நோவு

காலையில் வெயில் உடம்பைப் போட்டு சாத்துவதற்கு முன்பே  முத்துப் பாண்டி வீட்டிலிருந்து கடைக்குக் கிளம்பி விட்டார். வீட்டிலிருந்து கடை தூரத்தில் இல்லை என்பதால் அவர் நடந்து போவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். வழியில் தென்படும் முகங்கள் அவரது வயதுக்கும், ஆகிருதிக்கும் பணத்துக்கும், குடும்ப கௌரவத்துக்கும் கொடுக்கும் கும்பிடுகளையும் தலையசைப்புகளையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு நடையைக் கட்டுவார். 

முத்துப் பாண்டி கடையை நெருங்கும்போது வலது கையால் கால் சட்டைப் பைக்குள் இருந்த கடைச் சாவியை எடுத்தார். இடது கையிலிருந்த பை கனத்து நோவைக் கொடுத்தது. அந்தப் பைக்குள் சாலாட்சி பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொடுத்திருந்த அஞ்சு கிலோ பருப்பு உட்கார்ந்திருந்தது. அவர் கடைக்கு நாலு கடை தள்ளியிருந்த ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி சாயுங்காலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

அந்தப் பாத்திரத்துக்கு மேலே சாலாட்சி தூக்குச் சட்டியில் குழம்பு சோறும் வெஞ்சனமும் அவர் மத்தியானம் சாப்பிட என்று வைத்திருந்தாள். அதற்கும் மேலே காகிதப் பையில் அவர் வரும் வழியில் இருந்த நாடார் கடையில் வாங்கிய புள்ளி வச்ச வாழைப்பழங்கள் இருந்தன. தினமும் இரண்டு வேளைகளும் சாப்பாடு முடிந்தபின் வாழைப்பழம் எடுத்துக் கொண்டால்தான் மறுநாள் காலை வயக்காட்டுப் பக்கம் நிம்மதியாக ‘இருந்துவிட்டு’ வர முடிகிறது.

கை பாரத்தைக் கடையில் இறக்கி வைக்கவென்று நடையை எட்டிப் போட்டார். கடை வாசலை அடைந்ததும் நின்று விட்டார். 

கடை வாசல் சிமிட்டியில் ஒரு கறுப்பு நாய் படுத்திருந்தது. வளர்த்தியான நாய். வெள்ளையும் கறுப்புமாக உடலெங்கும் புள்ளிகள். கண்ணை மூடிக் கிடந்தது.

முத்துப் பாண்டி நின்ற இடத்திலிருந்து “சூ சூ” என்று விரட்டினார்.

அது கண்ணைத் திறந்து பார்த்து விட்டு மறுபடியும் மூடிக் கொண்டது.

அந்த அலட்சியம் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. சுற்றும் முற்றும் பார்த்தார். பக்கத்தில் தரையில் கிடந்த கல்லை எடுக்கக் குனிந்தார்.

“உர்..ர்” என்று சத்தம் கேட்டது. அவர் தலையை நிமிர்த்திப் பார்த்தார். நாய் எழுந்து நின்று அவரைப் பார்த்தபடி இருந்தது. உடம்பை சோம்பல் முறிப்பது போல ஒரு முறை குலுக்கிக் கொண்டது. அவர் கையில் கல்லை எடுத்ததும் அது அவரை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தது. அவர் கல்லைக் கீழே போட்டு விட்டார்.  

இப்போது நாய் அது இருந்த இடத்தில் நின்றது. வாயை ஒரு முறை பெரிதாகத் திறந்து கொட்டாவி விட்டது. கூரிய பற்கள் அவர் கண்களில் பட்டன. வாயிலிருந்து தொங்கிய நாக்கு ரோஸ் நிறத்தில் இருந்தது. வால் ஆடிக் கொண்டே இருந்தது. அவர் கறுப்பனைப் பார்த்துக் கொண்டே மறுபடியும் கல்லை எடுக்கக் குனிந்தார். நாய் அவரை நோக்கி ஓரடி காலை முன் வைத்தது. அவர் கல்லை எடுக்காமல் நிமிர்ந்து நின்றார்.

முத்துப் பாண்டி தெருவில் யாராவது இந்தக் கண்ணராவியைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தார். ஒருவன் ரிக் ஷாவை ஓட்டிக் கொண்டு கிழக்கேயிருந்து வந்தான். அவன் போட்டிருந்த பனியன் வியர்வையில் திட்டுத் திட்டாக நனைந்திருந்தது. ஆள் திடமாக இருந்தான். அவனைக் கூப்பிட்டு நாயை விரட்டச் சொல்லலா….அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ரிக் ஷா அவரைக் கடந்து போயிற்று. தெருவில் வேறு யாரும் கண்ணில் படவில்லை 

அவர் அம்மாதிரி நின்று கொண்டு நாயுடன் மன்றாடுவதை வேறு யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அவரது கௌரவம் என்னாவது? அவர் நின்ற இடத்திலிருந்து நாலடி தள்ளி இருந்த வேப்ப மரத்தின் கீழே போய் நின்றார். இப்போது அவர் வேப்ப மர நிழலில் யாரது வருகையையோ எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறார். அங்கு தரை அசிங்கப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர் கையிலிருந்த பையைக் கீழே வைக்காமல் கனம் தரும் வலியைப் பொறுத்துக் கொண்டு நின்றார். 

அவர் மறுபடியும் நாயைப் பார்த்தார். அதனுடன் சமாதானமாகப் போய் விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. ஒரு வாழைப் பழத்தை

எடுத்துக் கொடுக்கலாம் என்று அவர் தான் பிடித்துக் கொண்டிருந்த பைக்குள் கையை விட்டார். நாய் ‘லொள்’ என்று குரைத்துக் கொண்டே ஓரடி அவரைப் பார்த்து நகர்ந்து வந்தது. அடிக்க ஏதோ எடுக்கிறான் என்று அது நினைக்கிறது என்று முத்துப் பாண்டி அவசர அவசரமாக வாழைப் பழக் கவரிலிருந்து ஒரு பழத்தை எடுத்து நாய்க்கு முன் காட்டினார். அது தன் அருகில் வந்து விடக் கூடாது என்று நாயை நோக்கிப்  பழத்தை வீசி எறிந்தார். பழம் அதனருகில் போய் விழுந்தது. நாய் அதை முகர்ந்து பார்த்து விட்டு அவரைப் பார்த்தது. 

“வாளப் பளம்தான். உனக்குத்தான். சாப்பிடு” என்றார் அதனிடம். 

நாய் தோலியுடன் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டது. அவரைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டது. 

“இன்னொன்னு வேணுமா?” என்று கேட்டு மறுபடியும் பைக்குள் கையை விட்டபடி நாயைப் பார்த்தார். அது நின்ற இடத்திலேயே நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. ‘பெரிய குறப்பய பிள்ளையால்ல இருக்கு’ என்று பழத்தைத் தூக்கி எறிந்தார். இப்போது அது பழம் கீழே விழுந்து விடாமல் வாயால் கவ்வி விட்டது. அதை சாப்பிட்டு முடித்ததும் அவரைப் பார்த்தது.

“போ போ” என்று அவர் கையை நீட்டி அதை விரட்டினார். அது முன்பு 

படுத்திருந்த வாசலுக்குப் போய் நின்று மூத்திரம் பெய்தது.

“சீ,சீ,சீ,சீ” என்று அவர் குரலை உயர்த்தி நாயைப் பார்த்துக் கத்தினார். அது மூத்திரம் உடம்பில் பட தரையில் உட்கார்ந்து கொண்டது.

முத்துப் பாண்டிக்கு என்ன செய்வதென்று ஒரு நிமிடம் புரியவில்லை. 

அப்போது அங்கு இன்னொரு நாய் ஓடி வந்தது. சிவப்பும் காவியுமாக ஒரு நிறம். கறுப்பனின் அருகில் சென்று முகர்ந்து பார்த்தது. ‘இதென்னடா பெரிய ரோதனை! ஒண்ணுக்கு ரெண்டா வந்து நிக்குது. கொடுக்கிறதுக்கும் வாளப் பளம் இல்லியே’ என்று அவர் நினைத்தார். அந்த நினைப்பு அவர் இருந்த சூழ்நிலையிலும் சிரிப்பை வரவழைத்தது. வந்த நாய்  வேகமாக வாலை ஆட்டியபடி தன் முன்னங் கால்களால் கறுப்பனைப் பிராண்டியது. துள்ளிக் குதித்து எழுந்த கறுப்பன்  தன் முகத்தை சிவப்பு நாயின் முகத்தோடு இணைத்து அதன் வாயைக் கவ்வியது. இரண்டும் ஆக்ரோஷமாக ஒன்றின் மேல் ஒன்று விழுந்து எழுந்தன. இரண்டும் சண்டை போட்டுக் கொள்ளப் போகின்றன என்று முத்துப் பாண்டி நினைத்தார். ஆனால் அவைகளிரண்டும் ஒன்றையொன்று கடித்துக் கொண்டும் நக்கிக் கொண்டும் துள்ளாட்டம் போடுவதை விளங்கிக் கொள்ள அவருக்குச் சில வினாடிகள் பிடித்தன. 

திடீரென்று கறுப்பன் தாவி எழுந்து சிவப்பு நாயின் பின்புறம் சென்று முகர்ந்து பார்த்தது. சிவப்பு நாய் விருட்டென்று திரும்பி கறுப்பன் மேல் பாய்ந்து அதை முட்டித் தள்ளிற்று. கீழே விழுந்த நாய் எழுந்திருப்

பதற்குள் சிவப்பு நாய் வந்த வழியே திரும்பி ஓடிற்று. அதை விரட்டிக் கொண்டு கறுப்பன் ஓடியதை அவர் பார்த்தார். ஒரு வழியாக இந்த இடத்தை விட்டு இரண்டு சனியங்களும் ஒழிந்தன என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அவர் கடை வாசலை நோக்கி நகர்ந்தார். பை கனத்தால் இடது கை வலி ஏறிக் கொண்டே இருந்தது. கடையைத் திறந்து அதை வீசி எறிய வேண்டும். அதற்குள் அந்த சிவப்பு நாய் கடை வாசலுக்கு மூச்சு இளைக்க ஓடி வந்து விட்டது. பின்னாலேயே கறுப்பன் ஓடி வந்து அதனருகில் நின்றது. முத்துப் பாண்டி வேறு வழியின்றி நின்று விட்டார். ஆங்காரத்துடன் அந்த இரண்டு நாய்களையும் பார்த்தார்.

கறுப்பன் சிவப்பு நாயின் பின்புறம் சென்றது. தனது பின்னங் கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டு முன்னங் கால்களைத் தூக்கி அதன் மேல் தாவியது. முன் போலில்லாமல் சிவப்பு நாய் கறுப்பனின் செயலை அனுமதித்தது போலப் பேசாமல் நின்றது. முத்துப் பாண்டி கருப்பனின் அசைவுகளைப் பார்த்து விட்டு அதன் கண்களை நோக்கினார். அது இவர் பக்கம் திரும்பாது அசைந்து கொண்டிருந்தது. முத்துப் பாண்டி தரையைப் பார்த்தார். சற்று முன்பு கீழே போட்ட கல் அதே இடத்தில் கிடந்தது. அவர் காலால் அந்தக் கல்லைப் பற்றி காலை மேலே கொண்டு வந்து தனது வலது கையில் எடுத்துக் கொண்டார். மறுபடியும் அவர் அந்த நாய்களைப்  பார்த்தார். அவற்றின் கவனம் அவர் மீது இல்லாதிருந்தது.

அவர் மனதில் அது வரை படர்ந்து கொந்தளித்துக் கொண்டிருந்த அத்தனை ஆத்திரமும் அந்தக் கல்லுக்குள் புகுந்தது. கையை  உயர்த்திப்  பலங் கொண்ட மட்டும் கறுப்பனின் அந்தரங்க பாகத்தைக் குறி வைத்து எறிந்தார். அந்த இடமே கிடுகிடுத்துப் போவது போலக் கறுப்பனின் வாயிலிருந்து உரத்த ஓலம் வெளி வந்தது.  அது வலி பொறுக்க முடியாமல் துள்ளுவதை அவர் பார்த்தார். கறுப்பன் எவ்வளவோ முயன்றும் சிவப்பு நாயின் உடலுடன் பின்னியிருந்த  அதன் உடம்பைப் பிரித்து வெளியே வர முடியவில்லை. இரண்டு நாய்களும் எதிரெதிர் திசையில் பெரும் ஓலத்துடன் பிரிய முயன்றன. என்ன இழுத்தும் பிரியாத பாகங்கள் தந்த வலியின் உக்கிரம் தாளாமல் இந்த ஓலம் வினாடிக்கு வினாடி அதிகரித்து வந்தது. திடீரென்று  சிவப்பு நாய் பலத்துடன் கறுப்பனையும் தடுமாறி இழுத்துக் கொண்டு  ஓடியதை அவர் பார்த்தார். சற்றுத் தூரம் விந்தி விந்தி ஓடிய பின் அவை பிரிந்து ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஓடின.  

முத்துப் பாண்டி கடை வாசலை அடைந்தார். நாய் மூத்திரத்தை மிதிக்காமல் உள்ளே போக முடியாது போல இருந்தது. ‘தாயளி குட மூத்திரம் பெஞ்சு வச்சிருக்கு பாரு’ என்று தனக்குள் பேசியபடி  கதவைத் திறந்து கொண்டு கடை உள்ளே போனார்.  ‘வெக்காலி யார் கிட்டே வந்து ஆட்டம் காமிக்கிறே? அறுத்து எறிஞ்சிருவேன்’ என்றபடி அங்கிருந்த 

மேசையின் மீது கையில் இருந்த பையைத் தூக்கிப் போட்டார். 

சற்றுக் கழித்து அவருக்கு வலது கையில் நோவெடுப்பது போல் இருந்தது.  

***

2 Replies to “நோவு”

  1. ஸிந்துஜா தனது பால்யகாலக் குறும்பை கதையைக்கி விட்டார். ஆமாம் நோவு யாருக்கு.?.இந்தக் கதைஅவரவர் பால்ய பருவத்தை நினைவு கூரச்செய்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.