தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம்

முன்னுரை:

ஆஃப்கான் தேசம் தாலிபான் கையில் மறுபடியும் சிக்கிக்கொண்டதைக் கண்டு இஸ்லாமிய தேசங்களைத் தவிர மற்ற தேச மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எனது நண்பர்களில் சிலர் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அவர்களைப் பழிக்கிறார்கள். சில நண்பர்கள் இப்போதைய ஜனாதிபதி பைடன் அவர்களைக் காரணம் காட்டுகிறார்கள். வழக்கம்போல் அகதிகள், சுற்றியிருக்கும் இஸ்லாமிய தேசங்களைத் தவிர்த்து ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு விரைகிறார்கள். நான் ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் இறங்கியபோது இருந்த கூட்டத்திற்கும் தாமதத்திற்கும் ஆஃப்கானிய அகதிகள் வந்து இறங்கியுள்ளதுதான் காரணமென்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் தலைகுனிவையும் சப்பைக்கட்டுகளையும் பார்த்து அமெரிக்கர்கள் ஆத்திரமுற்றுள்ளனர். வெளிநாட்டினர் எள்ளி நகையாடுகின்றனர். இச்சமயத்தில் ஒரு சேதமும் இல்லாமல் தாலிபான் ஆஃப்கானை கைப்பற்ற முடிந்தற்குக் காரணம் பொருளாதாரம்தான் என்ற ஒரு கட்டுரையைப் பார்த்தேன். பொருளாதாரத்திலும் இராணுவத்திலும் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவினால் வெளியேற்றப்பட்டு, 20 வருடங்களாக மலைகளில் பதுங்கி இருந்த தாலிபான் எவ்வாறு இதைச் செய்திருக்க முடியும் என்ற உந்துதலால் கட்டுரையை முழுவதுமாகப் படித்தேன். முன்னாள் ஜனாதிபதி வில்லியம் கிளிண்டன் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமான ஜேம்ஸ் கார்வில் அவர்கள் வெற்றியின் முன்னரே பிரபலப்படுத்திய “பொருளாதாரம்தான் வெற்றியை நிச்சயிக்கும்! முட்டாளே!” என்ற வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்தது.

ஏப்ரல் மாத மத்தியில் ஜனாதிபதி பைடன் அமெரிக்க ராணுவம் ஆஃப்கானிலிருந்து முந்தைய அரசாங்கத்தின் காலக்கெடுவை ஒட்டியே வெளியேறும் என உறுதியளித்தார். இந்த உறுதிமொழி, 1996லிருந்து 2001 வரை ஆட்சிசெய்த, இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் உருவான தாலிபான் கிளர்ச்சிக் கூட்டத்தை ஆஃப்கான் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான முன்னேற்றங்களைச் செய்யத் தூண்டியது. ஜூலை மாத ஆரம்பத்தில், தாலிபான் உக்கிரகமாக முன்னேறுவது தெரிந்த பின்னரும் அமெரிக்கப் படைகளை கோடைக் காலம் முடியுமுன் வெளியேற்றுவதில் இரட்டிப்பு ஆர்வம் காட்டினார் பைடன். அது மட்டுமல்லாமல், ஆஃப்கானிய அரசாங்கம் கவிழாது என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன். தாலிபானை நம்புகிறீர்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பேன்; நல்ல பயிற்சியும், போதிய அளவு ராணுவத் தளவாடங்களும், போர் செய்யும் ஆற்றலும் படைத்த ராணுவ வீரர்களின் திறனில் எனக்கு நம்பிக்கையுள்ளது என்று பைடன் கூறியதாகத் தேசியப் பொது வானொலி நிலையம் அறிவித்தது.

ஆறு வாரங்களுக்குள் ஆஃப்கான் தலைநகரமான காபூல் தாலிபானின் கைக்குள் அடக்கமானது. ஜனாதிபதி அஷ்ரஃப் கானி ஊர்திகளுடனும் பணக்கட்டுகளுடனும் நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தார். அரசாங்கத்துடன் இணைந்த நபர்கள் புதிய புகலிடங்களைத் தேடுவதில் முனைந்தனர். அமெரிக்கத் தூதரக அலுவலர்களும் பணியாளர்களும் அவசரமாக வெளியேறும் காட்சி 40 வருடங்களுக்குமுன் வியத்நாமில் அமெரிக்கத் தோல்விக்குப் பிறகு, சைகான் நகரம் விரைவாகச் சரிந்ததை நினைவுபடுத்துகிறது. அதிக அளவு பயிற்சியும், தளவாடங்களும், போர் செய்யும் திறனும் படைத்ததாகக் கூறப்பட்ட ஆஃப்கானிய ராணுவத்திற்கு எவ்விதத் தகுதியும் உள்ளதாகத் தெரியவில்லை.

கந்தல் துணி அணிந்த, அடிமட்டத்திலுள்ள, இறையியல் பள்ளியினர் கூட்டு சேர்த்த, முறையான போர்ப் பயிற்சி சிறிதளவும் இல்லாத, மத அடிப்படைவாதக் கூட்டம், பிரிட்டன், சோவியத், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் உலகிலேயே வல்லமை வாய்ந்த படைகளினால் அடக்க முடியாத நிலப்பகுதியை எவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது? ஏன் முன்னிருந்த ஆஃப்கான் அரசாங்கம் அத்தகைய வேகத்தில் நொறுங்கியது?

இந்த கேள்விகளுக்கான பதில், அதிசயப்பட்டுக் கேட்பவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தக்கூடிய முன்பின் கேள்விப்பட்டிராத கல்வித் துறையின் சிறு பிரிவான ‘மத அரசியல் பொருளாதாரம்’ (Political Economy of Religion) என்ற இடத்திலிருந்து வருகிறது.

மதங்களின் பொருளாதாரமா?

இத்துறையைப் பற்றி மேலெழுந்தவாரியாகக் கேள்விப்பட்டவர்கள் பெரிய தேவாலயங்களின் செல்வ வளத்தை ஆராயும் துறை என்ற தவறான முடிவிற்கு வரக்கூடும். இத்துறையின் மூல காரணம், ஆடம் ஸ்மித் (Adam Smith) அவர்களின் Wealth of Nations (Book V) தான். இத்துறையின் முன்னோடிகள் ராட்னி ஸ்டார்க் (Rodney Stark), ராஜெர் ஃபிங்க் (Roger Fink) என்ற சமூகவியலாளர்களும், லாரென்ஸ் அயான்னகோனி (Lawrence Iannaccone) என்ற பொருளாதார வல்லுனரும் ஆவர். 1980களில் மதச்சார்பின்மை, மதங்களையெல்லாம் அர்த்தமற்றதாக்கிவிடும் என்ற கருத்தே ஆட்சியில் இருந்தது. இக்கருத்திற்கு சவால்விட்டது இம்மூவர்தான். பொருளாதாரத்தின் மிக அடிப்படையான கோட்பாடுகளை உபயோகித்ததன்மூலம் மத விஷயங்களில் பங்கேற்புக் குன்றக் காரணம் தேவைக் குறைவு அன்று, மதங்கள் வழங்குவதை அத்துமீறிய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுதான் என்ற புதிய கருத்தை முன்வைத்தனர்.

இக்கண்ணோட்டம், மற்றவர்கள் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால், மதப் பங்கேற்பு குறைந்துகொண்டு வருகிறது என்ற சமயச்சார்பற்றவர்களின் கணிப்பிற்குக் காரணம் அவர்கள் கவனம் செலுத்திய ஐரோப்பிய நாடுகளில் மத நம்பிக்கை உள்ளவர்களின் தொகை குறைந்து கொண்டிருந்ததுதான். ஆனால், மற்ற நாடுகளிலெல்லாம் மதங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தன. பல நாடுகளிலும், மத நம்பிக்கையற்ற சீனாவிலும்கூட மத அடிப்படைவாதம் புத்துயிர் பெற்றிருந்தது. 1990களில், ஆதாரக் கட்டுரை ஆசிரியர் அந்தோனி கில் (Anthony Gill), கேரோலைன் வார்னெர் (Carolyn Warner) என்ற இரண்டு அரசியல் விஞ்ஞானிகள் மதங்களின் பொருளாதாரச் சலுகைகளில் அரசாங்கத்தின் பங்கு எத்தகையது என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

கண்டிப்பு மிகுந்த மதங்கள் துடிப்பு மிகுந்தவை

மதப் பொருளாதாரத்தை ஒரு புதிய பாதைக்குக் கொண்டுசென்ற மிக முக்கியமான கண்டுபிடிப்பிற்கு 1990களின் முதற் பகுதியில் லாரென்ஸ் அயான்னகோனி அவர்களின் நுண்ணறிவே காரணம். இவரது கண்டுபிடிப்பு தாலிபானின் வெற்றியை நேரடியாக விளக்குகிறது. அமெரிக்காவில் கண்டிப்புகள் நிறைந்த மார்மன் சபை (Mormon Church), ஜெஹோவாவின் சாட்சி (Jehova’s witness), மரபுவாத யூதர்கள் (Orthodox Jews) போன்ற குழுக்களின் தேவாலயங்கள் சிறந்த உயிர்த்துடிப்புடன் விளங்குவதைக் கண்டு அவர் மனம் குழப்பமடைந்தது. இத்தேவாலயங்களின் நடத்தை நெறிமுறைகள் கண்டிப்பானதோடு மட்டுமல்லாமல் கட்டணமும் அதிகமாக இருந்தது. அதே சமயம், அங்கத்தினர்கள் தீவிர பக்தியுள்ளவர்களாகவும், தங்கள் தேவாலயங்களில் சுறுசுறுப்பாக வேலை செய்பவர்களாகவும் இருந்தனர்.

இது மேலும் குழப்பத்தை விளைவித்தது. ஏனென்றால் பொருளாதாரக் கொள்கைப் பிரகாரம் உறுப்பினர் கட்டணம் உயர்வாக இருந்தால் எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும். மேலும், விலையைக் கூட்டினால் அங்கத்தினர்கள் அத்தேவாலயத்தைவிட்டு மற்றொரு தேவாலயத்திற்கு மாறுவதும் சகஜம். இதற்கு மாறாக, கண்டிப்பு மிகுந்த தேவாலயங்களில் அங்கத்தினர்கள் விலகுவதும் இல்லை, எண்ணிக்கையும் மார்மன் தேவாலயம்போல் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், எபிஸ்கொபேலியன் (Episcopalian), யுனிடேரியன் (Unitarian) போன்ற மதப் பிரிவுகள் அங்கத்தினர்களை வேகமாக இழந்துகொண்டிருக்கின்றன.

இதற்கு அயன்னகோனியின் பதில் எளிமையானதும் அறிவு செறிந்ததாகவும் உள்ளது. மது அருந்துவது, பிறர் ரத்தத்தை ஏற்றுக்கொள்வது, தனித்தன்மையை எடுத்துக்காட்டும் உடைகளைக் கண்டனம் செய்தல் போன்ற கடினமான நடைமுறைகளைக் கொண்டுள்ள தேவாலயங்கள், பெரும்பான்மையான சுய கட்டுப்பாடற்ற நடத்தையுள்ளவர்களை அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் அங்கத்தினர்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கிறது. இத்தேவாலயங்கள் கூட்டுறவு அங்காடி அல்லது ராணுவத்தினருக்கான கடைகள் போன்றவற்றால் அங்கத்தினர்களுக்குப் பொருளாதார லாபம் கிடைக்கிறது. இத்தேவாலயங்கள் மூலம் கிடைக்கும் கூட்டுப் பலன்களின் தரம் பங்களிக்கும் அங்கத்தினர்களின் எண்ணிக்கையைப் பொருத்தது. பலன்களுக்காக அங்கத்தினர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை, பங்களிப்பவர்களின் எண்ணிக்கையைவிட கணிசமாக அதிகரித்தால், அத்தேவாலயங்கள் அளிக்கும் கூட்டுப் பலன்களின் தரமும் கணிசமாகக் குறைந்துவிடும். தேவாலயங்களும் க்ஷீணித்துவிடும்.

ஆதாயங்களுக்காக மட்டுமே சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பைத் தாண்டாமல் இருக்கக் கண்டிப்பான தேவாலயங்களின் உறுப்பினர்கள் சீரான வெளி நடத்தைமூலம் தங்களது விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும் என்பதால் சோம்பலுற்ற நபர்கள் இத்தேவாலயங்களை அணுகுவதில்லை. மார்மன் தேவாலயம் அதன் இளைய அங்கத்தினர்கள் இரண்டு வருடங்கள் சமயப்பரப்பு வேலைகள் செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. இவ்வேலை, புதிய அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்காக அன்று. தேவாலயத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களால்தான் தொடர்ந்து இரண்டு வருடங்கள் முகத்தில் அறைவதுபோல் கதவுகள் சாத்தப்படுவதைத் தாங்கிக்கொள்ள இயலும். ஓய்வு நாளைப் புனிதமாக வைத்துக்கொள்வதையும், கண்டிப்பான உணவு முறைகளைக் கடைபிடிப்பதாலும் மட்டுமே ஒரு நபர் ஆசாரவாத யூதப் பிரிவின் உறுப்பினராகத் தொடரமுடியும். சகோதரத்துவ சங்கம், மகளிர் மன்றம், நண்பர்கள் சங்கம் போன்ற பல கூட்டுச் சங்கங்கள் விசித்திரமான, தலையைக் குனியவைக்கும் சடங்குகளை நுழைவுச் சீட்டாக வைத்துள்ளதால் பங்களிப்பதில் விழைவுள்ளவர்கள் மட்டுமே இத்தகைய சங்கங்களில் சேர்கிறார்கள்.

களங்கத்தை உண்டுபண்ணும் நடத்தைகள் தடை செய்யப்படுவதால் அத்தகைய நடத்தைகள் உள்ள நபர்களைச் சந்திப்பதும் நின்றுவிடுகிறது. மார்மன் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள், வெள்ளிக்கிழமை இரவுகளில் மதுக்கூடத்திற்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதால் தேவாலய நண்பர்களுடன் கலந்துரையாட வேண்டியது அவசியமாகிறது. இதனால் சங்கத்தின் மீதுள்ள விசுவாசம் அதிகரிக்கிறது.

கண்டிப்பான மதங்களும் கலகக் குழுக்களும்

ஈலை பர்மன் (Eli Burman) என்ற பொருளாதார வல்லுநர் அயன்னகோனிியன் முடிவுகள் பயங்கரவாதக் குழுக்களுக்கும் பொருந்துமா என்றறிய முனைந்தார். அவர் எழுதிய ‘Radical, religious, violent’ என்ற மிகச் சிறந்த புத்தகத்தில், தற்கொலைக் குண்டு வீச்சு போன்ற பயங்கரவாதச் செயல்களுக்கும், குழுக்களைச் சீராக நடத்துவதற்கும், அதன் அங்கத்தினர்களிடையே முழு ஒத்துழைப்பு வேண்டும். ஓர் அங்கத்தினர் பிடிபட்டாலோ அல்லது விலகினாலோ, குழு முழுவதுமே ஆட்டம் கண்டுவிடும் அல்லது அனைவருக்குமே கிலி பிடித்துவிடும் என்பதை விளக்குகிறார். மேலும், தற்கொலைக் குண்டு வீச்சு ஒரு தனி நபரால் செய்யப்படுவதன்று. குண்டு வீச்சுக்கான இலக்கின் போக்குவரத்தை நிர்ணயிப்பது, குண்டைத் தயார் செய்வது, பாதுகாப்பாளர்களின் கவனத்தைத் திருப்புவது போன்ற பலவிதமான வேலைகளைச் செய்யப் பலர் தேவைப்படுகின்றனர் என்பதையும் விளக்குகிறார்,

கண்டிப்பான மதப்பிரிவைப் பயங்கரக் குழுவுடன் இணைத்தால் அங்கத்தினர்களின் விசுவாசமும், ஒத்துழைப்பும் மேம்படுகிறது. கண்டிப்பான உணவு முறைகள், பொது இடங்களில் பல முறை இறைவணக்கம் செய்தல், மதப் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்தல் போன்ற வழக்கங்களைத் தீவிரமாகக் கடைபிடிப்பவர்கள் சிறந்த ஒத்துழைப்பாளிகளும் ஆவர்.

ஒரு குழுவின் சித்தாந்தமே (இறையியலே) அக்குழுவினரைத் தீவிர அரசியல் நடத்தைகளில் இறங்கத் தூண்டும் என்றாலும் இவை எல்லாவற்றையும்விடக் கண்டிப்பான நடத்தை நெறிமுறைகள்தான் கலகக் குழுக்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள இயந்திரம் என்பதைப் பர்மன் புத்தக வாசகர்கள் முழு மனத்துடன் ஏற்றுக்கொள்வர். அடிப்படைவாத மதங்களெல்லாமே வன்முறை மதங்களல்ல. அதனுள்ளிருந்து இயங்கும் ஒரு சில வன்முறைக்காரர்கள் இத்தகைய அமைப்புகளிலிருந்து கிடைக்கும் ஆதாயங்களுக்காகவும் அரசியல் சூழல்களினாலும்தான் தங்களை இம்மதங்களோடு இணைத்துக் கொள்கின்றனர்.

தாலிபானின் ஆட்சிமுறை

பர்மன் அவர்களின் ஆய்வுக் கருத்துகளைத் தாலிபான் நிரூபிக்கிறது. ஸுன்னி இஸ்லாமியப் பிரிவின் அடிப்படைவாதக் குழுவான தாலிபான் தனது கோட்பாடுகளை அங்கத்தினர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. எனவே, முழு ஒத்துழைப்பையும் தரும் அங்கத்தினர்களையும் தலைவர்களையும் பொறுக்கி எடுப்பது சுலபமாக உள்ளது. அவர்கள் குழுவிலிருந்து என்றுமே விலகமாட்டார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒழுக்கக் கட்டுப்பாடு மிகுந்த இந்த அமைப்பின் மைய இலக்கு, ஆஃப்கானை, ஒன்றிய இஸ்லாமிய அமீர் ராஜாங்கமாக உருவாக்குவது என்பதால், கீழ்ப்படியில் நிற்கும் போராளிகளும், அலுவலர்களும், மத குருமார்களும் தாலிபானை விட்டு விலகமாட்டார்கள் என்பதில் இந்த அமைப்பாளர்களுக்குத் திடமான நம்பிக்கை இருந்தது.

தாலிபானின் மேற்கூறிய தலையாய இலக்குதான் 1990களில் ஆஃப்கான் ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாயிருந்தது. 1989ல் சோவியத் முற்றுகை கவிழ்ந்தபின் பல்வேறு இனக்குழுக்கள் அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் கைக்குlள் கொண்டுவருவதற்காக நடத்திய போட்டியினால் நாடே சீரழிந்துகொண்டிருந்தது. விரிசல் கண்ட அரசாங்கத்தினால், வரி வசூலிக்கவோ மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ, கட்டமைப்புகளைக் காப்பாற்றவோ, வர்த்தகப் பரிமாறல்களைப் பாதுகாக்கவோ இயலாததால் ஆஃப்கான் உலகிலேயே மிக ஏழை நாடாக மாறியது.

தாலிபான் மட்டுமே இத்தருணத்தில் ஒருங்கிணைக்கும் நிர்வாகத்தை அளிக்கக் கூடியதாக இருந்தது. பாதுகாப்பான வர்த்தகப் போக்குவரத்து, மக்களைக் கொள்ளையடிப்பது போலல்லாமல் அளவோடு வரி வசூலித்தல், முக்கியமான நகரங்களில் தேவையான பொருட்களைக் கொண்டுசேர்த்தல் ஆகியவற்றிற்கான உத்திரவாதத்தை அளிக்கமுடிந்தது. முதலாவதாக, கந்தஹார் – ஹெராட் நெடுஞ்சாலையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இச்சாலைதான், ஆஃப்கான் நாட்டைப் பாகிஸ்தான், இரான், டர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைக்கும் பாதை. மேலும், இது அனைத்து நகரங்களையும் இணைக்கும் வளையச் சாலையுடன் இணைந்திருப்பதால் அனைத்து நகரங்களையும் வெளி உலகுடன் இணைக்கிறது. (பர்மன் புத்தகம் பக்கங்கள் 20-30.)

இதற்கு முன்னர், இந்த நெடுஞ்சாலையில் பல பழங்குடி நிறுவனங்கள், வர்த்தக வாகனங்களைப் பல இடங்களில் மறித்து வரி வசூலித்ததால் வர்த்தகம் முழுவதுமாக நின்றுபோனது. அரசாங்கத்தின் வரி வசூலும் தடைபட்டது. கட்டமைப்புகளும் தவிடுபொடியாயிற்று.

தாலிபான் இந்த நெடுஞ்சாலையின் முக்கியமான இடங்களில் தங்களது போராளிகளை நிறுத்திவைத்து, ஒருமுறை மட்டும் வரி வசூல் செய்ததால், வாகனங்கள் வழிப்பறிக் கொள்ளையரின் தொல்லையின்றி சுமுகமாகச் செல்லமுடிந்தது. இப்போராளிகள் மதக் கட்டுப்பாடும் உடையவர்களாக இருந்ததால் மற்ற நிறுவனங்களைப்போல் சுயநலத்திற்காக வாகன ஓட்டுநர்களிடமிருந்து பணம் பிடுங்கவில்லை.

வணிகம் திரும்பியது. வசூலித்த வரிப்பணத்தை வைத்து கட்டமைப்புத் திட்டங்களை அமலாக்க முடிந்தது. முன்பு நிலவிய அராஜகத் தாண்டவம் முழுவதுமாக நிறுத்தப்பட்டதால், தாலிபானுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியதில் அதிசயம் ஒன்றுமில்லை. மக்கள் தாலிபானின் தீவிர மத நோக்கை விரும்பாவிட்டாலும் திறந்த சாலைகளும், வீட்டில் மின்சாரமும் மக்களை அப்பாடா என பெருமூச்சு விடவைத்தது.

மேலும், மக்களிடையே ஏற்படும் சாதாரண வழக்குகளில் தாலிபான் நடுவராக மாறியது. மதத் தலைவர்கள் தனியாரின் ஒப்பந்தப் பூசல்களை விசாரித்துத் தீர்ப்பும் வழங்கினர். (பர்மன் புத்தகத்தைப் பார்க்கவும்). ஆடுகள் மேயும் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது போன்ற வழக்குகள் அற்பமானவையாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இத்தகைய வழக்குகளைத் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது பொருளாதாரச் செயல்கள் தொடர்வதற்கு இன்றியமையாததாகும். ஒப்பந்தங்களில் நம்பிக்கையும், நிலவுரிமை வழக்குகளில் சரியான தீர்ப்பும் இருந்தால்தான் நீண்ட கால முதலீடுகள் செயற்படும். இத்தகைய பூசல்களில் தாலிபான் தலைமை சரியான தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உறுதிப்பட்டுள்ளதால், கடந்த 20 வருடங்களாகத் தாலிபான் நிழல்போல் பின்னிருக்கும் நீதித்துறையாக இயங்கி வருகிறது.

தாலிபான் வெற்றிக்கு காரணம் என்ன?

கண்டிப்பு மிகுந்த தாலிபான் என்னும் மத இயக்கத்தின் தலைவர்களும் முக்கிய அங்கத்தினர்களும் அவர்களது விசுவாசத்தைத் தங்களது கண்டிப்பான நடத்தை நெறிகள் (பிரார்த்தனை, குரான் படித்தல், கண்டிப்பான உடை விதிகள்) என்ற சாதனங்கள்மூலம் ஒருமைப்படுத்தியதால் மேற்கூறிய விவரங்கள் சாத்தியமானது. தாலிபானுக்கு முன்னிருந்த கண்டிப்பான நெறிமுறைகளற்ற, சமயச் சார்பற்ற அரசாங்கத்திற்கு இது சாத்தியப்படவில்லை. அந்த அரசாங்கத்தின் தலைமையகமே ஊழலில் ஊறியிருந்ததால் சிறு ஊழியர்கள் எக்கச்சக்கமாக பொது மக்களிடமிருந்து வரி வசூலிப்பதையும் லஞ்சம் வாங்குவதையும் மத்திய அரசாங்கத்தினால் தடுக்க முடியவில்லை. அதனால்தான் தாலிபானின் இரண்டாவது பட்டணப் பிரவேசம் மக்களிடையே எவ்விதமான எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆகஸ்ட் 31ம் தேதி புகைப்படமொன்று தாலிபான் படையினர் அமெரிக்கா விட்டுச்சென்ற கவச வாகனத்தின் (armored car) மீது அமர்ந்து சென்றுகொண்டிருப்பதையும், அச்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் அதைக் கவனியாது தங்களுடைய காரியங்களில் கவனமாயிருப்பதையும் பார்த்த்த பிறகு இது உண்மைதான் எனத் தெரியவந்தது.

தாலிபானின் மிகையான மத நன்னெறிகள் அனைவருக்கும் பிடித்தமானதாக இல்லாமல் இருக்கலாம். தற்சமயம் இதைப்பற்றிய வாக்கெடுப்பு என்பது இயலாத ஒன்று. இருந்தாலும், கண்டிப்பானதும் எதிபார்க்கக்கூடியதுமான தாலிபானின் ஷரியா விதிமுறை, 20 வருடங்களாகச் சித்தம்போன போக்கில் நடந்த கொடுங்கோலாட்சியைவிட எவ்வளவோ மேலானது என்று இரண்டாம் முறையாக மக்கள் தீர்மானித்துவிட்டனர் என்றுதான் நம்பவேண்டும்.

இக்கட்டுரை ஆஃப்கானியர்களின் பிரச்சினைகளைச் சிறுமைப்படுத்துவதற்காக எழுதப்பட்டதாகக் கருதுவது தவறு. இதன் ஆதாரக் கட்டுரையாசியர் தாலிபானுக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் விரும்பும் தொன்மை வாய்ந்த, விஸ்தாரமான உரிமைகளை அளிக்கும் தாராளவாதம் என்பது தாலிபான் நிர்வாகத்தில் வெற்றுக் கனவுதான் என்பதும் அவருக்கு தெரியும். இக்கட்டுரை, எதனால் தாலிபான் இரண்டே வாரங்களில் முன்பைவிட அதிக அளவு ஆஃப்கான் பரப்பளவைக் கைப்பற்ற முடிந்தது என்பதற்கான பொருளாதார விளக்கம். அமெரிக்க இராணுவத்தின் உத்திரவாதத்துடன் 20 வருடங்கள் இயங்கிய ஊழல் மிகுந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது தாலிபானின் ஆறு வருட ஆட்சி ஒழுங்கானதாகவும் நம்பத்தகுந்ததாகவும் இயங்கியதே காரணம். ஆஃப்கானியர்களின் எதிர்காலம் எத்தகையது என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், தாலிபானின் வெற்றி, சமூக அறிவியலார்களுக்கு மூன்று பாடங்களைப் போதிக்கிறது. எவ்வாறு கலகக்காரர்கள் ஆட்சியை கைப்பற்றுகின்றனர், எவ்வாறு ஆற்றல் வாய்ந்த அரசியல் முறை ஊழல் மிகுந்த அரசை வெளியேற்றும், ஏன் 21ம் நூற்றாண்டிலும் மதங்களின் முக்கியத்துவம் குறையவில்லை என்பதாகும்.

பின்னுரை

ஆதாரக் கட்டுரையை படிக்கும் முன்னரும் இக்கட்டுரையைத் தயார் செய்யும் சமயத்திலும் பல அரசியற் பண்டிதர்கள் எவ்வாறு அமெரிக்கா என்ற கோலியத்தினால் விரட்டப்பட்ட தாலிபான் எனும் தாவீது 20 வருடங்களுக்குப் பின்னர் சண்டையோ சச்சரவோ இல்லாமல் கோலியத்தைப் புறமுதுகு காட்டச்செய்தது என்பதற்காகக் கொடுத்துள்ள பல காரணங்களைப் பத்திரிகைகளிலும் ஒளிபரப்புகளிலும் ஊடகங்களிலும் பார்த்துவிட்டேன். 80,000 தாலிபான் படையினரைக் கண்டு 300,000க்கும் மேலான அமெரிக்கப் பயிற்சிபெற்ற ஆஃப்கானிய இராணுவம் எங்கு எதனால் ஒளிந்துகொண்டது? அமெரிக்க இராணுவம் விட்டுச்சென்ற பட்டியல் மலைப்பைத் தருகிறது: 22,174 கவசமிட்ட ஹம்வீஸ் (Humvees), 42 சுமை தூக்கும் பார வண்டிகள் (pick-up trucks), 64,363 யந்திரத் துப்பாக்கிகள் (machine guns), 1,62,043 வானொலிப் பெட்டிகள், 16,035 இரவு நேரக் காப்புக் கண்ணாடிகள் (night-time goggles), 3,58,530 தாக்குதல் துப்பாக்கிகள் (assault rifles) 1,26,295 கைத்துப்பாக்கிகள் (pistols) என நீண்டுகொண்டே போகிறது. இத்தனை சுலபமாக இவையெல்லாம் கைமாறியதை பார்த்தால் முன்கூட்டியே இரு தரப்பினரும் பேசி வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம்கூட சிலருக்கு எழலாம். அமெரிக்காவின் வெட்ககரமான பின்வாங்கலுக்குப் பல காரணங்கள் காட்டப்பட்டாலும் ஆஃப்கானிய மக்கள் நாடு முழுவதும் தாலிபானை வரவேற்றதற்கான காரணங்களை ஒரு பொருளாதார நோக்கிலிருந்து எவருமே அணுகியதாகத் தெரியவில்லை. அவ்விதத்தில் அந்தோணி கில் அவர்களின் கட்டுரை முதலாவது மட்டுமல்லாமல் சரியான விளக்கமாகவும் தோன்றுகிறது.

ஆதாரம்

Economics Explains the Taliban’s Rapid Advances; American Institute for Economic Research; August 19, 2021.

(Anthony Gill is a professor of Political Economy at the University of Washington and a Distinguished Senior Fellow of Baylor University’s Institute for the Study of Religion.

Earning his Ph.d. in Political Science at UCLA in 1994, Prof. Gill specializes in the economic study of religion and civil society.

He received UW’s Distinguished Teaching Award in 1999 and is also a member of Mont Pelerin Society).

பின்குறிப்பு

இரண்டு நாள்களுக்குமுன் நான் ஊடகத்தில் கேட்டதும் பார்த்ததும்:

தாலிபான் ஆஃப்கான் நிர்வாகத்தைக் கைப்பற்றியபின்,அவ்வரசாங்கத்தின் சார்பாகப் பேசுபவர், மற்ற எல்லா நாடுகளையும் தவிர்த்துச் சீனாதான் எங்களது முக்கிய நண்பன் என்று பேசியுள்ளார். இதன் பின்னணியை இந்த ஊடகம் அலசியபோது 1990களிலேயே சீனா முதலில் தாலிபானுடன் நெருங்கி இருந்தது, பயங்கரவாதக் குழு என்று மற்ற நாடுகளுடன் ஐக்கிய நாட்டு சபையில் வாக்களித்தபின்னும், தாமிரச் சுரங்கம் வெட்டுவதற்கு உதவி அளிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தது. பாகிஸ்தானில் சீன தூதுவர் அப்போதைய தாலிபான் தலைவருடன் சந்தித்துப் பேசினார் என்பது போன்ற விவரங்கள் வெளிவந்துள்ளன. சுரங்கம் வெட்ட ஆரம்பிக்கும் முன்னரே தாலிபான் கவிழ்ந்தது. அமெரிக்கா வெளியேறியபின், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபை, தாலிபான் பிற நாடுகளில் வன்முறைச் செயல்களில் இறங்கக்கூடாது, மனித உரிமைகளை மதிக்க வேண்டும், ஆஃப்கானியர்களும் பிற நாட்டினரும் சுமுகமாக வெளியேற வழி செய்யவேண்டும் என்ற தீர்மானத்தின் வாக்களிப்பில் ரஷியாவும் சீனாவும் பங்கேற்கவில்லை. இத்தகைய தீர்மானங்கள் இச்சபையின் கையாலாகாத்தனத்தையும் உபயோகமற்ற தன்மையையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது. இது தாலிபானுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதால்தான் அரசாங்கப் பிரதிநிதி சீனாவை ஆதரித்துப் பேசினார் என்றும் தெரிகிறது. முஸ்லிம் பிரஜைகளை மிகக் கொடுமையாக நடத்துவதில் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ள, கடவுளை மறுக்கும் கம்யூனிச சீனாவை, இஸ்லாமிய அடிப்படைவாத மதக் கொள்கைகளைத் தழுவியுள்ள தாலிபான் எவ்வாறு முக்கிய நண்பனாகத் தேர்ந்தெடுத்தது என்பதற்கான காரணங்களையும் முன்வைத்தது. தாலிபான் அரசாங்கத்திற்குச் சீனா 27 மில்லியன் உதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதைவிட, இவ்விரு அரசாங்கங்களையும் பிரிக்கும் அகழியாகத் தோன்றும் மதம் உண்மையில் இவ்விருவருக்குமே முக்கியமானதன்று. இரு அரசியல் குழுக்களுமே தங்களை எவ்வாறு அரசாங்கப் பதவியில் நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற ஒரே குறிக்கோளுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, தாலிபானின் மதப் போராளிகளும் மக்களும் இவர்களுக்கு பகடைக்காய்கள்தான். இரு நாட்டுத் தலைவர்களுமே மதத்தைத் துச்சமாகத்தான் மதிக்கின்றனர். எனவே, இக்கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகள் இனியும் செல்லுபடியாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.