- 20xx- கதைகள்: முன்னுரை
- இருவேறு உலகங்கள்
- 2084: 1984+100
- 2015: சட்டமும் நியாயமும்
- 2010- மீண்டும் மால்தஸ்
- 2019- ஒரேயொரு டாலர்
- 2016 – எண்கள்
- பிரகாசமான எதிர்காலம்
- நிஜமான வேலை
- அவர் வழியே ஒரு தினுசு
- என்ன பொருத்தம்!
- மிகப்பெரிய அதிசயம்
- அன்புள்ள அன்னைக்கு
- வேலைக்கு ஆள் தேவை
- கோழிக் குஞ்சுகள்
- விலைக்குமேல் விலை
- எதிர்வளர்ச்சி

“விஜயாவும் நானும் இரண்டாவது ஊசியும் போட்டு ஒரு மாசத்துக்கு மேல ஆயிரிச்சு.”
“அதைக் கொண்டாட..”
“ஷேரன்-ஆனந்தின் வெட்டிங் டேக்குப் போனோம்.”
“எத்தனையாவது?”
“பதினொண்ணு.”
“ரொம்ப சந்தோஷம்.”
முதல் பையன் ஆனந்தின் திருமண வாழ்க்கை நல்லபடியாகப் போகவேண்டுமே என்கிற கவலை மணிவாசகத்துக்கு ஆரம்பத்தில் இருந்தது. சிலகாலம் போனதும் அப்படி நினைத்தது மகா தப்பு என்று மன்னிப்புக்கோரும் குரலில் பலமுறை சொல்லி இருக்கிறார்.
‘ஒண்ணு, ஆனந்த் ஏழெட்டு வயசு வரைக்கும் இந்தியால வளர்ந்தவன். முழுக்க முழுக்க அமெரிக்க வாழ்க்கைக்கு பழகிட்டான்னு சொல்றதுக்கு இல்ல. இரண்டு, ஷேரன் ஸ்திரமா இல்லாத குடும்பத்தில் வளர்ந்த ஒரு வெள்ளைப்பெண். மூன்று, பள்ளிக்கூடம் முடிச்சதுமே அவசரக் கல்யாணம் பண்ணிண்டு கணவனின் கொடுமைக்கு ஆளானவ. நான்கு, கல்யாணத்தின்போது அவளுக்கு ஏற்கனவே மூணு வயதில் ஒரு பெண், ஆனந்த் சம்பந்தப்படாத இன்னொரு குழந்தை அவள் வயிற்றில். இந்த உறவு நீடிச்சு இருக்கணுமே என்கிற கவலை இருக்கத்தான் செய்யும்’ என்று சாமி சமாதானம் சொல்வது உண்டு.
“கடந்த ஒரு வருஷம் அவங்களையும் பேரப்பெண்களையும் வீட்டுக்கு வெளியே பார்த்துப் பேசினது தான். விருந்து அவங்க வீட்டுக்குள்ளயே நடந்தது. நாங்க, ஆனந்தின் பாஸ், ஷேரனின் ஒண்ணுவிட்ட தங்கை..”
“செந்தில்?”
“அவன் வரல. நாங்க தான் அவனைப் போய் பார்க்கறதா இருக்கோம். இரண்டரை வருஷத்துக்கு முந்தி பார்த்தது” என்று ஏக்கத்துடன் முடித்தார்.
“விடியோ கால் இருந்தாலும் நேர்ல பார்த்துப் பேசற மாதிரி ஆகுமா?”
“அதிலும் பேரனோட ஒண்ணு ரெண்டு வார்த்தை தான்.”
“ஏன்?”
“தாத்தா கூட பேசுடான்னு ஐ-ஃபோனைக் கொடுத்தா, அதை எடுத்துக்கிட்டு விளையாடப் போயிருவான்.”
“சரி, நல்லபடியா போயிட்டு வாங்க!”
மணிவாசகம் தன் தந்தையைவிட தாத்தாவைத்தான் அதிகம் நினைத்திருக்கிறார். இத்தனைக்கும் தாத்தா ஆண்டுக்கு இரண்டு மூன்று மாதங்கள் சிறுவன் மணியுடன் இருந்தால் அதிகம். ஒருவேளை அதுவே ஒட்டுதலுக்குக் காரணமாக இருக்கலாம். தாத்தாவுக்கும் தன் பெயரில் (சின்னமணி) ஒரு பங்கு அவனிடம் இருந்ததால் பேரன் மேல் தனிப்பிரியம். அப்பாவுக்கு மாநில அரசில் சாதாரண கணக்கர் வேலை. மணியின் இரண்டு அக்காக்களையும் இரண்டு தங்கைகளையும் பற்றிய கவலை அவர் முகத்தில் எப்போதும். ‘பள்ளிக்கூடம் இன்னைக்கு எப்படி போச்சு?’ ‘தீபாவளிக்கு என்ன துணி எடுக்கலாம்?’ என்று யாரையும் கேட்டது இல்லை. குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியதும் கிடையாது. தாத்தா அவற்றைச் செய்தது மட்டுமில்லை, அவர்களுக்குச் சமமாகத் தரையில் அமர்ந்து சீட்டு, தாயக்கட்டம் விளையாடுவார். போட்டி போடுவார். அவர் சிரிப்பே தனி பாஷை. ‘எங்கே இந்தக் காயை வெட்டு பார்க்கலாம்!’ என்று சவால் சிரிப்பு. ‘என் கிட்ட இஸ்பேட்டு இல்லன்னு தெரியும் இல்ல, இந்தா வாங்கிக் கட்டிக்க!’ என்று கேலியாக நமுட்டுச் சிரிப்பு. ஆட்டத்தில் தோற்கும்போது, ‘த்ஸ! வாழ்க்கையில கஷ்டங்களைச் சகிச்சிக்கத்தான் வேணும்’ என்று கைவிட்ட புன்னகை. ஒரு தடவை தன் இரண்டு பழக்காய்களை அடுத்தடுத்து வெட்டியதற்காக சின்ன அக்காவின் முதுகில் மணி ஓங்கிக் குத்துவிட்டான். அவள் உடனே ஆட்டத்தில் இருந்து எழுந்துபோய் விட்டாள். அதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்கும்வரை தாத்தா அவனுடன் பேசவில்லை. “இங்க பார்! ஆண்பிள்ளைக்கு எல்லாத்தையும்விடக் கோழைத்தனமான காரியம் பெண்களை அடிக்கிறது.” விஜயாவுக்கும் அவருக்கும் எத்தனையோ சொற்போர். ஆனால் அது ஒருபோதும் வார்த்தைகளை மீறியது கிடையாது.
தாத்தாவைப் பற்றி நினைத்ததும் முதலில் வரும் நிகழ்வு இது. சகோதரர்களுடன் அவருக்கு ஒரு நிலத்தகராறு. வழக்கு இரண்டு வருடங்கள் இழுத்தடித்தது. அது ஒருவழியாகத் தீர்மானம் ஆனதும் கிராமத்தில் இருந்து அவர்களைப் பார்க்கவந்தார்.
வீட்டு வாசலில் அதிசயமாக ஒரு டாக்ஸி வந்து நிற்கிறது. அதன் சத்தம் கேட்டு மணி வாசலுக்கு ஓடிவருகிறான். முதலில் அப்பாவும் ட்ரைவரும் இறங்கி பின்னாலிருந்து பெட்டிகளை இறக்குகிறார்கள். பிறகு தாத்தாவும் பாட்டியும். தாத்தாவின் நரைத்த மீசையும் தலைமயிரும் கறுப்பு முகத்தினால் பளிச்சென்று தெரிகின்றன.
“யார்றா இது?”
“நம்ம மணி.”
“அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா?”
“ஆமா, ஏழு தொடங்கிரிச்சு இல்ல.”
தாத்தா அவனைத் தூக்கிப் பிடித்து கீழே இறக்குகிறார்.
உள்ளே வந்து வீட்டின் ஒரேயொரு நாற்காலியில் அமர்கிறார்.
வீட்டுப்பாடத்தை மணி தாத்தாவிடம் காட்டுகிறான்.
கண்ணாடி மாட்டிக்கொண்டு அவர் பார்க்கிறார்.
“இங்க்லீஷ்ல இருக்குது. நீயே படிச்சு சொல், பார்க்கலாம்!”
“ஆப்பில், வின்டோ..”
“பெரிய பெரிய வார்த்தை. இங்கே பார்! நான் அஞ்சாவதுக்கு மேல தாண்டல. உன் அப்பங்காரன் பள்ளிக்கூடம் தான் முடிச்சான். நீ ஒருபடி மேல போகணும்.”
“பி.ஏ.” என்கிறாள் சின்ன அக்கா.
“அதுக்கு மேல.”
“எம்.ஏ.” இது பெரிய அக்கா.
“அதுக்கும் மேல.”
என்ன இருக்கிறது? என்று மணி யோசிப்பதற்குள்,
“ஐஏஎஸ். கலெக்டராகி காரில் சுத்தணும்.”
“இட்டிலிக்கு இலை வைக்கட்டுமா? மாமா!” என்று அம்மா குரல் கொடுக்கிறாள்.
“ஒரு பத்து நிமிஷம் போகட்டும்!”
“தாத்தா! கொல்லையை வந்து பாக்கறீங்களா?”
“அங்கே புதுசா என்னடா இருக்கு?”
தாத்தாவின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறான். வீட்டிற்குப் பின்னால் காலியாக இருந்த மனை கொல்லையாக மாறியிருந்தது.
“பட்டணத்தில இத்தினி பெரிய நிலம். அதிருஷ்டம் தான்.”
“கோழி வளர்க்கிறோம்” என்று தாத்தாவின் கவனத்தைத் திருப்புகிறான்.
வேலியை ஒட்டி இரும்பு வலை. மனிதர்களைப் பார்த்ததும் சேவலும் கோழிகளும் சத்தமாகக் கொக்கரிக்கின்றன.
“கோழிதான் முட்டை போடும், சேவல் போடாது, தாத்தா!”
“அப்படியா? இவன் அப்பனுக்கு இல்ல, பாட்டனுக்கே பாடம்சொல்றான்.”
அது கேலியான புகழ்ச்சி என்று மணிக்குத் தெரிகிறது.
கோழிக்குஞ்சுகளை எண்ணுகிறான்.
வீட்டுக்குள் ஓடிவந்து,
“அம்மா! நேத்து ஆறு இருந்துச்சு. இன்னைக்கு நாலுதான்.”
“ரெண்டு பறந்து போயிருக்கும். திரும்பிவந்திரும்.” அதற்கு விளக்கமாக,
“மாமா! மதியத்துக்கு உங்களுக்குப் பிடிச்ச கோழி-”
“சொல்லாதே! சொல்லாதே! மணி அதை ஒதுக்கி வச்சிரப்போறான்.”
பாட்டி மணியின் பாதி உயரத்துக்கு ஒரு சணல்பையைத் தாத்தாவிடம் நீட்டுகிறாள். அதை வாங்கிய அவர்,
“உனக்கு என்ன எடுத்துட்டு வந்திருக்கோம்னு சொல்லு பாப்போம்!”
“ம்ம், சாவி கொடுக்கற கார் பொம்மை.”
“பெரியவன் ஆனதும் நீ நிஜமான காரே வாங்கி ஓட்டப்போறே. என்னாத்துக்கு விளையாட்டு கார்?”
“தெரியல தாத்தா!”
“பச்சை வேர்க்கடலை.”
“அம்மா அவிப்பாங்களே.”
“அதே தான்.”
“எனக்கு உசிரு தாத்தா!”
அடுத்துவந்த பத்துப்பன்னிரண்டு ஆண்டுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை. வந்தால் பத்துப் பதினைந்து நாள். கோடையில் ஒரு மாதம். அவனுக்கு ஏழெட்டு சீட்டு விளையாட்டுகள் கற்றுக்கொடுத்தார். இத்தனூண்டு சீட்டுக்கட்டில் இத்தனை ஆட்டங்களா என மணிக்கு ஆச்சரியம்.
இரவு சாப்பிட்டதும்,
“கதை சொல்லுங்க, தாத்தா!”
எல்லாமே அவர் வாழ்க்கையில் எப்போதோ நடந்தவை.
“காலையில என் ஐயாவோட நானும் எழுந்திருச்சிருவேன். ரெண்டு அண்ணன்களும் நாங்க வயல்காட்டிலேர்ந்து திரும்பி வர்றப்ப சோம்பல் முறிப்பாங்க..”
முக்கியமாக அவற்றின் படிப்பினை. அதற்காக, ‘பேராசைப்படக் கூடாது!’ ‘காரியத்தில கவனமா இருக்கணும்!’ என்று கதைகளை முடிக்க மாட்டார். அந்த அறிவுரைகள் எங்கோ ஒளிந்திருக்கும். மணிக்கு அவை வாழ்க்கையின் இக்கட்டான சமயங்களில் கைகொடுத்து இருக்கின்றன.
சிறுவன் என்றாலும் அப்போதே ஒரு விருப்பம், தீர்மானம். அவர் திரித்துக்கொடுத்த நீளமான மாயக்கயிற்றை அவன் இன்னும் கொஞ்சம் நார் சேர்த்துப் பின்னப்போகிறான். தான் தாத்தா ஆகும்போது அவரைப்போலவே..
தாத்தாவின் கடமைகளை ஓரளவு நிறைவேற்றியதாக மணிவாசகம் திருப்திப்பட்டார். முக்கிய காரணம் ஆனந்தின் இரண்டு பெண்கள். ‘மேனி’ தாத்தா கதைப்புத்தகங்கள் படித்தபோது ஆர்வத்துடன் கேட்டார்கள், அவருடன் சேர்ந்து பாட்டியின் சமையலை அனுபவித்தார்கள், அவரிடம் கணக்கு அறிவியல் பாடங்கள் கற்றுக்கொண்டார்கள், சமீபத்தில் கணினி வழியாக. அவரும் வயலட்டின் கால்பந்து ஆட்டங்களுக்குத் தவறாமல் சென்று அவளை ஊக்குவித்து.. வீனஸை நீச்சல் குளத்துக்கு அழைத்துப்போய், அவள் க்ளோரின் போக தலைக்குக் குளித்துவிட்டு வரும்வரையில் காத்திருந்து.. ஆனந்தும் ஷேரனும் தனியாகப் பயணம் போனபோது எல்லாம் பெண்கள் தங்களை அப்பாவும் அம்மாவும் அலட்சியம் செய்துவிட்டதாக நினைக்காதபடி அவர்கள் வீட்டிலே தங்கி..
விஜயாவுக்குத் தான் முழுத்திருப்தி இல்லை.
‘என்ன இருந்தாலும் நம்ம பரம்பரையில வந்த குழந்தைகள் மாதிரி ஆகுமா?’ என்ற வெளிப்படையாகச் சொல்லாத குறை.
அவள் ஆசைப்பட்டபடி செந்தில் தேடிப்பிடித்த மனைவி, இந்திய அதுவும் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்த ஸ்வஸ்திகா. பரம்பரையை வளர்க்க ஆண் குழந்தை ஸ்வரங்.
“இரண்டு வாரம் வேலைக்குப் போனோம், சமைச்சோம், சாப்பிட்டோம். நீ தான் சுவாரசியமா எதாவது சொல்லணும்!” என்றான் சாமி கதைகேட்கும் ஆர்வத்தில்.
“சான் ஹொஸே போனது வந்தது எல்லாம் கச்சிதமா இருந்தது. ஆனா..”
சிறுவயதில் செந்திலைப்பற்றிப் பேசியபோது எல்லாம் மணிவாசகத்தின் குரலில் பெருமை தொனிக்கும். அண்மையில் அவன் பேச்சு வரும்போது, ‘ஆனா..’ அடிக்கடி விழுகிறது. அவன் விளையாட்டுப் போட்டிகளில் பந்தயம் கட்டுவதை முழுநேரத் தொழிலாகச் செய்ததில் அவருக்கு உடன்பாடு இல்லை.
“எப்ப பார், மூணு பேரும் தனித்தனி அறையில அடைஞ்சு கிடக்கறாங்க. சமைக்கிறதுக்கு காலையில ஒருத்தி, மாலையில இன்னொருத்தன். ரெண்டு பேரும் சுமாரா செய்யறாங்க. ஆனா சாப்பிடும்போது இவங்க கவனம் அதன்மேல இருக்கறமாதிரி தெரியல.”
“கோவிட்னால நம்ம வாழ்க்கையில பல மாற்றங்கள். முக்கியமா வீட்டிலேர்ந்து வேலை செய்யறது. நாம லாப் பிரச்சினைகளை அங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு நிம்மதியா வந்துடுவோம். இப்ப வேலைக்கும் வீட்டுக்கும் இடைவெளி இல்லாம போயிடுத்து.”
“அதுக்காக செந்திலும் ஸ்வஸ்திகாவும் தனித்தனியா தூங்கணுமா?”
“வேலையின் இறுக்கம் தணியாதபோது..” ‘உடலின் தாகம் எப்படி தணியும்?’ என்ற மறைமுகக் கேள்வி.
“அப்ப வேலையே எதுக்கு?”
“அதை நாம எப்படி சொல்ல முடியும்? சரி, ஸ்வரங்?”
“முதல்ல எங்களை அவன் கண்டுக்கவே இல்ல. அப்புறமும் அதிகம் பேசல.”
“ஒரு வருஷம் வெளிலே போகாம வீட்டிலியே பாடம் படிச்சதால இருக்கலாம்.”
வீனஸும் வயலட்டும் அவர்கள் வீட்டில் மணிவாசகம் நுழைந்ததுமே போட்டி போட்டு செய்திகள் சொல்வார்கள்.
‘வீனஸ் என்ன செய்தாள் தெரியுமா? எங்களுக்கு மாம் நாலு துண்டு பீட்ஸா வைத்திருந்தாள். இந்த குண்டம்மா மூணை முழுங்கிட்டாள், எனக்கு ஒண்ணுதான் மிச்சம்.’
‘தாத்தா! இவள் மட்டும் என்ன ஒழுங்கு? நான் மத்தியானம் தூங்கினபோது அம்மாவோட சேர்ந்து ‘லயன்கிங்’ பார்த்திருக்கிறாள். என்னை எழுப்ப வேணாம்?’
‘உன்னை தூக்கத்திலேர்ந்து எழுப்பினா நீ நாள்முழுக்க எரிஞ்சு விழுவே.’
புதிதாக எதாவது செய்திருந்தால் எடுத்துவந்து காட்டுவார்கள்.
‘தாத்தா! நான் பனானா மஃபின் செய்தேன்!’ வீனஸ் நீட்டிய தட்டில் காகிதக்கோப்பை கொள்ளாமல் எழுந்துநின்ற இனிப்பு.
‘நான் அப்பாவை பிங்பாங்கில் தோற்கடித்தேனே.’ வயலட்டின் உயர்த்திய கையில் ஐந்து டாலர் நோட்டு.
ஸ்வரங்குக்கு தாத்தாவிடம் பேசவும் செய்ததைக் காட்டவும் ஒன்றும் இல்லை.
“ஒரு சுலபமான சீட்டு விளையாடலாம்னு அவனை உட்கார வச்சா அதைக் கத்துக்கறதுல துளிக்கூட இஷ்டம் இல்ல.”
“அவங்களுக்கு எல்லாமே இன்ஸ்டன்ட். இன்ஸ்டக்ராம், இன்ஸ்டகார்ட்.. நம்ம ஆமை வேகம் அவங்களுக்கு ஒத்து வராது.”
“எந்நேரமும் கையில ஸ்க்ரீன். ஒரு நாள் சான்டா டெரஸா பார்க் போயிருந்தோம். நடக்கறதுக்கு ஒரு முனகல். அங்கே இயற்கை அழகு எதையும் ரசிச்கல, ஃபோன்ல விளையாடிட்டே வந்தான்.”
“என்ன செய்யறது? இப்பல்லாம் பிறக்கும்போதே குழந்தைக கையில ஒரு செல்.”
“நாங்க போனப்ப, அவனுக்கு ஏழாவது பிறந்த நாள். ‘சக்கி-சிக்கன்’ல பார்டி வச்சிருந்தாங்க.”
“நான் நாலைந்து தடவை ‘சக்கி-சிக்கன்’ போயிருக்கேன். குழந்தைகள் விடியோ கேம்ஸ் ஆடறதை வேடிக்கை பார்க்கறதில நேரம் போயிடும்.”
“அதைவிட எனக்கு வேறொரு யோசனை.”
“அது என்னது?”
“உனக்கே தெரியும், விஜயா சுத்த சைவம். சிக்கன் தொடக்கூட மாட்டா. நான் இந்தியால நிறைய சாப்பிட்டிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு நானும் அதை நிறுத்திட்டேன். இத்தனை வருஷம் கழிச்சு மத்தவங்களோட சேர்ந்து சாப்பிட வேண்டி ஆயிரிச்சு. அதில ஒரு வாசனை இல்ல. ருசின்னு சொல்ல ஒண்ணுமில்ல. மெஷின்ல ஒரு பக்கம் தீவனம் போட்டு இன்னொரு பக்கம் எடுத்த மாதிரி இருந்தது. ஒரு நிஜமான பறவையின் பாகம் என்கிற உணர்ச்சியே வரல. அதை இந்த பிள்ளைங்கள்ளாம் ஆனந்தமா தின்னுதுங்க.”
“நீ ஒரு காலத்தில சுதந்திரமா திரிஞ்ச கோழிக்குஞ்சுகளை சாப்பிட்டு இருக்கே. அவங்க நாக்குக்குத் தெரிஞ்சது ‘சக்கி-சிக்கன்’ ஒண்ணு தான்.”
“உனக்கு பிடிச்சதை சொல்லு நான் செஞ்சு தரேன்னு விஜயா ரெண்டுமூணு வாட்டி சொல்லிச்சு.”
“அவனுக்கு பிடிச்ச சாப்பாடு பிளாஸ்டிக்ல சுத்திவர்றதா இருக்கும்.”
“கிளம்பற வரைக்கும் அவன் எங்க மேல ஒட்டுதலே காட்டல. மொத்தமா பார்க்கும்போது என் பேரனான்னு சந்தேகமா இருக்குது.”
இரண்டு பேத்திகளுடன் பல ஆண்டுகளைப் பாசத்துடன் செவலவழித்த மணிவாசகத்துக்கு பேரனிடம் ஏமாற்றம். சாமி தன் புரோகிதர் தாத்தாவை நினைத்தான். அவனுக்குப் பத்து வயது வரை அவர் இருந்தார். அவர் விருப்பப்படி அவன் அவரிடம் மந்திரம் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவரை அலட்சியம் செய்ததும் இல்லை. அவருக்கு நாடார் கடையில் இருந்து பொடி மட்டை வாங்கிவந்து, பொடி எழுத்துகளில் அச்சிட்ட புராணக்கதைகளை வாசித்திருக்கிறான். அவர் காலத்திற்கும் அவன் காலத்திற்கும் வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் சமீபத்திய மாற்றங்களுக்குத் தீவிரம் அதிகம். அவன் காலத்தில் வீட்டிற்குள் நுழைந்த வாரப்பத்திரிகைகளும் வானொலி நிகழ்ச்சிகளும் அவன் தாத்தா காலத்தில் இல்லாதவை. இப்போது ஸ்வரங்கின் உடல் வீட்டிற்குள் இருந்தாலும் அவன் மூளையை ஆட்டிவைக்க எங்கிருந்தோ வரும் வலிவான சூத்திரக்கயிறுகள்… அப்படியென்றால்…
“இப்போதைய ‘சக்கி-சிக்கன்’ அந்தக்காலத்து கோழிக்குஞ்சு மாதிரி இல்லன்னு சொன்னே இல்லையா, அதுக்கு சயின்டிஃபிக் காரணம் இருக்கு.”
எதற்கு இந்த ஆராய்ச்சி என்று மணிவாசகத்துக்குப் புரியவில்லை.
“நீ இந்தியாவில சாப்பிட்ட கோழிக்குஞ்சுக்கும் இப்ப சூபர்மார்கெட்ல விக்கற சிக்கனுக்கும் எந்தவித உறவும் இல்ல. புது சிக்கனின் எலும்பு வித்தியாசம். அதுக்கு தீராத பசி. எப்பவும் தீனி தின்னுண்டே இருக்கும். நீ சின்ன வயசில பார்த்த கோழிக்குஞ்சைவிட இது கிட்டத்தட்ட ஐந்தாறு மடங்கு பெரிசு. ஆறு வாரத்துக்கு மேல அதனோட எலும்பால உடம்பைத் தாங்க முடியாது. கருணை காட்டி அதன் வாழ்க்கையை அப்ப முடிச்சிடுவாங்க.”
“ஆயிரக்கணக்கான பறவைகளை தொழிற்சாலையில லாபகரமா வளர்க்கறதுக்காக அதன் ஜீன்ஸ்ல பல மாறுதல்களைப் புகுத்தி யிருப்பாங்க. அதனால ஒரிஜினல் பறவைக்கும் இப்ப ரெஸ்டாரன்ட்ல சாப்பிடற சிக்கனுக்கும் சம்பந்தம் இல்லங்கறது புரியுது.”
“நம்ம பாரம்பரியத்தை வளர்க்க ஜீன்ஸ் மட்டுமில்ல, பண்பாடும் முக்கியம்.”
“அதாவது.. கோழிக்குஞ்சுகள் மாதிரி.. என் பண்பாடு வேற. ஸ்வரங்கின் பண்பாடு வேற. இரண்டுக்கும் எக்கச்சக்க வித்தியாசம். எங்களுக்குள்ள தொடர்ச்சி இல்லன்னு சொல்றே.”
அந்த எண்ணத்தில் தான் அவன் அண்மையில் படித்த அறிவியல் கட்டுரையின் பேச்சை சாமி எடுத்தான். ஆனால்,
“சில ஐடியாக்கள் மனசில உதயம் ஆகும்போது, ‘ஆகா! என்ன அற்புதமான இதுவரை யாருமே யோசிக்காத தியரி’ன்னு தோணும். அதை எழுதும்போதோ இல்ல சொல்லும்போதோ, ‘ம்ம் ஏதோ கொஞ்சம் ஒரிஜினாலிடி இருக்கு’ன்னு சமாதானம் வரும். முழுக்க சொல்லி முடிச்சதும், ‘சே! என்ன அபத்தம், ஏன் நேரத்தை விணடிச்சோம்’னு விரக்தியா இருக்கும். இப்ப நான் சொன்னது அந்த ரகத்தில சேர்த்தி. ஊர்லேர்ந்து திரும்பிவந்ததும் துணி தோய்க்கிறது, சாமான் எடுத்துவைக்கிறதுன்னு உனக்கு நிறைய வேலை இருக்கும். நீ போய் அதையெல்லாம் கவனி!”
அந்தக் காரியங்களை முடிப்பதற்குள் மணிவாசகம் விமான நிலையம் போக நேரிட்டது. செந்தில் குடும்பத்தை வரவேற்று மகனையும் மருமகளையும் அங்கிருந்தே வெர்மான்ட்டுக்கு வழியனுப்பி பேரனைத் தன்னுடன் அழைத்துவர வேண்டும்.
திடீரென உருவான அத்திட்டத்தை ஸ்வஸ்திகா அறிவித்தபோது,
“ஸ்வரங்குக்கு சம்மதமா?”
“அவன் மாட்டேன்னு சொல்லல.”
ஐந்த நாட்கள் அவனை எப்படி மகிழ்விப்பது? பிளாஸ்டிக் உறையில் சுற்றிய வேக-உணவு வகைகளும், ஐ-ஃபோனும், வீட்டின் மாடியில் தனியாக ஒரு அறையும் இருக்கும்போது.. அது காலத்தின் ஓட்டத்தை எதிர்க்காமல் அதன் போக்கில் மிதக்கும் சோம்பேறித்தனம். சரி, சுறுசுறுப்பாக.. நெடுநேர யோசனை ஸ்வரங்கின் ஒட்டாமைக்கு சாமி கொடுத்த விளக்கத்தில் முடிந்தது.
அவர் வேலை செய்த காலத்தில் செல்களை வளர்க்க ஒரு அறிவியல் உதவியாளர், கரோலைன். ஊரைவிட்டுத் தள்ளி அவளுக்கு ஒரு கோழிப்பண்ணை. அங்கே புல்வெளியில் அலைந்து திரிந்த நாட்டுவகைப் பறவைகளின் முட்டைகளை சக-ஊழியர்களுக்கு விற்பது வழக்கம். வெள்ளிக்கிழமை குழிகள் வைத்த அட்டைப்பெட்டிகளைக் கொடுத்தால் திங்கள் அவை நிரம்பி வரும். கடையில் வாங்குவதைவிட இரண்டு மடங்கு விலையென்றாலும் அவற்றுக்கு தனி ருசி. விஜயா தொடாமல் அவருக்கும் பையன்கள் பேத்திகளுக்கும் ஆம்லெட்.
“ஹாய் கரோலைன்! நான் மேனி. ஞாபகம் இருக்கிறதா?”
“ஓ! உன்னை மறந்தாலும் உன் மனைவி சமைத்த பூரி குருமாவை மறக்கமுடியுமா?”
உரையாடல் அவர் விரும்பிய திசையில் கால்வைத்துவிட்டது.
“என் நேரம் பேத்திகளுடன். உன் ஓய்வுக்காலம்?”
“கோழிகளுடன். முட்டைகளை சந்தையில் விற்பது பொழுதுபோக்கு.”
“கோழிக்குஞ்சுகள்?”
“அவற்றை விற்பதில் ஏகப்பட்ட கெடுபிடிகள். அதனால், தெரிந்தவர்கள் கேட்டால் மட்டுமே.”
“தெரிந்தவன் நான், கேட்கிறேன்.”
“ஷேரன்! எனக்கொரு உதவி!”
“சொல் டாட்!”
“ஸ்வரங் மட்டும் ஐந்து நாள் தங்க வருகிறான். விமான நிலையத்தில் இருந்து உன் இடத்துக்கு அவனை அழைத்து வருவேன். அப்போது நீ..”
விமானம் அரைமணி தாமதமாக வந்ததால் சந்திப்பும் பிரிவும் அதிக நேரம் நீடிக்கவில்லை.
ஸ்வரங் அப்பாவையும் அம்மாவையும் கட்டிக்கொண்டு, ‘பை!’ சொன்னான்.
“ஹாவ் அ குட் டைம், ஸ்வரங்!”
‘கொடுத்தை சாப்பிடணும், சரியான நேரத்துக்குத் தூங்கணும், ஒரு மணிக்கு மேல விடியோ விளையாடாதே’ ஏற்கனவே அவன் காதில் பலமுறை விழுந்திருக்கும்.
“யூ டூ, மாம் அன் டாட்!”
மணிவாசகம் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
செந்திலும் ஸ்வஸ்திகாவும் மறுபடி பாதுகாப்பு சோதனை நோக்கிப்போக அவர் பேரனுடன் எதிர்ப்பக்கம் நடந்தார்.
காரில் ஏறியதும்,
“உனக்கு பசியா?”
“ஐ’ம் ஃபைன்.”
அந்த வாசகத்தை அடிக்கடி கேட்க நேரிடும் எனத் தன்னைத் தயார்செய்தார்.
அவன் கையில் இருந்த அலைபேசியில் இருந்து விநோத ஓசைகள். அவற்றையும் தான்.
ஆனந்த்-ஷேரன் இல்லத்தில் சாப்பாட்டு மேஜை. ஒரு பக்கம் ஷேரனும் மணிவாசகமும். இன்னொரு பக்கம் பேத்திகளுக்கு நடுவில் பேரன்.
எல்லாருடைய தட்டிலும் ஷேரன் ஒரு பஜ்ஜி வைத்தாள்.
“இது என்ன?” என்று ஸ்வரங் சந்தேகத்துடன் கேட்டான்.
“சிக்கன் பஜ்ஜி. ஃப்ரைட் சிக்கன் மாதிரி தான்.”
அதன் சிவப்பு நிறத்தைப் பார்த்து,
“காரமாக இருக்குமா?”
“நாங்களே சாப்பிடுகிறோம்” என்று வீனஸ் அதை நறுக்கென்று கடித்தாள்.
“சாப்பிட்டுப்பார்! நன்றாக இருக்கும்.”
ஒரு துண்டு கடித்து, அதிகாலையில் எழுந்து ஆறுமணி விமானத்தில் வந்த பசிக்களைப்பிலோ, இல்லை சற்று காரமாக இருந்தாலும் அதன் வித்தியாசமான ருசியிலோ மீதியை வேகமாகத் தின்றான்.
“இது மாதிரி சிக்கன் நான் சாப்பிட்டதே இல்லை.”
மணிவாசகமும் ஷேரனும் புன்னகை பரிமாறிக்கொண்டார்கள். கரோலைன் வளர்த்த கோழிக்குஞ்சுகளும் ‘சக்கி-சிக்கனு’ம் வேறு வேறு இனம். அதைக் கண்டுபிடித்துவிட்டான்.
“டேக் மோர்!”
அவள் சொன்னதற்காக இன்னும் நான்கு.
“தாங்க்ஸ்! ஆன்ட் ஷேரன்!”
“யு’ர் வெல்கம்.”
அன்றைய சாப்பாட்டில் ஸ்வரங்குக்குப் பிடிக்காதது என்று, வேகவைத்த ப்ராகோலி உட்பட, எதுவும் இல்லை. அத்துடன் அவன் கவனம் வேறு எதிலும் சிதறவும் இல்லை.
“வீனஸ்! வயலட்! ஸ்வரங்குக்கு அவன் அறையைக் காட்டுங்கள்!”
வயலட் தாத்தாவிடம் இருந்து காரின் சாவியை வாங்கி அவன் பெட்டியை இழுத்துவந்தாள்.
மாமிசம் கலவாத உணவுப்பொருட்களை விஜயாவுக்காக ஷேரன் தனியே வைத்தாள். மணிவாசகம் சாப்பிட்ட தட்டுகளை எடுக்கப்போனார்.
கைகளை உதறிக்கொண்டே வீனஸ் ஓடிவந்தாள். முகத்தில் செய்தி சொல்லும் ஆர்வம்.
“க்ராம்பா! உன் திருமணத்தேதியைச் சொல்லேன்!”
“காஷ்! அது நடந்து எவ்வளவோ வருஷமாச்சே.”
வயலட்டும் ஸ்வரங்கும் நிதானமாக வந்து அவர்களுடன் சேர்ந்துகொள்ள..
“நான் சொல்றேன்” என்றாள் ஷேரன். “09-09-09.”
ஸ்வரங் விரல்களை மடக்கி நிமிர்த்தி, யோசித்து, “அது ஒரு புதன்கிழமை” என்றான்.
“க்ரேட், ஸ்வரங்!”
மணிவாசகத்துக்கு ஞாபகம் வந்தது. “1976 ஏப்ரல் 22.”
“அன்று வியாழக்கிழமை, தாத்தா!”
மணிவாசகம் பேரனின் விரித்த கைமேல் தன் கையைப் பதித்தார்.
“எந்த தேதி சொன்னாலும் உடனே என்ன கிழமைன்னு ஸ்வரங் சொல்லிடறான்” என்று வயலட்டுக்கு ஒரே பெருமை.
“சரி, அப்பா பாட்டியுடன் வரும்வரையில் கீழே போய் விளையாடுங்கள்!”
“உனக்கு பிங்பாங் ஆடத்தெரியுமா?” என்றாள் வீனஸ்.
“நோ.”
“நான் கற்றுக்கொடுக்கிறேன்.”
“பூல்?” என்றாள் மற்றவள். (பில்லியர்ட்ஸ் போல பந்துகளை கோலால் அடித்துக் குழியில் தள்ளும் விளையாட்டு)
அதற்கும், “நோ.”
“அதை நான் கற்றுத்தருவேன்.”
குழந்தைகளின் காலடியோசைகள் தேய்ந்ததும்,
“டாட்! நான் ஒரு ஜோசியம் சொல்லட்டுமா?”
“சொல்லேன்!”
“செந்திலும் ஸ்வஸ்திகாவும் தனிமையை ஐந்து நாட்களுக்கும் அதிகமாக அனுபவிக்கப் போகிறார்கள்.”
“அப்படி நடந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.”
ஷேரன் அதன் விளக்கத்திற்குக் காத்திருந்தாள்.
****
C.E. Bennet et al. The broiler chicken as a signal of a human reconfigured biosphere. Royal Society Open Science, 5, 12 December 2018.