யானை யானை அரசரானை

முதல் வகுப்பு அறையில்
அறம் செய விரும்பு
அதிர்வுகள் நிரம்பிய பிறகே
அகரமெழுதக் கற்றுத் தருவார் அன்புமுத்து சார்.
நர்சரி ஆப்பிள்கள் அப்போதில்லை.
கேரட் சிவப்பு கமலா
நாவற்பழ நிறமான
நாட்ராயனின் காதல் பித்தம் தெளிய
கடுக்காய் கொடுத்தாள்.
கலங்கினான். வருந்தினான் நாட்ராயன்.
வில்லத்தனம் ஏதும் செய்யவில்லை.
சிந்தை கெடுக்கும் சினிமாக்கள் அப்போதில்லை.
அம்மா அப்பா அத்தை மாமா அக்கா அத்தான்
உறவுகளில் உறைபனிப் பிணக்குகளிருந்தன.
ஊமைவெயில் புழுக்கமிருந்தன.
இல்லறம் பிரிவறமாகவில்லை.
குடும்ப நீதிமன்றங்கள் அப்போதில்லை.
யானை யானை அரசரானை
அழகர் சொக்கர் ஏறும் யானை
கடைவீதி சுற்றும் யானை
பாட்டு பாடுவாள் பாட்டி.
தாத்தா யானையாக
சவாரி செய்து மகிழும் பிள்ளைகள்.
முதியோரில்லங்கள் அப்போதில்லை.
யானை விழுங்கிய விளாம்பழமானது நம் இயல்பு வாழ்க்கை.
குளத்து மீன்கள்

காற்று நெருப்பாகும்
காலமொன்றில்
குட்டையானது குளம்.
முகில்கள் மழைவர மருள
மந்திரம் ஜெபித்தன மீன்கள்.
பசித்துத் திரிந்த
பால்நிறப் பறவையொன்று
குளக்கரை வந்தது.
அரற்றிய மீன்களுக்கு
ஆறுதல் சொன்னது.
இரண்டொரு நாளில்
வறண்டுவிடும் குளம்
ஆற்றில் நீர் அறவேயில்லை.
ஒவ்வொருவராய் உங்களை
கடலுக்குச் சுமந்து சென்று
உங்கள் உயிரைக் காப்பாற்றுகிறேனென்றது.
ஒப்பின மீன்கள்.
ஒரு நொடி கதையை நிறுத்தினேன்.
கொக்கின் மனது
எத்தனை பெரியதென்றான்.
சுவரை நோக்கித் திரும்பினேன்.