அன்றாடன்
சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென
கனவின் தலைகீழ் உலகில்
தலை இல்லா மனிதனாக
இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்
குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக
உன்னால் இன்னும் எத்தனை தூரம் தான் போக முடியும் ?
நிரம்பி வழியும் இருளை கொஞ்சம் அள்ளிப் பருகு
பச்சை மாமிசம் புசிக்கும்
மிருகத்தின்
பற்கள் கொண்ட
திரிகளை வளர விடு
அவ்வபோது
சுடு
நீயாய் சுடர்
நீயாய் அணை
நித்தம் பொழியும் மழை
நிதானமாக அழு
ஆமையின் தலையென
திரிக்குள் சென்றடங்கு
– ஆமிராபாலன்

சிசிடிவி
புதிய அறிமுகங்கள்
என்னைக் களைத்துப் போடுகின்றன
நானறிந்த ஊரில் நானறியாத் துணிக்கடைகளின்
அந்நிய வாடை புதிரழவிக்கிறது
சிக்கிக் கொண்ட சிந்தனாப் பிரதி
குழந்தையைத் திருப்பி மடியில் போட்டு
உழுக்கும் தாயின் விளையாட்டில் மீண்டு விடுகிறது
டிராலிகளைத் தள்ளிக் கொண்டு போகும்
கனவான்களின் எல்லா பதில்களும்
ம்ம்ம் என்றே எதிரொலிக்கின்றன
ஸ்வைபிங் மிஷின் திகட்டிப் போகும்படி
வன்முத்தம் செய்யப்படுகிறது
சில கிரெடிட் கார்டுகள் மீது
ஒவ்வாமை வந்தால்
முதலிலே எரர் காட்டிக் கதவடைக்கவும்
தயங்குவதில்லை
டிரையல் ரூம் வாசல் வந்து
இது நல்லாருக்கா எனக் கேட்கும்
அவள் முகத்தில்
முதல் துணியை மாட்டிக் காட்டும் போதிருந்த
அதே பூரிப்பு
மாற்றம் செய்யா ஆச்சர்யத்துடன்
எக்ஸலெண்ட் டி என்றேன்
சிசிடிவி கேமராவை
அவள் பார்க்கப் போவதேயில்லை
– ஜார்ஜ் ஜோசப்
மறுபிறவி
முதற்பல் விழுந்தவுடன் அதை புதைத்து வைத்து தங்கம் கிடைக்கும் என்று காத்திருந்தேன்
இரண்டாவது பல்லுக்கும்
மூன்றாவதற்கும்
அதற்குமேல் விழவில்லை
ஆவலோடு தோண்டியபோதெல்லாம் பூதம் காத்த பல்லுமில்லை உருமாறிய தங்கமுமில்லை
வட்ட வடிவ கூழாங்கலொன்று தான் கிடைத்தது
அந்த கூழாங்கல்லை மீன் தொட்டிக்குள் போட்டால் முத்தாக உருமாறும் என்ற மாமா சொன்ன கதையையும் நம்பினேன்
இப்போதும் கூழாங்கல் அப்படியே வட்டமாயிருக்கிறது தொட்டியின் நடுவில்
எப்போதாவது தன்னிச்சையாக முதற்பல் விழுந்து முளைத்த இடத்தை நுனி நாவால் வருடுகையிலெல்லாம்
கூழாங்கல்லின் வழுவழுப்பு மட்டுப்படுகிறது
மறுபிறவி மனிதர்களுக்கு மட்டும்தானா என்ன?
– விக்னேஷ் குமார்
காஞ்சிபுரம்.
அருமையான கவிதைகள்..