முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2

தழுவல் தமிழாக்கம் -கோரா

முன் பகுதி  நினைவு கூர்தல்:

கட்டுரையின் முதல் பகுதியில் நியாயமான பகிர்வுக்குரிய இயற்கை வளங்கள் மற்றும் அனுகூலங்களாகக் கருதப்படும் பொதுமம்  (commons) என்னும் கருத்துரு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. பொதுமைகளின் நேர்மையான பகிர்வுக்கான  அற்புதமான இயற்கைசார் பாரம்பரியம் முற்காலத்தில் இருந்தது எனக்கூறும் ஹோல்ஸ்ட்ரோம்-ன்  கருத்துருவையும், “பொதுமங்களைப் பறித்துக் கொண்டோரிடமிருந்து அவற்றைப் போராடி மீட்கவேண்டும்” எனக் கூறும் கிளைன் முதலான சமூக செயல்பாட்டாளர்களின் அறைகூவல்களையும்  நூலாசிரியர்களான டர்டோட் மற்றும் லாவல் ஆகிய இருவரும் தர்க்க ரீதியில் முற்றிலுமாக எதிர்க்கின்றனர். ஏனெனில் அவை  வழமைகளை (practice) பின்னுக்குத்  தள்ளிவிட்டு பொதுமங்களை முன்னிலைப் படுத்துகின்றன என்கின்றனர். முன்னேறிய சமூகத்தில் பெருகிவரும் பல்வேறு  பொதுமங்களின் நியாயமான பகிர்வை நெறிப்படுத்தும் தலையாய அரசியல் கொள்கைக்கு  common எனப் பெயரிட்டுள்ள நூலாசிரியர்கள், அதுவே தூண்டு கோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்து முறையான பகிர்தலுக்கு வழி வகுக்கும் என்கின்றனர். அவர்கள் கருத்துப் படி ஹோல்ஸ்ட்ரோம் ஒரு கற்பனாவாதி; அவர் உற்சாகமூட்டுகிற விதமாக வர்ணித்துள்ள  பூர்வகுடிகள் அனைவரும் ஏதாவது ஒரு  ஆண் இனக் குழுத் தலைவர் ஆட்சிக்குட்பட்டவர்கள் (patriarchal); அவர்கள் இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை; அவர்களின் வாழ்க்கை முறைகள் ஆராதனைக்குத்  தகுதியற்றவை.

மார்க்சிய வழியில் பொதுமம் -சாத்தியக் கூறுகள்: 

பொதுமங்களை  முதலியம் முற்றிலுமாகப் பறித்துக் கொண்டதே கம்யூனிச  எழுச்சிக்கான முதல் காரணம்  என்கிறார் மார்க்ஸ். எல்லாப் பொதுமங்களும் கைக்கு வந்துவிட்ட பின்னர் முதலியத்துக்குப் பொருளுற்பத்தியை மையப்படுத்திக்  கொள்வதற்குகந்த சூழல் உருவானது. பாட்டாளி வர்க்கம் மையமாக்கலைத் தோற்கடித்து பொதுமங்களை மீட்கும்  என்று மார்க்ஸ் நம்புகிறார். இதைத் திட்டவட்டமாக மறுக்கும் நூலாசிரியர்கள், பொதுச்சொத்து நிர்வாகம் சமூகத்  தீர்வு காணலுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்கிறார்கள்   ஒவ்வொரு மையப்படுத்தப் பட்ட அரசும், கம்யூனிச அமைப்பும் பொதுமக் கொள்கைக்கு எதிரானது என்பது அவர்கள் கருத்து.  இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிச நாடுகளாகக் கருதப்பட்ட, இன்றும் கம்யூனிச நாடுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிற  சில  நாடுகள் குறித்த   கருத்து மயக்கங்கள் எதுவும் நூலாசிரியர்களுக்கு இல்லை. எல்லா கம்யூனிச நாடுகளிலும்  பயங்கரவாத, பிற்போக்கு, ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை ஆட்சி நடப்பதாகவே அவர்கள்  கூறி வருகிறார்கள்.

பொதுமம் -ஒரு அரசியல் கோட்பாடு

பொதுமத்தை ஒரு அரசியல் கொள்கையாகப் புரிந்து கொள்வது, அது வெறும் மைய உற்பத்தி செயல் முறைகளால் உதயமாகி விடாது; பொதும மீட்பு குறித்த அரசியல் போராட்டங்களே அதைப் பெற்றுத் தர முடியும் என்று புரிந்து கொள்வதாகும். நூலாசிரியர்கள் காட்டும் பொதுமக் கருத்துப் படிவம் இறுதியில் ஒரு சட்டப் பிரச்னையே : எப்படி இருக்கிறது என்று விவரிப்பதல்ல; எப்படி இருக்க வேண்டும் என்று ஆணையிடுவது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தொகுக்கப் பட்ட நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களே, பொது நியதிகள் மற்றும் சட்டக் கூறுகளின் இயற்றலுக்கு அடிப்படையாக அமைந்தன என்ற போதிலும் அவற்றின்   வழிகாட்டிகளாக இருந்தவை  ஆட்சியும் அதன் சட்டங்களுமே. இது தத்துவத்தின்  அடிப்படை முரண் தோற்ற மெய் (paradox)- (ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும் முரண்படாத உண்மைகள்)

தத்துவத் தேடல்கள்:

இந்த முரண் தோற்ற மெய்க்கு விடைகாண விரும்பாத நூலாசிரியர்கள், instituent praxis முறை மூலமாக பிரச்னையை  அணுகி இருக்கிறார்கள். அதன் படி: பொதுமத்தை நிறுவும் நடவடிக்கை பொதுமத்தில் தான் செயல்பட முடியும். அதாவது  மனித செயல்பாட்டின் இயற்கைப் பண்புக்கு உகந்ததாகவும் அச்செயல் பாட்டின் விளைவாகவும் பொதுமம் இருக்கும். நூலாசிரியர்கள் பயன்படுத்திக் கொண்ட மற்றொரு கோட்பாடு கார்னேலியுஸ் கஸ்டோரியாடிஸ் (Cornelius Castoriadis என்னும் கிரேக்க- பிரெஞ்சு  தத்துவ ஞானியின் கோட்பாடு. அதில் கூறப் பட்டிருப்பது :  ஒரு நிறுவனத்தை அது  வேறொரு கற்பனையான பரிமாணம் கொண்டிருப்பதாக எண்ணிப் பார்க்கையில், அது எதுவாக இருக்கிறதோ அதிலும் வேறுபட்ட  ஒன்றாகத்  தோற்றமளிக்கூடிய  சாத்தியங்களை அளிக்கிறது. மேற்கண்ட தத்துவக் கருத்துக்களின் படி, எது சாத்தியமானது, விரும்பத் தக்கது அல்லது அவசியமானது என்று அறியவல்ல பொதுவான கற்பனையைத் தூண்டி வழிகாட்டும் புதிய மற்றும் மாறுபட்ட நிறுவனங்களின் உதயத்தை நூலாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். இவர்கள் தழுவி இருப்பது அராஜக (Anarchy) கோட்பாடு அல்ல . ஏனெனில் அதிகார மையங்களையோ அல்லது அதிகாரம் செலுத்துவதையோ இவர்கள்  நிராகரிக்கவில்லை.. 

நூலாசிரியர்களின் பரிந்துரைகள் : பொதுமங்கள் பேரவை

“On Revolution in the 21 st Century” என்னும் உப தலைப்பைக் கொண்ட இந்நூலில்  நூலாசிரியர்கள் 21-ஆம்நூற்றாண்டுப் புரட்சியின் வழிகாட்டலுக்குரிய  9 முன்மொழிவுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். வல்லரசு  அல்லது சந்தைகளின் ஆட்சி என விமர்சிக்கப் படும் 20-ஆம் நூற்றாண்டு ஆட்சி முறைகளில் இருந்து மாறுபட்ட, நம்மை விடுவிக்கக் கூடிய புரட்சி இது.  இறுதியாக நூலாசிரியர்கள்  ஒரு விரிந்த பார்வை கொண்ட அரசியலமைப்பைப் (political panorama) பரிந்துரைக்கிறார்கள். அது பொதுமங்கள் பேரவை என்ற பெயரில் இயங்கும் மக்களாட்சி- வழி ஒருமுகப்படுத்தப் பட்ட சமூகங்களின் கூட்டணியாக இருக்கும்.  அரசியல் (political) மற்றும் சமூகப் பொருளியல் (Socio -economic) அதிகார வரம்புகளைக் கருத்தில் கொள்ளாமல் எல்லா பிரச்னைகளிலும் இணைந்து செயல்படும். பொதுமங்களைக் காக்கும் பிரச்னையின்  தீவிரம் வெளிப்பட வேண்டுமானால், அரசியல் ஆளுகையும்(political governance), உற்பத்தி செயல்பாட்டு எல்லைகளும் (Sphere of Production)  குடியரசு விழுமியங்களின் படி சீரமைக்கப் படவேண்டும் என்று நூலாசிரியர்கள் கருதுகிறார்கள்.  மையப் படுத்திய அரசு,  பொருளாதாரப் போட்டி ஆகியவை நவீன அரசுகளின் சிறப்புப் பண்புகளாகக் கருதப்பட்டு வருகின்றன. அவற்றில்  நகரத் தன்னாட்சி (முனிசிபல் autonomy), பொருளாதார ஒற்றுமை (economic solidarity) என்ற கருத்துகளின் அடிப்படையில் தலை கீழான  மாற்றம் ஏற்படவேண்டும் என்று நூலாசிரியர்கள் பியெர் டார்டோ (Pierre Dardot) மற்றும் சமூகவியலாளர் கிறிஸ்டியன் லாவால்  விரும்புகிறார்கள்.

விமர்சகர் கருத்து:

இந்நூலில் திடமான திட்டவட்டமான கருத்து எதுவும் எட்டப்படவில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.  நூலாசிரியர்களே இதற்கு முழுக்கவும்  காரணம் என்று குற்றம் சாட்ட முடியாது.  ஏனெனில் அவர்கள் வடிவமைக்கும் பொதுமங்கள் பேரவை வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத ஒரு கருத்துரு மட்டுமல்ல; முற்றிலும் மாறுபட்ட சமூக கூட்டமைப்பைச் சரியாக  சிந்தனையில் வடிவமைக்கும் முயற்சி. இருப்பினும் மனிதச் செயல்பாடுகளே  பொதுமக் கருத்துருவின் அடித் தளம் என்று அழுத்திக் கூறும் இந்த ஆய்வில், அதைச் சார்ந்த முயற்சிகளின் நுண்ணாய்வை இன்னும் கொஞ்சம் அதிகமாக சேர்த்திருக்கலாம் என்று விமர்சகர் கருதுகிறார்.

Instituent Praxis: Praxis is  the conception and  planning of a new action in response to  an environmental demand. The concept of Instituent Praxis as theorised in Piere Dardot and Christian Laval’s “Common:On Revolution in the 21st Century (2019)” is centrally employed. The thesis proposes an extended theoretical frame work around this concept, taking into the late capitalist  socio-political condition and responding to aspirations for political autonomy.

Cornelius Castoriadis (1922-97): கிரேக்க -பிரெஞ்சு தத்துவ ஞானி, சமூக விமர்சகர், பொருளியலாளர், உளப் பகுப்பாய்வர், The Imaginary Institution of Society – என்ற நூலை எழுதியவர்.

Series Navigation<< முதலியத்தை எதிர்க்கும் பொதுமம்சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.