செவ்வந்திப் பூவிற்கு அருகில்

ஒரு வேளை
செவ்வந்தி மலரொன்றைப் பூத்து குலுங்கச் செய்யவே
ஆந்தை ஒன்று வசந்தகாலம் தொட்டு
அலறிக் கொண்டிருந்திருக்க வேண்டும்
ஒருவேளை
செவ்வந்தி மலரொன்றை பூத்துக் குலுங்கச் செய்யவே
கருத்த மேகங்களில் இடி கதறிக் கொண்டிருக்க வேண்டும்
ஓ எனதருமை செவ்வந்தியே
நீ
இளமையின் கடந்த கால சந்து பொந்துகளின் வழியாக
நீண்ட பயணம் செய்த பிறகு
நிலைக் கண்ணாடி முன்பு வந்து நிற்கும்
என் மூத்த சகோதரியைப் போலிருக்கிறாய்
அவளுடைய இதயம் ஏங்கங்களாலும் வருத்தங்களாலும் பீடிக்கப்பட்டு
இறுகிப்போய்விட்டது
ஒருவேளை
உன் மஞ்சள் நிற இதழ்களை விரியச் செய்வதற்காகத்தான்
நேற்றிரவு உறைபனியின் முதல் துளி வீழ்ந்திருக்க வேண்டும்
என்னால் உறங்க முடியவில்லை.
மூலம்: Beside a Chrysanthemum
**
ஒளிவீசும் நீல வான நாள்

நீல வானம்
கண்களைக் கூசும்
வெளிச்சம் வீசும்
இந்த நாளில்
நாம் தவறவிட்ட நேசத்திற்குரியவர்களை நினைத்து ஏங்கித் தவிப்போம்
எங்கெல்லாம் இலையுதிர் கால மலர்கள் வந்தமர்கிறதோ
அங்கெல்லாம்
பச்சைப் பசேலென்ற அனைத்தும்
சிவப்பாகிவிடுகிறது
பனி பொழியட்டும்
வசந்தகாலம் திரும்பிச் செல்லட்டும்
நான் இறக்கும் போது
நீங்கள் உயிரோடு இருந்தால் என்ன ?
நீங்கள் இறக்கும் போது
நான் உயிரோடு இருந்தால் என்ன?
நீல வானம்
கண்களைக் கூசும் வெளிச்சம் வீசும்
இந்த நாளில்
நாம் தவறவிட்ட நேசத்திற்குரியவர்களை நினைத்து
ஏங்கித் தவிப்போம்.
மூலம்: This azure day
**
பனி மூடும் நிலமொன்றில்

பரவாயில்லை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
பரவாயில்லை
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
பரவாயில்லை
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
பரவாயில்லை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
குவியல் குவியலாக விழும் உறைப்பனித் திரள்
தங்கள் கூட்டிற்குத் திரும்பும் கோழிகள் மற்றும் காடைக் குஞ்சுகளின் கதறல் ஒலியைக் கூட
வாரி அணைத்துக் கொள்கிறது
வீடு திரும்பும் நல்வரவின் அனைத்து சமிக்ஞை ஒலியையும் கூட அது
வாரி அணைத்துக் கொள்கிறது
கண்ணீர் சிந்துபவர்கள்
ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டிருப்பவர்கள்
துயரத்தின் கணத்தோடு தவிப்பவர்கள்
அனைவரும் புதுத் தெம்போடு கிளம்புகிறார்கள்
பெரியவர்களுக்கு ஆறா கண்ணீரின் தடங்கள்
சிறியவர்களுக்குச் சின்னஞ்சிறு சிரிப்பு வரிகள்
வீடு திரும்பும் பெருங்கதையாடல்களும்
சிறு கதைகளும் தங்களுக்குள் மெதுவாக முணுமுணுக்கின்றன
பரவாயில்லை அப்படியே இருந்துவிட்டுப்
போகட்டும்
பரவாயில்லை
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
பரவாயில்லை
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
பரவாயில்லை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
உறைப்பனித் திரள்கள்
தொடர்ந்து விழுந்தபடியிருக்கின்றன
பல மலைகள் எழுப்பும் ஒலியைக் கூட அவை வாரி அணைத்துக் கொள்கின்றன
-நீல மலைகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
[*புராணங்களில் வரும் நீலமலை என்பது சீனாவில் எதோ ஒரு இடத்தில் இருப்பதாகவும் அதிலிருந்தே அனைத்து மலைகளும் தோன்றியதாகவும் செவிவழிக் கதையாடல்களில் சொல்லப்படுகிறது.]
**
மூலம்: In the Field Filling Up with Snow
*
ஸியோ ஜங்-ஜூ

Seo jung-ju (1915-2000): கொரிய மொழி நவீன கவிதைகளின் தந்தையாக கருதப்படுகிறார். Midang என்ற புனைப்பெயரில் இவர் 15 கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக 5 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவருடைய படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
*
தமிழில்: ஆமிராபாலன்
(இயற்பெயர் கார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியக் கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறார்.)
*