நீலம்..நிர்வாணம்…நிதர்சனம்….

சியாம் பாரதி

அன்று புதன்கிழமையாக இருக்கக்கூடும். அன்று புதன்கிழமைதான், அந்நாள்  மறதிக்கு அப்பாற்பட்டது . மூளைக்கு தான் மறதி நினைவு எல்லாம். மூளையை தாண்டிய, உடற்கூறாய்வில் சிக்காமல் தப்பிய அந்த…அந்த… ப்ச்ச்…. அதற்கு நினைவென்று ஏதும் இல்லை, சாட்சி மாத்திரம் தான்.

இல்லை, சாட்சி தான் அந்த… அந்த.. ப்ச்ச்.. ,அதுவே. பாரிஸ் யுத்த சங்கிலியிலிருந்து நழுவி தன்னிச்சையாக தவழத்தொடங்கிய நாட்கள் அவை.

சிட்டோயன்களும் மஸ்டாங்குகளும் கேவல்களுடன் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. கஃபேகளில் தங்களை வலுக்கட்டாயமாக திணித்துக்கொள்வதும், காலரிகளில் ஓவியன் வரைவதற்கு எடுத்துக்கொண்டதைவிட அதிக நேரம் ஒரு ஓவியத்தை நோட்டமிடுவதும்தான் பாரிசியர்களின் வழக்கம். பாரிஸ் ஒரு கலை நகரம்.

சென் [1] நதியில் தள்ளாடும் படகிலிருந்துவரும் “லா வை என் ரோஸ்”  கஃபேயின் “ நெ மெ கியூட்டி பா” உடன் மோதி அமிழ்கிறது. கியூபிஸம்,

இம்ப்பிரஸனிஸம், எக்ஸ்பிரஸனிஸம், சர்ரியலிஸம், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஸனிஸம் என்று பலதும் முரணோடு இணங்கி தெருக்களில் குவிந்திருக்கின்றன. உடுத்தும் சமாசாரத்தில்  பாரிசியர்களிடம் இன்னும் பூர்ணத்தின் அடிவிளிம்பில் துருத்திக்கொண்டிருந்த மேரிலின் மன்றோவின் ஆதிக்கத்தை மார்ச் மாதம் சற்று  கீழே தள்ளிவிட்டிருக்கிறது.

ஒரு நூறாண்டு கடந்தும் வரலாற்று நிர்பந்தத்தின் எச்சங்களாக நிற்கும் ஹார்ஸ்செஸ்ட்நட் மரங்கள், மழை வரும்வரை பனியை சுமக்கவேண்டியதும் ஒரு நிர்பந்தம் தான். பாரிஸின் காலதர்கள், புதுமைக்காக திறந்துவைக்கப்பட்டவையல்ல, புதுமையை வியாபித்தற்பொருட்டு திறக்கப்பட்டவை. பூனை மயிர் உதிர்த்தாற்போன்ற வையலின் அன்ட் தி பிட்சரும்[2], பியானோ அன்ட் மண்டோலாவும் அபிமானப்பட்டியலை விட்டகல்வதில்லை. ஆனால் இம்முறை புதுமை சற்று வலுவாகவே முள்முடியாய் தைத்துவிட்டது. இது புறக்கணிக்கப்பட்ட,இல்லை புறந்தள்ளப்பட்ட காலத்தை விஞ்சிய புதுமை;புறந்தள்ளப்படுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இதை புதுமை என்று சொல்லிவிடமுடியாது இது பழமை தான். மனத்தின் தொடக்கத்தில் வேர்பிடித்து அதிலே புரையோடி தன்னை முடக்கிக்கொண்ட பழமையை அநாயாசமாகப் பிடுங்கி கிலுகிலுப்பை ஆட்டும் புதுமை.

மோனோக்ரோம்ஸ்! (MONOCHROMES)

ஈவ் க்ளனினுடைய (Yves Klein) மோனோக்ரோம்ஸ். மனத்தை,சலனத்தின் உச்சியைத் தொட்டு நிச்சலனமாய் அடங்கும் மெழுகாய் மாற்றக்கூடிய நீலநிற மோனோக்ரோம்ஸ். நீலம்! “ முதலில் இருப்பது சூன்யம் அதற்கப்பால் இருப்பது ஆழ்ந்த சூன்யம் அதற்கப்பால் நீலத்தின் ஆழம் “ என ஈவ் உருக்கொடுத்த கோட்பாட்டை விளங்கிக்கொள்வதைவிட,இரண்டுகட்ட சூன்யத்தைக் கடந்து அசூன்யத்தில் பரவி நம்மை சூன்யத்துள் இழுக்கும் க்ளனினுடைய நீலமோனோக்ரோம்ஸை விளங்கிக்கொள்வதுதான் கடினம்.அதில் மற்றொரு இறகைச் சேர்த்தாற்போன்ற  க்ளனின், வெறுமையை அசூன்யத்தில் வியாபித்து சூன்யத்தை உணர்த்தும் “ தி இம்மெடிரியல் ஜோன் “(the immaterial zone). அதற்காக, மார்ஸல் டுசாமிற்க்கு (Marcel Duchamp) கிடைத்த “ பெட்டே நு கம் பெயின்டர் “ தான் க்ளனிற்க்கும் பாரிசியர்கள் மத்தியில் கிடைத்தது. பாரிஸின் தெருக்களில் நடப்பதென்பதே அதன் வரலாற்றில் இழைவதுபோலத்தான்; சலிப்பூட்டாத செய்கை. செஸ்ட்நட் மரங்களின் சருகுகள் கூட தி கிராண்ட் ஆர்மியின் அணிவகுப்பை நிழலாடச்செய்துவிடும். போனபாஹ்ட் முதல் எடித் பியாஃப் வரை பல நூற்றாண்டுகளின் இடைவெளியை பாரிசின் தெருக்கள் இழுத்து முடிச்சிட்டுவிட்டன. இதோ! “ காலெரி டாஹ்(ட்) இன்டர்நேஷனல் கான்டெம்பொஹான்“ (galerie d’art internationale contemporian) வந்துவிட்டது. க்ளன் சென்ற முறை செய்திருந்த பிரமாண்டமான பலூன் ஏற்பாடுகள் ஏதும் இம்முறை செய்யவில்லை. ” ஆந்த்ஹொபோமேட்ரி டு லெபோக் ப்ளு “(Anthropométries de l’époque bleue) என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. உள்ளே குமிழ்குமிழாய் எலும்புகள் கொண்ட வெள்ளிநிற நாற்காலிகளின் வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது.அது ஒரு ப்ளாக் டை ஈவென்ட்; முப்பதுக்கும் மேற்பட்டோர் இருக்கலாம். அதில் குறிப்பிடத்தக்கவர் ஜார்ஜ் மேத்யூ. நாற்காலியின் குமிழ்கள் சரியாக தண்டுவடத்தின் இருமருங்கிலும் கிச்சுகிச்சுமூட்டின.

“ஹோலா” என்று ஒரு பெண்குரல் என்னை நோக்கி வந்தது.

ப்ளாக் டை ஈவென்டிற்கென்றே உரித்தான கையில்லா வெளிர் மஞ்சள் கவுன்;

பாரிசைவிட்டு அந்நியமாக்கிய அடர்ந்த கருப்பு நிற கேசம்; அதை விட அந்நியமாக்கிய, பிரான்ஸ் யுவதிகள் மத்தியில் பிரசித்தி பெற்ற எலிசபெத் டைலரின் கர்லி பாப்பும், பி.பி யின் ஹாஃப் அப்பும் இல்லாமல் சாதாரண  வீட்டில் இட்ட கொண்டை; முதலை முட்டை வடிவ கருப்புக்கண்ணாடி; சிஸிலியாவின் ஒய்ட் வில்லோ இலை மூக்கு; சலாயின் அதரம்; இப்படி டா வின்சியின் மாதிரிகள்[3]

ஒவ்வொருவராய் புலப்படுவதற்குள்,

“நீங்க பிரெஞ்ச் தான?” லிசாவின் குரல் இப்படி இருக்கவும் வாய்ப்புண்டு.

“ஆமா பிரெஞ்சு தான்.”

“நான் எலினா. நீங்க ஈவோட நண்பரா ?” கைகுலுக்காமல் புன்னகை செய்யவது புதிய வழக்கம்.

“இல்ல,நான் நண்பன் இல்ல, சில வருசமா க்ளனோட பெய்ன்டிங்ஸ் எல்லாதையும் பாத்துகிட்டுவரேன்.”

“அப்ப ஈவோட ரசிகர்னு சொல்றீங்களா ?” கேள்வியில் உண்மையான ஆச்சர்யம் இருந்தது.

“ரசிகன்னு சொல்லமுடியாது…. பெய்ன்டிங்ஸ்ஸ பாத்துட்டுவரேன்…. எனக்கு இன்னும் க்ளனை முழுசா புரிஞ்சிக்கமுடியலனு தான் சொல்லணும்.” 

சலாயின் உதட்டுடன் அதே ஜானின் முறுவல்.

“நீங்க பெய்ன்டரா?”

“இல்ல, நான் ஈவோட நண்பி. சில நேரங்கள்ல ஈவோட வேலைசெஞ்சிருக்கேன்.”

“அப்ப உங்களுக்கு க்ளனோட நீல மோனோக்ரோம்ஸ் பத்தி தெரிஞ்சுருக்கனும்.”

“ம்ம்ம்… அதப் பத்தி எனக்கு  அவ்வளவா தெரியாது. ரோடார்ட்தான் அதுபத்தி அதிகமா பேசமுடியும்[4]… எனக்கு தெரிஞ்சவரைக்கும் ஈவுக்கு சின்ன வயசுல இருந்தே நீலம் மேல ஒரு ஈர்ப்பு, ஜப்பான் போனதுக்கப்புறம் அது ரொம்பவே அதிகமாயிடுச்சு..

அங்க இருக்குற ஜூடோவும் ஜென் தத்துவமும் ஈவுக்கு ரொம்ப பிடிக்கும்.. ஈவுக்கு இந்த உலகமே நீலம்தான்.. நீலம் டைமென்ஷன் இல்லாத கலர்னு ஈவ் சொல்வாரு. நீலத்துக்குள்ள நாம அப்படியே..ம்ம்ம்..அப்படியே டைவ் பண்ணலாம். நான் ஒரு ஸ்ப்ரிங்போர்டு டைவர். அதனால அத கொஞ்சம் அதிகமாவே உணர முடியுது. ஈவைப் பொறுத்தவரைக்கும் நீலம் ஒரு…. டிவைன்… டிவைனான…ம்ம்ம்…”

என்று இருகைகளையும் வெளியில் சுழற்றியவர் கடைசியாக அதே ஜானின் முறுவலுடன், “ரோடார்ட்டுக்கும் ரெஸ்தனிக்கும்தான் அதிகமா தெரியும்”[5] என்றார்.

“ இம்மெடிரியல் ஜோன்க்கு சில பேர்கிட்ட நல்ல வரவேற்பு இருக்குல?”[6]

“ ஆமா, சில பேர் அத ஏற்கனவே வாங்கிட்டாங்க… ஈவ் சொன்ன நிர்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டு “

‘ நிர்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டு’ என்ற இருவார்த்தைகள்  இரண்டு மில்லியன் வருட மனிதநாகரிகத்தை அநாயாசமாக துலாபாரத்தில் வீசியது.

“ ஒத்துக்கிட்டுனா? “

“ ஒத்துக்கிட்டுனா… ஈவ் சொன்ன நிர்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டுதான். இம்மெடிரியல் ஜோன்க்கான தங்கத்த கொடுத்து ரசீது வாங்கிக்கிட்டாங்க, அப்புறம் ரசீத எரிச்சாங்க, ஈவ் பாதி தங்கத்த செய்ன் நதியில போட்டாரு. அதுக்கு சாட்சி உண்டு, போட்டோ கூட எடுப்பாங்க.”

அடிமனத்திலிருந்து எம்பிய பலுங்கியை மேல்மனம் கவ்வுவதற்குள் அது நாவை எட்டிவிட்டது ” க்ளன் ரோஸிக்ரூஷன் தான?”[7]

அக்கேள்வியின் அவசியம் புரியாமல் நெரிந்த புருவம் கண்ணாடிக்குள் மறைவதற்குள்ளாகவே எலினா தலையை ஆட்டியபடியே சிரித்தார்; இம்முறை ஜானின் சிரிப்பல்ல. அந்த சிரிப்புதான் அதற்குப் பதில்.

சட்டென்று எங்கள் முன்பு சிலர் செல்லோவுடனும் வயலினுடனும் புல்லாங்குழலுடனும் அணிவகுத்தனர்.

“ எக்ஸ்கியூஸ் மி “ என்று எலினா எழுந்து சென்றார்; திரும்பவும் ஜானின் முறுவல்.

எலினா சென்றதிலிருந்து, அடிமனத்திலிருந்து எம்பிய பலுங்கிகளை மேல்மனம் கவ்வி முழுங்கி மீண்டும் மீண்டும் அதையே செறுமியது.வந்த அனைவரும் தங்களது வாத்தியங்களை தயார்செய்துகொள்கின்றனர். இதோ ஈவ் க்ளன் கூட வந்துவிட்டார். உயரத்தைப் பற்றி எதுவும் சொல்லமுடியாத சாதாரண உயரம்; கருப்பு டின்னர் கோட்; முன் வழுக்கையை சாவதானமாக மறைத்திருந்த கேசம்; வாதுமை அல்லாத உருண்டை கண்கள்; கண்ணிற்கும் புருவத்திற்கும் பாலமாக விளிம்பில் அடர்ந்திருந்த புருவமயிர்; ரஃபேலின் மூக்கு; அதே  ரஃபேல் போல, ரோமரேகையே இல்லாமல் மழிக்கப்பட்ட முகம்; இப்படி, மார்பில் தவழும் வெண்தாடியுடனும் மங்கிய கண்களுடனும்  ஒன்றிய புருவத்துடனும் கிரேக்க சிற்பமாய் மனத்துள் நின்றிருந்த க்ளனின் பிம்பம் சிதறுவதற்குள்ளாகவே க்ளன் ஒருமுறை வெளியில் கையை உயர்த்தி காற்றை வெட்டுகிறார். செல்லோ,வயலின், புல்லாங்குழல், ஓபோ, ஹோ(ர்)ன் எல்லாம் களரத்தொடங்குகின்றன. இசையைப்  பற்றி தெரிந்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை பிரான்சில் உள்ள எல்லாருக்கும் அது டி மேஜர் (D Major) என்பது பட்டவர்த்தனம். எங்கள் முன்பு வருகிற மூன்று யுவதிகளுள் ஒருவர் எலினா; கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இல்லை; அடையாளத்திற்கு முதலை முட்டை கருப்பு கண்ணாடி இருக்கிறது; கருப்பு கண்ணாடி மட்டும்தான் இருக்கிறது. அந்த அறை முழுக்க டி மேஜர் அல்லாத, இசையின் எந்த வரம்பிற்குள்ளும் பிடிபடாத நோட் ஒன்று பரவுகிறது. தரைக்கு பழிப்புக்காட்டிக்கொண்டிருந்த பலரின் ஒற்றை கால்கள் தரையை தொடுகின்றன. எங்கள் கண்முன்னே த்ரீ கிரேஸஸ்; போட்டிசெல்லியினுடையதோ  ரஃபேலினுடையதோ அல்லாது, கையில் பெயின்ட் வாளியுடன் த்ரீ கிரேஸஸ். பெயின்டை உடம்பில் தேய்க்கும் கைகளில் எந்த வித அவசரமும் விதிர்விதிர்ப்பும் இல்லை. எந்த வித சலனமுமின்றி இன்னமும் டி மேஜர் தொடர்கிறது. எலினா தன் முன்னுடல் அழுந்த கீழே படுத்துக்கொள்கிறார் இன்னொரு யுவதி அவரை சுழற்ற,பெயின்ட் ஊர்ந்து சென்ற பாம்பின் சுவடாய் திரையில் பதிகிறது. யுவதிகள் மூவரும் தூரிகையாய் அழுந்தி சுழல்கிறார்கள். முப்பது ஜோடி கண்கள் தங்களை துளைப்பது பற்றிய பிரக்ஞையில்லாத சுழற்சியில்,

மார்பின், உதரத்தின் ,தொடைகளின் தடயங்களை திரை, சாட்சியாய் தன்னுள் பொதித்து நிற்கிறது.[8] இன்னமும் சலனமின்றி தொடர்வது அதே டி மேஜர்தான். அந்த அறை  முழுக்க சி ஷார்ப்பின்(c #) சஞ்சாரம்; சுருள் சுருளாய் வளைந்து,வழிந்து,மோதி, உதிர்ந்து, எதனோடோ கலந்து, குழைந்து உடலுள் நுழையும் அவை மயிர்க்கால்களினூடே, நகக்கணுவினூடே பெதும்பிக் கசிகையில் நாசி சுவாசம் கூட டி மேஜர்; இமைச்சொடுக்கு  டிமேஜர்; ஆழத்து இருதயத்தொனி டி மேஜர்; கண்முன்னே, உலகத்து உயிர்கள் அனைத்தின் மரபணுக்களிலும் அச்சாணியாய் பதிந்த ஆதிநியதி ஒன்று வெக்கி முறிகிறது. விறைப்பு என்ன! கிளர்ச்சியின் நுனிச்சுவடுகூட தோன்றவில்லை. பெயின்ட் பூசிக்கொண்டால் நிர்வாணம், நிர்வாணம் இல்லையா? யுவதி, யுவதி இல்லையா? பிரதியாய் தூரிகையில் பதிந்திருப்பவற்றின் அசல் கண்ணில் படாமல் என்ன, படுகிறது. அசலின்  கண்களும் என் கண்களும் வெட்டுகிறபோதும் எந்த கூசல்களும் இல்லாதது தான் விசித்திரம். உடற்கூறுபாட்டு புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்து இன்றுவரை அதை ஸ்பரிசிக்கும் கைகளும், ரஃபேலின் காதலியை வெறித்த கண்களும் , ஜன்னல் வழியே குதிரைலாயத்தை பார்த்த மனமும் சலனத்தின் சாயல் கூட இல்லாமல் இருப்பது தான் விசித்திரம். எங்கே? உயிர்க்குலத்தின் ஆணிவேர் எங்கே? அவற்றின் மூலக்கனல் எங்கே? என் லிபிடோ எங்கே? அறையை வியாபித்திருந்த டி மேஜரின் மூலம், எந்த அறிவிப்பும் இன்றி நின்றது. தூரிகை அச்சுகளின் மூன்று  அசல்களும், தற்சமயம் யுவதிகள் பெண்கள் உயிரினங்கள் என்ற எந்த பெயரும் அவர்களை எட்டமுடியாது சுருள்கின்றன, அப்படியே உறைந்தனர். சூழ்ந்திருந்த டி மேஜரை, கீடோ கையின் எந்த மூலையிலும் வசப்படாத ஒரு நோட் மெல்ல மாற்றுகிறது. அது மௌனமா? இல்லை அது ஒரு நோட்; இசை; என் காதுகளுக்கு கேட்கிறது. சிக்காமல் சிறகடித்துப் பறந்த காலம் மீண்டும் என் வலத்தோளில் தஞ்சம் அடைகிறது;அப்படியே உறைகிறது. திரையில் அடர்ந்து உறைந்த மனிதஅச்சுகள் நிகழ்ந்த எல்லாவற்றுக்கும் சாட்சியாய் மீண்டும் காலம் உறையும்வரை அலைந்து கொண்டுதான் இருக்கும். அந்த அச்சுகள் நீலம் தானே!

ஆம் நீலம் தான். ஆனால் அந்த நீலம் தான் அந்த அந்த ….. நிதர்சனம். 

***


[1] சென் நதி = Seine river பாரிஸ் மாநகரூடே ஓடுகிற பெயர் பெற்ற நதி.

[2] https://4.bp.blogspot.com/-Oh2uKrH4lHs/T0q4hOColoI/AAAAAAAAA-k/pKwgqnhRGQs/s1600/violin-and-pitcher.jpg 

https://www.apollo-magazine.com/art-diary/cubism-pompidou/

https://www.wikiart.org/en/georges-braque

ஃப்ரெஞ்சு ஓவியர். க்யூபிஸம் என்ற ஓவியப் பாணியை பாப்லோ பிகாஸோவுடன் இணைந்து இயங்கித் துவக்கியவர். இருவரும் அருகருகே அமர்ந்து வரைந்த பல ஓவியங்கள் ஒரே போலத் தோற்றம் அளித்தன. பிற்காலத்தில் விளிம்புகளற்ற மனித உடல் சார்ந்த வரைதல் பாணியைப் பின்பற்றினார் என்றாலும் க்யூபிசத்தை இறுதி வரை கைவிடாமல் இருந்தார் என்று இந்தச் சுட்டியில் ஓவியத்துக்கான விக்கி தொகுப்பு சொல்கிறது.

[3] டா வின்சியின் மாதிரிகள் என்றால் டா வின்ஸி தன் ஓவியங்களை வரையப் பயன்படுத்திய பெண்கள் என்று பொருள். இவர்களைப் பற்றிய கட்டுரை ஒன்று இங்கே உள்ளது. https://www.dailyartmagazine.com/da-vincis-female-representation/

இதில் ஸிஸிலியா என்ற பெண்ணைப் பற்றிய குறிப்பு உள்ளதைக் காணலாம். அந்த ஓவியமும் கிட்டுகிறது. த கார்டியன் செய்தித்தாள், தன் இடது சாரி அணுகலுக்கேற்ற விதத்தில், டா வின்ஸி தற்பால் விழைவுள்ளவர், அவர் எப்படிப் பெண்களை இத்தனை வசீகரமாகப் பார்த்து வரைந்திருக்க முடியும் என்ற ஒரு பயனற்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் வலிந்து டா வின்ஸியைக் குறைத்துச் சித்திரிக்க முயன்றிருக்கிறது. அந்த சல்லித்தனத்தைத் தாண்டி நம்மால் சில தகவல்களை அந்தக் கட்டுரையில் பெற முடியும். அதற்காக இந்தச் சுட்டி: https://www.theguardian.com/artanddesign/2011/oct/19/leonardo-da-vinci-lusts

இந்த ‘மாதிரிகளில்’ ஒருவராக டா வின்ஸியின் கீழ் பயிற்சி பெற்றவரும், உதவியாளராகப் பணிபுரிந்தவருமான சலாய் என்பவர் உண்டு. அவர் டா வின்ஸியின் தற்பால் உறவுகளில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது. சலாய் பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே பார்க்க: https://www.theguardian.com/artanddesign/2011/oct/19/leonardo-da-vinci-lusts

மோனா லிஸா ஓவியத்தைத் தன் வாழ்நாள் பூராவும் தன்னுடனே எடுத்துக் கொண்டு சென்றிருந்த டா வின்ஸி, தான் இறக்கும்போது அந்த ஓவியத்தை சலாயிடம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இருவருக்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கலாம். சலாய் திருட்டுக் குணம் கொண்டவர் என்றும் சில குறிப்புகள் சுட்டுகின்றன.

[4] ஈவ் க்ளனின் மனைவி ரொடார்ட் (Rotraut Uecker) பிறகு குறுகிய காலத்துக்கு ரோடார்ட் க்ளன் ஆக இருந்தார். தான் எப்படி ஈவ் க்ளனைச் சந்திக்க நேர்ந்தது, பிறகு இருவருக்கும் இடையே நட்பும் காதலும் எப்படி வளர்ந்தன என்றும் ஈவ் க்ளனின் இயல்பு, கலைப் பார்வை ஆகியவற்றைப் பற்றி ரோடார்ட் பேசியுள்ள விடியோ ஒன்றை இங்கே காணலாம். https://www.youtube.com/watch?v=twteYAavt_8

இந்த காணொளியில் ரோடார்ட் ஈவ் க்ளன் என்று உச்சரிக்கிறார். ரோடார்ட் ஒரு ஜெர்மனியர். ஜெர்மன் மொழியில் Klein என்பதைக் க்ளன் என்று உச்சரிக்கிறார்கள்.

[5] பியர் ஹெஸ்தனி (Pierre Restany) 1955 இல் ஈவ் க்ளனைச் சந்திக்கிறார். முதல் சந்திப்பிலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். இருவரும் இணைந்து நூவோ ஹயாலிஸம் (Noveau Realisme) என்ற ஃப்ரெஞ்சு ஓவிய இயக்கத்தைத் துவக்குகிறார்கள்.

[6] Immaterial Zone என்ற ஓவியத்தை ஈவ் க்ளன் எப்படி பலருக்கு விற்றார், அதன் வினோத அம்சங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் படிக்கலாம்: https://brooklynrail.org/2010/09/artseen/yves-klein-with-the-void-full-powers   க்ளன் தன் மார்க்சியக் கருத்துகளுக்கு ஏற்ப, ஓவியத்தைப் பணத்தால் வாங்கிச் சேகரிப்பதை நிராகரித்தார் என்று கட்டுரை சொல்கிறது. ஆனால் அவருடைய இதர முரண்பட்ட செயல்களையும் சுட்டுகிறது.

[7] Rosicrucian என்பவர்கள் என்ன வகைக் குழுவினர் என்று இந்தக் குறிப்பு சொல்கிறது: https://www.thegreatcoursesdaily.com/the-origins-of-rosicrucianism/    ஆனால் இத்தகைய குறிப்புகள் அந்த இயக்கத்தினரின் கருத்துகளுக்கு நியாயம் செய்தவையா என்பதை நாம் ஆழப் படித்தால்தான் அறிய முடியும்.  உதாரணமாக இந்த இயக்கத்தினரின் தற்காலக் குழுக்களில் ஒன்றின் வலைத்தளம் இது. அதில் பல வேறு தகவல்கள் கிட்டுகின்றன: https://www.rosicrucian.org/

[8] Anthropométrie de l’époque bleue என்ற நிகழ்ச்சி பற்றி வலையில் தேடினால் நிறையத் தகவல் கிட்டும். இங்கே சிலவற்றைக் கொடுக்கிறோம்.

https://www.youtube.com/watch?v=gqLwA0yinWg  இந்த காணொளி கதையில் சொல்லப்படுகிற சம்பவத்தின் சில பகுதிகளைக் காட்டுகிறது.

https://www.youtube.com/watch?v=st_zWfczSu4  இந்தக் காணொளி ஈவ் க்ளனின் சில கருதுகோள்களை ஒற்றி நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் காட்டுகிறது.

https://www.youtube.com/watch?v=CZXqssN0M1U

https://www.youtube.com/watch?v=TBT4slkFbSU  இந்த இரு காணொளிகளும் கதையில் பேசப்படுகிற நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட கூட்டிசையைக் கேட்கக் கொடுக்கின்றன.

https://www.christies.com/Features/2010-march-yves-klein-anthropometrie-de-lepoque-bl-497-3.aspx  அந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு காணொளி. இது இரு குறைகள் கொண்டது. நீலத்தைப் பற்றிய நிகழ்ச்சியை இது கருப்பு வெளுப்புப் படமாகக் காட்டுகிறது. அங்கு ஒலிக்கும் இசையையும் இது கொடுக்கவில்லை.

https://www.sothebys.com/en/articles/the-radical-nudes-of-yves-kleins-anthropometries – அந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு கட்டுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.