ரசம்

“என்ன இது இவ்வளவு கூட்டம் “ என்றாள் லதா.

அது எனக்கு புதிய இடம், புதிய சூழல் கூடவே புதிய மனைவி. இத்தனை வருடங்களாக பெங்களூரில் இருந்திருக்கிறேன், ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது தெரியாது. அது சாமராஜ் பேட் என்று அழைக்கப்படும் நகரத்தின் பழையகால வட்டாரம். திப்பு சுல்தானின் கோடை அரண்மனைக்கு அருகில்  பள்ளிக்கூடத்தில் பெரிய மைதானம். பந்தல் போட்டு ராமநவமி சமயத்தில் ஒரு மாதத்துக்கு தினமும் கச்சேரி. அங்கே ஒரு பிரபல பாடகரின் கச்சேரி என்று ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை ஹிந்துவில் பார்த்து விட்டு என் மனைவி போகலாமா என்றாள். நான் அன்றைக்கு  சினிமாவுக்குப் போகலாம் என்று நினைத்திருந்தேன். எனக்கு சிறு வயதில் பாட்டி கேட்ட எம் எஸ் சுப்பலக்ஷ்மி பாட்டுகள் சில தவிர கர்னாடக இசையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆட்டோக்காரனுக்கு கச்சேரி நடக்கும் இடம் என்று தெரிந்திருந்தது.

ஆறு மணி கச்சேரிக்கு  ஐந்தரைக்குப் போய் சேர்ந்தோம்.  டிக்கெட்டுக்கு ரோடு முனை வரை பெரிய வரிசை. சமீபத்தில் அந்தப் பாடகர் ஒரு திரைப்படத்தில் பாடினார் என்று லதா சொன்னாள். வரிசையில் நின்று கொண்டு காம்பவுண்டுக்கு உள்ளே பார்த்தேன். மங்கிய மஞ்சள் நிறத்தில் ஜமீந்தார் பங்களா மாதிரி கட்டிடம்.  பெரிய மர ஜன்னல், கதவுகள். இரவில் மழையும் மின்னலும் இருந்தால் பேய் சினிமா மாதிரி இருக்கும். ஓலை, தட்டி, தகரம் எல்லாம் சேர்ந்து பெரிய பந்தல், நிறைய ஜனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தார்கள்.

எனக்கு முன்பாக இருந்தவர், “ நமக்கு கடைசி வரிசைகள்தான் கிடைக்கும்  “ என்று வழுக்கைத் தலையை தடவிக் கொண்டு வாட்சைப் பார்த்தார். அதற்குள் கூட்டம் பிரிந்து வழி விட ஒரு பெரிய கார் உள்ளே சென்றது. கண்ணாடி வழியாக வீணைதான் தெரிந்தது.  நான் உற்சாகமாக காட்ட, லதா திருத்தினாள் “அது வீணை இல்லை, தம்பூரா “.  

பத்து நிமித்தில் நாங்கள் கவுன்டருக்கு அருகில் இருந்தோம். எனக்கு முன்னால் இருந்த நீண்ட வளைந்த மூக்குடைய பெரியவர் அவருடைய மனைவியிடம்

 “ கடைசி வரிசைதானாம், பார்க்க முடியாது. நாம பக்கத்துல சீனிவாச பெருமாள் கோவில் சேவிச்சுட்டு துவாரகால தோசை சாப்பிடலாம் “ என்றார்.

லதாவின் முகத்தைப் பார்த்தால் தோசைக்கு அவ்வளவாக ஆசை தெரியவில்லை. அதுவும் ஒரு முறை பிரபலமான ஹோட்டலுக்குப் போய் “ இது என்ன வெல்லம் போட்டு , சாம்பார் மாதிரியே இல்லை ” என்றாள்.  

“கடைசி வரிசைதான் கிடைக்குமாம் “ என்று அவள் முகத்தைப் பார்த்தேன். எனக்கு பாட்டு கேட்பதற்கு கடைசி வரிசை ஆனால் என்ன என்று புரியவில்லை. ஆனால் அவள் முகத்தில் அப்போது கவிஞர்கள் ஏதோ சொல்லுவார்களே முழு நிலவை மேகம் மறைத்தால் போல என்று, அந்த மாதிரி, நிழல் படர்ந்தது.

அப்போதுதான் உள்ளே ராகவேந்திர ராவைப் பார்த்தேன். அவனை நான் இங்கே எதிர் பார்க்கவில்லை. ராகவேந்திர ராவ் என்றவுடன் ஒரு ஐம்பது வயது நரைத்த தலை, தடித்த கண்ணாடி ஆசாமியின் உருவம் தோன்றக்கூடும். இவன் அப்படி இல்லை. என்னுடன் வேலையில் இருக்கிறான். வயது என்னை விட குறைவு.

எப்படியாவது உள்ளே செல்ல முடியும் என்று நம்பிக்கை வந்தது. “ ரகு ராவ் ! ரகு ராவ் !” என்று உரக்க கூவினேன். அவன் காதில் விழவில்லை போலும், இன்னொருவரிடம் பேசிக்கொண்டு நகர ஆரம்பித்தான். நான் கலவரத்துடன் கையைத் தட்டி, மறுபடி உரக்கக் கூவினேன். ரகு ராவ் திரும்பிப் பார்த்தான். அடையாளம் கண்டு அவன் கண்கள் சற்றே விரிந்தன. “ அட  நீங்க எங்க இந்தப் பக்கம்?’ என்றான். நான் கம்பிகளுக்குள் முடிந்த அளவு முகத்தைத் திணித்து, “ராவ் எனக்கு எப்படியாவது முதல் வரிசைகளில் இரண்டு டிக்கெட் வேணும், இது என் மனைவி லதா “ என்று அறிமுகம் செய்து கெஞ்சினேன்.

அவன் அங்கிருந்தே லதாவுக்கு ஒரு கும்பிடு போட்டான்.

“காலையில சொல்லி இருந்தால் கூட, டிக்கட் எடுத்து வெச்சிருப்பேனே, இவ்வளவு லேட்டா வந்து கேட்டால்  நான் என்ன செய்ய முடியும் ? “ என்றான்.

என் முகத்தைப் பார்த்தால் அழுது விடுவேன் போல இருந்திருக்க வேண்டும்.  குரலைத் தாழ்த்தி, “இங்கேயே இருங்க, என்னுடைய மாமாதான் இங்கே செக்ரெடரி, ஏதாவது முடியுமான்னு பார்க்கிறேன் “ என்றான். நான் கவலையுடன் அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ராவ் இரண்டே நிமிடத்தில் வந்து விட்டான். கேட்டில் நின்றிருந்த காவலாளியிடம் ஏதோ சொல்ல, அவன் எங்கள் இருவரை மட்டும் உள்ளே விட்டான், பின்னால் நின்றவர்கள்  முறைக்க நாங்கள் விரைந்தோம்.

ராவ் “நான் உங்களை வி ஐ பி களுக்கான முதல் வரிசையில் அமர்த்த முடியுமா என்று பார்க்கிறேன், கிடைக்கா விட்டால் தரையில் ஒரு ஜமக்காளம் போட்டு இடம் செய்து தருகிறேன்” என்றான்.

நான் லதாவிடம் “ தரையில உட்கார்ந்து பழக்கம் இல்லை, நாம போய்ட்டு இன்னொரு நாள் பார்க்கலாமா ? “ என்று ஆரம்பித்து, அவளுடைய பார்வைக்கு பாதியில் நிறுத்தினேன்.

லதா ,ராவிடம், “ உங்களுக்கே முடிலன்னா எப்படி,  நாங்க உங்கள நம்பி வந்துட்டோம் “ என்றாள்.

அவள் ஒரு கணத்தில் எப்படி முகத்தில் இரண்டு வேறு பாவனைகளைக் காட்டினாள் என்று ஆச்சரியமாக இருந்தது. “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று ஆண்டாள் சொன்னது போல. ராவ் எங்களை வரச்சொல்லி அழைத்துக் கொண்டு மேடைக்கு பக்க வாட்டில் இருந்த அறைக்கு அருகே சென்றான். உள்ளே சோபாவில் பாடகர் ஒரு டிசைனர் ஜிப்பா அணிந்து கொண்டு அமர்ந்திருந்தார். பள பளப்பான கண்களில் கூர்ந்த பார்வை. பக்கத்தில் பட்டு தாவணி அணிந்த இளம் பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஆர்வமாக அட, இன்னும் தாவணி எல்லாம் போடறாங்களா என்று ஒரு கணம் சூழ் நிலை மறந்து பார்த்துக் கொண்டிருக்க லதா திடீரென்று ராவிடம், “பாடகருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முடியுமா ? “ என்றாள்.

ராவ் உற்சாகமாக, “ வாங்க, போய்க் கேட்கலாம்” என்றான். அதற்குள் கச்சேரிக்கு நேரம் ஆகி விட்டது போலும். பாடகர் எழுந்து நின்றார், இரண்டு பக்கமும் இரண்டு பேர் வீணை, இல்லை தம்பூராவைத் தூக்கிக் கொண்டு, மற்றவர்கள் பின் தொடர கிளம்பி விட்டார். பின்னால் சிலர் உறை போட்ட வாத்தியம், பெட்டி எல்லாம் எடுத்துக் கொண்டு தொடர்ந்தார்கள். மிருதங்கம், வயலின், கடம் என்று லதா அடையாளம் காட்டினாள். ரகு ராவ் என் பக்கத்தில் வந்து, “ பரவா இல்லை, கச்சேரி முடிந்து இங்க தான் வருவார், அப்ப எடுத்துக்கலாம் “ என்றான்.

எங்களை மேடைக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று, முதல் வரிசையில் சோபாவில் ஓரமாக உட்கார வைத்து விட்டான். “யாராவது வந்து கேட்டால் எழுந்திருக்காதீர்கள்” என்றான். திரும்ப அருகில் வந்து “ என் பெயரையும் சொல்ல வேண்டாம் “ என்ற எச்சரிக்கையுடன். பழைய கால சிவப்பு நிற ரெக்ஸின் சோபாவின்  நுனியில் உட்கார்ந்தேன். லதா எதிர்பார்ப்புடன் உட்கார்ந்தாள்.

 எல்லோரும் மேடையில் அமர்ந்து வாத்தியைங்களை எடுத்தார்கள்.  பாடகர் வீணையை, இல்லை தம்பூராவை நிரடிக் கொண்டிருந்தார். அதுவும் இரண்டு தம்பூரா. லதா என்னிடம் “ இரண்டு தம்பூரா ஒன்றாக சுருதி சேர்ப்பது ரொம்ப கஷ்டம், மிகச் சரியாக சேராமல் பாட ஆரம்பிக்க மாட்டார் “ என்றாள். தம்பூராவில் ஏதொ குமிழ்களை திருகிக்கொண்டே இருந்தார். மிருதங்கக்கார் உருண்டையாக ஒரு கல்லை எடுத்து தட்டிக் கொண்டிருந்தார். எல்லோரும் சுருதி சேர்த்து, மைக் ஆளிடம் ஏதோ ட்ரெபிள் குறைக்கச் சொல்லி,சரி செய்து கிட்டத்தட்ட பத்து நிமிடம் ஆகிற்று.

எங்களுக்குப் பின்னால் பல வரிசைகள், அவ்வளவு கூட்டத்துக்கு அங்கே ஒரு சத்தமும் இல்லை. எல்லோரும் அமைதியாகக் காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் கவனமாக ஹிந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்து பேப்பர் முழுதாக படித்து முடிக்கவில்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவர் அருகில் இருந்தால் இரவல் கேட்டிருக்கலாம். பாடகர் புன்னகையுடன் மேடையில் இருந்தவர்களைப் பார்த்து ஆரம்பிக்கலாமா என்பது போல கேட்டார். கண்களை மூடிக் கொண்டு ம்ம்  என்று ஆரம்பித்தார்

பிறகு வாய் விட்டு ஏதோ ராகம் இழுத்தார். லதா “ ஆகா, என்ன கம்பீரமான குரல். என்ன  எடுப்பு“ என்றாள். முதல் பாட்டே என்ன மொழி என்று எனக்குப் புரியாமல் இழுத்துக் கொண்டு போனது. லதா அதை ரசித்துக் கொண்டிருந்தாள். முடிந்து எல்லோரும் கை தட்டினார்கள். லதா எனக்கு விளக்கினாள் – வழக்கமாக இது முதலில் பாடும் பாட்டு, வர்ணம் என்றாள்,

அடுத்தது எங்கேயோ கேட்ட  நாட்டுப்புறப் பாடல் மாதிரி இருந்தது, ஆனால் நீளமாக போய்க்கொண்டே இருந்தது. லதா இது ஆனந்தபைரவி ராகம் என்றாள்.

எனக்கு திடீரென்று பசிக்க ஆரம்பித்து. ஒரு காபியாவது கிடைத்தால் நல்லது என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். சமையல் வாசனை ஒரு பக்கத்திலிருந்து வந்தது.  நல்ல பெருங்காய மணத்துடன் கொதிக்கும் வாசனை. ஆனால் கான்டீன் எதுவும் கண்ணுக்கு தென் படவில்லை. யாரையாவது கேட்கலாம் என்றால், எல்லோரும் சங்கீதத்தில் மூழ்கி இருந்தார்கள்.

பாடகர் அடுத்தது ததரின்ன என்று ஆரம்பித்தார். லதா ராகம் பெயர் சொன்னாள்.  ஆரம்பித்து பாடுபவரும் கேட்பவர்களும் அதில் ஆழ்ந்து விட்டார்கள்.  நான் உட்கார்ந்தபடியே கான்டீன் தேடிக் கொண்டிருந்தேன்.  ராம நவமி கச்சேரி ,அதனால் இதுதான் பாடுவார்கள் என்று சொன்னாள். லதா ஊகித்தது சரிதான், அதே பாட்டுதான் பாடினார். லதா இன்னும் மகிழ்ச்சியாக ரசித்தாள். அதில் கமபதநி என்று சுரம் வேறு பாடினார். ஒவ்வொரு முறையும் பாடகர் பாடியவுடன், வயலின்காரர் அதைத் திரும்ப வாசித்தார். அது எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. ஒருவர் பாடினால் போதாதா, நேரம் மிச்சமாகும்.

லதா உற்சாகமாக இப்போது மெயின் ராகம் என்றாள்.  பிறகு நீளமாக என்று இன்னொரு பாட்டு எடுத்தார்.  லதா, என்னைப் பார்த்து பெரிய புன்னகை செய்தாள், நான் அப்படியா, என்று மணி பார்த்தேன். எனக்கு சற்று தூக்கம் வருவது போல இருந்தது. நடுவில் மிருதங்கக் காரர் தீவிரமாக வாசித்தார்.

சமையல் இடத்தில் கொதிப்பது ரசம்தான், நல்ல மணம் வந்தது. தவிர தனியாக எண்ணெய் காயும் வாசனை வந்தது. வெறும் அப்பளம் பொரிக்கப் போகிறானா இல்லை வடை ஏதாவது உண்டா என்று யோசித்தேன். பந்தலின் பின் பக்கத்திலிருந்து ஒருவர், மேலெல்லாம் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து பாட்டைக் கேட்டார். சமையல்காரர்தான்.

முகத்தில் ஒரு புன்னகை வரவழைத்துக்கொண்டு அரைக் கண்ணை மூடிக்கொண்டு ரசிப்பது போல தூங்க முயற்சி செய்தேன். ஆனால் மூக்கை மூட முடியவில்லை. வடைதான், அதுவும் இங்கே கர்னாடகாவில் அம்போடே என்று வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மெதுவாகவும் இருக்கும் அருமையான வடை செய்வார்கள். நாம் ஆமவடை என்று சொல்வது.  நிறைய பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இருக்கும். அதற்குள் தூக்கத்தைக் கலைக்க மிருதங்கமும் பானைக்காரரும் மாறி மாறி அடிக்க ஆரம்பித்தார்கள். அது ஒரு பத்து நிமிடம் இருக்கும், லதா பலமாக தாளத்தைப் போட்டுக் கொண்டு ரசித்தாள்.

நான் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று லதா கவனித்திருக்க வேண்டும், இப்ப பாருங்க, எல்லாம் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பாட்டு வரும், பஜன் எல்லாம் உண்டு என்றாள். சமையல்கார்கள் இன்னும் இரண்டுபேர் ஒரமாக வந்து நின்றார்கள். எனக்கு வடை கருகி விடப் போகிறதே என்று கவலையாக இருந்தது. இப்போது ஆடியன்சிலிருந்து நிறைய பேர் துண்டுச் சீட்டு அனுப்பினார்கள், பாடகர் “க்ருஷ்ணா நீ பேகனே” என்று ஆரம்பித்தார், கூட்டத்திலிருந்து ஓசை எழும்பியது. நான் இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன். லதா, கனவுலகில் இருப்பது போல ,என்றாள்.

வடை இருந்தால் பாயசமும் இருக்க வேண்டுமே என்ற சிந்தனை எனக்கு. மோப்பம் பிடித்தேன் லேசாக ஏலக்காய் மணம் வந்தது. பாயசம்தான். எப்படியாவது ரகு ராவிடம் கேட்டு இங்கேயே சாப்பாடு கிடைக்குமா என்று பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் லதா வெல்லம் சேர்த்த ரசம் சாப்பிடுவாளா என்பது சந்தேகம்தான்.

கச்சேரி முடிந்திருக்க வேண்டும், எல்லோரும் எழுந்து நின்று கை தட்டிக் கொண்டிருந்தார்கள். நானும் எழுந்தேன். லதா “ரகு ராவ் எங்கே, செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் “என்றாள்.

“நீ இங்கேயே இரு, நான் அவன் எங்கே பார்த்துக் கொண்டு வருகிறேன்” என்று தட்டிக்குப் பின் புறம் சென்றேன். அங்கே பெரிய பெரிய அண்டாக்களில் ரசம், பாயசம் எல்லாம் கொதித்துக் கொண்டிருந்தன. நல்ல பாகு வெல்லம், பாயசம் செம்பொன் நிறத்தில் குமிழ் விட்டுக் கொதித்துக் கொண்டிருந்து. பக்கத்தில் நெய்யில் வறுத்த முந்திரி மினுக்கியது. ஒரு பக்கம் தட்டு நிறைய பொரித்தெடுக்கப் பட்ட வடை. ஒரு தாம்பாளத்தில் விசிறி மடிப்பு மாதிரி போளி. தேங்காயும் சிவந்த மிளகாயும் பருப்பும் அரைத்து பிசிறிய வாழைக்காய் கறி, மாங்காய் ஊறுகாய்க்கு ஒருவன் தாளித்துக் கொண்டிருந்தான். நல்ல வெந்தய வாசனை. . மற்ற எல்லோரும் பாடகர் மேடையிலிருந்து இறங்கி வரும் பக்கத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் செல்ஃபி நினைவுக்கு வந்து அவர்களைத் தள்ளி முன்னே சென்று ரகு ராவ் கண்ணில் படுகிறானா என்று பார்த்தேன்.

ரகு ராவ் பந்தலுக்கு வெளியில் கார் அருகே நின்று  கொண்டு அருகே வரும்படி சைகை செய்தான்.  நான் சமையல் கட்டின் வழியாக திரும்ப ஓடி வந்து லதாவை அழைத்தேன். ஒருவன் இலைகளை நறுக்கிக் கொண்டிருந்தான், பச்சை வாழை இலை மணம் பசியைக் கிளப்பியது. லதா “கார் கிட்ட ரகு ராவ் இருக்கான், வரச் சொல்கிறான் “ என்று கையைப் பற்றி இழுத்தேன்.  நாங்கள் இருவரும் மறுபடியும் சமையல் கட்டின் வழியாக விரைந்தோம். வடகம் பொரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் நூறு வெண்தாமரை விரிவது மாதிரி எண்ணெயில் மலர்ந்து கொண்டிருந்தன. வரிசையாக பக்கெட்டுகள் அணிவகுப்பு. சாப்பாடு பரிமாற தரையில் ஒரு பக்கம் பந்திப்பாய் விரித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அலுவலகம் வழியாக வெளியே வந்த போது, காரைச் சுற்றி கூட்டம். செல்லில் கோணம் கூட பார்க்காமல், பலர் அவசரமாக படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ரகு ராவ் இந்தப்பக்கம் வா என்று சைகை செய்தான். அதற்குள் ஒருவர் கார்க் கதவை தயாராக திறந்து வைத்தார். பாடகர் ஒரு பெரிய புன்னகையுடன் கை கூப்பி காரில் ஏறி விட்டார்.  நாங்கள் அருகில் கூட போக முடியவில்லை. கார் ஊர்வலம் மாதிரி மெதுவாக கிளம்பி சென்றது. எனக்கு லதாவை பார்க்க பயமாக இருந்தது.

ரகு ராவ் வந்து, “ ஒரு நிமிடம் முன்னால் வந்திருந்தால் எடுத்து இருக்கலாம்” என்றான் . வடை போளியில் கவனத்தை விடாமல் வேகமாக வந்திருக்க வேண்டும்.

“பரவா இல்லை, அடுத்த வருடம் பார்க்கலாம், இப்போது சாப்பிட்டு விட்டு போகலாம் வாருங்கள், உடுப்பியிலிருந்து ஸ்பெஷலாக வரவழைக்கப் பட்ட சமையல் காரர்கள், இந்த மாதிரி நல்ல சாப்பாடு எங்கேயும் கிடைக்காது “ என்றான் ரகு ராவ்.

லதா ஒரு பெரு மூச்சு விட்டாள். அவள் ரகு ராவிடம் “கச்சேரிக்கு எங்களுக்கு முதல் வரிசையில் இடம் கொடுத்தது, இவ்வளவு அருகில் பாடகரைப் பார்த்தது எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி” என்று சொல்லி, ஓரக்கண்ணால் என்னையும் பார்த்தாள்.

இலையில் அமர்ந்தோம். முதலில் உப்பு பரிமாறினார்கள். வரிசையாக பாயசம், கோசம்பரி என்று வர ஆரம்பித்தன. லதா எல்லாவற்றையும் கொறித்தாள். எனக்கு ரசம்தான் உயிர். சமையல்காரர் பக்கத்தில் அண்டாவில் ரசம் விளாவினார். என்ன ஒரு மணம். நம் ஊர் போல குண்டு மிளகாய் இல்லாமல் பேடகி மிளகாய் போடுவதால் உடுப்பி ரசத்துக்கு ஒரு அலாதி  நிறம் உண்டு, மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து காரசாரமாக இருந்தாலும், வெல்லம் போடுவதினால் தனி ருசி. லதா பிடிக்காமல் பாதியில் எழுந்து விடுவாளோ என்று கவலைப் பட்டேன். ரசம் நாக்கைத் தாண்டி மனசைத் தொட்டது. எனக்கு மறுபடியும் ரசம் வேண்டுமாக இருந்தது. பரிமாறுபவர் தூரத்தில் இருந்தார். அவரைக் கூவி அழைத்தேன், லதா என்ன சொல்வாளோ என்று அவளுடைய முகத்தைப் பார்த்தபடி. என்ன ஆச்சரியம், லதா “எனக்கும்” என்று இரண்டாம் முறை ரசம் கேட்டாள்.

————–

7 Replies to “ரசம்”

  1. தருணாதித்தரின் சொல்வளம்
    சொல்வனத்தில் நெய்யில் வறுத்த முந்திரி போல் மினுக்குகிறது!!!!

    மனிதர்களின் பல்வேறு விதமான ரசனைகளை “ரசம்”அழகாய் பறைசாற்றுகிறது!!!

    இந்த “ரசம்” தருணாதித்தரின் கைமணம்!!!!

    வாழ்த்துக்கள்!!!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.