பாவண்ணனுடன் ஒரு நேர்காணல் – மதுமிதா
பாவண்ணன் என்னும் புனைப்பெயரில் எழுதி வருபவர் பா. பாஸ்கரன். பதினைந்து சிறுகதைத் தொகுதிகள், இரண்டு குறுநாவல்கள், மூன்று நாவலகள், மூன்று கவிதைத்தொகுதிகள், குழந்தைகளுக்கான இரண்டு பாடல் தொகுதிகள், பதினைந்து கட்டுரைத் தொகுதிகளை அளித்தவர். இவருடைய பாய்மரக்கப்பல் என்னும் நாவல் 1995 ஆம் ஆண்டு இலக்கிய சிந்தனை விருதைப் பெற்றது. அதே ஆண்டில் இவர் எழுதிய பயணம் என்னும் சிறுகதை கதா விருதைப் பெற்றது. 2005 ஆம் ஆண்டு இவர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த பருவம் என்னும் நாவலுக்கு சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றிருக்கிறார்.

கேள்வி: ’பாவண்ணன் தமிழ் வாழ்க்கையை தமிழில் சிந்தித்து எழுதியிருக்கிறார்’ என்று உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ புத்தக முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் முதல் தொகுப்புக்கும் இருபத்திநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் ‘பொம்மைக்காரி’ தொகுப்புக்கும் இடையேயான வாழ்க்கை அனுபவங்கள் என்னவகையான மாற்றத்தினை உங்கள் எழுத்தில் கொண்டுவந்திருக்கின்றன என நினைக்கிறீர்கள்?
பதில்: முதல் சிறுகதையை எழுதும்போது உருவான பதற்றத்துக்கு சற்றும் குறைவில்லாத அளவில்தான் புதிதாக எழுதுகிற ஒவ்வொரு சிறுகதையின்போதும் பதற்றம் உருவாகிறது. அந்தப் பதற்றத்திலிருந்து எனக்கு விடுதலையே கிடையாது. ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு புதிய கோணத்தின் வழியாக வாழ்க்கை காட்டப்படவேண்டும். இது ஒரு பெரிய சவால். பத்து சிறுகதை எழுதிய அனுபவத்தில் பதினோராவது சிறுகதையை எழுதிவிடமுடியாது. புதிய கோணத்துக்கான தேடல்தான் அந்தப் பதற்றம். அதைக் கண்டடையும் தருணத்தில்மட்டுமே அடுத்த கதையை எழுதமுடியும். கன்னியாகுமரியில் சூரியோதயம் பார்க்க ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கூட்டம்கூட்டமாக மக்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களோடு நானும் ஒருவனாக நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். பல தருணங்களில் அந்த உதயத்தைப் பார்க்கமுடிந்ததில்லை. மதிலின் பின்புறமாக ஏறிவந்து முகத்தைமட்டும் காட்டிச் சிரிக்கும் சிறுவனைப்போல கண்ணுக்குத் தெரியாமலேயே மேகங்களைப் பற்றியேறி முகம்காட்டிச் சிரித்தபடி சூரியன் நகர்ந்துபோய்விடும். கதைக்கான கோணத்தைக் கண்டடையும் தருணத்துக்காகக் காத்திருப்பதுகூட இப்படி சூரியனுக்குக்காகக் காத்திருப்பதுபோலத்தான். வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு ஏராளமான புதிய மனிதர்களின் சந்திப்புக்கு வழிவகுத்திருக்கின்றன. பல புதிய இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பல புதிய காட்சிகளைப் பார்க்கமுடிந்திருக்கிறது. நாடெங்கும் பரந்து விரிந்திருக்கிற மலைகள், காடுகள், கடல்கள், ஆறுகள், கோவில்கள் என பலவிதமான நிலக்காட்சிகளில் மனம்தோய நிற்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. ஒவ்வொரு நிலமும் பலவிதமான பருவங்களில் எப்படியெல்லாம் மாற்றம் பெறும் என்பதை அருகில் காத்திருந்து பார்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது. அக உலகம் இன்னும் இன்னும் என விரிவடைந்துகொண்டே போகிறது. கண்டடையும் தருணத்துக்காகக் காத்திருக்கும் பொறுமையையும் காத்திருத்தலை இனிய கணங்களாக மாற்றித் துய்க்கும் ஈடுபாட்டையும் இந்த வாழ்க்கை அனுபவங்கள் தகவமைத்துக்கொடுத்துள்ளன. வன உயிர்களைப் படமெடுக்கும் புகைப்படக்காரர்களைப் பார்த்திருப்போம். எவ்வளவு மணிநேரம் காத்திருக்கிறார்கள் அவர்கள். எவ்வளவு மணிநேரம் அலைகிறார்கள். எல்லாமே ஒரு படத்துக்காக அல்லவா? மிகச்சிறந்த கோணத்தில் அந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்பதுதானே அவன் கனவாக இருக்கும்? ஒரு நல்ல சிறுகதைக்கும் இது பொருந்தும். ஒரு மகத்தான கோணத்துக்காக ஒவ்வொரு படைப்பாளியும் கனவு காண்கிறான். மகத்தான கோணத்துக்கான கனவுதான் ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ முதல் ’பொம்மைக்காரி’ வரைக்கும் என்னை இயக்கி வருகிறது.
கேள்வி: அப்படியென்றால் கதைக்கரு முக்கியமில்லையா?
பதில்: முக்கியம்தான். அந்த முக்கியமான கருவை முக்கியமான கோணத்தில் சொல்லவேண்டும் என்பதுதான் ஒரு சிறுகதையாளனின் கனவு.
கேள்வி: சொந்த வாழ்க்கை நிகழ்வுகளின் கட்டுரைத்தன்மை மிகுந்ததாக இன்றைய சிறுகதை மாறிவருவதைப் பார்க்கிறேன். இவ்வகையான எழுத்துநடை சிறுகதை இலக்கியத்தில் எவ்வகையான மாற்றத்தை அளித்திருக்கிறது.
பதில்: காலம்தோறும் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிலையான வடிவம் அல்லது நிலையான சொல்முறை என எதுவுமில்லை. புதுமையை எப்படி அடைகிறோம் என்பதுதான் முக்கியம். நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு பிரயாணம் அல்லது ஏதோ ஒரு ஊர் அல்லது ஏதோ ஒரு பழைய ஞாபகம்பற்றிய விவரணையாகவே கதையின் பெரும்பகுதி அமைந்திருக்கும். அவர் தரும் சுவாரசியமான குறிப்புகளால் அந்த விவரணைகளை நாம் ஆர்வத்தோடு படிப்போம். சட்டென்று ஒரு கட்டத்தில் விவரிப்பின் கோணம் மாறி, அந்தக் கட்டுரை கதையாக மாறிவிடும். ஒரு பேருந்து பிரயாணம்பற்றிய கதை உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். நெரிசலால் வண்டியே பிதுங்குகிறது. ஓட்டுநர் கசப்பும் எரிச்சலுமாகவே காணப்படுகிறார். வெறுப்போடு வண்டியை ஓட்டிக்கொண்டே சென்றவர் சட்டென்று ஓரிடத்தில் பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்துகிறார். எல்லோருடைய கவனமும் பாதையின்மீது திரும்புகிறது. ஒரு பாம்பு மெதுவாக பாதையைக் கடந்து செல்கிறது. வயிற்றில் குட்டியைச் சுமந்த பாம்பு. வயிற்றிலே கருவைச் சுமப்பது மகளாக இருந்தாலும் பாம்பாக இருந்தாலும் ஒன்றுதானே. இரண்டுமே தாய்மை அல்லவா? வண்டியை நிறுத்திய ஓட்டுநர், பாம்பைப் பார்த்து, “போடி மோளே போ” என்று அமைதியாகச் சொல்கிறார். எரிச்சல், கோபம், கசப்பு, வெறுப்பு என எல்லாமே ஒரே கணத்தில் வடிந்துபோகின்றன. கருணை மட்டுமே வெளிப்படுகிறது. சாக்கடையைச் சல்லடையால் அள்ளிச் சலித்துச்சலித்து பொன்துகளைக் கண்டெடுப்பதுபோல, கதை மானுட மனத்தில் உள்ள கருணையின் புள்ளியைத் தொட்டுக் காட்டி மறைந்துவிடுகிறது. அ.முத்துலிங்கம் அவர்களின் சில கதைகளிலும் இது சாத்தியமாகியிருப்பதை நாம் பார்க்கலாம்.
கேள்வி: மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதினை உங்களுக்குப் பெற்றுத்தந்த பைரப்பாவின் ‘பருவம்’ நாவலை மகாபாரதக் கதாபாத்திரங்களின் அகவய உணர்வுப் போராட்டங்களின் வெளிப்பாடாகப் பார்த்துத் தமிழாக்கம் செய்தீர்களா? அந்தப் படைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
பதில்: மகாபாரதம் சிறுவயதுமுதல் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. அதன் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகைமாதிரி. நவீன நாவலாக அதை ஒருவர் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. நான் ’பருவம்’ நாவலை முதலில் படிக்கவில்லை. தமிழில் வெளிவந்த ’ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவல் வழியாகத்தான் பைரப்பாவைப்பற்றி நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன். எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது. பிறகுதான் அவருடைய ‘வம்சவிருட்சம்’ நாவலைத் தேடியெடுத்துப் படித்தேன். அப்போது சந்திக்க நேர்ந்த எல்லா நண்பர்களிடமும் இவ்விரண்டு நாவல்களைப்பற்றியும் பேசிக்கொண்டே இருந்தேன். அப்போதுதான் என் நண்பரொருவர் ’பருவம்’ நாவலைப்பற்றி எடுத்துச் சொன்னார். அவருக்கு அது பிடித்த படைப்பாக இல்லை. ’எப்படியெல்லாம் எழுதிய பைரப்பா இப்படி எழுதிவிட்டாரே’ என்கிற ஆதங்கத்தோடுதான் சொன்னார். ’மகாபாரதத்தின்மீது கறைபூசிவிட்டார்’ என்று கசந்துபோய்ப் புலம்பினார். ’விருப்பமிருந்தால் படித்துப் பார்’ என்று கடைசியாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அதுவே என்னை அந்த நாவலைப் படிக்கத் தூண்டியது. மொத்த மகாபாரதக்கதையும் பெண்பாத்திரங்கள் வழியாக முன்வைக்கப்படுகிறது. அவர்கள் உணரும் வலி, போர்பற்றிய அவர்களுடைய எண்ணங்கள், அவர்களுடைய அனுபவங்கள், அவர்களுடைய வேதனைகள் எல்லாவற்றையும் தொகுத்துச் சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது. நீங்கள் குறிப்பிடுவதுபோல பெண்பாத்திரங்களின் அகவயப் போராட்டங்களின் சித்தரிப்புகள் ஒவ்வொன்றும் உச்சம் என்றே சொல்லலாம். பருவம் நாவலைப் படித்த சமயத்தில், கன்னட இலக்கிய வாசகனாகமட்டுமே நான் இருந்தேன். இது நிகழ்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன். முதன்முறையாக சாகித்திய அகாதெமி எனக்கு மொழிபெயர்க்கும் வாய்ப்பை வழங்கத் தயாராக இருந்தபோது, இந்த நாவலை மொழிபெயர்க்கும் வேலையை நானாகவே கேட்டுப் பெற்றேன். திரௌபதியை மையப்பாத்திரமாகக் கொண்டு ஒரு பெரிய நாவல் எழுதும் ஆவல் அப்போது எனக்குள் இருந்தது. அதை எழுதும் முன்பு ஒரு பயிற்சியாகவும் மனத்தயாரிப்பாகவும் இருக்குமென நினைத்து, ‘பருவம்’ நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கிமுடித்தேன்.
கேள்வி: உங்கள் நாவலை எழுதினீர்களா?
பதில்: எழுதவில்லை. அது இன்னும் மனத்தின் அடியிலேயே இருக்கிறது.
கேள்வி: கர்நாடகம் சென்றபிறகுதான் கன்னட மொழியைக் கற்றுக்கொண்டீர்களா?
பதில்: ஆமாம். 1982 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொலைபேசித்துறையில் இளம்பொறியாளராக பெல்லாரி மாவட்டத்தில் இணைந்தேன். எஸ்.டி.டி. வசதிக்காக பெருநகரங்களையும் சிறுநகரங்களையும் கேபிள்வழியாக இணைக்கும் பிரிவில் எனக்கு வேலை தரப்பட்டது. பெல்லாரி, ஹோஸ்பெட், கொப்பள் என மூன்று நகரங்களை கேபிள் வழியாக இணைக்கும் பணி. கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவு. அந்த வேலையும் அதில் இருந்த சவால்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. என்னிடம் ஐம்பது அறுபது தொழிலாளர்கள் வேலை செய்துவந்தார்கள். எல்லோரும் அக்கம்பக்கத்து கிராமத்துக்காரர்கள். கன்னட மொழிப்பயிற்சி மிகவும் அவசியம் என்று அக்கணத்தில் உணர்ந்தேன். முறையாகவே கன்னடத்தை அறிந்துகொள்ளவேண்டும் என முடிவெடுத்து, பள்ளிச்சிறுவர்கள்போல அரிச்சுவடி, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என எட்டாம் வகுப்புவரைக்குமான கன்னட மொழிப்புத்தகங்களை வாங்கிப் படித்தேன். என்னோடு முகாமில் தங்கியிருந்த நண்பர்களும் தொழிலாளர்களும் எனக்கு உதவி செய்தார்கள். நாக்குக்குப் பழகவேண்டும் என்கிற காரணத்துக்காகவே இடைவிடாது கன்னடத்தில் அவர்களோடு பேசிக்கொண்டே இருப்பேன். பேச்சின் லாவகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் சென்று பார்ப்பேன். வட்டாரமொழி வழக்குகளை அறிந்துகொள்ள என்னை அறியாமலே அவை உதவி புரிந்தன. பிறகு செய்தித்தாள்கள், வார இதழ்கள் எனப் படித்து, கடைசியாக இலக்கிய நூல் வாசிப்பைத் தொடங்கினேன்.
கேள்வி: தமிழுக்கு இணையாக கன்னடமொழியில் சரளமான தேர்ச்சியை இவ்வளவு விரைவில் பெற்றமைக்கு மொழி ஆர்வம் மட்டுமேதான் காரணமா?
பதில்: மொழிமட்டுமல்ல, எதைக் கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதற்கு ஆர்வம்தானே தூண்டுகோல். முற்றிலும் புதிய ஒருவரோடு பேசிப் பழகி நட்பை நிலைநாட்டுவதற்குக்கூட ஆர்வம்தானே தூண்டுகோல். ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்துகொள்வதில் மனமகிழ்ச்சிக்கான ஒரு கூறு இருக்கிறது. அந்த மகிழ்ச்சி மகத்தானது. மகிழ்ச்சிக்குரிய அத்தகு கணங்களை மீண்டும் மீண்டும் அடைந்தபடியே இருப்பதற்கு, நம் ஆர்வமும் விரிவடைந்தபடி இருக்கவேண்டும். முயற்சியும் விரிவடைந்தபடி இருக்கவேண்டும். பயணம் இல்லாமல் பாதையைக் கடக்கமுடியாது. கன்னடம் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியமொழிகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் எனக்கிருந்தது. அவற்றின் அரிச்சுவடிகளையும் ஆர்வத்தோடு படித்தேன். துரதிருஷ்டவசமாக, நேரமின்மையின் காரணமாக அந்தப் பயிற்சிகளைத் தொடரமுடியாமல் போய்விட்டது.
கேள்வி: தமிழ்க்கவிதை, கன்னடக்கவிதை, தமிழ்ச்சிறுகதை, கன்னடச்சிறுகதை, தமிழ்நாவல், கன்னடநாவல், தமிழ் தலித் இலக்கியம், கன்னட தலித் இலக்கியம் – இவற்றுக்கிடையேயான ஒப்புமைத்தன்மைகள் குறித்துச் சொல்கிறீர்களா?
பதில்: அடிப்படையில் நான் ஒரு வாசகன். தமிழில் வெளிவரும் முக்கியமான படைப்புகளை தேடிப் பிடித்து வாசித்துவிடுகிறேன். கன்னடமொழியில் என் வாசிப்புக்குரிய நூல்களை மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே நான் தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன். குறைவான எண்ணிக்கையில்மட்டுமே என்னால் படிக்கமுடியும் என்பதாலேயே, அவற்றை மிகவும் கவனத்தோடும் நண்பர்களின் ஆலோசனைகளோடும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன். ஓர் ஆண்டில் ஐந்துமுதல் பத்துவரையிலான புத்தகங்களைமட்டுமே படிக்கமுடியும். ஒவ்வொரு நூலைப்பற்றியும் எனக்கு தனிப்பட்ட வகையில் கருத்து உண்டு. ஆனால் அக்கருத்து, எதையும் ஒப்பிட்டு மதிப்பிடுவதற்கான ஆயுதமல்ல. இரண்டுமொழிகளிலும் எழுதப்படுகிற கவிதைகளையும் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கமுனைவதைவிட, இரண்டுமொழிகளிலும் உள்ள இலக்கியச்சூழல்களையும் முன்வைத்து நாம் யோசிக்கவேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.
இரண்டு சூழல்களிலும் இருந்த சாதக பாதக அம்சங்களை யோசித்துப் பார்க்கலாம். 1900 முதல் 2000 வரைக்குமான இலக்கியச்சூழல் இன்று எல்லா மொழிகளிலும் வரலாறாக மாறிவிட்ட விஷயம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைத் தனித்தனியாக பகுத்தும் தொகுத்தும் பார்த்துக்கொள்ளலாம். இலக்கியம்பற்றி தமிழ்ச்சூழல் வைத்திருந்த கருதுகோள்களையும் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் நாம் எண்ணிப் பார்க்கலாம். எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
வ.வெ.சு.ஐயரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக்கொண்டிருந்தேன். கம்பராமாயணப் பெருமையை ஆங்கிலேயருக்கு உணர்த்தவேண்டும் என்பதற்காக சில நூறு பக்கங்களில் ஒரு நூலை எழுதத் தொடங்கி பல இன்னல்களுக்கிடையே அதை முடித்தார். ஒரு நீண்ட சிறைவாசம் அதற்கு உதவியாக இருந்தது. ஒரு பகுதி செய்யுள்களையும் மொழிபெயர்த்து அத்துடன் இணைத்தார். இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியர்களுக்கு சமூக வரலாறில்லை, இலக்கிய வரலாறில்லை என்கிற எண்ணம் அந்த ஆட்சியாளர்களுக்கும் ஆங்கிலச் சமூகத்துக்கும் இருந்தது. அதைக் களைந்து, இந்திய மொழிகளின் இலக்கிய முகத்தை அவர்கள் அறிந்துகொள்ளும்வகையில் வ.வே.சு. மேற்கொண்ட முயற்சிகளைப்போலவே ஒவ்வொரு மொழியிலும் அத்தகு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகவே வால்மீகி ராமாயணமும் மகாபாரதமும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டன.
உ.வே.சா. போன்ற பதிப்பாசிரியர்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து சங்கப்பாடல்களையும் சிலப்பதிகாரத்தையும் பதிப்பித்து வெளியிட்ட சில ஆண்டுகளுக்குள்ளாகவே அவற்றைப்பற்றிய பெருமையை முன்வைக்கக்கூடிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சிகள் நிகழ்ந்தன. எதற்காக இவை செய்யப்பட்டன என்று யோசிக்கவேண்டும். இவர்கள் எல்லோரும் நம் இலக்கிய ஆளுமைகள் என்பதை உலகுக்கு உணர்த்தவேண்டும் என்கிற முனைப்புதான் அவர்களை அப்படிச் செயல்படத் தூண்டியது. சுதந்திரத்துக்குப் பிறகு அந்த முனைப்பு தமிழ்ச்சூழலில் செயல்படவில்லை. மலையாளத்திலும் கன்னடத்திலும் அந்த முனைப்பு இடைவிடாது செயல்பட்டது. இதைக் கண்டுபிடிக்க பெரிய சூத்திரம் எதுவும் தேவையில்லை.
ஆங்கிலேயர்கள் நம் ஆட்சியாளர்களாக இருந்தவரைக்கும் தமிழின் இலக்கியப் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி நிலைநாட்டினார்கள் நம் மூத்த அறிஞர்கள். சுதந்திரத்துக்குப் பிறகு, ஆங்கிலத்துடன் மற்ற இந்திய மொழிகளிலும் எழுதி அறிமுகப்படுத்தவேண்டிய காலத்தின் கட்டாயத்தை தமிழில் செயல்படுத்தும் வேகம் போதுமான அளவில் நிகழவே இல்லை. அந்த அறிஞர்கள் வரிசை அடுத்த தலைமுறையைக் காணாமலேயே அப்படியே தேங்கி நின்றுவிட்டது. நம மொழியின் மாபெரும் கவிஞர் பாரதியார். கவிதைகள், வசனகவிதைகள், உரைநடை என அவருடைய எல்லாப் படைப்புகளையும் தனித்தனித் தொகுப்புகளாக தொகுக்கப்பட்டு ஆங்கிலத்துக்கும் பிற மொழிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும். இன்றுவரைக்கும் அது கனவாகவே உள்ளது.
பாரதியாரின் சமகாலத்துக் கவிஞர் தாகூர். அவருடைய ஒட்டுமொத்தப் படைப்புகளின் தொகுதி அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்ட சமயத்திலேயே ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளிவந்துவிட்டன. அப்படிப்பட்ட முயற்சிகள் தமிழகத்தில் எடுக்கமுடியாதபடி நமது சூழல் இருந்ததற்கு என்ன காரணம் என்பதை யோசிக்கவேண்டும். இந்தி மொழியின்மீது இருந்த வெறுப்பின் காரணமாக, தமிழின் படைப்புகள் ஒன்றுகூட இந்திமொழியில் அறிமுகம் பெறவில்லை. சக இந்திய மொழிகளுக்கும் அறிமுகப்படுத்தக்கூடிய முயற்சிகளும் நிகழவில்லை. ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் என ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இந்தியாவுக்கு தமிழ் அடையாளப்படுத்திக் காட்டிய படைப்பாளிகள் யார், எந்தெந்தப் படைப்புகள் எவை என்கிற ஒரு கேள்வியை முன்வைத்துக்கொண்டு பதிலைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும்.
தமிழின் மகத்தான சிறுகதை ஆளுமைகள் புதுமைப்பித்தனும் மெளனியும். ஆங்கிலமொழியில் இவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய தொகுப்பு வெளிவர ஐம்பது ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம். கன்னடத்தில் இந்த விபரீதம் நிகழவில்லை. குவெம்பு, பேந்த்ரே, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், சிவராம காரந்த், பைரப்பா, அனந்தமூர்த்தி எல்லோருடையை படைப்புகளைப்பற்றிய அறிமுகமும் தொகைநூல்களும் இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் அவர்கள் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே சென்றுவிட்டன.
என் வயதை ஒத்த விவேக் ஷான்பாக், ஜயந்த் காய்க்கிணி போன்ற எழுத்தாளர்களுடைய தொகை நூல்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பிற மொழிகளிலும் வெளிவந்துவிட்டன. நம் இலக்கியச் சூழலுக்கும் மற்ற மொழிகளின் இலக்கியச்சூழலுக்கும் இப்படி அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன. ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மலையாளத்தின் முக்கியமான படைப்பாளியான வைக்கம் முகம்மது பஷீரின் பெயரை இலக்கியத்துக்கான நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கும் நோக்கத்தோடு அவருடைய முக்கியமான எழுத்துகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுத்து வெளியிடப்பட்டன. அப்படி ஒரு ஆளுமையை முன்வைக்கும் முயற்சி எப்போதாவது தமிழில் நிகழ்ந்ததுண்டா என்று நாம் யோசிக்கவேண்டியது அவசியம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், தமிழிலிருந்து முக்கியமான நாவல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டமொன்றை அரசு தொடங்கியது. பல கட்ட முடிவுகளுக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியின் ‘தென்பாண்டிச்சிங்கம்’ மட்டும் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதுதான் தமிழின் இலக்கியச்சூழல் இயங்கும் விதிமுறை. ஒரு படைப்பாளியை புற உலகுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய ஒரு தருணத்தில் நாம் யாரை முன்னிறுத்துகிறோம், எப்படிப்பட்ட படைப்பை முன்வைக்கிறோம் என்பது மிகமுக்கியம். ஒரு நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட தமிழ் நாவல் உலகில் தென்பாண்டிச் சிங்கம்தான் முன்வைக்கப்படவேண்டிய நாவலா என்பதை மனசாட்சிக்கு நேர்மையாக யோசித்துப் பார்க்கவேண்டும். நம்மை வளர்த்துக்கொள்ளவும் சரிப்படுத்திக்கொள்ளவும் இருவேறுபட்ட இலக்கியச்சூழல்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் அவசியம். படைப்பிலக்கிய ஒப்பீட்டைவிட இது முக்கியம் என்று தோன்றுகிறது.
கேள்வி: நீங்கள் எழுதவந்த சமயத்தில் எழுதப்பட்டு வந்த தமிழ்க்கவிதைகள் குறித்தும் இன்றைய நவீன தமிழ் புதுக்கவிதைகளின் போக்குகள் குறித்தும் சொல்லுங்கள்.
பதில்: நான் எழுதவந்த சமயத்தில் பசுவய்யா, பிரமிள், ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன், கல்யாண்ஜி போன்ற பெரிய ஆளுமைகளின் கவிதைகள் வெளிவந்தன. அப்போது வெளியீட்டுக்கான இதழ்கள் மிகவும் குறைவு. சிறுபத்திரிகைகள் சார்ந்துமட்டுமே இவர்களுடைய கவிதைகள் வெளியாகின. நவகவிதை வரிசை என அன்னம் பதிப்பகம் புதிய கவிஞர்களின் தொகுப்பை வித்தியாசமான அமைப்போடு வெளியிட்டது. சமீபத்தில்தான் கல்யாண்ஜி எழுதிய ‘பூனை எழுதிய அறை’ கவிதைத்தொகுதியைப் படித்தேன். முற்றிலும் புதிய பார்வை. புதிய கோணம். புதிய படிமங்கள். பம்பரத்தை காற்றிலேயே சுழலவிட்டு சட்டென்று கையிலேந்திக்கொள்கிறவர்களைப்போல காட்சிகளை மொழியால் அப்படியே அள்ளிக்கொண்டு வருகிறார் கல்யாண்ஜி. மூத்த கவிஞர்களின் வரிசையைத் தொடர்ந்து, சமயவேல், சுகுமாரன், அப்பாஸ், சுகந்தி போன்ற என் வயதையொத்தவர்களுடைய கவிதைகள் வெளியாகி வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன. அடுத்து, மனுஷ்யபுத்திரன், யுவன் சந்திரசேகர், மோகனரங்கன், சூத்ரதாரி, சிபிச்செல்வன், சங்கரராம சுப்பிரமணியன் போன்ற இளைஞர்கள் மேலும் கவிதைக்குள் வந்தார்கள். மாலதி மைத்ரி, குட்டிரேவதி, சல்மா, உமா மகேஸ்வரி, சுகிர்தராணி உள்ளிட்டோரின் கவிதைகள் வெளிவந்தன. இப்போது அய்யப்ப மாதவன், முகுந்த் நாகராஜன், இசை, இளங்கோ கிருஷ்ணன், நிலாரசிகன், லாவண்யா போன்ற புதியவர்களின் கவிதைகளையும் நான் விரும்பிப் படித்துவருகிறேன். நல்ல கவிதைகள் சிற்பங்களைப்போல நெஞ்சில் அப்படியே பதிந்துவிடுகின்றன. அந்த வரிகளை ஒருபோதும் நம் மனம் மறப்பதில்லை. எல்லாக் கட்டத்திலும் அப்படிப்பட்ட உத்வேகம் மிகுந்த வரிகளை எழுதும் கவிஞர்கள் தொடர்ச்சியாக இயங்கியபடியே இருக்கிறார்கள்.

கேள்வி: கிரீஷ் கார்னாடின் நாடகங்களை தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறீர்கள்? நூல் வெளிவரும் முன்பாக அவரைச் சந்தித்ததுண்டா? மூல நூலின் படைப்பாளியுடனான நேரடிச் சந்திப்பும் உரையாடலும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்குப் பயனுள்ளதாக இருக்குமா?
பதில்: எனக்குப் பிடித்த நாடக ஆசிரியர் கிரீஷ் கார்னாட். நான் கர்நாடகத்துக்கு வந்த புதிதில் அவரை நான் ஒரு திரை இயக்குநராகத்தான் தெரிந்துவைத்திருந்தேன். அவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘ஒந்தானொந்து காலதல்லி’ திரைப்படம் தந்த அனுபவம் மகத்தானது. அகிரா குரோசுவாவின் படமொன்றைப் பார்த்த அனுபவத்தை அந்தப் படம் தந்தது. பிறகு என்னுடைய வேலையின் காரணமாக ஏதோ ஒரு சிறுநகரத்தில் முகாமிட்டிருந்தபோது, அவர் எழுதிய நாடகத்தைப் பார்த்தேன். அவருடைய ஆளுமை திரைப்படங்களைவிட நாடகங்களில் அதிக அளவில் வெளிப்படுவதை உணர்ந்தேன். யயாதி, ஹயவதனன், துக்ளக் என தொடர்ந்து நான் பார்க்க நேர்ந்த எல்லா நாடகங்களும் அவர்மீதான மதிப்பை அதிகரித்துக்கொண்டே இருந்தது. பெங்களூரில் நான் குடியேறிய பிறகு ‘தலெதண்ட’ என்னும் நாடகத்தைப் பார்த்த சமயத்தில், முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு மன எழுச்சியுற்று மொழிபெயர்க்கும் முடிவை எடுத்தேன். மொழிபெயர்க்கும் முயற்சியில் நான் ஈடுபடுவதற்குக் காரணமாக இருந்தவர் மூத்த மொழிபெயர்ப்பாளரான திருமதி சரஸ்வதி.ராம்னாத் அவர்கள். நாடகத்தை மொழிபெயர்க்க முடிவெடுத்ததும், அதற்கான அனுமதியைப் பெற அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் பயன்படுத்தும் வடகன்னட வழக்குகளை என்னால் புரிந்துகொள்ள முடியுமா என்பதைப்பற்றி அவருக்குக் கவலை இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி அவர் எனக்கு மடல் எழுதினார். பிறகு தொலைபேசியில் அவருடன் பேசி அனுமதி பெற்று, அவரைச் சந்திக்க நானும் என் நண்பர் ஜி.கே.ராமசாமியும் சென்றிருந்தோம். அன்றைய எங்கள் உரையாடல் முழுதும் வடகன்னட வட்டார மொழியிலேயே இருந்தது. அந்த வட்டாரத்திலேயே சில ஆண்டுகள் நான் வேலை செய்ததால், எனக்கு அது பிரச்சினையாகவே இல்லை. எங்கள் உரையாடலின் போக்கிலேயே அவர் அதை உணர்ந்தார். அப்போதே மொழிபெயர்ப்பதற்கான அனுமதி எனக்குக் கிடைத்துவிட்டது. நானும் வேகமாக மொழிபெயர்த்து முடித்துவிட்டேன். நாடகவெளி ரங்கராஜன் அந்த நாடகநூலைப் புத்தகமாகக் கொண்டு வந்தார். இப்படியே அடுத்தடுத்து, அவருடைய நாடகங்கள் நூல்வடிவம் பெற்றன.
ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பவர் தான் மொழிபெயர்க்கும் நூலின் ஆசிரியரைச் சந்தித்து உரையாடவேண்டும் என்பது ஒருபோதும் கட்டாயமில்லை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் தவிர்க்கவேண்டும் என்றும் சொல்லமாட்டேன். வாய்ப்பு கைகூடி வரின் அவசியம் சந்தித்துப் பேசலாம். ஆனால் அதற்காக மெனக்கிடவேண்டிய அவசியமில்லை.
கேள்வி: மொழிபெயர்ப்புப்பணியில் இருப்பவருக்குத் தேவையான முக்கியமான சிரத்தை என்ன?
பதில்: அக்கறையும் அர்ப்பணிப்புணர்வும் மிகமுக்கியம். ஒரு மொழிபெயர்ப்பாளர் வெறும் சொற்களை மொழிபெயர்க்கவில்லை. சொற்களால் ஆன ஒரு கதையுலகத்தை மொழிபெயர்க்கிறார். அந்த உலகம் சிந்தாமல் சிதறாமல் வரவேண்டும். மீண்டும் மீண்டும் மூலப்படைப்பையும் மொழிபெயர்ப்பையும் வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். சமீபத்தில் நான் ஒரு மொழிபெயர்ப்பை வாசித்தேன். ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு இதழில் வெளிவந்த முரகாமியின் ஒரு சிறுகதை. தன் முழு உழைப்பையும் அவர் அந்த மொழிபெயர்ப்பில் கொட்டியிருக்கிறார். இந்த ஆண்டில் இதுவரை நான் படித்த மொழிபெயர்ப்புச்சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வேன். மனத்துக்கு நெருக்கமான ஒரு படைப்பு.

கேள்வி: தமிழ் இலக்கியச்சூழல் படைப்பாளிகளுக்கிடையேயான நட்பை மேம்படுத்துவதாக இருக்கிறதா?
பதில்: நட்பை நாடி நீளும் கைகளை யாரும் தட்டிவிடுவார்களா, என்ன? நட்புக்கான நாட்டம் முதலில் நமது நெஞ்சில் நிறைந்திருக்கவேண்டும். பழகுகிறவர்கள் அனைவரையும் நாம் நண்பர்களாக நினைத்தால் அவர்களும் நம்மை நண்பர்களாக நினைக்கக்கூடும். பிறரை நாம் வேண்டாம் என நினைத்தால் அவர்களும் நம்மை வேண்டாம் என நினைப்பார்கள். பொது வாழ்க்கையிலும் சரி, இலக்கிய வாழ்விலும் சரி, இதுதான் சூத்திரம். ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதைகளில் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் இரவில் ஒரு திருடன் ஒரு வீட்டில் திருடி விட்டு, தன்னுடைய இடத்தை நோக்கி மறைந்து மறைந்து நடக்கிறான். ஒரு மரத்தடியில் ஒருவர் படுத்திருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு துணிமுடிச்சு இருக்கிறது. அந்தத் திருடன் அவரைப் பார்த்ததும், அவரையும் ஒரு திருடன் என்று நினைத்துக்கொள்கிறான். எங்கோ திருடி மூட்டை கட்டி எடுத்துவந்து விட்டு, ஒளியத் தெரியாமல் இப்படி மரத்தடியில் படுத்திருக்கிறானே, காவலர்களிடம் அகப்பட்டு உதைபடும்போதுதான் இவனுக்கெல்லாம் புத்தி வரும் என்று நினைத்துக்கொண்டே செல்கிறான். சிறிது நேரம் கழித்து ஒரு குடிகாரன் அவ்வழியே நடந்து வருகிறான். மரத்தடியில் படுத்திருப்பவரைப் பார்த்ததும், மிதமிஞ்சிய போதையில் அவர் விழுந்துகிடப்பதாக நினைத்துக்கொள்கிறான். இப்படி விழுந்துகிடக்கும் அளவுக்கு தான் போதையில் இல்லை என்றும் பாதுகாப்பாக தன் வீட்டைக் கண்டுபிடித்துச் செல்கிற அளவுக்கு சுய உணர்வோடு இருப்பதாகவும் நினைத்து, அதற்காக தன்னைத் தானே பாராட்டிக்கொள்கிறான். இன்னும் சிறிது நேரம் கழித்து ஒரு துறவி அந்தப் பக்கமாக வருகிறார். படுத்துக் கிடப்பவரைப் பார்த்ததும் சவாசனத்தில் சமாதிநிலையில் படுத்திருக்கும் ஒரு யோகி என அவரை நினைத்து, அவருடைய காலடியில் அமர்ந்து அவர் கால்களைப் பிடித்துவிடுகிறார். உண்மையில் படுத்துக் கிடப்பவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் தன்னைப் போலவே மற்றவர்களும் தென்படுகிறார்கள். உண்மை வாழ்க்கையிலேயும் இதுதான் நிலைமை. நாம் அனைவரையும் நண்பர்களாக நினைத்தால் அனைவரும் நம்மையும் நண்பர்களாக நினைப்பார்கள் என்பதுதான் என் எண்ணம்.
கேள்வி: குழு அரசியல் என்பது இலக்கியத்தில் அவசியமானதுதானா?
பதில்: ‘குழு’ என்பதே பிழையான அடையாளம். இந்தச் சொல் இலக்கிய உலகத்துக்குள் எப்போது வந்தது என்று யோசித்துப் பாருங்கள். இலக்கியம் பற்றிய கறாரான மதிப்பீடுகளை முன்வைக்கும் பார்வையை நிராகரித்து சராசரியான இலக்கியப்பார்வையுள்ளவர்களால் பயன்படுத்தப்பட்ட அடையாளம். எல்லாமே இலக்கியம்தான் என்ற நினைப்பில் உருவாக்கப்பட்ட சொல். ‘குழு அரசியல்’ என்பது இன்னும் கூடுதலாக விரிவாக்கப்பட்ட அடையாளம். ‘குழு அரசியல்’ என்னும் பிழையான சொல், மதிப்பீடுகளின் அளவுகோல்களைச் சிறுமைப்படுத்துகிறது. மதிப்பீடுகளின் அளவுகோல்களை ஒட்டியே ஒரு விவாதத்தின் தரப்பு உருவாகிறது. பலவிதமான தரப்புகளின் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் வழியேதான் ஒரு கருத்தாக்கம் செழுமையடையும். ஆரம்பகால தமிழ் நாவல்களை மதிப்பிட முயற்சிசெய்யும்போது க.நா.சு. மூன்று விதமான பார்வைகளை முன்வைத்து தமிழ்நாவல் உலகம் இயங்குகிறது என்றொரு கருத்தாக்கத்தை உருவாக்கினார். ஒரு கருத்தை அல்லது உண்மையைப் பரவலாக்குவதற்காக ஒரு நாவல் எழுதப்படுகிறது என்பது ஒரு பார்வை. பொழுதுபோக்கு வாசிப்பு இன்பத்துக்காக ஒரு நாவல் எழுதப்படுகிறது என்பது இன்னொரு பார்வை. வாழ்வின் ஒரு பகுதியை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டி, வாழ்க்கையின் உண்மையைத் தேடிக் கண்டடைவதற்காக ஒரு நாவல் எழுதப்படுகிறது என்பது மூன்றாவது பார்வை. தீனதயாளு, கமலாட்சி, கமலாம்பாள் சரித்திரம் என்ற மூன்று நாவல்களும் மேற்கண்ட மூன்று பார்வைகளுக்கான எடுத்துக்காட்டுகள் என பகுத்துக் காட்டினார் க.நா.சு. இதை ஒரு விவாதத்தின் தரப்பு என எடுத்துக்கொண்டு விவாதத்தை நல்ல திசையில் எடுத்துச் செல்லவும் முடியும். அல்லது ‘குழு அரசியல்’ என அடையாளப்படுத்தி, ஒரு தரப்பு உருவாகாமலேயே திசைதிருப்பவும் முடியும்.
*
கேள்வி: உங்களின் சில கட்டுரைகளில் சில பாடல்களை அல்லது கவிதைகளை தற்செயலாக எங்கேயோ கேட்டு அதை ரசித்து அதனால் உந்தப்பட்டு அந்த பாடல்களை அல்லது கவிதைகளைப் படைத்தவரைக் கண்டடைந்து அவரைப் பற்றிய குறிப்புகளையும் வெளியிட்டிருக்கிறீர்களே. இயல்பாகவே இது நடந்ததா, அல்லது தேடிக் கண்டடைந்தவரைப் பற்றிய புனைவாக அதனைக் கொடுக்கிறீர்களா? உதாரணத்துக்கு அக்கமகாதேவி கட்டுரையினைக் குறிப்பிடுகிறேன்.
பதில்: எதுவுமே புனைவல்ல. எல்லாமே உண்மைதான். ஒவ்வொன்றையும் நான் தற்செயலாகவே கண்டடைந்தேன். பிறகு, ஆர்வத்தின் காரணமாக அதைத் தேடியடைந்து, இன்னும் விரிவாக அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு பயணம் மிக உற்சாகமான ஒன்று. ஒரு நண்பர் சொன்ன வார்த்தையின் ஈர்ப்புதான் எங்களை அங்கே செலுத்தியது. நந்திமலை என்பது, பெங்களூரிலிருந்து ஐம்பது அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய குன்று. முக்கியமான சுற்றுலா நகரம். கொடைக்கானல்போல. திப்பு சுல்தான் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கம் அங்கே உள்ளது. அதைப் பார்க்கும்போது ஒரு குன்றின்மீது எப்படித்தான் இதைக் கட்டியெழுப்பினார்களோ என்று தோன்றும். திப்பு ஓய்வெடுத்த ஒரு மாளிகையும் உண்டு. நந்திமலையைப்பற்றிய பொதுவான சித்திரம் இதுதான். ஒருநாள் என் நண்பர் சம்பந்தம் நந்திமலைக்குப் பின்பக்கமாக இரண்டுமூன்று கிலோமீட்டர் உயரத்துக்கு ஒரு நடைபாதை இருப்பதாகவும் அங்கே செல்லலாம் என்றும் சொன்னார். அவருக்கு அவருடைய நண்பர் மகேஷ் என்பவர் சொல்லியிருக்கிறார். அந்த நண்பருக்கு, இமயமலையில் சந்தித்த வேறொரு பழைய நண்பர் சொன்னாராம். ஒருநாள் அதிகாலையில் நாங்கள் மூன்றுபேரும் கிளம்பிச் சென்றோம். பல இடங்களில் விசாரித்து, அந்தப் பாதையைக் கண்டுபிடித்து நடந்து சென்றோம். மிக அற்புதமான நடைபயணம் அது. அந்தப் பயணத்தின்போது, பாரதியாரின் நண்பரும் சுதந்திரப்போராட்ட வீரரும் பிற்காலத்தில் துறவியாக வாழ்ந்து மறைந்த நீலகண்டப் பிரம்மச்சாரியின் நினைவாலயத்தையும் நாங்கள் பார்க்கநேர்ந்தது. ஓர் இடத்தைப்பற்றிய அறிமுகம் மட்டுமல்ல, இலக்கிய அறிமுகமும் இப்படித்தான். யாராவது ஒருவர் சொல்லி அல்லது யாராவது ஒருவர் சுட்டிக் காட்டுவதன்மூலமாகத்தான் கிடைக்கிறது.

கேள்வி: இசை, பாடல்களின் மீதான உங்கள் ஈடுபாடு குறித்து சொல்லுங்கள்.
பதில்: திரையிசைப்பாடல்கள் உருவாக்கிய ஈர்ப்புதான் தொடக்கம். ஒரு நடையின்போது மனம் அடையும் உற்சாகத்தைப்போலவே பாடல்களாலும் மனம் உற்சாகம் அடைகிறது. ஒரு நல்ல தாளக்கட்டு அல்லது ஒரு புதுமையான இசைக்கோவை உருவாக்கும் மன எழுச்சிக்கு ஈடு இணையே இல்லை. நாம் ஏற்கனவே பார்த்த ஒரு திரைப்படத்தின் பாடலைக் கேட்கும்போது, அப்பாடலுக்குரிய காட்சி நம் மனத்தில் தானாகவே நகரத் தொடங்குகிறது. பாடலை அம்மனக்காட்சியுடன் இணைத்தபடி நாம் அப்பாட்டுக்குள் தோய்ந்துபோகிறோம். அறிமுகமே இல்லாத ஒரு பாட்டைக் கேட்கும்போது, அந்தத் தாளத்துக்குத் தகுந்தபடி நம் மனமே ஒரு காட்சியை உருவாக்குகிறது. ஒரு பிரபந்தப் பாட்டு அல்லது ஒரு திருவாசகப்பாடல் அல்லது ஊத்துக்காடு வேங்கடகவியின் ஒரு பாடல் அல்லது பாரதியாரின் பாடலொன்று அல்லது தியாகராஜர் கீர்த்தனை அல்லது ஒரு கோபாலகிருஷ்ணபாரதியார் பாடல் என ஏதோ ஒன்றை ஜெயஸ்ரீ, அருணா, சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, அருண் போன்றோரின் குரல்வழியாக கேட்கும்போது நம் மனம் எழுப்பிக்கொள்ளும் காட்சிகள் பேரின்பம் கொடுப்பவை. வரிகளையும் இசையையும் துணையாகக்கொண்டு பாடகர்களின் குரல் கட்டியெழுப்ப நினைக்கும் காட்சியை அணுஅணுவாக நாமும் கட்டியெழுப்பிக் காணும் அனுபவம் மகத்தானது. மகத்தான அனுபவத்துக்கு மனம் ஏங்கும் தருணங்களில் எல்லாம் நான் இசையின் துணையை நாடுகிறேன். மற்றபடி, இசையின் ராகத்தைப்பற்றியோ தாளத்தைப்பற்றியோ எந்த அடிப்படையும் தெரியாத பாமரன் நான்.
கேள்வி: பறவைகள் குறித்தும், மரங்கள், அருவி என உங்கள் படைப்புகளில் அதிகமாக வெளிப்படுவது இயற்கையின் மீதான உங்களின் கரிசனம் என எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: எல்லாமே இயற்கையின் அம்சங்கள் அல்லவா? இயற்கையைநோக்கிச் செலுத்தும் ஆற்றல்தானே கலை. சமீபத்தில் கவிஞர் ஆசை எழுதிய ஒரு கட்டுரையில் குருவிகளின் குரலோடு விடியும் அதிகாலைகளைப்பற்றிய அனுபவத்தை எழுதியிருந்தார். மிகச்சிறந்த கட்டுரை அது. ஆனந்தத்தின் உச்சத்தில், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குருவியின் பெயரை ஏன் சூட்டி மகிழக்கூடாது என்றொரு கேள்வி அவர் மனத்தில் மிதந்து வருகிறது. அற்புதமான தருணம் அது. இந்த மானுட வாழ்விலும் அற்புதமான தருணங்களை உருவாக்கிக்கொள்ள நமக்குத் துணையாக இருப்பது இயற்கை.
கேள்வி: பூங்காவில் நிகழ்வதாகவும், நடந்து செல்லும்போது காணும் காட்சிகளின் வெளிப்பாடாகவும் உங்களுடைய பல கட்டுரைப் படைப்புகள் இருக்கின்றனவே. உண்மை நிகழ்வில் புனைவினைக் கலந்து அளிக்கிறீர்களா? அல்லது புனைவினை உண்மை நிகழ்ச்சியினைப் போல கொடுக்கிறீர்களா?
பதில்: புனைவல்ல, இதுவும் உண்மைதான். பொதுவாகவே எனக்கு நடப்பது மிகவும் பிடிக்கும். உடற்பயிற்சிக்காக மட்டுமன்றி, நடை கொடுக்கும் உற்சாகத்துக்காகவே நடையை விரும்புகிறவன் நான். எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறேன் நான். கடைத்தெருவுக்கு, நண்பர்கள் வீட்டுக்கு, பூங்காவுக்கு, அலுவலகத்துக்கு, பேருந்து நிலையங்களுக்கு, வேடிக்கை பார்ப்பதற்கு என நடந்துகொண்டே இருக்கிறேன். புதிய புதிய வழிகளைத் தேடிச் சென்றுகொண்டே இருப்பேன். அப்போது நான் காண நேரும் புதிய புதிய காட்சிகளும் புதிய அனுபவங்களும், இன்னும் இன்னும் நடப்பதற்கான ஊக்கத்தை வழங்குகின்றன. ‘நின்றுகொண்டிருப்பதைவிட சென்றுகொண்டிருப்பது மேல்’ என்றொரு வண்ணதாசன் வரியை நினைத்துக்கொள்ளாத நாளே இல்லை. எங்கள் வீட்டுக்கருகில் நான்கு பூங்காக்கள் இருக்கின்றன. ஓய்வு நேரங்களிலும் விடுமுறை சமயங்களிலும் நான் பூங்காக்களில்தான் இருப்பேன். நான் வாசிப்பதும் எழுதுவதும் பெரும்பாலும் பூங்காக்களில்தான். நண்பர்களைச் சந்திப்பதும் உரையாடுவதும்கூட பூங்காக்களில்தான். சமீபத்தில் பகல்வேளைகளில் பூங்காக்களைத் திறந்துவைக்கக்கூடாது என ஒரு சட்டம் போட்டுவிட்டார்கள். அதனால் போகமுடிவதில்லை. ஆனாலும் நடை குறையவில்லை.

கேள்வி:. நீங்கள் மனித உறவுகளின் மேன்மையைக் குறித்தே சிறுகதைகளில் அதிகமாக எழுதுவது மனிதம் மீதான உங்களின் நம்பிக்கை என எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: நான் எப்போதுமே நம்பிக்கைவாதி. வாழ்வின் எல்லாத் தளங்களிலும் தன்னலமும் பேராசையும் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன என்பதை நான் அறிவேன். எவ்வளவு காலம்தான் அவை ஆட்டிப் படைக்கும்? அல்லது எவ்வளவு காலம்தான் அவற்றின் ஆட்டத்துக்கு மனிதர்கள் ஆடிக்கொண்டே இருப்பார்கள்? பேய், பிசாசுகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக வழிபாடு நடத்தக்கூடிய ஒரு கோயிலுக்கு ஒரு நண்பரோடு சமீபத்தில் சென்றிருந்தேன். பிசாசுகளின் பிடியிலிருப்பவர் அந்தக் கோயிலுக்குள் ஒரு முழுப்பகலும் இரவும் தங்கி பூசை செய்யவேண்டும் என்பது ஒரு விதி. கூடுதலாக இருப்பது இன்னும் விசேஷம். இதனால், பிசாசுகளின் பிடி விலகிச் சென்றுவிடும் என்பது காலம்காலமாக தொடர்ந்துவரும் நம்பிக்கை. அங்கே வழிபாடு என்பது ஒரு கூட்டுப்பிரார்த்தனைபோல இருந்தது. வேறொன்றும் இல்லை. அந்த வளாகத்தில் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன விஷயம் புதுமையாக ஒரு கணக்குச் சூத்திரம்போல இருந்தது. அந்தக் கோவில் வளாகத்துக்குள் பிசாசுகளோ ஆவிகளோ நுழையமுடியாது. கோவிலின் மந்திர சக்தி அதைத் தடுக்கிறது. அதனால் ஆவியின் பிடியில் இருப்பவர்கள் அந்த ஆலயத்துக்குள் நுழையும்போது, ஆவி வெளியிலேயே தங்கிவிடுகிறது. ஓர் ஆவிக்கு உடலின் துணையில்லாமல் தனித்தலைவதற்கான அதிகபட்ச நேரம் என ஒன்றுண்டு. ஏழுமணிநேரம் அல்லது எட்டுமணிநேரம் என்பதுபோல. கோவிலுக்குள்ளேயே தங்கவைப்பது என்பது, இந்த அவகாச நேரம் கடந்துபோகட்டும் என்பதற்காகத்தான். அவகாச நேரத்துக்குள் அந்த ஆவி, தன் பழைய உடலுக்குள் சென்று சேரவேண்டும் அல்லது ஏதேனும் புதிய உடலுக்குள் புகுந்துகொள்ளவேண்டும். பிசாசின் பிடி விலகிவிட்டது அல்லது பிசாசு மீண்டும் பிடித்துக்கொண்டது என்பதெல்லாம், ஒருவர் கோவிலுக்குள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார் என்பதைப் பொருத்தது. அந்தச் சூத்திரக்கணக்கை அவர் விவரித்துச் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. பிசாசுகளின் பிடியே விலகிப்போக ஒரு சூத்திரம் இருக்கும்போது, பேராசையின் பிடி விலக ஒரு சூத்திரம் இருக்காதா என்ன? பேராசையும் தன்னலமும்கூட ஒருநாள் சலித்துப்போகத்தானே செய்யும். அன்றாவது, மனிதர்கள் அவற்றையெல்லாம் உதறிவிட்டு இயல்பான உறவுகளை நாடி, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பமாட்டார்களா என்ன?
கேள்வி: பல படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து அறிமுகமாகவும், நூல் விமர்சனமாகவும் தொடர்ந்து எழுதுவதை உங்களின் எழுத்துப்பணி, நேரமின்மை இவைகளுக்கிடையில் எப்படி சாத்தியப்படுத்துகிறீர்கள்.
பதில்: அதை என் கடமை என்றே கருதுகிறேன். நமது மூத்த படைப்பாளிகள் அப்படிச் செயல்பட்டு ஒரு வழியை உருவாக்கித் தந்துள்ளார்கள். பாரதியாரைச் சுற்றி ஒரு கவிதாமண்டலமே இருந்திருக்கிறது. கனகசுப்புரத்தினத்தை அவர் கண்டெடுத்து, முன்னுரைக்குறிப்பெழுதி இந்த உலகத்துக்கு அவர்தானே அறிமுகப்படுத்தினார். நல்ல படைப்புகளை அடையாளப்படுத்துவதை ஒரு வாழ்க்கைமுறையாகவே கொண்டிருந்தவர் க.நா.சு. சுந்தர ராமசாமி பல புதிய இளம்படைப்பாளிகள்குறித்து எழுதியிருக்கிறார். என் தலைமுறையில் அந்தக் கடமையை நானும் செய்கிறேன். நான்மட்டுமல்ல, என் நண்பர்கள் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் அத்தகு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
கேள்வி: புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும்போது பக்க வரையறையை எப்படி நிர்ணயம் செய்வது? உதாரணத்துக்கு கு. அழகிரிசாமியின் படைப்புலகம் புத்தகத்துக்கு நீங்கள் எழுதிய முன்னுரையினைக் குறிப்பிடுகிறேன்.
பதில்: அழகிரிசாமியின் கதைத்தொகுப்புக்கான முன்னுரை ஒரு விதிவிலக்கு. அவருடைய ஒட்டுமொத்த சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு வெளிவரும் ஒரு நூலுக்கு, அவருடைய படைப்புலகத்தை மதிப்பிட்டுச் சொல்லும் வகையில் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஐந்திணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்புக்கு க.நா.சு. எழுதியிருந்த முன்னுரையைத்தான் நான் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டேன். அழகிரிசாமியைப் பார்க்காத தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அவருடைய படைப்புகள்வழியாக மட்டுமே அவரை அறிந்தவன். அவை கொடுக்கும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரை மதிப்பிட்டு எழுதினேன். பெர்னியரின் பிரயாண அனுபவங்கள் நூலுக்கு முன்னுரை எழுதியபோது, அந்தப் பயண அனுபவக்கட்டுரைகள் வழியாக எனக்குக் கிடைத்த சித்திரங்களையும் மன எழுச்சியையும் முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தேன். அதிகபட்சமாக நாலைந்து பக்கங்கள். அவ்வளவுதான். இத்தகு மனச்சித்திரங்களுக்கு இந்தப் புத்தகம் வழியமைத்துக்கொடுக்கும் என்பதை ஒரு வாசகனுக்கு உணர்த்துவதற்கு, அந்தக் குறிப்புகள் போதுமானவை. சமீபத்தில் ‘குமாரநந்தன் சிறுகதைகள்’ சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை பக்க அளவில் இன்னும் சுருக்கமானது. எந்தப் புத்தகத்தைப்பற்றி, எந்த நோக்கத்துக்காக எழுதுகிறோம் என்பதுதான் என் அளவுகோலே தவிர பக்க வரையறை அல்ல.
கேள்வி: தமிழ்ப்படைப்புகளை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கல்கள் சரியாக வாய்ப்புள்ளது என்று நம்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக ஒருநாள் சரியாகும். பித்தளையை நாம் வேண்டுமானால் தங்கம் என்று நம்ப விரும்பலாம். ஆனால் வாங்குபவனுக்குத் தெரியாதா என்ன? அவனை எப்படி ஏமாற்றமுடியும்? இந்த பித்தளை வியாபாரமெல்லாம் வேண்டாம், ஒழுங்காக தங்கத்தைக் கொடு என்று வாங்குபவனே கேட்டு வாங்கக்கூடிய காலம் வரும். அப்போது நிலைமை சரியாகும். இன்று, பரஸ்பர இலக்கிய அறிமுகம் என்பது தனிநபர்களின் முயற்சிகளால்மட்டுமே அதிக அளவில் நிகழ்ந்துவருகிறது. உலகமயமாக்கச் சூழலில் புத்தக விற்பனை என்பது பெரிய வணிகம். ஒரு வணிகம், வணிகத்துக்கே உரிய சூத்திரங்களோடு நிகழும்போது, படைப்புகளின் பரிமாற்றத்திலும் தகுதியானவைமட்டுமே விற்பனையாகும். ஒரு சக்திமிக்க சந்தை உருவாகும்போது, படிப்படியாக நிலைமை சீரடைந்துவிடும் என்றே கருதுகிறேன்.
கேள்வி: இலக்கிய எழுத்தாளர், ஜனரஞ்சக எழுத்தாளர் என அடையாளப்படுத்துதலைக் கடந்து, இலக்கிய இதழ்களில் எழுதுபவர், ஜனரஞ்சக பத்திரிகையில் எழுதுபவர் என்னும் வேறுபாடு மாறிவருவதாக நினைக்கிறீர்களா?
பதில்: இலக்கியம் எழுதுகிறவர்கள் பெரிய பத்திரிகைகளில் பங்களிப்பு செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க மாற்றம். ஆனால் பொழுதுபோக்கு படைப்புகளை எழுதும் எழுத்தாளர்கள் முற்றிலுமாக குறைந்துவருகிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். அந்தப் பள்ளத்தை நிரப்புவதற்காக சந்தையின் வேகம், இலக்கிய எழுத்தாளர்களை பொழுதுபோக்கு படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களாக மாற்றிவிடக்கூடாதே என்று கவலையாக உள்ளது.
கேள்வி: இணையம் என்பதும் இணைய இதழ்களும் வலைப்பூக்களும் தமிழ்ச்சூழலில் என்னென்ன விதமான மாற்றத்தினைக் கொண்டுவந்துள்ளது எனக் கருதுகிறீர்கள்?
பதில்: இணையம் இந்தத் தலைமுறைக்குக் கிடைத்திருக்கிற ஒரு மாபெரும் வசதி. உலகமயமான வணிகம் இன்று எல்லா மாநிலங்களின் எல்லைகளையும் கலைத்துப் போட்டுவிட்டது. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என பல திசைகளில் வேலைக்கான வாய்ப்புகளை நாடி இளைஞர்களும் இளம்பெண்களும் செல்லும் சூழல் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அந்தக் காலத்தில் தமிழகத்தின் ஒரு சிற்றூரிலிருந்து மதுரையையோ சென்னையையோ நாடிச் சென்றதுபோல, இந்த இடப்பெயர்வு இக்காலத்துக்குரியதாக இருக்கிறது. அவர்களை ஒரு குடையின்கீழ் இணைப்பது இணையம்தான். கல்லூரியைக் கடந்து, இணையத்தின் வழியாகத்தான் மொழியைப் பழகிக்கொள்ளமுடிகிறது. படைப்பூக்கம் உள்ளவர்கள் வலைப்பூக்கள் வழியாகவும் இணைய இதழ்கள் வழியாகவும் எழுதிப் பழகுகிறார்கள். அறிவியல் வளர்ச்சியில் இது தவிர்க்கமுடியாத கட்டம். பல நல்ல இளம் எழுத்தாளர்களை இணையம் வழங்கியிருக்கிறது. சமீபத்தில், ஜெயமோகன் தன் இணைய தளத்தில் நல்ல தகுதியான இளம் எழுத்தாளர்களைக் கண்டெடுத்து உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் பல சிறுகதைகளைப் பெற்று, சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, வரிசையாக அறிமுகப்படுத்தினார். இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணையம் வழியாக மட்டுமே அறிமுகமானவர்கள். பல நல்ல தளங்கள் இன்று தமிழில் இயங்கிவருகின்றன. சங்க இலக்கியங்களையும் கம்பராமாயணத்தையும் பாரதத்தையும் ஐம்பெரும் காப்பியங்களையும் இன்று பல தளங்கள் காப்பாற்றி வருகின்றன. ஒரு குறிப்புக்காக புரட்டிப் பார்ப்பது என்பது மிகவும் வசதியாக உள்ளது. தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவேற்றம் செய்துவைத்துள்ள தளம் உள்ளது. மிகச்சிறந்த நூல்களை அறிமுகம் செய்யும் ஆம்னிபஸ் தளம் உள்ளது.
*
கேள்வி: எழுத்தாளர் என்பவர் எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும்படியான சூழல் தமிழில் இல்லையே. கன்னடத்தில் இருக்கிறதா? அல்லது ஆங்கில மொழியில் தவிர்த்து இந்தியாவின் பிற மொழிகளிலும் அந்த எழுத்தை மதிக்கும் சூழல் இல்லையா?
இந்தியாவின் மாநில மொழிகளில் எழுதுகிறவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டே எழுதுகிறவர்கள்தான். தமிழில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற விதிவிலக்குகள் போல எல்லா மொழிகளிலும் ஒன்றிரண்டு பேர்கள் இருப்பார்கள். அவ்வளவுதான். பொதுவாக, இலக்கிய எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய வாசகப்பரப்பு மிகவும் குறைவானது. விற்பனை என்கிற அளவில் இவர்களுடைய நூல்கள் விற்று முடிக்க பல நாட்களாகும். அதனால் எழுத்தைமட்டுமே நம்பி வாழ்வை நடத்த முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. எல்லா மொழிகளிலும் இருக்கிற விதிவிலக்குகள்போல, கன்னடத்திலும் விதிவிலக்குகள் உண்டு. முதன்மையான எடுத்துக்காட்டு லங்கேஷ். எழுத்தாளனாகும் விருப்பத்திலும் பத்திரிகை நடத்தும் விருப்பத்திலும் பேராசிரியராக செய்துகொண்டிருந்த வேலையைத் துறந்துவிட்டு வந்தவர் அவர். அந்தக் கனவை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டவர். அவருடைய சுயசரிதை நூல் எழுதி வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளை வெளியிட நேர்ந்தது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் எழுத வந்த தலைமுறையினரில் பெரும்பாலானோர் அவரால் கண்டடையப்பட்டு, அவருடைய பத்திரிகையால் அறிமுகபப்டுத்தப்பட்டவர்கள். தமிழில் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ்கூட அவருடைய பட்டறையில் உருவானவர்தான். இதை அவரே தன்னுடைய பல நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.
கேள்வி: பதிப்பகங்களும், பத்திரிகைகளும் எழுத்தாளருக்கான சரியான ராயல்டியைக் கொடுக்கின்றனவா?
மற்றவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தருகிறார்கள். வாங்கிக்கொள்கிறேன்.
கேள்வி: சில கவிஞர்களையும், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், இசை, எஸ். ராமகிருஷ்ணன் என்று எழுத்தாளர்களையும் குறிப்பிட்ட நீங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் குறித்து மட்டும் பல இடங்களில் குறிப்பிட்டு விஷயங்களைக் கூறியிருக்கிறீர்களே. பிரத்யேகக் காரணங்கள் ஏதும் உண்டா? அவரைக் குறித்து அடிக்கடி எழும் சர்ச்சைகளையும் அறிந்திருப்பீர்கள் தானே. எழுத்தாளனின் எழுத்தையும் வாழ்வியல் முறையையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டுமா?
மற்றவர்களைவிட, ஜெயமோகன் மனத்தளவில் என்னோடு மிகவும் நெருக்கமானவர் என்பதுதான் காரணம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக என்னோடு பழகிவருபவர். அவருடைய படிப்பறிவும் அனுபவமும் விரிவும் ஆழமும் கொண்டவை. என்னுடைய பல சந்தேகங்களுக்குத் தெளிவுகிடைக்க எனக்குத் துணையாக இருந்தவர். அவரைப்பற்றிக் குறிப்பிடாமல் பேசுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. உறைநிலைக்குப் போய்விட்ட ஒரு சமூகம் புதிய ஒரு கருத்தை உள்வாங்கிக்கொள்ள எதிர்வினையாற்றும் மூர்க்கத்தைப் போன்றதுதான், அவர் கருத்தை ஒட்டி உருவாகும் விவாதங்கள். அக்கருத்தில் பொதிந்திருக்கும் ஆழத்தையோ, உண்மையையோ பொருட்படுத்தி யோசிக்கவேண்டியது அவசியம். மாறாக, அதை நம் சூழலிலிருந்து அப்புறப்படுத்தும் வேகத்தில் மூர்க்கமாக மறுக்கமுனையும்போது, விவாதங்கள் தவிர்க்கமுடியாததாகிறது. எழுத்தைமட்டும் பார், எழுத்தாளனைப் பார்க்காதே என்பது வழக்கத்தில் உள்ள பழமொழிதான். ஆனால், ஜெயமோகனைப் பொருத்தவரையில் எழுத்துக்கும் வாழ்வுக்கும் எந்த இடைவெளியும் இல்லாதவர் என்பதே என் எண்ணம்.
கேள்வி: குழு அரசியல் என்பதை புறந்தள்ளியிருக்கிறீர்கள். எழுத்தாளர்களின் அரசியல் என்று சொல்லப்படுவது எதை முன்னிறுத்தி சொல்லப்படுகிறது? அதன் விளக்கம் என்ன?
அந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஒரு பொருளும் இல்லை. தந்திரங்களாலும் மயக்கும் வார்த்தைகளாலும் உருவாக்கப்படும் மாயைக்கு நீண்ட ஆயுள் கிடையாது. அதிகபட்சமாக ஓர் எழுத்தாளனால் என்ன அரசியல் செய்துவிடமுடியும்? தனக்குத் தேவையான ஒரு படைப்பை, அது தரமில்லாதது எனத் தெரிந்தபிறகும்கூட தரமானதாக ஒரு பொதுவெளியில் முன்வைத்து வாதிடக்கூடும். அதிகபட்சமாக, அதற்கு ஏதேனும் ஒரு நிறுவனத்தின் பரிசை வாங்கித் தரமுடியும். அவ்வளவுதான். ஆனால், அது எத்தனை நாளுக்கு நிலைத்திருக்கும். கவரிங் நகை வெளுத்துப்போவதுபோல, அந்த சாகசம் விரைவாகவே வெளுத்துப் போகும். இப்படி, பொருட்படுத்தப்படாமல்போன படைப்புகள் தமிழில் பல உண்டு. அதனால்தான், அந்தச் சொல்லுக்கு எந்தப் பொருளும் இல்லை என்று சொல்கிறேன்.

கேள்வி: சிறந்த கவிதை, சிறந்த சிறுகதை, சிறந்த கட்டுரை அல்லது சிறந்த நாவல் – இவற்றுக்கென நவீனத்துவம், பின்நவீனத்துவத்தையும் கடந்துவிட்டோம் எனக் கூறப்பட்டுவரும் இக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தனி இலக்கணங்கள் உள்ளனவா? உதாரணத்துக்கு க. நா.சு. நாவல் குறித்து மூன்று விதமாக குறிப்பட்டது போல.
வாழ்வை அவதானித்து சாராம்சப்படுத்திச் சொல்லும் முறை, சமூகத்துக்குத் தேவை என்கிற எண்ணத்தில் கருத்துகளை மனத்தில் பதியும்வண்ணம் புனைந்து சொல்லும் முறை, பொழுதுபோக்குக்கான எழுத்துமுறை என்கிற மூன்று பிரிவுகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியவை. நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கான தத்துவம். எப்படிப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட படைப்பாக இருந்தாலும், அது இந்த மூன்று பிரிவுகளிலேயே அடங்கிவிடும்.
கேள்வி: வருங்காலத்தில் இன்றைய தமிழை ஆர்வமாகப் படிக்காமல் ஆங்கில, ஹிந்தி மற்றும் பிற உலக மொழிகளைப் பாடமாகப் படிக்கும் மாணவ சமுதாயத்தால், தமிழ் வாசிப்பு மற்றும் தமிழ் இலக்கிய சூழல் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்கள் என்ன? எழுத்தாளர்கள் அவற்றை எவ்விதம் எதிர்கொள்ளலாம்?
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலமொழிகளுக்கும் உள்ள பொதுவான ஒரு நெருக்கடி இது. ஒரு தேசம் தன்னுடைய மக்களுக்குத் தேவையான வேலைகளை வழங்கும் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் முடிவை எடுக்கும்போது, மக்கள் தனக்கான வேலைகளை தாமே தேடிக்கொள்ளும் நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவே உலகமயக்கொள்கையும் தாராளமயக்கொள்கையும் உருவாக்கிய உலக வணிகத்தின் நிறுவனங்கள் அவர்களுக்கான வாசலைத் திறந்துவைத்திருக்கிறது. அவற்றில் நுழைவதற்கான தகுதிகளில் முதன்மையானதாக முன்வைக்கப்படும் ஆங்கில மொழியறிவை அடைவதற்கு ஒவ்வொரு குடிமகனும் போட்டிபோடுகிறான். தன் பிள்ளையை பந்தயத்தில் வெற்றிபெற்றவனாக்கும் வேகமாகவே இதைப் பார்க்கவேண்டும். அந்த வேகத்தில், அவர்கள் ஆங்கில மொழியறிவு வேறு, ஆங்கிலப்பயிற்றுமொழி வேறு என்பதைப் புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். அந்த அறியாமையை, இந்தியாவில் இயங்கும் தனியார் பள்ளிகள் தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஐ.டி.ஐ. தேர்வுக்கான பாடங்களை ஆறாம் வகுப்பிலிருந்தே நடத்துகிறோம் என்று விரிக்கப்படும் வலைகளில் போய் விழுகிறவர்களைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?. வெற்றிக்கான வேகமும் மூர்க்கமும் உள்ள சமூகமாக நம் சமூகம் மாறிவருகிறது. இதன் மறுபக்கமாக தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும். நாம் ஒரு சின்ன கணக்கைப் போட்டுப் பார்க்கலாம். முப்பதாண்டுகளுக்கு முன்னால் நம் சூழலில் வெளிவந்த பத்திரிகைகள் எத்தனை? அவை அச்சிடப்பட்ட எண்ணிக்கை என்ன? இன்று வெளிவரும் பத்திரிகைகள் எத்தனை? அச்சிடப்படும் எண்ணிக்கை என்ன? பிரபலமான ஆங்கில இந்து பத்திரிகை நிறுவனம் எதை நம்பி ஒரு தமிழ் நாளிதழை லட்சக்கணக்கில் வெளியிட்டுவருகிறது.? தமிழுக்கு வாசகர்கள் இல்லையென்றால் இது எப்படிச் சாத்தியமானது? தமிழுக்கு வாசகர்கள் இல்லை, தமிழைப் படிப்பவர்கள் இல்லை என்பதெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்படும் அச்ச உணர்வு என்றுதான் நினைக்கிறேன்.
கேள்வி: எழுத்தாளர்களை பித்தம் பிடித்த மனநிலை கொண்டவர்களாகவும் காணவேண்டிய அவலம் குறித்தும்– அவர்கள் யதார்த்தத்தை அறியாமல் உடோப்பியன் (Utopian) மனோபாவத்தில் கற்பனையில் திரிபவர்களாக கருதப்படுவதற்கும் தோதாகவே இன்றைய எழுத்தாளர்கள் இருக்கின்றனரா?
எனக்குத் தெரிந்த அளவில் அப்படி யாரும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
கேள்வி: படைப்பாளி என்பவன் எவருக்கும் தலைவணங்காத, அடிமையாக இருக்காத பண்புடன் இருப்பவன் என இல்லாமல், விருதுக்காகவோ பணத்துக்காகவோ புகழுக்காகவோ, சுயநலத்தின் எந்த எல்லைக்கும் சென்று சுயமரியாதையை விட்டுக்கொடுத்து கிடப்பது அவலமான விஷயம் அல்லவா?
ஆமாம்.
கேள்வி: அனுபவங்களைத் தேடித் தேடி பயணம் செய்யும் நீங்கள், உங்கள் ஏதேனும் ஒரு முக்கிய பயணத்தில் கற்றுக்கொண்ட மொத்த மனிதகுலத்துக்கான முக்கிய அனுபவ பாடம் ஒன்றினைக் குறித்து சொல்லுங்கள்.
ஒவ்வொரு பயணத்திலும் ஓர் அரிய அனுபவம் கிடைக்கவே செய்கிறது. ஒருநாள், ஒரு பேருந்துப் பயணத்தில் நான் பார்த்ததைச் சொல்கிறேன். ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, ஆண்களும் பெண்களும் கலந்த ஒரு கூட்டம் ஏறியது. எல்லோரும் கட்டடத் தொழிலாளிகள் என்பது பார்த்ததுமே புரிந்தது. அதற்கான கருவிகள் கொண்ட பைகளை அவர்கள் சுமந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தலைவர் போல இருந்த ஒரு பெரியவர் நடத்துநரிடம் மொத்தமாக சீட்டுகள் வாங்கினார். சீட்டைக் கொடுத்துவிட்டு நடத்துநர் போய்விட்டார். சீட்டை வாங்கிய பெரியவர், ஒவ்வொரு சீட்டையும் ஒவ்வொரு பெயராக முணுமுணுத்தபடி ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றி அடுக்கிக்கொண்டே வந்தார். எங்கோ எண்ணிக்கை பிசகிவிட, மீண்டும் முதலிலிருந்து தொடங்கி எண்ணத் தொடங்கினார். அந்த முறையும் பிசகிவிட்டதுபோல. பெருமூச்சோடு மறுபடியும் எண்ணினார். இதற்குள் கிட்டத்தட்ட அவர்கள் இறங்க்வேண்டிய நிறுத்தம் நெருங்கிக்கொண்டே இருந்தது. சட்டென்று அவர் எழுந்து நடத்துனரை அருகில் அழைத்தார். ‘மன்னிச்சிக்குங்க, ஒரு சீட்டு குறைவா எடுத்துட்டேன். இன்னும் ஒரு சீட்டு கொடுங்க’ என்று சீட்டுக்குரிய பணத்தை எடுத்து நீட்டினார். அந்த நடத்துனர் மட்டுமல்ல, அருகில் நின்றிருந்த எல்லோருக்குமே அவர் செய்கை ஆச்சரியமாக இருந்தது. ‘ஏங்க, இந்த ஒரு சீட்டுக்கா என்னை கூப்பிட்டிங்க, பேசாம இறங்கிப் போவவேண்டியதுதானே’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். ‘அது எப்படிங்க? நான் என்ன மனசாட்சி இல்லாத ஆளா? தப்பு செஞ்சி வச்சிக்கிற பணம் எப்படிங்க வயித்துல ஒட்டும்? நான் நிம்மதியா தூங்கவேணாமா?’ என்று அவரும் சிரித்தார். அதற்குள் நிறுத்தமும் வந்துவிட எல்லோரும் இறங்கிப் போய்விட்டார்கள். எவ்வளவு பெரிய மகத்தான உண்மையை எவ்வளவு எளிதாக அவரால் சொல்லமுடிந்தது என்று வியப்போடு நினைத்துக்கொண்டேன். இந்த மனசாட்சியைத் தொலைத்துவிட்டதால்தானே, நம் சமூகத்தில் இத்தனை அவலங்கள் என்றும் தோன்றியது.

27.02.2014
குதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்] :: பதாகை பாவண்ணன் சிறப்பிதழ்,