முகத்துவார நதி

கடலோர நிலத்துக்காரனான அவன் காகேசம் கிராமத்தை நோக்கி பயணம் புறப்பட்டிருந்தான்.  அது அவனுடைய படுவூர் கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவிலிருந்தது. கடற்காற்று லேசாக மணலை கிளப்பிக் கொண்டு வீசியதில் கண்களை சுருக்கிக் கொண்டு நடந்தான். அணிந்திருந்த மேல்சட்டையில் காற்று புகுந்துக் கொண்டு உடலை உப்பலாக்கி காட்டியது. காய்ந்த புன்னை இலைகளையும் கொய்யா இலைகளையும் அடுப்பெரிப்பதற்காக சேகரித்துக் கொண்டிருந்த பெண்கள் இவனை கண்டதும் “எப்போ வந்தே கங்காதர்?” என்றனர் புருவம் உயர்த்தி.

வானில் முகிற்கூட்டம் கவிழ்ந்தும் கலைவதுமாக இருந்த நாளொன்றில் அவன் படுவூரிலிருந்து கிளம்பியிருந்தான்.  அப்போது வயலில் கதிர்கள் முற்றத் தொடங்கியிருந்தன. அறுவடைக்கு பிறகான நல்ல நாளொன்றில் காகேசத்தை சேர்ந்த கங்கம்மாவுடன் அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பே அவன் வீட்டை விட்டு வெளியேறுவதை அறியாமல் அவனுடைய அக்கா கிருஷ்ணவேணி எதிரிலிருக்கும் குளத்தில் பானையை துலக்கியெடுத்து வந்து வழக்கம்போல அடுப்பில் உலைநீரை ஏற்றியிருந்தாள். அவளை தவிர அவனுக்கு பார்வதி, கோமதி என்று மேலும் இரண்டு சகோதரிகள் இருந்தனர். அதில் கோமதி அவனுக்கு இளையவள். இவர்கள் நால்வரை தவிர சீதம்மா, கண்டமய்யா தம்பதிகளுக்கு ராகவன் என்ற மூத்தமகனுமிருந்தான். அவனுக்கு திருமணமாகி மனைவி பூஜ்ஜியா இரண்டாவது குழந்தையை சுமந்துக் கொண்டிருந்தாள். சகோதரிகள் மூவரும் கூட திருமணமாகி வெளியில் சென்றவர்கள்தான். பிறகு ஒன்றன்பின் ஒருவராக மூவருமே சுவற்றிலடித்த பந்தாக வீடு திரும்பி விட்டனர். 

கிளம்பி விட்டானெனினும் செல்லுமிடம் குறித்து கங்காதரனுக்கு எந்த தெளிவான திட்டமுமில்லை. அவனுக்கு தெரிந்த ஒரே வெளியூர் நண்பனான நிமன்பிரசாத்துக்கு கடிதம் எழுதியபோது அவன், லட்சுமணபுரியில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு செல்லவிருப்பதாகவும்  வேண்டுமானால் அங்கு சந்திக்கலாமென்றும் பதிலெழுதியிருந்தான். நிமன் பீகாரை சேர்ந்தவன். படகுத்துறைகளுக்கு வந்து செல்லும் படகொன்றின் விற்பனை முகவராக நதி முகத்துவாரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் வண்டலைபோல படுவூருக்கு வந்திருந்தான். அங்கு தேங்காய், புன்னை எண்ணெய், மா, பலா, பூசணி, வெள்ளரிக்காய்கள் என பருவத்துக்கேற்ப வியாபாரம் நடக்கும். வெயில் காயும் நாட்களில் சகோதரிகள் மூவரும் மரவல்லிக்கிழங்குகளை வடாமாக்கியும் கடல் இழுத்துச் சென்று மீண்டும் கரையொதுக்கும் தென்னைமரங்களின் மட்டைகளை சீவி உருவாக்கும் துடைப்பக்கட்டுகளையும் கொட்டைகளை உடைத்து பருப்பாக்கிய முந்திரிகளையும் விற்பனை செய்ய வரும் வகையில் கங்காதரனுக்கு பழக்கமாகியவன். படகுத்துறைகளில்  பொருட்கள் வந்து சேரும்வரை படுவூரில் தங்க நேரிட்டவகையில் அவனுக்கு நெருக்கமாகியும் போனான். நண்பன் என்றாலும் வயதில் மூத்தவனாக இருப்பதால் அண்ணா என்றழைப்பான் கங்காதரன். 

தோட்டத்தில் படர்ந்திருந்த கொடியிலிருந்து பூசணிக்காயை அறுத்து எடுத்து வைத்திருந்தாள் பார்வதி. சமையல் பொறுப்பு கிருஷ்ணவேணியை சார்ந்தது. பூசணிக்காயும் தக்காளியும் துவரைப்பருப்போடு சேர்த்து தடிமனான குழம்பு செய்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தாள். சீதம்மா பூசணிக்காயை அரிவதற்காக அரிவாள்மனையோடு சமையலறையின் கதவோரமாக அமர்ந்திருந்தார். அவர் மனமோ ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சுவரோரமாக சார்த்தி வைக்கப்பட்டிருந்த பானைகளிலிருக்கும் ஊறுகாய்கள் கல்யாணத்திற்கு போதுமானவையா என்று யோசித்துக் கொண்டிருந்தது. முன்னரே கணக்கிட்டு வைத்துக் கொண்டால் போதாததற்கு அக்கம்பக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம். பருவம் தப்பிய காலத்தில் மாங்காய்கள் கிடைப்பது அரிது. கல்யாணத்துக்கான காய்கறிகளை விளைவிப்பதற்காக பெண்கள் மூவரும் ஆற்று வண்டலை அள்ளிக் கொண்டு வந்து தோட்டத்திலிட்டு வளமாக்கினர். 

நிமனை லட்சுமணபுரியில் காங்கிரஸ் மாநாட்டுப்பந்தலில் சந்தித்தபோது மேடையில் அம்பிகாசரண் மஜும்தார் தலைமையுரையாற்றி்க் கொண்டிருந்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டிருந்த அந்த கூட்டத்தின் மேடையில் பளபளப்பான முகங்களுக்கு மத்தியில் சற்றும் ஒவ்வாதவராக அமர்ந்திருந்த அவரை கங்காதரனுக்கு சுட்டிக்காட்டி “இந்தாளு தென்னாப்பிரிக்க அரசாங்கத்தையே ஒரு ஆட்டு ஆட்டீட்டு வந்துட்டாருல்ல…”என்றான். ஊருராக அலைபவன் என்பதால் நிறைய மொழிகளும் அரசியலும் அறிந்தவன். 

“யாரு? அந்தாளா?” என்றான் கங்காதரன். ஊரை விடுத்திருந்ததால் ஏற்பட்ட விடுதலையுணர்வு மனதில் சற்று தெளிவுண்டாக்கியிருந்தது. எங்கோ இடுக்கிலிருந்து தப்பி வந்த வெயில் மேடையிலிருந்த அந்த மனிதரின் முகத்தில் வெளிச்சமாக படிய அவர் லேசாக கண்களை சுருக்கியபடி அமர்ந்திருந்தார். இடுப்பில் வேட்டியும் மேலே சட்டையும் தலையில் கத்தியவாரி முண்டாசும் அணிந்திருந்தார். சுமாரான தோற்றம். “இவரு பேரு?” என்றான். 

”காந்தி… மோகன்தாஸ் காந்தி” 

சோற்றுப்பானையை தோட்டத்திலிருந்த கல்லில் சாத்தி வடித்து விட்டு தக்காளிச் செடியிலிருந்து சமையலுக்கு தேவைப்படும் தக்காளிகளையும் தாளிதத்துக்கான கறிவேப்பிலையும் பறித்து எடுத்துக் கொண்டாள் கிருஷ்ணவேணி. கூட்டும் பருப்பும் தாளிதமும் கலந்த வாசம் அந்த சிறிய வீட்டை மூழ்கடித்துக் கொண்டிருந்தபோது கண்டமய்யா பூசையில் அமர்ந்திருந்தார். 

“கங்காதர் இன்னும் வர்லயா?” எல்லோரும் சாப்பிட்ட பிறகும் கங்காதரன் வந்திருக்கவில்லை. 

“வயக்காட்ல காவலுக்கு ஒக்காந்திருப்பானாக்கும்”

“ராகவனில்ல காவலுக்கு ஒக்காந்திருந்தான்!” என்றார் கண்டமய்யா.  

“அண்ணா காகேசம் பக்கம் போயிருக்கப்போவுது” மூத்த சகோதரனை கேலி செய்தாள் பார்வதி. கோமதிக்கு நகைச்சுவையோ கிண்டல் கேலியோ வராது. இழப்பு அவளை மாற்றி விட்டதா அல்லது இயல்பே அதுதானா என்றறியவியலாத இளமையிலேயே அவள் வாழ்க்கை தொலைந்திருந்தது. ஆறும் கடலும் சேரும் கழிமுகமென்பதால் மழைக்காலங்களில் நிலத்தையும் நீரையும் பிரித்தறிய முடியாத சாம்பல் வண்ண வெளிக்குள் கிராமமே ஆழ்ந்துப்போகும். கடல் பேரோசைக் கொண்டு எழும்பும். காற்றும் மழையும் ஒன்றையொன்று விஞ்சும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே நதி கடலாக மாறி விடும்.  காலளவு நீர் இடுப்பளவில் உயர்ந்து மார்பு, கழுத்து என ஏறிக் கொண்டே வரும். நீந்தினாலும் கரையேறுவதற்கு துறை புலப்படாது. அது வெகுதுாரத்திலிருந்து உருட்டிக்கொண்டு வரும் வளங்கள் மண்ணை செழிப்பாக்கும். வயல்கள் முத்துமுத்தான தானியங்களை பெற்றெடுக்கும். பள்ளங்கள் மேடாகும். படுவூர், காகேசம் போன்ற கிராமங்கள் கூட முகத்துவார வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய மண் திட்டு என்பார்கள். இன்று உயிர்கள் பெருகி அங்கு ஜீவக்களை மிளிர்கிறது. முகத்துவாரங்களால் பள்ளத்தை மேடாக்கவும் மேட்டை ஓடையாக்கவும் முடியும். சில சமயங்களில் மேடுகள் தாவரங்களோடு அடித்துக் கொண்டுபோய் கடலில் விழுந்து மாளும். ஏரிகளாக மாறி விடும் வயல்களில் நீர் வற்றி விளைச்சல் பெருக வேண்டுமென இராமாயண பாகவதப்பிரசங்களின்போது பெண்கள் மனதார வேண்டிக் கொள்வர். ஊரே பக்திப்பரவசத்தில் மூழ்கியிருக்கும். பிரசங்கிகளுக்கு தட்சணைக்கு பஞ்சமில்லாததால் அடுத்த ஆண்டுக்கான வருகையை சம்பிரதாயமாக நிச்சயித்து விட்டு கிளம்புவார்கள்.

“நானும் உங்கூட வர்றேண்ணா…” நிமன் சொந்த ஊருக்கு கிளம்பியபோது நண்பனிடம் கோரிக்கை வைத்தான் கங்காதரன். சிறிது காலமாக தன்னோடு ஒட்டிக் கொண்டு அலைந்தவனை விட்டுவிட்டு செல்ல நிமனுக்கும் மனதில்லை. 

“ஆனா உங்க ஊர்ல இருக்கறமாதிரி சம்பாரண்ல கடலெல்லாம் இல்லை… பரவால்லயா” என்று சிரித்தான் நிமன். அவன் பீகார் மாகாணத்தில் சம்பாரண் ஜில்லாவிலிருக்கும் பேதியாவை சேர்ந்தவனாம்.

“சம்பாரண் ஜனகர் ஆண்ட புனிதமான பூமியல்லவா?” அன்று படுவூரில் பூசணிக்காய் மூட்டைகளை ஏற்றி விட வந்த தந்தையிடம் நிமன் பேச்சுப்போக்கில் சம்பாரணை பற்றி சொன்னதும் அவர் ராமா… ராமா… என்று கன்னத்தில் போட்டுக் கொண்டது நினைவுக்கு வந்தது.  சந்தனமும் விபூதியும் மணக்க பூஜையை முடித்து விட்டு வரும்போதே அவருக்கு மனை போட்டு இலையை விரித்து விடுவாள் பார்வதி. கூஜம் கிராமத்திற்கு வாக்குப்பட்டு சென்றவளுக்கு ஆறு மாதமே அங்கு வாழ்வு. அங்கெல்லாம் உருளைக்கிழங்கு அமோகமாக விளையுமாம். கணவனையும் அவன் ஊரையையும் பற்றி மொத்தமாக அது மட்டுமே அவளுக்கு தெரிந்திருந்தது. மூத்தவள்  கிருஷ்ணவேணிக்கு திருமணமானது கங்காதரனுக்கு சன்னமாகதான் நினைவிலிருந்தது. அது வெயில்கால நாளொன்றில் நடந்திருந்தது. அவள் அப்போது பெரியவளாகவில்லை. வறட்சியில் குளமெல்லாம் வற்றியிருந்தது. சமையலுக்கான நீரைக்கூட ஊற்று இறைத்துதான் பயன்படுத்தினார்களாம். அவள் பெரியவளாகி கணவன் வீட்டுக்கு போவதற்குள் அவள் கணவனை கடல் கொண்டு போயிருந்தது. புகுந்த வீட்டையே அறியாதவள் என்றாலும் இப்போதும் அங்கிருந்து மாங்காய்களும் நெல்மூட்டைகள் சிலவும் அவள் பங்காக வந்து விடுகிறது. 

கங்காதரனின் வீடு குளத்தையொட்டி அமைந்திருந்தது. வீட்டுக்கும் நீர்நிலைக்குமிடையே சிறு மண்பாதை ஓடியது. அங்கிருந்தே தாழ்வாரம் தொடங்கி விடும். தாழ்வாரத்தை அடுத்திருந்த முற்றம் சற்றே உள்ளொடுங்கியிருந்தது. அநேகமாக வெளிப்புழக்கங்கள் அங்கேயே முடிந்து விடும். முன்னறையில் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டதுபோக மீதமிருந்த இடம் புழங்குவது உறங்குவது உண்பதென நேரத்திற்கேற்ப வடிவுக் கொள்ளும். மூத்தவன் ராகவனின் திருமணத்துக்கு பிறகு அதில் சிறுபகுதி தடுக்கப்பட்டு  அவனுக்கும் பூஜ்ஜியாவுக்குமான அறையாக மாறியிருந்தது. மீதமிருந்த கூடத்தில் கிருஷ்ணவேணியும் பார்வதியும் கோமதியும் தாய் சீதம்மாவோடு படுத்துக் கொள்ள கங்காதரனும் கண்டமய்யாவும் முற்றத்தில் ஒதுங்கிக் கொள்வார்கள். சமையலறையை அடுத்திருந்த ஒற்றை தாழ்வாரத்தின் பனையோலைக்கூரை கடற்காற்று அதிர்ந்து வீசும்போது எதிர்த்து நிற்பதே பெரிது என்பது போல படபடக்கும். வீட்டின் பின்புறத்தில் தோட்டமும் பக்கவாட்டில் முந்திரிமரங்களுமிருந்தன. வேனிற்காலமெனில் வீடு சூட்டுக்குள் அமிழ்ந்தது போலிருக்கும். ஆண்கள் இரவு படுக்கைக்கு ஜமுக்காளமும் கையுமாக கடலருகேயிருக்கும் மணற்குன்றுக்கு சென்று விடுவர். வியர்த்து வழியும்போது வீட்டுக்குள்ளோ முற்றத்திலோ படுத்துக்கொள்வது பெரும் அவஸ்தைதான். ஆனால் ராகவனின் தடுப்பறைக்குள் மழையையும் வெயிலையும் தாங்கிக்கொள்ளும் கவசம் ஏதேனுமிருக்கலாம். இருவரும் பொழுது புலரும்வரை வெளியே வருவதில்லை.

மனையில் அமர்ந்ததுமே கண்களை மூடி ராமா… ராமா என்று பிரார்த்தித்து விட்டு முதல் கவளத்தை பிசைந்து வாயில் வைத்து கொள்வார் கண்டமய்யா.   பூஜ்ஜியா அலுமினியப்பேலாவில் மகனுக்கு சோறு பிசைந்து எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்றாள். கணவனை இழந்தவர்கள் என்பதால் சகோதரிகள் மூவரும் அந்திக்கு சிறிது அவலை நீரில் நனைத்து வாயில் போட்டுக் கொண்டு இரவு உணவை முடித்துக் கொள்வார்கள். அம்மா காலையில் வடித்தச்சோற்றில் நீரைக் கொட்டி உப்பு ஊறிக்கிடக்கும் நார்த்தங்காயை தொட்டுக் கொண்டு சாப்பி்ட்டு முடித்தபிறகு பார்வதி பூசனைப்பாத்திரங்களை துலக்கி தயாராக எடுத்து வைத்து விட்டு கையளவு சாணத்தை கரைத்து எடுத்து வந்து எச்சலிட்டு இடத்தை துாய்மைப்படுத்தினாள். அப்போதும் அவன் வீடு திரும்பிவிடுவான் என்றுதான் குடும்பம் நினைத்தது. 

“சம்பாரண் எங்கே இருக்கு…?” என்றான் கங்காதரன். புரியாத ஊரோ பாஷையோ நண்பன் இருக்கும்போது கவலையேதுமில்லை. 

சம்பராண் கங்கைக்கு வடக்கே வெகுதுாரத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறதாம். கிட்டத்தட்ட நேப்பாளுக்கு பக்கத்தில்… என்றான். 

படுவூரிலிருந்து கிளம்பும்போது யாருமறியாமல் தன்னுடன் இரண்டொரு உடுப்புகளை எடுத்து வைத்துக் கொண்டான் கங்காதரன். வாசலில் திருமணத்துக்கு பந்தலமைப்பதற்காக முடையப்பட்ட கீற்று மட்டைகள் வெயிலில் காய்ந்துக் கொண்டிருந்தன. வழியில் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்து வந்த கோமதி, “துணியை கொளத்து கல்லோரம் வச்சிட்டு போ அண்ணா. தொவச்சு வச்சிடுறேன்” என்றாள். 

“இல்ல… நானே தொவச்சிக்கிறேன்” என்றான். திருமணம் நிச்சயமானதிலிருந்தே சகோதரிகளின் கண்களை பார்த்து நேருக்கு நேராக பேச முடிவதில்லை. 

“இப்பவும் உங்க ஊர்ல அவுரியைதான் பயிர் செய்றீங்களாண்ணா?” சம்பராணுக்கு செல்வதற்காக ரயிலில் முஜாபர்பூர் சென்றுக் கொண்டிருந்தனர். நிமன் என்றோ சொல்லியிருந்தது நினைவுக்கு வந்திருந்தது. 

“தோட்ட முதலாளிகளுகளோட பேச்சை மீற முடியாது கங்காதர்” 

அதையேதான் லட்சுமணபுரியில் ராஜ்குமார்சுக்லாவும் காந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரும் பேதியாவை சேர்ந்தவர்தானாம். தோட்ட முதலாளிகளின் பிரச்சனை தாளவியலாமல் போய் கொண்டிருப்பதால் இது குறித்து காந்தியிடம் முறையிட்டு எப்படியாவது அவரை சம்பாரணுக்கு அழைத்து சென்று விட வேண்டும் என்பதற்காகதான் சுக்லா லட்சுமணப்புரிக்கு வந்திருந்தாராம். 

“காந்தி என்ன அரசாங்கமா நடத்திக் கொண்டிருக்கிறார், முறையிடுவதற்கு?” என்றான் கங்காதர். 

அங்கிருந்த பிரஜ்கிஷோர்பிரசாத் என்ற சம்பாரணை சேர்ந்த வக்கீலும் சுக்லாவும் அவர் தென்னாப்பிரிக்காவில் ஏதோ சாதனைகளையெல்லாம் செய்திருக்கிறார் என்றனர். ஆனால் காங்கிரஸ் மாநாட்டில் சம்பாரண் விவசாயிகளின் நிலைமைக்குறித்து கண்டனத்தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாய் காந்தியிடம் கோரியபோது உண்மை நிலவரம் தெரியாமல் நான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டாராம். ஆனால் ராஜ்குமார்சுக்லா காந்திக்கு உண்மை நிலவரத்தை காட்டும் பொறுப்பு என்னுடையது என்று அவரை அழைத்துக் கொண்டு சம்பாரண் சென்று விட்டாராம். 

தடக்கு… தடக்கு.. தடக்கு… என்று ரயில் ஊர்ந்துக் கொண்டிருந்தது. இந்நேரம் அவனை காணாமல் வீடு தடுமாறிப்போயிருக்கும். அவன் இப்போது இரண்டு வீடுகளுக்கு கடமைப்பட்டிருந்தான். இருந்தும் யாருமறியாது   எல்லாவற்றையும் உதறி விட்டு ஓடி வரும் துணிச்சலை அவன் கோழைத்தனம் என்று ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டு வீடுகளிலும் திருமண வேலைகள் களைக்கட்டிக் கொண்டிருந்தது. கங்கம்மா வீட்டில் நிலமும் தோப்புகளும் நிறையவே இருப்பதாக சொல்லிக் கொண்டார்கள். அங்கு உருளைக்கிழங்கும் அரைக்கீரையும் நல்ல விளைச்சல் கொடுக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை துவரை விதைப்பார்கள். சிவதாணு தனது மகள் கங்கம்மாவை கங்காதரனுக்கு தருவதாக ஒப்புக் கொண்டதில் கண்டமய்யா பூரித்துப்போனார். ஆண் வாரிசு இல்லாத வீடு அது. ஆளில்லாத வீட்டின் சொத்து இளையவனுக்கு சேர்ந்து விடும். தென்னந்தோப்பை பெரிதாக கூறு போடும் அவசியமிருக்காது. தோப்பினுடே காலாற நடந்துச் சென்று கல்யாணத்துக்கு தேவைப்படும் தேங்காய்களின் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டார். சீதம்மாவும் பண்டமாற்றில் உளுந்தும் வள்ளிக்கிழங்குகளும் வாங்கி வைத்திருந்தாள். பெண்கள் மூவரும் நாலைந்து நாட்களுக்கு மும்முரமாக முனைந்து கல்யாண விருந்துக்கான வடாம்களை தயாரித்து பானையில் நிரப்பி விட்டனர். கடல் நீரை கொதிக்க வைத்து வடித்து உப்பையும் சேகரித்தாயிற்று. விருந்தினர்களுக்காக  பசுக்கொட்டிலில் மேலும் இரண்டு பசுக்கள் வாங்கி கட்டப்பட்டன. இதில் பெண்கள்பாடுதான் திண்டாட்டம். மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதும் அந்தியில் பால் கறந்தபின் அவற்றை கொட்டிலில் கட்டிப்போட்டுவிட்டு கழுநீரும் பிண்ணாக்கும் கலந்த தீனி வைப்பதுமாக இருக்க வேண்டும். அவை மேய்ச்சலுக்கு செல்லும் நேரத்தில் சாணங்களை அள்ளி குழிக்குள் கொட்டி விட்டு கொசுக்கள் அண்டாமல் கொட்டிலை சுத்தம் செய்ய வேண்டும். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் அவை கால் மாற்றி கால் வைத்துக் கொண்டு குரலெடுத்து அழைத்த மாத்திரத்தில் ஓடிப்போய் நிற்க வேண்டும். சிலிர்க்கும் அதனுடலை தட்டி தடவி பசும்புல் கொடுத்து கன்றை பிரித்து நிறுத்தி விட்டு பால் கறக்க வேண்டும். கூடவே விவசாய வேலைகள் வேறு. ஆளும்பேருமாக சேர்ந்து நெல்லடித்து வீட்டில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் வேலையிருக்கும் நேரத்தில்தான் அவன் வீட்டை விட்டு கிளம்பியிருந்தான்.

நெல்வயல்களை தாண்டி, தென்னந்தோப்புகளை தாண்டி உருளை வயல்களையும் கீரைப்பாத்திகளையும் தாண்டி அடுத்திருந்த சிறுகுன்றை கடந்து வடக்கே பிரிந்துச் சென்ற காகேசம் செல்லும் வழியைக் கடந்து இடையே குறுக்கிட்ட சிறு ஏரியில் தாகம் தீர நீரையள்ளி பருகி விட்டு நடந்தபோது படுவூர் எங்கோ தொலைவிலிருந்தது. 

ரயில் பயணத்திற்காக கட்டி எடுத்து வந்த ரொட்டிகளை உண்டு விட்டு நிமன்பிரசாத் உறங்கத் தொடங்கியிருந்தான். கங்காதரனுக்கு ரொட்டி கொஞ்சமும் பிடித்தமானதாக இல்லை. இனிப்புப் போட்டு மசித்தக்கீரையை சூடான அரிசி சோற்றிலிட்டு மாங்காய் ஊறுகாயை துணைக்கழைத்துக் கொண்டு சாப்பிடுவது அவனுக்கு பிடித்தமானது. கங்கம்மாவை கூட அவனுக்கு பிடித்துதானிருந்தது. பெயர் பொருத்தமே அபாரம் என்றது ஊர். திருமணம் முடிவான தினத்தன்று சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்ட கையை கழுவிக்கொள்வதற்காக சென்றபோது கங்கம்மாவை பார்த்திருந்தான். ஒல்லியான சிவந்த தேகம். மெலிதான குரலில் பேசிக் கொண்டிருந்தவள் அவனை கண்டதும் வெட்கப்பட்டு நின்று விட அவள் தாயார்தான் நீரிருக்கும் குவளையை அவனை நோக்கி நகர்த்தி வைத்தாள். மழைக்காலங்களில் பெரிய ஏரியாக மாறி விடும் நிலம் பிறகு வயலாகி விடுவதும் பயிர்கள் வளர்ந்தபின் பசும் விரிப்பாகி போவதும் அவனுக்கு பிடித்தமானது. அப்போது ஆடுமாடுகள் கூட கொண்டாட்டம் கொண்டு விடும். இவ்வாண்டு மழையின்போது வெள்ளம் சாய்த்து விட்டுப்போன மாந்தோப்புகள் படுவூருக்கும் காகேசத்துக்குமான பாதையை மேலும் தோதாக்கி வைத்திருந்தது.

சம்பாரணில்  பூமி அதிக வெப்பமாகவும் பயிர்கள் உயிர் வாசமற்றும் இருந்தன. பார்வைப்படும் துாரத்தில் அலைகளால் நிலத்தை அளந்துக் கொண்டிருக்கும் கடலும் நிலமும் இங்கில்லை. ஆங்காங்கே தென்பட்ட மாந்தோப்புகள் கூட அவனுக்கு அந்நியமாக தோன்றின. மக்கள் கூட வளமற்றவர்கள் போலிருந்தனர். பழகியறியாத பிரதேசம் என்பதால் அவ்வாறு தோன்றுகிறது என்றான் நிமன்பிரசாத்.  

சம்பராண் விவசாயிகள் காந்தி என்பவரையும் காங்கிரஸ் என்பதையும் அறிந்திருக்கவில்லை என்றாலும் ஏதோ இரட்சகர் வந்ததுபோல காந்தி தங்கியிருந்த இல்லத்தை நோக்கி குவிந்துக் கொண்டேயிருந்தனர்.  அவர் முஜாபர்பூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் இறங்கியபோது கூட ஆச்சார்ய கிருபளானியும் அவரது மாணவர்களுமாக பெரும்கும்பல் கூடி விட்டதாம். இதை சுக்லா சொன்னபோது “எப்படியோ அவரை இங்கே வரவழைச்சிட்டே” என்றான் பிரசாத். 

காந்தி அதிகாலையிலேயே எழுந்துக் கொண்டார். செய்யவேண்டிய வேலைகளுக்கான திட்டங்களையும் அதற்கேற்ப ஆட்களையும் நியமித்துக் கொண்டார்.  நிலக்கடலையும் பேரிச்சம்பழமும் எலுமிச்சைச்சாறுமான சிறு சிற்றுண்டியை வேலையை தொடங்கும் முன்பே முடித்திருந்தார். செய்தித்தாள்களும் உருதுமொழி பத்திரிக்கைகளும் தனது இந்த நடவடிக்கைக் குறித்து எம்மாதிரியான கருத்துகளை வெளியிட்டு வருகிறது என்பதை குறித்து  அறிந்துக் கொண்டார். செய்தித்தாள்களை அவரிடம் சேர்ப்பிக்கும் பணியில் கங்காதரன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். மனுக்களை வாங்கவும் அவர்களின் கோரிக்கைகளை மொழிப்பெயர்க்கவும் குறிப்பெடுக்கவுமென அவருக்கு உதவியாக வழக்கறிஞர்களும் உடனிருந்தனர்.

“ஒவ்வொரு விவசாயியும் தான் சாகுபடி செய்யும் நிலத்தின் இருபதில் மூன்று பகுதிக்கு அவுரியை பயிர் செய்ய வேண்டுமாம். விளைச்சலில் பெரும்பங்கையும் நிலச்சுவான்தாரர்களுக்கு கொடுத்து விட வேண்டுமாம். செயற்கை சாயத்தின் வருகைக்கு பிறகு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அவுரியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தபோது தங்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் தோட்ட முதலாளிகள் விவசாயிகளிடமிருந்து பணமாக வசூலித்துக் கொண்டார்களாம். பணமில்லாதவர்களின் வீடு வாசல் நிலங்களை பிடுங்கிக்கொள்வதும் அவர்களின் குழந்தைகளையும் கடுமையான உடலுழைப்பில் ஈடுப்படுத்துவதுமாக கொடுமை செய்கின்றனர் காந்தி அவர்களே…”

காந்தி அவர்களின் குறைகளை பொறுமையாகவும் கூர்மையாகவும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது கண்கள் பேசுபவரின் ஒலிகளையும் முகக்குறிகளையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. அத்தனை சாத்வீகமான தன்மைக்கேற்ப அவர் ஒன்றும் வயதானவர் அல்ல. நாற்பத்தேழு நாற்பத்தெட்டிருக்கலாம். 

“நான் அதிக வேலைபளுவை உங்களுக்கு கொடுத்து விட்டேன் மகாத்மா” என்றார் சுக்லா.

“என்னை மகாத்மா என்று அழைக்காதே… பாபு என்று அழைத்துக் கொள். அது உத்தமம்”

“இங்கு வந்ததால் உங்களுக்கு அதிக வேலைகள்… இல்லையா பாபூ?” என்றான் மீண்டும்.

“அதிக வேலை என்பதால் சூரியன் சிரமப்படுவதாக நாம் என்றாவது அனுதாபம் கொண்டிருக்கிறோமோ? அப்படியிருந்தும் அதனைபோல ஒழுங்காக வேலையை செய்பவர் யாருண்டு? இத்தனைக்கும் நம்மை போல வேலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை கூட அதற்கில்லை. நாம் கூட கடவுளின் இஷ்டத்துக்கு நம்மை சரணாகதி செய்து பூஜ்யமாகிவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்?”

“அப்படியானால் தேர்ந்தெடுக்கும் உரிமையை வலிய விட்டு கொடுத்து விட வேண்டும் என்கிறீர்களா பாபூ?” என்றான் கங்காதரன்.

“அப்படிதான் நினைக்கிறேன். கடவுளுடன் முற்றிலும் ஐக்கியப்படுத்திக் கொண்டு நல்லதையும் கெட்டதையும் வெற்றியையும் தோல்வியையும் அவருக்கே விட்டுவிட்டு எதை பற்றியும் கவலைப்படாதவராக இருக்க வேண்டும். இதில் ஒரு நன்மை இருக்கிறது தெரியுமா?”

“நம் பொறுப்பை வேறொருவருக்கு அளித்து விட்டால் நமக்கு அதை சுமக்க வேண்டியதில்லையே?”

“ஆமாம்… அதேதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் அந்த நிலையை நான் அடைந்து விடவில்லை”

எனக்கு அந்த நிலை வாய்த்து விட்டால் மனதை அழுத்தும் சுமையிலிருந்து விடுப்பட்டுவிடுவேன். நல்லதும் கெட்டதும் நாராயணன் செயல் என்று விலகி வந்து விடும் மனம் வாய்ப்பது பெரும் வரமல்லவா? என்றெண்ணிக் கொண்டான் கங்காதரன்.

“நீங்கள் பிரிட்டிஷாருக்கு படை உதவி செய்து தர முனைந்திருக்கக் கூடாது காந்தி” என்றார் ராஜேந்திரபிரசாத். அவர் பீகாரின் முக்கியமான வழக்கறிஞர்.

“இந்தியருக்கும் ஆங்கிலேயருக்கும் எவ்வளவோ பேதமிருக்கலாம். நாம் அடிமைகளாக இருக்கிறோம். அவர்களோ தாங்கள் எஜமானர்கள் என்கிறார்கள். எஜமானனுக்கு ஏற்பட்டிருக்கும் அவசியத்தை, அவனது பலவீனத்தை அடிமை தனக்கொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது எனக்கு நியாயமாக தோன்றவில்லை பிரசாத்”  மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மனுக்களை அடுக்கிக் கொண்டே பேசினார் காந்தி. வியர்வை பெருகி வழிந்தது. பனையோலைகளின் சலசலப்புக்கும் கடலோசைக்கும் மத்தியில் உறங்கியவனுக்கு இங்கெல்லாமே புதிதாக இருந்தது. அந்த மனிதர் காந்தி உட்பட. 

காந்தி எல்லாத்தரப்பு நியாயத்தையும் கேட்டறிய வேண்டும் என்றாராம். 

“முதலாளிங்க அவங்க நியாயத்தைதான் சொல்வாங்க…” காலங்காலமாக கிடைக்காத தீர்வு ஏதோ இந்த மனிதன் மூலமாக கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் நினைப்பில் மண் விழப்போகிறதே என்ற ஆதங்கப்பட்டது ஊர். தோட்ட முதலாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு காந்தி கிளம்பிவிட்டால் இதுவரை கொடுத்த புகார்களினால் முதலாளிகளின் கோபம் இன்னும் அதிகமாகிவிடலாம். சர்க்கார் ஆட்களெல்லாம் முதலாளிகளுக்கு நெருக்கமானவர்கள் வேறு. கங்காதரன் கொண்டு வந்த பத்திரிக்கைள் கூட அதையேதான் கூறின. காந்தியிடம் பத்திரிக்கையாளர்கள் வந்தபோது தானே வேண்டிய தகவல்கள் தருவதாகவும் கற்பிதமாக எந்த செய்திகளையும் எழுத வேண்டாமென்றும்  அவர் கேட்டுக் கொண்டிருந்தார். 

“என்னுடைய வாதங்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் என்னால் காட்ட முடியவில்லை என்றாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது” என்றார் காந்தி, அடுத்த நாளுக்கான வேலைத்திட்டத்தை உதவியாளர்களிடம் விவரித்தபோது. அவருக்கு மறுநாள் முஜாபர்பூரில் தோட்டமுதலாளிகளின் சங்க காரியதரிசியை சந்திக்க வேண்டியிருந்தது. 

“இந்த மனிதரிடம் ஏதோ ஒன்று எல்லோரையும் கவர்ந்திழுக்குது அண்ணா… எங்கேயோ வெளியூர்லேர்ந்து வந்த மனிதரை பார்த்து மனு கொடுக்கறதுக்கு மக்கள் கூட்டம்கூட்டமா வர்றது ஆச்சர்யமால்ல இருக்கு” என்றான் நிமன்பிரசாதிடம்.

“ஆனால் காந்தி தோட்டமுதலாளிகளின் சங்க காரியதரியை சந்திக்க போவது குறித்து மக்களிடம் பயம் வந்துடுச்சு கங்காதர். உள்ளுர் ஆட்கள் செய்யாததையா இந்த வெளியூர் மனிதர் செய்யப்போகிறார்… அவரை நம்பி தோட்டமுதலாளிகளை பகைத்துக் கொண்டோமோன்னு நினைக்கிறாங்க”

“நான் என்னை வெளியாள்னு நினைக்கல” காந்தி, என்றார் அந்த காரியதரிசியிடம். 

“ஆனா அதுதானே உண்மை. இது எங்களுக்கான தனிப்பட்ட விஷயம். அதை விசாரிப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?”

“சாகுபடியாளர்கள் என்னுடைய விசாரணைய விரும்பினால் அதை செய்வதற்கான உரிமை எனக்கு தானாக வந்து விடும்” என்றார் பணிவாக. 

“இவர்கள் அடாவடிக்காரர்கள். ஆண்டுக்கணக்காக உழைப்பை திருடுபவர்கள் அத்தனை லேசில் விடுவார்களா மிஸ்டர்.மோகன்தாஸ்?” என்றார் கிருபளானி. 

“கடவுள் வழிக்காட்டுவார் என்று நம்பிக்கையுள்ளவர்கள் அவர்களால் முடிந்த சிறந்த காரியத்தை செய்து விடுவார்கள். கவலைப்படுவதேயில்லை. நான் இங்கே கடவுள்னு சொன்னது என் உள்ளுணர்வை” என்று சிரித்தார் காந்தி. அவரை சூழ்ந்திருந்த வழக்கறிஞர்கள் கூட்டத்திற்கு அவரது நடவடிக்கை புரியாமலிருந்தது, 

அவனுக்கும் தன் வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது என்பது புரியாமலிருந்தது. முகத்துவாரத்தில் நீரின் ஆழத்தையும் சுழற்சியையும் எந்நாளும் அளவிட முடியாது. அவன் கிளம்பி வராது போயிருந்தால் இந்நேரம் அவனுக்கும் கங்கம்மாவுக்கும் திருமணமாகியிருக்கும். பிறகு அவர்களிருவரும் முன்னறையை மேலும் ஒடுக்கி தடுப்பாக்கி தங்களுக்கு ஒரு அறையை செய்துக் கொண்டிருப்பார்கள். தடுப்புக்கு வெளியே கிட்டத்தட்ட அவன் வயதையொத்த சகோதரிகள் சிறுமிகளைப்போல படுத்திருக்க,  “ஒங்க பாட்டி பண்ற அவல் பாயாசத்தோட ருசி எனக்கும் வர்ல… மூத்தவ பூஜ்ஜியாவுக்கும் வரல. புதுசா வர்ற கங்கம்மாளாவது செய்றாளான்னு பாக்கணும்” என்று சீதம்மா உறக்கம் வரும்வரை எதையாவது பேசிக்கொண்டிருப்பாள். ராகவனை போல அவர்களும் அந்த சிறிய அறையிலிருந்து மேலும்மேலும் குழந்தைகளை உருவாக்கி தர, சகோதரிகள் அதை வளர்த்தெடுப்பார்கள்.

“நாமெல்லாம் வழக்கறிஞர்கள். அதிலும் நீங்கள் பாரிஸ்டர் வேறு. இவர்களின் அராஜகங்களை வழக்கின் மூலம் அணுகினால் சரியாக வந்து விடுமே?” என்றார் ராஜேந்திரபிரசாத்.

“இல்ல… நீதிமன்றங்களை அணுகுவதை விட மன்றத்துக்கு வெளியே சமரசமா போறதுதான் நல்லதுன்னு தோணுது. அதை விடவும் வக்கீலுக்கு அநியாயமா கூலிய கொட்டி கொடுக்க வேணாம பாருங்க” என்றபடியே தனக்காக இரண்டு ரொட்டிகளை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டார் காந்தி. “நாளைக்கு திர்ஹுத்தின் டிவிஷன் கமிஷனரை பார்க்கப் போறேன். அவங்க தரப்பு என்னன்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா?” 

அவர் படுக்கையை விரித்து அதில் தான் கையோடு எடுத்து வந்திருந்த துணிகள் அடங்கிய மூட்டையை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டார். காற்று லேசாக வீசியது. “பாபூ… உங்களுக்கு கவலையென்பதே இருக்காதா? நாளைய சந்திப்பை நினைத்துக் கொண்டதால் எனக்கு உறக்கமே வரல. ஒரு நல்ல விஷயம் என்னான்னா நீங்க வெளியூர் ஆளு… இங்கே எதாவது பிரச்சனையாயிடுச்சுன்னா அப்படியே கிளம்பிடலாம். ஆனா நாங்க நாளைக்கு இங்க இருக்கற மக்களை சந்திச்சாகணும் இல்லையா?”” என்றான் உதவியாளர் தார்னிதார். 

“தார்னிதார்… இருபது அடி உயரத்தில் கயிற்றின் மேல் ஒருவன் நடந்தான் என்றால் அவனுடைய கவனமெல்லாம் கயிற்றின்மீதே இருக்கும். சற்று கவனம் பிசகினாலும் மரணம் என்பதை அவன் உணர்ந்திருப்பான். பொதுக்காரியத்தில் ஈடுபடும் சத்தியாகிரகி அதை விட அதிகமாக தன் நினைவை ஒரே குறியில் செலுத்த வேண்டும். இதை தான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்” அவர் கண்களின் மீது இமைகள் கவிழ்ந்திருந்தன.

திர்ஹுத்தின் டிவிஷன் கமிஷனர்,  இதிலெல்லாம் தலையிட வேண்டாம் என காந்திக்கு மிரட்டலாக புத்திமதி சொல்லி அனுப்பி விட்டார் என்ற சேதி கிடைத்தபோது வக்கீல் ராமநவமிபிரசாத் “இவர்கள் நம்மை அணுகவே விட மாட்டாங்க பாபூ” என்றார்.

“அப்படியா?” மூக்குபுறமாக வழிந்த கண்ணாடியை மீண்டும் எடுத்து பொருத்திக் கொண்டார்.  கிருபளானி காந்தியையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“பலாத்காரத்தை கண்டதும் நாம் தைரியத்தையும் நம்பிக்கையையும் இழந்துடுறோம். அதனால்தான் அது இன்று உலகில் ஒரு சக்தியாக இருக்கிறது. கொஞ்சம் அமைதியாக யோசிச்சு பார்த்தா அப்படி பயப்படுவதற்கு எவ்வித காரணமும் இல்லைன்னு புரியும்” வீட்டை துாய்மைப்படுத்திக் கொண்டே பேசினார். கங்காதரன் அவருக்கு உதவியாக பரவிக்கிடந்த தாள்களை அதனதன் அடுக்கில் எடுத்து வைத்தான். 

“கங்காதர்… அரசாங்கம் மேற்கொண்டு செய்ய முடியாதபடி என் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி விடலாம். அதுக்கு முன்னாடி நான் சம்பாரணை சுத்திப்பார்க்கணும். நாளைக்கு சுக்லாவை வரச்சொல்லு” என்றார் காந்தி. 

சுக்லா வந்து சேர்வதற்கு முன்பே நிமன்பிரசாத்துடன் கங்காதரன் வந்து சேர்ந்திருந்தான். அதற்கும்முன்பே காந்தி தங்கியிருந்த கோரக்பிரசாத்தின் வீட்டுக்கு வெளியே திருவிழா கூட்டம் போல மக்கள் கூடியிருந்தனர். அங்கிருந்து ஐந்து மைல் தொலைவிலிருந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்திலிருந்த பயிர்களையும் பழமரங்களையும் யானையை விட்டு நாசப்படுத்தியும் வீ்ட்டுக்கூரையை குண்டாந்தடியால் தாக்கியும் போலீசாரின் துணையோடு தோட்டமுதலாளி அராஜகம் செய்து விட்டாராம்

“நான் அதை உடனே நேரில் பார்வையிட வேண்டும்” என்றார் காந்தி பரபரப்பாக.

அவர் மோதிகரிக்கு சென்றபோது ஆதரவோ தலைமையோ துணி்ச்சலோ இல்லாத அம்மக்கள் தங்களுக்கென்று பேச வந்திருக்கும் அந்த மனிதரை விட்டுவிட தயாராக இல்லை என்பதுபோல அங்கும் மொய்த்துக் கொண்டனர். அவர்களின் கண்களில் கிருஷ்ணவேணியை போல, பார்வதியை போல கோமதியை போல ஏக்கம் அப்பிக் கிடந்தது. 

காந்தியின் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பயணிப்பதற்காக யானையொன்றும் வரவழைக்கப்பட்டது. 

“யானை மீதேறி செல்வது எனக்கு புதிதுதான். ஆனால் அதையும்தான் முயன்று பார்த்து விடுவோமே” என்றார். ஏப்ரல் மாதத்தின் தகிக்கும் வெயில்நேரத்தில் மேற்கொண்டிருந்த அந்த பயணத்தின் போது, அவர் இங்கிருந்தால் அமைதி கெட்டு விடும் என்பதால் கிடைக்கும் முதல் ரயிலில் ஏறி சம்பாரணை வி்ட்டு வெளியேறி விட வேண்டுமென்ற  கிரிமினல் புரோஸிஜர் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் மாஜிஸ்டிரேட் ஒரு உத்தரவை காந்திக்கு அனுப்பியிருந்தார்.

“இந்த உத்தரவை நான் ஏற்க போவதில்லை. வேண்டுமானால் மாஜிஸ்டிரேட் தனக்கு உசிதமென்று தோன்றும் நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம்”

“இதை நீங்கள் எழுத்துப்பூர்வமாக தர முடியுமா மிஸ்டர்.காந்தி?”

“ஓ… தாராளமாக” என்ற காந்தியை புரியாமல் பார்த்தனர். 

“இது சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுத்து விடும் பாபூ”

“உண்மைதான்… நானும் வழக்கறிஞர்தானே?” என்றார் வெடிச்சிரிப்போடு. அங்கு நின்றிருந்த காங்கதரனை பார்த்து “என்ன கங்காதர்…? நான் கூறுவது உண்மைதானே?” என்றார். வரவர அவனுக்கு நிமன்பிரசாத்தின் மொழிப்பெயர்ப்பை விட காந்தியின் உடல்மொழியே அதிகம் புரிந்துவிடுகிறது. 

“சம்பாரணுக்கு வந்தபோது இரண்டொரு நாட்களில் திரும்பி விடலாம் என்று நினைத்தேன். இப்போது அது முடியாதுன்னு தெரியுது. வேறென்ன?”

மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் காந்தியின் வழக்கு கூப்பிடப்பட்டதும் கோர்ட் அறையை நோக்கி மக்கள் குவிந்தனர். அறையின் கண்ணாடி சன்னல்களெல்லாம்  உடைந்து நொறுங்கின. கூட்டத்தை அடக்க போலீசாரால் முடியவில்லை. அடக்கி வைத்தவைகள் உடைந்து நொறுங்கிதானாக வேண்டும். அவர்களுக்கெல்லாம் இந்த ஒடிசலான அந்த மனிதர் நம்பிக்கை அளித்திருந்தார். 

சர்க்கார் தரப்பில் சாட்சிகள் அழைத்து வரப்பட்டு விசாரணை தொடங்கியபோது காந்தி “வணங்குகிறேன் மாஜிஸ்டிரேட் அவர்களே… இந்த சாட்சிகள் அநாவசியமானது. இதை நிரூபிப்பதற்காக நம் இருவரின் நேரமும் ஏன் வீணாக வேண்டும்? தங்களின் உத்தரவை பெற்றுக் கொண்டு அதற்கு உடன்பட மறுத்து வி்ட்டேன் என்பதை நானே ஒப்புக் கொள்கிறேன்”

அவனைப்போலவே நீதிமன்றத்தின் அத்தனை கண்களும் அவரையே நோக்கிக் கொண்டிருந்தன. 

“நீங்கள் அனுமதித்தால் என் வாக்குமூலத்தை இங்கு படிக்கவும் தயாராகவுள்ளேன்” 

மாஜிஸ்டிரேட், குற்றத்தை விசாரணையின்றி ஒப்புக்கொண்ட குற்றவாளியை அப்போதுதான் முதன்முதலாக பார்ப்பதை கண்களால் ஒப்புக் கொண்டு “அனுமதிக்கிறேன் மிஸ்டர்.காந்தி” என்றார்

“இங்குள்ள அவுரி விவசாயிகள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று வற்புறுத்தி அழைக்கப்பட்டதன் பேரில் நான் இங்கு வந்தேன். எல்லாத்தரப்பிலும் இதை ஆராயும்பொருட்டு அதிகாரிகளையும் தோட்டமுதலாளிகளையும் சந்திக்க விழைந்தேன். ஜீவகாருண்ய தேசசேவையே என் நோக்கம். இதை தவிர வேறு நோக்கம் எனக்கு கிடையாது. என்னால் இங்கு அமைதி கெட்டுவிடும் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஏற்கனவே இம்மாதிரியான போராட்டங்களில் எனக்கு அனுபவம் உண்டு. தாங்கள் என்னை வெளியேற சொல்லும் உத்தரவை ஏற்க வேண்டிய நிலையிலும் அதேநேரம் நான் செய்ய வந்த காரியத்தை செய்து முடிக்க வேண்டிய கடமையிலும் நான் இருக்கிறேன். ஆனால் இப்போது கடமையை செய்யும்பொருட்டு நான் சர்க்காரி்ன் உத்தரவை மீறியிருக்கிறேன். இவ்வாக்குமூலம் என் தண்டனையை குறைப்பதற்காக அல்ல. சட்டத்தின் அதிகாரத்தின் மீது நான் கொண்டிருக்கும் மரியாதை குறைவினாலும் அல்ல. எனக்குள்ளிருக்கும் உயர்ந்த சட்டமான என் மனச்சாட்சி்க்கு குரலுக்கு பணிந்தே இச்சட்டத்தை மீறினேன்“

மொத்தக்கூட்டமும் விறைத்து நின்றது. மாஜிஸ்டிரேட்டின் தடுமாற்றம் அவர் குரலில் தெரிந்தது.

“நீங்கள் கூறியவற்றிலிருந்து குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என தெளிவாகவில்லை“

“நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை சொல்லி விட்டேன் மாஜிஸ்டிரேட் அவர்களே…” 

“அப்படியானால் சாட்சிகளை வரவழைத்து இரு தரப்பு விவாதங்களையும் கேட்போம் மிஸ்டர். காந்தி“

“இது உங்கள் கருத்தானால், கனம் பொருந்தியவரே… நான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்” 

“சரி… என் தீர்ப்பை சில மணிநேரம் கழித்து சொல்கிறேன் நீங்கள் ஜாமீன் கொடுத்து விட்டு செல்லுங்கள்”

“எனக்கு ஜாமீன் தேவையில்லை. அதை கொடுக்கவும் இங்கு ஆளில்லை”

“அப்படியானால் சொந்த ஜாமீன் கொடுத்து விட்டு நீங்கள் செல்லலாம் மிஸ்டர் காந்தி” 

“இல்லை… நான் அதை விரும்பவில்லை. குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் எந்த தீர்ப்பை கூறினாலும் மனதார ஏற்றுக் கொள்கிறேன் மாஜிஸ்டிரேட் அவர்களே”

“தீர்ப்பை மூன்று மணிக்கு ஒத்தி வைக்கிறேன்” என்றவாறு மாஜிஸ்டிரேட் வெளியேறியபோது அவர் தப்பிப்பிழைத்தோடுவது போலிருந்தது. இந்தியாவில் ஒரு பிரிட்டிஷ் கோர்ட்டின் முன் இத்தகைய வாக்குமூலத்தை யாரும் அளித்திருக்க மாட்டார்கள் என சம்பராண் ஜில்லாவே வியந்துப்போனபோது அவன் மனம் குழம்பியிருந்தது. பாபூ… பெண்களை சமுதாயக்கட்டுகளிலிருந்து எங்ஙனம் மீட்பது? அவர்களை கட்டாய துறவறத்திலிருந்து யார் காப்பாற்ற போகிறார்கள். இங்கு திரளான மக்கள் கொண்ட நம்பிக்கையை போல இந்த கட்டுகளிலிருந்து மீறலாமென்றோ இது மாறுமென்றோ அவர்களுக்கு யார் நம்பிக்கையளிப்பது? உலகாயுத சுகத்தை துறக்க விரும்பும் முனிவர்கள் மக்கள் நடமாட்டமற்ற காட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டது தற்செயல் அல்ல. மனமானது காட்டின் துஷ்ட விலங்குகளைவிட மோசமான விலங்கு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் பெண்களுக்கு எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இருப்பதில்லை. தங்களுக்குள் முகிழ்தெழும் அத்தனை உணர்வுகளையும் உள்ளமிழ்த்தி தலையில் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் சுலபமான வேலைகளை கடினமாக்கி எந்நேரமும் அதில் ஈடுபட்டுக்கொள்ளலாம். பசுக்கள் ஈனும் கன்றுகளை தம் பிள்ளைகள்போல கருதிக் கொள்ளலாம். நாவின் வேட்கையை சட்டை செய்யாது விட்டுவிடுவதன் மூலம் உடலின் தேவையை வென்றெடுக்கலாம் என்ற மூத்தோர்களின் பேச்சை மறுப்பேச்சின்றி கடைப்பிடிக்கலாம்.

“ஆம்… நீ கூறுவது சரிதான். எந்த ஒரு பெண்ணின் மீதும் வைதவ்யம் திணிக்கப்படக்கூடாது. ஆனாலும் உன் சகோதரிகள் விஷயத்தில் அவர்கள் அதை விருப்பமுடன் ஏற்றுக் கொள்கிறவர்களாகதானே இருக்கிறார்கள்”

“அதை ஏற்காமல் இருக்க முடியாதே பாபூ?”

“உண்மைதான். பெண்கள் தன்னை இன்னும் உணர்ந்துக் கொள்ளவில்லை. அதற்காக அவர்களை அபலைகள் என்றும் கூற முடியாது. அப்படி கூறுவது அவர்களை அவமதிப்பதை போன்றது”

“ஆனால் பலம் பொருந்திய ஆண்களுக்கான சமுதாயத்தில் பெண்களின் நிலைமை அப்படிதானே உள்ளது?” நீண்டநாட்களாக மனதை அரித்து வந்த உணர்வை சிறிதுநாட்களே பழக்கமான அவரிடம் கொட்டினான்.

“கங்காதர்… நீ எதை பலமென்று கூறுகிறாய்? மிருகபலத்தையே பலம் என்று கருதினால் ஆண்களை விட பெண்களுக்கு பலம் குறைவுதான். ஆனால் பலம் என்பதை ஒழுக்கபலம் என்று பொருள் கொண்டால் பெண்கள் எண்ணிப்பார்க்கவியலாத அளவுக்கு உயர்ந்தவர்கள்” 

“அதற்காக வாழ தொடங்கும் முன்னே கருகிப்போன வாழ்வை  ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே கடக்க வேண்டுமா பாபூ? அதற்காகவா அவர்கள் பிறப்பெடுத்துள்ளனர்?”

“அவர்களுக்கு பாலுறவு மறுக்கப்படுகிறது என்பதுதான் உன் குறையா கங்காதர்? பாலுறவைதான் நீ வாழ்க்கை என்றும் இன்பம் என்றும் அதை அனுபவிக்காமை பாவம் என்றும் கூறுகிறாயா?“

”அது உண்மைதானே பாபூ… அவர்கள் வயதையொத்த நாங்கள் நாலடி இடைவெளியில் அறைக்குள் இன்பம் அனுபவிக்கும்போது அவர்கள் அறைக்கு வெளியே உறங்குவதுபோல பாசாங்கு செய்ய வேண்டும். இல்லையெனில், தன் கணவருடன் வாழ்ந்த நாட்களை நினைத்துக் கொள்ள வேண்டும். இது எவ்வகையில் நியாயம் கூறுங்கள்?”

“பாலியல் இன்பம் என்பது இனவிருத்திக்கான செயல்பாடு மட்டும்தான். அதை இன்பத்துக்காக செய்வதென்பதே பாவம். அதிலிருக்கும் நாட்டம் நம்மை உலகியலில் கட்டிப் போட்டு விடும் கங்காதர். இந்தியர்களான நம் முன்னால் சுதந்திரத்தை பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறதல்லவா?“

“சுதந்திரத்திற்காக என் சகோதரிகள் என்ன செய்ய முடியும் பாபூ?”

”சேவை… சேவை செய்யலாமே கங்காதர்! ராமா…ராமா… என்றிருப்பது மட்டும் ஆன்மீகமல்ல. பக்தியோடு சேவையும் கலப்பதுதான் ஆன்மீகம். உன் சகோதரிகள் விருப்பப்பட்டு வேறு மணம் செய்ய ஒப்புக் கொண்டால் நான் அதனை ஆதரிப்பேன். அதேநேரம் அவர்களாக விரும்பி வைதவ்யம் ஏற்றுக் கொண்டால் அவர்களை கையெடுத்து வணங்குவேன். ஊனின் களங்கங்களுக்கு கட்டுப்பட்டு ஊனிலே அடங்கி சிறைப்பட்டு கிடக்கும் வலிமையற்ற உணர்வை விட ஊனுக்கு அப்பாற்பட்ட ஆன்மஉணர்வு மேம்பட்டது அல்லவா?” 

“பாபூ… நீங்க இல்லறம்கிற ஏற்பாட்டை குறைவா பாக்றீங்க”

“அதை விட பக்தியும் சேவையும் உயர்வானது என்கிறேன். நீ மற்றவர்களை மதிப்பிடும்போது அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள நெறியை கொண்டே மதிப்பீடு செய்ய வேண்டும். உன் மனம் விரும்புவதை அவர்களின் நெறியாக பார்க்காதே. உலக இன்பங்கள் மனதை சுயநலத்தில் ஆழ்த்தி விடும். புலனடக்கம் கொள்பவர் குடும்பம் நடத்துபவரை விட மேலானவர் என்று கருதுகிறேன்”

“அதை நீங்கள் திருமணமானவர்களுக்கும் வலியுறுத்தவது தவறல்லவா பாபூ?” 

“ஓ…  நீ திருமணமானவனோ…?” அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தார்.

“இல்லை.. ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டவன். திருமண தேதி நெருங்கி வரும் வேளையில் வாழ்விழந்த சகோதரிகளுக்கு மத்தியில் வாழ விருப்பமின்றி மனச்சாட்சியில் உந்துதல் தாங்காமல் கிளம்பி வந்து விட்டேன் பாபூ”

“புரிகிறது கங்காதரன். நீ கிளம்பியது அந்த பெண்ணின் விருப்பத்தோடுதானே?”

“இல்லை பாபூ… அவளுக்கு இது குறித்து தெரியாது”

“அப்படியானால் நீ மூன்று பெண்களுக்காக நான்காவது பெண்ணை பலிக் கொடுத்திருக்கிறாய் என்று எடுத்துக் கொள்ளட்டுமா?”

அன்று காலையில் காந்தி கிணற்றில் இறைத்து வாளிகளில் நிரப்பப்பட்டிருந்த நீரைக் கொண்டு தனது தட்டையும் நீரருந்தும் குவளையையும் துலக்கி எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது “பாபூ… நீங்கள் இங்கேயே இருந்துக் கொள்ளலாமாம். ஆட்சேபணை ஏதுமில்லை என்று மாஜிஸ்டிரேட் தீர்ப்பு கூறி விட்டார்” ஓடோடி வந்தவர்களுடன் சேர்ந்துக் கொண்டான் கங்காதரன். 

“சரிதான்… நியாயமான தீர்ப்பு. என்னுடைய நாட்டில் நான் எங்கு போக வேண்டும், எங்கு போகக்கூடாது என்பதை பிரிட்டிஷார் எனக்கு உத்தரவிட முடியாது இல்லையா?”

“பாபூ… இது அவர்கள் ஆளும் தேசமில்லையா?”

“ஆனால் தேசம் அவர்களுடையதில்லையே?” என்றார் பாபூ.

***

முந்தைய படைப்பு:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.