தீர யோசித்தல்

This entry is part 1 of 3 in the series தீர யோசித்தல்

பகுத்தறிவு நமக்கு எத்தனை பயன்படும்?

[இங்கிலிஷ் மூலம்: ஜாஷுவா ராத்மான்/ தமிழாக்கம்: மைத்ரேயன்]

[ இக்கட்டுரை நியூயார்க்கர் வாரப் பத்திரிகையின் ஆகஸ்ட் 23, 2021 தேதியிட்ட இதழில் பிரசுரமாகியது.]

னக்குத் தெரிந்து மிக்க ஆய்தலறிவுள்ள ஒருவரை நான் சந்தித்தது, கல்லூரியில் நான் நுழைந்த முதல் வருடத்தில்தான். க்ரெக் (இது அவருடைய நிஜப் பெயர் இல்லை) நான் வேலை செய்த கணினி ஆய்வுக் கூடத்தில் தொழில் நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினார், நாங்கள் நண்பர்களானோம். நான் படைப்பு எழுத்தாளராகும் துறையில் பட்டம் வாங்க எண்ணினேன்; க்ரெக், பொருளாதாரம், இயற்பியல் ஆகிய துறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க எண்ணுவதாக என்னிடம் சொன்னார். அவர் படிப்பில் திறமைசாலியாக இருந்தால் இயற்பியலைத் தேர்ந்தெடுப்பார், அப்படி இல்லாத பட்சத்தில் பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுப்பார் என்றும்- இதை அவர் சரியாகக் கணித்தறியச் சில மாதங்கள் ஆகும், அது அவருடைய மதிப்பெண்களின் நிலையைப் பார்த்தால் தெரியும் என்றும் சொன்னார். அவர் பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தார்.

நாங்கள் ஓர் இடத்தில் சேர்ந்து வசித்தோம், அடிக்கடி எங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. ஏதோ காரணத்தால், நான் உடல் நலப் பராமரிப்புக் கொள்கையின் ஒரு வகுப்பில் சேர்ந்தேன். மருத்துவ மனைகளின் நிர்வாகிகள் மருத்துவ வசதிகளைக் கொடுப்பதில் அடக்க விலைகளைக் கணக்கிலெடுக்க வேண்டும் என்ற கருத்து எனக்கு மோசமான ஒரு அணுகலாகப் பட்டது. (ஒரு நோயாளிக்கு எது நல்ல சிகிச்சை என்பதை மருத்துவர்தானே தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லையா?[1]) நான் தீவிரமாக இறங்கி, என் பார்வைக்கு ஆதாரமாகப் பல வாதங்களை வளர்த்தெடுத்தேன். அறநோக்குப்படியும், செயல்முறை நன்மையை முன்வைத்தும் நான் சரியான நிலைபாடு கொண்டிருப்பதாக நினைத்தேன். க்ரெக் தலையசைத்து மறுத்தார். என் தந்தை ஒரு மருத்துவர் என்பதைச் சுட்டிக் காட்டினார், நான் பயன்படுத்துவது ‘உள்நோக்கம் கொண்ட அலசல்’ என்று விளக்கினார். என் உள்ளுணர்வு என்ன யோசிப்பது என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது, என் புத்தி அதை எப்படிப் பகுத்துப் பார்ப்பது என்று யோசிக்கிறது என்றார். இது சிந்திப்பதைப் போலத் தெரியும், ஆனால் அதுவல்ல என்றார்.

அடுத்த வருடம் எங்களில் சிலர் ஸ்டீரியோ  ஒலிப்புக் கருவிகளை வாங்கினோம். எங்கள் முன் இருந்த தேர்வுகள் சிக்கலாக இருந்தன: ஒலி அலைவரிசைகள், மேல்சுரம், அடிச்சுரம், முன்புற ஒலி ஆகியவற்றைப் பெருக்கும் கருவிகள்[2] இப்படி வகை வகையாக கருவிகள் கிட்டின. க்ரெக் இவற்றையெல்லாம் கருதி, தீர யோசித்து அலசியபிறகு ஒரு திறனுள்ள ஸ்டீரியோ இசை ஒலிப்புக் கருவியைத் தொகுத்தார். நானோ எனக்கு வசீகரமானதாகத் தெரிந்த ஒரு கருவியை வாங்கினேன், அதில் ஏதோ விளக்க முடியாத தொனி[3] தரம் இருப்பதாக எனக்குப் பட்டிருந்தது. க்ரெக்கின் அணுகல் கற்பனை வளமற்ற, பயன்பாட்டு நோக்கு மட்டுமே உள்ள ஒன்றாக எனக்குத் தெரிந்தது. பின்னாளில், அவர் வேறொரு மேம்பட்ட ஒலிப்புக் கருவி அமைப்பை வாங்கவிருந்தபோது, நான் அவருடைய பழைய தொகுப்பை வாங்கிக் கொண்டேன். அது நான் முதலில் தேர்ந்தெடுத்திருந்த ஒலிக் கருவியை விட நிச்சயமாக மேம்பட்ட தரமுள்ளதாக இருப்பதை நான் கண்டறிந்தேன்.

கல்லூரியில் கடைசி வருடத்தில் இருக்கையில், முதுநிலைப் படிப்பைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன். எனக்குத் தெரிந்த ஒரு முதுநிலை மாணவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார்- இங்கிலிஷ் பேராசிரியர்களுக்கு வேலை வாய்ப்புகள் படுமோசம் என்பது அவர் சொன்னது. அது புத்தியுள்ள முடிவில்லை என்று தோன்றினாலும், நான் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர முடிவெடுத்தேன், க்ரெக் நிதி நிர்வாகத்தில் மேல் படிப்பைத் தொடர முடிவெடுத்தார். நாங்கள் நண்பர்களாகத் தொடர்ந்தோம், அவ்வப்போது உலக நடப்பைப் பற்றி உரையாடினோம், அதை விட அந்த நிலையை எப்படிச் சரியாக சீர் தூக்கி அறிவது என்ற உயர் நிலைக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசினோம். உலகை அறிய எத்தனை தகவல் தேவையாக இருக்கிறது என்பது எனக்கு மூச்சுத் திணற வைப்பதாக இருந்தது – ஏராளமான பத்திரிகைகள், புத்தகங்கள் – எனவே, டாண்டேக்கு வர்ஜில் வழிகாட்டியாக இருந்தது போல, எனக்கு க்ரெக் வழிகாட்டுபவராக ஆனார். அவர் உதவியுடன் நான் தீர யோசிப்பதின் ஆழங்களுக்குள் மேன் மேலும் பயணித்தேன். அலசி யோசிப்பது என்பது வளர்ந்து வரும் ஓர் இயக்கமாக ஆகி வருவதை அறிந்தேன். அதற்கென்று ஒரு நியதி, சிந்தனை முறை, அறிவுக் கருவூலம் எல்லாம் சேர்ந்து வந்து கொண்டிருந்தன, அவை பெருமளவும் உளவியல் மற்றும் பொருளாதாரத் துறைகளிலிருந்து திரட்டப்பட்டவையாக இருந்தன. க்ரெக்கைப் போலவே, நானும் பல அலசி அறிதல் பற்றிய வலைப் பதிவுகளை வெளியிடும் தளங்களைப் படித்தேன் – மார்ஜினல் ரெவல்யூஷன், ஃபார்னம் ஸ்ட்ரீட், இண்டர்ஃப்லூயிடிடி, க்ரூக்கெட் டிம்பர் போன்றன அவை. சோஷியல் ஸைன்ஸ் ரிஸர்ச் நெட் ஒர்க் மற்றும் நேஷனல் ப்யூரோ ஆஃப் எகனாமிக் ரிஸர்ச் அமைப்புகளின் வலைத் தளங்களில் விடாப்பிடிவாதமாக உலவினேன், அங்கே தற்சமயம் பூர்த்தியான ஆராய்ச்சிகளின் விளைவுகள் வெளியாகும் என்பது காரணம்; அறிமுறையில் உள்ள மனச் சாய்வுகள் நாம் சிந்திக்கும் விதத்தைப் பாதிக்கிற பாங்கைப் பற்றிக் கல்வியாளர் நடத்திய ஆய்வு முடிவுகளின் வெளியீடுகளை நான் உள்வாங்கிக் கொண்டேன். இடர்களுக்கான வாய்ப்பு நிறைந்த என் சில முடிவுகளுக்கு “எதிர்பார்க்கக் கூடிய விளைவின் மதிப்பை”க் கணக்கிடுவதற்கு உதவும் ஓர் எளிய சூத்திரத்தை அவற்றிலிருந்து பெற்றேன். நான் ஒரு வீட்டை வாங்குவதற்கு முன், க்ரெக் என்னை வீட்டை வாங்குவது, வீட்டை வாடகைக்கு எடுப்பது என்ற இரு முடிவுகளுக்கு இடையே உள்ள லாப நஷ்டங்களைப் பற்றிய சீர் தூக்கல் முறை ஒன்றின் வழியே நடத்திப் போனார் (முடிவு: வாடகைக்கு எடுத்தல்); நான் என் வேலையை மாற்ற முடிவெடுக்க முனைகையில், க்ரெக் என் முடிவுகளுக்கு எத்தனை தூரம் அழுத்தங்களை, சிக்கல்களைத்  தாங்கக் கூடிய திறன் உண்டு என்று சோதித்தார் (நான் வேலைப் பாதையை மாற்றினேன்). உணர்ச்சி வசப்படக் கூடியவனும், அவசர உந்துதல்களுக்கு ஆட்பட்டு முடிவெடுப்பவனும் ஆன நான் இப்படி அலசி நோக்கும் முறையைப் பின்பற்றச் சிரமப்பட வேண்டி இருந்தது என்று கவனித்தேன். க்ரெக் கூட இந்த அணுகல் கடினமான ஒன்று என்று ஒத்துக் கொண்டார்; அறிவியல் கதைகளில் தானாக சிந்திக்கக் கூடிய ஜீவராசி போல மாறிவிட்டிருக்கிற கணினியைப் போல, தன் சிந்தனை முறையில் இருக்கக் கூடிய பிழைகள் பற்றித் தான் தொடர்ந்து சோதிக்க வேண்டியிருக்கிறது என்று கண்டிருந்தார்.

இந்த இடத்தில் க்ரெக் எப்படி யோசிப்பார் என்று அடிக்கடி நான் என்னையே கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்தது என்ன, அதைப் பற்றி எனக்கு எத்தனை தூரம் தெளிவாகத் தெரியும் என்பதைத் தேடிக் கண்டு பிடிப்பது என்ற அவருடைய வழக்கத்தை நானும் கடைப்பிடித்தேன், அதன் வழியே என் அபிப்பிராயங்களில் நல்ல ஆதாரம் உள்ளவற்றை, என் தற்காலிக நிலைப்பாடுகளிலிருந்து பிரித்து அறிய எனக்கு முடிந்தது. மோசமான முதலீட்டாளர்கள் தம் அறிவுச் சேமிப்பு பற்றி அனேகமாக தட்டையான, ஏதோ ஏறத்தாழ வரையப்பட்ட வரைபடங்களைத்தான் கொண்டிருப்பவர்கள், ஆனால் நல்ல முதலீட்டாளர்கள் அறிவுப் பரப்புகள் பற்றி சிறப்பான வரைபடங்கள் கொள்ளத் திறனுள்ளவர்கள், நன்கு நிறுவப்பட்டு குடியேற்றம் நடந்த பகுதிகளுக்கும், நன்கு ஆராயப்பட்டு அறியப்பட்ட நிலையில் மட்டும் இருப்பவற்றுக்கும், இன்னும் சோதிக்கப்படாத பரப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று க்ரெக் சொல்வார். இவற்றுக்கிடையே எங்கள் வாழ்வுகள் நடந்தன. என் ஆய்வுப் படிப்பை விட்டு விட்டு, பத்திரிகையியலைப் படிக்க நான் மாறிச் செல்லும் கால கட்டத்தில், க்ரெக் தன் பெண் தோழியின் அலசல் அறிவைப் பார்த்து மயங்கிப் போயிருந்தார், அவளை மணந்து கொண்டார், ஓர்  ‘இழப்புத் தடுப்பு நிதி’ நிறுவனத்தில் டைரக்டராகி இருந்தார். அவருடைய சொத்து மதிப்பு என்னுடையதைப் போல பல ஆயிரம் மடங்கு உயர்வாக ஆகி இருந்தது.

இதற்கிடையில், அமெரிக்கர்களில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்; பலர் சதித்திட்டங்கள் பற்றியும், போலி அறிவியல் முடிவுகளையும் நம்புகிறார்கள். நாம் சிந்திப்பதில்லை என்று சொல்ல முடியாது- நாம் தொடர்ந்து படிக்கிறோம், கருத்து சொல்கிறோம், விவாதிக்கிறோம் – ஆனால் நாம் செய்வதை ஓட்டமாய் ஓடியபடி, நம் செல்ஃபோன்களில் வம்புவதந்தி பரப்பித் தொல்லை செய்யும் புன்மதியாளர்களைப் பார்வையைக் குறுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கோடைக் காலத்தில், என் ஃபோனில், ஆர்னால்ட் க்லிங் என்ற வலைப்பதிவாளரின் பதிவைப் படித்தேன். இந்த வருடம் பெரும் எண்ணிக்கையில் ‘அலசி அறிதல்’ பற்றிய புத்தகங்கள் பிரசுரமாகின்றன என்று கவனித்திருந்தார். அவற்றில், ஸ்டீவன் பிங்கரின் “ரேஷனாலிடி: (உ)வாட் இட் ஈஸ், (ஹ்)ஒய் இட் ஸீம்ஸ் ஸ்கேர்ஸ், (ஹ்)ஒய் இட் மேட்டர்ஸ்” (வைகிங் பிரசுரம்), மற்றும் ஜூலியா காலெஃப் எழுதிய, “த ஸ்கௌட் மைண்ட்செட்: (ஹ்)ஒய் ஸம் பீப்பில் ஸீ திங்ஸ் க்ளியர்லி அண்ட் அதர்ஸ் டோண்ட்” (போர்ட்ஃபோலியோ பிரசுரம்) இருந்தன.  இது அர்த்தமுள்ளது, என்கிறார் க்லிங், ஏனெனில் அலசி அறிதல் இப்படிப் பெரிதாகப் பேசப்படும் கணத்தை அடைய வேண்டி இருந்தது: “காட்டான்கள் நகரத்தைத் தாக்கி அழிக்கிறார்கள், மரித்து வரும் பண்பாட்டை இன்னமும் சுமப்பவர்கள், தங்கள் நிலவறைகளைப் பழுது பார்த்துக் கொண்டு அங்கிருந்து எழுதத் துவங்குகிறார்கள்.”- என்பது அவர் நோக்கு. கடும் சர்ச்சைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில், அலசி அறிதல் ஒரு வகையில் அபிப்பிராயங்களுக்குத் தேவையான சுகாதார நடவடிக்கையாக இருக்கும்- தவறான முடிவுகளில் அடித்தளம் கொண்ட நோக்குகளைக் கழுவி அகற்றுவதாக இருக்கும். மோதல்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், வழக்காடு மன்றத்தை இது ஒழுங்குக்குக் கொண்டு வருமென்று உறுதி சொல்கிறது. உலகம் வெகு துரிதமாக மாறுகையில், அதைப் புரிந்து கொள்ள நமக்குப் பல யுக்திகள் தேவைப்படுகின்றன. எதையும் பகுத்து அறிபவர்கள், அப்படி அறிய விரும்பாதவர்களை விட, கூடுதலாகக் கவனமுள்ள, நேர்மையான, உண்மை நிரம்பிய, நியாயமான மனப்பாங்குள்ள, அறியும் ஆர்வம் உள்ள மனிதராகவும், சரியான முடிவெடுப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று நாம் அர்த்தமுள்ள வகையில் விரும்புகிறோம்.

ஆனால் அலசி அறிதல் என்பது கூரிய விளிம்புகள் கொண்ட ஒன்று என்பதால் அதை வாழ்வின் மையத்தில் வைத்துக் கொள்வது கடினமாக இருக்கிறது. ஆய்ந்தறிதல் என்பதை மையமாகக் கடைப்பிடித்தால், வாழ்வின் குளிர்மை உள்ள சுகமான அம்சங்களை அனுபவிப்பதை நாம் இழந்து விடும் அபாயம் இருக்கிறது – இவான் துர்க்கேனெவின்  “ஃபாதர்ஸ் அண்ட் ஸன்ஸ்”[4] நாவலில் வரும் மாணவன் பாஸ்ஸாரவ் இப்படி அறிவிக்கிறான், “நான் சொர்க்கத்தைப் பார்ப்பது ஒரே ஒரு சமயத்தில்தான், தும்மும்போது.” (க்ரெக்கும் சில சமயம் கவலைப்படுகிறார், தான் அலசி நோக்குவதை எல்லை மீறிச் செய்கிறோமோ என்று. தான் இதயமில்லாத மேலாளராக, உறைந்த மீனாக, ஒரு ரோபாட் போல ஆகி வருகிறோமோ என்று.) நாம் நல்ல எண்ணம் கொண்டவராக இருக்கலாம், அலசி நோக்குபவராக இருக்கலாம், இருந்தாலும் தவறான முடிவு கொண்டவராக இருக்கவும் முடியும், ஏனெனில் நம் சிந்தனைகளில் எத்தனையோ பிழைபட்டனவாக ஆக வாய்ப்பு இருக்கிறது. (“ஆய்வறிவு, அடைச் சொல்: கவனிப்பு, அனுபவம், மேலும் சிந்திப்பு ஆகியனவற்றைத் தவிர வேறு எல்லா மதிமயக்கங்களும் நீங்கிய அணுகல்,” என்று ஆம்ப்ரோஸ் பியர்ஸ் தன் “ டெவில்ஸ் டிக்‌ஷனரி” என்ற நூலில் எழுதினார்.) நாம் அலசி நோக்குபவராக இருக்கலாம், அதே நேரம் சுய-எத்தலிலும் சிக்கலாம், ஏனெனில் நாம் அலசி அறிபவர் என்று நமக்குச் சொல்லிக் கொண்டிருப்பதே ஒரு மனச் சாய்வுக்கான காரணமாக இருக்கும். பிறருக்கு வசீகரமாகத் தெரிவதற்காக நாம் அலசி ஆய்பவர் போலத் தெரிய வேண்டும் என்று நாம் முயலலாம்; அல்லது நாம் சில விஷயங்களில் மிக அலசி நோக்குபவராகவும் (நம்முடைய தொழில்/ வேலையில்) வேறு இடங்களில் அப்படி இல்லாமலும் இருக்கலாம் (நம் குழந்தைகள்); அல்லது நம்முடைய கருத்துகளை யாரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நம் அலசல் நோக்கு கைவிடப்பட்டு நாம் குரோத வசப்படலாம். ஒருகால் கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்க நிபுணர்கள் தம்மிடையே ஒத்துப் போன விளக்கங்களை நாடித் தெரிந்து கொள்ளாமல், நாமே எல்லாப் பதில்களையும் கொடுக்க வேண்டுமென்று முனைவதில் ஆராய்ந்தறியும் நோக்கம் பழுதாகி இருக்கலாம். ஒருகால்,  “ஸ்டார் ட்ரெக்” தொடர் நாடகத்தில் வரும் டாக்டர் ஸ்பாக்கைப் போல, நமது அலசல் வழி கணிப்புகள், இதர மனிதர்களின் அலசலற்ற அணுகல்களைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம். (ஸ்பாக் எதிர்நோக்கிச் சொல்லும் ஊகங்களைக் கணக்கிலெடுத்துப் பார்த்த காலெஃப், நடக்கமுடியாதன என்று ஸ்பாக் முடிவு கட்டுபவை சுமார் 80% நேரம் நடந்து விடுகின்றன என்று சொல்கிறார், அது அப்படி நேரக் காரணம், ஸ்பாக் தன்னைப்போலவே மற்றவர்களும் “தர்க்க பூர்வமாக”ச் சிந்திப்பவர்கள் என்று கருதுவதுதான்.)

தனி மனிதர்கள் மட்டுமில்லை, சமூகங்களே கூட இப்படி தரக் கலப்படத்தால் இழிந்த அறிவு சார் அணுகல் அல்லது பொய்யான அறிவு சார் அணுகலுக்கு இரையாகலாம். 2014 ஆம் ஆண்டு வெளியான, “த ரிவோல்ட் ஆஃப் த பப்ளிக் அண்ட் த க்ரைஸிஸ் ஆஃப் அதாரிடி இன் த நியூ மிலெனியம்,” என்ற நூலில், மார்டின் குர்ரி என்ற முன்னாள் சி ஐ ஏ ஆய்வாளர், பின்னாளில் லிபர்டேரியன் அரசியல் சாய்வுள்ள சமூகச் சிந்தனையாளராக ஆனவர்,[5] பொய்மை கலந்த அலசல் அறிவு சார் அமைப்புகள் என்று பழி சாட்டப்படுவனவற்றின் முகமூடிகளைக் கிழிப்பது என்பது இந்நாளின் முக்கியமான நாடகமாக ஆகி விட்டது என்று வாதிடுகிறார்: உலகெங்கும் உள்ள மக்கள், நம் கல்லூரிகள், செய்தி ஸ்தாபனங்கள், பாராளுமன்றங்கள் போன்றனவற்றில் அதிகாரம் செலுத்தும் பெரியமனிதர்கள் ஆய்ந்து அறியும் போக்கு உள்ளவர்களைப் போல போலப் பாசாங்கு செய்வதில் வல்லவர்களாக இருக்கிறார்களே தவிர நிஜமாக அப்படி இருப்பதில்லை என்று முடிவுக்கு வந்த பிறகு, எல்லாவிதமான பொது ஆராய்ந்தறிதலும் சந்தேகத்துக்குரியது என்ற நசிவை நோக்கிச் சாயும் ஜனக் கிளர்ச்சி அரசியலை ஆரத் தழுவியிருக்கிறார்கள். கோவிட் என்ற தொற்று நோய் ஏதும் இல்லை என்று சொல்பவர்களும், பருவ நிலை தடுமாற்றத்தைச் சரி செய்யப் போராடுபவர்களும் வெவ்வேறு வகையினர், ஆனால் இரு சாராரும் நிபுணர்கள் நம் சார்பாகக் கட்டி எழுப்பியுள்ள அமைப்புகளின் மீது மனக் கசப்பு கொள்வதில் ஒருமித்த நிலை கொண்டிருக்கிறார்கள் – இரு குழுக்களும், உலகம் எரிந்து கொண்டிருக்கையில் மேல் தட்டு மனிதர்களோ டாவோஸ் மாநாட்டில் பவர்பாயிண்ட் காட்சிச் சில்லுகளைக் கலைத்துப் போடும் கேளிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று கருதுகிறார்கள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், உலக மக்களின் அறிவு விலக்கிய நடத்தையின் வேர்மூலக் காரணம் அறிவார்ந்த நடத்தை கொண்டவர்களின் இயலாமைதான், தோல்விதான்.  ஓர் அமைப்பு நிஜமாகவே பயனுள்ளதாகத் தெரிந்தால் மக்கள் அதை நம்புவார்கள்.

ஆனால் தற்கால வாழ்க்கையானது இப்படிப்பட்ட அறிவார்ந்த அமைப்புகள் இல்லை என்றால் சாத்தியமாகவே இராது; நாம் அவற்றை மேம்படுத்த வேண்டும், நிராகரிக்கக் கூடாது. நமக்கு ஆராயந்து நோக்குவதை விடுத்து வேறு எந்தத் தேர்வும் இல்லை – இப்படி ஒரு லட்சியத்தைத்தான் சமூகவியலாளரும் (தீர்க்க சிந்தைனையாளருமான) மாக்ஸ் வேபர் இப்படி வருணித்தார், “அந்த லட்சியம் தன்னுள் முரண்கள் நிறைந்த ஒரு உலகையே கொண்டிருக்கிறது.” நாம் அறிவு பூர்வமாக அமைக்கப்பட்ட ஓர் உலகில் வாழ விரும்புகிறோம், ஆனால் பொய்யான அறிவு சார்ந்து அமைக்கப்பட்ட ஒன்றில் அல்ல. நாம் அறிவார்ந்தவர்களாக தனி நபரளவில் இருக்க விரும்புகிறோம், ஆனால் அதை மிகைப்படுத்த விரும்பவில்லை. எப்போது சிந்திக்க வேண்டும், எப்போது அத்தனை தூரம் ஆழச் சிந்திக்க வேண்டாம், நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நமக்குத் தெரிய வேண்டி இருக்கிறது. எப்போது ஐயம் கொள்வது, எப்போது நம்புவது என்று தெரிய வேண்டி இருக்கிறது. அறிவு பூர்வமாக இருப்பது மனிதரின் அபார சக்திகளில் ஒன்று. அதைப் பிழைபடப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படி?

ஆய்ந்து அறிதலைப்[6] பற்றி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதிய வேபர், தானொரு பிரம்மாண்டமான சக்தியோடு பொருதுவதாக உணர்ந்தார் – பெருகி எழுந்து வரும் ஒரு நோக்கு நம் மதிப்பீடுகளை மாற்றி எழுதி வருகிறது என்றுணர்ந்தார். அவர் ஆய்ந்தறிதலைப் பல விதமானதாகப் பார்த்திருந்தார். நாம் வழிகளையும், முடிவுகளையும் அலச (எனக்கு வேண்டுவதை நான் எப்படி அடையலாம்?), கருவி நோக்கமுள்ள ஆய்ந்தறிதலைப் பயன்படுத்தலாம். பயன்பாடுகளையும், குறிக்கோள்களையும் அலச (எனக்குப் பிடித்ததை நான் விரும்புவதற்கு எனக்குத் தக்க காரணங்கள் உண்டா?), விழுமிய ஆய்ந்தறிதலைப் பயன்படுத்தலாம். உணர்வுகளை ஆய்ந்தறியும் விதம் பற்றித் தேடலாம் (நான் ஈர்ப்பும், அமைதியும், நிதானமும் கொண்டவனா?) அல்லது பழக்கவழக்கங்களை அலசி நோக்கலாம் (நான் ஒழுங்குள்ள, அல்லது ‘இயங்குதிறனை உள்ளமைப்பாகக் கொண்ட’ வாழ்க்கை வாழ்பவனா?) ஆய்ந்தறிதல் மிகப் பயனுள்ளது என்பது தெளிவுதான், ஆனால் அது ஒவ்வொரு மனிதரையும் அது ‘எந்திரத்தின் ஒரு திருகாணியாக’ ஆக்குகிறது என்று வேபர் அச்சப்பட்டார். வாழ்வை அது ‘இரும்புக் கூண்டாக’ ஆக்குகிறது என்பது அவர் அச்சம். இன்று ஆய்ந்தறிதலும், அதை வருணிக்கும் வார்த்தைகளும் இன்னமும் வேபரின் எதிர்மாறான கருத்தின் நிழலால் பீடிக்கப்படுகின்றன, இரட்டை அர்த்தம் கொண்டவையாக இருக்கச் சபிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பை ஆய்ந்து நோக்குகிறீர்கள்: குழப்பமான நிலைக்கு ஓர் ஒழுங்கைக் கொணர்கிறீர்களா, இல்லை தர்க்கம் பிழைத்த ஒரு நிலையை நியாயப்படுத்துகிறீர்களா?

ஆய்ந்தறிதல் பற்றிய வேபரிய வரையறுப்புகள் அப்படி ஒன்றும் பரவலாக நிறுவப்பட்ட கருத்துகளாகி விடவில்லை.  2016 ஆம் ஆண்டில் எம்.ஐ.டி பல்கலையின் பிரசுர நிறுவனம் வெளியிட்ட “த ரேஷனாலிடி க்வோஷண்ட்: டுவார்ட் எ டெஸ்ட் ஆஃப் ரேஷனல் திங்கிங்” என்ற புத்தகத்தை எழுதியவர்களான ரிச்சர்ட் எஃப். (உ)வெஸ்ட் மற்றும் மாகி ஈ. டோப்லாக் ஆகிய இருவரும் ஆய்ந்தறிவதை, “கடும் சிக்கலான, வதைபட்ட சொல்,” என்றழைத்தனர். இதற்குக் காரணம், தத்துவாளர்கள், சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள், மேலும் பொருளாதாரயியலாளர்கள் எல்லாரும் தத்தமது வழிகளில் இந்தச் சொல்லை வெவ்வேறு விதமாக வரையறுத்திருக்கிறார்கள். அரிஸ்டாடிலுக்கு, இந்த அறிதல் முறைதான் மிருகங்களிலிருந்து மனிதரை வேறுபடுத்திக் காட்டுகிறது. ”ரேஷனாலிடி க்வோஷண்ட்,” (ஆய்ந்தறிதலின் ஈவு) நூலின் ஆசிரியர்களுக்கு இந்த அறிமுறை, ஒரு புத்திக் கூறு, அறிவுத்திறனுக்கு நிகரான ஆனால் தெளிவாக வேறான அம்சம், ஒரு நபர் பலவகை சாத்தியக் கூறான நிகழ்ச்சிகளைச் சுழற்சியாகத் தன் மனதில் உடனடியாக நிகழ்த்திப் பார்க்க உதவும் ஒரு திறன், அதே நேரம் அவற்றில் எந்த ஒன்றும் அவருடைய கவனத்தைத் தன் பால் ஈர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டு, அவருடைய மனச் சாய்வை மற்றவற்றுக்கு எதிராகத் திருப்பாமல் பார்த்துக் கொள்ளும் அறிமுறையும் ஆகும். உலகத்தில் சிலர் மற்றவர்களை விட இந்தச் சுழற்சி வேலையில் திறமிக்கவர்களாக இருப்பதால், உலகம் நிறையவே “முட்டாள்தனமான வேலைகளைச் செய்யும் புத்திசாலி மனிதர்களை”க் கொண்டிருக்கிறது: முக்கியமான பெரிய பரீட்சைக்கு முன் குடிபோதையை நாடும் கல்லூரி மாணவர்கள், நெடுந்தூரப் பயணிகள் விமானப் பயணங்களுக்கு முன்னதாக இடம் ஒதுக்க முனைகையில், தொடர் பயணங்களுக்கிடையே உள்ள கால இடைவெளி போதுமானதா என்று கவனிக்காமல் இடஒதுக்கீடு செய்து சீட்டு வாங்குதல் போன்றன இந்த வகைச் செயல்பாடுகள்.

(தொடரும்)


[1] இப்படிக் கேட்பது கட்டுரையாளர் அன்று இப்படி யோசித்தார் என்று சுட்டும் அதே நேரம், அப்படி அவர் யோசிக்கக் காரணம் இந்தக் கேள்வி என்றும் ஆகும்.

[2] இவை ட்வீட்டர், ஊஃபர், ப்ரீஆம்ப்லிஃபையர் ஆகியன – முறையே. ஒவ்வொன்றிலும் பல வகைக் கருவிகள் தம்மிடையே வேறுபட்டன என்பதால் தேர்வு சிக்கலானதாக இருக்கும்.

[3] Je ne sais quoi – ஜெ நெ ஸெ க்வா- ஃப்ரெஞ்சு மொழிச் சொற்றொடர். இன்னதென்று தெளிவாகச் சொல்லி விளக்க முடியாத ஒரு தரம்.

[4] இங்கிலிஷில் இந்தப் பெயர் கொண்ட துர்க்கேனெவ் நாவலின் ரஷ்யப் பெயர் இது. Отцы и дети (அத்ஸே ஈ ஜீயெச்சிய என்பது கிட்டத்தட்ட நெருங்கிய உச்சரிப்பு). துர்க்கேனெவ் பற்றிய மேலதிக விவரங்களுக்குப் பார்க்க: https://russiapedia.rt.com/prominent-russians/literature/ivan-turgenev/

[5] லிபர்டேரியன் (libertarian) என்பது அமெரிக்க அரசியலில் தனி நபர் உரிமை/ சுதந்திரங்களை அரசியல் அமைப்பு பாதுகாக்க வேண்டும், அவற்றில் அரசு தலையிடக் கூடாது என்ற எளிய நிலையில் துவங்கி மேன்மேலும் ஆழ்ந்த நிலைகளிலும் இந்த உரிமை/ சுதந்திரம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று பேசும் ஒரு கருத்தியல் (ideology). சுதந்திரச் சந்தை இவர்களின் கருதுகோள்களில் ஒரு முக்கிய அம்சம். மேலும் கருத்துகளுக்கு இந்தச் சிந்தனையை முன்னிறுத்தி அமெரிக்கச் சிந்தனையுலகில் நிறைய முயலும் ஒரு கருத்துக் குழுமத்தின் வலைத்தளத்தைப் பார்க்கலாம்: https://www.cato.org/commentary/key-concepts-libertarianism

[6] ஆய்ந்தறிதல் என்று இக்கட்டுரையில் நெடுகப் பயன்படுத்தப்படுவது இங்கிலிஷில் ரேஷனாலிடி என்று பயன்படுத்தப்படும் சொல்லுக்கு நிகரானது. தமிழில் தற்போது அந்தச் சொல்லை பகுத்து அறிதல் என்று மொழி பெயர்க்கிறார்கள். பகுப்பு என்பது மட்டும் அறிவைத் தருவதில்லை. தொகுப்பும் ஒருவகை அறிதல்தான். பகுப்பும், தொகுப்பும், கலப்பும், பிரிப்பும், அழிப்பும், ஆக்கமும் என்று பற்பல மனிதக் கிரியைகளின் கூட்டுதான் அறிவைக் கொணர்கிறது. ஆய்ந்து அறிதல் என்பது இந்த அனைத்து வகைகளோடு மேலும் பலவித மனித எத்தனங்களையும் பொருத்தி விளைவை நோக்கும் செயல். உள்ளூகம், புறவயச் சான்று சார்ந்து முடிவு கட்டுதல் என்றும் பல வகைகளில் மனிதர் முயற்சிகளை வழி நடத்துகிறார்கள். ஃபீட்பாக் என்று இங்கிலிஷில் ஒரு சொல் உண்டு, எதிர்வினை அல்லது மறுவினை வழியே ஒரு நடவடிக்கையின் விளைவுகளைச் சீர் தூக்குதல் அது. அதுவும் இணைந்ததுதான் ஆய்ந்தறிதல். இக்கட்டுரையில் ஆய்ந்தறிதல் என்ற சொல்லை அனைத்து அறிதல் நடவடிக்கைகளுக்கும் ஒட்டு மொத்தமாகப் பொருந்தும் சொல்லாகப் பயன்படுத்தி இருக்கிறேன்.

Series Navigationசாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.