தளும்பல்

இந்திரவேணி இறந்து போனபோது இவளுக்கு, பெண் ஸ்ரீபிரியாவுக்கு வயது பதினைந்து தாண்டவில்லை. பெரிய மனுஷி ஆகி யிருந்தாள். ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்படியே ஏக்கத்தில் திகைத்துப் போவாள் என கவலைப் பட்டார் விக்னேஸ்வரன். தன் வாழ்க்கை, எதிர்காலம் பற்றிய பயம் அவளுக்கு வந்திருக்கும், அழுது துவளுவாள், என்று நினைத்தார். ஆனால் ஸ்ரீபிரியா சமாளித்துக் கொண்டது ஆச்சர்யம். ரொம்ப சூட்சுமமான பெண் அவள். எல்லாவற்றையும் மௌனமாகத் தாங்கிக் கொண்டாள். தன் சிநேகிதிகளிடமும், மற்ற நெருக்கமானவர்களிடமும் இதுபற்றி அவள் எதுவும் பேசினாளா, கலந்துகொண்டாளா தெரியாது. அவள் கவலைப் படுவாள் என அப்பாவும், அப்பா கவலைப் படுவார் என்று மகளும் யோசித்ததாகத் தெரிந்தது. அவர்கள் ஒருவரிடம் ஒருவர் இதுபற்றி வெளிப்படையாகப் பேசிக் கொண்டதும் கிடையாது. எப்பவுமே ஸ்ரீபிரியாவிடம் ஒரு சிதறாத அமைதி இருக்கும். அது அம்மாவழி வந்திருக்கலாம். அப்பாவிடமும் இருந்தது அந்த நிதானம். ஒருவேளை அதுவும் அம்மாவழி, இந்திரவேணி மூலமாக வந்திருக்கலாம்! இந்திரவேணி பள்ளி ஆசிரியை. எல்லாவற்றிலும் ஒரு கச்சிதம் நேர்த்தி ஒழுங்கு, அவளிடம் இருந்தது. தன் மாணவர்களிடமும் அதை அவள் செயல்படுத்தவும் முறைப்படுத்தவும் தயங்கியதே இல்லை. அவள் மேற்பார்வையில் ஸ்ரீபிரியாவும் தன்னைப்போல அப்படி வளர்ந்திருக்கலாம்.

நியதிகளின் கண்டிப்பான ஒழுங்கு முதலில் சற்று சங்கடப் படுத்துவதாகவும் பிறகு போகப்போக தனக்கே பிடித்துப் போவதாகவும் அமைந்து விடுகிறது. பள்ளிக்கூடம் விட்டுவந்து மாலை ஏழு மணி முதல் ஒருமணி, ஒண்ணரை மணி நேரம் கண்டிப்பாக வீட்டில் ஸ்ரீபிரியா பாடம் படிக்க வேண்டும். பள்ளியில் தந்த ‘வீட்டுப்பாடங்கள்’ இருந்தால் செய்ய வேண்டும். பாடங்களை அவள் உரக்க வாசித்தால் சமையல் அறையில் குக்கர் பக்கத்தில் இருந்தோ, உள்ளறையில், துணிகளை மடித்து வைத்தபடியோ அம்மா கேட்டுக் கொண்டிருப்பாள். இந்திரவேணி வீட்டில் தன்னிடம் படிக்கிற மாணவர்ளுக்கு டியூஷன் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. வகுப்பில் சொல்லிக் கொடுத்துப் புரியவைக்க முடியாததையா வீட்டில், அதிகப்பணம் வாங்கிக் கொண்டு சொல்லித் தந்துவிட முடியும், என்பாள் இந்திரவேணி.

வீட்டில் அவள் தன் மகளை, அவளது படிப்பு சார்ந்து கவனம் எடுத்துக் கொண்டாள். மனப்பாடம் வேலைக்கு ஆகாது. புரிந்து வாசிக்க வேண்டும். ருசித்து வாசிக்க வேண்டும். கற்றுக் கொள்வது ஒரு ருசி. நல்ல கவிதைகளை, அருமையான இலக்கிய நயம் மிக்க எழுத்துக்களை வாசித்துப் பழக வேண்டும். அவற்றை உரக்க வாசிப்பது இன்னும் இனியது. அப்படி அவள், இந்திரவேணி தான் மாணவியாக வாசித்த அநேகப் பகுதிகள் இன்றும் அவளுக்கு நினைவு இருக்கிறது. சிறப்பான பகுதிகள், இன்னா நாற்பது, நீதிநெறி விளக்கம், கம்பராமாயணப் பாடல்ள், ஆசுகவி காளமேகம்… தானே மனதில் தங்கிவிடும். உரத்துப் படிப்பது மனதில் கவனக் குவிப்பு செய்யும். மௌனமாய் அமைதியாய் வாசித்தால் மனது அலைபாய ஆரம்பித்து விடும். புத்தக வரிகளின் மேல் கானல்நீர் போல நினைவுகள் அலைபுரட்டி வேறு திக்கில் படிக்கிற ஆளை இழுத்துச் செல்ல ஆரம்பித்து விடும், என அம்மா நினைத்தாள்.

இந்திரவேணி இறந்து போனாள். கர்ப்பப் பையில் கட்டி என்றார்கள். அறுவைச் சிகிச்சை என்றார்கள். அதிக இரத்தப் போக்கு என்றார்கள். சட்டென எல்லாம் பரபரப்பாகி, பாம்பு படம் எடுத்தாற் போல ஆடி, அடங்கிவிட்டது. ஊரில் அவளுக்குதான் எத்தனை நல்ல பெயர். தெருவில் அவள் குடையை விரித்து நடந்து போனால் எதிர்ப்படும் பையன்கள், பெண்கள் எல்லாரும் அவளுக்கு வணக்கம் சொல்வார்கள். கண்டிப்பான ஆசிரியை. அவளை எதிர்த்துப் பேச யாராலும் முடியாது. ஒரு சுதாரிப்பான கவனமான புன்னகை அவளிடம் இருந்தது. யாரையும் சற்று தள்ளியே நின்று பேச வைக்கும் புன்னகை அது. சுய கட்டுப்பாடான புன்னகை. அது எதிராளிடம் சுய கட்டுப்பாட்டை உணர்த்த வல்லதாய் இருந்தது தான் ஆச்சர்யம்.

விக்னேஸ்வரனுக்கு மனைவி இறந்தபோது ஒரு திகைப்பு ஏற்பட்டது உண்மைதான். வீட்டில் அவள் இருந்தவரை அவரது தேவைகள் முன்யூகிக்கப் பட்டு நிறைவேற்றப் பட்டன. காலை ஆறு மணிக்கு வெளியே போய் அவர் பால் வாங்கிவர, சமையல் கூடத்தில் பளிச்சென்று துலக்கப்பட்ட பாத்திரம் காத்திருந்தது. இரவில் சமையல் அறை மேடையைச் சுத்தம் செய்துவிட்டு, குளித்துவிட்டு படுக்க வந்தாள் இந்திரவேணி. அவரது உடைகளை பளிச்சென்று துவைத்து வெளியே கொடுத்து இஸ்திரி போட்டு எடுத்து வைத்திருப்பாள். நல்ல நாள் பொழுது என்றால் வீடே அதன் மெருகுடன் மிளிரும். பூஜையறையில் செம்பருத்திப் பூவோ, வேறு தங்கரளி, பவழமல்லி என்று வீட்டுப் பூக்களோ சாமி முன்னால் அர்ச்சனையாகி, மோட்ச பதவியாகிக் கிடக்கும். தசாங்கம் மணக்கும். மொத்த பிரபஞ்சமும் தன்னியல்பாய் ஓர் ஒழுங்கில் இயங்குகிறது, அந்த வீட்டிலும் அந்த இயல்பு நியதிகள் இருந்தன. அது இந்திரவேணியின் வீட்டின் ஒழுங்கு.

அம்மா இறந்ததும் ஸ்ரீபிரியா, ஆனால் கூடிய விரைவில் தன்னிலை மீண்டு விட்டதாகத்தான் அவருக்குத் தோன்றியது. அவளது பாடம் பற்றிய கவனம் சிதறவில்லை. அம்மா இல்லாவிட்டாலும் பள்ளிவிட்டு வீடு வந்து வீட்டுப்பாடங்கள் முடிப்பதிலோ, பாடங்கள் படிப்பதிலோ அவள் சுணக்கம் காட்டவில்லை. அப்பா வர தாமதம் ஆகலாம் என்றாலும், அவள் தன் வேலைகளில் அசிரத்தை காட்டவில்லை. அடுத்த தேர்வில் அவளது மதிப்பெண்கள் குறையவில்லை, எனப் பார்த்ததும் அப்பாவுக்குத் திருப்தி. பெரிய அளவில் ஆசுவாசம் வந்தது அவருக்கு.

இந்திரவேணி இல்லாத வெற்றிடத்தை அவர்கள் உணரவில்லையா? அப்படி அல்ல. இந்திரவேணி இல்லாததை அவர்கள் வெற்றிடமாக உணரவில்லை. அந்த வீட்டில் இந்திரவேணி காற்றாக நிரம்பி யிருக்கக் கூடும். அவளது ஆளுமை அங்கே இப்போது ஆதுரமாக, மௌன அரவணைப்பாக, பாதுகாப்பு அரணாக இருப்பதாகவே இருவரும், அப்பாவும் பெண்ணும் உணர்ந்திருக்கலாம்.

அவள் இறந்தபின் உறவினர்கள் விக்னேஸ்வரனிடம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார்கள். அப்படியொரு யோசனை அவருக்குத் தோன்றவே இல்லை. இந்திரவேணி இறந்தபோது, இந்தப் பெண்ணை என் கையில் ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டாயே, என்றுதான் அவர் துக்கப் பட்டார். இனி இவளுக்கு நான் மட்டும்தான். அப்பா மட்டும்தான் இவளுக்கு. தனியொரு ஆளாய் என்னால் இவளை வளர்த்துவிட முடியுமா? முடிய வேண்டும், என்பதே யோசனையாக இருந்தது. இதற்குள் அவசர அவசரமாக அவருக்கு இன்னொரு பெண்ணைப் பார்க்கிற உறவுக்காரர்களை நினைத்து அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. என்மேல் உள்ள அக்கறை இது, என அவர்கள் நினைப்பது வேடிக்கை தான். எனக்கு தன்யோசனை என்று இராதா? ஒரு பெண்பிள்ளை எனக்கு, பதினைந்து வயது. இதுவரை இவர்களிடம் கேட்டா நான் என் குடும்பத்தின் முடிவுகளை எடுத்தேன்? இப்போது கூட நான் இவர்களிடம் எனது எதிர்காலம், என் பெண் குழந்தையின் எதிர்காலம் என்று விவாதம் எதுவும் செய்யவில்லையே? பிறகு இவர்களாக… இது அதிகபட்சத் தலையீடு எனவே அவர் உணர்ந்தார். என்றாலும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார்.

நான் அவள் இழப்பை உணரவில்லையே, என்றார் அவர். தவிரவும் பெண் திகைத்து விடுவாள் என்று காரணம் காட்டி அநேகப் பேர் இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள் என்பதையும், அதுவே பெண்ணுக்கும் அப்பாவுக்கும் விரிசலை ஏற்படுத்தி விடும் என்பதையும் அவர் பார்த்தார்.

அம்மா இல்லாத பெண் என்பதால் அவர் அவளை இன்னும் கரிசனமாய் அக்கறையாய்க் கவனித்துக் கொள்ள வேண்டும், என நினைத்தார். ஸ்ரீபிரியா அருமையான பெண். ஓரளவு விவரம் தெரிந்த வயதுதான் இப்போது அவளுக்கு. தன் காரியங்களைப் பார்த்துக் கொள்ளத் தெரிந்தவள். அவளது உடைகளை அவளே வாஷிங் மிஷினில் துவைத்து எடுத்துக் கொள்கிறாள். மாத விலக்கு நாட்களைக் கூட அவள் சகஜப் பட்டிருந்தாள். காலையில் அவளை அவர் எழுப்ப வேண்டிய தேவை இருக்கவில்லை. படிக்காத நேரங்களில் என்று இல்லை. எப்பவுமே அவள் அருகே எஃப் எம் ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும். விடாமல் வாய் ஓயாமல் அதில் பேசிக்கொண்டே யிருக்கிறார்கள். கேளுங்க கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க, என்று பேசுகிறார்கள். அதில் எதாவது விளம்பரம், அல்லது பாடல், ரொம்ப சுவாரஸ்யமான பேட்டி என்ற நினைப்பில், காலைல பல் தேய்ச்ச உடனே நீங்க செய்கிற முதல் காரியம் என்ன?… என்பது போன்ற கேள்விகள். அதற்கும் பதில் சொல்ல ஆள் செட் அப் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ரேடியோ பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கும். ஸ்ரீபிரியா தன்பாட்டுக்கு தன்வேலையில் இருப்பாள்.

அவளது அறை நல்லொழுங்குடன் இருந்தது. உள் படுக்கையறையில்தான் அம்மாவும் பெண்ணும் படுத்துக் கொள்வார்கள். அவர் அலுவலக வேலைகளை வீட்டுக்கும் எடுத்துவந்து செய்கிறவராய் இருந்தார். அலுவலகத்துக்குப் போய் உட்கார்ந்த ஜோரில் அவருக்கு வேலை நெரித்தது. இரண்டு கை, பத்து விரல் போதாத வேலைகள் அவை. அநேக ஃபைல்களை அவர் வீட்டுக்கு எடுத்துவந்து பார்க்கவேண்டி யிருந்தது. வேலைகள் செய்ய அவர் அலுத்துக் கொண்டதே யில்லை. நதியின் அழகு ஓடிக்கொண்டே யிருப்பது. நகர்ந்துகொண்டே யிருப்பதே வாழ்க்கை, என நினைத்தார். 

சில நாட்களில் ஸ்ரீபிரியாவுக்குப் படிக்க பாடங்கள் நிறைய இருக்கும். மறுநாள் தேர்வு எதுவும் இருக்கலாம். அவள் உள்ளறையில் விளக்கு போட்டுக்கொண்டு இரவு நெடுநேரம் படித்துக் கொண்டிருப்பாள். பெண் விழித்திருக்கும் போது அவர் தூங்கப் போக மாட்டார். அவரும் இங்கே கூடத்தில் எதும் ஃபைல் பார்த்தபடி விழித்திருப்பார். ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்திவிட்டு ஸ்ரீபிரியா வெளியே வந்து அவர் பக்கத்தில் நிற்பாள். “சாப்பிடலாம்…” என்று எழுந்து வருவார் விக்னேஸ்வரன். 

வீட்டில் சமையலுக்கு மற்றும் பெருக்கித் துடைக்க, வீட்டு வேலைகளுக்கு என வீட்டோடு ஒரு வயதான மாமி வேலைக்கு இருந்தாள். சற்று கஷ்டப்பட்ட குடும்பம். இந்திரவேணி இருந்தால் பாத்திரம் கழுவ என்றுகூட வேலைக்கு ஆள் வைக்கவில்லை. அத்தனையும் தன் கைப்பட இருந்தால் தான் அவளுக்குத் திருப்தி. அவள் சுத்தம் இவளுக்கு, வேலைக்காரிக்கு எப்படி அமையும்? அதைப்பற்றி குறைப்பட ஏதும் இல்லை. காலை ஸ்ரீபிரியா சீக்கிரம் போக வேண்டும் என்றாலோ, மதியம் சீக்கிரம் வந்து விட்டாலோ, அல்லது அவருக்கு முன் ஸ்ரீபிரியா வீடு திரும்புகிற போது அவளை கவனித்துக் கொள்ள வீட்டில் ஆள் இருப்பது நல்லதுதான்.

இந்திரவேணி இருந்தால் கூட, அவள் வேறு பள்ளியில் ஆசிரியை, ஸ்ரீபிரியா வேறு பள்ளி என்ற அளவில் ஒரே சமயத்தில் இருவரும் வீடு வர வாய்க்காது. ஸ்ரீபிரியாவுக்கு அம்மா சாவி வைக்கும் இடம் தெரியும். அவளே திறந்து கொண்டு உள்ளே வந்து விடுவாள். அம்மாவுக்கு முன் ஸ்ரீபிரியா வீடு திரும்பும் சமயங்களில் சீருடை மாற்றிக் கொண்டு, அம்மாவுக்கு டிகாஷன் போட்டு வைப்பாள் ஸ்ரீபிரியா. அம்மா வீடு வந்து முகம் கழுவுமுன் காபி தயாராய் நீட்டுவாள். “எப்ப வந்தே? நீ எதாவது குடிச்சியா?” என்று விசாரித்தபடி அதை வாங்கிக் கொள்வாள் அம்மா.

நகர வாழ்க்கை நியதிக் கண்ணிகளால் ஆனது. காலம் யாருக்கும் காத்திருப்பது இல்லை. இழப்புகளைக் கணக்கெடுத்துக் கொண்டு யாரும் ஓய்ந்து கிடக்க வழி இல்லை. அது மேலும் காயங்களை அல்லது நஷ்டங்களைக் கொண்டுவந்து விடும். ஸ்ரீபிரியா மனதில் என்னமாதிரி எண்ணங்கள் ஓடின என அவருக்குத் தெரியாது. அவள் அம்மா வளர்ப்பு. அதில் அவர் தலையிட்டது இல்லை. அவளது மதிப்பெண்களைப் பார்த்து விட்டு பிராகிரஸ் கார்டில், கையெழுத்துப் போடுவார். அவளிடம் அவர் குறை கண்டுபிடிக்க எதும் இல்லை.

அம்மா இறந்து விட்டாள். அம்மா இறந்தபின் அம்மாவின் அந்த இறுக்கத்தை தானும் பெண்ணிடம் கைக்கொள்ள வேண்டுமா என நினைத்தார் விக்னேஸ்வரன். சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்று ஸ்ரீபிரியா வீட்டில் இருந்தாள். இருவருமாக எங்காவது கோவிலுக்கு, சினிமாவுக்கு என்று வெளியே போய் வந்தார்கள். சில சமயம் வெளியேயும் சாப்பிட்டார்கள். வெளியே சாப்பிடப் போனால் கூட திலகவதி, சமையல் மாமியையும் கூட்டிப் போனார்கள். திலகவதியுடன் சேர்ந்து மூணுபேராய் சீட்டு விளையாடினார்கள். ஸ்ரீபிரியா நன்றாக செஸ் ஆடினாள். பத்துக்கு நாலு ஆட்டங்கள் அவரையே வெற்றி கண்டாள். என்றாலும் விளையாட்டு என்றால் கூடவே இருக்கும் அந்த குதூகலம், அவள் அதைக் காட்டிக் கொண்டதே இல்லை. “வெரி குட்” என்று அப்பா புன்னகை செய்வார். “பான், அதை நகத்திட்டுப் போயி மந்திரி வாங்கிட்டியே. நான் அதை அத்தனை ஏற விட்டிருக்கக் கூடாது” என்று ஏதாவது அவளைப் பேசத் தூண்டுவார். தலையாட்டி அவளும் அதை ஏற்றுக் கொள்வாள். ஆனால் அதிகம் பேச மாட்டாள். வீட்டில் அத்தனை ரேடியோ கேட்கிறவள், எதும் பாடல் வந்தால் கூடப்பாடி அவர் பார்த்தது இல்லை. தனியே சுவாமி அறையில் விளக்கேற்றி வைத்து திலகவதியே நாலு சுலோகம் சொல்கிறாள். சாம்பிராணி மணத்துக் கிடந்தது சுவாமி அறை. இருக்கிற அவசரத்தில் காலை பள்ளி செல்லுமுள் ஸ்ரீபிரியா சுவாமி அறைக்குள் நுழைந்து ஓர் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஓடுவாள். அது அம்மா கத்துக் கொடுத்த பழக்கம். அது அம்மா அவள் நினைவில் தங்கிய மரியாதையாய் இருந்தது. 

அம்மா படத்தைக் கூடத்தில் பெரிதாய் மாட்டி வைப்பதை அவர் விரும்பவில்லை. அவளுக்கு, ஸ்ரீபிரியவுக்கு எப்படி இருக்கும் அது தெரியவில்லை. எது எப்படி யாயினும் ஸ்ரீபிரியா தன் உலகத்துக்குள் திளைக்கட்டும், ஏக்கமும் இழப்பும் சார்ந்த உள்சுழல் அவளில் வேண்டாம் என அப்பா நினைத்தார். அடிவண்டலாய் அம்மா அவர்களில் தங்கி யிருக்கிறாள். அது ஓர் உணர்வு நிலை. அது அப்படியே இருக்கலாம். ஆனால் கிளர்ச்சியாய் அது திகைக்க வைக்கிற அளவில் மேலே எழ வேண்டாம் என்று இருந்தது இருவருக்குமே. 

விடுமுறை நாள் என்றாலும் ஸ்ரீபிரியா கூடுதல் நேரம் தூங்குவது இல்லை. வீட்டின் முன் வளாகத்தில் நீள வாக்கில் இடம் இருந்தது. காம்பவுண்டு சுவரை ஒட்டி பூச்செடிகள் இருந்தன. காலையில் விக்னேஸ்வரன் அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவார். வாசலில் காரை சுத்தம் செய்ய என்றே குழாய் இணைப்பு கொடுத்திருந்தார். அதில் நீள தண்ணீர்க் குழாயை இணைத்து செடிகள் வரை இழுத்துப் போய் நீர் பாய்ச்சுவார். செடிகளின் இலைப்பச்சை நீர் எடுத்ததும் சற்று அழுத்தமான அடர்த்தி நிறம் காட்டுகின்றன.

காலையில் சில சமயம் அப்பாவும் பெண்ணும் அங்கே நடுவில் வலை கட்டி ‘ஷட்டில்’ விளையாடுவார்கள். அவளுக்கு நீள சூட் இருக்கிறது. அவர் அரை டிராயர் போட்டிருப்பார். காற்றில் மட்டை விஷ் விஷ் என சப்திக்க இரண்டு கேம் ஆடுவார்கள். தினசரி மாலைகளில் அப்பா அலுவலகம் விட்டு வந்ததும் ஸ்ரீபிரியா அவருக்கு தன் கையால் காபி போட்டுக் கொண்டுவந்து தருவாள். அப்பா அவளை கன்னத்தைக் காட்டச் சொல்லி ஒரு முத்தம் தந்துவிட்டு காபியை வாங்கிக் கொள்வார். “பள்ளிக்கூடம்லாம் எப்பிடி போயிட்டிருக்கு?” என்று சிறு கேள்விகள் கேட்பார். “ம்…” என தலையாட்டுவாள் ஸ்ரீபிரியா.

அம்மா வெளியே போய்க் காய்கனி வாங்கிவர என்று ஒரு இரு சக்கர வாகனம் வைத்திருந்தாள். ஸ்ரீபிரியா தன்னைப்போல அதைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தாள். லைசன்ஸ் எடுக்க வயதாகவில்லை.என்பதால் கிட்டத்தில் மாத்திரம் எங்காவது போய் வருவாள். பிரதான சாலைக்கு அவள் போகக் கூடாது, என்று அப்பா சொல்லி யிருந்தார். அந்த வயதில் ஒவ்வொரு பெண் என்னமாய் அந்த இருசக்கர வாகனத்தில் ‘ரவுண்டு’ அடிக்கிறார்கள். அது ஒரு ஸ்டைல், அது ஒரு பந்தா, அவர்களுக்கு. தலைமுடியின் சிறு முன் பகுதியைத் தனியே கன்னத்துப் பக்கம் சுருளாய்த் தொங்க விடுகிறார்கள். அடிக்கடி அதை காது பின்னே ஒதுக்கியபடியே பேசுகிறார்கள். அந்தப் பெண்களிடம் நெருங்கினாலே  குப்பென்று ஒரு சென்ட் வியூகம் வருகிறது. அவர்கள் நடையில் ஒரு துள்ளல் இருக்கிறது.

ஸ்ரீபிரியாவின் நிதானமும் பந்தா அற்ற எளிமையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிப் படிப்பு முடித்து அவளுக்கு வைஷ்ணவா கல்லூரியில் இடம் கிடைத்தது. நகரின் சற்று பரபரப்பான பகுதிதான். அவள் வயதுப்படிஇரண்டாவது வருடம் தான் அவளுக்கு லைசன்ஸ் கிடைக்கும். என்பதால் அவள் காத்திருந்து லைசன்ஸ் எடுத்து, இரு சக்கர வாகனத்தில் கல்லூரி செல்ல ஆரம்பித்தாள். கல்லூரியில் வாரம் ஒருநாள், திங்கள் கிழமைகள் புடவை கட்ட வேண்டும். அதுவரை அவள் பிரத்யேக ஆர்வத்துடன் புடவை கட்டிக் கொண்டது இல்லை. அவள் ‘பெரியவள்’ ஆன சடங்குகளின்போது அம்மா இருந்தாள். இந்திரவேணிதான் அவளுக்குப் புடவை கட்டி விட்டது. தோள்ப் பக்கம், இடுப்பில் என பின் குத்தி யிருந்தாலும் அது எந்நேரமும் நெகிழலாம் என்கிற பதட்டத்துடன் ஸ்ரீபிரியா சபைக்கு வந்தாற் போல இருந்தது. வேடிக்கையாய் இருந்தது அவளைப் பார்க்க.

அம்மாவின் புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஸ்ரீபிரியா கல்லூரி கிளம்பினாள். அதைப் பார்த்தபோது அவருக்கு ஓர் ஆனந்தத் திகைப்பாகி விட்டது. பெண்களுக்கு ஏற்ற உடை சேலைதான் போலும், என நினைத்துக் கொண்டார் விக்னேஸ்வரன். சுடிதாரில் சின்னப் பெண் போலத் தோற்றம் காட்டுகிற பெண்கள், புடவை கட்டினால் பெரிய பெண்ணாகிப் போகிறார்கள். நாம் இன்னும் இவர்களைச் சின்னப் பெண்ணாக நினைத்துக் கொண்டிருக்கிறோம், என்று தோன்றி விடுகிறது. அவர்களும் சூட்சும அளவில் உள் வளர்ச்சி அடைந்துதான் இருப்பார்கள். புடவை கட்டிய பெண் அப்பாவுக்கு அவள்கல்யாணத்தை ஞாபகப் படுத்தி விடுகிறாற் போல ஆகி விடுகிறது.

“நல்லாருக்காப்பா?” என்று கேட்டாள் ஸ்ரீபிரியா அவர் முகத்தைப் பார்த்து. அப்பா அவளைக் கிட்டே வரச் சொல்லி நெற்றி வகிட்டில் முத்தம் இட்டார். பெண் வளர்ந்ததும் அவளை அவர் ஸ்பரிசிப்பதையே தவிர்த்திருந்தார். அவளைத் தொடுவதில் சிறு விலக்கம் காட்டி வந்தார். அதுவும் அம்மா இல்லாத பிள்ளை. அவளுக்கு எவ்வகையிலும் அம்மா இல்லை, என்பதை நான் நினைவுபடுத்தி விடக்கூடாது, என்றிருந்தார். இப்போது அவளே அம்மாவை நினைவுபடுத்தி விட்டதைப் போல ஆகிவிட்டது.

கல்லூரி சார்ந்து ஒரு டூர் என்று ஸ்ரீபிரியா கிளம்பிப் போனாள். இந்நாட்களில் அவர் கார் வாங்கி யிருந்தார். அவள் டூரில் ஆர்வப்படவில்லை, என்றாலும் இப்படி வெளியுலகத்தை அவளது சிநேகிதிகளோடு அவள் அனுபவிக்கட்டும் என்று அவர்தான் அனுப்பி வைத்தார். அவள் கல்லூரியில் இருந்து பஸ் கிளம்பியது. மற்ற மாணவ மாணவிகள் ஏற்கனவே வந்து காத்திருந்தார்கள். அவர் அவளை தன் காரில் கொண்டுபோய்க் கல்லூரியில் விட்டபோது, அவள் காரில் இருந்து இறங்குவதைப் பார்த்த பெண்கள் எல்லாரும் ஒரு துள்ளலுடன் ‘ஹே!’ எனக் கொக்கரித்தார்கள்.

அது அந்த இளமையின் சந்தோஷப் புயல். அந்த வயசில் ஒத்தவயதினர் ஒன்றுசேர்ந்தால் அப்படியொரு காரணமற்ற குஷி, ஆனந்தம், சிரிப்பு… வெடிச்சிரிப்பு, உச்சந் தலைவரை ரத்தம் ஏறிய கிறுகிறுப்பான சிரிப்பு எல்லாரிடமும் பீரிட்டுக் கிளம்பும். ஸ்ரீபிரியா சிறிய வெட்கத்துடன் காரில் இருந்து இறங்கினாள். அந்தப் பெண்களில் ஒருத்தி அவரிடம் “அன்க்கிள் கவலைப் படாதீங்க. உங்க பெண்ணை நாங்க பாத்துக்கறோம்…” என்றாள். “நீ கம்னு இருடி. அவர் பயமே நீதான்” என இன்னொரு பெண் அவளை நோஸ் கட் பண்ணினாள். திரும்பவும் ஒரு குழாய்நீர்ப் பாய்ச்சலாய்ச் சிரிப்பு.

பள்ளி வயதில் அவளுக்கு சமையல்காரி திலகவதி தலைபின்னி விடுவாள். கல்லூரி வந்ததும் ஸ்ரீபிரியா தானே வாரிக் கொண்டாள். நெற்றிப் புருவ மத்தியில் சின்னதோ சின்னதாய்த் தெரிந்தும் தெரியாமலும் ஒரு பொட்டு. இந்த வயதுப் பெண்கள் பெரிதாய்ப் பொட்டு வைத்துக்கொள்ள வெட்கப் படுகிறார்கள். புடவை கட்டிய நாட்களில் நெற்றியில் மலையாள பாணியில் சந்தனம் வைத்துக் கொள்கிறாள். திலகவதி மாமி தமிழ்தான் பேசினாள் என்றாலும் அவளுக்கு நிறைய மலையாளப் பழக்கம் இருந்தது எப்படியோ. வேஷ்டி போல வெள்ளையில் வண்ண சரிகைக் கரை போட்ட மலையாள பாணிப் புடவை ஒன்றை அவள் வாங்கித் தந்து அதையும் ஸ்ரீபிரியா அணிந்து கல்லூரி போனாள். புடவையோ, சுடிதாரோ அதற்கேற்ற அளவில் மேட்சிங்காக காதில் கழுத்தில் தொங்கல்கள் வைத்திருந்தாள் ஸ்ரீபிரியா.

அந்தக் கல்லூரி கலாட்டா, அதற்குப் பின் அவர், நம் முன்னால் தான் ஸ்ரீபிரியா இப்படி உம்மென்று அதிகம் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் வளைய வருகிறாளோ என்று நினைத்தார். அந்தப் பெண்களின் கூட அவள் இன்னும் மடை திறந்த உற்சாகத்துடன் இருப்பாள் எனத் தோன்றியது. இதை எப்படி அறிந்து கொள்வது தெரியவில்லை. ஸ்ரீபிரியாவிடம் தனியே அலைபேசி, ஆன்டிராய்ட் ஃபோன் இருந்தது. வீட்டில் வெளியிடங்களில் அதை அவள் அடிக்கடி பயன்படுத்துகிறதாகத் தெரியவில்லை. மொபைல் இணைப்புடன் இணையம் வைத்திருக்கிறாள். சில பெண்கள் வீட்டில் இருக்கும் வரை சாதுக்களாக இருக்கும். வெளியே இறங்கியவுடன் யாரையாவது, ஆணோ பெண்ணோ அழைத்து பேச ஆரம்பித்து, பேசிக் கொண்டே நடந்து போகிறார்கள். நிறுத்தாமல் அப்படிப் பேச என்னதான் விஷயம் இருக்குமோ என அவருக்கு ஆச்சர்யமாய் இருக்கும்.

ஸ்ரீபிரியா தன் கைப் பைக்குள் மொபைலை வைத்திருப்பாள். அநேக சமயம் அப்பா அவளை அழைத்தால் அவள் பதில் சொல்வது இல்லை. பிறகு சிறிது கழித்து அவளே கூப்பிடுவாள். “இப்பதான் ஃபோனை எடுத்துப் பாத்தேம்ப்பா. கூப்ட்டீங்ளா?” என்பாள். அதேபோல அவள் சிநேகிதி என்றோ, ஆண் தோழன் யாரையாவதோ ஸ்ரீபிரியா வீட்டுக்கு அழைத்து வந்ததே இல்லை. யார் பிறந்தநாளுக்காவது ட்டூ வீலரில் போய் வருவாள். அவருக்கு முன்பே தகவல் சொல்லி விடுவாள். அல்லது திலகவதியிடம் சொல்லி விட்டுப் போவாள். என்றாலும் தனியே அவர்கள் அறியாமல் அவளுக்கு ரகசியம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அவள் வீட்டில் இல்லை என்றால் எஃப் எம் ரேடியோ ஒலிக்காது. அவள் வீட்டில் இல்லை என்பதற்கு அது ஓர் அடையாளம்.

அவள் மனதின் அந்தரங்கத்தை நான் அறியவில்லையோ என அவருக்குச் சில சமயம் கவலையாய் இருக்கும். என்ன இருந்தாலும் தன் அம்மாவிடம், பெண்ணுக்குப் பெண்ணாகப் பகிர முடிகிற விஷயங்களை அவரோடு அவள் எப்படிப் பகிர வாய்க்கும் என்று இருந்தது. உடல் சார்ந்த அவளது சிறு தொந்தரவுகள் என்றால் திலகவதியிடம் சொல்லி விடுவாள். அப்பா அவளை பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்வார். அது எப்பவாவது தான். அதற்கு மேல் அவளது மௌனம் பூரணமாகவே இருந்தது வீட்டில். இளமைக்கு அது அழகா, அது தெரியாது. குழந்தை இருக்கிற வீட்டில் எல்லாம் ஒழுங்காக இருக்காது. எல்லாமே கொட்டி கவிழ்த்தி கலைந்து கிடக்க வேண்டும். சுவரில் கிறுக்கல்கள் இருக்க வேண்டும். படுக்கை அருகே மேசையில் பால் தம்ளர் இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாத இந்த அதித ஒழுங்குகளே அவரைக் கவலை கொள்ளச் செய்தது.

ஸ்ரீபிரியா புடவை கட்டும் நேர்த்தி அபாரமாய் இருந்தது. காலை குளித்துவிட்டு வந்து ஒருமுறை கண்ணாடி முன் நின்று பௌடர் போட்டுக் கொண்டாள். தலைக்கு வாசனைத் தைலம் பூசிக் கொண்டாள். நீளமான கூந்தல் அவளுக்கு. அவள் அம்மாவை விட நீளம், என நினைத்துக் கொண்டார். அதன் பிறகு கல்லூரி விட்டு வீடு திரும்பி முகம் கழுவியபின் ஒருமுறை கண்ணாடி பார்ப்பாள். மற்றபடி தன் அழகு சார்ந்த பிரமைகள் அற்றவளாகத் தெரிந்தது. ஒவ்வொரு பெண் மாதம் ஒருமுறை அழகு நிலையம் சென்று திரும்புகிறது. ஒருதடவை போய்வந்தால் ஆயிரம், அதற்கு மேல் செலவு செய்கிறார்கள். இள வயது எந்த ஆணையும் தன் பின்னே அலைய வைக்க ஆவேசமும், குறைந்த பட்ச ஆர்வமும் கொண்டு திரிகிறார்கள்.  ஹா ஹா அந்த வயசுக்கு அது அழகாகவும் இருக்கிறது. குதிரைகளின் அழகுப் போட்டி போல. குதிரையில் அழகற்ற குதிரை ஏது?

கல்லூரி நாட்களை ஸ்ரீபிரியா கொண்டாடினாளா தெரியவில்லை. அம்மா உள்ள வீடுகளில் அம்மாவும் பெண்ணுமாய் கண்ணாடி என்று மாற்றி மாற்றி குத்தகைக்கு எடுப்பார்கள். அழகு நிலையம் இருவரும் சேர்ந்தே போய்வருவார்கள். ஒரே ஒரு நரை முடி கண்டாலும் அம்மாக்கள் கவலை காட்டுவார்கள். பெண்ணுடன் ஓர் மறைமுகப் போட்டி அவர்களுக்கு இருக்கிறாற் போலத் தெரியும். இங்கே பெண் என்று ஸ்ரீபிரியாவை அவர் அணுகி தேடிப் பார்த்ததே இல்லை என்று தோன்றியது. ஒருவேளை இதெல்லாம் என் கண்ணிலேயே படவில்லையோ என நினைத்துக் கொண்டார் விக்னேஸ்வரன்.

நல்ல கல்லூரி. ஸ்ரீபிரியா நன்றாகவும் படித்தாள். ‘டி’ வாங்கினாள். படிப்பு சார்ந்த கவனத்தை அவள் விடவே இல்லை. கல்லூரியில் டிகிரி முடித்ததும் கோடை விடுமுறையில், இந்தப் பாடங்களை இனி படிக்க வேண்டியது இல்லை, என்று ஆகிவிட்டதில் அவள் வருத்தம் அடைந்தாற் போல இருந்தது. அத்தனைக்கு அவள் படிக்க ஆர்வம் காட்டி யிருந்தாள். படிப்பில் உனக்கே ருசி வேண்டும், என்று அம்மா இந்திரவேணி சொன்னது அவளில் நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறது, என நினைத்து புன்னகை செய்து கொண்டார் விக்னேஸ்வரன்.

காம்பஸ் இன்டர்வியூ முடிந்து அவளுக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலையும் கிடைத்தது. மேலே படிக்கப் போகிறாயா, என அவர் கேட்டபோது, “இல்லப்பா. வேலை கிடைச்சிட்டது. அது எப்பிடி இருக்கு பாக்கலாம்” என்றாள். அவர் சரி, என்று தலையாட்டினார். அம்மா இறந்தபோது இவள் சின்னப் பெண். அந்த வயதிலேயே அவள் அப்பாவிடம் யோசனை கேட்டு நடந்து கொண்டது இல்லை. இப்போது வளர்ந்த பெரிய பெண். சொன்ன மாதிரி, இந்த வருடங்களில் எத்தனை நெடு நெடுவென்று உயர்ந்து நிற்கிறாள். தன் உடைகளைக் கடைகளில் தானே தேர்வு செய்கிறாள். இப்ப டிரெண்டிங் டிசைன்கள் அவளுக்குத் தெரிகின்றன. அந்த முன் மயிர் குதிரைத்தனம், அவளுக்கும் இருக்கிறது. ஒரு கற்றை சுருள் முடியை அடிக்கடி தன்னியல்பு போல காதுப் பக்கம் ஒதுக்கியபடி பேசுகிறாள்.

முதல்நாள் அவளை அலுவலகம் வரை கொண்டுவிட நினைத்தார். தேவை இல்லை என்றாள் அவள். அதை மறுக்கவில்லை அவர். தான் தன்னுலகம் என அவள் இயங்க வேண்டும். இனியும் அவளை அவர் கைதூக்கி விட வேண்டும், என பாவனை கொண்டாடுதல் முறை அல்ல, என அவள் நினைப்பது சரிதான். அண்ணா சாலையின் உயரக் கட்டடம் ஒன்றில் நான்காம் மாடியில் முழுவதும் குளிரூட்டப் பட்ட அவளது அலுவலகம். கண்ணாடிக் கதவை நோக்கி யார் போனாலும் கதவு தானே திறந்து கொண்டது. மகா அமைதியான வளாகம். அங்கே நமது காலணிகளே கூட சப்தம் அடக்கிக் கொள்கின்றன.

இனி முற்றிலும் சுதந்திரமானவள் அவள், என நினைத்து கொண்டார் விக்னேஸ்வரன். ஆகா, இவள்… இந்திரவேணி இல்லாமல் அவர் தன் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றி விட்டதாகத் தான் தோன்றியது. இப்போதெல்லாம் அவள் தினசரி புடவை கட்டிக் கொள்கிறாள். கஞ்சியிட்ட மொரமொரப்பான பருத்திப் புடவைகள். அவள் அம்மா பள்ளி ஆசிரியை என்ற அளவில் புடவைகளை விரும்பினாள். இவள் இந்த நவீன காலத்திலும் புடவையை விரும்பி அணிவது அவருக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

அவளை அவர் சரியாகப் புரிந்து கொண்டாரா? அம்மா இல்லாமல் அவள் வளர்ந்த இந்த ஐந்தாறு வருடங்களில் அவள் அவரிடம் எப்படி தன்னை வெளிப் படுத்திக் கொண்டாள்? அம்மாவிடம் அளவுக்கு அவரிடம் அவள் சிநேகம் பாராட்ட வாய்ப்பு இல்லைதான். அது அவருக்குப் புரிந்தது. அதைமீறி அவளை அதிகமாக நெருங்கிப்போகவும் அவர் சிரமப் பட்டார். ஆமாம், சிரமப் பட்டதாக நினைத்துக் கொண்டார். பெண்ணின் மிருதுவான உலகம், அழகான கனவுகள் மிகுந்த உலகம், அதை அழித்து கண்டிப்பான தன், அதாவது ஆணின் இயங்குதளத்தினை அவளுக்கு போதித்து விடுவோமோ என இதுநாள் வரை அவர் பயந்திருந்தார். 

ஸ்ரீபிரியா அவருக்கு கவலை தரக்கூடிய எந்தச் சூழலையும் அளிக்கவில்லை என்பது உண்மை. பத்து மணி அலுவலகம் அவளுக்கு. கல்லூரிக்கு என்றால் எட்டரைக்கே பரபரப்பாகக் கிளம்புவாள். இப்போது காலைகளில் நிறைய நேரம் இருந்தது. வாசல் பூச்செடிகளில் பூ பறித்து அவளே சுவாமி அறையில் விக்கிரங்களுக்குச் சாத்தினாள். இதுநாள் வரை அது திலகவதியின் வேலையாய் இருந்தது. இப்போது ஆங்கில நாவல்கள் வாசிக்க ஆரம்பித்திருந்தாள். வேறொரு ஒழுங்கில் அவள் தன்னை இறுத்திக் கொள்வதாய் நினைத்தார் விக்னேஸ்வரன்.

நாலைந்து மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடியே அவர். கிட்டே வந்து நின்றாள் ஸ்ரீபிரியா. “என்னம்மா?” என்று கேட்டார். அவர் பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள். “எதுவும் பேசணுமா?” என்று கேட்டார். வெட்கத்துடன் ஸ்ரீபிரியா தலையசைத்தாள். இந்நாட்களில் காருக்கு தனி ஷெட் போட்டு, வாசலுக்கு நேரே ஊஞ்சல் போட்டிருந்தார் அவர். போய் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார். “வா” என அவளைக் கூப்பிட்டு தன் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டார்.

“சொல்லும்மா.”

“பிரகாஷ்னு என் கூட வேல பாக்கற பையன்ப்பா…” என்றாள் நேரடியாக. அவர் புன்னகை செய்தார். “சொல்லு…” என்று அவளை ஊக்கப் படுத்தினார். “என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறார்ப்பா.” அவர் தலையாட்டினார். “நீ என்ன சொன்னே?” “எனக்கு என்ன தெரியும்ப்பா” என்றாள் ஸ்ரீபிரியா. “எங்க அப்பாட்ட கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டேன்ப்பா.”

ம், என தலையாட்டினார். “உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டார். “தெரிலப்பா” என்றாள் தலையைக் குனிந்து கொண்டே. இப்படியெல்லாம் பேசுவதே அவளுக்கு அழுகையை வரவழைத்து விட்டது. “பையனைப் பத்தி உனக்கு என்னென்ன தெரியும் சொல்லு… தெரிஞ்சதைச் சொல்லு” என்றார். “எதுவும் தெரியாதுப்பா” என்று அப்படியே அழுதபடி அவர் மார்பில் சாய்ந்தாள் ஸ்ரீபிரியா. அவர் அவளை முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு” என்றார் அப்பா. அவள் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். “நீ பயந்த மாதிரியான பொண்ணு இல்லை. எனக்கு அது தெரியும்” என்றவர், “உனக்கு அவனைப் பிடிக்கலைன்னா அப்பவே அவன்கிட்ட நோ சொல்லி யிருப்பே” என்றார். அவள் இடைமறிதது “தெரியலப்பா…” என்றாள். “ஃப்ராங்க்கா சொல்லணும்னா… நான் அவரை வெறுக்கல, அது சரிதான்” என்றாள். “ஆனால் அது போதுமா?” என்றாள். “போதாதுன்னு நினைக்கிறேன்” என முடித்தாள்.

“சரி” என்றார் அப்பா. “அவனை வரச் சொல்லேன். நான் அவன்கிட்ட பேசிப் பாக்கறேன்…” என்றார். ”சரிப்பா,” என்றாள் ஸ்ரீபிரியா. அன்றைக்கு அவர் நிறைய யோசித்தபடி இருந்தார். அவளும் அப்பாவைத் தொந்தரவு செய்யவில்லை. தன் அறைக்குப் போய் அந்தப் பையன் பிரகாஷிடம் தகவல் சொல்லி யிருக்கலாம். அவள் அறையை விட்டு வெளியே வந்தபோது “சாயந்தரமா வந்து பாக்கலாமான்னு கேக்கறான்ப்பா” என்றாள். 

“வரச் சொல்லு.”

மாலையில் பிரகாஷ் என்ற அந்தப் பையன் வந்தான். சுருள் சுருளான அடங்காத தலைமுடி. சட்டையை பேன்ட்டுக்குள் ‘இன்’ பண்ணி பெல்ட் அணிந்திருந்தான். கையில் மோதிரம் அணிந்திருந்தான். ஸ்ரீபிரியாதான் வாசல் வரை போய் அவனை அழைத்து வந்தாள். அவனே சற்று திகைப்பாகத் தான் இருந்தான். அவன் அருகில் அவளைப் பார்த்தார் விக்னேஸ்வரன். இருவரையும் ஜோடியாகப் பார்த்தார். அவள் அருகில் அவன் என்கிற அந்த அருகாமையில் அவள் தன் உடலே, சதைக் கதுப்புகளே குழைவதை உணர்ந்தாற் போலத் தெரிந்தது. ஓர் ஆணிடம் பெண் காணும் இணக்கம் அது. ஒருவரை ஒருவர் பிரியப் பட்டு விட்டால் உடல்தான் எத்தனை நெகிழ்வு காட்டி விடுகிறது. அவன் பார்வை அவளில் மந்திரம் போட்டாற் போல மாற்றங்களை விளைவிக்கிறது.

அவளில் இருந்த பெண்மையை அவன் தோண்டி யெடுத்து வீணை போலும் மீடடிக் கொண்டிருந்தாற் போல இருந்தது. அவர் யாரையும் காதலித்திருக்கவில்லை. காதல் என்பது இளமைக்குள் வரும் புது வெள்ளம் போல இருந்தது. அவள் சர்வ நிச்சயமாக அவனைக் காதலிப்பதாக அவர் உணர்ந்துகொண்டார். இவளா, என் பெண்ணா, அவளுக்குக் காதலிக்கவும் தெரியுமா, என்று இருந்தது. அவர்களில் முதலில் அவன் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தி யிருக்கலாம், என்றாலும் அதற்கு முன்பே அவர்களது உடல்களில் ஒரு ரசவாதம் நிகழ்ந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது.

“உட்காருப்பா…” என்று அவனுக்கு நாற்காலியைக் காட்டினார். “நீயும் உட்காரு” என்றார் ஸ்ரீபிரியாவிடம். “இல்லப்பா. நீங்க பேசிட்டிருங்க” என்றபடி ஸ்ரீபிரியா உள்ளே போய் விட்டாள். அப்பா முன்னால் அவனுடன் நிற்பது அவளுக்கு வெட்கமாய் இருந்தது போலும். பிரகாஷ் நல்ல பையனாய்த் தெரிந்தான். “உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன் சார்” என்று மெல்லிய குரலில் தன்னம்பிக்கையுடன் சொன்னான்.

அவனைப் பற்றிய விவரங்களை விசாரித்து விட்டு அவனை அனுப்பி வைத்தார். “எப்பிடி வந்தே பிரகாஷ்?” என்று கேட்டார். “கால் டாக்சி” என்றான் அவன்  “ஸ்ரீ?” என்று உள்ளே பார்த்துக் கூப்பிட்டார். அவர் கூப்பிட என்றே தயாராய் அவள் காத்திருந்தாற் போல “என்னப்பா?” என்று வந்தாள். “பிரகாஷை அவன் வீட்ல கொண்டுபோய் விட்டிர்றியா?” என்று கேட்டார். அவள் சற்று திகைப்புடன் அவரைப் பார்த்தாள். ”நீதான் இப்ப காரே ஓட்டறியே? கார்லயே போ” என்றார். “இல்ல சார்… நான் திரும்ப கால் டாக்சிலயே…” என அவன் எழுந்து கொண்டான். “போயிட்டு வா” என்றார் அப்பா அவளைப் பார்த்து.

கார் சாவியை எடுத்துக் கொண்டு ஸ்ரீபிரியா கிளம்பினாள். அவர்களுக்குத் தெரியாமல் அவர் சன்னல் வழியே அவர்கள் போவதைப் பார்த்தார். அதுவரை கட்டிப் போட்டாற் போல அவர்கள் இருந்த மாதிரியும் சட்டென்று கட்டுகள் அத்தனையும் தளர்ந்தாற் போலவும் அவர்கள் இருவரும் உணர்ந்தாற் போல இருந்தது. “காரை நானே ஓட்டவா?” என அவன் கேட்க அவள் வெட்கத்துடன் சாவிவை அவனிடம் தந்தாள். கல்லூரி மாணவிகளுடன் உலா போன அந்தக் கால நுரைத்த மகிழ்ச்சி, அதன் தொடர்ச்சியாகவே அவர்களின் உற்சாகம் தெரிந்தது. 

திலகவதி கார் வெளியே போனதும் காம்பவுண்டுக் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள். விக்னேஸ்வரன் தன் அறைக்குத் திரும்பினார். அதுவரை அவர் பார்த்த பெண் ஸ்ரீபிரியா அல்ல இப்போது, என்று தெரிந்தது. இத்தனைநாள், பருவம் வந்தது முதல் அவளுக்கும் ஆண்சார்ந்த குறுகுறுப்புகளும் கற்பனைகளும் லகரியும கிறுகிறுப்பும், கட்டாயம் இருந்திருக்கும். ஆனாலும்…

இதுநாள் வரை அவள் அப்பாவை ஒருபோதும் சங்கடப் படுத்தும் விதமாக நடந்துகொண்டு விடக்கூடாது என நினைத்திருக்கிறாள், என்று புரிந்தது. அவளுக்காக, தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை. ஆனால் அதை மதித்துப் புரிந்து கொண்டிருக்கிறாள் ஸ்ரீபிரியா என்று தோன்றியது. இத்தனை வருடங்களாக தான் மாத்திரம் கடைப்பிடித்து வந்த அந்த தன்னடக்கம் அல்லது புலனடக்கம், அது தியாகம் அல்லது விட்டுத் தருதல், அல்லது சுய கட்டுப்பாடு… எதோ ஒன்று.

அதைப் புரிந்து கொண்டு அந்த இள வயதில் ஸ்ரீபிரியா காட்டிய சுய அடக்கம் எத்தனை பெரிய விஷயம், என நினைக்க அழுகை வந்தது. 

பெருமிதத்தில் அவர் நெஞ்சு விம்மியது.

•••

One Reply to “தளும்பல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.