புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3

This entry is part 3 of 23 in the series புவிச் சூடேற்றம்

விஞ்ஞானத் திரித்தல் – பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்

கடல் மற்றும் பனியால் நேரும் பருவநிலை மாற்றங்களைப் பற்றச் சென்ற பகுதியில் பார்த்தோம். கடலோரப் பகுதியில் வாழும் மக்களுக்கு, கடலின் பெருமையும், தாக்கமும் பற்றி நன்றாகத் தெரியும். மற்ற நிலம் சார்ந்த பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு, நதிகளும், ஏரிகளுமே பரிச்சயம். நதிகளும், ஏரிகளும், மனிதர்களுக்கு, பல்லாயிரம் ஆண்டுகளாக, குடிநீர், பாசனம், தொழிற்சாலைகள் என்று பல வித மனித நடவடிக்கைகளின் முதுகெலும்பாய் இருந்துள்ளன. புவி சூடேற்றத்தால், நதிகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? 

2007 –ல், தமிழ் நாட்டிற்கு வந்த பொழுது, பூம்புகாருக்குச் சென்றிருந்தேன். அங்கு, பெரு வெள்ளமாய் ஓடும் காவிரியை கடலில் கலக்குமுன் பார்க்க முடியும் என்று எண்ணியிருந்தேன். கடலைச் சென்றைடைய சில மைல்களுக்கு முன்பே காவேரியைக் காணோம். இது, காவிரிக்கு மட்டுமல்ல, உலகின் பல நதிகளின், இன்றைய கதி. அமெரிக்காவின் மிகப் பெரும் நதியான கொலராடோ நதி, கடலைச் சேருமுன் ஒரு 80 கி,மீ. முன்னே காணாமல் போய்விட்டது. இந்தியாவின் கங்கை நதி, பிரேசிலின் அமேஸான், கனடாவின் செயிண்ட் லாரன்ஸ் போன்ற பெரு நதிகள், கடலைச் சென்றடையும் முன் தொலையாமல் இருக்கின்றன. அத்துடன், இன்று ஒரு மிகப் பெரிய இந்தியப் பிரச்சினை, கங்கையைத் தூய்மைப் படுத்துவது. கங்கை நதிக்கு இரண்டு பெரும் பிரச்சினைகள். பனியுறுகி கீழே வரும் நீர், குறைந்து வருவது முதல் பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை, வழி எங்கும், தொழிற்சாலைகள், கழிவுகளை நதியில் கலப்பது. இந்த வகையான பிரச்சினை, வட அமெரிக்காவில், 1970 –களில், பெரும்பாலும் சரி செய்யப்பட்டது. ஆனால்,  வளரும் நாடுகள், இன்னும் தொழிற்சாலைகளால், நதி நீர் மாசுபடுவதைத் தடுக்க முடியாமல் திண்டாடுகின்றன.

இந்தக் கட்டுரையில், அமெரிக்காவின் கொலாராடோ நதியை மையமாகக் கொண்டு, பல விஷயங்களை விவரிக்க முயற்சிக்கிறேன். இது கோதாவரிக்கும், காவிரிக்கும், கங்கைக்கும் பொருந்தும். கொலராடோ நதி மற்றும் கங்கை நதி பற்றிய தாக்கம் மற்றும் காப்பு நடவடிக்கைகள் பற்றி அதிக விஷயங்கள் இருப்பதே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் விஷயம் எல்லா பெரு/சிறு நதிகளுக்கும் பொருந்தும்.

மாசுக் கட்டுபாடு என்பது ஒரு பிரச்சினை – புவி சூடேற்றத்திற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். மாசுக் கட்டுப்பாடு என்பது முதல் படி. இரண்டாவதாக நாம் பார்க்க வேண்டியது, புவி சூடேற்ற தாக்கம் மற்றும் நதிக் காப்பு முயற்சிகள். முதல் படியில்லாமல், இரண்டாம் படியில்லை. மிகவும் மாசடைந்த நதிக்கு சரியாக, மூலத்திலிருந்து நீரே வருவதில்லை என்று வைத்துக் கொள்வோம் – இது மழை நீர் (காவிரி), பனியுறுகல் (கங்கை, கொலராடோ), எதுவாக இருந்தாலும், நதி சார்ந்த மனித நடவடிக்கைகள் வெகு விரைவில் துறக்க நேரிடும்.

அமெரிக்காவின் கொலராடோ நதி, 2,334 கி,மீ. நீண்டது. ஏழு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் இரண்டு மெக்ஸிகோ மாநிலங்களும் இதன் பாதையில் அடக்கம். 40 மில்லியன் அமெரிக்கர்கள், கொலராடோ நதியின் நீரை நம்பி வாழ்பவர்கள். இந்தியாவின் கங்கை நதி, 2,704 கி,மீ நீண்டது. ஐந்து இந்திய மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷ், இதன் பாதையில் உள்ளது. 400 முதல் 500 மில்லியன் மனிதர்கள் கங்கை நதியின் நீரை நம்பி வாழ்பவர்கள். இரண்டு நதிகளுக்கும் மூலம், மலைகளில் உள்ள பனிநதிகள். இரண்டு நதிகளிலும், அணைகள் அங்காங்கு கட்டப் பட்டுள்ளன. இரண்டு நதிகளையும் கட்டுப்படுத்திவிட்டதாக அமெரிக்கர்களும், இந்தியர்களும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். ஒன்றை மட்டும், நிச்சயமாகச் சொல்லலாம். இன்றைய கொலராடோவின் நிலை, நாளைகங்கையின் நிலை. அப்படி, என்னதான் நடக்கிறது கொலராடோ நதியில்?

விஞ்ஞானிகளின் மிக முக்கிய கணிப்பு அமெரிக்கத் தென் கிழக்கு மாநிலங்கள் 20 ஆண்டு வரட்சியைத் தாண்டி, இன்னும் மோசமான பாதையில் போய்க் கொண்டிருக்கின்றன. வரட்சி என்ற சொல்லே சரியில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். வரட்சி என்பது ஓராண்டு அல்லது இரண்டாண்டு நீடிக்கும்; 20 ஆண்டுகளுக்கு மேல்லல. நதிகள் வரண்டு போவது ஒன்றும் புதிதல்ல. புவி சூடேற்றத்திற்கும், நதிகள் வரண்டு போவதற்கும் என்ன சம்பந்தம்? 

இயற்கை, ஒரு நதியை, பல்லாயிரம் ஆண்டுகளாக, 2,000 கி.மீ. –க்கு மேல் ஒட வைத்துள்ளது என்றால், அதன் பின்னணியில் உள்ள மிகவும் சிக்கலான ஒரு அமைப்பே காரணம். இந்த அமைப்பை, நாம் வயல்களுக்கு நீர்பாசனம் என்று தொடங்கி, மின்சார உற்பத்தி என்று பல விதங்களிலும் பயன்படுத்தி வந்தோம். கடந்த 2,000 வருடங்களாக நாம் இத்தகைய நதிகளை ஜீவ நதி என்று சொல்லி பயன்படுத்தி வந்தோம். ஆனால், கடந்த 150 ஆண்டுகளாக. நதிக்கரையில் பெரிதாக வளர்ந்த நகரங்கள், தொழிற்சாலைகள், நதி நீரைப் பயன்படுத்துவதோடு, கழிவையும் நதி நீரில் கலப்பதை நாம் அறிவோம். எப்படியோ, இயற்கை, இந்தக் கழிவுகளை, வழியில் வரும் தடங்கலாக, கடலுக்கு கொண்டு சேர்த்து வந்தன. ஆனால், அதே நகர மயமாக்கம் (urbanization), மற்றும் தொழில்கள், இந்த பூமியை அளவிற்கு அதிகமாக சூடேற்றத் தொடங்கியவுடன் வந்த வினைதான், நதிமூலத்தில் வந்த மாற்றங்கள். கடந்த 40 ஆண்டுகளாக, மனிதர்கள், தாங்கள் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்று உலகெங்கும் பறை சாற்றி வருகிறோம். உண்மை, அதுவல்ல.

முந்தைய பகுதியில், பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்று பார்த்தோம். இந்தப் பகுதியில், இவற்றின் உருக்கத்தின் நேரம் மற்றும் அளவு எவ்வளவு முக்கியம் என்று பார்ப்போம். 

  1. வசந்த காலம் தொடங்கி, ஓரிரு மாதங்களுக்குப் பிறகே, மலைகளில் பனியுறுகி வரத் தொடங்கியது. இன்று, புவி சூடேற்றத்தால், குளிர்காலம் முடிவதற்கு முன்பே பனியுறுகத் தொடங்கி விட்டது
  2. நதிநீர் பாசனத்தை நம்பும் விவசாயிகள், ஓரளவிற்குதான், விதைப்பதை முன்னமே செய்ய முடியும். மலைகளில் அவசரமாக பனியுறுகினாலும், சமவெளியில் பயிருக்கான வெப்பம் அதிகமில்லாத்தால், நதியில் நீரிருந்தும் பயனில்லை
  3. கோடை காலத்தில் கடைசி மாதம் வரை, மலைகளிலிருந்து தண்ணிர் வந்த வண்ணம் இருந்ததால், பயிராகட்டும், மின்சார உற்பத்தியாகட்டும், இரண்டும் நடந்து வந்தது. கோடையின் கடைசி மாதம் சற்று குறைவாக நீரோட்டம் இருந்தாலும், சமாளிக்க முடிந்தது
  4. சமவெளியில், கொலராடோ, இன்று கோடை காலத்தின் முதல் மாதத்திலேயே அதிக நீரின்றி வலுவிழந்து விடுகிறது. மேலும், அமெரிக்க தென்கிழக்கு, பெரும்பாலும், காய்ந்த மலைகள் மற்றும் பாலைவனப் பகுதி. வரட்சி ஒரு வருடாந்திர விஷயமாகி, குடிநீருக்கே பிரச்சினை என்ற அளவிற்கு வந்து விட்டது
  5. இத்துடன் பெரு நகரங்கள் (டென்வர், லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ், ஃபீனிக்ஸ்) நதி நீரை அதிகம் பயன்படுத்தி, கழிவையும் கலப்பதால், கொலராடோ நதி வழக்கத்திற்கு 80 மைல்களுக்குள்ளேயே நின்று விடுகிறது
  6. கொலராடோ நதியின் பிரவாகத்தைக் கட்டுப்படுத்த, உலகின் மிகப் பெரிய மனித ஏரிகள் (மீட், போவல் Lake Mead, Lake Powell) உருவாக்கப்பட்டன. இந்த ஏரிகள், குடிநீர் மற்றும் பாசனத்திற்குப் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டன. அத்துடன், இந்த ஏரிகள் சுற்றுலாவிற்கும் தகுந்த இடங்கள். மார்ச் 2020 –ல் போவல் ஏரிக்குச் சென்றிருந்தேன். நீரோட்டம் ஏரியிலும், கொலராடோ நதியிலும் கிகவும் குறைந்து இருந்தது. இன்னும், வசந்த காலமே தொடங்கவில்லை. இந்த இரு  ஏரிகளிலும், 15% நீர் குறைந்து விட்டது 

மேலே சொன்ன விஷயங்களில், பெரும் பகுதி கங்கை நதிக்கும் பொருந்தும். கொலராடோவை விட மிகவும் மாசான நதி கங்கை. ஆனால், அதன் வழியில், அமெரிக்கத் தென்கிழக்கு போல, பாலைவனம் இல்லை. கங்கையில் மூல நீர் குறைந்து கொண்டே வந்தால், தென் மேற்கு அமெரிக்காவின் கதி, பீகார், மேற்கு வங்கத்திற்கு நேர இன்னும் சில வருடங்கள் தான் ஆகும்.

இன்று கொலராடோ பயணிக்கும் 7 மாநிலங்கள், நதி நீர் பங்கீடு பற்றிய காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளன.  2021 –ற்குள் இதற்கான முடிவெடுக்க வேண்டும். விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை இந்த 7 மாநிலங்களும் பல வருடங்களாகப் பொருட்படுத்தவில்லை. இன்று, எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது என்று கத்தை கத்தையாக அரசியல் அறிக்கைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகள், இரண்டு மூலக் காரணங்களைச் சொல்லுகிறார்கள். முதலாவது, மலை மீது விழும் பனியின் அளவு, புவி சூடேற்றத்தால், குறைந்து விட்டது. இரண்டாவது, விழுந்த குறைவான பனி, சீக்கிரமே உருகிவிடுகிறது. ஆக, நதியின் மூலம் கடக்கும் நீரின் அளவு குறைந்து விட்டது. பொதுவாக, நதி நீர் காப்பு என்பது, இருக்கும் நீரைப் பாதுகாக்க வழிகள் தேடும் முயற்சிகள். கையிருப்பு நீர் குறையத் தொடங்கினால், ஒரே வழி, பயன்பாட்டில் ரேஷன் முறையைக் கொண்டு வருவது. இதுதான், தென்மேற்கு அமெரிக்காவின் இன்றைய நிலை.

அமெரிக்க விவசாயிகள், நீரில் ரேஷன் என்றால் கொதித்து எழுவார்கள். அத்துடன், சில பகுதிகளில், விவசாயத்தை கைவிடவும் நேரிடும். இந்த மாநிலங்களின் பொருளாதாரத்தை இது பாதிக்கும் என்பது நிச்சயம்.

கங்கை ஆற்றிலும், இது போன்ற விஷயங்கள் கண்கூடாகி விட்டது. ரிஷிகேஷ் செல்லும் பயணிகள், இடுப்பு வரை தான் நீர் உள்ளது என்று 2019 –ல் சொல்லியுள்ளார்கள். ரிஷிகேஷில், நதியின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறம் நடந்து செல்வது இயலாது; இன்று, முடிகிறது. கங்கைக்கு மூலமான பனிநதிகள் புவி சூடேற்றத்தால், பின்வாங்குவதோடு, அவற்றால் உருகும் நீரும் குறைந்துவிட்டது. கங்கோத்திரி, ஒவ்வொரு வருடமும் 22 மீட்டர்கள் பின்வாங்கியுள்ளது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளில், ஏறக்குறைய 400 மீட்டர்கள். கடந்த 50,000 வருடங்களில், 40 கி.மீ. கங்கோத்திரி பின்வாங்கியுள்ளது. அதாவது, வருடத்திற்கு சராசரி, .8 மீட்டர்கள் தான், வரலாற்றில், பின்வாங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், இந்த வேகம், 28 மடங்கு அதிகமாகியுள்ளது.

இந்தியாவின் குறி என்னவோ கங்கையில் உள்ள மாசைக் கட்டுப்படுத்துதல். இந்த முயற்சி, கடந்த 35 வருட காலமாக மத்திய அரசு, வெற்றி பெறாமல், ஒப்பேற்றும் விஷயம். முதலில், மாசைக் குறைப்போம், பிறகு, புவி சூடேற்றத்தைக் கையாள்வோம் என்ற அணுகுமுறை மிகவும் அபாயமானது. புவி சூடேற்றப் பிரச்சினை, கங்கையைத் தூய்மை படுத்தக் காத்திருக்காது. சொல்லப் போனால், நதி நீளத்தில் குறைவதுடன், வழியில் கிடக்கும் பல்லாயிரம் வயல்களும் காணாமல் போய்விடும்.

புவி சூடேற்றம், ஆற்று வடிநிலங்களை (river basins) பாதிக்குமா? நிச்சயமாக பாதித்துள்ளது. உலகில், கிட்டத்தட்ட 365 மில்லியன் மனிதர்கள், நதி வடிநிலங்களில் வாழுகிறார்கள். வடிநிலங்களுக்கு விழுந்த முதல் அடி, பெரிய அணைகள். பெரிய அணைகள், நிறைய நீரைத் தேக்குவதால், வடிநிலங்களைச் சென்றடையும் நீரின் அளவு குறைந்து விடுகிறது. இதனால், சுற்றியுள்ள நிலத்துடன், நதியும், பெரிய நீர் அனுசரிப்பு வழிகளைப் பயன்படுத்த நேரிடுகிறது. இதில், சில பெரு நதிகளின் முயற்சி, ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும், சிறு நதிகள் பாதிக்கப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய நதிகளில் ஒன்றான அமேஸான் நதி, இன்று, பல மிகப் பெரிய அணைகளின் தாக்கத்தை சமாளித்து வந்துள்ளது. ஆனால், பிரேஸில் அரசின் டஜன் கணக்கான அணைகள், இந்த உலகின் மிகப் பெரிய நதியையும் திக்கு முக்காடச் செய்து விடும். 

நதிகளின் வண்டல்படிவுகள் (sediment deposits) , பயிர்கள் செழிக்க மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அணைகள், நீர்பாசனத்திற்கு உதவினாலும், அதன் மிகப் பெரிய பின்விளைவு வண்டல்படிவுகளில் கைவைப்பதுதான். நதியில் வரும் பெரு வெள்ளத்தை தடுக்க அணைகள் மிக முக்கிய பங்கு வகித்தாலும், நதியின் இயற்கை ஓட்டத்தை தடுப்பதால், வடிநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ், கங்கை நதியில் கட்டப்படும் ஒவ்வொரு அணையாலும் பாதிக்கப்படும். எல்லா நாட்டு அரசியலிலும், பெரிய அணை என்பது வெற்றியாகவும், வடிநிலங்களை பலப்படுத்துவது, மற்றும் வெள்ள சமவெளிகளை (flood plains) பராமரிப்பதும், மாமூலான நடவடிக்கையாகவும் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. வெற்றியை மட்டுமே நம்பும் அரசியல்,, பெரிய அணைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

புவிசூடேற்றம் அதிகமாக, இந்தப் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில், இன்று செழிப்பான நிலம் என்று சொல்லும் பெரும்பாலான நிலங்கள், நதிகள் அல்லது ஏரிகளுக்கு அருகில் இருக்கும் நிலங்கள். இன்னும் ஒரு 40 முதல் 50 வருடங்களில், இதே போக்கு தொடர்ந்தால், அந்த செழிப்பான நிலம் என்பது எப்படி இருந்தது என்று நம் பிள்ளைகள் வரலாற்றுச் செய்தியாக மட்டுமே படிப்பார்கள்.

இதுவரை, புவிசூடேற்றத்தால், நம்முடைய நீர் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோம். அடுத்த பகுதியில், நம் பூமியைச் சுற்றியுள்ள சன்னமான காற்றுமண்டலம் மனித நடவடிக்கைகளால், எப்படி எல்லாம் சூடேற்றப்படுகிறது என்று பார்ப்போம்.

Series Navigation<< பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.