பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?

This entry is part 2 of 23 in the series புவிச் சூடேற்றம்

2018–ல், கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நியுஃபின்லாந்திற்குச் (Newfoundland) சென்றிருந்தேன். அங்கு செல்ல முக்கியமான காரணம், கனடாவிற்கே உரிய இயற்கை அழகைத்தவிர, அங்குள்ள Iceberg alley என்ற பகுதியைக் காணவும் சென்றிருந்தேன். இந்தப் பகுதியின் முக்கியத்துவம், வட துருவத்திலிருந்து உடைந்து, கடலில் மிதந்துவரும் பல பெரிய பனிப்பாறைகளை, கடற்கரை அருகே காணமுடியும். வழக்கமான சுற்றுலாப் பயணிகள் செய்யும் விஷயங்களைச் செய்துமுடித்து, போனவிஸ்டா (Bonavista NL) என்ற ஊரில் உள்ள கலங்கரை விளக்கத்திற்குச் சென்றேன். அங்கு உள்ள ‘இயற்கை வளத்துறை’ (Natural Resources, Canada) சார்ந்த ஒரு பெண், பனிப்பாறைகளைப் பற்றிய விஷயங்களை அழகாக எனக்குப் புரியவைத்தார்.

வட துருவம் அருகே உள்ள ஒரு மிகப் பெரிய தீவு க்ரீன்லாந்து (Greenland). இது டென்மார்க்கைச் சேர்ந்தது. முந்தைய பகுதியில் நாம் பார்த்த பல மில்லியன் ஆண்டுகளுக்குமுன், பனியுறை யுகக் காலத்தில், பூமி உறைந்தபோது உருவான பனிப்பாறைகள், சமீப காலம்வரை அப்படியே இருந்தன. வழக்கமாகக் கோடைக் காலத்திற்குமுன், கடலருகில் உள்ள பனிப்பாறைகள் வெப்பத்தினால் உருகி, அட்லாண்டிக் கடலில் மிதக்கும். இங்கிலாந்திற்கும், கனடாவிற்கும் இடையே உள்ள அட்லாண்டிக் கடலில் நடக்கும் வழக்கமான நிகழ்வு இது. டைடானிக் கப்பல் மோதி மூழ்கிய காரணம், இவ்வகை மிதக்கும் பனிப்பாறையால்தான். க்ரீன்லாந்து, கனடாவின் நியுஃபின்லாந்திலிருந்து 2,500 கி.மீ. தள்ளியுள்ளது. நீங்கள் ஒரு நீச்சல் தொட்டியில் ஐஸ் கட்டி ஒன்றை, ஏன் ஒரு நூறு கட்டிகளைப் போட்டாலும், அவை ஒரு எல்லையிலிருந்து மறு எல்லையைத் தொடுவதற்குள் பெரும்பாலும் உருகிவிடுகின்றன. 2,500 கி,மீ. கடந்து கனடாவின் கடற்கரையை அடையும்போதும் பனிக்கட்டிகளாக இருக்கவேண்டுமெனில், அவை எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும்? எந்த ஒரு பனிப்பாறையும், கடலுக்கு மேலே தெரியும் பாகம், அதன் முழு அளவில் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 95%, நீரின் கீழே உள்ள பகுதி. கனேடிய கடற்கரையில் நான் பார்த்தது, நீருக்கு மேல் 30 அடியிலான ஒரு பனிப்பாறை. நியுஃபின்லாந்து, மிகப் பெரிய ஒரு தீவு. ஒரு கோடியிலிருந்து மறுகோடி செல்லவே 15 மணி நேரம் பிடிக்கும். ஏறக்குறைய 2,000 கி,மீ. 2018–ல், தேடிப் பிடித்து ஒரு 30 அடி பனிப்பாறையைப் பார்ப்பது, பெரிய காரியமாகிவிட்டது. இயற்கை வளத்துறை பெண் சொன்னது, ”புவிச் சூடேற்றத்தால், பனிப்பாறைகள் வழியிலேயே உருகிவிடுகின்றன. இப்பொழுதெல்லாம், இவற்றைக் காண்பது அரிதகிவிட்டது.”

இதற்கான முக்கிய காரணம், கடந்த 150 ஆண்டுகளில், மனித நடவடிக்கைகளால் (இதில் பண்ணை வளர்ப்பு மிருகங்களான கால்நடைகளும் அடங்கும்), காற்று மண்டலத்தில் முன்பு இருந்ததைவிட, அதிகமான புவிச் சூடேற்ற வாயுக்கள் (greenhouse gases) கலப்பது என்று விஞ்ஞானிகள் இன்று நிரூபித்துள்ளார்கள். இந்த நிரூபணத்திற்குப் போகுமுன், கடல் மற்றும் உறைந்த பனிப்பாறைகள் பருவநிலையை எப்படி எல்லாம் மாற்றுகின்றன என்று விரிவாகப் பார்ப்போம்.

  1. பூமியின் பரப்பளவில், 71%, கடல் பகுதி
  2. பூமியில் உள்ள நீரில், 97% கடல் நீர்
  3. பூமியின் பரப்பளவில், 10% உறைபனிக்குக் கீழுள்ளது

மேலே சொன்ன மூன்று விஷயங்களும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், பாக்கியிருக்கும் 19% நிலப்பரப்பு, குறைந்து கொண்டே வருவதுதான் பிரச்சினை. அத்துடன், பூமியில் நமக்குக் கிடைக்கும் குடிநீர் வெறும் மூன்று சதவீதம்தான். அதிலும், இரண்டு சதவீதம் மனிதனுக்குக் கிடைக்காமல், எங்கோ தோன்றி எங்கோ மறைகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், பூமியில், 7.5 பில்லியன் மனிதர்களுக்கு தேவையான குடிநீர் என்பது பூமியில் உள்ள நீரில் வெறும் ஒரு சதவீதம்தான்.

கடல் நீரின் அளவு உயர்வதால், இந்தக் கணக்குகள் எல்லாம் மாறும். அத்துடன், பல எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க நேரும். இந்தத் தொடரின் இந்தப் பகுதியையும் அடுத்த பகுதியையும் (நதிகள்) படித்தபிறகு, இது போன்ற சில பேச்சுக்கள் எவ்வளவு அபத்தம் என்பது புரியவரும்:

  1. செய்திகளில், ஸ்விஸ் மலைகளில் பயங்கரப் பனிச்சரிவு என்று அறுக்கிறார்கள். ஆசியாவில் வாழும் நமக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
  2. அண்டார்டிகாவில் ஏராளமான பனிப்பாறைகள் உடைந்தால் நமக்கென்ன?
  3. ஆப்பிரிக்கக் காடுகளில் வறட்சி ஏற்பட்டு மிருகங்கள் இறந்தால் மனிதனுக்கு என்ன தீங்கு?
  4. வட அமெரிக்காவில், காட்டாறுபோல பெரிய நதிகள் வெள்ளப் பெருக்கெடுத்தால் ஆசியக் கண்டத்தினர் ஏன் கவலைப்பட வேண்டும்?
  5. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில், ஒன்றன்பின் ஒன்றாகப் புயல் வந்த வண்ணம் இருந்தால் நமக்கென்ன?

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் இணைப்பது இரு விஷயங்கள்.

  • முதலாவது, நாம் அனைவரும் வாழும் பூமி ஒன்றுதான்.
  • இரண்டாவது, நாம் வாழும் பூமியில் இந்தச் செய்திகளை எல்லாம் இணைக்கும் 97% நீரைக்கொண்ட கடல் மற்றும் அதன் நீர் மூலமான நதிகள் மற்றும் பனிப்பாறைகள்.

கடல் சார்ந்த புள்ளி விவரங்களைப் பார்த்தோம். பனியுறைப் பகுதிகள் என்பது வட மற்றும் தென் துருவங்கள், உயர் மலைப் பகுதிகள். பனியுறைப் பகுதிகள் பற்றிய சில புள்ளிவிவரங்கள்:

  1. பூமியின் பரப்பளவில், 10% உறைபனிக்குக் கீழுள்ளது
  2. ஆர்டிக் பகுதியில் நான்கு மில்லியன் மனிதர்கள் வாழ்கிறார்கள். இதில், 10% பேர் பழங்குடியினர்
  3. தென் துருவத்தில் அதாவது அண்டார்டிகாவில், மனிதர்கள் வசிப்பதில்லை
  4. உயர் மலைப் பகுதிகளில், ஏறக்குறைய 800 மில்லியன் மனிதர்கள் 2050-ல் வாழ்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது

ஆக, பனிப்பாறைகள் அதிகமாக உருகினால் பாதிக்கப்படுவது வெறும் விலங்குகள் மட்டுமல்ல, மனிதர்களும்தான்.

கடலைப் பற்றிய அலசலுக்குப் போகும்முன், மேலும் இரண்டு முக்கியப் புள்ளிவிவரங்களை இங்கு சொல்வது பயனுள்ளதாக இருக்கும்:

  1. உலகின் 10% மக்கள்தொகை கடலருகே வசிக்கிறது. நியு யார்க்காகட்டும், சென்னையாகட்டும், மயாமியாகட்டும், மும்பையாகட்டும், அனைத்தும் கடலோரப் பெருநகரங்கள். 2050–ல், இந்த எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  2. உலகில் சில மாநிலங்கள் (ஹவாய், அந்தமான்) மற்றும் நாடுகள் (சிங்கபூர், கியூபா, ஜமைகா, சேஷல்ஸ்) சிறு தீவுகளே. இதுபோன்ற சிறு தீவுகளில், 65 மில்லியன் மனிதர்கள் வசிக்கிறார்கள்

இங்கு, கடலோர நகரங்கள் மற்றும் சிறு தீவுகளைக் குறிப்பிடக் காரணம், கடல் நீர்மட்ட உயர்வால் உடனடியாகப் பாதிக்கப்படுவது இவ்வகை நகரங்கள் மற்றும் சிறு தீவுகளே. இந்தப் பகுதியின் ஆரம்பத்தில், நியுஃபின்லாந்தில் பனிப்பாறைகளைக் காண்பது அரிதாகிவிட்டது என்று சொல்லியிருந்தேன். காரணம், இந்த இரண்டாகத்தான் இருக்கவேண்டும்:

  1. வட துருவப் பனிப்பாறைகள் அதிகம் சூடேறிய கடலில் கரைந்துவிடுகின்றன
  2. வட துருவத்தில் பனிப்பாறைகளே இல்லை

இதற்குக் காரணம் முதல் வகை என்பதே விஞ்ஞானிகளின் இன்றைய முடிவு. இன்னும், மனிதர்கள் தங்களுடைய சச்சரவுகளால் வழக்கம்போலப் பொறுப்பில்லாமல் இயங்கினால், இன்னும் நூறு வருடங்களில் இரண்டாவது காரணம் உண்மையாகிவிடும். சொல்லப்போனால், பெருவாரியாக நியுஃபின்லாந்தில் பனிப்பாறைகள் நமக்குக் கடற்கரை அருகே காணக் கிடைக்கவேண்டும். இதென்ன புதுப் புதிர்?

ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், நமக்கு 2,000 சதுர கி.மீ. சண்டைகளுக்குக்கே நேரம் போதவில்லை!

சற்று யோசித்துப் பாருங்கள். இத்தனைப் பனிப்பாறைகளும் கடலில் உருகினால், என்ன நடக்கும்?

  1. கடலின் நீர்மட்டம் உயரும்
  2. பல எதிர்பாராத கடல் சார்ந்த பருவ மாற்றங்கள் உருவாகும்

கடல் நீர்மட்ட உயர்வு பற்றிய 2019 விஞ்ஞான அறிக்கை என்ன சொல்கிறது?

  1. 2006 முதல் 2015 வரை க்ரீன்லேண்ட் பனிப்பாறைகள், ஏறக்குறைய வருடத்திற்கு 278 கிகா டன்கள் அளவிற்கு உருகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். இது உலகக் கடல் அளவில் 0.77 மி.மீ.க்குச் சமம்
  2. இதே காலகட்டத்தில், அண்டார்டிகா பனிப்பாறைகள் ஏறக்குறைய வருடத்திற்கு 155 கிகா டன்கள் அளவிற்கு உருகியுள்ளன என்றும் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். இது 0.61 மி.மீ. உலகக் கடல் அளவிற்குச் சமம்
  3. கடலருகே உள்ள பனிப்பாறைகள் உருகுவதால், கடலளவு .77+.61 = 1.38 மி.மீ, உயர்ந்துள்ளது. இது, மிகச் சிறிய உயர்வுபோலத் தோன்றலாம். ஆனால், நிலப்பரப்பில் 71%, கடல் என்பதை மறந்துவிட வேண்டாம்.
  4. இதற்கான காரணம், ஆர்டிக் கடல் பகுதிகளில் கோடை காலத்தில் (summer) பனிப்பாறைகள் ஏராளமாக உருகுவதும், வசந்த காலத்தில் (spring) பனிப்பாறைகளின் ஆழம் மிகவும் குறைவாக இருப்பதும் என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்
  5. 1970 முதல், பூமியின் கடல் பகுதிகள் சூடாகிக்கொண்டே வந்துள்ளன. மனிதர்களின் நடவடிக்கைகள் உருவாக்கும் புவிச் சூடேற்ற வாயுக்கள் மூலம் உருவாகும் சூட்டில் 90%-தை, கடல் உள்வாங்கிக் கொள்கிறது. எங்கோ டில்லியில் இயங்கும் அனல் மின் நிலயத்தின் அதிகபட்ச உமிழ்வால் உருவாகும் சூடு, காற்று மண்டலம் வழியாகக் கடைசியில் கடலை அடைந்து, கடலால் உள்வாங்கப்படுகிறது. 1998 முதல், 1970–ஐக் காட்டிலும் இந்த அதிகபட்சச் சூடேற்றம் இரட்டிப்பாகியுள்ளது
  6. பெரும்பாலும், அதிகரித்த கரியமில வாயுவில் 90%-ஐ உள்வாங்கிய கடல் என்னவாகும்?
    1. கடலின் மேற்பகுதி, கரியமில வாயு கலப்பதால் அமிலத் தன்மை அடைகிறது. உடனடியாக இதனால் பாதிக்கப்படுவது கடலில் வாழும் உயிரினங்களே. அவை உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜன், மேல்மட்டத்தில் குறையும்
    2. நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், கடலில் ‘வெப்ப அலைகள்’ உண்டு. நிலத்தில், வெப்ப அலை மனிதர்களைப் பாதிக்கிறது. ஆனால், கடலில் அலுத்துக்கொள்ள மனிதர்கள் இல்லை. அவ்வளவுதான். 1982 முதல் 2016 வரை, செயற்கைக்கோள் வாயிலாக இவற்றைக் கண்காணித்ததில், கடலில் வெப்ப அலைகள் இரட்டிப்பாகி உள்ளன
    3. மேலே சொன்ன இரண்டு விஷயங்களால், கடலின் மேல் அடுக்குகள் ஒரு பக்கம் அமிலத்தன்மை அடைகின்றன; மற்றொரு பக்கம், உருகும் பனிப்பாறையினால் உப்புத் தன்மை, அதாவது மேல்மட்டக் கடல் நீரின் அடர்த்தி குறைகிறது; மூன்றாவதாக, மேல்மட்ட அடுக்கு (200 அடி வரை) வெப்பமாகிறது. இந்த மூன்று காரணங்கள், மேல்மட்ட கடல் நீர் முன்பு இருந்ததைவிடக் குறைவாக ஆழ்மட்ட நீருடன் கலக்கிறது. இது மிகவும் அபாயமானது. 200 அடிக்குகீழே உள்ள கடல் நீர் மிகவும் குளிரானது. இது இப்படியே தொடர்ந்தால், வட துருவத்தின் அருகில் உள்ள நாடுகளில் நீண்ட குளிர் காலமும், தென் பகுதிகளில் ஏராளமான வெப்ப அலைகளும், நீண்ட கோடைக் காலமும் சாதாரணமாகிவிடும். ரத்த ஓட்டம் சரியாக நிகழாத மனித உடலுக்கு இது சமம். இயற்கைக்கு நாம் ரத்த மெலிவூட்டி (blood thinner) சேர்த்துச் சரிகட்ட முடியாது
    4. அத்துடன், இது தொடர்ந்தால் கடந்த 20 ஆண்டுகளாகப் பார்க்கும் அதிகப் புயல்கள், திடீர்ப் பெரு மழை (flash floods) மற்றும் உயிர், பயிர் மற்றும் உடைமைச் சேதம் கட்டுக்கடங்காமல் உயரும்
    5. கடலில் வாழும் உயிரினங்கள், நிலத்தில் உள்ளதைப்போலப் புதிய மாற்றங்களைச் சமாளிக்க முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெறலாம்; அல்லது தோல்வியுற்று மடியலாம். இதனால், கடல் உணவு குறைவதை இன்றே நாம் பார்க்கிறோம்.
    6. கடலளவு உயர உயரச் சதுப்புநிலக் காடுகள் (mangrove forests) கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை நோக்கிப் பரவும். இதனால், சதுப்பு நிலக் காட்டை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும் பாதிக்கப்படும். அமெரிக்காவின் ஃப்ளோரிடா போன்ற மாநிலங்களில், இது இன்றே கண்கூடு

அடுத்தது, மலைகளில் பனிப்பொழிவு குறைவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்:

  1. 2013–ல் உத்தராஞ்சலில் இருக்கும், கேதாரநாத் மலைப் பகுதியில் வந்த காட்டு வெள்ளத்திலிருந்து அந்தப் பகுதி இன்னும் மீளவில்லை. திடீரென்று உருவான பருவக்காற்று, மிக அதிகமான மழையைப் பொழியச்செய்து, நதிகள் பெருக்கெடுத்து, அணைகள் உடைந்து, பல்லாயிரம் மக்கள் இறந்தனர், இந்திய ராணுவம் களத்தில் இறங்கிப் பலரைக் காப்பாற்றியது, அந்தப் பகுதியின் கட்டுமானம் முழுவதும் பாதிக்கப்பட்டது. கடந்த நூறு வருடங்களாக, இதைப் போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை. அடுத்த கேதார்நாத் எங்கு, எப்போது என்பது மட்டுமே கேள்விக்குறி
  2. மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில், மலைகளில் உள்ள பனிப்பாறைகள் குறைந்து வருகின்றன. மலைப்பனியாறுகள் (glaciers), பின்வாங்கிய வண்ணம் உள்ளன. இதனால், வசந்த காலத்தில் பனி உருகி நதிகளில் வெள்ளம் என்பது வசந்த காலத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுகிறது. இவ்வகை நதிப்பெருக்கு எதிர்பாராத விதமாக இருப்பது ஒரு பெரிய பிரச்சனை. இந்த நதிப் பெருக்கை நம்பியிருக்கும் மின் உற்பத்தி நிலையங்களும் விவசாயமும் பாதிக்கப்படுகின்றன. மேலும், இவ்வாறு சீக்கிரமாகவே பெருக்கெடுத்த நதி, கோடைக் காலத்தில் வற்றிவிடுகிறது. இதனால், மேய்ச்சல் நிலங்களும் மலை சார்ந்த பகுதிகளில் குறையத் தொடங்கிவிட்டன
  3. சுற்றுலா வாய்ப்புகள் குறைந்து வருவதற்கு மேற்கு அமெரிக்கா, கனடாவில் மலைப்பனியாறுகள் பின்வாங்குவதும் காரணம்
  4. கனடாவின் பிரிடிஷ் கொலம்பியாவின் புகழ்பெற்ற சறுக்கும் மலைச்சாரலில், அடிக்கடிப் பனிச்சரிவு என்பது வழக்கமாகிவிட்டது. விஞ்ஞானம் வளர்ந்த இந்தக் காலத்திலும், பனிச்சரிவுகள் முழுவதும் புரிந்து கொள்ளப்படாத ஒரு நிகழ்வு
  5. பனிப்பொழிவு குறைவதால், இன்னொரு மிக முக்கிய விவசாயப் பிரச்சனை, தரைக்கு அடியில் உள்ள பனி. இது ஆங்கிலத்தில் permafrost என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கிய ஒரு மாதத்தில், மண்ணில் விதை விதைத்துப் பயிர் வளர permafrost மிகவும் அவசியம். Permafrost குறைந்தால், பயிர் விளைச்சலும் குறைந்துவிடும். இன்று, வட அமெரிக்க விவசாயிகள் (குறிப்பாகக் கனடா) சிறிய கால தாமதத்தைச் சமாளித்து வருவதோடு, நிலமை மோசமாவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஓரளவிற்குமேல் இதைச் சமாளிப்பது முடியாத காரியம்

நாம் எதுவும் செய்யாமல் இப்படியே காலம் தள்ளினால், கடல் மற்றும் பனிப்பாறைகள் எப்படிப் பருவநிலைகளைப் பாதிக்கும்?

  1. கையிலுள்ள பருவநிலை அளவுகளை மாதிரியுறுக்களின் மூலம் ஆராய்ந்ததில், 2015-லிருந்து 2100-வரை மலைப்பனியாறுகள் 18% முதல் 36% வரை குறைய வாய்ப்புண்டு. நாம் இன்று அனுபவிப்பது வெறும் 15%தான். யுரோப், கிழக்கு ஆப்பிரிக்கா, ஆண்டீஸ் மலைகளின் பூமத்திய ரேகை அருகே இருக்கும் பகுதி மற்றும் இந்தோனேசியா போன்ற இடங்களில் உள்ள சிறு மலைப்பனியாறுகள் 80% வரை குறைந்துவிடும்
  2. தரையடிப் பனி, 2100–ல் இன்றைய நிலையைவிட, 24% முதல் 69% வரை குறையும் என்று விஞ்ஞானிகள் மாதிரியுருக்கள் மூலம் கணக்கிட்டுள்ளார்கள். இது, 40%-க்கு மேலே சென்றால், பயிர்களை உருவாக்கப் புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்
  3. கடலின் மேல்தட்டு வெப்ப அளவு 1970 முதல் அளக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானிகளின் கணக்குப்படி, 2100 –ல் 1970 அளவைவிடக் கடலில் மேல்தட்டு வெப்ப அளவு (கடலில் மேல் 2,000 மீட்டர்கள்), ஐந்து முதல் ஏழு மடங்காக உயரும். .இதை ஒரு புள்ளிவிவரமாக மட்டுமே பார்க்க வேண்டாம். வட யூரோப் மற்றும் கனடாவில் கோடைக் காலத்தில் எப்படி வெப்ப நிலை உருவாகிறது? பூமத்திய ரேகை அருகே உள்ள சூடான கடல் நீர் வடக்கே நகரும். அதேபோல, ஆர்டிக் கடல் நீரின் குளிர் தெற்கே நகரும். இந்த அடிமட்டக் கடல் அலை, வட அரைக்கோளத்தின் பருவநிலையைத் தீர்மானிக்கிறது. இந்தக் கடல் நீரில், வெப்ப அளவு வேறுபாடு மிகவும் அவசியம். வேறுபாடு குறையக் குறைய, அடிமட்டக் கடல் அலை குறையும். இது இன்னும் ஒரு 200 ஆண்டுகள் தொடர்ந்தால், பருவநிலை இரண்டில் ஒன்றாக மாறும். முதல் அனுமானம், எங்கும் வெப்பமயமாகலாம்; திடீர் வெள்ளப் பெருக்கு, எல்லாவற்றையும் நாசம் செய்யலாம். இரண்டாவது அனுமானம், முழுவதும் பனியுறை யுகத்தில் இருந்ததைப்போல, எல்லா இடங்களும் மெதுவாக உறைந்து போகலாம்
  4. ஒன்றை எல்லா மாதிரியுருக்களும் நிச்சயமாகக் கணக்கிட்டுள்ளன. 2100-ல், சராசரிக் கடலளவு ஒரு மீட்டருக்கு அதிகமாக உயரும். 20–ஆம் நூற்றாண்டு முழுவதும் கடலளவு வெறும் 15 செ.மீ.தான் உயர்ந்தது. ஒரு மீட்டர் என்பது மிகவும் அபாயகரமான விஷயம். இன்றைக்கு உலகில் உள்ள பல சிறு தீவுகள் மற்றும் மாநிலங்கள் மறைந்துவிடும். பங்களாதேஷ் போன்ற கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள நாடுகளின் கதியை நினைத்தால் கலக்கமாகவே உள்ளது. 2050–க்குள், கடலோர நகரங்கள் பெருவாரியாக வெள்ளம் மற்றும் நில இழப்பைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது.

பெருவாரியான நாடுகள், விவசாயத்திற்கு நதிகள் மற்றும் ஏரிகளை நம்பியுள்ளன. அடுத்த பகுதியில், புவிச் சூடேற்றத்தால் எந்த வகை மாற்றங்களை நாம் சந்திக்க வேண்டிவரும் என்ற விஞ்ஞானப் பார்வையை முன்வைப்போம்.

(தொடரும்)

Series Navigation<< புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3 >>

2 Replies to “பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?”

  1. Ravi

    The entire problem is because of Life style and Population explosion. We can not go back in life style. I hope population will be controlled and face a decline. Will Nature adjust and become normal as previous centuries in next century or global warming can not be reversed even Mankind population is drastically reduced?

    Your Opinion

  2. உங்களது கேள்விக்கு பதிலளிக்க தாமதத்திற்கு வருந்துகிறேன்.

    உங்களது காரணிகள் சரியானவை. ஓரளவிற்கு அடுத்த பத்தாண்டுகளில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலும் காரியம் – வாழ்க்கை முறை. டாம் ஃப்ரீட்மேன், வளரும் நாடுகளைப் பார்த்து, Too many Americans என்று கிண்டலடிப்பார். இது முற்றிலும் சரி. ஏதோ இரண்டு, மூன்று கார் தயாரித்த இந்தியா, இன்று உலகின் மூன்றாவது பெரிய தயாரிப்பாளர்.. அரசாங்கக் கட்டுப்பாட்டில் தட்டுத் தடுமாறி கருப்பு தொலைபேசிகள் போய், உலகின் இரண்டாவது பெரிய செல்பேசி சந்தை இந்தியா.

    பிரச்சினை வளர்ச்சியைக் காட்டும் அளவுகோள்கள். உயரிய சிந்தனையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதை வளர்ச்சியாக யாரும் பார்ப்பதில்லை – கார், குளிர்சாதனப் பெட்டி, பைக், அடுக்கு மாடிக் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் என்று இதையே வளர்ச்சியாக கருதுகிறோம். இதில் ஒவ்வொன்றும் தொல்லெச்ச எரிபொருள் தேவையை அதிகரிக்கும் விஷயங்கள். ‘நாங்கள் வளர்ந்த நாடுகள்’ என்று காட்டிக் கொண்டதை, அப்படியே வளரும் நாடுகளும், ‘நாங்களும் வளருகிறோம்’ என்று மேலும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகின்றன. வளரும் நாடுகளில், வளர்ந்த நாடுகளை விட 3 முதல் 4 மடங்கு மக்கட்தொகை அதிகம்!

    மக்கட்தொகை 9 பில்லியன் என்ற கணக்கில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும் என்பது அறிஞர்களின் யூகம். இதற்கு, அடுத்த 20 ஆண்டுகளில், கல்வியில் முதலீடு மிக அவசியம்.

    இயற்கைக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியும். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையில் மனிதர்கள் பலியாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை. 4.6 பில்லியன் ஆண்டுகள் நிலைத்த பூமிக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதா என்ன? 20,000 ஆண்டுகள் இந்த கோளில் வாழ்ந்துள்ள மனிதனுக்கு தன்னைக் காத்துக் கொள்ளத் தெரியுமா என்பதே முக்கிய கேள்வி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.