கல்ஃப்

சோனிகளால் மட்டுமே நிரம்பிய அந்த புறநகர்ப் பகுதி, பிரியாணிக்கு அடுத்ததாக ‘கல்ஃப்’ மனநல மருத்துவக் கிளினிக்கிற்குதான் அதிகம் பிரசித்தி பெற்றது. கடல் புறத்தில் இருந்ததால் உப்புக் காற்றோடு சேர்த்து மீன் வாசனைகூட காலை வேளைகளில் மூளைக்குள் மணக்கும். நகர்ப்புற வாசிகளில் சிலர் மட்டுமே அதிகாலையில் கரைவலை இழுக்கையில் அங்கு வந்து மீன் வாங்கிச் செல்வார்கள். சிலர் கரைவலை இழுப்பதில் கைப்பிடித்து உதவி அதற்குக் கூலியாக ஒரு பாலித்தீன் பை நிறைய சிறிய மீன்களை அல்லது ஒரு பெரிய மீனை வாங்கிச் செல்வர். இந்த மீன் நாற்றமும் வலையிழுப்பின் பாடல்களும் அரங்கேறும் வேளையில் கடலை ரசிக்க வருபவர்கள் மிகச் சிலரே.

மாலையானவுடன் அரசல் புரசலாகச் சனங்கள் திரண்டு உலாவும். இள வாண்டுகளின் பரிகாசமும் சில அரசியல் சட்டாம் பிள்ளைகளின் வாதங்களும் கச்சான், கடலை விற்கும் சிறுவர்களின் கூவலும் அந்தக் காற்றோடு கலந்துவிடும்.

அந்தப் பகுதியின் இளவல்களுக்கு இருந்த ஒரு விளையாட்டுத்தான் நாய் அடிப்பது. பொதுவாக முஸ்லிம்களுக்கு நாய் விலக்கப்பட்ட பிராணியாகக் கருதப்படுவதால் ஒரு குறித்த கால கட்டத்தின்பின் நாய் அடிப்பதுகூட சமூகத்தால் வெளிப்படையாக வரவேற்கப்படாத, ஆனால் மறைமுகமாக வளர்க்கப்பட்ட விளையாட்டாகிப்போனது.

மறைமுகம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்குக்கூட ஒரு வரலாறு உண்டு எனலாம். 67 காலப் பகுதியில் ஒரு நாயை அறையில் பூட்டிவைத்துச் சாகடித்ததாகக் கூறி ஒரு பெண்ணுக்கு இருபத்தைந்து ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும், அந்தக் காலத்தில் ஒரு ஏக்கர் வளவின் விலைகூடப் பத்து ரூபாயைத் தாண்டாது எனவும் உம்மாச்சி கூறிய ஞாபகம் எனக்குண்டு. கரையோர வீதிகளில் காலையில் நாய் செத்துக்கிடந்தால் இதுதான் அதன் சூசகமும்கூட. மீனவக் குடும்பத்தில் பிறந்து நாய் அடிப்பதில் சிறப்புத் தேர்ச்சி அடைந்தவர்தான் நம் வைத்தியரும். படித்து முடிக்கும் வரை நல்ல பிள்ளையாகத்தான் இருந்தார். உயர் தரத்தில் தெரிவாகிக் காம்பஸ் போனதும் ஊரின் மரபு அவருக்குள்ளும் தொற்றிக்கொண்டது. ஊரிலிருந்து படித்து வெளியாகிய இரண்டாவது வைத்தியர் என்பதால் மவுசு ஏறிட்டு.

“நாங்க நடுச்சாமம் தண்ணிக்க கால வெச்சிக்கி படிக்கிற, இந்த கொமருமார் ஊட்ட இருந்து நல்ல ஈரல் கறியாத் திண்டுதான் வளர்ர” என்பாராம். சீதனம் வாங்கித்தான் கல்யாணம் முடிப்பேன் என்பதை லாஜிக்குடன் பேசிய படிப்பாளி எண்டு உம்மாச்சி சொல்லுவா.

“அவனும் பாவந்தானே மகேன். பொறகு எப்பிடி அவன் ரெண்டு தங்கச்சமாரயும் கரைசேக்குற“ என்று அவ சொல்லும் போதெல்லாம் எனக்குத் தொண்டை கமறும்.

அத்தோடு நிறுத்தினால் பரவாயில்லையே. தொடராக, “அவன் ஒண்டும் வெட்கம் கெட்டுக் கேட்டுப் போகல்ல. புள்ளக்கி குடிக்கிறத குடுங்கோ எண்டுதானே சென்ன” என்றார் உம்மா.

வைத்தியரும் மீனவக் குடும்பத்தில் பிறந்திருப்பினும் சீதனத்தால் நகர வாழ்க்கையில் தோய்ந்துவிட்டார். வைத்தியரோ கெட்டிக்காரத்தனமாக மாலை நான்கு மணியலிருந்து இரவு எட்டரை வரைதான் கிளினிக் திறப்பார். ஊரின் வழமைப்படி வெள்ளிக்கிழமை மட்டும் லீவு நாள். அந்தக் கிளினிக்கில் நர்ஸ், பார்மசிஸ்ட் எல்லாமே குமர்பிள்ளைகள் இரண்டு பேர்தான். உயர்தரம் படிச்ச இரண்டு பிள்ளைகள் மருத்துவர்ட கரிசணையின் பெயரில் சேர்கப்படுவர். யாராவது ஒருவருக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தால் இன்னொரு பெண் அந்த இடத்துக்கு வரும். அங்கு வேலை பார்க்கத் தேவையான ஒரே தகுதி மருத்துவரின் மருந்துச் சீட்டின் எழுத்துகளை வாசிக்கத் தெரிவது மட்டும்தான். சீனியர் குமர்பிள்ளை கிளினிக் சாவியை வீட்டிலிருந்து கிளினிக் வரும் வழியில் மருத்துவர் வீடு சென்று வாங்கிவந்து திறக்கவேண்டும்.

இவர்கள் கிளினிக் மூடியதும் மருத்துவர் சாவியை வாங்கிவிட்டு ஆட்டோவில் வழியனுப்பி வைப்பார்.

‘கல்ஃப்’ கிளினிக் கொரோனா இல்லாத காலங்களில் காசு பார்த்தது போன்று இப்போது கல்லா நிறைப்பதில்லை. மருத்துவரின் பழைய பிறீமியோ காரிற்குப் பெற்றோல் போடக் காணுமாக காசு வந்தால் போதும் அவருக்கு.

அரசு கொரோனா வந்து செத்தவர்களை எரிக்கத் துவங்கியதும், ‘செத்தாலும் வீட்டிலேயே செத்துருவம்’ என்ற நிலமைக்கு ஊரிலுள்ள எல்லாருடைய மனநிலையும் வந்துவிட்டது.

ஒரு நாள் மனநல மருத்துவரைத் தேடிக் கைப்பிள்ளையுடன் ஒரு பெற்றோர் வந்தனர். அவர்கள் அங்கே வந்தது அதுவே முதல் தடவை. கணவனுக்கு முப்பது வயது இருக்கும். மனைவியின் வயது ஒரு நான்கு ஐந்து வருட இடைவெளியுடன் அதிகமாய் இருக்கவேண்டும். பார்மசிஸ்ட் பெண்ணினால் சிறிய சதுரமாக வெட்டப்பட்ட பழைய அங்கர் பால்மா மட்டையில் எண்கள் எழுதப்பட்டு வழங்கப்படும். அதை வாங்க வந்த தம்பதியரைப் பார்த்ததும் ஏதோ விசித்திரமாகப்பட்டது அவளுக்கு. ஆனால் மனநலப் பிரச்சினையுள்ளோருக்கு இவை சகஜம் என்பதால் அவளால் பிரச்சினை எதுவென்று இனம் கண்டுகொள்ள முடிவில்லை மற்றும் முயலவில்லை. ஆண்கள் அமரும் பகுதியில் கணவர் அமர்ந்திருக்க ஒரு கடமைக்காகக் கறுப்புத் துணியால் பிரிக்கப்பட்டிருந்த பெண்கள் பகுதியில் தாயுடன் இருந்த அந்த கைப்பிள்ளை அவர்கள் வந்த சிறு நேரத்திலேயே அழத்துவங்கவிட, அவ்விடத்திலேயே கதிரையில் அமர்ந்தவாறு பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்ட ஆரம்பித்தாள். பொதுவாக அந்த ஊரின் சோனிகள் யாரும் அப்படிப் பொதுவில் தாய்ப் பாலூட்டுவது வழக்கமில்லை. அந்த பார்மசிஸ்ட் பெண்கள் இருவரும் இதை அவர்களின் சுவாரஸ்யமான மிகுதி நேர அளவலாவல்களுக்காகப் பத்திரப்படுத்திக் கொண்டனர்.

அவர்களின் முறை வந்தபோது மேசையிலிருந்த காலிங் பெல்லில் ‘டிங் டிங்’ என்ற ஒலி எழுப்ப, கதவை மெதுவாகத் திறந்து, ‘அடுத்தது நீங்கள்தான்’ என்றாள் பார்மசிஸ்ட்.

தம்பதியினர் உள்ளே சென்றனர். மருத்துவருக்கு அருகில் ஒரு கதிரையும் அவர் மேசைக்கு முன்னால் ஒரு கதிரையும் இருந்தன. வலது பக்கம் ஒரு பெரிய இறாக்கையில் சிறிய சிறிய மருந்து பாட்டில்களும் பெரிய பெரிய புத்தகங்களுமாக நிரம்பி இருந்தன. வைத்தியர் பக்கத்தில் இருந்த கதிரையில் யாருமே அமராமல் முன்னிருந்த கதிரையில் கணவன் அமர, மனைவி கைக்குழந்தையைத் தோளில் சுமந்தவண்ணம் நின்றுகொண்டிருந்தாள். மருத்துவர் மாஸ்க் அணிந்திருந்த அதே நேரம் தம்பதியினர் அணியவில்லை. கணவன் ஒரு பழைய சாரனும் புல்சிலீவ் சேர்ட்டும் ஒரு தொப்பியுமாக அமர்ந்திருக்க, நின்றுகொண்டிருந்த மனைவியின் உடையை விபரிக்க முடியவில்லை. அந்தச் சட்டை, சோனிய சமூகத்தில் பெண்கள் சாதாரணமாக வீட்டில் அணிந்து கொள்வதுதான். எனினும் அது சற்று உருமாறி அழுக்காக வேறு இருந்தது.

அதற்கு மேலாக தலைமுடியை மறைக்க ஒரு ஷால். மருத்துவருக்கு இவர்கள் இந்த ஊர்க்காரர்கள் இல்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

“ அஸ்ஸலாமு அலைக்கும். யாருக்கு என்ன பிரச்சின?” என்று மருத்துவர் ஆரம்பித்தார்.

“வஅலைக்குமுஸ்ஸலாம் டொக்டர். பேகத்திற்கும் நடுச்சாமம் கண்முழிபடுது. எழும்பி வாத்ரூம் போயி வந்தாத்தான் தூங்குறாள். என்ன எண்டு பாக்கதான் வந்த” என்றார் கணவர்.

“சீனி வருத்தம் இரிக்கா பேகத்துக்கு?” என்று மருத்துவர் கேட்டார்.

“இல்ல டொக்டர் . டெஸ்ட் பண்ணி பாக்கல்ல .இல்ல எண்டுதான் நெனக்கன்.” என்று கூறி, “ஒரு சாதியா மூச்செடுக்க கஷ்டப்பட்டுதான் கண் முழிபடுது. அதையும் என்ணெண்டு பாருங்கோ கொஞ்சம்” என்று பின்சேர்க்கை சொன்னார்.

“PNDயாக இருக்கும்” என்று கூறிக்கொண்டு மருத்துவரின் கண்கள் அந்த உம்மாவின் முகத்திலுள்ள ஏளனத்தையும் நோட்டமிட்டார்.

“சரி நீங்க எவடம் ஆக்கள்?” என்று மருத்துவர் கேட்க, “நாங்க அலிபாபாபுரம் டொக்டர். இது என்ற சொந்த மாமாட மகள்தான். அவளதான் களியாணம் முடிச்ச நான்” என்று மனைவியைக் காட்ட, மனைவி வெட்கப்பட்டுக்கொண்டாள்.

“ பேகம் நெறைய தண்ணி குடிக்கிரா?” என்று அவர் மனைவியைப் பார்த்துக் கேட்க, “அப்பிடி அவள் பெரிசா குடிக்கிரல்லயே” என்றாள் அவளது மனைவி.

அதற்கு பிறகுதான் மனைவியின் பெயரல்ல பேகம், அது அந்தக் கைக்குழந்தையின் பெயர் போலும் என்று எண்ணிக்கொண்டார்.

“எவ்வளவு காலமா இரிக்கி?” என்று மருத்துவர் கேட்க, “நாலு மாசமா இரிக்கி டொக்டர்” என்றார் அவர்.

“இதுக்கு முந்தி யாரும் சின்னபுள்ள டொக்டர்ட காட்டெல்லயா. இப்பான் முதல்ல காட்ட எனகிட்ட வாறயலா?” என்றார் மருத்துவர்.

“இல்ல டொக்டர், இதுக்கு முந்தி ஒராள்ட போன சரிவரல்ல. நீங்க கைராசி எண்டாங்க அதான் வந்த” என்றார் அவர். உண்மையில் வெளிநாட்டு மருத்துவத்திற்கும் நம் நாட்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் கைராசியும் ஒன்று. உள்ளூரில் எவர் கைராசிக்காரரோ அவர்தான் பணம் பார்க்கலாம். அவருக்குச் சேவை நோக்கம் இருப்பின் பண்டமாற்றுபோல இரு பக்கமும் இலாபம் கிட்டும்.

“அந்த டொக்டர் ஏதாவது ரிப்போட் தந்தா?”

“ரிப்போட் எல்லாம் தரல்ல அவர். ஒரு துண்டு மட்டும் தந்தார் ஒங்கள பாக்கட்டாம் எண்டு செல்லி. அத சேட்டுக்குள்ள வெச்ச இவள் பாக்காம கழுவிப் போட்டுட்டாள்.” என்று கூறியவாறே மனைவியைச் சினந்துகொண்டார்.

“சரி அது பரவால்ல. இதுக்கு பொறகு பேகத்துக்குக் கொஞ்சம் கொறைய தண்ணி குடுத்தாலும் பரவால்ல. உம்மா பேகத்த தூக்கிட்டு வாங்கோ கொஞ்சம் செக் பண்ணனும்” என்று அவர் மனைவியைப் பார்த்துவிட்டு வைத்தியர் அருகிலிருந்த கதிரைக்கு நேராகக் கைநீட்டினார்.

“சேர் இது இளையவள் சீபா. பேகம் ஒங்குட பக்கத்துக் கதிரையிலதானே இரிக்காள்” என்றார் கணவர்.

வைத்தியரின் அறைக்கதவு திறப் பட வீட்டு பொமேரியன் நாயுடன் அவரின் மனைவியும் உள்நுழைந்தாள்.

அந்தக் கணவனைப் பார்த்து “நீங்க ரெண்டு பேரும் வெளியில இரிங்கோ. நான் கூப்புறன்,“ என்றார் வைத்தியர்.

***

சில பிரதேச கிளைமொழிச் சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள்:

சோனி – முஸ்லிம்

கல்ஃப் – உள்ளம்

உம்மாச்சி – பாட்டி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.