Shawshank Redemption

American Film Institute நூறு அமெரிக்கப் படங்களை செலக்ட் செய்து வரிசைப் படுத்தி வைத்திருக்கிறது. அதில் இந்தப் படத்தின் ரேங்க் என்னவோ #72 தான். ஆனாலும் என்னுடைய ‘பர்சனல் டாப் 10 உலகப் படங்கள்’ வரிசையில் Shawshank Redemption உண்டு என்கிற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத த்ரில்லர்!
சென்ற வாரம் கூட நெட்பிளிக்ஸிலும் அமேசானிலும் சரியான தீனி கிடைக்காத பொழுது, நான் விரும்பிப் பார்த்த அபாரமான பழைய படம். இதுவரை எத்தனை முறைதான் பார்த்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஸ்க்ரிப்டிலும், நடிப்பிலும், காட்சியமைப்பிலும் புதுப்புது அர்த்தங்கள் நம் கண் முன்னே விரியும். அப்பேர்ப்பட்ட பொக்கிஷம் இந்தப் படம்!
இந்தப் படத்தைப் பற்றிய பல விவரங்களும் கேட்கவும் பார்க்கவும் எப்போதும் அலுக்காத ரகம்.
மார்கன் ஃப்ரீமேனும் டிம் ராபின்சும் அவ்வளவு திறமையாக பிரேமுக்கு பிரேம் போட்டி போட்டுக்கொண்டு இயல்பாக நடிப்பார்கள். மார்கன் ப்ரீமேனின் குரல் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். கிளின்ட் ஈஸ்ட்வுட், ஹாரிஸன் ஃபோர்ட், பால் நியூமன், ஜீன் ஹாக்மன், ராபர்ட் ரெட்ஃபோர்ட், ராபர்ட் டுவால் போன்ற பல பேரைப் பின்தள்ளி மார்கன் இந்த படத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்படி ஒரு பேஸ் வாய்ஸ்! Authoritative, soothing and yet mellow and mature voice. I am in love with his voice!
VO என்கிற ‘வாய்ஸ் ஓவ’ரிலேயே கதையின் போக்கைச்சொல்லி விடுகின்ற உத்தி இந்தப் படத்தால் தான் பிரபலம் ஆயிற்று என்றே சொல்லலாம். சமூகக் கதைகளுக்கு அது ஓகே, ஆனால் ஒரு த்ரில்லர் படத்துக்கு வாய்ஸ் ஓவரை வைத்தே பெரும்பாலான கதை சொல்வது ஒரு புது யுக்தி என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தப் படத்தின் ஹீரோ டிம் ராபின்ஸ் என்பதை எல்லோரும் அறிவீர்கள். அவர் ஒன்றும் அப்படிப்பட்ட சூப்பர்ஸ்டார் கிடையாது. இந்தப் படத்திற்கு முன் அவருக்கு நம் கோடம்பாக்கம் பாஷையில் சொல்வதென்றால் ‘மாஸ்’ கிடையாது. அவர் ஒரு நல்ல நடிகர். சல்தா ஹை, அவ்வளவுதான்.
1984ல் திகில் கதை மன்னன் ஸ்டீபன் கிங் எழுதிய புத்தகத்திற்கு 1992ல் அவருடைய நண்பரான ஃப்ரஞ்ச் அமெரிக்கன் இயக்குனர் ஃப்ராங்க் டேரபாண்ட் அபாரமான ஒரு திரைக்கதை எழுதி முடிக்கிறார். ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து செதுக்குகிறார், ஒவ்வொரு டயலாக்கிலும் அவ்வளவு அக்கறை. அபாரமான திரைக்கதை என்பதால் பெரிய ஸ்டூடியோக்கள் அதைத் தயாரிக்கப் பெரும் போட்டி போடுகின்றன.

“எல்லாமே நல்லா வந்திருக்கு. டீசண்டா ஒரு பேமெண்ட் வாங்கிக்கிட்டு நீங்க ஒதுங்கிருங்க, நாங்க ஒரு பெரிய டைரக்டரைப் போட்டு படத்தை எடுத்துக்கறோம், நீங்க ஒதுங்கிங்க” என்று இயக்குனர் காதுபடவே சொன்னார்கள். ஆனால் டேரபாண்ட் எதற்கும் மசியவில்லை. ஸ்டீஃபன் கிங்கும் தன் நண்பரை மிகவும் நம்பினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தப் பட வாய்ப்புக்காக தன் சம்பளத்தில் பெரும்பாதியை இயக்குனர் விட்டுக் கொடுக்கும்படியும் ஆனது.
ஒரிஜினல் ரைட்டருக்குக் கொடுக்கப்பட்ட பேமென்ட் எவ்வளவு தெரியுமா? வெறும் 5000 டாலர்கள் மட்டுமே. அதையும் ஸ்டீபன் கிங் பேங்கில் போடாமல் பத்திரமாக செக்கை ஃப்ரேம் பண்ணி வைத்து தயாரிப்பாளருக்கு பின்னொரு காலத்தில் இயக்குனருக்கே ஜாக்கிரதையாகத் திருப்பி அனுப்பி வைத்தார்! “தண்ணி கிண்ணி போட்டுட்டு வண்டி ஓட்டி மாட்டிக்கிட்டா, ஜாமீன்ல பெய்ல் எடுக்க வசதியா இருக்கும். இந்தா இதை வெச்சுக்க!”
இந்தப் பட வெற்றியால் கிங் பல கோடிகளை சம்பாதித்து விட்டவர். ரைட்டர் மட்டுமல்ல, இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் இன்றுவரை ராயல்டி பேமெண்ட்களில் கோடிக்கணக்கில் வருடாவருடம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் ஸ்டுடியோக்களும் டாம் குரூஸ் போன்ற சூப்பர் ஸ்டார்களைத்தான் இந்தப் படத்துக்காகத் தேடினார்கள். ஆனால் அவரோ “இவரு புது டைரக்டர், சரியா பண்ணுவாரான்னு டவுட்டா இருக்கு, தயாரிப்பாளரே டெய்லி செட்டுக்கு வந்து படத்தை சூப்பர்வைஸ் பண்றேன்னு கேரண்டி கொடுத்தால் நான் நடிப்பது பற்றி யோசிக்கிறேன்” என்று இழுக்கவும், இயக்குனர் கடுப்பாகிவிட்டார். டாமுக்கு உடனே கல்தா கொடுக்கப்பட்டது.
சூப்பர் படம் எல்லாம் ஓகே தான், ஆனால் படத்தின் வசூல் எப்படி இருந்தது? கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர்கள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் முதல் சில வாரங்களில் 18 மில்லியன்களை மட்டுமே எட்டி தயாரிப்பாளர் கையைச் சுட்டு விட்டது. ஆனாலும் கோடம்பாக்க பாஷையில் படம் ‘தப்பு பண்ணாது’ என்று அவர்கள் நம்பினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஊரில் சொல்வார்களே அதைப்போல ஸ்லோ பிக்கப் ஆகி அப்புறம்- அந்த நாட்களில் இன்டர்நெட் செல்போன் எல்லாம் கிடையாது அல்லவா?- பத்திரிக்கைகளில் அசத்தலான ரிவியூக்கள், ஆஸ்கர் நாமினேஷன்கள் என்று ஒரு சுற்று வர ஆரம்பித்து பிறகு உலகப் பெரும் படங்களில் ஒன்றாக ஆகி என்னுடைய ‘டாப் டன்’ னில் இன்றும் நிலைத்து நிற்கிறது.
1994 ‘பெஸ்ட் பிக்சர்’ உட்பட ஏழு கேட்டகரிகளில் ஆஸ்கார் போட்டிகளில் இருந்தாலும் இந்தப் படத்திற்கு ஒரு ஆஸ்கர் கூடக் கிடைக்கவில்லை என்பது பெரிய ஆச்சரிய ஏமாற்றம். இந்தப் படத்தை மிஸ் பண்ணி விட்டதற்காக ஆஸ்கார் தான் வருத்தப்பட வேண்டும். அபத்தமான எத்தனையோ படங்களுக்கு பெஸ்ட் பிக்சர் அவார்டு கொடுத்திருக்கும் ஆஸ்கர் கமிட்டி இந்த படத்தை மடத்தனமாக தப்ப விட்டு விட்டது. ஈடு செய்ய முடியாத இழப்பு ஆஸ்கருக்கு தான், இந்தப் படத்துக்கு இல்லை. சமீப காலங்களில் Nomadland, Parasite போன்ற தரித்திர மூதேவிகளுக்கு விருது கொடுத்த ஆஸ்கார் கமிட்டி இந்த படத்தை அப்போது கேவலமாக மிஸ் செய்து விட்டது.
டிம் எங்கள் ‘எல்லே’ பக்கத்தில் வெஸ்ட் கொவினா (West Covina) என்கிற ஊரில் பிறந்த கலிஃபோர்னியாக்காரர் தான். UCLA வில் டிராமா ஹானர்ஸ் கிராஜுவேட்.
ஆறரை அடி உயரமும் ஆஜானுபாகுவாகவும் இருந்தாலும் அடியாள் மாதிரி இல்லாமல், சென்சிடிவ்வான ரோல்களில் நடிப்பதில் சமர்த்தர்.
2004ல் தான்- பத்து வருஷங்கள் லேட்டாக – டிம் ராபின்சுக்கு Best Supporting Actor ஆஸ்கார் அவார்ட் கிடைத்தது (Mystic River).
முதலில் Stephen King நாவலின் ஒரிஜினல் பெயர் Rita Hayworth and Shawshank Redemption. ஆனால் இந்தப் பெயர் எளிதாக வாயில் நுழையாத ஒரு பெயராக இருந்ததாலேயே கட் ஆகி வெறும் Shawshank Redemption ஆனது. படம் அவ்வளவாக முதலில் பேசப்படவில்லை, ஸ்லோ பிக்கப், தலைப்பே பல பேருக்குப் புரியவில்லை என்றெல்லாம் அப்பொழுதும் ஆரம்பத்தில் பல காரணங்கள் சொன்னார்கள்.
ஆயுட் கைதிகளாக ஜெயிலில் இருந்தாலும், இரண்டு நண்பர்களிடையே இருக்கின்ற பரஸ்பர முழு நம்பிக்கையும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு விட்ட பாங்கையும், முதிர்ந்த ஒரு நட்பையும், சொல்கின்ற படம் இது.
இந்தப் படத்தைத் தழுவி எடுக்கிறேன் பேர்வழி என்று சல்மான்கான், ஷாருக்கான் வகையறாக்கள், விஜய், சேதுபதி, கமல், ரஜினி என்று யாரையாவது போட்டு நம்மை சாவடி அடிக்காமல் நம் கோலிவுட், பாலிவுட் தயாரிப்பாளர்கள் சும்மா இருப்பதே நமக்கு அவர்கள் செய்கின்ற பெரிய மரியாதை.
கருத்து என்று பார்த்தால் இந்தப் படத்தின் முக்கியமான கருத்து ‘நம்பிக்கை’ மட்டுமே. தான் செய்யாத குற்றத்திற்காக ஒருவன் கொடுமையான சிறையில் வருடக்கணக்கில் மாட்டிக் கொண்டாலும் நம்பிக்கை இழக்காமல் எப்படியும் ஒரு நாள் நீதி ஜெயிக்கும், நாம் வெளியே வந்து விடுவோம் என்று நம்புவது, மனதளவில் அசந்து போய் விடாமல், போராட்டத்தில் ஜெயிப்பதற்கான தொடர் முயற்சிகளை விடாமல் மேற்கொள்வது.
“Fear can hold you a prisoner, Hope can set you free” என்பதே படத்தின் logline.
“Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies.” என்று படத்தில் ஒரு வசனம் வரும்.

படத்தின் கடைசி டயலாக்கும் Hope என்று தான் முடியும்!
நம்பிக்கை! அதுதானே வாழ்க்கை?