சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு

தமிழாக்கம் : கோரா

1970களில், இத்தாலியன் அமெரிக்கரான சில்வியா ஃபெடெரிச்சி (Silvia Federici) அனைத்துலக பெண்ணியக் கூட்டமைப்பு  மற்றும் வீட்டு வேலைக்கு ஊதியம் கேட்பு இயக்கம் ஆகிய இரு அமைப்புகளை இணைகளாக  நிறுவினார். இந்த பொறுப்பால் அவர், சரக்குகள் மற்றும் சேவைகள் அளிக்கத் தேவைப்படுகின்ற ஆற்றல் வளமிக்க உழைப்புக்கு (productive labour) இன்றியமையாத  இதர உழைப்பு வடிவங்களாகக்  கருதப் பட்டு,  “ சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு”  (Reproductive labour ) என்று  பெயரிடப்பட்டுள்ள ஒரு  மார்க்சிய பிதற்றலின் மீது  தன் கவனத்தைக் குவித்தார். பலனளிக்கும் உழைப்புக்குத் தேவையான பிற உழைப்பு வடிவங்களாக கருதப்படுபவை: குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு, வீட்டு வேலைகளான சமைத்தல், தூய்மைப் பணிகள் மற்றும் கருவுற்றுப்  பிள்ளை பெறும் முறையில் வருங்கால உழைப்பாளர்களைப் படியெடுத்துக் கொடுத்தல். இவையனைத்தும்  காலங்காலமாகப்  பெண்களின் பொறுப்பாக்கப்பட்டிருக்கும்  நுகர் பொருட்கள் மற்றும் சேவைகள் உருவாக்கங்கள். முதலியம் இவற்றை  வலுவாகச் சார்ந்திருந்த போதிலும், இவற்றை  ஊதியம் பெறத்தக்க வேலைகளாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவை  தனி நபர் நடவடிக்கை வட்டத்திற்கானவை, வழக்கமாக நாம் பொருளாதாரம் என்று குறிப்பிடும்  துறைக்கு உரியன  அல்ல என்று கருதப்பட்டன.

குடும்பங்களில் பெண்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறை மற்றும் சுரண்டல்களும், தொழிற்சாலையில் உழைப்பாளிகள் எதிர்கொள்ளும்  அடக்குமுறை மற்றும் சுரண்டல்களும் இயல்பாகவே சம்பந்தப் பட்டிருந்தன என்பதை தொழிலாளர் மற்றும் சோசியலிஸ்ட் இயக்கங்கள் நீண்ட காலமாகக்  கவனிக்கத் தவறிவிட்டன. இதனால்  குடும்பப்  பராமரிப்புக்குரிய உழைப்புக்கு ஊதியம் கோரல் எழுச்சிகள், பிற கோரிக்கைகளான  ஆண்கள் -பெண்கள் சமத்துவம்,  மற்றும் சமச்சீர்மை (parity) ஆகியவை  ஒப்புக் கொள்ளப்பட  வேண்டுமென நம்மை  வலியுறுத்துவதோடு  உழைப்பு, உற்பத்தித்திறன் போன்ற கருத்துருக்கள் குறித்த நம் கற்பிதங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.  ஃபெடெரிச்சி-யின் காலிபான் அண்ட் த வி(ட்ச்) என்ற நூல் வரலாற்றுப் பின்னணி கொண்ட தத்துவ ஆய்வு நூல்.  இது, முதலிய (Capitalism) உதயத்தின் உடன்நிகழ்வாக இருந்தவை பெண்ணுடல் மீது மேன்மேலும் அதிகரித்து வந்த அடக்குமுறை மற்றும்  அதிகாரம் செலுத்துதல் எனக் கூறுகிறது. அதன் விளைவே  ஆரம்ப நவீனகாலத்தின்  பெருநிகழ்வுகளான சூன்யக் காரி வேட்டை போன்ற துன்புறுத்தல்கள் எனவும் கூறுகிறது.

Reenchanting the World :Feminism and the politics of commons (உலகை மீளவும் வசியப்படுத்தல்  : பெண்ணியமும் பொதுமங்களின் அரசியலும்)  என்பது ஃபெடெரிச்சி முன்பு பிரசுரித்த கட்டுரைகளையும் அதிகாரங்களையும் அடக்கிய தொகுப்பு நூல். நூலின் முதல் மூன்று உருப்படிகளும் Midnight Notes Collectives-ன் புது இணைப்புகள்  பகுதியில் 1990 வெளியீட்டில் அவரால் பதிப்பிக்கப் பட்டவை. பிற அனைத்து உரைப் பகுதிகளும் 2010க்குப் பின் பதிப்பிக்கப் பட்டவை. இது எவ்வளவு காலம் ஃ ஃபெடெரிச்சி இதே முனைப்புகளுடன் பணியாற்றி வருகிறார் என்பதைக் காட்டுவதோடு- அவை புது மோகமாக ஆகும் முன்பிருந்தே – அவர் இவற்றைப் பற்றி அக்கறை கொண்டிருப்பதையும் காட்டுகிறது. இத்தனை நீண்ட காலம் கழித்து   இந்தப் படைப்புகள் பிரசுரமானதால் தனிப் பிரசுரங்களாக அவை வெளியான முந்தைய காலத்தை விட, தற்போதைய முழுநூல் குறைவான இணக்கத்தன்மை கொண்டதாக ஆனதற்கு காரணமாகிவிட்டது. கருத்துரு மற்றும் தத்துவ நோக்கில், இந்நூல் டேர்டாட் மற்றும் லாவல் படைப்பின் அளவுக்கு  பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. இருப்பினும்  இவரது பொதுமங்கள் குறித்த விவாதங்கள் மற்றும் படைப்புகள், வரவேற்கத் தக்க இரு கூடுதல் விஷயங்களைக் கொண்டு வந்துள்ளன: முதலாவது அவரது  பெண்ணியம் மற்றும் காலனித்துவ எதிர்ப்புப் பார்வை;  இரண்டாவது அவர் நூல்களில் குறிப்பிட்டுள்ள உண்மையான, கணிசமான மேற்கோள்கள்.

அவர் பார்வையை எடுத்துக் கொண்டால், பொதுமங்களில் பெண்ணியக் கண்ணோட்டம் எனக் கருத்துகளைக் கூறுவது ஏற்புடையதல்ல;  ஏனெனில் பொதுமங்கள் என்னும் கருத்துப்படிவம் இயல்பாகவே அந்தப் பார்வையை குறிப்பால் உணர்த்துகிறது அல்லது உணர்த்த வேண்டும் என்று ஃ ஃபெடெரிச்சி தெளிவுபடுத்துகிறார். இனவிருத்திக்களம் பரம்பரைப் பழக்கமாக பொதுமங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.  அடிப்படையாகவே அது உயிரைப் பேணிப் பாதுகாக்கும் பணி. எனவே சந்ததிகள் உருவாக்க உழைப்பிற்குத் (reproductive labour) தலையாயவர் என்கிற வகையில் பெண்ணுக்கு பொதுமங்களுடன்  திடமான இணைப்பு நிலவுகிறது; வரலாற்றில் பெண்கள் பெரும்பாலும்  பொதுமங்களின் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த இணைப்பு பறிபோனதால் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள். Caliban and the Witch-ல் ஃ ஃபெடெரிச்சி பொதுமங்களில் ஒன்றாக இருந்த பெண்ணுடலும் கூட உழைப்பாளிகளின் உருவாக்கத்துக்காகப் பறிக்கப் பட்டது என்று புரிந்து கொள்கிறார்; அதன் விளைவுகள், கருக்கலைப்பு மீது சுமத்தப்படும் கண்டிப்பான தடை உத்தரவு; பெண்ணுக்குரிய சிறந்த படிமம்  கற்புள்ள, கீழ்ப்படிகிற தாய் மற்றும் குடும்பத் தலைவி என்ற நிபந்தனை.

இதைப்  போன்ற உரிமை பறிப்பு நடைமுறைகள்,  ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், இன்றும் நடப்பு நிலையாக இருப்பதை நூலில் உள்ள மிகப் பல சான்றுகள் காட்சிப் படுத்துகின்றன. ஃ ஃபெடெரிச்சி நைஜீரியாவில் பேராசிரியராகப்  பல ஆண்டுகள் பணியாற்றியவர். அந்த நாட்டில்  பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்டிர் விடுதலை ஆகியவற்றின்  இயக்கு சக்தியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலக வங்கி முன்னிறுத்திய சிறுகடன் உதவித் திட்டத்தை  அவர் கடுமையாக விமர்சிக்கிறார். சிறுகடனுதவி எவ்வாறு தொழில் முனைவு முதலிடல் (investing in entrepreneurship) என்ற பொருளாதார தர்க்கத்தை அறிமுகப் படுத்துவதோடு  (நடைமுறையில் இது பொதுமங்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது) அதன் செயல்பாட்டில்  எவ்வாறு கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள்  – எந்த சூழல் காரணமாக ஏற்பட்டாலும்- பலர் முன்னிலையில் பெண்களை அவமானப்படுத்தவும் அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றவுமே (சூனியக்காரிகள் வேட்டையின் புதிய பதிப்பாக) பயன்பட்டு வருகிறது என்று காட்டுகிறார். எனவே பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கனவே கடன் எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றிவிட்டதற்குக் காரணங்கள் உண்டு.

சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு (Reproductive labour) என்னும் கருத்துரு

 ஃ ஃபெடெரிச்சியின்   கவனக் குவியமாக இருந்ததால்,  உருமாறிய பணிகள் கொண்ட சமூகம் (post-work society) எனக் குறிப்பிடப்படும், மார்க்ஸ் தோற்றுவித்த ஒரு தொழில் நுட்ப கற்பனாவாதம் காட்டும் மார்க்சிய தொலைநோக்கின் மீது குறைந்த அளவே ஆர்வமும் நம்பிக்கையும்  கொண்டிருக்கிறார். (இதே போன்ற தொழில்நுட்பக் கற்பனாவாதத்தை  பிற்காலத்து  இத்தாலிய ஸ்பினோசாவின் சாயத்தில் தோய்ந்த மார்க்சிய சிந்தனையாளர்களான அந்தோனியோ நெக்ரி போன்றோரிடமும்,  அவருடைய சமகால கோட்பாட்டாளர்களான பால் மேசன் மற்றும் ஆரோன் பஸ்டானி போன்றோரிடமும் காண்கிறோம் ). உதாரணமாக முழு தானியங்கி சொகுசுப் பொதுவுடைமை (Fully Automated Luxury Communism) என்ற நூலில், பஸ்டானி கீழ்கண்ட இன்பலோக சிவப்பு வளமைச் சித்திரத்தை வரைகிறார். ( ஃப்ரான்ஸிஸ் ஸ்பஃபர்ட் என்பவர் எழுதிய Red Plenty:Inside the Fifties’ Soviet Dream-1950-70 களில் தோன்றி மறைந்த சொற்ப கால சோவியத் பொன்னுலகு  பற்றிய புனைவு; இதில் சாமான்யரும்  சொகுசு வாழ்க்கை வாழ முடியும் என்று சித்திரிக்கப்பட்டது.) பஸ்டானியின் வர்ணிப்பு: ரோபோட்கள் எங்கள் வேலைகளை எடுத்துக் கொண்டுள்ளன; மின் வாகனங்கள் நம்மை உலகைச்  சுற்றிலும்  ஏற்றிச் செல்கின்றன. குறுங்கோள் சுரங்கங்கள் மற்றும் சூரியப் பூங்காக்கள்  நமக்கு மூலப் பொருட்களையும் ஆற்றலையும் வழங்குகின்றன. நாம் வளர்ப்பு இறைச்சி பர்கர்களையும் செயற்கை மதுவையும் உட்கொள்கிறோம். இவை போன்ற எதிர்காலம் பற்றிய கோட்பாடுகள் மற்றும் தொலை நோக்குகளில் ஆண்களின் குருட்டுத் தனம் பற்றி நாம் ஐயம் கொள்ள வேண்டியதில்லை: தானியங்கு வகையாக்கப் படும்  வேலைகள் எப்போதும் விதிவிலக்கு இல்லாமல் உற்பத்தி செய்யக் கூடிய தொழிலக உழைப்பு சார்ந்தவை மட்டுமே. சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு சார்ந்தவை அல்ல. இதற்கான நியாயத்தைக் கேட்கும் விதமாக ஃபெடெரிச்சி தன் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

குளிப்பாட்டுதல், கட்டித்தழுவுதல், ஆறுதல் அளித்து தேற்றுதல், ஆடை அணிவித்தல், குழந்தைக்குப் பாலூட்டுதல், பாலுறவு சேவை வழங்குதல், நோயுற்றோருக்கு அல்லது  சுய தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத முதியோருக்கு உதவுதல் இவற்றையெல்லாம் எப்படி எந்திரமயமாக்க முடியும்? அத்தகைய சாதனங்களுக்கான செலவை நம்மால் தாங்கிக் கொள்ள முடியும் என்று கருதிக் கொண்டாலும், உயிருள்ள உழைப்பாளிகளுக்கு மாற்றாக எத்தகைய  உணர்வு பூர்வமான விலை கொடுத்து அவற்றை நம் வீடுகளில் அறிமுகப் படுத்தப் போகிறோம்?

உழைப்பைத்   தன்னியக்கப் படுத்துதல்  மூலம் வீட்டு வேலைகள் சமமாக பங்கிடப் படுகின்றன அல்லது இன்னும் ஏராளமான வீட்டு வேலைகளையும் கூட எந்திர மயமாக்க முடியும் என்கிற எண்ணம் மனதில் தோன்றலாம்; ஆனால் தூசு உறிஞ்சி மற்றும் துணி துவைக்கும் எந்திரம் ஆகியவற்றின் வரலாறுகள் வேறு கதைகளைக் கூறுகின்றன. பொதுமங்கள் நிலைப்பாடு இங்கும் கூட சரியாகப் பொருந்துகிறது. பழமைவாதியான மேக்ஸ் வெபர்-ன் “மாயையிலிருந்து விடுதலை” (disenchantment ) என்னும் கருத்துப்படிவத்தை  எதிர்த்து மேலைநாடுகளின் நவீன மயமாக்கல் ஆதரவாளர்கள் சொற்போரில் இறங்கியது போலவே, இன்றைய பொதுமங்கள் மற்றும்  சந்ததிகளை உருவாக்கும்  உழைப்பு ஆகிய கருத்துருக்கள்- அற்பமானவை, எனவே நாம் புறக்கணிக்கக் கூடியவை  அல்லது பிற்போக்குக் கருத்துக்கள், நாம் நிச்சயமாக கடந்து மேற்செல்ல வேண்டியவை-என்று வெறுப்புடன் நோக்கப் படுகின்றன. இக்கருத்தைக் கொண்ட  முதலியர்களும்  மற்றும்  உருமாறிய பணிகளின் உலகுக்கு ஆதரவாளரான  மார்க்சிஸ்ட்களும் தம் கருத்தை  வெளியிட்டால்  முரண்பாடுகளில்  சிக்கிக் கொள்வார்கள். 

ஃ ஃபெடெரிச்சி பயன்படுத்தும் பொதுமங்களின் கருத்துப் படிவம் பலவிதங்களில் டேர்டாட் மற்றும் லாவல்-ன் கருத்துப் படிவத்தை ஒத்திருக்கிறது. அந்த பிரெஞ்சு இரட்டையரைப் போலவே, இவரும் பொதுமம்  பற்றி  சிந்தித்தல் முந்தைய, மேம்பட்ட சூழ்நிலைக்குத் திரும்பும்படி கூறும் தற்காப்புக்கான கருத்துரை  அல்ல என்று வலியுறுத்துகிறார். பொதுமங்கள் கடந்த காலத்துக்கு மட்டுமானவை இல்லை, எல்லா காலங்களுக்கும் உரியவை. மானிடம் நீடித்திருக்க வேண்டுமானால் பொதுமங்கள் வருங்காலத்துக்கும்  உரியதாக இருக்க வேண்டும். பொதுமங்கள் அடிப்படையில் சிந்தித்தல்  முதலியத்துக்கு எதிரானதாகத்தான்  இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை என்பதும் தெளிவாகி இருக்கிறது. உதாரணமாக ஒஸ்ட்ரோம் சரியான ஒரு முற்போக்கு வாதி, நிச்சயமாக முதலிய எதிர்ப்பாளர் அல்ல. முதலியம், மாற்றமின்றி பொதுமங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது, பொதுமங்கள் மீதான போதையைப் (commons-fix என்பது மாஸ்ஸிமோ டி ஆஞ்சலிஸின் புத்தாக்க சொல்) பயன்படுத்தி நெருக்கடிகளைத்  தனக்கு  சாதகமாக்கிக் கொள்கிறது. உதாரணமாக, முதலிய உற்பத்தி,ச ந்ததிகளை உருவாக்கும் உற்பத்தியை சார்ந்திருக்கிற  நிலைமையைச்  சிந்தித்துப் பாருங்கள். அடிமைத் தளைகளை அறுத்து விடுவிக்கப் பட்டுள்ள  மேற்கத்திய நாடுகளில் இப்படி மற்றவர் ஆதரவில் வாழும் உறவு முறைகள் மறையவில்லை, இடம் பெயர்ந்துள்ளன என்றே கருத வேண்டும்: ஆண்களும் பெண்களும் முழுநேரப் பணிகளில் இருக்கும் அமெரிக்க குடும்பங்கள், குறைவான ஊதியத்தில்  பராமரிப்புப் பணிபுரியும் பிலிப்பினோ செவிலித் தாய்மார்கள்களையே பெரும்பாலும்  சார்ந்திருக்கிறார்கள். இதையொட்டி  செவிலித் தாய்மார்கள் தம் வீட்டினுள்ளேயே  பாட்டிகளுக்கு குழந்தைகள் பராமரிப்பை கை மாற்றிக் கொடுக்கிறார்கள்.

உலக வங்கி பயன்படுத்தி வரும் உலகளாவிய பொதுமங்கள் (Global Commons ) என்னும்  சொல்லாடல், முதலியம் கண்டுபிடித்த  பொதுமக் கருத்துப் படிவத்தின் சுருக்கம் ; அது பெருங்கடல்கள், வளிமண்டலம் மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளையும் இன்னும் பலவற்றையும் குறிப்பிடுகிறது. வேலைகளின் வழியே  பொதுமங்களைப் பேணிக்காத்தல் அதன் குறிக்கோள். ஆனால் அது நடைமுறையில்  மூலப் பொருட்களின் மேலாண்மை மற்றும் பகிர்மானங்கள், வல்லரசுகள் மற்றும் பணக்கார நாடுகளுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள ஏதுவாக்கி  இருக்கிறது. கரிம உமிழ்வுகளையும் வர்த்தகப் பொருளாக்கியுள்ளது இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இதன் காரணமாகத்தான்  கருத்துப் படிவத்தின் துல்லியமான பயன்பாடு மிக முக்கியம் என்று ஃ ஃபெடெரிச்சி வாதிடுகிறார். அவருடைய எழுத்துகளில் பல முறை  “சமூகப் பங்கேற்பற்ற பொதுமம் வேண்டாம்” என்ற பதாகை வாசகத்தைப் பயன்படுத்துகிறார்.  டேர்டாட் -லாவல் வழித்தடத்தில் பயணிக்கும் ஃபெடெரிச்சி-யும்   பொதுமங்கள் என்றால் பொருட்கள் எனப்  புரிந்து கொள்ளப்படக் கூடாது;  சமூக உறவுகள் என்ற புரிதல் வேண்டும் என்று நம்புகிறார் : அதாவது ஒருமித்த தீர்வு காணல் நடைமுறைகள், சமூகக் கூட்டாண்மை,  பகிரப்படும் மற்றும் நிர்வகிக்கப் படும் வளங்களின்  அடிப்படையில் பரஸ்பர பொறுப்புள்ள தொடர்புகள்  ஆகிய அனைத்தையும்  பொதுமங்கள் என்ற கருத்துப் படிவம் உள்ளடக்கி இருக்கிறது என்கிறார். உலகளாவிய பொதுமங்கள் என்ற பெயரால் அறியப் படுகிறவற்றில்  உலகளாவிய சமூகக் கூட்டமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. உண்மையில் பாதுகாத்தல் என்ற கொள்கை விளம்பரத்தைக் காட்டி , மழைக் காடுகளில் (rain forests) பூர்வீக குடிமக்களின் நிலங்கள்  மற்றும் பிற உபயோகங்களுக்காக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த பொதுநிலங்கள் அனைத்தும் பறிக்கப் படுகின்றன; உரிமையாளர்கள் வெளியேற்றப் படுகிறார்கள்; எல்லாமே சுற்றுச் சூழல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணக்கார முதலீட்டாளர்கள்  பயன்பாட்டுக்காக நுகர்பொருட்களாகின்றன.

***

சொல்லடைவு:

Caliban and the witch:Women, the Body and the Primitive Accumulation – இது சில்வியா ஃ ஃபெடெரிச்சி 2004-ல் எழுதிய நூல் . ஃபெடெரிச்சியைப் பொறுத்தவரை, நிலப்பிரபுத்துவம் முதலியமாக மாற்றம் அடைந்த நிகழ்வின்  மையக் கதா பாத்திரம் பெண்ணுடல். எந்திரங்களாக நடத்தப்படக் கூடிய தொழிலாளிகளைப் பெற்றெடுப்பதற்காக பெண்கள் அடிமைப் படுத்தப் பட்டார்கள் என்று அவர் வாதிடுகிறார். முதலிய எழுச்சியின் போது, சமூகத் தேவைகளுக்கேற்ப குடும்ப உறவுகளை மறு சீரமைப்பு செய்யவும் சமூகத்தில் பெண்களின் பங்கை நிர்ணயிக்கவும் சூனியக்காரி வேட்டை போன்ற சமூக வழித் துன்புறுத்தல்களைப் பயன்படுத்தினார்கள் என்று வாதிடுகிறார்.

Hip: hipster-ன் சுருக்கம். நவ நாகரிக நடை, உடை, பாவனை, சொல்லாடல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உடனே பின்பற்றுபவர்.

Post-work society: வேலைகளின் இயல்பில் தீவிர உருமாற்றம் ஏற்பட்டுவிட்ட வருங்கால சமூகம்.

cultural rationalization: பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட மாயாஜாலம்,மந்திர வித்தை, சூனியம் போன்ற  கருத்துக்களையும்   மற்றும் இயற்கையைக் கடந்த அமானுஷ்ய, தெய்வீகக் கருத்துக்களையும்  பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து நிராகரித்தல்.

Disenchantment: (மருள் நீக்கம் அல்லது மாயையில் இருந்து விடுவிப்பு ): சமூக அறிவியலின்படி இதன் பொருள் நவீன சமூகத்தில் மிகுந்து காணப்படும்   பகுத்தறிவு நோக்குப் பண்பாட்டுக் களையெடுப்பு மற்றும் மதங்களின்  மதிப்பிழப்பு ஆகியன. இந்த கலைச்சொல் 1918-ஆம் ஆண்டில் Max Weber என்னும் ஜெர்மன் சமூகவியலாளரால் பிரபலப் படுத்தப் பட்டது.

Max Weber:1864-1920 ஜெர்மன் சமூகவியலாளர் மற்றும் அரசியல் பொருளியலாளர்.  அதிகாரத்துவம் (Bureaucracy) மற்றும் முதலியம் பற்றி ஆய்ந்தவர். அறிவியல் வழிமுறைகள் வருகை மற்றும் விவரம் தெரிந்த விவேகமுள்ள விவாதங்களின் பயன்பாடு ஆகியவற்றால்,  உலகம் தெளிவு மற்றும் எளிமைப்படுத்தப் பட்டு விட்டது என்று கருத்து தெரிவிக்கிறார்.

Aaron Bastani: பிரிட்டிஷ் எழுத்தாளர். இவர் “Fully Automated Luxury communism:A Manifesto” என்ற நூலை எழுதியுள்ளார்.

Commons-fix: Massimo De Angelis பயன்படுத்தும் புத்தாக்க சொல்லாடல். பொதும நெருக்கடிகளுக்கு முதலியத்தின் துரித அணுகுமுறை.      

சுட்டி:

https://www.eurozine HYPERLINK “https://www.eurozine.com/the-commons-versus-capitalism/”.com/the-commons-versus-capitalism/

கட்டுரையின் Reproductive Labour பகுதிகள் மட்டுமே இங்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

Series Navigation<< முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2பொதுமங்களும் அரசாங்கமும் >>

One Reply to “சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு”

  1. சிந்தனைக்குரிய கட்டுரை. நிலவுடமைச் சமூகமும் , முதலாளியச்சமூகமும் பெண்களை பிள்ளைகளை உற்பத்திஎந்திரமாகவும், பாலியலின்ப நுகர்வு உயிரிகளாகவுமே அனுகுவதில் பெரிய மாற்றமில்லை. மாறுதலுக்கான கல்வியும் உணர்வை பெற்று உய்ய நினைப்பவர்களை முதலியம் சமச்சீரற்ற சூழலை உருவாக்கி பெண்களை வீழ்த்தி தம் முதலிய நலனுக்கு பயன்படுத்த முனைகின்றன.இந்தப்போர் தொடரும் பெண்களை சக உயிரியாகவும் சமவாய்ப்புகளுக்குரியவள் என்று ஏற்று சமூகம்இயங்கும் வரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.