றுதான். பொது மக்களிடமிருந்து சேமிப்பைப் பெற்று தேவையான நபர்களுக்கு கடன் வழங்குதல். வட்டியைக் குறைவாகக் கொடுத்து அதிகமாக வசூல் செய்வது இவைகளின் இலாபத்திற்கான வழிவகை. ஆனால், மிகச் சாதாரணமான சேமிப்புக் கணக்குகளில் கூட நடைமுறை வங்கிகள் தருவதைவிட 100 மடங்கு அதிக வட்டியை இந்த இலக்க முறை இணைய வங்கிகள் தருகின்றன. ஆதாயம் அதிகம் கிடைத்தால் ஆபத்தும் அதிகமல்லவா?
இந்த இணைய வங்கிகளில் உள்ள உங்கள் சேமிப்பிற்கு கூட்டாட்சி சேமிப்புக் காப்பீடு என்பது கிடையாது. சமையலுக்கான சில தாவர எண்ணெய் பெட்டகங்களில், அது எதிலிருந்து தயாரிக்கப்பட்டது என மிகச் சிறிய எழுத்துகளில் எழுதியிருப்பதைப் போல, இந்த இலக்க இணைய வங்கிகள் கடமைக்காக, இவ்வகைச் சேமிப்புகளில் அடங்கியுள்ள ஆபத்துக்களைப் பற்றி எச்சரித்திருப்பார்கள். அதிக அளவிலான இவ்வகை நாணயச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள், வீழ்ச்சிகள், தொழில் நுட்பக் காரணங்களால் கணக்கினை இயக்க முடியாமல் போவது, கணினித் தாக்குதல்கள் போன்றவை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ உங்கள் சேமிப்பை முடக்கிவிடலாம். நுகர்வோர் பாதுகாப்பு சிறிதும் இல்லாத துறை இது.
ஆமாம், எங்கிருந்து அதிக இலாபம் சம்பாதிக்கிறார்கள்?
நடைமுறை வங்கிகள் காப்பு நிதிகளை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை நடவடிக்கையால், சில கடன்கள் வசூலாகாமல் போனாலும், வங்கியின் நிலை ஆபத்துக்குள்ளானதானாலும், சேமிப்புக் கணக்கு வைத்திருப்போரின் நலம் காக்கப்படுகிறது. இலக்க இணைய வங்கிகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. அனைத்து சேமிப்புகளையும், கடனாக வழங்கி அதிக வட்டி ஈட்டலாம்; அதில் கொஞ்சம் சேமிப்பாளரிடம் பகிர்ந்தும் கொள்ளலாம். ப்ளாக்ஃபை, நிறுவன முதலீட்டாளர்களுக்கும், (Institutional Investors) ஹெட்ஜ் நிதி (Hedge Fund) நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்கிறது. இந்த இரு சாமர்த்தியசாலிகளும் இணையச் சொத்துக்களை கைவசம் வைத்திருப்பதில்லை. அவர்கள் இணையப் பணச் சந்தைகளின் பிழைகளைப் பயன்படுத்தி, உண்மையான இணைய நாணய மதிப்பிற்கும் அவற்றின் போக்கினால் உருவாகக்கூடும் மதிப்பிற்கும் இடையே சூதாடுகிறார்கள். இதில் வென்றால், நுகர்வோருக்கு அதிகமான பணம் கிடைக்கிறது, ஆனால் வெல்வதற்கு முன் நிறைய ஆபத்துகளைக் கடக்க வேண்டி இருக்கும்.

நிலையான நாணயம் என்பது என்ன?
ஆக்ரோஷமாக சீறிப்பாயும் கடல், இலக்க இணையப் பணம் என்றால், கரைகளுக்குள் ததும்பும் ஆற்றை நிலையான நாணயம் எனலாம். கடலும் நீரே, ஆறும் நீரே .அதைப் போலவே இவையும் இலக்கப் பணங்களே, ஆனால் இவை நிலையான மதிப்புள்ள கரன்ஸிகளுடன், பொதுவாக டாலருடன் பிணைக்கப்பட்டவை. அரசின் நிலையானப் பணத்துடன் இணைந்து ஆனால், தனி நிறுவனங்களால், இலக்க நாணயங்களாக, ப்ளாக் சங்கிலி நுட்பத் தொழிலின் (Block Chain Technology) தொடரேடு கொண்டு கட்டமைக்கப்பட்டு வருபவை இவை. அரசுகள் உமியைக் கொண்டு வந்து நம்மை அவலைக் கொண்டு வரச் சொல்வதும், இருவருமாக ஊதி ஊதிச் சாப்பிடலாம் என்பதும் அனைவருக்கும் தெரியும். இப்போது அரசு அவலைக் கொண்டு வர வேண்டிய நிலையில் உள்ளது என்பது கொண்டாடப்படவேண்டியதே. ஆனால், அவல், மொத்தமாகக் கொள்முதல் செய்து பதுக்கும் நபர்கள் சிலரிடம் சிக்கினால் என்னாவது? இன்றைய நிலையில் டாலருடன் இணைந்துள்ள டெதரும் (Tether) யு எஸ் டி (USD) நாணயமும் வரவேற்பு பெற்றுள்ளன. இணைய நாணயங்களுக்கான ‘ப்ளாக்’ என்ற இதழ் தரும் தகவலின் படி உலகளவில் ஜனவரியில் $29 பில்லியனாக இருந்த நிலையான நாணயங்களின் சுழற்சி செப்டம்பர் முதல் பாதியில் $119 பில்லியனை எட்டியுள்ளதாம்.
அரசு வெளியிடும் பணம் நிலைத்த மதிப்பில் இருப்பதற்கு, மத்திய வங்கிகள் தேவை- வழங்கல் என்ற இரண்டையும் இருப்பு நிதிகளின் மூலம் கட்டுப்படுத்துகின்றன. அதைப் போலவே, நிலையான நாணயங்கள் வெளியிடும் நிறுவனங்களும் தேவையான காப்பு நிதிகளை, அதாவது இருப்பு நிதிகளை வைத்திருக்க வேண்டும். ஒரு டாலருக்கு ஒன்று என்று வைத்திருப்பதாக இவர்கள் சொன்னாலும், அப்படித்தான் இருக்கிறது என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை. திடீரென்று வாடிக்கையாளர்கள் பணத்தை ஒரே சமயத்தில் எடுக்கத் தொடங்கினால், நுகர்வோர்களை, நிதி நிறுவனங்களை, ஏன், தேசியப் பொருளாதாரத்தைக் கூட இது மோசமாக பாதிக்கலாம் என்பது சில அதிகாரிகளின் அச்சம். மாற்றாக மத்திய வங்கிகள் இலக்க நாணயங்களை வெளியிட்டால் இத்தகைய நிலையான நாணயங்கள் செயலற்று மதிப்பிழக்கும்.
மத்திய வங்கியின் இலக்க நாணயம் என்பதென்ன? (Digital Currency of Central Banks)
அரசு வெளியிடும் இலக்க முறை கரன்ஸிகள் தான் இவை. இணைய நாணயங்கள் தரும் வசதிகளோடு, மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நம்பகத் தன்மையோடு இவைகள் இருக்கும். உலகில் பல நாடுகள் இவ்விதமாக, பாதுகாப்பும், வசதிகளும் கொண்ட இலக்க நாணயங்களை வெளியிடுவதில் முனைப்பு காட்டுகிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் வெள்ளோட்ட நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி ஆளுனர் இதைக் குறித்து அடிக்கடி பேசி வருகிறார். மத்திய வங்கிகளின் மூலம் இத்தகு நிலையான நாணயங்கள் வந்தால், தனி நிறுவனங்கள் வெளியிடும் நிலையான நாணயங்களுக்கு வரவேற்பும், சந்தைகளும் இருக்காது. ஜெரோம் பவுல்,(Jerome Powell) தலைவர், கூட்டாட்சி மத்திய நிதி அமைப்பு( federal Reserve) இதைத் தன் ஜூலை பேச்சில் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அரசை ட்ரில்லியன் டாலர் நாணயம் ஒன்றை வெளியிடுமாறு பல நிபுணர்களும், குழுக்களும் வலியுறுத்தி வருகின்றன. இதுவரை அந்த அரசு இந்த அழுத்தங்களை ஏற்காமல், மறுத்து வருகிறது.
அப்படியே, கோதாவில் அரசு இறங்கினாலும், இந்தத் துறையின் நுணுக்கங்களும், மேம்பாடுகளும், விழிப்புணர்வும் அவற்றிடம் காண்பதரிது என நிலையான நாணயங்கள் வெளியிடும் தனியார்கள் எள்ளலோடு சொல்கிறார்கள். அரசுகளிடம் தொழில் நுட்ப ஞானம் வெட்டும் விளிம்பு இல்லாத பழைய பழுதை. இந்த வகை மொண்ணைத் தன்மையைக் கொண்டு அரசுகள் டிஜிடல் நாணயம் வெளியிடுவதில் இறங்குவது பலனற்றது என்பது டிஜிடல் நாணயங்களை விற்று லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்களின் எண்ணம்.
இந்தச் சூழ்நிலையில் நிலையான நாணயங்கள் நிலை பெற்று மேலும் வலிமையாகலாம்; அமெரிக்க மைய நிதி அமைப்பின் ஃபெட்காயின் (FED COIN) வெளியிடப்படலாம் என்ற நிலை எழுந்தால், தனியார் வெளியிட்ட கரன்ஸிகளால் எழுச்சி அடைந்துள்ள டிஜிடல் நாணயப் பரிமாற்றச் சந்தைகள் அவற்றை விலக்கி அரசுடன் இணக்கமாகுமா என்பதும் கேள்விக்குறிதான்.
ப்ளாக்ஃபை இந்தியா
ந்யூஜெர்ஸியைத் தலைமையகமாகக் கொண்ட ப்ளாக்ஃபை இந்தியாவில் மார்ச் மாதத்திலிருந்து செயல்படுகிறது. அதன் அத்தனை சேவைகளும் தனி நபர்களுக்கும், நிறுவன முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் அறிவித்து அதன் முதன்மைப் பொருளான ப்ளாக்ஃபை வட்டிக் கணக்கு( BIA-Block Interest Account) சேவையையும் நடத்தி வருகிறது. இந்த வட்டிக் கணக்குகள் பிட் காயினிலும்,(Bitcoins) எதீரியத்திலும்(Ethereum) தொடங்கப்படுகின்றன. உலகில் 65 நாடுகளில் ப்ளாக்ஃபை தன் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் காயின் டெக்ஸ் (coindcx) நிறுவனம் இதன் போட்டியாளர். அமிதாப் பச்சன் இவர்களின் விளம்பரத் தூதர். இவர்கள் 2% வட்டி மாதாமாதம் வழங்குகிறார்கள். ஆறு இணைய நாணயங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், 2018-ல் பெங்களூருவில் ஒரு வணிக வளாகத்தில் பிட்காயின்களை பரிமாற்றம் செய்து வேறு நாணயங்களைப் பெறலாம் என்று அறிவித்து சிறு கியோஸ்களைத் (Kiosk) திறந்த இரு இளைஞர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள். காயின் ஸ்விட்ச் குபேரைச் (Coin Switch Kuber) சேர்ந்த அவர்கள் 2019 மார்ச்சில் உச்ச நீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பிற்குப் பிறகு தங்கள் விண்ணப்பப் படிவங்களை நுகர்வோர்களுக்காக வலையேற்றி கிட்டத்தட்ட 11 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கின்றனர். தரவுகளின் படி 16% இந்தியர்களிடம் வலைப்பணம் இருக்கிறது.
நாம் ப்ளாக் ஃபை பற்றி பார்த்தோம்.

டிஃபை (DEFI-Decentralized Finance)[iii] பற்றி பார்ப்போமா?
இதுவும் வலைப்பணத்தில் இயங்கும் ஒன்றுதான். பரவலாக்கப்பட்ட, மைய அதிகாரமற்ற ஒன்று என்று சொல்லலாம். இடைநிலை அமைப்பாக(Intermediary), இடைத்தரகர்கள் எவருமே இல்லாமல், அதாவது, அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் வால்ஸ்டீர்ட் நிதி நிறுவனங்கள் போலில்லாமல், இணையப் பணச் சேமிப்பு, கடன் வழங்குதல், வணிக வர்த்த்கத்தை எளிதாக்குதல் போன்றவற்றை கணினிக் குறி மொழி கொண்டு நடத்துவது டிஃபை எனப்படுகிறது. டிஃபைக்கும், ப்ளாக்ஃபைக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு பின்னவரிடம் வாடிக்கையாளரைப் பற்றிய தேவையான தரவுகள் இருக்கும்; அவர்களது இணையச் சொத்துக்களைப் பற்றிய தகவல் இருக்கும். மரபு சார் நிதி நிறுவனங்களைப் போலவே ஒப்பந்தங்கள், அரசு வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். டிஃபைக்கு இது போல் எதுவுமே தேவையில்லை. இதில் வாடிக்கையாளர்கள், நிதிக் குழுமங்களுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அனைத்தும் கணினியின் செயல். பெறுவது, வழங்குவது அனைத்தையும் கணினி ஆராய்ந்து சந்தைச் செயல்பாட்டைக் கவனித்து நிகழ்த்திவிடும். சர்வம் கணினி மயம் ஜகத்! இந்த நிறுவனங்கள் பூரண சுதந்திரம் கோருபவை. எனவே, இதைத் தொடங்கியவர்கள், வடிவமைத்தவர்கள் ஆகியோரின் ஆதிக்கம் குறைந்து குறியீட்டு அட்டைதாரர்களான பயனர்கள் கணினித் துணை கொண்டு இதை நடத்த வேண்டும் என்ற திசையை நோக்கி செல்லும் வண்ணம் உருவாகி வருகிறது. நமக்கெல்லாம் தெரியும், ஒரு குழுமத்தை உருவாக்குபவர்கள், அது பொதுப் பங்குக் குழுமமாக இருந்த போதிலும், எத்தனை அதிகாரமும், ஆதிக்கமும் செலுத்துகிறார்கள் என்பதும், எத்தனைக் கோடிச் சொத்துக்களை உலகெங்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதும். இந்தியாவில் முந்தைய சமஸ்தான அரசர்களின் பிரிவி பர்ஸ் (Privy Purse) நிறுத்தப்பட்டதைத் தவிர உருவாக்கியவர்களின் ஆதிக்கம் எதிலுமே குறையவில்லை. உலகெங்கும் இதுவும் பொது மொழியே! எனவே பெயரில் என்ன ஆர்ப்பாட்டமான கருத்து இருந்தாலும் நடைமுறையில் பல நூறு கோடி பயனாளர்கள் அதிகாரத்தை வழி நடத்துவர் என்பதெல்லாம் பகல்கனவாகத்தான் முடியும் என நாம் எதிர்பார்க்கலாம்.
எதீரியம் என்பது என்ன?
டிஃபை இயங்குவது இந்த வலைப்பின்னலில் தான். ஈதர் என்ற வலைப் பணமானது குறியீட்டு அட்டைகள் பயன்படுத்தும் கணினிக் குறி மொழிகளில் செயல்படும் தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் பயன்பாடு எளிதாக இருப்பதும், இது செயல்படுவதற்கு மையங்களின் கட்டளைகளுக்காகக் காத்திருக்காமல் இருப்பதும் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிட்காயினுக்கு அடுத்த நிலையில் சந்தையில் பெரு மதிப்பு பெற்றுள்ள இதன் சந்தை முதலீடு $460 பில்லியன் என்று செப்டம்பர் மாதம் வெளியான அறிக்கை சொல்கிறது!
டிஃபையில் உள்ள ஆபத்துக்கள் என்ன?
சந்தையின் நன்நடத்தைக்கு மத்திய வங்கிகள் மூன்றாம் நபரில்/ அமைப்புகளில் நம்பிக்கை வைக்கின்றன. அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகளும், தரகு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தரவுகளை, அவர்களின் கணக்கில் தென்படும் அசாதாரணங்களை, அவர்கள் ஈட்டும் சொத்து விற்பனை இலாபங்களை, அதன் மூலம் அரசு பெற வேண்டிய வரிகளைத் தராமல் ஏமாற்றுவோரை அதைச் செலுத்த வைப்பதை எல்லாம் சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்குத் தெரிவித்து விடுகின்றன. சட்ட அறிவும் இந்தத் துறையில் இருப்போருக்குத் தேவையாகிறது. ஆனால் முதலீட்டுச் சந்தையில் நாட்டமுள்ள டிஃபை இதில் எதைப் பற்றியும் கவனம் செலுத்தாது. அனைத்து செயல்பாடுகளிலும் நன்னம்பிக்கையை இதில் எதிர்பார்க்க முடியாது. வாடிக்கையாளர்களின் பணம் கொந்தப்படுவதும், அதற்கான எதிர்கால சாத்திய அபாயங்களுமுள்ள ஒன்று. ‘காலை வாரும் திறமையும்’ இவ்வகையிலான சில நிறுவனங்களுக்கு உண்டு. பைனான்ஸ் ஸ்மார்ட் செயின்( BSC-Binance Smart Chain) என்ற டிஃபை குழுமம், $2.5 மில்லியன் மதிப்பிலான பைனான்ஸ் காயின் டோக்கன்களை (BCT) சந்தையிலிருந்து விலக்கி ஈதராக மாற்றி பைனான்ஸ் பரிமாற்றப் பெட்டகங்களுக்கு (Binance Exchange Wallets) அனுப்பிவிட்டது. இந்த பி எஸ் சி ஒரு டர்டில்டெக்ஸ் கோப்பு பாதுகாப்புத் திட்டம் (Turtledcx File Storage). முதலீடுகளைப் பெற்ற பிறகு, சிறிதுகாலம் நம்பிக்கை ஏற்படுத்தியபிறகு அத்தனையையும் சுருட்டிக் கொண்டு எங்கோ பறந்துவிட்டது ஆமை. இதில் அதிக விநோதம் என்னவென்றால், ‘ஆமையின் கைகள் காலடித் தரை விரிப்பை இழுத்துக் கீழே தள்ளும் அளவிற்கு நீளமுடையவை அல்ல’ என்று அவர்களே முன்னர் சொன்னதுதான். மேலும் வியப்பதிர்ச்சி ஒன்று உண்டு- அதன் செயல்பாடுகள் தணிக்கை செய்யப்பட்டு அனைத்தும் நலமே என்று இந்த ‘தரைவிரிப்பின் உருவலுக்குச் சற்று’ முன்னர் தணிக்கையாளர்கள் நற்சான்றளித்ததுதான்!!
இந்த இணயப் பணங்களின் நன்மைகள் என்ன?
காசோலை வசதியுடன் கூடிய வங்கிக் கணக்குக்கள் அனைவருக்கும் பொது வங்கிகளில் இருப்பதில்லை. வங்கிச் சேவைகள் எளிதாகக் கிடைக்காத உட்பிரதேசங்கள் இருக்கின்றன. மேலை நாடுகளிலேயே இந்த நிலைமை. (மண்ணவனூர் என்ற சிற்றூரில் கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு வங்கி. அதன் வாடிக்கையாளர்கள் மலையில் ஆடு மேய்க்கும் சிறு குழுவினர். பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். தேநீர்க் கடை கூட இல்லாத குறு ஊர் அது; ஆமாம், ஆட்டுப்பாலில் தேநீர் போட வருமா? காந்திஜீ கூட பாலைத்தான் குடித்தார்) டிஃபை, அனைவரையும் நிதி அமைப்புக்குள் தாங்கள் கொண்டு வருவதாகவும், அனைவருக்கும் வங்கி சேவை தேவை என்றும், எந்தெந்த நாடுகளின் அரசுப் பணங்கள் விபரீதமான சுழலுக்கு ஆட்பட்டு அதன் மதிப்பு குறைகிறதோ அங்கேயுள்ள மக்களின் சேமிப்பு இத்தகைய இலக்க இணையப் பணத்தில் இருந்தால் நன்மைகள் அதிகமல்லவா என்றும் கேட்கிறது. பல நேரங்களில் வாடிக்கையாளர் சார்ந்த ஆதார ஆவணங்களைக் கேட்பதில்லை. இணையச் சொத்தின் மதிப்பு தான் அவர்களின் முகவரி, முன்னுரை, அடையாளமெல்லாம்.
இவை வங்கிகளுக்கு மாற்றாக எழுச்சி பெறும் நிலையில் அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
இத்தகையோரின் செயல்பாடுகளின் வேகத்தைக் குறைக்க தாம் பெரும் வேகத்தில் இயங்கும் தேவை இருப்பதை அரசுக் கட்டுப்பாடுகளுக்குள் இயங்கும் நிதி நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. தற்காலிகக் கட்டுப்பாட்டாளராக இருந்த ஒருவர் நாணயக் கட்டுப்பாட்டுஅலுவலகத்திலிருந்து விலகிய பின், இணையப் பண நிறுவனங்களுக்கு இதுவரை விதிக்கப்பட்ட நெறிமுறைகளை அரசும், அதிகாரிகளும் மீள் பார்வையிடத் தொடங்கியுள்ளனர். அடிப்படை மதிப்பு உள்ள பத்திரங்களின் பெறுமானத்தையும் தாண்டி வழித்தோன்றும் (Derivatives) ஆதாரமற்ற சொத்துக்களின் மேல் கட்டப்பட்டுள்ள சீட்டுக் கோட்டை சந்தைகளாக இவை பரிணமிக்கும் என்பது மிகப் பெரும் பொருளாதாரச் சரிவைக் கொண்டு வரும். வரலாறு இதை நமக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது. (லேமென் பிரதர்ஸ், வீட்டுக் கடனமைப்புகளை பெரிதும் நம்பி வீழ்ந்த வழித்தோன்றும் வசூல்கள் மறக்கக் கூடியதா?) பத்திரப் பரிமாற்ற ஆணையத்தின் தலைவர் கேரி கென்ஸ்லர், (Gary Gensler) புது நிறுவனங்களை மேற்பார்வையிட, நெறிமுறையாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமென்று சொல்கிறார். அரசே வெளியிடும் இலக்க டாலர் நாணயங்களின் நன்மை தீமைகளைப் பற்றி அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பரில் அறிக்கை வெளியிடுவதாகத் தகவல் வந்தது.
$1 ட்ரில்லியன் இருதரப்பு கட்டமைப்புகள் மசோதாவைப் பற்றிய அமெரிக்க பாராளுமன்ற விவாதத்தில் வரிகள் பற்றிய ஒரு பிரிவு பேசப்படும் போது அதில் இணையப் பணத் தரகர்கள் என்ற சொற்றொடர் தெளிவாக இல்லை என்றும், மரபாக அச்சொல் உணர்த்தும் ஒன்றை தவிர்த்த பலரின் மீது அது கவனத்தைக் குறிப்பதாகவும் தொழில் நிறுவனங்கள் எதிர்த்து முறையிட்டன.
தொடரேட்டில் அமைந்துள்ள இந்த மாற்று முறை வங்கிச் சேவையை கைப்பிடிக்குள் கொண்டு வர அமெரிக்க காங்கிரசிற்கு வருடங்கள் ஆகலாம். இலக்கச் சொத்துக்களின் வரைமுறைகளுக்காக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜனநாயகவாதி டான் பேயர்(Don Beyer) ஒரு தொகுப்புச் சட்டத்தைக் (Comprehensive Legislation) கொண்டு வந்தார். ஆனால் இதுவரை அது ஆராயப்படவில்லை.
இனி என்ன வழி இருக்கிறது?
புதிது எனச் சொல்லப்படுபவை பழசின் மேம்பாடுகளே. பானையில் வைத்துக் குடித்த குளிர் நீர் இன்று குளிர்பதனப் பெட்டியில் கிடைக்கிறது– சுற்றுச்சூழலை தன் சி எஃப் சியால்(CFC) பாதித்துக் கொண்டு. ஆனாலும், இதன் வசதிகளை மறுப்பதற்கில்லை. எனவே புதியவை வேண்டும்; அவற்றின் கழுத்தை நெறிக்காத புது நெறிமுறைகள் வேண்டும். வங்கிகளைப் போல் காப்பு இருப்பு வைத்துக்கொள் என்று டிஃபையைச் சொல்வதை விட அதன் ஆபத்து வரம்புகளை நிர்ணயிப்பது, அதன் கணினிக் குறு மொழிகளை தணிக்கை செய்வது போன்றவை உதவலாம். (ஆனாலும், ‘டர்டில்’ ‘சத்யம் கம்ப்யூடர்ஸ்’ ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!) கணக்குகள் தொடங்கும் போதே தனி நபரைப் பற்றிய அத்தனை விவரங்களையும் ஆவண ஆதாரத்துடன் கேட்பதைத் தவிர்த்து, செயற்கை நுண்ணறிவு, மற்றும் தகவலாய்வுகள் மூலம் புரட்டாளர்களைக் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுப்பது பயன் தரும் என்று பொருள்களுக்கான வருங்கால வர்த்தக ஆணையத்தின் (Commodities Futures Trading Commission) முன்னாள் அதிபர் கிறிஸ்டோபர் ஜியான்கார்லோ (J.Christopher Giancarlo) சொல்கிறார். இதன் மூலம் சந்தேகத்திற்கிடமானவர்களை அடையாளம் காண முடியும் என்பது அவர் கருத்து.
மீண்டும் இந்தியா
ஏப்ரல் முதல் செப்டெம்பர் 2021 வரையிலான ஆறு மாதங்களில் தீச் செயல்களுக்காக இந்தியாவின் மூன்று முதன்மை இலக்க நாணய பரிவர்த்தனை மையங்கள் 2,00,000 கணக்குகளை தடை செய்துள்ளன. காயின் ஸ்விட்ச் குபேர் மட்டுமே 1,80,000 கணக்குகளை தடை செய்திருக்கிறது. மேலும் இரு இலட்சக் கணக்குகள் கண்காணிப்பில் உள்ளன.
நீரில் படகு சென்றால் இலக்கை அடையலாம்; படகிற்குள் நீர் புகுந்தால்…..?
பானுமதி.ந
உசாவித் துணைகள்:
BlockFi is among a new breed of institutions that outwardly look like banks but are built around digital currencies.
Credit…Samuel Corum for The New York Times
By Ephrat Livni and Eric Lipton
Published Sept. 5, 2021Updated Sept. 23, 2021
Ephrat Livni reports from Washington on the intersection of business and policy for DealBook. Previously, she was a senior reporter at Quartz, covering law and politics, and has practiced law in the public and private sectors. @el72champs
Eric Lipton is a Washington-based investigative reporter. A three-time winner of the Pulitzer Prize, he previously worked at The Washington Post and The Hartford Courant. @EricLiptonNYT
https://www.theblockcrypto.com/data/decentralized-finance/stablecoins/total-stablecoin-supply-daily
thehindubusinessline.com.mon
other news channels, publications etc.
[i] தெரிந்துதான் பெயர் வைத்திருக்கிறார்களா என்று யோசிக்க வைக்கும் பெயர். க்ராக்கென் என்பது ஸ்காண்டிநேவிய தொல்கதைகளில், ஆழ் கடலில் வசிக்கும் ஒரு ராட்சச உருக்கொண்ட பண்டைக்கால ஜந்து. அது மொத்தக் கப்பல்களையுமே தன் பல கரங்களில் சுருட்டி விழுங்கி விடக் கூடிய பெரு மிருகம். இதை ஒரு வங்கியின் பெயராக வைத்திருக்க இதன் நிறுவனர்கள் மிகவுமே உண்மை விளம்பிகளாக இருக்க வேண்டும்.
[ii] பிலியன் = 1000 மிலியன்; மேலும் கணக்கு விவரத்திற்குப் பார்க்க: https://blog.prepscholar.com/how-many-millions-in-a-billion. சரி இந்த பிலியன் டாலர் எத்தனை கோடிகளுக்குச் சமம்? நூறு கோடி டாலர்களுக்குச் சமம். ஒரு அமெரிக்க டாலர் சுமார் 70+ ரூபாய்களுக்குச் சமம் என்று எடுத்துக் கொண்டால் 1 பிலியன் டாலர்கள்= 100 கோடி டாலர்கள்= அதாவது 7000 கோடி ரூபாய்களுக்குச் சமம். இது என்ன பெரிய தொகை, தமிழ் நாட்டு அரசியலில் உயர் பதவிகளில் இருப்பவர்களில் பாதிப் பேராவது இதை விட இரட்டை மடங்கு சொத்து வைத்திருப்பார்களே என்பீர்களாயின் அது பற்றி நாம் என்ன சொல்ல முடியப் போகிறது? நம் மக்கள் அத்தனை ஏமாளிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
[iii] எதை நன்றாகச் செய்கிறார்களோ இல்லையோ, பெயர்களிடுவதில் மிக்க படைப்பூக்கம் கொண்டவர்கள் இந்த இலக்க எண் நாணயச் சந்தைக்காரர்கள். டிஃபை என்ற பெயர் அந்த இங்கிலிஷ் சொல்லின் பொருளை உள்ளடக்கியது. எதிர்ப்பு தெரிவி என்ற பொருள் கொண்ட அந்தச் சொல்லின் சுருக்கத்தைப் பெயராகக் கொண்ட இந்த அமைப்பு தன் பெயரின் விளக்கத்திலும் எதிர்ப்பைக் கொண்டிருக்கிறது. டீசெண்ட்ரலைஸ்ட் ஃபைனான்ஸ் என்பதே அரசைப் போன்ற அதிகார மையத்தின் கட்டுப்பாட்டிலும் பெரு வங்கிகள் நிதி நிறுவனங்களின் பிடியிலும் நாட்டின் மொத்த நிதி நிர்வாகம் சிக்கி இருப்பதை மாற்றி பரந்த மக்கள் திரளின் கையில் நிதி நிர்வாகத்தைக் கொணரும் என்பதே போன்ற ஒரு கருத்துருவைப் பெயரில் கொண்டிருக்கிறது இந்த அமைப்பு. இது நிஜமாக நடக்குமா, இதை நிறுவியவர்கள் தம் நடத்தையில் பெயரில் சுட்டப்படும் கருத்தைத் தொடர்ந்து கைப்பிடிப்பார்களா என்பதெல்லாம் இப்போதைக்குத் தெரியப் போவதில்லை. கட்டுப்பாடு அல்லது மேற்பார்வை அற்ற எந்த அதிகார மையமும் உருப்படாமல் சீரழியும் என்பதுதான் மனித நாகரீகத்தின் இத்தனை ஆயிரமாண்டு வரலாறு சுட்டுகிறது.