பவளமல்லி

“துளசி, செவாய்க்கிழமை அங்க நம்ம வீட்டுக்கு வந்துச்சுங்களா?” என்று கேட்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பதற்குள் வாய்க்குள் இருந்து வந்துவிட்ட கேள்வியை என்ன செய்வது என்று தெரியாமல் கேட்டுவிட்டார் அம்மா. நன்றாக வெந்து இருந்த வெண்டைக்காயைத் தேவைக்கு அதிகமாகவே நசுக்கிச் சோற்றில் பிசைந்த வள்ளி அத்தை “துளசிக்கென்ன காலைல எட்டு மணி பஸ் ஏறுனா, சாயந்திரம் ஆறு மணி வண்டிக்கு ஊட்டுக்கு வந்தாதான் யாரு கேக்கறாங்க. அம்மாவாசை கோயிலுக்கு போயிட்டு அப்படியே உங்க அய்யனப் பாக்க வந்துட்டுதான் போச்சு.” என்று பேச்சோடு வேகவேகமாகச் சோற்றை விழுங்கிவிட்டு, கையைக் கழுவிப் புடவையில் துடைத்தபடியே “மாசி மாசம் நம்ம கோயில்ல பொங்க வைக்கலாம்னு இருக்கிறாளாம். இப்ப என்ன வேண்டுதல் இருக்கு இவளுக்கு பொங்க வைக்க?” என்று சொல்லிக்கொண்டே கட்டைப் பையை எடுத்தார். ” பஸ்சுக்கு சில்லறை எடுத்துக்கிட்டீங்களா ” என்ற அம்மாவிடம் ” போய் மாவு வேற ஆட்டனும்” என்று சொல்லிக் கிளம்பினார். குக்கருக்கு வாஷர் மாத்த, ஜாக்கெட் பிட் எடுக்க என்று எப்படியும் மாதம் ஒரு முறை வள்ளி அத்தை ஊரில் இருந்து இங்கு வருவார். ரொம்ப தூரம் எல்லாம் இல்லை, முப்பது கிலோ மீட்டர்தான் இருக்கும் அத்தையின் ஊருக்கும் எங்கள் வீட்டுக்கும்.

வள்ளி அத்தை அவ்வளவு சுறுசுறுப்பு, ஒரு நாளில் எத்தனை வேலைதான் செய்வார் என்றில்லை.

தோட்டத்தில் வெண்டைக்காய், கத்தரி என்று சீசனுக்கு விளையும் காய்கறி போடுவார், மார்க்கெட்டில் சேர்த்து காசுவாங்குவது வரை வள்ளி அத்தை தான். தண்ணீர்பாயும் வரப்பில் முல்லை செடி வளர்ப்பார், அந்த பூவையும் மூன்று நாளுக்கு ஒரு முறை பறித்து கட்டி ஸ்கூல் டீச்சருக்கு இருபது ரூபாய்க்கு விற்றுவிடுவார், பால் பீச்சுவது, உரக்கடைக்கு போவது எல்லாம் வள்ளி அத்தை தான். மாமா “மணி மூணாவது” என்று பால் பீச்சும் நேரம் நெருங்கியதும் சொல்வது, “இந்த வாரம் வியாழக்கிழமை உரம் போடணும்” என்று காலண்டர் கிழித்துக்கொண்டே சொல்வது மட்டும்தான்.

வள்ளி அத்தைக்கு எப்பவும் துளசி சித்தியிடம் பிடிக்காத ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கும். “ஏன் அந்த ஜாக்கெட்டதான் கொஞ்சம் லூசா போடறது” என்பதில் ஆரம்பித்து “முந்தானைய இடுப்புல சொருவுனா சாதியவிட்டுத் தள்ளி வச்சிருவாங்களா, இன்னும் நாலு புள்ளைக்குக் கல்யாணம் பண்றவளாட்டம் ஒரு கோயில் உடறதில்ல ஒரு விரதம் பாக்கி இல்ல” என்று இது அனைத்தையும் அம்மாவிடம்தான் கேட்பார்.

கண்மணி சித்தி மகன் ரமேஷ் அண்ணா புதிதாக வாங்கிய பைக்கில் துளசி சித்தியை வைத்து எங்கள் வீட்டுக்கு ஓட்டி வந்தபோதுதானா வள்ளி அத்தை இங்கு இருக்க வேண்டும். “பரவால்ல இனி துளசி வண்டியிலேயே சுத்திக்கலாம்” என்றபோது வெளிப்பட்ட குரூரத்தின் சூடு தாங்காமல் துளசி சித்தி வாடிப்போனாள். இத்தனைக்கும் ரமேஷ் அண்ணாவுக்கும் துளசி சித்தி, சித்தி முறைதான்.

எங்கள் வீட்டுக்கும் துளசி சித்தி வீட்டுக்கும் பஸ்சில் போனால் நாலு ஸ்டாப் தான். அடிக்கடி ஒன்றும் செல்ல மாட்டோம்.

துளசி சித்தி அம்மாவின் உடன் பிறந்த தங்கச்சி இல்லை. எங்க அம்மச்சியும் துளசி சித்தியின் அம்மாவும் அக்கா தங்கைகள். என் அம்மாவுக்கு உடன் பிறந்த தங்கைகள் யாரும் இல்லாததால் துளசி சித்தி, திருப்பூரில் இருக்கும் அம்மச்சியின் இன்னொரு தங்கை மகளான கண்மணி சித்தி எல்லோரும் அம்மா மேல் பிரியமாக இருப்பார்கள்.

துளசி சித்தியின் அம்மாவும் அவருடன் தான் இருந்தார். அவரை நாங்கள் சின்ன அம்மச்சி என்போம். வீட்டுக்குள்ளே தான் அவரின் நடமாட்டம். துளசி சித்தி வீட்டிலேயே மெஷின் போட்டு துணி தைத்து கொடுத்து கொண்டிருந்தார். ஜாக்கெட் நன்றாக தைப்பார். வள்ளி அத்தை சித்தியிடம் தைக்க கொடுக்க மாட்டார்.

பத்து வருடமாக தான் சித்தி தையல் வேலை செய்கிறார். சித்திக்கு கல்யாணம் பண்ணும் போது அவருக்கு தையல் என்ன சமையல் கூட முழுதாக தெரியாது. சித்தியின் அப்பா, எங்க சின்ன தாத்தா போலீஸில் ஏட்டாக இருந்தவர். அவருக்கும் சின்ன அம்மச்சிக்கும் சித்தி ஒரே பெண். அவர்கள் கல்யாணம் பண்ணி பதிமூணு வருடம் கழித்து பிறந்தவராம். சித்தியின் கல்யாணத்தின் போது சின்ன தாத்தா வேலையில் இருந்து வீ ஆர் எஸ் வாங்கி கொண்டு வீட்டில் தான் இருந்தார்.

சித்திக்கு இருபத்து நாலு வயதில் கல்யாணம் நடந்தது. அப்போதே எல்லோரும் மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயசு கூடத்தான் போல என்று பேசிக்கொண்டார்கள். அவருக்கு என்ன வயசு என்று தெரியவில்லை. ராசு சித்தப்பா வீட்டில் அவர்கள் சித்திக்கு எடுத்திருந்த நாவல் பழ நிறத்தில் ப்ளூ பார்டர் போட பட்டுபுடவையில் நன்றாக தூக்கி சீவிய தலையில் மல்லிகை பூவுடன், சின்ன நெற்றியும், எடுப்பான மூக்குமாக சித்தி அழகாக இருந்தார். சித்தப்பா பக்கத்தில் சித்தி இன்னும் அழகாகவே தெரிந்தார்.

கல்யாண சலுப்பு எல்லாம் முடிந்து, கல்யாணம் முடிந்த இரண்டாம் நாள் தலைக்கு தேய்ப்பதற்கு தேங்கா எண்ணெய் பாட்டிலை எடுத்து வைத்துக்கொண்டு நானும் அம்மாவும் கம்பி திண்ணையில் உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தோம். வேலு தான் மூச்சிரைக்க சைக்கிள் மிதித்து வந்து தகவல் சொன்னான். வேலு, உத்திரசாமி அண்ணன் குட கம்பெனியில் குடம் ஓட்டுபவன். உத்திரசாமி அண்ணன் ரெட்டியபட்டியில் இருந்து இங்கு வந்த போதே. கூட வேலைக்கு கூட்டி வந்த பையன் தான் வேலு.

துளசி சித்தி வீட்டை ஒட்டி இருக்கும் காலி இடத்தில் தான் அவர் பிளாஸ்டிக் குடம் தயார் செய்யும் சின்ன ஒரு கம்பெனி வைத்திருந்தார்.

அம்மா போட்டது போட்டபடி வேலுவுடன் சைக்கிளில் சென்றார்.

அடுத்த நாள் சாங்கியத்தில் தான் நான் சித்தியை பார்த்தேன். மேலே ஒரு வெள்ளை புடவை போர்த்தி ஈர தலையுடன் அழைத்து வந்த சித்தியை தான் முதல் கை சோற்றை கூரை மேல் வீச சொன்னார்கள். சோற்றை வீசி விட்டு கும்பிட்டு உள்ளே போகப்போன சித்தியின் காலில் விழ போன ராசு சித்தப்பாவின் அம்மா ” இப்படி பண்ணுவான்னு எனக்கு தெரீல அம்மிணி” என்று அழுதார்.

உள்ளறையில் இருந்த வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகர் படத்தை தாத்தா அதே நாள் வாய்க்காலில் வீசிவிட்டு வந்தார்.

பருப்புக்காராம்மா மகளை கட்ட ராசு சித்தப்பா பலரிடம் சொல்லிவிட்டு பெண் கேட்டுள்ளார். அவர் மகளுக்கும் சித்தப்பா மீது விருப்பம் தான். பருப்புக்காராம்மா, கடைசி வரை அவர் மகளை கட்டிவைக்காததால், சித்தப்பாவின் வீட்டில், துளசி சித்தியை பேசி முடித்தார்கள். கல்யாணம் முடிந்த இரண்டாம் நாள் ராசு சித்தப்பா மருந்து குடித்து விட்டார். இதை எல்லாம் எனக்கு சொன்னது வள்ளி அத்தை.

பதினாறாம் நாள், எல்லோரும் துளசி சித்திக்கு கலர் புடவையே வைத்து தந்தார்கள். அந்த புடவை எதையும் சித்தி கட்டவில்லை. சந்தன கலர், சாம்பல், வெளுத்த மர கலர் என்று கொஞ்சம் வெளுத்த வண்ணங்களில் அம்பர் புடவை கட்ட துவங்கினாள். சின்ன ஜிம்மிக்கியை கழற்றி விட்டு ஒத்தை சிகப்பு கல் தோடு என்று அவளாகவே கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொண்டாள். சின்ன தாத்தாவும் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க துவங்கினார். காரியம் முடிந்த நாள் முதலே, வீட்டு சமையல் எதிலும் சின்ன அம்மச்சி மஞ்சள் போடுவதை நிறுத்தினார். மஞ்சள் பொடியை கையால் தொட கூட மாட்டார். அதன் பின் மூன்று வருடத்தில் தாத்தாவுக்கு காமாலை வந்திருந்த போது வைத்தியம் பார்க்கும்போதும் குடித்ததில் தாத்தா இறந்தும் போனார்.

இப்போதெல்லாம், துவைத்து துவைத்து நனைந்ததற்கும் மென்மைக்கும் இடைப்பட்ட ஒரு பதத்தில் இருக்கும் அம்பர் புடவையில் சித்தியை பார்க்கும் போது, வெளுத்த பால் அப்பத்தின் மீது பூஞ்சான் படர்ந்தது போல இருக்கும்.

தாத்தாவின் சாவுக்கு ராசு சித்தப்பாவின் அம்மா வந்திருந்தார். அவர் தான் சித்தியின் மறு கல்யாண பேச்சை ஆரம்பித்தார். அவரும், அம்மாவுடனும், கண்மணி சித்தியுடனும் தன்னால் முடிந்த அளவு முயன்றார், வந்த ஒன்று ரெண்டு சம்பந்தமும் கல்யாணம் வரை வரவில்லை. சித்தியின் முப்பத்தைந்து வயது வரை கூட சித்தி ஏதாவது அமைந்து விடும் என்று தான் நம்பினாள். ஆனால் வருவது எல்லாம் பத்து வயது வித்தியாசம் உள்ளவர், வேலை வெட்டி எதுவும் இல்லாதவர், கல்யாணவயசை நெருங்கும் மகளை வைத்திருந்தவர்…என்று ஒரு கட்டத்தில் வெறுத்துப்போனார் சித்தி. சத்தமில்லாமல் வள்ளி அத்தை அம்மாவிடம் சொல்லுவார் ” அப்புறம் நமக்கும் வயச பாக்கணும்ல, நெனைக்கற மாதிரியே கெடைக்குமா …”.

யாரும் சொல்லாமலே கல்யாண பேச்சுக்கள் ஒரு கட்டத்தில் ஓய்ந்தன.

சித்திக்கும் சின்ன அம்மச்சிக்கும் அவசரத்திற்கு சிறு சிறு உதவி செய்வது உத்திரசாமி அண்ணன் தான். அவர் தான் சித்தியை தையல் கற்றுக்கொள்ள சொல்லி அதன் காரணமாகவேணும் வீட்டில் இருந்து கொஞ்சம் வெளியே போக வர செய்தார். கரண்ட் பில் கட்ட கூட கூட்டிப்போய் பழக்கினார். சித்தி அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தைத்து கொடுக்க ஆரம்பித்தபோது உத்திரசாமி அண்னன் தான் போர்டு எழுதி வந்து மாட்டினார்.

அவருக்கு அங்கு ரெட்டியபட்டியில் குடும்பம் உண்டா இல்லையா என்று வள்ளி அத்தையால் கூட துப்பு துலக்க முடியவில்லை. வேலு தான் கம்பெனியிலேயே அவருடன் இருப்பான். சமையலும் அவன் தான்.

ஒரு நாள் நான் சித்தி வீட்டுக்கு மருதாணி பறிக்க சென்ற அன்று தான் உத்திரசாமி அண்ணன் வீட்டின் முன் வாசலில் பவளமல்லி செடி ஒன்றை நட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டது. முதலில் பூத்த பூவை சித்தி பறித்த கிண்ணத்துடன் என்னிடம் தான் தந்தாள். உத்திரசாமி அண்ணன் தான் பவளமல்லி பூக்கள் கீழே விழாமல் இருக்க ஒரு துணியை அதன் கீழ் கிளையில் கட்டிவிட்டிருந்தார்.

பிரதோஷத்திற்கு சித்தி பவளமல்லி பூ மாலை கட்டித்தருவார் .

கம்பெனி வேலை முடிந்த நேரத்தில் உத்திரசாமி அண்ணன் வெளி வாசலில் உட்கார்ந்து சின்ன அம்மச்சியுடனோ, துளசி சித்தியுடனோ பேசி கொண்டிருப்பார்.

துளசி சித்தியை அவர் வீட்டில் விட போனால் சில நாட்கள் இரவு தங்கி இருக்கிறேன். சித்தி செய்தி தவிர வேறு எந்த சேனலும் பார்க்கமாட்டாள். நான் தூக்கம் வரும் வரைக்கும் ஏதாவது பாட்டு பார்த்தால் ” சத்தத்தை கம்மியா வச்சுக்கோ” என்று விட்டு அந்த பாட்டு சத்தம் துளி கூட தன் காதில் விழாத தூரத்தில் வெளி வாசலில் உட்கார்ந்து கொள்வாள். உறங்கும் வரையில் கடலைக்காய் உரித்து கொண்டோ, தைத்த ஜாக்கெட்டுக்கு ஹெம்மிங் செய்து கொண்டோ இருப்பாள்.

விளையாட்டு போல ஒரு நாள் நான், “சித்தி உன் கல்யாண போட்டோவையுமா தாத்தா வாய்க்கால்ல போட்டுட்டாரு” என்று கேட்டேன், ” கல்யாணமே ஏதோ கனவுல நடந்த மாதிரி இருக்கு, போட்டோ எங்கன்னு தெரில” என்ற போது அவர் அப்படியே தண்ணீரில் கரையும் உப்பு போல உள்ளுக்குள் கரைவதை உணர்ந்தேன்.

ஒரு நாள், துளசி சித்தியின் வீட்டில் இருந்து நேராக எங்கள் வீட்டிற்கு வந்த வள்ளி அத்தை, காபியை குடித்துக்கொண்டே. ” கம்பெனிக்காரர் இல்லாம அங்க ஒன்னும் நடக்கிறது இல்ல. செடிக்கு மருந்து அடிக்கிறதென்ன, துளசி டீ போட்டு வேலு கிட்ட குடுத்து உடறது என்ன, ம் ம்” என்றார். அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

இது நடந்து கொஞ்ச நாளில் வள்ளி அத்தை மாடு கண்ணு போட்டது என்று சீம்பு பால் காய்ச்ச, பாலை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தார். நான் தான் போய் துளசி சித்தியை ஸ்கூட்டியில் அழைத்து வந்தேன். காய்ச்சி, துண்டுகளாக்கி சம்படத்தில் போடும்வரை சும்மா இருந்த வள்ளி அத்தை , ” அட இன்னும் தான் ரெண்டு துண்டு போட்டுக்க, கம்பெனிக்காரர் சாப்பிடுவாரோ என்னமோ” என்றார். துளசி சித்தி சிரித்து கொண்டே சம்படத்தை மூடினாள். போகும் வழியில் ” நீங்க எல்லாம் தான் உங்க ப்ரெண்டுங்கறீங்க, வாத்தியார் சாருங்கறீங்க, கூட வேல செய்யறவருங்கறீங்க……நான் கம்பெனிக்காரர்ங்கிறேன் …” என்று சொல்லிவிட்டு,வீடு போகும் வரை எதுவும் பேசவில்லை.

உத்திரசாமி அண்ணன் சின்ன அம்மச்சிக்கு இளநி வெட்டிக் கொடுத்துவிட்டு வெளிவாசல் படியில்தான் உக்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்து எப்பவும் கூப்பிடுவதுபோல ” கண்ணு …” என்று சிரித்தார். என்னிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் சித்தி வண்டியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

இது எல்லாம் நடந்து ஒரு மாதம் கழித்துப் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா போட்டபின் மாவிளக்கு வைக்க என்றைக்கு போகலாம் என்று துளசி சித்தியிடம் கேட்டுவரச் சொன்னார் அம்மா. “நான் எங்க வர்றது, மாவு வேணா இடிச்சு தரேன், நீங்க போய் விளக்கு போடுங்க” என்றாள்.

அம்மாவாசைக்கும் சித்தி ஊருக்குப் போகவில்லை.

முன்னரே அப்போ அப்போ சிரமப்படுத்திய சரவாங்கி தீவிரமாக, அந்த வருட மார்கழியில் கம்பெனியை முழுதாக நிறுத்திவிட்டு வேலுவையும் கூட்டிகொண்டே உத்திரசாமி அண்ணன் ரெட்டியபட்டிக்கு குத்தகைக் காட்டுக்கு போய்விட்டார்.

துளசி சித்தி அதன் பின்னர் பவளமல்லிப் பூக்களை எனக்குத் தருவதில்லை, பறிப்பதுகூட இல்ல, செடியிலேயே விட்டுவிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.