
அரசியலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் கட்சியே நிலைத்த ஆட்சியைத் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்கியுள்ளது கனடாவில் நடந்த சமீபத்திய தேர்தல். உலகிலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடும் மக்கள் தொகையில் அதிகமுள்ள நாடுகளில் 38வது இடத்தை வகிக்கும் கனடாவில் 38 million மக்கள் வசிக்கிறார்கள். 10 மாகாணங்கள் மற்றும் மூன்று பிராந்தியங்களைக் கொண்டுள்ள அந்நாட்டில் ஆங்கிலேயரின் வரவிற்குப் பின் பூர்வகுடிகள் சிறுபான்மையினராகவும், ஃபிரெஞ்ச் பேசும் மக்களும் அயல்நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் அதிக அளவில் வாழ்கிறார்கள். குடியுரிமை பெற்ற பெரும்பான்மை மக்கள் இந்தியா, சீனா, இலங்கை, ஆஃப்ரிக்கா மற்றும் வேறு சில ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களையும் வரவேற்கிறது ஆளும் தாராளவாத கட்சி. பல்வேறு இனக்குழுக்கள் வாழும் கனடாவில் பல அரசியல் கட்சிகளும் உள்ளது.
செப்டம்பர் 20, 2021ந் தேதியன்று ஆறு கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் தாராளவாத கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 23வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடனே ஆட்சியை அமைத்திருக்கிறது. இத்தேர்தலில் கனடாவின் இரு பெரும் கட்சிகளான தாராளவாத கட்சி தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவும், வலது சாரி பழமைவாத கட்சித்தலைவர் எரின் ஒ டூல்-ம் பிரதமர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டார்கள். இவர்களைத் தவிர, இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சித்தலைவர் ஜக்மீட் சிங், பிரிவினைவாத பிளாக் குபிக்வா கட்சித் தலைவர் Yves-François Blanchet, பசுமை கட்சித்தலைவர் அன்னமி பால், பீப்பிள்ஸ் பார்ட்டி ஆஃப் கனடா கட்சித்தலைவர் மாக்ஸிம் பெர்னியே போட்டியிட்டார்கள். 338 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மக்கள் மன்றத்தில் குறைந்தது 170உறுப்பினர்களைப் பெறும் கட்சியே மெஜாரிட்டி ஆட்சி அமைத்து அக்கட்சியின் தலைவரே பிரதமராக முடியும். 2020 தொற்றுப்பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் மக்களிடையே ட்ரூடோவிற்கு ஆதரவு பெருகியது. 2015 தேர்தலைப் போல் அவர்களின் முழுஆதரவுடன் தனிப்பெரும்பான்மை ஆட்சியை அமைத்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் நடந்த 2021 தேர்தல், ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
2019 தேர்தலுக்குப் பின் அடுத்த தேர்தல் நடக்க இன்னும் இரு வருடங்கள் இருக்கும் நிலையில் இந்த “திடீர் தேர்தல்” அறிவிப்பு வெளியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்டா வைரஸின் தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் மக்கள் மீது அக்கறையற்ற பிரதமரின் பொறுப்பற்ற இந்த தேர்தல் அறிவிப்பு சுய லாப அரசியல் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தும் பெரும்பாலான மக்கள் ட்ரூடோவின் ஆட்சிக்கே ஆதரவளித்திருப்பது எதிர்க்கட்சிகள் அதிக மக்களின் நம்பிக்கையை இன்னும் பெற்றிருக்கவில்லை என்பதையே எடுத்துரைக்கிறது.
2021 தேர்தலில் 158 இடங்களை ட்ரூடோவின் லிபரல் கட்சி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க போதிய 12 இடங்கள் இல்லாததால் புதிய ஜனநாயக கட்சியின் 25 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. 119 உறுப்பினர்களைப் பெற்றிருக்கும் பழமைவாத கட்சி எதிர்க்கட்சியாக தொடருகிறது. மேட்டிமைவாத பிளாக் குபிக்க்வா ஃப்ரெஞ்ச் மொழி பேசும் பிராந்தியத்தில் அதிக வாக்குகள் பெற்று 34 உறுப்பினர்களுடனும் க்ரீன் பார்ட்டி 2 உறுப்பினர்களுடனும் 2021ல் புதிய அரசாங்கம் அமைகிறது.
அமெரிக்காவைப் போலவே கனடா தேர்தலிலும் கொரோனா பெருந்தொற்று நோய் கட்டுப்பாடு, அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, சுற்றுச்சூழல் மேம்பாடு,வெளியுறவுக் கொள்கைகள், குடியேற்றம், வீடு மற்றும் வரிவிதிப்புச் சட்ட மாற்றங்கள், குழந்தை நலத்திட்டங்களே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை காரணிகளாக இருந்தன. பூர்வகுடிகளுக்கான நீதி , ஓபியாட் நெருக்கடி, இன பேதம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் பிரச்சாரத்தில் அதிகம் பேசப்படவில்லை என்ற ஆதங்கமும் மக்களிடையே உள்ளது.
2008ல் பாரளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்தார் ட்ரூடோ. 2013ல் லிபரல் கட்சித்தலைவராக பொறுப்பேற்று 2015ல் புதிய அணுகுமுறை, கொள்கைகள், திட்டங்களுடன் நம்பிக்கை நட்சத்திரமாக மக்களின் முழு ஆதரவுடன் 36 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த தனது கட்சியை 184 இடங்களில் வெற்றி பெற வைத்த பெருமை அவரையே சாரும். கனடிய வரலாற்றில் இரண்டாவது இளம் பிரதமர் என்ற பெருமையுடன் பொறுப்பேற்ற ட்ரூடோ பல எதிர்ப்புகளையும் கள நிலவரங்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. 2019 தேர்தலில் அவருடைய செல்வாக்கு சரிந்து 157 இடங்கள் மட்டுமே கிடைத்து புதிய ஜனநாயக கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். 2020ல் கொரோனா தொற்றுப்பரவல் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மற்றும் உள்நாட்டின் கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களைக் கணக்கில் கொண்டு மக்களிடையே கூடியிருக்கும் செல்வாக்கில் தேர்தல் நடத்தினால் தனக்கு முழு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடந்தது தான் இந்த தேர்தல். முந்தைய தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏதுமின்றி 158 இடங்களைப் பெற்று இம்முறையும் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடனே ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ட்ரூடோவிற்கு ஏமாற்றமே.
பழமைவாத எதிர்க்கட்சியின் நிலையும் 2019 தேர்தலின் முடிவுகளிலிருந்து அதிக மாற்றமில்லை. மேலும் இரண்டு இடங்களை இழந்திருக்கிறது. மேட்டிமைவாத பிளாக் குபிக்க்வா கட்சி 32லிருந்து 34ஆக இத்தேர்தலில் இரண்டு இடங்களை அதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய ஜனநாயக கட்சியும் கடந்த தேர்தலில் இருந்து ஒரு இடத்தைக் கூடுதலாக கைப்பற்றியுள்ளது. பிரதான கட்சி ஆட்சி அமைக்க இச்சிறு கட்சிகள் உதவுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இளம் வாக்காளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங், 2017ல் அக்கட்சியின் தலைவரானார். 2019 தேர்தலில் ட்ரூடோ அரசிற்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்க உதவினார். 2021 தேர்தலிலும் சிறுபான்மை அரசுடன் இணைந்து சமத்துவம், சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன், மக்களை ஒன்றிணைக்கும் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துவதே தம்முடைய கட்சியின் கொள்கைகளாக அறிவித்துள்ளார். செல்வந்தர்களுக்கான வரி ஏற்றம், சுகாதாரத்துறையில் மாற்றங்கள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, மாணவர் கடனை ரத்து செய்வதில் ஆளுங்கட்சியை புதிய ஜனநாயக கட்சி நிர்பந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி தொடர்பான ஆணைகளைப் பிறப்பிப்பது ட்ரூடோ அரசின் முதல் கடமையாக இருக்கும். மேற்கு கனடாவில் பரவிய காட்டுத் தீ மற்றும் பயிர் வளரும் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வறட்சி, பருவநிலை மாற்றத்தில் மேற்கொள்ள வேண்டிய தீவிர நடவடிக்கைகளையும், பொருளாதாரத்தைச் சீர்திருத்தும் வழிமுறைகளையும் மக்களுக்கு வாக்களித்தபடி செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது அரசு.
இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிளவினை உறுதிப்படுத்துகிறது. மேற்கத்திய கனடா புறக்கணிக்கப்பட்டதாக, வடக்கு மாகாணங்களும் பிராந்தியங்களும் அந்நியப்பட்டதாக, கியூபெக் ஓடுக்கப்படுவதாக ஒற்றுமையற்ற நிலையில் இருக்கும் கனடாவை பிரதிபலிக்கிறது. நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டிய கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியதில் மீண்டுமொருமுறை மைனாரிட்டி அரசு அமைய காரணமாகி உள்ளது. சிறுபான்மை அரசும் கூட்டணி அரசுடன் சமரசம் செய்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நிலையில், பெரும்பான்மை அரசு அமைய மக்களின் எண்ணங்களிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும். கட்சிகளும் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
ஒபாமா ஆட்சிக்காலத்தில் ட்ரூடோவுடனான நட்பில் அண்டை நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் சுமுகமான உறவுடன் இருந்தது. கனடா தேர்தல்களில் ட்ரூடோவிற்கு வாக்களிக்குமாறு ட்விட்டரில் ஆதரவு கோரினார் முன்னாள் அதிபர் ஒபாமா. அவருடைய வழியில் தற்போதைய பைடன் அரசும் கனடாவுடன் நட்புறவில் உள்ளது.
ஃபிரெஞ்ச் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் க்யூபெக்கைத் தனி நாடாக அமைக்க இருந்த திட்டத்தை முறியடித்து ஒன்றிணைந்த கனடா உருவாக காரணமானவர் ப்யர் ட்ரூடோ. இவர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை ஆவார். பல அதிரடி அரசியல் சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தவர். நான்கு முறை பிரதமராக பொறுப்பேற்றவர். 600 மில்லியன் டாலர்கள் செலவில் நடந்த 2021 தேர்தலின் முடிவுகள் ட்ரூடோவின் நம்பிக்கையைப் பொய்த்திருக்கிறது. இது அவருடைய அரசியல் வாழ்க்கையின் முடிவுரையா அல்லது அவருடைய தந்தை ப்யர் ட்ரூடோவின் வழியில் நான்காம் முறையும் வெற்றி பெற்று பிரதமர் ஆவாரா என்பதை இனி வரும் நாட்கள் தான் தீர்மானிக்கும்.
2015லிருந்து 2021க்குள் மூன்று முறை பிரதமராக பதவியேற்றிருக்கும் ட்ரூடோவிற்கு வாழ்த்துகள்.
நாங்களே கடுப்பில் இருக்கிறோம். என்ன தண்டச் செலவு! இதில் நீங்கள் வேறு உலகிற்கு உரக்க சொல்லி இருக்கிறீர்கள். இந்த 600 மில்லியன் டாலர்கள், கரோனா நோய் நிவாரணத்திற்கு செலவழித்திருக்கலாம். அல்லது நோயாளிகளுடன் போராடும் மருத்துவ தொழிலாளர்களுக்கு உதவி இருக்கலாம். குபெக் மாநிலத்துக்காக எங்கள் அரசியல்வாதிகள் நடத்தும் (ட்ரூடோ இதில் மிக முக்கியமானவர்) கூத்து மிகவும் ஓவராகவே இருந்து வந்துள்ளது. ஜஸ்டின் மாண்ட்ரீயலிலிருந்து போட்டியிட்டார்.
மேற்கு மாநிலங்களின் போக்கு லிபரல் கட்சிக்கு எதிராகவே ஒரு பத்தாண்டுகளாக இருந்து வந்துள்ளது. இப்படியே போனால், குபெக் சமரசம் போல, மேற்கத்திய சமரசமும் அரசியல் அவியலில் முக்கியமாகிவிடும்.
இந்த தேர்தல், எரின் ஓடூல் எளிதில் வென்றிருக்கலாம். சொதப்பி விட்டார் மனிதர்.