தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

பாரதியின் அந்தப் பாடலை யதுகுல காம்போதி ராகத்தில் பாடுவார்கள். எட்டே வரிகள்தான் பாடலுக்கு.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!”

என்பன முதலிரண்டு வரிகள். இறுதி இரண்டு வரிகள் இறையனுபவத்தின் உன்மத்த நிலையைச் சுட்டிக்காட்டுவது-

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா!”

என்பன. பாரதிக்கு இவை சாத்தியப்பட்டிருக்கின்றன.

 “நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!”

என்பன அத்தனை இலகுவான வரிகள் அல்ல!

இஃதோர் ஆன்மீகக் கட்டுரை இல்லை என்பதாலும், அதற்கான முற்பிறப்பின் வரமும் முன்னோர் செய் தவமும் அருளப் பெறாததாலும், கவிதை நயத்துக்காகவே மேற்சொன்ன பாடல் வரிகளை எடுத்தாண்டேன். உ.வே.சாமிநாதைய்யர் திருவண்ணாமலை இரமண மகரிஷியிடம் கூறியதைப் போல தமிழனுபவமே நமக்கும் இறையனுபவம்!

காக்கையின் சிறகின் நிறத்தில் நந்தலாலாவின் நிறத்தைக் காண்கிறான் பாரதி. அது அண்டங்காக்கை. கருங்காகம், ஊர்க்காகம் என்றாலும் இறகின் நிறம் கருப்புதானே! கார்மேகத்தில் அவன் நிறம் கண்டு கார்மேக வண்ணன், கருமுகில் வண்ணன், மழை வண்ணன், நீல மேகச் சியாமள வண்ணன் என்றனர். அடர்ந்து செறிந்த கரிய மயிர்க்கற்றையின் வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு கார்குழல் வண்ணன் என்றனர். “மையோ, மரகதமோ, மழை முகிலோ, மறிகடலோ!” என்பார் கம்பர். தொண்டரடிப் பொடி ஆழ்வார், “பச்சை மாமலை போல் மேனி! பவளவாய், கமலச் செங்கண்” என்றார். கரிய செம்மல், அஞ்சன வண்ணன் என்பார் மேலும் கம்பர். அஞ்சனம் என்றாலும் மைதான். எல்லாரும் இந்த வண்ணங்களில் குறிப்பிடுவதையே காக்கைச் சிறகின் நிறத்துக்கு உவமை சொல்கிறார் பாரதி. காக்கை சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும், ஐங்குறுநூறிலும், குறுந்தொகையிலும், நற்றிணையிலும், பரிபாடலிலும், புறநானூற்றிலும், பதிற்றுப் பத்திலும் பேசப்பட்ட பறவை.

எனக்குத் தோன்றுகிறது கண்ணனின் நிறத்துக்குக் காக்கையின் நிறத்தை உவமை சொன்ன புலவன் பாரதியாகவே இருக்க வேண்டும். நம்முடன் குடும்ப உறுப்பினர் போலக் கூடிக் கிடப்பதாலேயே காகம் மலிவான பறவையாக ஆகி விடாதல்லவா! சீதையின் முலையைக் கொத்த வந்த வீரமும் துணிவும் காக்காசுரனுக்குத்தான் இருந்தது என்றால் அது இராவணனின் மறம் அல்லவா!

பாரதி நந்தலாலாவின் நிறத்தைக் காக்கையின் கரிய நிறத்துக்கு உவமை சொல்கிறார். கருடனையும், செண்பகத்தையும், குயிலையும், மயிலையும், மைனாவையும், வால் நீண்ட கருங்குருவியையும், கிள்ளையையும் அவன் பேசவில்லை இந்த சந்தர்ப்பத்தில்.

பாரதியின் நந்தலாலாவைப் பரிச்சயம் கொண்டோம். நந்தன் எனும் சொல் சமற்கிருதம் என்கின்றன அகராதிகள். ஒலி அமைப்பில், எழுத்து அமைதியில் தமிழ்ச் சொல்லே போல ஒலிக்கும் சொல் அது. நந்தன் எனும் சொல்லின் பொருள் – கண்ணன், நந்த கோபாலன், இடையன்.

பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட அரச வம்சத்தினர் எனும் குறிப்பு தரப்பட்டுள்ளது. நந்தன் என்றால் மகன், புத்திரன் எனும் பொருள் தருகிறது இலக்கண அகராதி. நந்தன் எனும் சொல்லுக்குப் புத்திரன், கண்ணனின் பிதா என்கிறது இலக்கியச் சொல்லகராதி.

திரு நாளைப் போவார் நாயனாரின் இயற்பெயர் நந்தன். எளிய பாரதப் பிரதமராக இருந்த குல்ஜாரிலால் நந்தா என்பவரின் பெயர் யாருக்காவது நினைவிருக்குமா? திருநாளைப் போவாரின் வேறு நிலைப்பாட்டுப் பெயரே நந்தனார் என்பது. இசை முரசு எம். எம். தண்டபாணி தேசிகர் நடித்த ‘நந்தனார்’ எனும் திரைப்படத்தின் பாடல் கேட்டுப் பயனடையலாம்.

அக நானூற்றில் மாமூலனார் பாடலில் நந்தன் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. நந்தன் வட நாட்டில் இருந்து படை கொண்டு தென்னாட்டுக்கு வந்த மௌரிய மன்னன் என்று உரை சொல்கிறார்கள். அகநானூற்றில் மற்றொரு பாடல் மாமூலனார் பாடியது, ‘பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்’ என்கிறது. அந்தப் பாடலிலேயே பாடலி எனும் சொல் பாடலிபுரம் எனும் பொருளில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.

சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.

நந்தனின் பெண்பால் பெயர் நந்தினி. மகள் என்றும், தெய்வ ஆக் கன்று என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. ஆக் கன்று என்றால் பசுங்கன்று என்று பொருள். ஆ – பசு, ஆவினம் – பசுவினம், ஆவின் பால் – பசுவின் பால். பால்வள நிறுவனங்கள் எதைக் கலக்கித் தருகின்றன என்பதை நாம் அறிய மாட்டோம். குழந்தைகள் முதல் முதியோர் வரை வாங்கிக் குடிக்கும் பாலிலும் ஊழல் செய்யும் பண்பாடு நம் தேசத்தவர்க்கு. நந்தனோ, நந்தினியோ வந்து காத்தருள்வர் என்ற நம்பிக்கையும் செத்து விட்டது.

நிறுவனங்கள் மூலம் பால் பண்ணை வைத்து மக்களுக்குப் பால் விநியோகம் செய்யும் அமைப்புக்களின் பெயர்கள் – அமுல், மில்மா, நந்தினி, ஆவின்….

சென்ற கிழமையில் குடியிருக்கும் பகுதியில் நடைப் பயிற்சி போனபோது, புகழ் பெற்ற இந்தியப் பால் நிறுவனத்தின் முகவர் கடைக்குள் நுழைந்தேன். அந்த நிறுவனத்தின் மோர் பாக்கெட் கண்ணில் பட்டது. வடநாட்டில் சாஸ் என்றழைக்கும், நாம் வழக்கமாகப் பயன்படுத்தாத மசால் பொடி தூவிய மோர் மணக்க மணக்க இருக்கும். என் கண்ணில் பட்ட மோர் அந்த வகைப்பட்டது. ஆசைப்பட்டு இரண்டு பாக்கெட் வாங்கினேன். ஒரு லிட்டர் பாக்கெட் மோரின் விலை ஐம்பது பணம். வீட்டில் வந்து பார்த்தபோது, தயாரிப்பு மாதம் மார்ச் 2021 என்றிருந்தது. ஆகஸ்ட் மாதம் ஆகி விட்டதே எனும் பதற்றத்தில் பாக்கெட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபோது ஆறு மாதத்திற்குள் பயன்படுத்துவது சிறப்பு என்ற தகவல் இருந்தது. எல்லாரும் குடித்தாலும், மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு, ஆறுமாதம் முன்பு கலக்கிய மோரைக் குடிக்கிறோமே என்று! நம்மையே நாம் நொந்து கொள்ளலாம்.

பாற்கடல் கடைந்தபோது வந்த காமதேனுப் பசுவின் மகள் நந்தினி என்பது புராணம். எந்தப் பசு எவர் உடைமை என்பது வேறு சங்கதி. ஆகவே நந்தினி என்ற சொல்லுக்கு தெய்வ ஆக் கன்று என்று பொருள்.

புதல்வி என்று பொருள் தரும் நந்தனை என்றும் ஒரு சொல்லுண்டு. யாழ்ப்பாண அகராதி, நந்தினி என்ற சொல்லுக்கு நந்தனை என்றே பொருள் தருகிறது. நந்தனன் என்றால் குமரன், மகன் என்று பொருள். யாழ்ப்பாணத்து சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை 1914 இல் வெளியிட்ட இலக்கியச் சொல்லகராதி, நந்தனன் என்றால் புத்திரன், மகிழ்விப்பவன் எனப் பொருள் தருகிறது.

நந்தன் எனும் பெயரிலேயே சில இசைப்பாடல் நூல்கள் உண்டு. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்று கோபாலகிருஷ்ணையர் 1915 இல் வெளியிட்ட நூலொன்று உளதாக அறிகிறேன். 19ஆம் நூற்றாண்டு நூலாகிய ‘நந்தன் கீர்த்தனை’ எனும் நூல் கோபால கிருஷ்ண பாரதி இயற்றியது. அது நாமறிந்த தகவல். நந்தன் கீர்த்தனை வரலாறு என்றொரு நூலும் இருந்ததாகத் தகவல். தமிழ் இலக்கிய அகராதி, 1953 ஆம் ஆண்டில் ந. சி. கந்தையா பிள்ளை தொகுத்தது, அந்த நூலை ஆக்கியோர் பெயர், வெளியான ஆண்டு போன்ற தகவல்களை அறியத் தரவில்லை.

ஆனால் அவர் 1894 ஆண்டு, ‘நந்த மண்டல சதகம்’ எனும் நூல் பற்றிக் குறிப்பிடுகிறார். நந்தன் எனும் அரசன் மீது பாடப் பெற்றது. ஆசிரியர் பெயர் அறியேம். பிரமபுரி திருவேங்கடம் பிள்ளை அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார். எங்காவது நூலகங்களில் தேடினால் கிடைக்கக் கூடும்.

நந்த கோபாலன் குமரன் என்றால் கண்ணன் என்பதறிவோம். ஆண்டாள் அருளிய திருப்பாவை முப்பதின் முதற் பாடல் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்று தொடங்கும். இந்த முப்பது பாடல்களையும் எம். எல். வசந்த குமாரி பாடிய பதிவைப் பல முறை கேட்டிருக்கிறேன். முதல் திருப்பாவையின் இரண்டு அடிகள்,

“கூர்வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்”

என்று வரும்.

நந்த கோபாலன் என்றால் கண்ணன் என்றும், கண்ணனின் வளர்ப்புத் தந்தை என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. 18-ஆவது திருப்பாவையில் ஆண்டாள்,

“உந்து மதக் களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!”

என்று பாடுவாள்.

எதற்கு இவனுக்கு இப்போது நந்தன் பற்றிய சிந்தனையும் தேடலும் என்று எவர்க்கேனும் தோன்றலாம். சொல்வனம் 249 ஆவது இதழில் எனது ‘எதிர்ப் பை!’ எனும் கட்டுரைக்கு எதிர்வினையாக திரு. இலட்சுமி நாராயணன் ஒரு வினா எழுப்பி இருந்தார்.

‘நந்தவனம் என்ற சொல்லின் பொருள் பூக்காடு, பூந்தோட்டம் என்பது சரி! ஆனால் நந்தவனம் எனும் சொல்லை நந்தம்+ வனம் என்று பிரித்தால், நந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன? நந்தம் எனும் சொல்லுக்கு நந்து, சங்கு, நாரத்தை, சவ்வாது, கஸ்தூரி, காக்கை, பெருமுயற்சி, குபேரனின் பெரு நிதியங்களில் ஒன்று என்பன. நந்தா விளக்கு என்றால் அணையா விளக்கு! நந்துதல் என்றால் மெதுவாகச் செல்லுதல்!’ இது அவரது ஐயம் அல்லது தெளிவு.

நந்தவனம் எனும் சொல் நந்தம்+ வனம் என்று பகுபடுமா அல்லது நந்த+வனம் எனப் பகுபடுமா என்பது அறித்திருப்பேன் எனில் ஓய்வூதியமாக மாதம் 1418 பணம் பெற்றுக் கொண்டிருக்க மாட்டேன் பதினேழு ஆண்டுகளாக!

நந்தவனம் எனும் சொல் இருபெயரொட்டு எனும் பிரிவில் வரும் என்கிறார்கள். எடுத்துக் காட்டு – உபவனம், பூங்கா, உபவாசம் எனும் சொற்கள். கோயில் அல்லது அரண்மனை சார்ந்த பூந்தோட்டம், நந்தவனம் என்று வழங்கப் பெற்றது என்றும் சொன்னார்கள்.

பழைய ராஜா-ராணி சினிமாக்களில் கையில் பூங்கொத்து வைத்துக் கொண்டு காமம் பெருக்கும் பாடல்கள் பாடி, வரைவின் மகளோ என எண்ணும்படி உடலுறுப்புகளை அசைத்துக் காட்டி நாயகனும் நாயகியும் காதல் செய்த இடம் நந்தவனம்.

நந்தவனம் என்றால் பூந்தோட்டம் என்றும், அஃதோர் வட சொல்லின் தமிழ்ப் பிறப்பென்றும் கூறுகின்றன அகராதிகள். நந்தவனம் எனும் சொல் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் இல்லை. திருக்குறளில் இல்லை, நாலடியாரில் இல்லை, திருவாசகத்தில் இல்லை.

நந்தனம் என்பது மற்றுமோர் சமற்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம். தற்சமம்- தற்பவம் இலக்கணங்களுக்குள் வரையறுக்கப்பட்டு, வட எழுத்து ஓரீ இ, தமிழில் புழங்குகிறது. பொருள் பூந்தோட்டம், நந்தவனம், மகிழ்ச்சி என்பன. தமிழ் நாட்டின் அரசியல் – அதிகாரம் – தரகு – சினிமா இவற்றின் தலைநகரமான சென்னையில் ஒரு பகுதி நந்தனம் என்று வழங்கப் பெறும். மகிழ்ச்சி! (மகிழ்ச்சி எனுமிந்தச் சொல் பல்லுலக நாயகன், இந்திய அரசால் பத்ம விபூஷன் விருதளித்துச் சிறப்புச் செய்யப்பட்ட நடிகர், பஞ்ச் டயலாக்காகப் பயன்படுத்திய சொல்.)

நந்தனம் எனும் சொல் வேறு பொருள்களில் வழங்கப் பெறும் தமிழ்ச் சொல்லுமாம்! நந்தனம் என்றால் நந்து, நத்தை என்கிறது சங்க அகராதி. தவளை என்கிறது யாழ்ப்பாண அகராதி. நண்பர் எதிர்வினையில் குறிப்பிட்டது போல, நந்தனம் என்றால் நாரத்தையும் ஆகும்.

நந்தனவனம் என்றொரு சொல்லும் கிடைக்கிறது. வடசொல் பிறப்பு. பொருள் தேவர்கோன் அதாவது இந்திரனது பூங்காவனம் அல்லது பூந்தோட்டம். சோலை என்று பொருள் சொல்லும் பிங்கல நிகண்டு, 

நந்தாவனம் என்ற சொல் ஒன்றும் கண்டேன். பொருள் நந்தவனமேதான். ‘நறுமலர் பொய்கையும் நந்தாவனமும்’ என்று பெருங்கதையின் பாடல்வரி மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.

நந்தனுடைய வனம் எனவே நந்தவனம் என்றும் பொருள் சொல்கின்றனர். நந்தன் யாரென முன்பே பார்த்தோம். பிருந்தாவனம் என்றுமோர் சொல்லுண்டு. ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ என்பது அந்த காலத்தில் புகழ் பெற்றதோர் சினிமாப்பாட்டு. பிருந்தம் என்ற சொல்லுக்குத் துழாய் – துளசி என்று பொருள். பிருந்தா என நாமம் தரித்தவரின் பெயர்ப்பொருள் – துழாயம்மை, துளசியம்மை. பிருந்தை என்றாலும் துழாய்தான் பொருள். மற்றொரு பொருள் நெருஞ்சி. எனவே பிருந்தாவனம் என்றால் துழாய்க்காடு, துளசிக்காடு என்று கொள்ளலாம் – நெருஞ்சிக்காடு என்பதைத் தவிர்த்து விடலாம்.

சில தாவரங்களின் பெயர் நந்த என்று தொடங்குகிறது.

நந்தகாரி    – சிறுதேக்கு

நந்தமாலம்  – புன்கு  (திவாகர நிகண்டு)

நந்தகி      – திப்பிலி, சிறுதேக்கு  (யாழ்ப்பாண அகராதி)

நந்தாமணி  – வேலிப்பருத்தி

நந்திபத்தரி  – நந்தியாவட்டம்

நந்தியாவர்த்தம் – நந்தியாவட்டம் (திவாகர நிகண்டு)

நந்திவட்டம், நந்தியாவர்த்த தாமன் என்றால் நந்தியாவட்ட மாலை அணிந்தவன் – துரியோதனன் என்கிறது சூடாமணி நிகண்டு.

நந்திவட்டம்    – நந்தியாவட்டம் – ‘நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே!’ – தேவாரம்

நந்தி எனும் சொல்லுக்கு வழங்கப்பெறும் பத்து பொருள்களில் ஒன்று நந்தியாவட்டம். கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு,

“வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்
தும்பை, துழாய், சுடர்பூந்தோன்றி
நந்தி, நறவம், நறும் புன்னாகம்
பாரம், பீரம், பைங்குருக்கத்தி ‘

எனும் வரிகளில் குறிப்பிடப்படும் நந்தி எனும்சொல்லுக்கு நந்தியாவட்டம் என்றே உரை எழுதுகிறர்கள். குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெற்றுள்ள மலர்களை மனப்பாடம் செய்து மேடை தோறும் சொல்லிக் கரவொலி வாங்கி அமைச்சரான ஆட்கள் இருந்தனர்.

நந்தி என்றால் மதகரி வேம்பு என்றும் நன்றாக விளையாத பூசணிக்காய் என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. சாம்பல் பூசணிக்காயை மலையாளம் நீற்றுப் பூசணி என்னும். அதன் இன்னொரு பெயர் நந்திப் பூசணி. பரங்கிக்காயை நாஞ்சில் நாட்டில் பூசணிக்காய் என்பர். கொங்குநாட்டில் அரசாணிக்காய், நாங்கள் இளவன்காய் அல்லது தடியன்காய் என்பதை மலையாளம் மத்தன்காய் என்பதை தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் பூசணிக்காய் என்பர். அதற்காக நாங்கள் தனிநாடு கோர இயலுமா?

நந்தகம் என்றொரு சொல் கேள்விப்பட்டதுண்டா? வாள் என்று பொருள் தருகிறது யாழ்ப்பாண அகராதி. திருமாலின் வாள் நந்தகம் எனும் பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. தெய்வங்களின் சங்குகளுக்கு, வில்களுக்குப் பெயர் இருப்பதைப் போன்று, நந்தகம் வாளின் பெயர்.

நந்தகன் என்றுமோர் சொல் உண்டு. பொருள் நந்தகோபன். பூந்தோட்டம் அமைத்தலை நந்தவனம் பிரதிஷ்டை என்று வழங்கியுள்ளனர்.

நந்தாவிளக்கு என்பது யாவரும் அறிந்த சொற்றொடர். கோவில் கருவறையின் அவியா விளக்கு, அணையா விளக்கு, வாடா விளக்கு, தூண்டா விளக்கு. திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. அதன் முத்தி இலம்பகப் பாடலொன்று:

செந்தாமரைக்கு செழுநாற்றம் கொடுத்த தேங்கொள்
அந்தாமரையாள கலத்தவன் பாதம்  ஏந்திச் 
சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தாவிளக்குச் சுடர் நன்மணி நாட்டப் பெற்றே’

என்பது. 

சீவகசிந்தாமணியில் 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள், அவற்றுள் மேற்சொன்ன பாடல் என்பது 3144-வது பாடல்.

சீவகசிந்தாமணியின் முதற்பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன், உ.வே.சாமிநாதையர் பல சுவடிகளை ஒப்பு நோக்கி, 1887-ம் ஆண்டில் வெளியிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம் 1986-ல் ஒரு பதிப்பு வெளியிட்டது. அதெல்லாம் பொருட்டில்லை நமக்கு. ஆனால் உ.வே.சா வின் முழுப்பெயரை வசதிபோல் திருத்துவோம். சரி உரையைப் பார்ப்போம் – ‘செந்தாமரைக்கு நாற்றம் கொடுத்த அந்தாமரையென்றது, இறைவன் திருவடிகளை. அந்தாமரையை ஆளுகின்ற விரிந்த ஞானத்தை உடையவனென்றது சீவகனை. சிதர்ந்தேன் என்றது பரக்கக் கூறினேனென்றவாறு. அவியாத விளக்கு உள்ளே நின்று எரிகின்ற நன்மணி என்றது, குருக்களை.’

நந்தாவிளக்கு எனும் சொற்றொடரை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று ஆண்டுள்ளது என்பதைக் குறிக்கவே இத்தனை அதிகப்பிரசங்கம். ஆனால் தேடிக்கொண்டு போனபோது, பட்டினப்பாலை, நந்தாவிளக்கு எனும் சொற்றொடரை ஆள்வதை அறிந்தேன். கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்வார் ‘நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு’ என்று. சின்னஞ்சிறுவயதில் வீரநாராயண மங்கலத்தின் தெக்கூரில், வேதக்கோயிலில், ஞாயிறு காலையில் ஒலிபெருக்கியில் கேட்கும் பாடல் –

‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் – ஏசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்’

என்பது. ஆயிரம் முறை கேட்டிருப்பேன். சும்மா கதைக்கிறேன் எனக் கருதல் வேண்டா. அந்து வயதில் இருந்து, ஊரில் வாழ்ந்த இருபத்தைந்து வயது வரை இருபதாண்டுகள் எனக் கணக்கில் கொண்டு பாருங்கள். 52 × 20 = 1040 ஞாயிற்றுக்கிழமைகள் வரும் உத்தேசமாக, அன்று கேட்டபாடல் ‘இளமையில் கல்’ எனப் பாரதியை நினைவு படுத்தும். அதுவே நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு.

பட்டினப்பாலை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. சோழன் கரிகால் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. அந்த நூலில்,

நீரின் வந்த நிமிர்ப் பரிப்புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்”

என்று காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்த பல்பொருள் வளங்கள் பேசும் பாடல் அடிகள் இவை. பொருளும் சொன்னால் பாடலின் அருமை அர்ததமாகும் என்பதால் அரங்கின்றி வட்டாடுகிறேன்.

கடல்மார்க்கமாக நிமிர்வும் விரைவும் உடைய குதிரைகள் வந்தன. நிலத்தின் வழி காளைமாட்டு வண்டிகளில் கரிய மிளகு மூடைகள் வந்தன. வடமலையில் தோன்றிய மாணிக்கங்களும் பொன்னும் வந்தன.குடகுமலை பிறந்த சந்தனமும் அகிலும் வந்தன. தென்கடல் கொற்கையில் பிறந்த முத்துக்கள் வந்தன. கிழக்குக் கடலில் இருந்து பவளங்கள் வந்தன. கங்கையாற்று வளத்தால் விளைந்தவையும் காவிரியாற்றுப் பயனும் வந்தன. ஈழத்தின் , கடாரத்தின் பண்டங்கள் வந்தன.

எத்திசையிலும் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரவியங்கள் வந்தது போலவே, 27 மொழிகளின் 20,000 க்கும் மேற்பட்ட சொற்களும் வந்தன. அவை போற்றப் பெற்றன, புழங்கப் பெற்றன, இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சரி! நந்தா விளக்குக்கு வருவோம்!

“கொண்டிமகளிர் உன்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தாவிளக்கின்
மலரணி மெழுக்கும் ஏறிப் பலர் தொழ”

என்பன பட்டினப்பாலையின் பாடல்வரிகள்.

பகை நாட்டவரைப் போரில் வென்று சிறைப்பிடித்து வரப்பட்ட பெண்டிரைக் கொண்டி மகளிர் என்றனர். அவர்கள் திருக்கோயில்களில் பணிசெய்ய விடப்பட்டனர். அவர்கள் நீர் உண்டு கிடக்கும் துறைகளில் நீராடி, மாலைப்பொழுதுகளில் கோயில்களில் அணையாத விளக்குகளை ஏற்றினர். அவை இரவு முழுக்க எரிந்து கொண்டிருந்தன. தரை மெழுகி, மலர் தூவி இடப்பெற்ற அம்பலத்தில் ஏறிப் பலரும் தொழுதனர். இது பாடல் வரிகளுக்குப் பொருள்.

நந்தவனம் எனும் சொல் நந்தனின் வனம் என வடமொழிப் பொருள் சொல்லும்போது நந்துதல் என்றால் வளர்தல் எனத் தமிழ்மொழிப் பொருளில்  நந்தவனம் என்றால் செழித்து வளரும் வனம் என்று பொருள் தருகிறார்கள்.

நந்தம் என்ற சொல்லுக்கு சங்கு என்றும், பெருமகிழ்ச்சி என்று பொருளுரைக்கும் இலக்கியச் சொல்லகராதி. அதனைத் தொகுத்தவர் யாழ்ப்பாணத்து சுன்னாகம் எனும் ஊரினர், அ.குமாரசாமிப் பிள்ளை (1855-1922). இந்த அகராதி முதற்பதிப்பு கண்டது 1914-ல். மீள்பதிப்பை எந்த பல்கலைக் கழகமோ, உலகாய்வு உயராய்வு தமிழாய்வு மையமோ, மொழி வளர்ச்சிக் கழகங்களோ, பண்டார சந்நிதிகளோ செய்யவில்லை. ஆனால் பெரும் கரிசனத்துடன் 2009-ம் ஆண்டு சந்தியா பதிப்பகம் செய்தது. 

நந்துதல் எனும் சொல்லுக்கு இரு எதிர்மறைப் பொருள்கள். நந்துதல் என்றால் கெடுதல், சாதல், அவிதல், மறைதல், நிந்திக்கப்படுதல் என்பது ஒருவகை. நந்துதல் என்றால் வளர்தல், தழைத்தல், விளங்குதல், செருக்குதல், தூண்டுதல் என்பன இரண்டாம் வகை. விளக்கை நந்து என்றால் விளக்கைத் தூண்டு என்று பொருள். எனவே நந்தா விளக்கு என்றால் தூண்டாத விளக்கு என்று பொருள்.

நாலடியாரில் இல்லறவியல் பாடல் ஒன்று

“பெரியவர் கேண்மை பிறைபோல் நாளும்
வரிசை வரிசையா நந்தும்- வரிசையால்
வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”

என்பது முழுப்பாடல்.

பதுமனார் உரை எழுதினார், “பெரியோர் பிறரொடு கொண்ட நட்பு பிறை போல நாடொறும் முறைமுறையாக வளரும். சிறியார் பிறரோடு கொண்ட நட்பு விசும்பின் கண் செல்லும் மதியம் போல நாடோறும் முறைமுறையாய் ஓர் காரணமும் இன்றித் தானே குறையும்” என்று (காண்க: நாலடியார் உரைவளம், மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1953.)

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார்மகனார் நப்பூதனார் பாடிய பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப் பாட்டு, ‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி’ என்கிறது. சிவந்த நிலமாகிய பெருவழியில் காடுகள் தழைத்துச் செறிந்திருந்தன என்பது பொருள்.

பதிற்றுப் பத்து நூலில் ஏழாம் பத்து பாடியவர் கபிலர். அதிலொரு பாடல் வரி, “நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த” என்கிறது. நால்வேறு திசைகளிலும் ஒன்றுபோல விளங்கிப் பெருக என்பது பொருள்.

நந்த என்றால் பொலிவிழக்க எனும் பொருளில் ஐங்குறு நூலும், தழைக்க எனும் பொருளிலும் செழிக்க எனும் பொருளிலும் கலித்தொகையும், பெருக எனும் பொருளில் பரிபாடலும் கையாண்டுள்ளன.

நந்தி எனும் சொல்லைப் பெருகி எனும் பொருளில் அகநானூறும், நிறைவு பெற்று எனும் பொருளில் கலித்தொகையும், மிகுதியாகி எனும் பொருளில் குறிஞ்சிப்பாட்டும், விளங்கி எனும் பொருளில் புறநானூற்றில் கபிலரும் ஆண்டுள்ளனர். நந்திய என்றால் பெருகிய என்ற பொருளில் கலித்தொகையும் பரிபாடலும், செழித்த எனும் பொருளில் பதிற்றுப்பத்தும் பயன்படுத்தியுள்ளன. நந்தியான் என்றல் மகிழ்ந்தான் என்று பொருள் உரைக்கின்றனர் கலித்தொகைப் பயன்பாட்டுக்கு. நந்தின் என்றால் குறைவுபட்டால் எனும் பொருளில் புறநானூறு கையாண்டுள்ளது.

நந்து எனில் சங்கு எனும் பொருளில் அகநானூறும், நத்தை எனும் பொருளில் புறநானூறும் பயன்படுத்தியுள்ளன. செம்மையான சங்கு எனும் பொருளில் பதிற்றுப்பத்து ஆண்டுள்ளது. முல்லைப்பாட்டு “நந்து தொறும்” என்கிறது. அவியும் பொழுதெல்லாம் என்பது பொருள். நந்தும் என்றால் அழியும் என்ற பொருளிலும், சிறந்து விளங்கும் என்ற பொருளிலும் இருவேறு பாடல்களில் புறநானூறு பேசுகிறது. பெருகும் என்ற பொருளில் ஆள்கிறது கலித்தொகை.

நந்துவள் என்றொரு சொல் கிடைக்கிறது நற்றிணையில், பொருள் உயிர்த்து இருப்பவள் என்பதாகும். நந்தல் என்ற சொல்லுக்கும் எதிர்ப்பதப் பொருளாக கேடு என்கிறது சூடாமணி நிகண்டு. கம்பராமாயணத்தில், பாலகாண்டத்தில், கோலங்காண் படலத்தில் சீதை மன்னர் வீற்றிருக்கும் மண்டபம் சேரும் காட்சியைச் சொல்லும் கம்பன், ‘நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும்’ என்பார். அணையாத விளக்குப் போன்ற நங்கையாகிய சீதையும் என்று பொருள்.

நந்தல் எனும் சொல்லுக்கு நிந்தனை என்று பொருள் தரும் யாழ்ப்பாண அகராதி. அதாவது நந்தல் என்றால்  scorn, disdain. எனவே நிந்தனைப்படாத, அணையாத, கேடற்ற விளக்குப் போன்றவள் நங்கை சீதை என்று கம்பன் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

நந்தல் எனும் சொல்லுக்கு ஆக்கம் என்ற பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது increase, prosperity  என்ற பொருள். கலித்தொகையில் முல்லைக்கவி பாடும் சோழன் நல்லுருத்திரன்,

“முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்துருவம் பெற்றவள் மனம் போல நந்தியாள்”

என்கிறார். முத்துப் போன்ற வெண் மணற் பரப்பின் சோலையில் தலைவனுடன் முயங்கியபோது, சூதில் ஈரைந்து தாயம் பெற்றவள் போல மனம் மகிழ்ந்தாள் என்பது பொருள்.

நந்து என்ற சொல்லின் முதற்பொருள் ஆக்கம். சங்கு என்று பொருள் தரும் திவாகர நிகண்டு. நத்தை என்கிறது பிங்கல நிகண்டு. பிங்கலமே, பறவை என்றும் வேறொரு பொருள் சொல்கிறது.

பதினெண்கீழ்கணக்குகளில் ஏழாவது ஆசாரக்கோவை. நூறு பாடல்கள். இய்ற்றியவர் பெருவாயின் முள்ளியார். அதன் 96-வது பாடல்

 “நந்து, எறும்பு, தூக்கணாம்புள், காக்கை என்றிவை போல்
தங்கருமம் நல்ல கடைபிடித்து, தம் கருமம் 
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பொறியானும் படும்.”

என்று உரைக்கும், நத்தை, எறும்பு, தூக்கணாங்குருவி, காக்கை எனும் இவற்றைப் போல தத்தம் கருமம் நன்றாகக் கடைப்பிடித்து, தமது கருமமே பெற்றியாகக் கருதி முயல்பவர்களுக்கு ஒழுக்கம், நெறி-முறை-வழி என்பன எந்த வகையினேனும் அமையும். இது பாடலின் பொருள்.

ஆசாரம் என்ற சொல்லின் முதற்பொருள் ஒழுக்கம். “அச்சமே கீழ்களது ஆசாரம்” என்பார் திருவள்ளுவர். கீழ்கள் என்று அவர் இனத்தைக் குறிக்ககவில்லை. கீழ்மையான குணம் உடையவர்களைக் குறிக்கிறார். “ஆசாரம் என்பது கல்வி” என்கிறது நான்மணிக்கடிகை. “அறியாத் தேயத்து ஆசாரம் பழியார்” என அறிவுறுத்தும் முதுமொழிக் காஞ்சி.

நந்துருணி என்றொரு சொல்லும் கண்டேன். புறங்கூறுவோன் என்பது பொருள். எங்களூரில் குண்டுணி என்பர். கோள் சொல்பவன், குண்டாமுட்டி சொல்பவன், குறளை சொல்பவன் என்னுமிவரை நந்துருணி எனலாம். “தீக்குறளை சென்றோதோம்” என்றார் ஆண்டாள், திருப்பாவையின் இரண்டாம் பாடலில். தீயதான புறங்கூறல் சொல்ல மாட்டோம் என்பது பொருள். ஆனால் பென்னம்பெரிய முனிவர் ஒருவர் தீக்குறளை என்பதற்கு திருக்குறள் என்று உரை சொன்னார்.

நந்துருணி என்றால் மதியீனன், அற்பன் என்றும் பொருள்.

நந்தை எனும் சொல்லுக்குப் பொருள் – 1. கலப்பையும், நுகமும் தொடுக்கும் கயிறு. 2. இலைகளற்ற ஒட்டுண்ணித் தாவரம். 3. கொற்றான் (மலையாளம்). 4. தேற்றா எனும் மரம். கலங்கிய நீரைத் தெளிய வைக்க செட்டி நாட்டில் தேற்றாங்கொட்டை போடுவார்கள். வழக்கில் அதனைத் தேத்தாங்கொட்டை என்பர்.

நந்தை என்பது வடமொழிச் சொல்லும் ஆகும். பொருள் –

1, பிரதமை, சஷ்டி, ஏகாதசி என்னும் திதிகள் (பிங்கல நிகண்டு)

2. கபிலை நிறப்பசு          

3. அருகக் கடவுளது சமவச் சரணத்தின் கீழ்திசையிலுள்ள தடாகம்.

நந்தையைத் தொடர்ந்து நந்திக்கும் போகலாம். வாய்க்கும்போது தனிக் கட்டுரையாக எழுத முயல்வோம்.

ஆக, நந்தவனம் என்றால் இருவகையான பொருள் கொள்ளலாம். கோயில் பக்கமுள்ள வனம் போன்று செழித்த பூந்தோட்டம். கோயில் என்றால் அது இறைவன் உறையும் இடம், மன்னர் வாழும் இடம். இரண்டாவது பொருள் நந்தனின் வனம்.

இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அரசு அலுவலங்களால் பேணிப் பராமரிக்கப் படுவதாகச் செலவெழுதப்படும் புதரும் குப்பையும் மண்டிய பூங்கா எனப் பெயரிய இடங்களையும் நந்தவனம் என்று சொல்லலாம்.

வீரநாராயணமங்கலம் ஊரின் வடபக்கம் தேரேகால் தாண்டி இருக்கும் வயற்காட்டை நாங்கள் வடபத்து என்போம். வடக்குப் பத்தில் நாங்கள் பாட்டம் பயிர் செய்த வயலின் பெயர் நந்தவனத்தடி. வழக்கில் நந்தானத்தடி என்போம். தேரடி, கிணற்றடி என்பது போல நந்தவனத்தடி. ஒரு காலத்தில் அந்த வயலைத் தொட்டு நந்தவனம் இருந்திருக்கலாம். ஏனெனில் அந்த வயலுக்கு இரண்டு வயல்கள் வடக்கே சிறியதோர் பூவத்தான் கோவில் இன்றும் நிற்கிறது.

பாடல் ஒன்றுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்!

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்

               நாலாறு மாதமாய் குயவனை வேண்டி – கொண்டு

வந்தான் ஒரு தோண்டி – அதைக்

               கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!”

என்பது பாடல்.

ஆமாம்! நாமும் நந்தவனத்து ஆண்டியைப் போல, பல காலம் தவம் செய்து பெற்ற மொழியை, மரபை, இசையை, பண்பாட்டை, அறங்களை, ஒழுக்கத்தை, நெறிகளை, நீதியை, கலைகளைக் கூத்தாடிக் கூத்தாடி, போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறோம்!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!!

10 Replies to “தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!”

 1. கண்ணன் பாட்டில் பாரதி சொல்கிறான் “சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு சூதறியாது சொல்வான்” என்று. நாடன் நவில்வது எல்லாம் நல்மொழியே.பாரதி மொழியினிலே தொடர்ந்து நடைபயின்றால் ‘ துயரில்லை, மூப்புமில்லை, என்றும் சோர்வில்லை’ எங்கள் நாடனுக்கு. நாஞ்சில் ஐயாவின் கைகளில் கணையாழிகள் இல்லை. உடுத்தியிருப்பது பட்டுமில்லை. மொழிகளில் நஞ்சும் இல்லை.வேம்பும் இல்லை. யாவற்றிற்கும் மேலாக புகழ்வதற்கு விரகர் இல்லை. உண்மைத்தமிழ் உணர்வு கொண்டோர் கொண்டாட வேண்டிய தமிழறிச்செல்வர். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் திறம்பட்ட மொழி ஆற்றலும் தனித்துவமாய் மணக்கும் மருதநிலத் தலைவன். மருதத்திலிருந்து குறிஞ்சிக்கு புலம் பெயர்ந்திருக்கும் கபிலன். என் வியப்பெல்லாம் இவரின் ஆழ்ந்த ஆழ்ந்த வாசிப்பும் அவற்றை பயன்படுத்தும் பயன்படுத்தும் முறையும். பல்லாயிரம் முனைவர் பட்டம் பெற ஐயனின் எண்ணத்தறியில் நினைவுகள் இழையோடிக்கொண்டிருக்கின்றன. நல்லுலகம் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். ஆட்சியாளர்கள் எவ்வழியோ செல்லட்டும். நாம் கொண்டாடுவோம் அறிஞரை. கட்டுரையின் இறுதியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வருத்தம் மெய்யான புலம்பல். ‘பல காலம் தவம் செய்து பெற்ற மொழியை, மரபை, இசையை, பண்பாட்டை, அறங்களை, ஒழுக்கத்தை, நெறிகளை, நீதியை, கலைகளைக் கூத்தாடிக் கூத்தாடி, போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறோம்!’ அணிகலன்களாய் சொற்களின் அணிவகுப்பும் , விளக்கமும், மேற்கோள்களும்..கட்டுரை ஆசிரியருக்கு விருப்பமான கம்பனின் வரிகளில் கூற விழைந்தால்’தருமமும், தகவும், இவர் தனம் எனும் தகையர்.இவர்;
  கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி அன்று’.எனலாம். தழிழ் மீதான தீரா காதல்தான். பிறிது ஓர் பொருள் கருதி அன்று’.

 2. கண்ணன் பாட்டில் பாரதி சொல்கிறான் “சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு சூதறியாது சொல்வான்” என்று. நாடன் நவில்வது எல்லாம் நல்மொழியே.பாரதி மொழியினிலே தொடர்ந்து நடைபயின்றால் ‘ துயரில்லை, மூப்புமில்லை, என்றும் சோர்வில்லை’ எங்கள் நாடனுக்கு. நாஞ்சில் ஐயாவின் கைகளில் கணையாழிகள் இல்லை. உடுத்தியிருப்பது பட்டுமில்லை. மொழிகளில் நஞ்சும் இல்லை.வேம்பும் இல்லை. யாவற்றிற்கும் மேலாக புகழ்வதற்கு விரகர் இல்லை. உண்மைத்தமிழ் உணர்வு கொண்டோர் கொண்டாட வேண்டிய தமிழறிச்செல்வர். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் திறம்பட்ட மொழி ஆற்றலும் தனித்துவமாய் மணக்கும் மருதநிலத் தலைவன். மருதத்திலிருந்து குறிஞ்சிக்கு புலம் பெயர்ந்திருக்கும் கபிலன். என் வியப்பெல்லாம் இவரின் ஆழ்ந்த ஆழ்ந்த வாசிப்பும் அவற்றை பயன்படுத்தும் பயன்படுத்தும் முறையும். பல்லாயிரம் முனைவர் பட்டம் பெற ஐயனின் எண்ணத்தறியில் நினைவுகள் இழையோடிக்கொண்டிருக்கின்றன. நல்லுலகம் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். ஆட்சியாளர்கள் எவ்வழியோ செல்லட்டும். நாம் கொண்டாடுவோம் அறிஞரை. கட்டுரையின் இறுதியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வருத்தம் மெய்யான புலம்பல். ‘பல காலம் தவம் செய்து பெற்ற மொழியை, மரபை, இசையை, பண்பாட்டை, அறங்களை, ஒழுக்கத்தை, நெறிகளை, நீதியை, கலைகளைக் கூத்தாடிக் கூத்தாடி, போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறோம்!’ அணிகலன்களாய் சொற்களின் அணிவகுப்பும் , விளக்கமும், மேற்கோள்களும்..கட்டுரை ஆசிரியருக்கு விருப்பமான கம்பனின் வரிகளில் கூற விழைந்தால்’தருமமும், தகவும், இவர் தனம் எனும் தகையர்.இவர்;
  கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி அன்று’.எனலாம். தழிழ் மீதான தீரா காதல்தான். பிறிது ஓர் பொருள் கருதி அன்று’.

 3. ஒற்றைக் கட்டுரையில் எத்தனைத் தொட்டுச் செல்கிறீர்கள். நம் இலக்கியச் சுரங்கத்தில் ஆழமான பயண உணர்வை தரும் அனுபவம். ஆங்காங்கே, அறச் சீற்றம் தெறிக்கும் சொற்கள். பாரதியைத் தொட்டுத் துவங்கும் விதமே, முழுவதும் தடங்கலில்லாமல் படிக்க வைக்கிறது. நன்றி.

 4. தமிழாசிரியருக்கு அன்புடன்!

  நலம் தொடர்க!

  தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ கிடைக்கப்பெற்று உடனே படித்தேன். அனுப்பியமைக்கு மிக்க நன்றி! தங்கள் கட்டுரைகளில் செறிவும் அடர்த்தியும் கூடிச்செல்வதாக உணர்ந்தேன். மீண்டும் படிக்க வேண்டும். இப்படித்தான் “கம்பனின் அம்பறாத்தூணியை மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.

  கட்டுரையின் ஓரிடத்தில் அரங்கின்றி வட்டாடுவதாகக் குறிப்பிட்டிருப்பீர்கள். அது அவ்வாறாகத் தானே இருக்கமுடியும். தாங்கள் அறியாததல்ல. தமிழின் பரிமாணம் அத்தகையதல்லவா. எண்ணிப்பார்க்கிறேன். இக்கட்டுரையைப் படிப்பதற்கு முன் “நந்தா” என்ற சொல் எனக்களித்த அர்த்தங்களை. பெரும் சொல் வழக்குகளான “நந்த கோபன்” போன்ற வெகு சிலவே எஞ்சின. இக்கட்டுரையின் வீச்சு திகைக்க வைத்தது. நான் முன்னரே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி, குறுக்குவெட்டாக இலக்கியங்களை அறிமுகம் செய்வதில் உங்கள் பணி மிகவும் மதிக்கத்தக்கது. உங்கள் கட்டுரைகளை நோக்கி என்னை இழுத்ததும் அதுவே. எல்லாக் கட்டுரைகளிலும் விரவிக்கிடக்கும் அந்த எழுத்துமுறை இதில் பன்மடங்கு பேருருக்கொண்டிருக்கிறது. பாரதி, அகராதிகள், அகநானுறு, வருடங்களின் வரிசை, தேவாரம், சீவக சிந்தாமணி, பட்டினப்பாலை என்று இராகவன் கணையாக துளைத்துச் சென்றுகொண்டேயிருக்கிறது. இவைகளை என் வாழ்நாளில் படிப்பேனா அறியேன். ஆனால் இவற்றைப்பற்றிய அள்ளித் தெளித்த அறிமுகங்கள் உங்கள் கட்டுரைகளின் வழியே பெற்றது அனேகம். மிக்க நன்றி.

  நந்தியாவர்ததாமன் என்று துரியனுக்கு ஒரு பெயர் இருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். வெண்முரசில் தேடலாமென்று ஒரு எண்ணம் தோன்றியது. என் வீட்டு வாசலில் பூக்கும் நந்தியாவட்டையின் பின்னோக்கிய காலக்கணக்கு திகைப்படையச் செய்கிறது.

  சந்திரஹாசம் அறிவேன். நந்தகம் என்பது திருமாலின் வாளென அறிந்தேன். இதன் தொடர்ச்சியாக துழாவியதில் பேயாழ்வார் இந்த வாளின் அம்சமாகப் பிறந்தவரென்று வைணவம் சொல்வதாக அறிகிறேன். . பட்டினப்பாலையின் பாடலினூடே காழகம் என்பது கடாரம் எனப் பொருள்கொண்டேன். நந்த என்ற சொல் தழைக்க செழிக்க, பெருக என்றும் பொலிவிழக்க என்றும் எதிரெதிரான பொருளில் சங்க இலக்கியங்களில் ஆளப்பட்டிருப்பது வியப்பான செய்தி.

  நந்துருணி என்ற சொல்லை இதுகாறும் குறும்புத்தனமான சிறார்களுக்கே உரியதென என் குடும்ப வழக்கில் அறிந்திருந்தேன். என் பெண் வளர்க்கும் ஒரு பூனையை அடிக்கடி நந்துருணி என்பாள். புறங்கூறுவோன், மதியீனன், அற்பன் என்பது அதன் பொருளென அறிந்துகொண்டேன். சொற்களின் தொடர்ச்சி வியக்க வைக்கிறது.

  ஒரு ஆழ்ந்த அதே சமயம் பல சங்க இலக்கியத் தளங்களைச் சுட்டிச்செல்லும் அற்புதமான கட்டுரை. நன்றி!

  நான் வணங்கும் இறை உங்களுக்கு அனைத்து நலங்களும் பயக்கட்டுமென வேண்டுகிறேன்.

  நா. சந்திரசேகரன்.

 5. நற்றமிழ்மழையில் நனைந்து திளைத்த உணர்வு. நாஞ்சில் நாடனின் தமிழ் போல் அவரும் நீடூழி வாழ்ந்து நந்தாவிளக்காகச் சுடரட்டும் வாழ்த்துகள்.

 6. நந்தவனம் – என்ன ஒரு உழைப்பு?

  முனைவர் பட்டம் பெற விழையும் – fellowship பெற்றுக்கொண்டு 😊 – ஒரு மாணவனின் உழைப்பையும் விட ஒரு மேலான உழைப்பு இது.

  ஒன்றும் எதிர்பார்க்காமல் உவேசா (ஐயரை பாதுகாப்பாக விட்டுவிட்டேன்!) அன்று உழைத்ததை நினைவூட்டுகிறது.

  வணங்குகிறேன்

 7. அருமையான சொல்லாராய்ச்சிப் பதிவு ஐயா. தங்களின் சொல்வனம் அத்தனையும் ஒன்றிரண்டு சான்றுகளுடன் கூடியது அல்ல. தமிழ்ப் பக்கங்களைப் புரட்டிய வாசிப்பு. தங்களின் சொல்வனம் என்றென்றும் நந்தாவிளக்குதான்.

 8. எப்பேறு பெற்றேனோ! ஐயா,
  எல்லாவற்றுக்கும் முன் ஒரு மாபெரும் நன்றி.
  இக்கட்டுரையின் முடிவில் என் கண்கள் கலங்கி நின்றன. உங்கள் ஆய்வு களத்தின் பரப்பு வியக்கச்செய்கிறது. அது எப்போதும் நீந்தி கொண்டிருப்பவனுக்கு மட்டுமே சாத்தியம்.
  ஒரு அற்பனின் சந்தேகத்திற்கு பதில் எழுதவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. இத்தகைய விரிவான ஆய்வு மேற்கொண்டு ஒரு முகம் தெரியா மனிதனுக்கு ஒரு கை உருண்டை அல்லாது மொத்த சோத்து சட்டியையும் அளிக்கும் வல்லமை என்னை வெட்கச்செய்கிறது. கொடைப்போட்டியில் கர்ணன் தன் இடக்கையால் ஒரு பொன்மலையை நொடியில் ஒரு வழிப்போக்கனுக்கு அளிப்பது போல. அது கர்ணனுக்கு சாத்தியம். உங்களுக்கும். நீங்கள் தருபவர், நான் பெறுபவன் உங்களுக்கு எப்போதும் நான் கீழ். இந்த வெற்று புகழ் மாலைகள் உங்களை அசைத்து பார்க்கப்போவது இல்லை. ஆனால், இதைக் கொண்டு என் நன்றியை கட்டயமைக்க விழைகிறேன்.உங்களை கட்டியணைக்க ஆசை.எனது கேள்வியை போலவே எனது நன்றியும் உங்களைசேரும் என்ற நம்பிக்கையில்.

  இலட்சுமி நாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.