
கால பைரவரின் கடைசி பயணம்
தேய்பிறையின்
அஷ்டமி அன்று
வழமை போல
கிழக்கு திசையில்
தன் சூலாயுதத்தை
வீசி எறிந்து,
விழுந்த இடத்தின்
இலக்கிலிருந்து
தன் பயணத்தை
தொடங்குகிறார்,
கால பைரவர்.
அவருக்கு
ஆடைகள் ஏதும்
அணியும் வழக்கமில்லை.
பூணுலாய் நாகம்
பன்னிரு கைகளில்
பாசக்கயிறு, சூலாயுதம், அங்குசம்.
அவர்
கடந்து செல்லும் பாதையில்
எட்டுத் திசைகள்
பன்னிரண்டு ராசிகள்
மற்றும் பஞ்ச பூதங்கள்
துவைத்த ஆடைகளாய்
தொங்குகின்றன
கிளைகளில்.
படிந்து
வதங்கி
பதப்படுத்திய
தோல்களைப் போல்
கால தேவனின் கடிகாரங்கள்
காய்கின்றன
திண்ணைகளில்.
பைரவருக்கு
எந்த நிழலும் இல்லை
யாதொரு சுவடும் இல்லை.
சுமரான தோற்றம் கொண்ட
நாட்டு நாயின்
கரிய வாகனத்தில்
அமர்ந்தபடி
எங்கோ
சென்று கொண்டிருந்தவர்
ஏதோ ஒரு மறதியில்
வழிதவறி
தவறுதலாய்
வந்து சேர்ந்து விட்டார்
அங்கு.
இனி எங்கு செல்வது?
என்ன செய்வது?
என திகைத்து
அவர் நின்றிருக்க –
தடம் மாறி நிற்பவர் மேல்
நிழல் படிய,
தன் வெருகடி எடுத்து
நிதானமாய்
நடந்து செல்லும்,
திடமான வடிவங் கொண்ட
கரிய
பெரிய
நாய்
ஒன்று.
பல்தேவதையின் மாளிகை மர்மங்கள்
பனிக்கு
பூக்களுக்கு
பழுத்த இலைகளுக்கு
என எண்ணற்ற தேவதைகள்.
பணிகள், சில மாதம்.
பல் தேவதையின்
பணியோ, நீள்வது,
ஆண்டு முழுதும்.
முதலில்
உதிர்ந்து விட்ட பல்லை
மறந்துபோய் குப்பையில்
கடாசி விடாது
பாதுகாத்தல்.
பின் அதை
பரிசில் பெறுபவர்
தன் படுக்கையில்
தலையணையின் கீழ்
பத்திரமாக வைத்துவிட
அறிவுறுத்தி
தூங்கச்செல்லுமுன் சரிபார்த்து,
ஆழ்துயிலக் காத்திருந்து
வேட்டையை நெருங்கும்
புலிபோல
நுனிக்காலில்
நடந்து சென்று,
மெல்லக் திறந்த கதவின்
இருளுக்கு கண் பழக்கி
தலையணைக்கு அடியில்
படுத்திருக்கும்
உதிர்ந்த பல்லை
கவர்ந்த பின்,
இருபது வெள்ளி தாள் ஒன்றை
அடியில் வைத்து
மெல்ல கதவடைத்து
திரும்பி விடல்.
வழமை போல்
உறங்கும் அழகில்
மனம் இழந்து
கவனம் குறைந்து
பரிசிலரை முத்தமிடல்,
ஆபத்து.
மற்றபடி
ஐஸ்கிரீம்
மற்றும் சாக்லேட்
கறை கொண்ட
கவர்ந்து வந்த
பற்களை வைத்து,
நம் மாளிகையை
நம் வசதிப்படி
எப்போதும்
எப்படியும்
வேயலாம்.
நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம்
பனியன் மேனியனாய்,
அசுதரனும் கம்பளதரனும்
தோடுகளற்ற செவியில்
ஏர்பாடுகளாய் மாறி
பாடிக்கொண்டிருக்க,
தட்சனுக்கு பயந்த சந்திரன்
கொரோனா கடையடைப்பின்
கத்தரி படாத சிகையின் மேல்
நைக்கியின் இலச்சினையாய் மாறி
சூடிய தொப்பியில்
சரிந்திருக்க,
கதிர் புகா
கண்ணாடியால்
தன் நெற்றிக் கண்ணை
மறைத்தபடி
வியர்வை வர
கழற்றி வைத்த
மேல் ஆடையை
அரக்கசைத்து,
நடைப்பயிற்சி முடித்து வந்த
நவீன சிவபெருமான்
ஆளற்ற உருக்கின்
இருக்கையில் அமர்ந்தபடி,
களைப்பில் கண்ணயர்ந்து
சிலையாய்
சமைந்துவிட்டார்.
மூச்சு வாங்கி
மெல்ல நின்று
சற்று தாமதமாய் ஸ்தலம் சேர்ந்த
பார்வதி தேவியவர்
”என்னங்க!” என ஆணையிட,
உடனடியாய்
உறக்கம் முறித்து
தண்ணீர் குடுவையை
பையில் தேடி எடுத்துத்
திருகி நீட்டுவார்,
பிராட்டியிடம்.
ஓரத்து
மர நிழலில்
வேலவனும் விநாயகனும்
பிணக்குகள் யாதுமற்று,
ஞானப்பழத்தை
பகிர்ந்துண்ணக் கண்ணுற்று,
நாரதர் எங்கே இன்னும்
வரக்காணோம்?
என சிந்தை கொண்டு,
கைபேசியை
இடம்மாற்றி
கால்நீட்டி
கண்ணயர்வார்
கயிலை நாதர்.