வலைப்புறா

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் – பகுதி 4

உலகின் தலை சிறந்த ஆயுதமாக, தகவல்களும், அதன் கட்டுப்பாடுகளும் உருவெடுத்துள்ளன. அரசின் உளவுத் துறைகள் அனைத்துத் தகவல்களையும் தேச நலனிற்காகப் பெறுவது தங்கள் கடமை எனச் சொல்கிறார்கள். அது ஏற்புடையதல்ல என்பது இணையக் குழுமங்களின் வாதம். உலகத் தகவல்களை கட்டுப்படுத்த, மனிதர்களிடம், அவர்கள் அறியாமலேயே மூளைச்சலவை செய்யப்படுகிறது. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும், எங்கு பார்க்க வேண்டும் என்பதை அரசுகளும், எதை வாங்க வேண்டும், யாரிடம் வாங்க வேண்டும் என்பதை தொழில் நுட்பக் குழுமங்களும் நிர்ணயம் செய்கின்றன. அவர்கள் சொல்லும் ஒரே காரணம் முறையே தேசப் பாதுகாப்பு மற்றும் ‘அவையத்து முந்தியிருப்பச் செய்வது’ என்பதுதான். எல்லைகள் இல்லா உலகம் எனச் சொல்லிக்கொண்டே தங்கள் எல்லைகளைப் பெருக்கும் வழிகளை இணையத் தொழில் நுட்பக் குழுமங்களைக் கொண்டே அரசுகள் கையாள்கின்றன. (இந்தியாவில் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பிரிவின் படி, தேசத்தின் இறையாண்மைக்கும், அயல் நாடுகளுடன் நட்பைப் பேணும் அவசியங்களுக்காகவும், தேசப் பாதுகாப்பிற்காகவும், கேடு விளையும் என நம்பக்கூடிய தகவல்களை அரசும், அதன் துறைகளும் பகிரத் தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.)

தகவல் ஆய்வு மையங்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டங்களை மக்களுக்காக ‘கழுதையின் முன்னே கேரட்’ என்பதைப் போல் பல்வேறு நாடுகள் வடிவமைத்து இருந்தாலும், அனைத்துத் தகவல்களையும் பெறவும், அதைப் பயன்படுத்தவும் அரசுகள் மட்டுமே முற்றதிகாரம் படைத்தனவாக இருக்கின்றன. (இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமைச் செயல்பாட்டாளர்கள் 20 பேர் கொல்லப்படிருப்பதாக ஷிவ் ப்ரகாஷ் ராய் என்ற மூத்த செயல்பாட்டாளர் தெரிவிக்கிறார்.) இதில், தொழில் நுட்ப வலைகளில் கொட்டும் தகவல்களை விற்று கல்லா கட்டுகின்றன கூகுள், யாஹு, அமெசான், ஃபேஸ்புக் போன்ற, நாம் நம்பும், விரும்பும் குழுமங்கள். மிகச் சமீபத்தில் முக நூலின் மீது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் முக நூல், இளைஞர்களிடையே மனப் பதற்றத்தை ‘இன்ஸ்டாக்ராம்’ பதிவுகளின் மூலம் ஏற்படுத்துகிறது; முகம் பார்த்து பேச இயலாத தலைமுறை உருவாகியுள்ளது. மேலும், இதன் ஈர்ப்பு அதிகமாகி தங்கள் பதிவுகளுக்கு பெரும்பான்மையோர் ‘விருப்பம்’ தெரிவிக்கவில்லையென்றால் மனமுடைந்து தற்கொலைக்குக் கூட சிறுவர்கள் முயற்சிக்கிறார்களாம்.(வியான் இரவு 9 மணிச் செய்தி-01-10-2021) ‘காசி நகர்ப்புறத்து பேசும் உரையை’ (பாரதி) அதே நேரத்தில், அதே வண்ணத்தில் ந்யூயார்க்கில் தரும் குழுமங்கள், உங்கள் அடையாளத்தை, உங்கள் அபிலாஷைகளை, உங்கள் நிதி நிலையினை இன்ன பிறவற்றை தாங்களும் பயன்படுத்திக் கொண்டு நுகர் பொருள் குழுமங்களுக்கும், ‘தகவல் ஆய்வுகளை’ அனுமதிப்பதின் மூலம் வழங்குகிறார்கள். நீங்கள் எந்தெந்தப் பொருட்களை எந்தெந்த இடைவெளியில் எந்தெந்த வலை வெளி மூலம் வாங்குகிறீர்கள் என்பதை அமெசானும், ஃப்ளிப்கார்ட்டும் சொல்கின்றன; நினைவூட்டவும் செய்கின்றன. இந்தியாவில் சில நகலகங்கள், உங்கள் வருமான வரி கணக்கு எண், ஆதார் எண், நுகர் பொருள் வாணிபக் கழகம் வழங்கும் அட்டை, உங்கள் கடன் அட்டை, உங்கள் வங்கிக் கணக்கு நகல், உங்கள் விலாசம் ஆகியவற்றை உங்களுக்கு நகல் எடுத்துத் தரும் போதே திறமையாக மற்றொரு காப்பியும் எடுத்து விற்று விடுகிறார்கள். இதில் உங்கள் விவரங்கள் ஒரு தீவிரவாதிக்கெனப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களையும், அதன் விளைவுகளையும் எண்ணிப் பாருங்கள்.

1971 செப் 29-ல் அதிகார சபை அங்கத்தினர் ஜேம்ஸ் பியர்சன் சொன்னார்: “தகவல்களைப் பகுத்து ஆய்வதற்கு முக்கியத் தேவைகளே தகவல்கள்தான். சுதந்திரமாக இயங்க வேண்டிய அச்சுத்துறைக்கு முதல் எதிரி தேவையற்ற அரசுக் கட்டுப்பாடுகளே. இதழ்கள் இரு எஜமானர்களுக்கு- அதாவது- அரசு மற்றும் மக்கள்- சேவகர்களில்லை. தாங்கள் எங்கிருந்து இந்தத் தகவல்களைப் பெற்றோம் என்று சொல்லுமாறு இதழியலாளர்களை கட்டாயப்படுத்துவது உண்மையின் குரலை நெரிப்பதற்கு ஒப்பாகும்.” இதையே சற்று மாற்றி தகவல் தொழில் நுட்பச் சேவைகளில் முன்னணி வகிக்கும் கூகுள், யாஹூ போன்றவை சொல்கின்றன. தங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்போம் என்ற அடிப்படை நம்பிக்கையில் கட்டமைக்கப்படுள்ள இந்த நிறுவனங்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் (அமெரிக்காவின்) தேசிய பாதுகாப்புத் துறை அமைப்பு, (என் எஸ் ஏ)  இந்தத் தகவல்களை அரசின் மறைமுக ஆசிகளோடு கொந்தி எடுப்பதையும், ஒட்டுக் கேட்பதையும், ஒற்றறிவதையும் முற்றாக எதிர்க்கின்றன. ஆனால், தேசிய இறையாண்மைக்காகவும், அதன் பாதுகாப்பிற்காகவும், அதன் மக்கள் அமைதியாக வாழ்வதற்காகவும் இவற்றைச் செய்யத் தேவையிருப்பதாக என் எஸ் ஏ சொல்கிறது. பயனர்களின் தரவுகளை குறியாக்கம் செய்யும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை அவ்வாறு செய்யக்கூடாதெனவும் அது சொல்கிறது.

இது ஒரு வகை பனிப்போர். கண்காணிப்பு என்பது என்றென்றும் விரும்பப்படாத ஒன்றுதான். ஆனால், புகையைக் கொண்டு தீயை அறிந்து அணைத்துவிடுவதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது? இதன் ஆரம்பம் என்ன? உளவு அமைப்புகள், தேசிய பாதுகாப்பு என்பதை முக்கியக் காரணியாகச் சொல்வதை, தனி நபர்  கழுத்தில் ஏறி அமரும் அரசு என்றும் பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்தச் சூழலில் அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுமமும், தொழில் நுட்பக் குழுமங்களும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுதலும், நம்பாமல் செயல்படுவதும், 9/11க்குப் பிறகு அதிகரித்துள்ளது.

என் எஸ் ஏ தன் செயல்களுக்கான சட்டபூர்வமான ஆதாரங்களைக் கொடுக்கிறது. தகவல் கோரிக்கைகளை அனுமதிக்கும் அயலக உளவு பாதுகாப்பு சட்டம் (ஃபிசா-FISA) 1978-ல் இரகசிய நீதிமன்றங்களை நிறுவ வழி வகை செய்தது. அயலக உளவு பாதுகாப்பு சட்டத்தின் விரிவாக்கங்களும், திருத்தப்பட்ட ஷரத்துக்களும் என் எஸ் ஏயின் கரங்களை வலுப்படுத்துகின்றன. 2008-ல் அதிபர் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில், ஃபிசாவில் 702 என்ற சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது.  அதன்படி ஆணைப் பத்திரம் இல்லாமலேயே நடத்தப்படும் கண்காணிப்புகளுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ‘ப்ரிசம்’(PRISM) என்ற தங்கள் செயல்பாடுகளுக்கு சட்ட அனுமதி இருப்பதாக என் எஸ் ஏ சொல்கிறது. அதென்ன ப்ரிசம்? இந்த ‘முப்பட்டைக் கண்ணாடியில்’ தகவல் மூலத்திலிருந்தே பெறப்படுகிறது- {அதாவது தகவல் எங்கே தரப்படுகிறதோ -தகவல் தொழில் நுட்பக் குழுமங்களின் இ மெயில், அரட்டை, சிறு குறு செய்திகள் இவைகள் கொண்டிருக்கும் தகவல்கள்- அங்கிருந்தே}. இந்த முப்பட்டைக் கண்ணாடியைத் தாண்டி, மேலும் இரகசியமான கண்காணிப்புகளுக்காக, அன்றைய அமெரிக்க அரசின் அதிபரான ரானால்ட் ரேகனின் பதவிக் காலத்தில், 12333 என்ற நிர்வாக ஆணை, அமெரிக்காவைத் தாண்டி அயலகத்தில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய எந்தத் தகவல்களையும் என் எஸ் ஏ பெற வழி வகை செய்தது. இதில் ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால் கடலடி இணையத் தடங்களிலிருந்தே என் எஸ் ஏ செய்திகளைப் பெற்றதுதான். அமெரிக்கர்கள் அல்லாதவரைக் கண்காணிக்கிறோம் எனச் சொன்னாலும் இன்று உலகளாவிய வலைத்தளம் என்பது தனிப்பட்ட நாடுகளின் கட்டமைப்புகளைத் தாண்டி உலகக் கட்டமைப்பு கொண்டுள்ளதும், கண்டங்கள் அனைத்தும் வலையால் பிணைக்கப்பட்டுள்ளதும் எல்லா மனிதரையும் கண்காணிப்பில் கொண்டு வந்து விடுகிறதல்லவா?

2013-ல் வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த செய்தி அரசிற்கும், பெரும் இணையக் கம்பெனிகளுக்குமிடையே உள்ள நம்பிக்கையின்மையைக் கோடிட்டது. பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஒப்பந்தக்காரரான எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களின் படி, இணையக் குழுமங்கள் அறியாமலேயே அவற்றின் பயனர்களின் தகவல்களை கோடிக்கணக்கில் அமெரிக்கா மற்றும் அதன் பிரித்தானிய இணையான ஜிஸிஎச்க்யு அமைப்பு (Govt.Communications Headquarters -GCHQ) கொந்தியிருப்பது தெரிய வந்தது. உளவுத் துறையினர், இணையக் கம்பெனிகளின் குழுமக் கேந்திரத்திற்கும் அதன் அயலக செயலிகளுக்கும் இடையே நடந்த இணையப் போக்குவரத்தை கடலடிக் கம்பிவடங்களின் மூலம் கண்காணிப்பிற்கென எடுத்திருக்கிறார்கள்.

என் எஸ் ஏயும், பிரித்தானிய ‘அரசுத்  தொடர்பாடல் தலைமை அலுவலகமும்’ இந்த ‘கடும் உழைப்பைக் கேட்கும்’ வேலையில் இணந்திருக்கின்றன. தான் எடுக்கும் அனைத்தையும் ‘உபரி’ யில் சேமிக்கும் அரசுத் தொடர்பாடல் தலைமை அலுவலகம், மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அதை சேமிக்கிறது., யாஹு, கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மேகக் கணினிகளில்  குறியாக்கம் செய்துள்ள தரவுகளை, என் எஸ் ஏ, தங்களுடைய சிறப்புக் கருவிகளைக் கொண்டு கட்டுடைத்து தேவையானவைகளை வைத்துக் கொண்டு மற்றவற்றை அழித்து விடுகிறது. இந்தச் செயல்பாடுகளைப் பற்றிப் பேசிய அந்த நிறுவனத்தின் தொடர்பாளர் எதிரி நாடுகளின் சதித் திட்டங்களை இதன் மூலம் அறிந்து முறியடித்திருக்கிறோம் எனக் கூறுகிறார்.

இது ஒருபுறமிருக்க, கூகுள், ஆப்பிள், அமெசான் போன்ற பெரும் குழுமங்களின் மீது அமெரிக்க காங்கிரஸ் அதிகக்கட்டுப்பாடுகளைக் கோருகிறது. முக்கியமாக, இந்தக் குழுமங்களின் மேலுள்ள பொதுவெளி சுதந்திரத்திற்குச் சேதம் விளைத்ததாகச் சொல்லித் தொடரப்படும் வழக்குகளை(Anti-trust cases) எந்த நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளலாம், எவ்வாறு அவர்கள் சிறு தொழில் முனைவோரை வளர விடாமல் தடுப்பதை நிறுத்தித் தண்டிப்பது, அவர்கள் தங்கள் தளத்தில் தங்களுடைய மற்றைய சேவைகளையும், பொருட்களையும் கடை பரப்பி பயனர்களுக்கு எளிய விலையில் கிடைக்கக்கூடிய செயல்களைத் தடுப்பதால் இந்தக் குழுமங்களை அமைப்பு ரீதியாக எவ்வாறு சிறு குழுமங்களாகப் பிரிப்பது, எதிர் குழுமங்களின் தளங்களை இவர்கள் மூலமே அணுகும் வழி முறைகளால் குறைந்த செலவில் நிறைந்த சேவையை பயனர்களுக்கு எவ்வாறு வழங்குவது போன்ற பல இலக்குகளை அமெரிக்க அங்கத்தினர் சபை விவாதித்து வருகிறது.  இது பெரும் இணையத் தொழிலகங்களுக்கும், அரசிற்கும் இடையே நிலவும் பகைப் புலத்தின் அடையாளமே. வர்த்தக சுதந்திரத்தை நாடி எழுப்பப்பட்ட வழக்குகளில் சிறப்பாகச் செயலாற்றிய லீனா கானை (Lina Khan) கூட்டாட்சி வர்த்தக அமைப்பின் தலைவராக (Federal Trade Commission) அதிபர் நியமித்ததில் ஒரு நோக்கம் உள்ளது- அது இந்தப் பெரும் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் எண்ணம்.

2013லிருந்தே அரசு, உளவுத் துறை, பாதுகாப்புத் துறை, பெரும் இணையக் குழுமங்கள் ஆகியவற்றினிடையே இழுபறி போட்டி நடை பெற்று வருகிறது. ஸ்னோடென் இதன் திறப்பாக இருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், வேலியே பயிரை மேய்ந்ததாக இரு சாரார்களும் குற்றம் சாட்டுவதுதான், என் எஸ் ஏ செய்வது கிட்டத்தட்ட துரோகம் என்பது இணையக் கம்பெனிகளின் கருத்து. இத்தகையக் குழுமங்கள் இருதலைக் கொள்ளிக்கு  நடுவே தேர்வில்லாமல் இதனால் சிக்குகின்றன. இவர்களின் வெளி நாட்டுப் பயனர் கம்பெனிகளும், பொது மக்களும், இந்தத் தொழில் நுட்பக் குழுமங்கள், சட்டங்கள் ஆணையிடுவதால் தங்கள் தகவல்களை வெளியிட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் இருப்பதால், இவர்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும், வருவாயும் பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. அதே நேரம், அரசு நினைத்தால் தகவல்களை பின் வாயில் வழியாகப் பெறும் சாத்தியங்களும் இருக்கின்றன. வணிக லாபநோக்கத்திற்கும், வணிக தர்மத்திற்கும் இடையே இந்தக் குழுமங்கள் ஊசலாடுகின்றன.

கூகுள், மைக்ரோசாஃப்ட், மேலும் இதர துவக்க கால தகவல் தொழில் பெரு நிறுவனங்கள், தங்களுடைய குறியாக்கத் தொழில் நுட்பத்தை மேம்படுத்தினார்கள். அதிகப் பொருள் செலவு கோரும் ஒன்றாக இருந்த போதிலும், தங்கள் வாடிக்கையாளரின் நல்லெண்ணத்தைப் பெறவும், அவர்களைத் தக்க வைக்கவும், இணையப் போக்குவரத்தை ஒற்றறிவோருக்கு அதில் தகவல்கள் பெற முடியாமல் செய்யவும் இதை ஒரு தீர்வாகப் பயன்படுத்தினார்கள். ஆனாலும், இதிலும் சிக்கல் இருக்கிறது- சாதாரண மனிதனின் அந்தரங்கம் காக்கப்படுகிறது- தீவிரவாத அச்சுறுத்தும் சக்திகளும், வெள்ளாட்டுக் கூட்டத்தில் கலந்து மறையும் மறி ஆடுகளைப் போல, கண்காணிப்பிலிருந்து தப்பி விடுகிறார்கள். அரசு தனக்கு இதில் அதிக ஈடுபாடுகளில்லை எனக் காட்டப் பார்த்தாலும், அதை நம்ப ஆட்களில்லை. நிகோல் பெர்ல்ராத் மற்றும் சாங்கர் (Sanger) 2014-லில் எழுதினார்கள், ’அமைதியாக வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்பு இனி இருக்காது.’

ஆனால் இந்த நம்பிக்கைப் பின்னடைவு, இணையப் பெரு நிறுவனங்களுக்கும், அமெரிக்கா மற்றும் இதரப் பெரிய நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் நன்மைக்கே. நம் வாழ்வின் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள அமெசான், முக நூல், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் மிகப் பெரும் பணக்காரர்களாக, அரசைப் போல அதிகாரம் உள்ளவர்களாக வளர்ந்துள்ளது அவ்வளவு சரியான விஷயமில்லை. சீனா தன் நாட்டைச் சார்ந்த மாபெரும் இணையத் தொழில் நிறுவனங்களான அலிபாபா போன்ற புகழ் பெற்ற குழுமங்களின் சுதந்திரச் செயல்பாட்டைத் தடுத்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. வலதோ, இடதோ, சர்வாதிகாரமோ, மக்களாட்சியோ எவருமே அதிகாரம், தொழில் துறையின் கையில் செல்வதை விரும்பவில்லை என்பதை இது உணர்த்துகிறது. எனவே வேகத்தடைகளையும், கட்டுப்பாடுகளையும் அரசுகள் விதிக்கின்றன. அமெரிக்காவின் சமீபத்திய ஆறு சட்டங்களுக்கான விவாதங்கள் பெரும் இணைய நிறுவனங்களின் அதிரடி பணம் குவிப்பையும், சிறு தொழில் முனைவோர் செயல்படமுடியாமல்  அவர்கள் தடுப்பதையும், சந்தை அடைப்புக்கு எதிர்ப்பு காட்டும் வழக்குகளை அவர்கள் அவசியம் எதிர் கொள்ள வேண்டுமென்பதையும் கருத்தில் கொண்டு வியூகத்தை வகுத்திருக்கின்றன. எந்த இணையக் கம்பெனிக்கும் இவை உவப்பானதல்ல. இரு சாராருக்குமிடையே இராணுவத் திட்டங்களில் இருப்பதாக நம்பப்படும் ஒத்துழைப்பிலும் கூட கூகுள் தன் விலக்கத்தை பேசியிருக்கிறது. தேர்தல் பாதுகாப்பு போன்ற பலவற்றில் இவர்கள் இருவரும் ஒற்றுமையாகப் பணி செய்தால் நலம், தொழில் நுட்பக் குழுமங்களை இதற்காகக் குறை சொல்லலாம்.ஆனால். அமெரிக்கக் கம்பெனிகளில் உள் நுழைந்து வேவு பார்த்த அரசும் இந்தப் பகைமைக்கு ஒரு காரணம் என்பதை மறக்கக்கூடாது.

தொகுத்துப் பார்க்கையில் கீழ் கண்டவற்றைச் சொல்லலாம்

  1. பெரும் இணையத் தொழில் நுட்பக் குழுமங்கள் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையாக இருந்தன.
  2. அதற்கான கட்டமைப்புகள் பெரும்பாலும் உள் நாட்டிலேயே இருந்தன.
  3. தங்கள் அதீத ஆகிருதியால் இணையத் தொழில் நுட்பக் குழுமங்கள் பிறரை வளர விடாமல் செய்தன. போட்டிக் கம்பெனிகளை குறைந்த விலையில் வாங்கி தங்களுடன் இணைத்துக் கொண்டன.
  4. பயனர்களுக்கு அவர்களது தகவல்கள் பற்றிய நம்பிக்கையைக் கொடுத்தாலும், நீதி மன்றத்தில் தகவல்களைத் தந்து கொண்டிருந்தார்கள் இவர்கள்.
  5. உளவு மற்றும் பாதுகாப்பு, எளிதாகப் பெறக்கூடிய தகவல்களை விட்டுக் கொடுப்பதாக இல்லை. அது ஒட்டுக் கேட்பதோ, கொந்தி எடுப்பதோ, கடலடித் தடத்தினில் காதுகளை வைப்பதோ, கெல்லுவதோ  எதைச் செய்தாலும் அது நாட்டின் பாதுகாப்பிற்காக என்று  சொல்லி உங்கள் தேச பக்தி உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறார்கள்.
  6. மூலத்திலிருந்தும், அடியிலிருந்தும் ப்ரிசமும், மஸ்குலருமாக எடுத்தும் இந்தத் துறைகள் குறியாக்கங்கள் இருந்தால் ஒற்றின் பயனென்ன என்றும் கேட்கிறார்கள்!!.
  7. அதிகாரம், பணம் இரண்டும் ஒரே இடத்தில் குவியும், அதன் காரணமாகப் பிரியும்; பின்னர் ஒன்றை ஒன்று நம்பாது.

எந்தக் காலத்திலும் அரசிற்கு ஒற்றறியும் தேவை இருந்திருக்கிறது. வள்ளுவர் ஒற்றர்களை அரசர்கள் எவ்விதம் கையாள வேண்டுமென்பதை இந்த இரண்டு குறள்களில் அழகாகச் சொல்கிறார்.

துறந்தார் படிவத்தார் ஆகி இறந்து ஆராய்ந்து

என்செயினும் சோர்விலாது ஒற்று.

முற்றும் துறந்தவராக, ஒழுக்கத்துடன், எத்தனை கஷ்ட நஷ்டங்களுக்கும் உள்ளாக்கப்பட்டும் தன்னை வெளிப்படுத்தாது நடந்து கொள்பவர்கள் ஒற்றர்கள்.

ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்

சொல் தொக்க தேறப்படும்.

இதில் ஒரு செயலுக்கு ஒரு ஒற்றர் என்பதை ஏற்கவில்லை வள்ளுவர். தனித்தனியே மூவரை ஒரு செயலில் ஈடுபடுத்தி, அவர்கள் தரும் தகவல்கள் ஒத்துப் போகையில் அதை மெய் என்றுணர்ந்து அதன் படி ஆள்வோர் செயலாற்ற வேண்டும் .

பழங்காலம் தொட்டே தூது செல்ல தோழி, கிளி, முகில், நிலா எல்லாம் இருந்தாலும், யுத்தச் செய்திகளுக்கு, அவசர காலச் செய்திகளுக்கு புறாக்கள்தான் பயன் படுத்தப்பட்டுள்ளன. இன்றும் கூட ஒடிஷாவில் புறாக்கள் செய்தி தூதர்களாக இருக்கிறார்கள்.. கோரபுத் மாவட்டத்தில்  இந்த சேவை தொடங்கியது. 1948 ஏப்ரல் 13 அன்று, நேரு கட்டாக்கிலிருந்து சம்பல்பூருக்கு, நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டில் பேச்சாளரையும், மக்களையும் பிரிக்குமாறு மேடை அமைப்பு வேண்டாம் என்று புறாவின் வழியே செய்தி அனுப்பினார்.

1982, 1999ம் ஆண்டுகளில் ஒடிஷாவில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பில் ரேடியோ உள்ளிட்ட தகவல்தொடர்பு  சேவைகள் செயலிழந்தபோது கட்டாக்கில் அமைக்கப்பட்டிருந்த புறாக்கள் சேவை மையம் செய்திகளை பல்வேறு  தொலைதூர காவல்நிலையங்களுக்குக் கொண்டு சேர்க்கும் அரியபணியைச் செய்தன. .

இதில் ஸ்டேடிக், பூமராங், மொபைல் என மூன்று முறைகள் இருந்தாலும். இப்போது பயன்படுத்தப்படுவது ஸ்டேடிக்  என்னும் ஒற்றை செய்திப் பரிமாற்ற முறைதான். 20 ஆண்டுகள் வாழும் புறா, 25 கி.மீ. தூரத்தை தோராயமாக 20  நிமிடங்களில் கடக்கும் திறன் கொண்டது. புறாக்கள் பிறந்த ஆறாவது வாரம் செய்தியைக் கொண்டு செல்வதற்கான  பயிற்சிகள் தொடங்குகின்றன. இதில் உச்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் 805 கி.மீ. தொலைவு சென்று வந்த  அட்வென்ச்சர் புறாக்களும் உண்டு.‘‘நாங்கள் வளர்க்கும் புறாக்களை ஒவ்வொன்றாக தனியாக அடையாளம்  காணுவதோடு, அவையும் நம்மை குரல் மூலம் புரிந்து கொள்கின்றன. எனவே அவற்றை சுதந்திரமாகப் பறக்க  விடும்போது வேலையைச் செய்துவிட்டு எங்களிடமே திரும்பி வந்துவிடுகின்றன!’’ என்கிறார் பதினாறு ஆண்டுகளாக  புறாக்களைப் பராமரித்து வரும் கான்ஸ்டபிள் பரசுராம் நந்தா. 

புறாக்கள் எடுத்துச் செல்லும் செய்திகளில் குறியீடுகள் அதிக அளவில் இருக்குமாம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட மனிதருக்கு மட்டுமே தகவலைச் சேர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றவை புறாக்கள். தப்பித்துக் கொள்ளும் திறமும் அதிகமாம். வலை யுகத்தில் வலைப் புறாக்களுக்கு இத்தகைய ஆற்றல் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளதா?

ஜெயமோகனின் வெண்முரசு- மகாபாரதத்தில் ஒரு விவரிப்பு- “செய்திப்புறாக்கள் அரிதாகவே அம்புகள் பட்டு விழுகின்றன. ஒரு புறா விழுந்தால் அச்செய்தி ஒருபோதும் சென்றுசேராமலாகக் கூடாது. ஒவ்வொரு எளிய செய்திக்கும் இரு புறாக்கள் செல்லவேண்டும். முதன்மைச் செய்திகளுக்கு மூன்று புறாக்கள். அரிதான மையச் செய்திகளுக்கு நான்கு” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். 

இணையத் தாக்குதல்களால், இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் கடந்த 12 மாதங்களில் ரூ.7 கோடி நஷ்டம் அடைந்துள்ளன என்று சிஸ்கோவின் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 92% சிறு மற்றும் நடுத்தர வணிகங்களைப் பாதிப்பதில் தீம்பொருள் தாக்குதல் முன்னிலை வகிக்கிறது; ஃபிஷிங் 76%. 1014 வணிகர்களை நேர்காணல் செய்கையில் இணையப் பாதுகாப்பு, இத்தகையத் தாக்குதல்களை உணர்ந்து எச்சரிக்கை செய்யவோ, தடுத்து நிறுத்தவோ இயலாதிருக்கிறது என 36% கருத்து சொல்லியுள்ளனர். பயனர்களின் தரவுகளும் பறிபோயிருப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது.

மனித மூளை அதிகத் தகவல்களால் களைப்படையக்கூடும். ஆனால், செயற்கை அறிவு அசராமல் பிரித்தெடுக்கும். அதை ஆதாரமாகக் கொண்டு முடிவுகளை இன்று வரை மனிதர்கள் தான் எடுக்கிறார்கள் என நம்புவோம். சொற்கள் உள்ளீடாக ஒன்றைச் சொல்ல முடியுமா? உலகில் இரண்டு தொழில் துறை மட்டுமே ‘நுகர்வோர்’ எனச் சொல்லாமல் ‘பயனர்’ எனச் சொல்கின்றன. அவை மருந்து உற்பத்தித் துறை, மற்றும் இணைய வெளிகள். ‘ஒன்றிய’ அரசு என்று ‘நடுவண்’ அரசை நாலைந்து மாதங்களாகக் குறிப்பிடும் வழக்கமும், பராசக்தியின் புதல்வர், வட இந்தியாவின் பல்கலையில் பயின்றவர், அந்த பாரதியின் குங்குமத் தீற்றல், இப்போதெல்லாம் அவரது படங்களில் இடம் பெறாததும் தகவல் என்ற வகையில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.. ஜாதி, மதங்களைப் பாரோம் என்று பாடியதை ‘சின்னங்களற்று’ என எடுத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.

உசாவலுக்கு:

The Spying That Changed Big Tech
The backlash against the industry traces back partly to the Snowden revelations.
Credit…Tomasz Wozniakowski
By Shira Ovide Sept. 16, 2021 This article is part of the On Tech newsletter.
https://www.nytimes.com/2021/09/16/technology/snowden-spying-big-tech.html

https://www.washingtonpost.com/world/national-security/nsa-infiltrates-links-to-yahoo-google-data-centers-worldwide-snowden-documents-say/2013/10/30/e51d661e-4166-11e3-8b74-d89d714ca4dd_story.html

https://www.wired.com/2014/01/how-the-us-almost-killed-the-internet/

தினமலர், த ஹிந்து, இன்ன பிற நாளிதழ்கள்.

Series Navigation<< ஜராசந்தர்கள்ஜீ பூம்பா >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.