செருப்பிடைச் சிறுபரல்!

ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, கதை கூறலோ அல்ல. வகுப்பெனக் கொளலாமோ எனில் யாம் ஆறு இலட்சம் பணம் கொடுத்து முனைவர் பட்ட ஆய்வேடு எழுதி வாங்கியவனோ, அறுபது இலட்சம் பணம் கொடுத்து பேராசிரியர் பணி விலைக்கு வாங்கியவனோ அல்ல! கம்பனில் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது எனில் தகும்! 

எனது நோக்கம் கம்பனின் கவி ஆளுமை, மொழிப் பயன்பாடு, சொற்பெருக்கு, கற்பனை வளம், காட்சி அமைப்பு, உரையாடல் செறிவு இவற்றின் சிறப்பை எடுத்துரைப்பதேயாம். அவன் காப்பியத்தை எரிக்கச் சொன்னவரெல்லாம் எரியுண்டு போனார்கள்; ஆனால் படைப்பு வாழும் தமிழ் நின்று நிலவும் வரை.

2021-ம் ஆண்டின் செப்டம்பர் 11-ம் நாள் மூன்றாவது காண்டமான ஆரண்ய காண்டம் ஆரம்பித்து சொல்வது என் திட்டம். தொடங்கியதில் இருந்து எமது ஏழாவது அமர்வு அது. தோராயமாக இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி. ஒன்றரை மணித்தியாலம் எனது சொல்லல். அரை மணிக்கூர் உரையாடல் என அமைத்துக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ முப்பத்தைந்து அல்லது நாற்பது பாடல்கள் சொல்ல இயலும். அந்தப் பாடல்களை நானூறுக்கும் குறையாத பாடல்களை வாசித்துத் தேர்ந்தெடுப்பேன்.

கதைப் போக்கு, கதாபாத்திரங்களின் தனிச் சிறப்பின் வெளிப்பாடு, உணர்ச்சிப் பாங்கு, கவிதை நயம், சொற் பயன்பாடு, சந்தம், உவமைகள் முதலானவை எனது அளவுகோல்கள்.

ஆரண்ய காண்டத்தில் முதலைந்து படலங்கள் அன்றைய திட்டம். அதாவது சூர்ப்பணகைப் படலம் வரைக்கும். திரைத்தாரகை போன்ற தெய்வீக ஒப்பனைகளுடன் உருமாறிய சூர்ப்பணகை இராமனை வசீகரிக்க முயன்று தோற்றாள். சீதையின் இருப்பால்தான் தன்னைப் பொருட்படுத்த மறுக்கிறான் என்ற நினைப்பில், இராமன் நீர்த்துறையில் நிற்கும் நேரம் ஓர்ந்து, அவளைத் தூக்கிச் சென்று கரந்து வைக்கலாம் என்ற எண்ணத்துடன் சீதையை நெருங்குகிறாள். சோலையினுள் இருந்த இலக்குவன் அவளின் தீய நோக்கம் தெரிந்து, சூர்ப்பணகையின் முலைக்காம்புகளையும் மூக்கையும் செவிகளையும் துணிக்கிறான்.

பெருஞ்சோரிப் பெருக்கும் வலியும் துன்பமும் அவமானமும் மிக சூர்ப்பணகை ‘இராவணவோ, இராவணவோ’ என ஓலமிடும் பல பாடல்களில் ஒரு பாடல் –

“உருப்பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினுமுன்

செருப்படியின் பொடி ஒவ்வா மானுடரைச் சீறுதியோ?

நெருப்படியில் பொடி சிதற நிறைந்த மதத் திசையானை

மருப்பொடிய பொருப்பிடிய தோள் நிமிர்ந்த வலியோனே!”

என்பது.

கால்களைப் பூமியில் பதித்து நடக்கும்போது எழும் துகள்களில் நெருப்புப் பொறி சிந்தும் வலிமை உடைய இராவணனே! மதம் பெருகிப் பொழியும் திசையானைகள் எட்டினையும் தந்தங்கள் ஒடிந்து போகும்படியாகவும் மலைகள் இடிபடவுமான இருபது நிமிர்ந்த தடந்தோள்களை உடையவனே! சிவனின் சினத்தால் நீறாக்கப்பட்ட மன்மதனைப் போன்றவர் இராம இலக்குவர். என்றாலும் உன் செருப்பின் கீழே உள்ள பொடிக்குக் கூட ஒப்பாக மாட்டார்கள். இந்த மானுடரைச் சினந்து சீற மாட்டாயா? – இது பாடலின் பொருள்.

பாடலை வாசித்துப் பொருளும் அறிந்து கொள்ளும் காலை, என் கவனம் ஈர்த்த சொல் செருப்பு. அயோத்தியா காண்டத்தில் பல பாடல்களில் பாதுகை, பாதுகம் எனும் சொற்கள் ஆண்டிருக்கிறார் கம்பர். அவை வடசொல்லின் தமிழாக்கம். அதுபோன்றே பாதரட்சை எனும் சொல்லும்.

செருப்பைக் குறிக்கத் தமிழில் பாதக்குறடு, பாதரட்சை, பாதுகை, பாதுகம், மிதியடி, காலணி என்ற சொற்கள் உண்டு. சப்பாத்து என்பது போர்த்துக்கீசியச் சொல் என்கிறது அயற்சொல் அகராதி. செருப்புக்கு மாற்றாக இன்று நாம் பயன்படுத்தும் சப்பல் எனும் சொல் எம்மொழிச்சொல் என்று தேடவேண்டும். சப்பல் எனும் சொல் இந்தி மூலம் என அறிகிறேன். Cappal என்று ஒலிப்பு. சில ஆங்கில அகராதிகள் Chappal எனும் சொல்லுக்கு Slipper என்று பொருள் தந்துள்ளன. சப்பல் எனும் சொல் செருப்பு எனும் பொருளில் தமிழின் எந்த அகராதியிலும் இல்லை. மலையாளம் செப்பல் என்றும் தெலுகு செப்பலு என்றும் புழங்குகின்றன. ஜுத்தா என்பது இந்தி. செருப்புக்கும் ஷுவுக்குமான பொதுச்சொல் அது. பாதுகா, பாதரக்ஷா எனும் ஆதி வடசொற்களை அன்றாட வழக்கில் இன்று பயன்படுத்துகிறார்களா என்பதறியேன்.

அகராதிகளில் தேடியபோது, காறொடு தோல், கழறொடு தோல் என இரு சொற்றொடர் கண்டேன்.  மிரண்டு நிற்கவேண்டிய அவசியம் இல்லை. கால்+தொடு+தோல் = காறொடு தோல். கழல்+தொடு+தோல்=கழறொடு தோல். செருப்பைக் குறித்த பழஞ்சொற்களே அவை. கொங்கு நாட்டில் இன்றும் ‘செருப்பைத் தொட்டுக்கிட்டுப்  போ’ என்பார்கள். பொருள் – செருப்பு அணிந்து போ என்பதுவே!

கம்பன் ‘செருப்பு’ என்றதுமே, எனக்கு முதலில் தோன்றிய வியப்பு அது ஆயிரமாண்டுப் பழஞ்சொல்லா என்பது. கம்பனுக்கும் முன்னால் அச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என சற்றுத் துழாய்ந்து பார்க்கலாம் என்று தோன்றியது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார் எழுதியது. நூறு பாடல்கள் கொண்டது. 

“யாதொன்றும் ஏறார் செருப்பு, வெயில் மறையார்;

ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்மோடு

ஆங்கோர் ஆறு செல்லும் இடத்து”

என்பன சில வரிகள்.

பலவும் கற்றுத் தேர்ந்து தெளிந்து அடங்கிய மூத்த ஞானியருடன் வழிப்பயணம் மேற்கொள்ளும்போது, அவருடன் செல்வோர் வாகனங்களில் ஏறமாட்டார், செருப்பு அணிய மாட்டார் வெயிலுக்கு நிழல் தேடி மரத்தடியில் ஒதுங்கமாட்டார் என்பது பொருள். இன்று அவ்விதமானதோர் தொண்டர் குழாம் அல்லது அடியார் திருக்கூட்டம் தொழுது பின்தொடரும் மாந்தர்கள் ஞானியரா அல்லது ஞான சூனியங்களா என எவரறிவார் எம்மானே!

ஆசாரக் கோவையில் இன்னொரு பாடல் –

“தலை உரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்;

பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார், செருப்பு

குறை எனினும் கொள்ளர் இரந்து”

என்கிறது.

தலையில் எண்ணெய் தேய்த்த கையால் எந்த உறுப்பையும் தீண்ட மாட்டார்கள். பிறர் உடுத்துக் களைந்த அழுக்கு ஆடைகளைத் தீண்ட மாட்டார்கள். காலுக்குச் செருப்பு இல்லை என்றாலும் இரந்து வாங்கி அணிய மாட்டார்கள். இது பொருள்.

நாலடியாரிலும் ஒரு பாடல் செருப்பு பேசுகிறது.

“மைதீர் பசும்பொன் மேல் மாண்ட மணி அழுத்தி

செய்ததெனினும் செருப்புத்தான் காற்கேயாம்

எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும்”

என்பது முழுப்பாடல்.

குற்றமற்ற பசும்பொன்னால் ஆக்கி, அதன்மேல் சிறப்பான நவமணிகள் அழுத்திக் கோர்த்துச் செய்யப்பட்டிருந்தாலும் செருப்பு என்பது கால்களுக்கே ஆகும். அதுபோல் திரண்ட செல்வத்தை உடையவராயினும் அவருடைய பண்பு நலன்கள் கீழ்மையானவை என்றால் அவர் செருப்புக்கு நிகரானவரே! இது பொருள். அஃதாவது ஒருவர் பதவியால், அதிகாரத்தால், கொள்ளையடித்துக் குவித்த சில்லாயிரம் கோடிகளால் மதிப்பிடப்படுவதில்லை, அவரது பண்புகளால் உணரப்படுவார் எம்மனார் புலவர்!

அப்பர் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், வில்லி பாரதம் என பற்பல பாடல்கள் செருப்பு எனும் சொல்லினை ஆண்டுள்ளன. பாதுகை, பாதுகம் எனும் சொற்கள் கம்பன் ஆண்டிருக்கும் காரணத்தால் எனது 32-வது கும்பமுனிக் கதையின் தலைப்பு ‘செம்மொழிப் பாதுகம்!’ ஆவநாழி எட்டாவது இதழில் வெளியானது.

பாதுகம் என்றாலும், பாதுகை என்றாலும் ஐயம் திரிபற செருப்பேதான். தேவர்களும் தேவகுமாரர்களும் அணிந்தால் பாதரட்சை, பாதுகை, பாதுகம்; சாமான்யரான நாமணிந்தால் செருப்பு என்றும் பொருள் கொண்டால் அது மொழியின் குறைபாடு அல்ல. சொற்களை மேநிலையாக்கும் மானுடப் பண்பு. நிலக்கிழார் அணிந்தால் உத்தரீயம், அங்கவஸ்திரம், நேரியல்; சாமான்யன் போட்டிருந்தால் துண்டு, துவர்த்து என்பதைப்போலவே அதுவும்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி ‘பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து’ என்கிறது. ‘அங்கண் நெடு மதிள்’ பகுதியின் பாடல் வரி அது. பதினோரு பாடல்களில் மொத்த இராமகாதையும் பேசும் பகுதி. தமிழ் செழித்துக் கொழிக்கும் பகுதி.

சந்தர்ப்பம் இதுவல்ல என்றாலும் எட்டுப் பாடல்களின் தேர்ந்தெடுத்த வரிகளை வரிசைப்படுத்தித் தரலாம் என்று தோன்றுகிறது.

“வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி,

வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி,

செவ்வரி நற் கரு நெடுங்கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலையிறுத்து,

தொத்தலர் பூஞ்சுரிகுழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் 

துறந்து, துறைக் கங்கை தன்னை பத்தியுடைக் குகன் கடத்த,

வனம்போய்ப் புக்குப் பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து,

வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று,

வண் தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி,

கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி,

கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி,

தன மருவு வைதேகி பிரியலுற்றுத் தளர்வெய்தி,

சடாயுவைக் குந்தத்தேற்றி,

வன மருவு கவியரசன் காதல் கொண்டு, வாலியைக் கொன்று,

இலங்கை நகர் அரக்கர் கோமான் சினமடங்க மாருதியால் சுடுவித்தானை,

எரிநெடுவேல் அரக்கரொடும் வேங்கை வேந்தன்

இன்னுயிர் கொண்டு, அவன் தம்பிக்கு அரசும் ஈந்து,

அம்பொன் நெடுமணிமாட அயோத்தி எய்தி, அரசெய்தி”

என்று சுருங்க உரைத்தார் குலசேகர ஆழ்வார். பொருள் சொலப் புகல மாட்டேன். கவியரசன் என்றால் காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தவன். நீங்கள் ஏதோ சினிமாப் பாட்டுக்காரரை நினைந்து கண்களில் நெகிழ்ந்து நில்லாதீர்!

பாதரட்சை என்றால் செருப்பெனச் சொன்னோம். பாதரட்சணம் என்றாலும் செருப்பேதான். பாதுகைக் கொட்டை எனும் சொல்லும் ஒன்றுண்டு. பாதரட்சையின் குமிழைக் குறித்த சொல் அது. பாதக்குறடு என்று சொன்னாலும் அது குமிழ் கொண்ட பாதரட்சை என்று பொருள் படும்.

இன்று நாம் வீட்டு வாசலில், குளிமுறி – கழிமுறி வாசலில் போடும் தடித்த துணி அல்லது இரப்பர் மெத்தையை மிதியடி என்கிறோம். ஆனால் திவாகர நிகண்டு மிதியடி எனும் சொல்லுக்கு பாதுகை, செருப்பு என்று பொருள் சொல்கிறது. மிதியடிக் கொட்டை என்றால் பாதக்குறடு, பாதுகைக் குமிழ் என்கிறது திவாகர நிகண்டு.

மலையாளம் காலணிகளைக் குறிக்க செருப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. செருப்புத் தைப்பவரை ‘செருப்புக் குத்தி’ என்பர்.

செருப்பை அடையாளப்படுத்தி ஏராளமான சொற்கள், சொற்றொடர்கள் உண்டு நம்மில். செருப்புக் கட்டை, செருப்புக் கடி, செருப்புத் தின்னி, செருப்பு நெருஞ்சி, செருப்பு பிஞ்சிரும், தேஞ்ச செருப்பு, பழஞ்செருப்பு, பிய்ந்த செருப்பு, ஒற்றைச் செருப்பு, ஜோடிச் செருப்பு என்பன.

செருப்பு எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் முதற்பொருள் பாதரட்சை, Leather Sandals, Shoe. இரண்டாவது பொருள் பூழி நாட்டில் உள்ளதோர் மலை. பதிற்றுப்பத்தின் பாடல் வரி ஒன்றும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. ‘மிதிஅல் செருப்பின் பூரியர் கோவே’ என்பது மூன்றாம் பத்தின் பாடல் வரி. செருப்பு என்னும் பெயரை உடைய மலையின் பூழி நாட்டுக்குத் தலைவனே என்று உரை எழுதியுள்ளனர்.

பேரகராதி வரிசைப்படுத்தும் செருப்பு குறித்த வேறு சில சொற்கள் –

செருப்புக் கட்டை – தேய்ந்த செருப்பு

செருப்புக்கடி – செருப்பு அழுத்துவதால் ஏற்படும் புண்

செருப்பூசி – செருப்புத் தைக்கும் ஊசி

பதினொன்றாம் வகுப்பில், பொதுத்தேர்வில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் தேறி, தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி – நாகர்கோயிலில் புகுமுக வகுப்பில் இடம் கிடைத்தபிறகு, சித்தப்பா நாகலிங்கம் பிள்ளை கூட்டிக் கொண்டு போய் ஒரு ஜோடி செருப்பு வாங்கித் தந்தார். 1964-ம் ஆண்டு ஜுன் மாதத்தில். வாழ்க்கையில் முதன் முதலாக செருப்பணிந்து நடந்தது அன்றுதான். கல்லூரி திறந்தபிறகு பட்டப்படிப்பு பூர்த்தியாகும் வரை நான்காண்டுகள் NCC எனப்பட்ட தேசிய  மாணவர் படைப் பயிற்சி. அப்போது பயிற்சி சீருடையுடன் பெல்ட், தொப்பி, ஷு எல்லாம் தந்தனர். இன்றும் என் நடை NCC தந்தது. சினிமா நடிகர்களுக்கு சின்ன யானை நடையைத் தந்திருக்கும் எல்லாம். கம்பனிடம் கடன் வாங்கியதுதான். ‘நாகமும் நாகமும் நாண நடந்தான்’ என்பார் கம்பன் இராமனை. நாகம் என்றால் மலை, நாகம் என்றால் யானை.

செருப்பு குறித்து ஏராளமான உரையாடல்கள் உண்டு மக்கள் மொழியில்.

 1. “செருப்பை உள்ளே போடு, நாய் தூக்கீட்டுப் போயிரும்”
 2. கொஞ்சம் வசதி அடைந்தவனைக் குறித்து இளக்காரமாக – “அவன் இப்போ பெரிய ஆளுடே! செருப்பு போட்டுல்லா நடக்கான்”
 3. விருப்பமில்லாதவரைப் பற்றிப் பேச்சு வரும்போது – “சவத்துச் செருப்பை மூலைலே போடு”
 4. பிராது போல் நண்பரிடம் பேசும்போது – “ஒரு பத்து ரூவா கை மாத்து கேக்கப் போனேன்பா! நல்ல செருப்படி கெடச்சது!”
 5. சொன்ன பேச்சு கேட்காமல் அலையும் சிறுவனைப் பார்த்துத் தாய் – “வீட்டுக்கு வா! ஒனக்கு செருப்புப் பூசை இருக்கு”
 6. கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டுக் கிடைக்காமல் சலித்தவர் – “சவம் நடந்து நடந்து செருப்பு தேஞ்சு போச்சுப்பா!”
 7. உழைக்கும் வர்க்கம் – அவர்களின் பிரதிநிதிகள் அல்ல – மனக் குமுறலுடன் சொல்வது – “வேலை செய்த கூலி கேட்டா செருப்புத் தேய நடக்க வைக்கான்… இவனெல்லாம் ஒரு பெரிய மனுசன்!”
 8. மிகுந்த மிதப்புடன் தானமானக்காரர், தன் எதிராளியைக் குறித்து – “நான் செருப்பு விடுகிற இடத்துல கூட அவனுக்கு நிக்கப்பட்ட யோக்கியதை உண்டா?”

சமீப காலமாக அரசியல் மேடைகளில் கேட்கும் வசவு அடைமொழி விருது, “செருப்பு நக்கி!” தூலமாக இல்லாவிட்டாலும் மானசீகமாகப் பலரும் – தலைவர், அறிஞர், அறிவுஜீவி, கலாகாரர் என – செருப்பு நக்கியே செழித்து வாழ்கிறார்கள். செருப்பு நக்கும் இனத்துக்கு மொழி, மத, இன, பிராந்திய, பால் வேறுபாடுகளும் இல்லை.

சிலகாலம் முன்பு மோகன்லாலும் பிரபுவும் நடித்த திரைப்படம் ஒன்று வந்தது ‘காலா பானி’ எனும் தலைப்பில். அந்தமான் சிறைச்சாலை கொடுமைகள் பேசிய படம். அதில் ஆங்கிலேய அதிகாரி தனது ஷுவை நக்கித் துடைக்கச் செய்யும் காட்சி ஈரக்குலையைப் பதற வைக்கும்.

செருப்புக் களவாணி எனச் சிலர் தரித்திரத்தின் காரணமாகத் தூற்றப்படுவார்கள். அற்பத்தனம்தான் என்று அறிவோம். ஆனால் ஆயிரமாயிரம் கோடிகள் களவாங்கும் கொள்ளைக்காரர்களுக்கு நாம் தூபமும் தீபமும் காட்டி வணங்குவோம். அதற்குமேல் விரித்துப் பொருள் உரைக்க நமக்கு அண்டி உறைப்பு இல்லை.

கல்யாண வீட்டு வாசலில், கோயில் வாசலில், திருட்டுக்குப் பயந்து, செருப்புக்களைக் கழற்றிக் கையில் வைத்திருக்கும் மஞ்சள் பையில் திணித்துக்கொண்டே உள் நுழைபவர்களைப் பார்த்திருக்கிறேன்.

கோவைக்கு மாற்றலாகி வந்தபிறகு திருத்தணி, ரேணிகுண்டா எனப் பணி செய்து கிடக்கப் பஞ்சாலைகளுக்குப் போவேன். ஒருமுறை மதியமே அன்றைய வேலை முடிந்தபடியால், மறுநாளும் வேலை இருந்ததால், இரவில் வழக்கம்போல் விடுதியில் படுத்து உறங்குவதற்கு மாற்றாக, பேருந்து ஏறி திருப்பதியில் இறங்கி, அங்கிருந்து தேவத்தானப் பேருந்து பற்றி திருமலையில் இறங்கினேன். திருவேங்கடவனைக் கண்டு தொழ அன்று வலிய மக்கள் தொகை இல்லை. எனது பணி நிமித்தம் செல்லும் பயணங்களில் நான் ஷு அணிவது பதிவு. செருப்பும் கொண்டு போவதில்லை இடமும் எடையும் ஓர்ந்து.

கோபுர வாசலில் ஷுவைக் கழற்றினேன். எந்த வாசலில் நுழைந்து எந்த வாசலில் வெளியேறுவோம் என்ற உறுதியும் இல்லை. புதியதாய் வாங்கிய இணை வேறு. அடுத்தநாள் காலணியின்றி நூற்பாலைக்குப் போக இயலாது. குழப்பமாக இருந்தது. கழற்றிய பாதணிகளைத் தோளில் கிடந்த ஜோல்னாப் பையில் திணித்து மறைத்துவிட்டு வழிபடப் போனேன். பிழை பொறுப்பவன்தானே இறைவன்? அபராதம் வாங்கினால், தண்டித்தால், இலஞ்சம் பெற்றால் அவன் போலீஸ்காரன் அல்லவா?

செருப்பு சார்ந்து சில பழமொழிகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

 1. நாய்த்தோல் செருப்பு ஆகுமா?
 2. உதவி கேட்டு நுழையாத வீடில்லை; வாங்காத செருப்படி இல்லை.
 3. தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது!
 4. புதுச்செருப்பு கடிக்கத்தான் செய்யும்.
 5. புதுச் செருப்பானாலும் வாசலுக்குப் புறத்தே!
 6. கஞ்சிக்கு வழியில்லே, காலுக்குப் புதுச் செருப்பு கேக்குது!

வழக்கமாக,  செருப்பணிந்து போ எனும் பொருளில், “செருப்புப் போட்டுக்கிட்டுப் போ” என்று அறிவுறுத்துவர் தாயர். கொங்கு நாட்டில் அதனையே “செருப்பைத் தொட்டுக்கிட்டுப் போ” என்பர். இப்போது கால் தொடு தோல், கழல் தொடு தோல் எனும் சொற்றொடர்களின் பொருள் புரிகிறது.

Tamil Proverbs என்றொரு நூலின் ஒளிநகல் படி ஒன்றைத் திருநெல்வேலியில் இருந்து நண்பர் அனந்தசங்கர் வழங்கியிருந்தார், சில ஆண்டுகளுக்கு முன்பு. 498+xxv பக்கங்கள். 3644 தமிழ்ப் பழமொழிகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும், ஆங்கில விளக்கக் குறிப்புகளும் அடங்கி இருந்தன. தொகுத்தவர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் (Rev. Herman Jension, Danish Missionary) சென்னையில் அருட்பணியில் இருந்தார். இந்த நூல் 1897-ல் பதிக்கப் பெற்றது. சி.வை. தாமோதரப் பிள்ளை வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

இந்தத் தொகுப்பின் சிறப்பு, இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவுமே அகரவரிசைப்படுத்தப்பெற்று, அச்சொற்கள் இடம் பெற்ற பழமொழி எண்களும் குறிக்கப் பெற்றுள்ளமை.

எடுத்துக்காட்டுக்கு அம்மி என்ற சொல்லைத் தேடினால் பழமொழி எண். 166 & 3594 என்ற தகவல் கிடைக்கும்.

பெருத்த ஊதியம் பெற்றுக்கொண்டு, எழுதிய ஒரேயொரு ஆய்வுக்கட்டுரையை முப்பது கருத்தரங்குகளில் வாசித்து சன்மானம் வாங்கி, உலகத் தமிழ் மாநாடெல்லாம் பங்கேற்று, எவர் ஆண்டாலும் அவருக்குத் தாம்பூலம் சுருட்டிக் கொடுத்துக் கல்விப்புலத்தைக் காக்கும் பூதங்கள் கருணை கூர்ந்தால் மொழிக்குள் என்னவெல்லாமோ நடக்கும்!

மேற்சொன்ன பழமொழிகள் திரட்டு நூலில் கண்ட, செருப்பு குறித்த சில பழமொழிகளை நீங்களும் அறியத் தருவேன். 

 1. முப்பது செருப்புத் தின்றவனுக்கு, மூன்று செருப்பு பணியாரம்!
 2. சென்மத்தில் பிறந்தது, செருப்பால் அடித்தாலும் போகாது!
 3. ஆற்றுக்குப் போனதுமில்லே, செருப்புக் கழற்றியதும் இல்லை!
 4. பல்லக்குக்கு மேல் மூடியில்லாதவனுக்கும் காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே!
 5. என் தோலை அவருக்குச் செருப்பாகத் தைத்துப் போடுவேன்!
 6. காலுக்குத் தக்க செருப்பும், கூலிக்குத் தக்க உழைப்பும்!
 7. காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?
 8. தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது!
 9. நான் செருப்பு விடுகிற இடத்திலே கூட அவன் நிற்க யோக்கியனல்ல!
 10. பூவுள்ள மங்கையாம், பொன் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்!
 11. புதுப்பெண்ணே, புதுப்பெண்ணே செருப்பு எடுத்து வா! உனக்குப் பின்னாலே இருக்குது செருப்படி!
 12. உச்சந்தலையிலே செருப்பால் அடித்தது போல!
 13. ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி!
 14. பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்தது போல!
 15. சீட்டாளுக்கு ஒரு மூட்டாளு; செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரன்!

கடைசிப் பழமொழியை சற்றுத் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய அரசியல் சூழலுக்கு அற்புதமாகப் பொருந்துவது தெரியவரும். அதனை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கப் புகுந்தால் நம் உயிருக்கு கிழிந்த செருப்பின் மதிப்பேதான்.

நாம் மேலே தந்த பட்டியலைத் தாண்டி ஏகப்பட்ட பழமொழிகள் மக்கள் வட்டாரத்தில் புழங்கக் கூடும். எனதிளைய படைப்பாளிகள் சு. வேணுகோபால், கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன், எம். கோபாலகிருஷ்ணன், குமார செல்வா, மலர்வதி, கீரனூர் ஜாகிர் ராஜா போன்றோர் தலைக்குப் பத்தாவது சொல்வார்கள். பிற மொழிகளினுள்ளும் சுவாரசியமான பழமொழிகள் இருக்கும் சர்வ நிச்சயமாக.

ஆக செருப்பு எனும் சொல்லின் ஆட்சி பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் வரை உளதென்று தாண்டிப் போய்விடலாமா?

அகநானூறு நூலில், மணிமிடை பவளம் பகுதியில், குடவாயில் கீரத்தனார் பாடல் ஒன்று –

“கொழுப்பு ஆதின்ற கூர்ம்படை மழவர்

செருப்புடை அடியர் தெண் சுனை மண்டும்”

என்று ஈரடிகள் பேசுகிறது. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை சொல்கிறார் – “கொழுத்த ஆக்களைக் கவர்ந்து சென்று கொன்று தின்ற கூரிய படைகளை உடைய மறவர்கள், செருப்பினைப் பூண்ட அடியராகி, தெளிந்த சுனை நீரை மிகுதியாகப் பருகும்” – என்று.

பசுக்களைக் கொன்று தின்ற குற்றத்துக்காக சங்ககால மறவர் மீது அல்லது புலவர் மீது இன்று தேசத்துரோகக் குற்றம் சாட்ட முடியுமா என்று தெரியவில்லை.

புறநானூற்றில் தேடினால் வன்பரணர் பாடல் ஒன்று செருப்பு எனும் சொல் பயன்படுத்தியமை தெரியவருகிறது. வன்பரணர் பகைவனைக் குறிக்கும்போது, “செருப்பு இடைச் சிறுபரல் அன்னன்” என்கிறார். அதாவது அவர் பாடும் மன்னரது பகைவர், செருப்பினடியில் கிடக்கும் சிறுபரல் போன்று சின்ன இடைஞ்சல்களைத் தருபவர் என்பது பொருள்.

நமது பழங்கோயில்கள் பலவற்றிலும் காலில் செருப்புடன் நிற்கும் சிற்பங்களை இன்றும் காணலாம். கம்பனே குகப்படலத்தின் இரண்டாவது பாடலில் குகனை அறிமுகம் செய்யும்போது,

“துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த

அடியன், அல் செறிந்தன்ன நிறுத்தினன்”

என்பார். துடி எனும் வாத்தியமும், வேட்டை நாய்களும் உடையவன். தோலால் செய்த செருப்பணிந்த பெரிய பாதங்களை உடையவன், இருள் செறிந்ததை ஒத்த நிறத்தை உடையவன் என்பது பொருள்.

இராமன் அணிந்திருந்ததனால் பாதுகம், இராவணன், குகன் அணிந்திருந்தது செருப்பு என எவரும் வித்தாரமாக விரித்துப் பொருளுரைக்க முயலவும் கூடும்.

கோல் ஆடக் குரங்கு ஆடும்!

***

3 Replies to “செருப்பிடைச் சிறுபரல்!”

 1. மீண்டும் ஒரு அருமையான கட்டுரை. ஆகா! செருப்புக்கு இத்தனை செந்தமிழ் சொற்களா?.அறிந்துகொள்ள வைத்தமைக்கு நன்றி ஐயா. தங்குதடையின்றி தமிழ் விளையாடும் மனமும் அதனை எடுத்தியம்பும் விதமும் அருமை. நிலங்களை பண்படுத்தி விளைவிக்கும் தங்களுக்கு மனங்களை உழுது பண்படுத்தும் கலை எளிதாக இயல்பாக தெரிந்திருக்கிறது அழகு. தங்கள் நினைவுகளின் இழைகளிலிருந்து சொற்களையும் நிகழ்வுகளையும் பின்னிப் பின்னி எங்கள் நினைவுகளில் சேமிக்கிறீர்கள். நீங்கள் எழுதி குவியுங்கள் நாங்கள் மனங்களை குவித்து கல்விச் செல்வத்தை குவிக்கிறோம். வாழ்க எம்மான் ! 💐💐💐💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

 2. செருப்பிடை சிறுபரல் அன்ன. உவமை மீதேறி செருப்புலாவை பழந்தமிழ் இலக்கியங்களூடே நாஞ்சில்நாடன் நம்மையும் மேற்கொள்ள வைத்துள்ளார்.வாழ்த்துகள். அவரது தமிழுக்காகச் செருப்பாக உழைக்கலாம். தேனி மாவட்ட ஏலத்தோட்டத்தொழிலாளர்கள் பாடும் நாட்டுப்புறப்பாடல் ஒன்று “… தந்தன. தன்னன தானே…எம் பொண்டாட்டிக்கு செருப்பு செஞ்சு தாலி போடுவேனே…” சங்கிலி என்ற பொருளில் செருப்பு பயன்படுகிறது. இப்படி விருப்பம் தேயும்வரை செருப்பைத் தேடலாம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ” உறுப்பறுந்துபோளாலும் கவலைப்படேன்…செருப்பறுந்ததற்கா கவலையுறுவேன்…நெருப்பு கொதிக்கும் தாரும் எனக்குகுளிர் நீர் ” என்று வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் பாடிய பாடலுண்டு. நன்றி.

 3. எளியவர் தின்பது சோறு ,இறையவர் உண்பது பிரசாதம் போல் செருப்புக்கும் அதற்கு மாற்றான மேட்டிமை பொருத்திய சொற்களையும் விளக்கியிருக்கிறீர்கள்

  செறுப்பு என்ற சொல் எங்கெல்லாம் இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டு இருக்கிறது என்பதை இவ்வளவு அழகாக சொல் மாலை தொடுத்து விளக்கிய நாஞ்சில் நாடன் ஐயா! உங்களை வணங்கி பாராட்டுகிறேன் .

  ஆர்வமாக படித்த ,ஆழங்கால் கொண்டு படித்த ஒருவரால் தான் இவ்வளவு அழகாக விளக்க முடியும் , தமிழ் உலகிற்கு கிடைத்த கொடைகளில் நீங்களும் ஒருவர் , இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.