
தமிழில் ஒரு பழமொழி உண்டு; “ரிஷி மூலமும் நதி மூலமும் அறிவதற்கில்லை” என்பது. ரிஷிகளின் பூர்வாசிரம வாழ்வு பற்றித் தெரிந்து கொள்வது கடினம் மட்டுமல்ல, அவர்கள் அந்த வாழ்வைப் பற்றி விளக்குவதோ, அதன் நினைவுகளில் அமிழ்வதோ தகாத செயல் என்பதால் நாம் அந்த வேர்களைத் தேட முயல வேண்டாம் என்பது நோக்கம். துறப்பு என்பதன் அர்த்தத்தை நாம் பங்கப்படுத்தக் கூடாது என்பது கருத்து. ஆனால் நதிகளோ சிறு நீரூற்றிலிருந்து, ஓடைகள், அருவிகள், பாறைக் கசிவுகள், வெள்ளப் பெருக்கு என்று பற்பல இடங்களிலிருந்து பெறும் நீரைக்கொண்டு ஓடுவன. அவற்றின் மூலமும் நாமறியாத பல நதிகளின் சங்கமமாக இருக்கக்கூடும்.
ஆனால், மருத்துவ விஞ்ஞானத்தில், முக்கியமாக, தொற்று நோயியலில், மூலத்தை அறிதல் ஒரு முக்கியமான அங்கமாகும். சீனாவில் ஊஹான் நகரத்தில் ஆரம்பித்த ஒரு தொற்று நோய் சில மாதங்களுக்குள் மார்ச் 2020ல் பெரும் தொற்று நோய் (Pandemic) ஆக உருவெடுத்துவிட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தன் கணக்குப்படி, இதுவரை உலகளவில் 177 மில்லியன் நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3.8 மில்லியன் நபர்கள் இறந்துள்ளனர் என்கிறது.
இந்நோய் மருத்துவ உலகை மட்டும் ஆட்டி வைக்கவில்லை. உலகெங்கும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிட்டது. அது மட்டுமல்லாமல், உண்மை, நம்பிக்கை, சுதந்திர விசாரணை போன்ற பலவற்றைப் பற்றிக் கேள்விக் குறியையும் எழுப்பியுள்ளது. பதவியில் இருப்பவர்கள் உண்மையைத்தான் கூறுகிறீர்களா? மீள முடியாத அபாயங்களில் நம்மை தள்ளுகிறார்களா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கின்றது.
கோவிட் நோய் கிருமி இயற்கையில் உண்டானதா அல்லது ஆய்வகப் பரிசோதனைகளில் வெளிக்கிளம்பியதா? இதற்கான விடை மூலம்தான் தனி நபர்களும் அரசாங்கங்களும் இவ்வியாதியின் மற்றொரு பலத்த தாக்குதலை நிறுத்த இயலும், எண்ணிலடங்கா மரணங்களையும் பொருளாதாரப் பெருங்குழப்பங்களையும் உலகம் மறுமுறை சந்திக்க வேண்டாமென்றால் இக்கிருமியின் மூலத்தை அறிவது அத்தியாவசியம்.
இரு கருத்துகள்:
கோவிட் கிருமி கிளம்பிய இடத்தைப் பற்றி இரு முக்கிய கருத்துகள் நிலவுகின்றன. முதலாவதன்படி, இக்கிருமி விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் தொற்றிக்கொண்டது (Zoonotic transmission). இரண்டாவதன்படி, கிருமி ஆய்வகத்தில், குறிப்பாக Wuhan Institute of Virlogy(WIV)யில் நடந்த கையாளுதல்கள் மூலம், இந்தத் தொற்று உருவானது.
இவ்விரண்டுமே சம தகுதி உடையதாயிருந்தும் இன்னும் நிரூபிக்கப்படாதவை.
குற்றம் நடந்த இடத்தில் எப்போதுமே சில தடயங்கள் கிடைக்கும். யாராவது ஒருவர் பார்த்திருப்பார் அல்லது கேட்டிருப்பார். நாய் குரைத்திருக்கும் அல்லது குரைக்கும் நாய் குரைக்காதிருந்திருக்கும். குறிப்புகள், தகவல்கள், மின்னஞ்சல்கள், கை கால் சுவடுகள், மரபணுச் சான்றுகள் போன்றவையாகும்.
நுண் கிருமிகள் (Viruses):
நுண் கிருமி என்பது மெல்லிய திரைபோன்ற ஓர் உலகில் ஜடமாகவோ, உயிரோடோ உலவும் ஒரு ஜந்து. ஜந்து என்றுகூடச் சொல்ல முடியாது. அஃதொரு மரபணுத் தொகுப்பு (Genetic Code). தனக்குச் சாதகமாக ஓர் உயிரின் உயிரணுச் சுவரில் சிறிது நேரம் ஒட்டிக் கொண்டிருந்துவிட்டு, பிறகு உள்ளே நுழைந்து அந்த உயிரணுவையே தன்னை போன்ற பல நகல்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. பின், இந்த நுண் கிருமிகள் அங்கிருந்து வெளியேறிப் பல உயிர்களைத் தாக்குகின்றன. வௌவாலை நோய்ப்படுத்தும் ஒரு நுண்கிருமி வௌவால்களிடமிருந்து மனிதர்கள் மிகவும் வேறுபட்டிருப்பதால் அவர்களைத் தாக்காது. மனிதர்களிடம் நோயை உண்டு பண்ண வேண்டுமென்றால் முதலில் மனிதர்களை ஒத்த பிராணிகளிடையே (Intermediate host) அது நோயை உண்டு பண்ண வேண்டும். இது பல படிநிலைகள் இடையே உள்ளதால், மிக மெதுவாக முன்னேறும் ஒரு பயணம், செயல்.
ஏழு கொரோனா கிருமிகள், மனிதர்களிடையே தொற்று நோயை ஏற்படுத்தும் சக்தி படைத்துள்ளவை. இவற்றில், SARS-CoV-1, MERS-Cov, SARS-CoV-2 என்ற மூன்றும் மிக அபாயகரமானவை. மீதி நான்கும் மனிதர்களிடையே கடுமையற்ற நோய்க்குறிகளைப் பல முறை ஏற்படுத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கொரோனா கிருமி 58 அங்கத்தினர்களைக் கொண்ட சார்பிகோ எனும் ஒரு பேரினப் பகுதி (subgenus)யைச் சேர்ந்தது. சார்பிகோ கிருமிகள் பீட்டா கொரோனா எனும் பேரினத்துடன் (Genus) கூடியன.
மெர்ஸ்-கோவிட் கிருமி, வௌவாலிடமிருந்து ஒட்டகங்கள் வழியாக மனிதர்களைத் தொற்றியதை 9 மாதங்களில் கண்டறிய முடிந்தது. ஸார்ஸ் – கோவிட் -1, சிவெட் (Civet – புனுகுப் பூனை) என்ற பிராணிகளின் வழியாக மனிதர்களைத் தொற்றியது. இதை அறியத் தேவைப்பட்டவை 4 மாதங்கள்தான். இத்தகைய பிராணி விட்டுப் பிராணிக்குக் கிருமி பாய்தல் நடக்கும் சமயம், அக்கிருமி விட்டுச் செல்லும் கால் தடயங்கள் அநேகம். இக்கிருமிகளின் தேக்கத்தை முதற் பிராணிகளிடமும், சற்றே மாற்றமடைந்த கிருமித் தேக்கத்தை இரண்டாம் வகைப் பிராணிகளிடமிருந்தும் கண்டறிய முடியும். மேலும் மனிதர்களின் ரத்தத் திசுக்களின் மருத்துவப் பதிவேடுகளில் மூலம் பல மனிதர்களை தாக்கிய பின்னரே தொற்று நோயாக மாறியதும் தெரியவரும்.
நுண்ணுயிர்க் கிருமிகள் மாற்றமடையும் வழிகள் இரண்டு. உயிரணுவினுள்ளே இனப் பெருக்கம் நடைபெறும்போது ஏராளாமான நகல்கள் உருவெடுப்பதால், நகல்களில் சில சிறிய தவறுகள், மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இம்மாற்றங்கள் (Mutations) உள்ள கிருமிகள் நிலை பெறாது. அதிசயமாகச் சில மாற்றங்கள் மூலக் கிருமிகளைவிடச் சிறந்த கிருமிகளை உண்டு பண்ணும். இக்கிருமிகள் “தக்கன பிழைத்தெஞ்சல் “(Survival of the Fittest) என்ற கொள்கைக்கேற்றபடி எஞ்சி நிற்கும். இத்தகைய மாற்றங்கள் ஒரு சீரான வேகத்தில்தான் செல்லும். எனவே, விஞ்ஞானிகள் இக்கிருமிகளின் உருவ மாற்றத்திற்கு எத்தனைக் காலம் பிடித்தது என்பதைக் குத்துமதிப்பாகக் கணிக்க இயலும்.
இரண்டாம் வழி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நுண்ணுயிர்கள் ஓர் உயிரினுள்ளே (host) புகுந்தபின், மரபணுக்களை ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்வதின் மூலம் ஒரு புதிய கிருமியை உண்டுபண்ணுவதாகும். உதாரணமாக, நீல நிறக் கண்களும் சிவப்புத் தலைமயிரும் உள்ள கிருமி, கரு விழிகளும் கருமையான தலை மயிர் உள்ள கிருமியுடன் மரபணுப் பரிமாறல் செய்துகொண்டால் கருமையான மயிரும் நீல விழிகளும் கொண்ட கிருமி ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வகை மாற்றம் துரிதமாக நடக்கக் கூடியது. ஆனால் இம்மாற்றம் நடைபெற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நுண்ணுயிர்கள் ஒரே சமயத்தில் ஓர் உயிரினுள் புகவேண்டும். பரிமாறலின் மூலம் உற்பத்தியாகும் கிருமிகள் நிலையாக வாழத் தகுதியுள்ளவையாக அமையவேண்டும். எனவே, இவ்வழி விரைவில் மாற்றத்தை உண்டு பண்ணுவதாக இருந்தாலும் இந்நிகழ்வு சிறிதளவேயாகும், அரிதாகவே நடக்கும்.
இவ்விளக்கம், கோவிட்-2 இவ்வழிகளில் மனிதர்களிடம் பரவியிருக்கலாம் என்ற கருத்தில் சந்தேகத்தை எழுப்புகிறது. கொரோனாக் கிருமித் தேக்கம், வௌவால்களிடமோ இடைநிலைப் பிராணிகளிடமோ (intermediate host) காணவில்லை. சீனக் குகைகளில் வாழும் வௌவால்களைத் தொற்றியுள்ள நுண்ணுயிர் கிருமிகளின் மரபணுக்கள், கோவிட் -2 மரபணுக்களிலிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பதால், இவ்வளவு விரைவில் தேவையான மாற்றங்களை உண்டாக்கிக்கொண்டு மனிதர்களிடையே தொற்றிக்கொண்டன என்பது அறிவிற்கு ஒத்து வரவில்லை. சரி, இரண்டாம் வழியில் மனிதர்களைத் தொற்றியிருக்குமா என்ற கேள்விக்கான பதிலைப் பெற, நாம் Angiotensin Converting Enzyme 2 Receptor (ACE2 Receptor) எனும் புரதத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
Human ACE – 2 Receptor:
ஸார்ஸ் -கோவிட் 2 கிருமியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு சிறப்பியல்பு உண்டு.
ஏஸ் 2 ரிசெப்டெர் உள்ள உயிரணுக்களைத் தொற்றிக் கொள்வதில் இது சாமர்த்தியமுடையது. அதிலும் மனிதர்களுடைய ஏஸ் 2 ரிசெப்டெரை தொற்றிக்கொள்வதில் மிகச் சாமர்த்தியமுள்ளது.
ஸாரஸ்-கோவிட் 2 நம்முடம்பில் தொற்றிக் கொள்ளுமுன் 4 படிகள் ஏற வேண்டும். முதற்படி, ஒரு மனித உடம்பு; இரண்டாவது, குறிப்பிட்ட உயிரணுக்களிடம் ஒட்டிக் கொள்ளவேண்டும்; மூன்றாவது, அவ்வுயிரணுக்கள் கிருமியைச் சரியான இடத்தில் வெட்டவேண்டும்; நான்காவது படி, வெட்டப்பட்ட சரியான பகுதி உயிரணுக்குள் நுழைந்து தொற்றும் வேலையையும் நகலெடுப்பதற்கான தயாரிப்புகளை செய்யவேண்டும். ஒவ்வொரு படியுமே தற்செயலாக நிகழ்வது மிகக் குறைவு. இந்த நான்கு படிகளும், மாற்றங்கள் மூலம் ஒரு சேர அமைவதென்பது மிகவும் துர்லபம் என்றே சொல்லலாம்.
இத்திறமையான பண்புகளை கொரோனா கிருமி, மற்றொரு குடும்ப நபரான நுண்ணுயிர் கிருமியிடமிருந்து பெற்றிருக்குமா என்ற கேள்வி எழலாம். அதாவது, மனித ஏஸ் 2 ரிசெப்டெரை சுரண்டும் தன்மை படைத்த கொரோனா கிருமிகள் உள்ளனவா என்பதுதான் கேள்வி. இதற்கு, Furin Cleavage Site (FCS) என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 3 ஆவது படியான இந்த இடத்தைத்தான் ஏஸ் 2 ரிசெப்டெர் வெட்டுகிறது.
Furin Cleavage Site: (FCS)
Yiran Wu, Suwen Zhou என்ற இரு விஞ்ஞானிகள், FCS, ஸார்ஸ் கோவிட் 2 கிருமியிடம் உள்ளது, இது சாதாரணமாக பீட்டா கொரோனா கிருமிகளிடம்தான் காணப்படும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்கள். ஆனால் இதை மறுத்து Rossano Segreto, Yuri Deigin என்ற இரு விஞ்ஞானிகள் ஸார்ஸ் கோவிட் 2 டிடம் உள்ள FCS அதன் இனத்தை சேர்ந்த மற்ற கொரோனா கிருமிகளிடம் காணப்படவில்லை என்கிறார்கள். குறிப்பாக, FCS, ஒரு குறிப்பிட்ட வௌவால் இனத்தைத் தொற்றும் கொரோனாக் கிருமிகளிடம் காணப்படுகிறது ஆனால், அந்த இனம் வூகான் பிரதேசத்தில் இல்லை. மேலும், மற்றொரு குடும்பத்தை சேர்ந்ததாக இருப்பதால் இந்த இரு இனங்களும் கலந்து கோவிட் -2 கிருமியை உண்டு பண்ணியிருப்பது சாத்தியமேயில்லை என்கின்றனர்.
கோவிட்-2 கிருமி, ஏஸ்-2 ரிசெப்டெரைப் பயன்படுத்தித் தன் உற்பத்தியைச் செய்துகொள்கிறது என்பது இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும். இந்தத் திறமைக்கு மரபணு மாற்றமோ, ஒரே குடும்பத்திலிருந்து கடன் வாங்கிய மரபணுக்களோ ஒரு காரணமில்லையென்றால், அத்திறமை எங்கிருந்து வந்திருக்க முடியும்? கிருமிகளைப் பரிசோதனைக் கூடங்களில் உற்பத்தி செய்யும் விஞ்ஞானிகள் மனித உயிரணுக்களையும், மனிதர்களைப் போலவே உருமாற்றிய சுண்டெலிகளையுதான் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். எனவே, ஆராய்ச்சிக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் கிருமிகள் ஏஸ் 2 ரிசெப்டெரைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமையைக் கொண்டுள்ளன.
CGG-CGG:
இங்குதான், ஆர்வத்தைத் தூண்டும் துண்டுச் சான்று ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. 1992லிருந்தே நுண்ணுயிர்க் கிருமியியல் நிபுணர்கள் ஒரு நுண்ணுயிர்க் கிருமிக்கு உயிரைப் பறிக்கும் தன்மையை உண்டுபண்ணுவதற்கு மேற்சொன்ன FCS ஐ CGG-CGG என்ற மரபணுத் தொடர்தான் உகந்த இடம் என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர். கோவிட்-2, 58 நுண்ணுயிர்க் கிருமிகள் அடங்கிய சார்பிகோ பேரினப் பகுதியில், இந்த 6 எழுத்துகளை வைத்து அமைந்துள்ள வரிசைகள் 580000 இடங்களில் உள்ளன. ஆனால், இந்த 58 கிருமிகளில் ஒன்றான ஸார்ஸ் கோவிட்-2 மட்டுமே CGG-CGG என்ற வரிசையில் உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்த மாற்றம் உள்ள நுண்ணுயிர்க் கிருமியை ஆராய்ச்சிக் கூடத்தில்தான் உண்டு பண்ணமுடியும். இயற்கையாக ஏற்படக்கூடியதன்று. நீல நிறக் கண்கள் உதாரணத்தை வைத்துக் கூற வேண்டுமானால் கோவிட்-2 கிருமியைத் தவிர இக்குடும்பத்தில் வேறு எந்தக் கிருமியும் நீலக் கண்களுடன் பிறக்கவில்லை. .
முதல் நோய் பாதிப்பு:
MERS -CoV வௌவால்களிடமிருந்து ஒட்டகங்களைத் தாக்கியது. சில காலம் கழித்து, ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களிடையே பரவியது. இது ஒரு திடீர்த் தாவுதல் அன்று. முதலில் ஒரு ஒட்டகத்திலிருந்து ஒரு மனிதரைத் தொற்றுகிறது. அம்மனிதர் பிழைக்கிறார் அல்லது இறக்கிறார். பின், மற்றொரு ஒட்டகத்திடமிருந்து இன்னொரு மனிதரைத் தொற்றுகிறது. அவர் பிழைக்கிறார் அல்லது இறந்து போகிறார். இது திரும்பத் திரும்ப நடந்த பிறகுதான் கோவிட் கிருமி வேண்டப்பட்ட மாற்றங்களை அடைந்து மனிதர்களிடையே பரவுகிறது. ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களைத் தொற்றும்வரை இந்நோய் பெரிய அபாயமில்லை. மனிதர்களுக்கிடையே பரவும்போதுதான் மிகப் பெரிய அபாயமாக மாறுகிறது. இத்தகைய பரவல் நிறைய காலடித் தடங்களை விட்டுச்செல்வதால், தடயவியல் விஞ்ஞானிகளின் துப்பறியும் வேலையை எளிதாக்குகிறது.
கோவிட்-19 ஐப் பொருத்தவரை 80000க்கும் மேலான வீட்டு, காட்டு மிருகங்களைப் பரிசோதித்ததில் ஒன்றிடம்கூட இந்த கிருமியைப் போன்ற ஒன்றைக் காண இயலவில்லை. சீன அரசாங்கம் முக்கியமான தகவல்களை மறைத்துவிட்டது அல்லது அழித்துவிட்டது. இது அதிசயமாக உள்ளது. நோயாக மாறுவதற்கு முன்பு தடயங்கள் இருந்தால் அதன்மூலம் இக்கிருமி விலங்குகளிடமிருந்து வந்தது எனத் தெரியவந்தால் இவ்விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
இருப்பிடம், இருப்பிடம், இருப்பிடம்:
ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றினால், நோய்வாய்ப்பட்ட முதல் மனிதத் திரள் ஹானலூலுவில் இருக்காது. பயணம் செய்பவர்கள் அதிகமாயுள்ள இடங்களிலும், அங்கு வசிக்கும் பயணிகளோ அல்லது உடன் பயணம் செய்பவர்களோதான் பாதிக்கப்படுவர்.
வூஹான் நகரத்தில் 9 ரயில் பாதைகளும் 40 மருத்துவமனைகளும் உள்ளன.
டிசம்பர் 1, 2019 முதல் ஜனவரி 2020 நடு வரை கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் 2ம் ரயில் பாதைக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரயில் பாதைதான் வூஹான் நகரத்தையும் வூஹான் நுண்ணுயிர் ஆராய்ச்சிக்கூடத்தையும் இணைக்கிறது. இது தொடர்பில்லாத தற்செயலான நிகழ்வு என்பது நம்பமுடியாத ஒன்று.
செல்லும் வழியில் ஏற்படும் மரபணு மாற்றங்கள்:
கோவிட் போன்ற ஒரு நுண்ணுயிர்க் கிருமி ஒட்டகங்களைத் தொடர்ந்து தொற்றும்போது தங்கள் மரபணுக்களில் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்துகொள்கிறது. அதே கிருமி, மனிதர்களிடையே பரவும்போது அதற்குத் தகுந்தாற்போல் மாற்றங்களைச் செய்துகொள்கிறது. விஞ்ஞானிககள் இந்த மாறுதல்களுக்குத் தேவைப்பட்ட மாற்றங்களின் ஆதாரங்களை கண்டறிய முடியும்.
ஆனால், கோவிட்-2 கிருமிக்கு இந்த மாதிரியான ஆதாரங்கள் ஒன்றுமே காணப்படவில்லை. அதாவது, இக்கிருமி நேரடியாக மனிதர்களைத் தொற்றுவதற்கு ஒருவித மாற்றமும் செய்யத் தேவையில்லாமல் வந்தது மட்டுமல்லாமல், முதலிலிருந்தே அதிவேகமாகப் பரவும் தன்மையையும் கொண்டுள்ளது. பல மாதங்கள் ஒருவித மாற்றமும் இல்லாமல் பெரும் தொற்றுவியாதியாக உலகம் முழுதும் பரவிய பிறகே இதனிடம் ஒரு சிறிய மாற்றம் இங்கிலாந்தில் முதன் முதலாகத் தெரிந்தது. அடுத்து வந்த டெல்டா மாற்றம் ஒரு பெரும் புழுதிப் புயலாக மாறியதால் இந்த முக்கியமான விவரம் ஒரு தூசியாகத் தள்ளப்பட்டுவிட்டது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை (PLA) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 39 வயதான முதல் நோயாளியிடமிருந்த கோவிட்-19 கிருமியின் மரபணுத் தொகுப்புத் தொடர்தான் அடுத்த 294000 கோவிட்-19 கிருமிகளின் மரபணுக்களில் தொடர்ந்துள்ளது. இம்முதல் நோயாளி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை W.I.V. லிருந்து ஒரு மைல் தூரத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஸார்ஸ் கோவிட்-2 ஆராய்ச்சிக்கூடக் கசிவு “ – கண்டனங்கள்.
கோவிட்-19 வியாதி லட்சக்கணக்கான உயிர்களைக் குடித்ததுபோல் மனித சமுதாயத்திற்கு அவசியமாக உள்ள உண்மை, நம்பிக்கை ஆகிய இரண்டையும் சேர்த்து விழுங்கிவிட்டதோ என்று சந்தேகப்படுமளவிற்குக் கண்டனங்கள் குவியக் காரணம் என்ன? கோவிட்-19 கிருமி எங்கு உதயமாயிற்று என்பது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. இவ்வாறிருந்தும், இத்துறையின் பிரபல பிரமுகர்களும் குழுமங்களும் ஆரம்ப காலத்திலிருந்தே இக்கிருமி ஆய்வுக்கூடத்திலிருந்து கிளம்பியிருக்கலாம் என்னும் ஆலோசனையைப் பொய், தவறான கூற்று, ஊகம், சதி, நம்பத்தகாதது, நகைச்சுவைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது, நடந்திருக்கவே முடியாது, போலியென்று ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டது, திரும்பத் திரும்பப் பொய்ப்பிக்கப்பட்டது என்று இதை மக்களிடையே விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமென்ன?
ஏன் இவர்கள் ஆராய்ச்சிக்கூடக் கசிவு எனும் ஆய்வை அலட்சியம் செய்கிறார்கள்? இவர்கள் வெளியிடும் அறிக்கைகளெல்லாம் உண்மையான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதா அல்லது பொது மக்களின் அபிப்பிராயத்தைத் தாங்கள் முன்னரே எடுத்த முடிவிற்குக் கொணருவதா?
இத்தகைய எண்ணங்களை எழுப்பியவர்களில் ஃபாஸி (Anthony Fauci) போன்ற சிலர் சிறிது பின்வாங்கி இந்த ஆய்வு கவனிக்கப்பட வேண்டிய தகுதி உள்ளது என ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த ஆய்வை வெகுவாகக் கண்டனம் செய்த பலர், இந்த ஆய்வை ஆதரித்து முன்னர் எழுதியவர்கள் அல்லது ஸார்ஸ்-2 கிருமி கசிந்ததாக நம்பப்படும் சீன ஆராய்ச்சிக்கூடத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.
Scripps Research Institute ஐச் சேர்ந்த Kristian G.Anderson, இயற்கை மருத்துவம் (Nature Medicine) ஏப்ரல் 20 இதழில் எழுதியுள்ள கடிதத்தில்,” நாங்கள் கசிவைப் பற்றிச் செய்த அலசல், ஸார்ஸ் – கோவிட்-2 கிருமி, ஆராய்ச்சிக்கூடத்தின் உருவாக்கமோ, வேண்டுமென்றே ஆராய்ச்சிக்கூடத்தில் கையாளப்பட்ட கிருமியோ அன்று என்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளது,” என்று கூறுகிறார். ஆனால், இரண்டு மாதங்களுக்குமுன் இவரே Anthony Fauci க்கு அனுப்பிய அறிக்கையில் “இக்கிருமியின் சில லட்சணங்கள் மனிதர்களின் கைத்திறனாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் இக்கிருமியின் மரபணுத் தொடர்பு பரிணாமக் கொள்கையிலிருந்து முரண்பட்டுள்ளது என்கிறார். இதன் சாதாரண மொழியாக்கம், “இக்கிருமி ஆராய்ச்சிக்கூடத்தில் கையாளப்பட்டது“ என்பதுதான். இரண்டே மாதங்களில் ஏற்பட்ட இவரது மனமாற்றத்திற்கு என்ன காரணம்? இதற்குப் பதிலில்லை. கசிவைப்பற்றி மேற்கொண்டு ஆய்வுகளும் விவாதங்களும் தேவை என்றும் கூறவில்லை.
ஆராய்ச்சிக்கூடக் கசிவை உதறித் தள்ளிய மற்றொருவர் Eco Health Alliance Peter Daszak என்பவர். இவர் Zhengli Shi என்ற W.I.V. யின் முக்கியக் கொரோனாக் கிருமி விஞ்ஞானியுடன் இணைந்து வேலை செய்தவர். மேலும், W.H.O. (World Health Organization) செயலாக்கக் குழுவின் அங்கத்தினர். இக்குழுதான் ஸார்ஸ்-கோவிட்-2 கிருமி இயற்கையாகத் தோன்றிய கிருமி எனும் முடிவிற்குக் காரணம். இதை உலகச் சுகாதார நிறுவனத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர், Tedros Adhanom Ghebreyesus இதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு செய்யவேண்டும் எனக் கூறினார்.
Fauciயுமே சர்ச்சைக்குரிய நபர்தான். அவரது National Institute of Allergy and Infectious Diseases, Zhengli Shiயின் WIV பரிசோதனைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளது. அவரது ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றிற்கு Fauci அவர்கள் உதவியுள்ளதாக அவரே கூறியுள்ளார்.
கசிவுக் கொள்கைக்கான ஆதரவு:
பிரபல விஞ்ஞானிகள் பலர் கசிவுக் கொள்கையை இன்னும் விரிவாக ஆய்தல் வேண்டும் எனக் கூறியுள்ளனர். நோபல் பரிசு பெற்ற முன்னாள் Caltech தலைவர் Robert Redfield ஸார்ஸ் – கோவிட்-2 கிருமி ஆராய்ச்சிக்கூடத்தில் கையாளப்பட்டிருக்கலாம் என்கிறார். CDC (Center for Disease Control) முன்னாள் இயக்குனர் David Baltimore,” இக்கிருமியின் சில அம்சங்கள் வழக்கத்திற்கு மாறானதாக இருப்பதால் இதன் இயற்கைத் தோற்றத்தை எதிர்ப்பதாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
அரசாங்கங்களின் கிருமி ஆயுதச் சேகரிப்பு:
9 /11 தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு ஆந்த்ராக்ஸ் கிருமிப் பொட்டலங்கள் பல அமெரிக்கர்களுக்கு அனுப்பப்பட்டதில் 5 நபர்கள் இறந்தனர், 17 நபர்கள் நோய்வாய்பட்டனர். இதை அனுப்பியவர் யார் என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால் இந்த நுண்ணுயிர்க் கிருமி Ames Stain என்ற பிரிவைச் சேர்ந்தது. இக்கிருமியை வளர்த்துச் சேகரித்துவைத்த நிர்வாகம் அமெரிக்க இராணுவமாகும். இதைத் தபாலில் அனுப்பியவர்கள் இராணுவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களா என்பது தெரியவில்லை. ஆனால் எதற்காக அமெரிக்க இராணுவம் மிகவும் உக்கிரமான, அமெரிக்க மண்ணிற்குச் சம்பந்தமில்லாத கிருமிகளை வளர்த்துச் சேகரித்து வைக்கவேண்டும்? அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், கிருமி ஆயுத ஆராய்ச்சி, போருக்கு செல்லும் விருப்பத்துடன் செய்யப்படுவது அன்று. போரிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படும் ஆராய்ச்சி என்கின்றனர். அணு ஆயுத ஆராய்ச்சிக்குச் சப்பைக் கட்டுவது போல்தான் இதுவும் உள்ளது.
விலங்கின தோற்றக் கொள்கை (Zonotic Theory) சுருக்கம்:
ஒரு நுண்ணுயிர் கிருமியின் கட்டமைப்பு தற்செயல் நிகழ்வாக அமைவது மிக அரிதாக இருந்தாலும் இயற்கை இத்தகைய கிருமிகளை உற்பத்தி செய்துகொண்டுதான் இருக்கின்றது. கால் பந்தைத் திரும்பத் திரும்ப உதைத்துக் கொண்டிருந்தால் ஓரிரு முறையாவது வலைக்குள் விழத்தான் செய்யும். ஸார்ஸ் – கோவிட்-2 கிருமி இயற்கையில் இதுவரை காணப்படாவிட்டாலும் விலங்கினங்களிடையே வாழும் நுண்ணுயிர்க் கிருமிகளைப் பற்றிய நமது அறிவு ஒரு வரையறைக்குள்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உதாரணமாக, எபோலா கிருமி இயற்கையில் எங்கு உண்டாயிற்று என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை. எனவே, ஸார்ஸ் – கோவிட்-2 கிருமியும் இயற்கையாகவே தோன்றியிருக்கலாம் என்ற கொள்கையை அறவே ஒதுக்கி விடமுடியாது.
கசிவுக் கொள்கை சுருக்கம்:
தெரிந்த விவரங்கள்:
W.I.V. ஸார்ஸ் -கோவிட்-2 போன்ற கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தது.
விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சிக்கூடம் பாதுகாப்பானதா என்பதில் அக்கறை கொண்டிருந்தனர்.
2004ல், பெய்ஜிங் நகரப் பரிசோதனைச் சாலையிருந்து கசிந்த ஸாரஸ் – கோவிட்-1 கிருமியை உள்ளடக்குமுன் ஒன்பது நபர்களைத் தொற்றியது.
ஆராய்ச்சிக்கூடங்கள், நுண்ணுயிர்க் கிருமிகள் உக்கிரமாகப் பரவுதலையும், மனிதர்களிடம் தொற்றும் திறனையும் அதிகரிக்கும் “செயல் பெருக்கம்” (Gain of Function) முறைகளில் ஈடுபட்டுள்ளன.
ஸார்ஸ் – கோவிட்-2 கிருமியின் கட்டமைப்பு, ஆராய்ச்சிக்கூடம் அதை மனிதர்களிடையே உக்கிரமாக்கும் முயற்சியின் பிரதிபலிப்பாக உள்ளது.
கோவிட்-19 பெரும் தொற்றுநோயின் முதற்கட்டம், வூஹான் நகரத்தையும், W.I.V. யையும் இணைக்கும் வழியில் உள்ள மருத்துவமனைகள்.
பல மாதங்களாக ஸார்ஸ் – கோவிட்-2 போன்ற கிருமியைக் கண்டுபிடிக்க முயன்ற தேடல்கள் பயனளிக்கவில்லை.
இக்கொள்கையை எதிர்த்த பல பிரபல பிரமுகர்கள் W.I.V.யுடன் தொடர்புள்ளவர்கள் அல்லது இக்கிருமி ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாகியிருக்கலாம் எனக் கூறியவர்கள்.
இக்கிருமி இயற்கையில் உண்டானது என்பது நிரூபிக்கப்பட்டால் நன்மை அடையக்கூடிய சீன அரசாங்கம், அதற்குத் தேவையான அத்தாட்சிகளை அழித்தும் அதற்கான ஆய்வுகளைத் தடுத்தும், தாமதித்தும், குற்றச்சாட்டுகளைத் திசைமாற்றியும், மற்றவர்களைப் பழித்துக்கூறியும் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியது.
W.I.V. ஆராய்ச்சியாளர்கள் அனைவரும், ஜனவரி 2020ல் சீன இராணுவத்தைச் சேர்ந்த Maj. Gen. Chen Wei என்பவருடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டனர். அவரும் அவருடன் பணிசெய்த 6 நபர்களும் மார்ச் 3, 2020 அன்று கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளிவந்துள்ளது. இது, அமெரிக்காவில் முதல் தடுப்பூசி, கோவிட் 19 ஏற்படுத்திய நெருக்கடி நிலைமையை உத்தேசித்து அனுமதி பெறுவதற்கு 9 மாதங்கள் முன்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 வியாதி மனிதர்களைத் தாக்குவதைக் கேள்விப்பட்டபின் Zhengli Shi சொன்னது, “இந்த வியாதிக்கான கொரோனாக் கிருமி எங்கள் ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வந்திருக்குமோ?“ என்பதாகும். இதன்பின் அவர் செய்த முதல் காரியம் அவரது ஆராய்ச்சிக்கூட ஊடகத்தின் தரவு (database)களை மாற்றியமைத்து அங்கு நடக்கும் ஆராய்ச்சிகள் என்னவென்று தெரிந்து கொள்வதை மிகக் கடினமாக்கியதுதான்.
சொன்னவர் யாரென்று மறைக்கப்பட்ட அறிவுபூர்வமான அமெரிக்கத் தகவல்கள், 2019 இலையுதிர் பருவக் காலத்திலேயே, கோவிட்-19 தாக்குதல் ஆரம்பிக்கும் முன்னரே, வூஹான் ஆராய்ச்சிக்கூடத்தில் பணிபுரியும் பலர் நோயுற்றனர் என்று அறிவிக்கின்றன. இத்தகவல்களைப் பற்றி நன்கறிந்த பெயர் தெரியாத ஒருவர், “எங்களுக்குப் பலரிடமிருந்து வரும் ஆதாரபூர்வமான செய்திகள் மிகத் தரமானவை. துல்லியமானவை. ஆனால் இவையெதுவும் ஏன் இவர்கள் நோய்வாய்ப்பட்டனர் என்பதைக் கூறவில்லை” என்கிறார். இதன் பின்னணியில், Zheng Shi யின் “ஆராய்ச்சிக்கூடத்தில் பணியாளர், மாணவர் எவருமே பிணியுறவில்லை” எனும் கூற்று நம்பத்தகுந்ததாக இல்லை. இக்கிருமி அவரது ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வந்திருக்காவிட்டாலும், சுற்றுப்புறத்தில் வசிக்கும் சில பணியாளர்களும் மாணவர்களும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறிருக்க, இவரது கூற்று என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலுள்ளது.
முடிவுரை:
Xiao Qiang எனும் பெர்க்லி ஆராய்ச்சி விஞ்ஞானி சொன்னது, “இந்த ஸார்ஸ் – கோவிட்-2 கிருமி எங்கு உருவானது என்ற அறிவு இத்தகைய நிகழ்வு பிற்காலத்தில் மறுபடியும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு மிகவும் இன்றியமையாதது” என்பதாகும். இதுவரை நாம் அறிந்ததன் அடிப்படையில் ஆராய்ச்சிக்கூட கசிவிற்குத்தான் போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது உண்மையில்லை என்றால் அரசாங்க நிதியுதவியுடன் நடத்தப்படும் கிருமி ஆயுதப் பரிசோதனைகள் நெருப்புடன் விளையாடுவதற்கு ஈடானதாகும். மற்றொரு முறை அபாயகரமான நுண்ணுயிர்க் கிருமி சிறையிலிருந்து தப்பி மனிதர்களைத் தாக்கினால் உயிரிழப்புத் தொகை 4.86 மில்லியனோடு நிற்குமா? ஆண்டவனுக்கே வெளிச்சம். (9 செப்டம்பர் எண்ணிக்கை மொத்தம்: 4, 862, 807 . பார்க்க: https://www.worldometers.info/coronavirus/?%22.)
ஆதாரம்: The Origin of SARS-CoV-2 ;David R.Henderson (Senior Fellow) & Charles Hooper (C0ntributor); Research Reports; Volume LXXXII (82) July 2021; American Institute for Economic Research.
ஆதார ஆசிரியர்களின் மேற்கோள்கள் :
[1] Kristian G. Andersen et al, “The proximal origin of SARS-CoV-2,” Nature Medicine, April 2020.
[2] Yiran Wu and Suwen Zhao, “Furin cleavage sites naturally occur in coronaviruses,” Stem Cell Research, 2021. https://doi.org/10.1016/j.scr.2020.102115
[3] Rossana Segreto and Yuri Deigin, “The genetic structure of SARS-CoV-2 does not rule out a
laboratory origin,” BioEssays, 2020. https://doi.org/10.1002/bies.202000240.
[4] Steven C. Quay, “Bayesian Analysis of SARS-CoV-2 Origin,” 29 March 2021.
[5] Steven C. Quay, “Bayesian Analysis of SARS-CoV-2 Origin,” 29 March 2021.
[6] Steven Quay and Richard Muller, “The Science Suggests a Wuhan Lab Leak,” The Wall Street Journal, 6 June 2021.
[7] Steven C. Quay, “Bayesian Analysis of SARS-CoV-2 Origin,” 29 March 2021.
[8] Anthony Fauci, director of the National Institute of Allergy and Infectious Diseases
[9] Peter Daszak et al, “Statement in support of the scientists, public health professionals, and medical professionals of China combatting Covid-19,” The Lancet, 7 March 2020.
[10] Peter Daszak et al, “Statement in support of the scientists, public health professionals, and medical professionals of China combatting Covid-19,” The Lancet, 7 March 2020.
[11] Yiran Wu and Suwen Zhao, “Furin cleavage sites naturally occur in coronaviruses,” Stem Cell Research, 2021. https://doi.org/10.1016/j.scr.2020.102115
[12] Peter Daszak et al, “Statement in support of the scientists, public health professionals, and medical professionals of China combatting Covid-19,” The Lancet, 7 March 2020.
[13] Facebook and Google
[14] Kristian G. Andersen et al, “The proximal origin of SARS-CoV-2,” Nature Medicine, April 2020.
[15] Maggie Fox, “Lab leak Covid-19 theory is like something out of a comic book, virologist says,” CNN, 31 March 2021.
[16] World Health Organization (WHO) report on origin of SARS-CoV-2
[17] Washington Post, February 2020.
[18] Facebook and Google
[19] Kristian G. Andersen et al, “The proximal origin of SARS-CoV-2,” Nature Medicine, April 2020.
[20] Jesse D. Bloom et al, “Investigate the origins of Covid-19,” Science, 14 May 2021.
[21] PBS Frontline, 2011.
[22] Abhinandan Mishra, “PLA-controlled Wuhan lab under fresh scanner,” The Sunday Guardian, 15 May 2021.
[23] Abhinandan Mishra, “PLA-controlled Wuhan lab under fresh scanner,” The Sunday Guardian, 15 May 2021.
[24] Jane Qiu, “Chasing Plagues,” Scientific American, June 2020.
[25] Michael R. Gordon et al, “Intelligence on Sick Staff at Wuhan Lab Fuels Debate on Covid-19 Origin,” The Wall Street Journal, 23 May 2021.
[26] Rossana Segreto and Yuri Deigin, “The genetic structure of SARS-CoV-2 does not rule out a laboratory origin,” BioEssays, 2020. https://doi.org/10.1002/bies.202000240.
ஆராய்ந்து சிறப்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. உலகம் இந்தத் தீநுண்மியைப் பற்றி அறிந்ததே நவம்பர்-டிசம்பர் 2019-ல் தான். ஆனால்,அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, அதாவது ஏப்ரல்- மே- ஜூன் மாதங்களிலேயே இந்தக் கிருமியைக் கையாண்டு வெற்றி கொள்வதற்கான வேதியல் பொருட்களை சீனா அதிக அளவில் வாங்கியுள்ளதும், இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அவற்றை உற்பத்தி செய்யும் முயற்சிகளும் நடை பெற்றதை ஆதார பூர்வமாக இதழியலாளர்களும், வணிகர்களும், அறிவியலாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது சீனாவின் மீது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.