
அதி காலையிலேயே மேலத்தெரு பூத்துக் கிடந்தது.
கரி பூசிய திட்டாணிகளில் கலர் பொடியில் ரோஜாவும் தாமரையும் கிளிகளுமாய் குமரிகள் நிறைத்துக் கொண்டிருந்தனர்.
தார் ரோடு கழுவி விட்டது போல் காலசர்ப்பமென வளைந்து கிடந்தது.
விடலைகள் கோலம் போடுபவர்களை நோட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தார்கள்.
ஆட்டோ அரை வட்டமிட்டு வாசல் தாண்டி நின்றதும் அனு கோல கிண்ணத்தை கீழே போட்டுவிட்டு ஓடி வந்தாள்..
“ஹை அத்தை வந்தாச்சு!”
பெரியவள் ப்ரியா மெல்லிய சிரிப்போடு பையை வாங்கிக் கொண்டாள்.
முன்னைவிட சற்று பூசினாற் போல் மெருகிட்டிருந்தாள்.
“நல்லா வளர்ந்திட்டேடி!”
யமுனா வியப்பாய்ப் பார்க்க..
அத்தை அன்னபட்சி பாரு.சூப்பரா இருக்குல்ல.
அனு படபடத்தாள்.
அச்சுப்படம் மாதிரி நேர்த்தியாயிருந்தது கோலம்.
இந்த பிள்ளைகளுக்கு எங்கிருந்துதான் இத்தனை வித்தை வருதோ?
“போங்கடி உங்கத்தை இதைவிட பிரமாதமா வரைவா”
அண்ணி கொடுத்த காஃபியை சுவைத்துக் கொண்டே தலையாட்டினாள் யமுனா.
அப்பவெல்லாம் இத மாதிரி கூகுளாண்டவர் ஏது?
மஞ்சப்பொடியும் பச்சையிலையை அரைச்சு வடிகட்டின சாறு னு கலர்ப்பொடிக்கே அல்லாடணும்.
திருவிழாவுக்கு கொடியேறினதுமே திட்டாணி போட்டு சாணி கரைத்து மெழுகி ரெடி பண்ணி வைக்கோல் பிரியை எரித்து கரி போட்டு வழவழவென தயார் செய்யணும். பின் தெருத்தெருவா அலைஞ்சு டிசைன் கலெக்ட் செஞ்சு அதில உல்டா பண்ணி புதுக்கோலமாக்கி… எத்தனை கஷ்டம்
அதுவும் வெண்ணெய்த்தாழினா ரொம்ப ஸ்பெஷல்.ஊரு பூராவும் நாலு தெருவிலதான் கூடி நிக்கும்.
யார் வீட்டு கோலம் அழகுனு அந்த மாசம் முழுதும் பேச்சு நடக்கும்.
எங்களுக்கெல்லாம் இந்த திருவிழாதான் தீபாவளி மாதிரி.
“அத்தை. இந்த தடவையாவது இரண்டுநாள் இருந்திட்டு போ. கடையெல்லாம் நிறைய வந்திருக்கு. ராட்டினம் வந்திருக்கு தெரியுமா?”
திருவிழா ஆரம்பிச்சதுமே தேரடிக்கு முதலில வர்றது ராட்டினம்தான்.
யமுனாவுக்கு குடைராட்டினம்தான் பிடிக்கும். சிங்கம் குதிரை அன்னபட்சி னு எல்லோரும் போட்டி போட்டாலும் இரட்டை நாற்காலிலதான் ஏறுவாள்.. கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுத்தவுடன் காற்றில் ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கும்.
தொட்டி ராட்டினத்தில் விடலைகள் சாம்ராஜ்யம்.
தொட்டில் கீழே வரும்போது பெண்கள் வைக்கிற பூ ரிப்பன் கைகுட்டையை அடுத்து வருகிற வாலிபர் கூட்டம் எடுக்க ஒரே ரகளையா இருக்கும்.
பூரணி தொட்டி ராட்டினத்தில்தான் ஏறுவாள்.
சண்டியர்களுக்கேற்ற சண்டி ராணியாய் அலட்டுவாள்.
“யமுனா நீயும் வர்றியா?”
“ம்ஹூம். வேண்டாம்.. நீ ஏறு.”
“பார்த்துகிட்டே நில்லு”
“எத்தனை பார்த்தாலும் பெருமாள் அலுக்கறதே இல்லை”
“ஆமாமா… கோவிந்தன் அழகான கேசவன். பார்த்தாலே போதும்”
“ஏய்.. பூரணி.. என்ன இது?”
“எத்தனை நாளைக்கு ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்த்திட்டே இருப்ப?
சொல்லுடி. எனக்கு எல்லாம் தெரியும்”.
“சும்மா இருடி.. பிரதக்ஷணம் பண்றப்ப பேசக் கூடாது.”
ஆஹா… பெரிய பக்தை நீ.
உண்மையிலேயே சாமியை தரிசனம் பண்ண வந்தவள்னா உள் பிரகாரம் சுத்திட்டு கிளம்பியிருக்கணும்.
ஆம்பிளை பசங்க படிச்சிட்டிருக்கிற காட்டுப் பிரகாரத்துக்கு எதுக்குடி வந்த? கேசவனைப் பார்க்கத்தானே?
“அத்தை…. தூங்கறியா எழுந்திரு,” அனு கலைத்தாள்
சரிதான். சட்டுபுட்டுனு கிளம்புங்க. செல்வர் போயிடுச்சு. சுவாமி புறப்பாடாயிடும்.
அண்ணி பரபரத்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக தெரு களைகட்ட ஆரம்பித்தது. பலூன்காரர்கள், ஊதுகுழல் விற்பவர்கள் ஆங்காங்கே குழந்தைகளை ஈர்க்க கடைபோட, ஜவ்வு மிட்டாய் குச்சி மிட்டாய் தட்டுகள் ஒருபுறம்.. வெண்ணெய்க் கூடைகள் ஒருபுறமென கலகலத்தது.
யமுனா திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஒன்பது மணிக்கே வெயில் உக்கிரமாக வெளுத்து வாங்கியது.
முனிசிலிபாடி தண்ணீர் வண்டி சாலையில் தண்ணீர் தெளித்தபடி போனது.
வேதகோஷ்டியின் ஒலி தூரத்தில் கேட்க யானை முகப்படம் எழுதி புது அம்பாரித் துணியோடு மணியோசை எழுப்பியபடியே வந்தது.
பொம்மை வேடமிட்ட மனிதர்கள் அதீத உயரத்தோடு குழந்தைகளுக்கு உற்சாகமளிக்க, நிஜாம் பாக்கு வாகனமொன்று பகதர்களுக்கு விசிறி வழங்கியபடியே சென்றது.
மில்காரர் வீட்டில் தயிர் சாதமும் எலுமிச்சை சாதமும் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.
அண்ணியும் நீர்மோரும் ரசனாவும் கலந்து வைத்திருந்தாள்.
வெயிலும் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்தது. தெற்குவீதி வளைவில் பல்லக்கு திரும்பியது.
முன்புறம் ஆறுபேர் பின்புறம் ஆறுபேர் வெற்றுக்காலில் பல்லக்கைத் தோளில் தூக்கியபடியே நகர பெருமாளோடு பட்டரும் பல்லக்கில்..
வழக்கம் போல கேசவன் முன்னே வந்து கொண்டிருந்தான்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அர்ச்சனைத் தட்டை அவன்தான் பட்டரிடம் சேர்ப்பான்.
“யமுனா… இது தாண்டி சரியான சமயம். உன் ஆள்கிட்ட உன் மனசைத் திறந்து சொல்லிடு”
“உளறாதே.. அப்படியேதுமில்லை.”
இன்னும் சற்று நேரத்தில் வீட்டருகில் பல்லக்கு வந்துவிடும்.
வருடா வருடம் பார்ப்பதுதான். ஆனால் பல்லக்கு நெருங்க நெருங்க அவள் நெஞ்சு வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
நெருக்கியடிக்கும் கூட்டத்தில் பெருமாள் ராஜா அலங்காரத்தில் ஒரு காலை மடக்கி வெண்ணெய்க் குடமேந்தி மந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருக்க…
ஆளாளுக்கு உணர்ச்சி வேகத்தில் வீசிய வெண்ணெய் பட்டர் மேனியெங்கும் வழிந்து கொண்டிருந்தது.
பெருமாள் வெண்ணையில் புதைந்து அருள்பாலித்தார்.
“அப்ப உன் மனசில யாருமில்லை”
“ஆமா.. யாருமில்லை.”
“அது உண்மைனா வெண்ணெயை பெருமாள் மேல வீசுடி”
யமுனா பெருமாளைப் பார்த்தபடியே நிற்க கையிலிருந்து வெண்ணெய் உருகிக் கொண்டிருந்தது.
மொத்த கூட்டமும் பின்னலங்காரம் பார்க்க நகரப் பல்லக்கு மெல்ல அசைந்து அசைந்து நகர்ந்தது.
“யமுனா.. அடுத்த வருஷமாவது வீட்டுக்காரர், பையனையெல்லாம் அழைச்சிட்டு வா”
அண்ணி குங்குமத்தை நெற்றியில் தீற்றிவிட்டு நகர, கண்ணிலிருந்து நீர்க்கோடுகளாக இறங்க தூரமாகப் போய்க்கொண்டிருந்தது பல்லக்கு.
இரண்டு முறை படித்தபின்னர்தான் கதை புரிந்தது.