அதுல பாருங்க தம்பி…I

‘நம்ம கம்பெனி நாடகத்தில் பாகவதர் நடிக்கப் போகிறார்’ என்று ஒரே பரபரப்பாக இருந்தது யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் நாடகக் கம்பெனியில். எதற்காக பாகவதர் நடிக்கவேண்டும்? என்னென்ன வேஷங்கள் செய்வார்?’ என்றென்று அடுக்கடுக்காகக் கேள்விகேட்டுத் துளைத்த அந்தச் சிறுவனுக்கு விளக்கினார் சகநடிகர். ‘ அடே பையா, ‘ஆனையைக் கட்டித் தீனி போடுவது’ என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அதுதான் மொதலாளியின் நெலமை. ஏறக்குறைய நூறுபேருக்கு நல்ல சாப்பாடு, சலவை, முடி திருத்தம், மருத்துவம் இன்னும் என்னென்ன தேவையோ எல்லாம் நம்ம நாடகத்துக்கு வர வசூல் மூலம்தான். சிலசமயம் நம்மளோட சொந்தக்காரர்களும் வந்து தங்கி விடுகிறார்கள். இதுபோக நாடகத்துக்கு வேண்டிய டிரெஸ், மேக்கப் சாமான், சீன் செட்டிங்ஸ், படுதா, கரண்டு பில்லு, வண்டி வாடகை, தியேட்டர் வாடகை இதெல்லாம் வேற இருக்கு. நாம் நாடகம் ஆடும் சில ஊர்களில் வசூல் பற்றாக்குறையினால் ஊரைவிட்டுப் போகும்போது கடனாளியாகத் தான் இருப்போம். அந்த மாதிரி சமயங்களில் பாகவதர் மாதிரி சினிமாவில் பிரபலமானவர்கள் வந்து நடித்துக் கொடுக்கிற ‘ஸ்பெஷல்’ நாடகங்களின் வசூல் மூலம் தான் நாம கடன்களைக் கட்டிவிட்டு அடுத்த ஊர் போய்ச்சேரமுடியும், அதுக்குதான் வரார் பாகவதர்’. கிட்டத்தட்ட பின்னாளில் திரைப்படங்களில் கௌரவத் தோற்றத்தில் பெரிய நடிகர்கள் நடித்தார்களே அதுபோல.


நாடகம் சிறப்பாக நடந்து முடிந்து ஆயிரக்கணக்கில் வசூல். மாலை, மரியாதையோடு பாகவதருக்கு சிறப்பு செய்கிறார் யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை. ‘நீங்கள் இத்தனை நடிகர்களைக் கட்டிக்காத்து பல குடும்பங்களையும் நாடகக்கலையையும் காப்பாற்றுகிறீர்கள். இது சாதாரண விஷயமல்ல. உங்களைப் போன்ற தியாகிகளால் மட்டுமே இது முடியும். நீங்கள் எப்போதெல்லாம் கூப்பிடுகிறீர்களோ, அப்போதெல்லாம் வந்து நடித்துக் கொடுப்பது என் கடமை’ என்று அவரிடம் கூறிவிட்டு, நடிகர்களைப் பார்த்து ‘நான் இன்றைக்குப் பிரபலமான சினிமா நடிகனாக இருப்பதற்கு நாடகமே காரணம். எத்தனையோ கஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டுதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். என்னை உதாரணமாக வைத்துக்கொண்டு நன்றாக உழையுங்கள். கடவுள் கண் திறப்பார். எந்தக் கடவுள்…? சினிமாக் கடவுள்’ என்று கூறிவிட்டு காரில் ஏறிச்செல்கிறார் பாகவதர்.

‘பக்த பிரகலாதா’ நாடகம். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வரவேண்டும். அவர் வெளியேவர சமிங்ஞையாக சிறிய வெடி வெடிப்பது வழக்கம். அன்றைக்கு வேட்டு வேலை செய்யவில்லை. நாடகஆசிரியர் ‘டே, வேட்டு வெடிக்கல வெளிய வாடா’ என்று கத்த, நரசிம்மர் தூணோடு விழுந்து, உடைந்து வெளியே வந்து ஹிரண்யனை மடியில் கிடத்தி குடலைக்கிழிக்க, நீண்ட சிங்கநகங்களோடு ‘போலிக் குடலை’த் தேட, ‘மேக்கப் மேன்’ குடலை வைக்க மறந்துவிட்டது அப்போதுதான் தெரிந்த ஹிரண்யன் ‘சொந்தக் கொடல உருவிராதடா’ என்று கத்த, படுதாவைப் போட்டு நாடகத்தை நிறைவு செய்த ‘காமெடி’ யும் நடந்திருக்கிறது.     
 
எல்லாத் தொழில்முறை நாடகக் குழுக்களைப் போலவும் முதலில் புராணநாடகங்களைத்தான் போட்டுக் கொண்டிருந்தார் யதார்த்தம். ‘சீன்’ களைத் தனியாக வாடகைக்கு எடுப்பது கட்டுப்படியாகாமல் ‘சீன்’ களோடு உள்ள தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து கொஞ்சம் செலவைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். பின் செலவு கட்டுப்படியாகாமல் சமூக நாடகங்களும் போட ஆரம்பித்திருக்கிறார். சமூக நாடகங்கள் போட்டால் அத்தனை பேருக்கும் வேலையில்லை. மிகக் குறைவான பாத்திரங்களே தேவைப்பட்டன. குழுவையே மூன்றாகப் பிரித்து மூன்று ஊர்களுக்கு அனுப்பி நாடகங்கள் நடத்தியிருக்கிறார். அப்போதும் வரவு செலவு ‘இழுபறி’ நிலையிலே இருந்திருக்கிறது. அப்போதுதான் ‘சீன்’களை வாடகைக்கு விடும் கிருஷ்ணய்யாவின் அறிமுகம் கிடைக்கிறது யதார்த்தத்துக்கு.  பம்பாயிலுள்ள பார்ஸிக்காரர்கள் வியாபார நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து, அங்கு நடைபெற்ற நாடகங்களைக் கண்டு இங்கும் அதேபோல தொழில்முறை நாடகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். அப்படிப் பெரும் செலவில் ஆரம்பிக்கப்பட்டு மும்பை, டெல்லி, கல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் சிறப்பான முறையில் நாடகங்களை நடத்தி பெரும் பணமும், புகழும் சம்பாதித்தது பாலிவாலா நாடகக் கம்பெனி. அவர்கள் சென்னையில் லைலா மஜ்னு, ஷெரின் ஃபர்ஹாத், இந்திரசபா, சகுந்தலை, ஹரிச்சந்திரா போன்று உருதிலும், சமஸ்கிருதத்திலும் விளங்கிய காவியங்களை இந்தி மொழி நாடகங்களாக நடத்தி வந்தனர். அந்த நாடகங்களில் பெண்வேடமேற்று நடித்து வந்த கன்னையாவுக்கு ஏன் நாமும் இவர்களைப்போல் நாடகங்களை நடத்தக்கூடாது என்று தோன்ற, அதன்பிறகு ஆரம்பித்ததுதான் கன்னையா நாடகக் கம்பெனி. முதன்முதலாக அவர் பெரும்பொருட்செலவில் சென்னையில் போட்ட ‘தசாவதாரம்’ தமிழ் நாடக ரசிகர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியது. நாடக வெற்றிக்கு இரண்டு காரணங்கள் பல்லாயிரக்கணக்கில் (இன்றைய லட்சங்கள்) செலவழித்து போடப்பட்ட தத்ரூபமான ‘செட்டு’கள் மற்றும் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா சகோதரர்கள்.

லஷ்மி சமேதராக மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் காட்சியைக் கண்டவர்கள் இருக்கையை விட்டெழுந்து ‘கோவிந்தா..கோவிந்தா..’ என்று வணங்குவார்களாம். அதுபோலவே மந்திரமலை, வாசுகியைக் கொண்டு பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் காட்சியும், மஹாவிஷ்ணு மோஹினியாகத் தோன்றி அசுரர்களை ஏமாற்றும் காட்சியும், காளிங்கமர்த்தனம் செய்யும்போது பாம்பு விஷம் கக்கும் காட்சியும் ரசிகர்களை பரவசப்படுத்தியது. மகாபாரதத்தில் யுத்தத்தை இவ்வளவு தத்ரூபமாகக் காட்டியது பேரதிசயமாக இருந்தது. ‘பகவத்கீதை’ நாடகத்தில் கலியுகம் பிறந்ததற்கு அறிகுறியாக ‘மோரிஸ்’ காரை மேடையில் காட்டிய பெருமையும் கன்னையாவிற்கே.  அதுபோக எஸ்.ஜி.கிட்டப்பா ‘தேவர் அசுர குலத்தோரே திவ்ய தேவாம்ருதம் உமக்கே தருவேனே’ என்று கூர்மாவதாரத்தில் மோகினியாகவும், ‘தசரதராஜ குமாரா… அலங்காரா..சுகுமாரா..அதிதீரா’ என்று ராமாவதாரத்தில்  பரதனாகவும் பாடிய பாடல்கள் நாடக ரசிகர்களின் தேசிய கீதங்களாயின. கன்னையா கம்பெனியின் பகவத்கீதையும் அவருக்கு பெரும்புகழ் சேர்த்த நாடகம். அதிலும் கிட்டப்பாதான் கதாநாயகன். கிட்டப்பா தனிக்கம்பெனி ஆரம்பித்து நடிக்க ஆரம்பித்ததும், ‘பகவத்கீதை’ யில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றவர் மகாராஜபுரம் விஸ்வநாதய்யரின் தம்பியாகிய மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி. கன்னையா தன்னுடைய இறுதிக்காலத்தில் நாடகத்தில் பயன்படுத்திய நகைகளையெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும், தன்னுடைய நாடகத்தின் ‘சீன்’ களையெல்லாம் தன் சகோதரர் கிருஷ்ணய்யாவிற்கும் கொடுத்துவிட்டார். அந்தக் கிருஷ்ணய்யாவின் அறிவுரையின் பேரில்,கன்னையாவின் ‘சீன்’களைக் கொண்டு, மறுபடியும் ‘தசாவதாரம்’ மற்றும் ‘கிருஷ்ணலீலா’ நாடகங்களை நடத்த ஆரம்பித்தார் யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை. நல்ல பேரும் புகழும் கிடைத்தது. நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன், ‘திருவிளையாடல்’  இயக்குனர் ஏ.பி.நாகராஜன், ‘சகுந்தலை’,’கண்ணகி’ படங்களுக்கு இசையமைத்த இசை மேதை எஸ்.வி.வெங்கட்ராமன் எல்லோரும் யதார்த்தம் கம்பெனியில் நடித்தவர்களே. கடைசிக்காலத்தில் தன் நாடகக்குழுவினரிடமே கம்பெனியை ஒப்படைத்து விட்டார் யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை. 

நாடகங்களில் கதாநாயகனுக்கு ‘ராஜபார்ட்’ கதாநாயகிக்கு ‘ஸ்திரிபார்ட்’ என்றும், திருடனுக்கு ‘கள்ளபார்ட்’ என்றும் பெயர். எல்லோருக்கும் தெரிந்த ‘கள்ளபார்ட்’ நடராஜன் கமலின் ‘தேவர் மகன்’ படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்தார்.             பெண்கள் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ‘ஸ்திரிபார்ட்’ டிலும் ஆண்களே நடித்தனர். ‘அல்லி’ பரமேஸ்வரய்யர், கே.எஸ்.அனந்தநாராயணய்யர் போன்றோர் வெகு பிரபலம். ‘திருவிளையாடல்’ பட இயக்குனர் ஏ.பி.நாகராஜன் ‘ஸ்திரிபார்ட்’ல் பெயர் பெற்றவர். பெண்கள் நடிக்க ஆரம்பித்த பிறகு ‘அயன் ராஜபார்ட்’டில், அதாவது முக்கியக் கதாநாயகனாக நடித்த பெண்களும் உண்டு. முதல்நாள் நாடகத்தில் ‘நந்தனாரா’க கிட்டப்பா, வேதியராக சுந்தராம்பாள் நடித்தால், மறுநாள் நாடகத்தில் நந்தனாராக சுந்தராம்பாள், வேதியராக கிட்டப்பா. ரசிகனைப் பலமுறை பார்க்கவைக்க விதம்விதமான யுக்திகள். 

இதிலே ‘கள்ளபார்ட்’ சென்னையில் ‘பாக்ஸிங்’ கிற்குச் சமமாக, அல்லது மேலேயே புகழ் பெற்றிருந்த, பொழுதுபோக்கு நாடகக்கலையின் முன்மாதிரி. இதிலும் ஆண்களும் பெண்களும் ஆடியிருக்கிறார்கள். திருடன்தான் கதாநாயகன். இரட்டைஅர்த்த வசனங்கள், விரசமான அசைவுகளோடு கூடிய நடனங்கள் எல்லாம் உண்டு. பிறகென்ன, ஏகோபித்த வரவேற்புதான். ” ‘ஜில் சதாரம்’ –  ஒரே ஸ்பெஷல், காணத்தவறாதீர்கள். கண்டுகளியுங்கள். ‘கள்ளபார்ட் ராணி’ சரோஜா பெருங்கட்டுர் விஜயம். நாளை மறுநாள் மலேசியா – சிங்கப்பூர் விஜயம். இது சமயம் தவறினால் மறுவாய்ப்பரிது. இடத்திற்கு முந்துங்கள். ‘ஜில் சதாரம்’ டிக்கட் ரூ 2.00, 3.00, 5.00″. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்படாதிருந்த சென்னை ராஜதானியில் கொட்டகை நிறைந்த காட்சிகளாக வெற்றிநடைபோட்டது. முக்கியக் காரணம் ‘கள்ளபார்ட் குவீன்’ சரோஜா. விரல் நனைய நனைய விசில் அடித்தார்களாம் ரசிகர்கள். 

முதல் பாராவில் எதற்காக பாகவதர் நடிக்கவேண்டும்? என்று கேட்ட சிறுவன் பெயர் ராமசாமி. தன் பத்தொன்பது வயதினிலேயே அறுபதுவயதுப் பெரியவராக ‘நாம் இருவர்’ படத்தில் அறிமுகமாகி ஐம்பது வருடங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக திரையில் வலம் வந்த வி.கே.ராமசாமி என்றால் அனைவருக்கும் தெரியும். ‘அதில பாருங்க தம்பி..’ ‘அது கெடக்குது கழுத..’ என்று ரெண்டு கையையும் தொங்கப்போட்டுக்கொண்டு அவர் சாதாரணமாகப் பேசுவது கூட சிரிப்பை வரவழைக்கும். அவருடைய தனித்துவமான குரல் தொனி அப்படி.     அவருடைய தன்வரலாற்று நூலான ‘எனது கலைப்பயணம்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) இருபதாம் நூற்றாண்டின் நாடகக்கலையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், அதன் அடுத்த பரிமாணமான திரைப்படம் நோக்கிய அதன் நகர்தலையும் காட்டுகிறது. அந்தக்கால நாடகஆசிரியர்கள், கலைஞர்கள் பற்றிய செய்திகள் ஆச்சரியப்படுத்துகின்றன. இதெல்லாம் படிக்கும்போது அவர் குரலிலேயே படிப்பது போன்ற பிரமை தோன்றுவது கூடுதல் சுவையை அளிக்கிறது.

  ‘சந்த சரப வண்ணக் களஞ்சியம்’ என்று புகழப்பட்ட ராஜபார்ட் பி.எஸ்.உலகநாத பிள்ளையின் ஒரே புதல்வனாகப் பிறந்த பி.யு.சின்னப்பா சிறுவயதில் பஜனை கோஷ்டிகளில் வெகு பிரபலம். இவருடைய பஜனை கோஷ்டிக்குத்தான் பெருங்கூட்டம் கூடுமாம். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கம்பெனியில் குருகுலவாசம். அருமையாகப் பாடி, பேசி நடிக்கக் கூடிய சின்னப்பாவுக்கு முதலில் கொடுக்கப்பட்டதென்னவோ இந்திரஜித்தால் போர்க்களத்தில் வெட்டுப்பட்டுச் சாகிற ‘மாயச்சீதை’ வேஷம். பாட்டும் கிடையாது, பேச்சும் கிடையாது. அங்கிருந்து விலகி ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் சேர்ந்து தன்னுடைய பாட்டு, நடிப்புத்திறமையினால் பன்னிரண்டு வயதினிலேயே அவருடைய ‘மாஸ்டர் பீஸ்’ ஆன ‘கோவலன்’ நாடகத்தில் ‘ராஜபார்ட்’ ஆனார். அந்தக் கம்பெனியின் ‘துருப்புசீட்டு’ நாடகம் கோவலன்தான். ‘ புதுக்கோட்டை – சிங்கம் – சின்னச்சாமி (சின்னப்பா) கோவலனாகவும், காளி என்.ரத்தினம் காளியாகவும் நடிக்கும் கோவலன் காணத்தவறாதீர்கள். குழந்தைகள், கர்ப்பஸ்த்ரீகள், இளகியமனமுடையவர்கள் வரவேண்டாம் ‘ என்று விளம்பரம். சின்னப்பாவைப் போலவே பஜனை கோஷ்டிகளில் ஆரம்பித்து நாடகங்களில் நுழைந்து, தன்னுடைய பாட்டுத் திறமையினாலே ‘கிட்டப்பாவின் எதிரொலி’ யாக பெரும் உயரங்களைத் தொட்டவர் ‘சோழவந்தான் சிங்கம்’ டி.ஆர்.மகாலிங்கம்.              

நடிகர்களிடையே சாதியைப் பற்றிய கிண்டல்கள் சர்வசாதாரணமாக இருந்திருக்கிறது. உதாரணமாக ஒரு நடிகர் ஆசாரி இனத்தைச் சேர்ந்தவர் என்றால் அவரைக் கதாநாயகி ‘பொடி வெச்சுப் பேசறதுதான் உங்க வழக்கமாச்சே’ என்று கூறுவார். கதாநாயகனும் விட்டுக்கொடுக்காமல் ‘உன் சாயம் வெளுக்கத்தான் போகிறது’ என்பார், அவள் சலவைத் தொழிலாளி இனத்தைச் சேர்ந்தவள் என்று குறிக்குமுகமாக. ரசிகர்களுக்கும் இதன் அர்த்தம் தெரியும், சிரிப்பார்கள். இந்தக் கிண்டலில் இருந்து அந்தக்கால சூப்பர்ஸ்டார் எம்.கே.டி யும் தப்பவில்லை. ஒரு முறை ‘பவளக்கொடி’ ஸ்பெஷல் நாடகம். பாகவதர் அர்ச்சுனன். பி.எஸ்.கோவிந்தன் கிருஷ்ணன். அர்ச்சுனன் கிருஷ்ணன் காலில் பிடித்துக் கெஞ்சுவதுபோல் காட்சி. ‘கொல்லன் பற்றுக் குறடைப் போட்டுப் பிடித்தாற்போல, அப்பப்பா..என்னவலி, காலைவிடு’ என்பார் கோவிந்தன். ரசிகர்கள் புரிந்துகொண்டு ஆரவாரம் செய்வார்கள். ஒத்திகையில் பாடாத ராகத்தில் பாடி, ஹார்மோனியக் காரர்களை திக்கு முக்காட வைப்பதில் கோவிந்தனுக்கு தனி மகிழ்ச்சி. 

‘ஸ்பெஷல்’ நாடகங்களின் இலக்கணமே அதுதான். கதையின் போக்கு கெடாமல் தனக்குத் தோன்றியத்தைப் பேசுவதும் பாடுவதும். உதாரணமாக கே.பி.சுந்தராம்பாள் வேடனாக வந்து


‘ஆயலோட்டும் பெண்ணே – கண்ணே
ஆவியே என்னாருயிர்ச் சஞ்சீவியே
மன்மதனென்னும் பாவியே
மலர்க்கணைகள் தூவியே
வாட்டுகிறான் கண்ணே’

என்று பாட, கிட்டப்பா (வள்ளியாக)

‘மாய வேடா போடா மூடா’

என்று எதிர்ப்பாட்டு பாடி, கை நீட்டி, கழுத்தைச் சுளுக்கி, ஒரு நடை நடப்பார். ரசிகர்கள் கரகோஷம் காதைப்பிளக்கும். இதைக் கேட்ட கே.பி.எஸ். ‘நீ சின்னப்பெண்ணாக இருந்தாலும் மிகவும் அழகாகவும், விதரணையாகவும், வினயமாகவும் பேசுகிறாய். இப்பிடிப் பேச யார் கத்துக்கொடுத்தது?’ என்று கேட்க, கிட்டப்பா யோசிக்காமல் ‘நான் சங்கரதாஸ் சுவாமிகள் பள்ளியில் படித்தவள். உன் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படமாட்டேன். என்னிடம் வாலாட்டாதே’ என்று பதிலளிக்க கரகோஷம் வானைப் பிளக்கும். ரசிகர்கள் ‘ சுந்தராம்பா…இனி பேசாதே, பாட்டு மட்டும் பாடு’ என்பார்களாம்.  

இன்று போலவே அன்றும் இரண்டு பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிப்பது அபூர்வம்தான். இன்றைய தல, தளபதி போல அன்றைய எதிர்துருவங்கள் எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யு.சின்னப்பா. இருவரும் ஒரே ஒரு முறை சேர்ந்து நடித்த ‘பவளக்கொடி’ நாடகம் காரைக்குடி ‘ஷண்முகவிலாஸ்’ தியேட்டரில். ‘தலையா கடல் அலையா’ என்று கூட்டம். இவர்கள் இருவரும் ‘மோதும்’ காட்சிகளுக்காக, வெளியூரிலிருந்தெல்லாம் மற்ற ‘ஸ்பெஷல்’ நாடகக் கலைஞர்களே  முன்பதிவு செய்துவைத்து வந்திருந்தார்கள். நாடக விளம்பரமே ‘சத்தியசீலன் – கண்டூர் இளவரசன் சந்திப்பு!’ ‘சத்தியசீலன்’ பாகவதர் நடித்த படம். ‘சந்திரகாந்தா’ வில் கண்டூர் இளவரசனாக நடித்து பெரும்புகழ் பெற்றவர்  பி.யு. சின்னப்பா. அந்தக்கால வழக்கப்படி அர்ச்சுனனாக நடித்த பாகவதர் மேடையின் உள்ளிருந்து மேடைக்கு வரும்போது ஒரு பாடலைப் பாடிக்கொண்டு வந்து மக்களிடம் பலத்த கரகோஷத்தைப் பெற்றார். அர்ச்சுனன் அல்லியோடு வாதாடும் நாலைந்து சீன்களுக்குப் பிறகுதான் கிருஷ்ணன் பிரவேசம். பி.யு.சி யும் கிருஷ்ணனாக ஒரு பாடலைப் பாடிக்கொண்டே பிரவேசித்தார். பாகவதருக்கிருந்த கைதட்டல் சின்னப்பாவுக்கு இல்லை. அதற்காக சோர்ந்துவிடவில்லை சின்னப்பா. நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. அர்ச்சுனன் வண்டு கடித்து இறந்துபோனதாகச் சொல்லி மாயப்பெண்ணான கிருஷ்ணன் அழுது புலம்புகிற காட்சி. 

‘சாக உமக்கு விதி வந்ததோ
சஞ்சலம் வண்டி னாலே நேர்ந்ததோ’

 
என்ற பாட்டை துரித காலத்தில் பாடி, சுற்றிச் சுற்றி வந்து நெஞ்சில் அறைந்து கொண்டு வயதான பெண்கள் சாவு வீட்டில் பாடுவதுபோலவே பாடியது கண்டு ரசிகர்கள் ஆரவாரம் தியேட்டரை அதிரச்செய்தது. கீழே படுத்திருந்த தியாகராஜ பாகவதரே ‘யோவ் சின்னப்பா, என்னய்யா இது’ என்றிருக்கிறார். ‘சும்மா ஜனங்களுக்கு ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, நீங்க தப்பா எடுத்துக்காதீங்க’ என்றிருக்கிறார் சின்னப்பா.  ‘சின்னப்பா..ஒப்பாரிவை..ஒப்பாரிவை..’ என்று ஆரவாரத்தில் கொட்டகை குலுங்க,

ராஜா வருவாருன்னு நான்
ரோஜாப்பூ வாங்கி வெச்சேன்
ராஜாவும் வரக்காணோம் என்
ரோஜாப்பூ வாடிப்போச்சே
வட்டக் கருப்பட்டியே என்
வாசமுள்ள செங்கரும்பே நான்
தேடக் கிடைக்காத திரவியமே
செத்தாயே
உனக்கு டாக்கி ….
கிராக்கி வந்த ……

இந்த அடியை பி.யு.சி. பாடியதும் ரசிகர்களின் கரகோஷமும் விசிலடிப்பும் வானைப்பிளந்தது.    

தஞ்சையில் முதலாம் ராஜராஜன் காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசித் திருவிழாவில், ராஜராஜேஸ்வர நாடகம் நடைபெற்றதாக கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. விஜய ராஜேந்திர ஆசாரியன் சாந்திகூத்தன் திருவாலன் திருமுதுகுன்றன் நடித்ததாகவும், இவருக்கு ஆடவல்லான் என்னும் மரக்காலால் நூற்றிஇருபது கலம் நெல் வழங்கப்பட்டிருக்கிறது. கமலாலயப் பட்டர் இயற்றிய ‘பூம்புலியூர்’ நாடகம் பற்றிய குறிப்பு திருப்பாதிரிப்புலியூர் கல்வெட்டில் காணப்படுகிறது போன்ற பழங்குறிப்புகள்.    

தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த நல்லதங்காள் கதையை மலையாளத்தில் படமாக எடுத்தபோது ஹீரோ நல்லண்ணனாக நடித்த பின்னணிப்பாடகர் கே.ஜே.யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப், கடவுளின் அருளால் நடைபெறும் அதிசயங்கள் மற்றும் பாவமன்னிப்பு இந்து மதத்திலும் உண்டு என்று வலியுறுத்தும் நொண்டி நாடகங்கள்(அதாவது நொண்டி தனக்கு கடவுள் அருளால் தனக்கு கால் எப்படி சரியானது என்று கூறும்) , தாழ்த்தப்பட்டோரிடையே ஊடுருவிய மதமாற்றங்களைத் தவிர்க்க முயற்சித்த பள்ளு நாடகங்கள், விடுதலைப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஸ்வநாததாஸின் நாடகங்கள், ஆங்கிலஅரசின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள் நடந்தே வந்து நடித்துக்கொடுத்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, ‘டம்பாச்சாரி’ நாடகத்தில் பதினோரு வேஷங்களை மின்னல் வேகத்தில் மாற்றி பிரமிக்கவைத்த ‘இந்தியன் சார்லி’ சி.எஸ்.சாமண்ணா, நடிகைகளின் அங்கலாவண்யங்களை மனம்போன போக்கில் வருணித்து ‘டார்ச்சர்’ பண்ணிய எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், ‘சுருளி மலை மேவும் சீலா’ , ‘ ஐயா பழனி மலை வேலா’ என்று நாடகத்திற்கு நடுவே பாடி ‘அப்ளாஸ்’ அள்ளிய ‘ஹார்மோனிய’ சக்ரவர்த்தி காதர்பாட்சா, ‘ராமன் ஷத்ரியன், அவன் மீசையோடிருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்’ என்று வாதிட்டு கடைசிவரை மீசையை எடுக்காமலேயே ராமனாக நடித்த கமலாலய பாகவதர்,  பி.ராஜாம்பாள், டி.பி.ராஜலக்ஷ்மி,’ஸ்ரீவை நார்ட்டன்’ எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, மேடைநாடகத்திலேயே ‘நிர்வாணக்காட்சி’யில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய கும்பகோணம் பாலாமணி போன்ற பெரும் கலைஞர்கள்.  விசா,பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல் நினைத்தபடி கப்பலில் கடல் கடந்து சென்று நாடகம் நடத்திய காலம் அது. கப்பல் கட்டணம் பர்மாவிற்கு பதினாறு ரூபாய் எட்டணா. சிங்கப்பூருக்கு இருபத்திரண்டு ரூபாய் எட்டணா.  இது போன்ற புதுப்புது செய்திகள்.  

கேரளா முழுதும் ஐயப்பன் வரலாறை நாடகமாக நடத்தியும், இயேசுபிரான் வரலாற்றை வெள்ளைக்காரர்களே வியக்கும் வண்ணம் நாடகமாக நடத்தியும், காந்தியடிகளே கண்டு வியக்கும் வண்ணம் ‘நந்தனார்’ நாடகம் நடத்தியும் பெரும் ஜாம்பவானாகத் திகழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. ஆங்கிலமெட்டில் அமைந்த ‘சுவிசேஷ’ கீதங்களுக்கு தமிழில் பாடல்கள் செய்த சங்கரதாஸ் சுவாமிகள். பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகப் பங்களிப்பு. இவைகளைக் குறித்து பல அத்தியாயங்கள் இருபதாம் நூற்றாண்டின் நாடக உலகின் சிறப்பை தெளிவாகக் காட்டுகின்றன. எம்.எஸ்.சுப்புலஷ்மியின் ‘மீரா’ படப்பாடல்களை தினமும் தியேட்டருக்கு வெளியே காரில் அமர்ந்தபடி கேட்டுவிட்டுச் செல்லும் பி.யு.சின்னப்பா, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நண்பனின் தோளை அழுத்திக்கொண்டு மேடையின் திரைமறைவிலிருந்து உச்சஸ்தாயி பாடல்களைப் பாடிய எஸ்.ஜி.கிட்டப்பா, நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக்கொட்டகையில் மணக்கும் சாம்பிராணியின் மணம் என்று பல நுண்ணிய தருணங்களையும் பதிவு செய்துள்ளார் வி.கே.ராமசாமி. நாடகக்கலை வேரூன்ற பெரும்பங்களிப்பு செய்த கன்னையா போன்ற கலைஞர்களுக்கு சென்னையில் ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை என்ற வருத்தத்தையும் பதிவுசெய்கிறார் வி.கே.ஆர்.  

‘நாம் இருவர்’ நாடகம் வெற்றிபெற்றபின் அதனைத் திரைப்படமாக எடுக்க நினைத்த ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் அன்றைக்கு நாடகம் பார்க்க வந்திருக்கிறார். நாடகம் முடிந்ததும் ஒவ்வொரு கலைஞராக அழைத்துப் பேசியவர், ‘பாங்கர் ஷண்முகம்பிள்ளை’ யாக நடித்த பெரியவரை எங்கே? என்றிருக்கிறார். அந்தப் பாத்திரத்தில் நடித்த பத்தொன்பது வயது வி.கே.ஆர். போய் நிற்க அவர் நம்பவேயில்லை. கடைசியில் நாடக வசனங்களை அதே போல பேசிக்காட்டி நம்பவைத்திருக்கிறார். இந்த நாடகத்தை ஏ.வி.எம் படமாக எடுக்கப்போவது தெரிந்ததும் அதில் நடித்த எல்லாநடிகர்களும் நாமும் நடிக்கப்போகிறோம் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் படத்தில் நடித்ததென்னவோ வி.கே.ஆரோடு சேர்த்து மூன்றேபேர்தான். ‘இந்தத் தொழிலில் ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாதது’ என்கிறார் வி.கே.ஆர்.     

தன்னுடன் நடித்த எல்லா நடிகர்களின் ‘நல்ல’ பக்கங்களையும் அவர்களைப்  பற்றிய அத்தியாயங்களில்  சொல்லியிருக்கிறார் வி.கே.ஆர். மிகை நவிற்சிதான். நூலுக்கு முன்னுரை மட்டுமே இருபது திரைப்பிரபலங்கள் எழுதியிருக்கிறார்கள். அதே மிகைநவிற்சி,விதந்தோதல்கள். கமல்ஹாஸன் மட்டும் ‘நானும்,ரஜினியும் எங்களைப்பற்றிய அத்தியாயங்களுக்கு முற்றிலும் தகுதியற்றவர்கள்’ என்று அடக்கமாகச் சொல்லிக்கொள்கிறார். இந்தநூல் இருபதாம்நூற்றாண்டின் நாடகக்கலையின் முக்கிய ஆவணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறந்த சொல்லகராதியோடு இன்னும் சிறந்த முறையில் பதிப்பித்திருக்கப் பட்டிருக்கவேண்டிய நூல். இந்தப் புத்தகத்தை மட்டும் வேறுஒரு நகைச்சுவை நடிகர் எழுதியிருந்தால்,நேர்ப்பேச்சில் ‘மூதே…வி, சாதாரண காமெடி நடிகனா இருந்துக்கிட்டு என்ன… மாதிரி அருமையா… எழுதிப்புட்டான்’ என்று ஆச்சரியப்பட்டிருப்பார் வி.கே.ஆர். நமக்கும் மனதில் தோன்றுவது அதுதான்.    

நூலின் பெயர் : எனது கலைப்பயணம்
சுயசரிதை நூல்
எழுதியவர் வி கே ராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
539 பக்கங்கள் / புத்தகம் வெளியான ஆண்டு : முதல் பதிப்பு 2002

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.