முதலியத்தை எதிர்க்கும் பொதுமம்

சமூகச் செயல்பாட்டியம் – The Commons versus capitalism- Eurozine 29/7/2021

மூல ஆசிரியர்: தைஸ் லைஸ்டர் (Thijs Lijster)  தமிழ் வடிவாக்கம்: கோரா  

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின்  மக்களவை, சாமான்யர்கள் அவை (House of Commons) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதே காமன்ஸ் என்ற சொல்லாடலைத் தற்போது சமூக செயல்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும்  காமன்ஸ் (commons) என்ற சொல் “பொதுப் பயன்பாட்டுக்குரிய இயற்கை வளங்கள்” எனப் பொருள்படும். இது தற்போதைய சொல்லாடலாக ஆகிவிட்டாலும் முற்றிலும் புதிதன்று. முன்பு 1833-ல் வில்லியம் ஃபாஸ்டர் லாய்ட் என்னும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் உருவாக்கிய கருதுகோளில், commons என்னும் சொல் பகிரப்படும்  வளங்கள் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.  தனி நபர், அனைவருக்கும் உரிமையுள்ள  பொது வளங்களைப் பகிர்கையில் தன்னலத்தை முன்னிறுத்திச் செயல்படுவதால் இறுதியில் அவற்றை  முற்றிலுமாக அனைவரும்  இழந்துவிடும் ஆபத்து இருக்கிறது  என்கிறார் லாய்ட். இதன் அடிப்படையில் 1968-ல்  கேரெட் ஹார்டின் (Gerret Hardin) என்னும் சூழலியலாளர், “பொதுமங்களின் அவலம்” (Tragedy of Commons) என்னும் கருத்தாக்கத்தை முதலில் ஒரு கட்டுரையாகவும் பின்னர் அதே தலைப்பைக்கொண்ட நூலாகவும் வெளியிட்டார்.   மேய்ச்சல் நிலங்கள் அழிவது,  மீன் வளங்கள் அருகிப் போவது போன்ற உதாரணங்கள்மூலம் தன் கருத்தாக்கத்தை விளக்கியுள்ளார். ஹார்டினின் கருத்தாக்கம் எல்லா மனிதர்களும் சுயநலமிகள் என்று பொதுமைப்படுத்துவதோடு மறைமுகமாகத்  தனியார் அல்லது அரசு  உடைமையாக்கத்தைப் பரிந்துரைப்பதுபோல் தெரிகிறது. இனக் குழுக்கள் சரியாக மேலாண்மை செய்துகொண்டிருந்த நிலம், பேராசைகொண்ட காலனியவாதிகள் கைக்குப் போய்விட்டதை  நியாயப்படுத்துகிறது.

ஹார்டின் கருத்து – எதிர்ப்பும் ஆதரவும்    

ஹார்டின் கருத்துரு ஓர் உள்ளீடற்ற நம்பிக்கை என்று எதிர்வினையாற்றும் அமெரிக்கப்  பொருளியலரான எலினார் ஆஸ்ட்ரம் எழுதிய “Governing the commons” என்ற  நூலுக்காக அவருக்கு 2009ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான  நொபெல் பரிசு வழங்கப்பட்டது. அவர் வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கோட்பாட்டு மாடல்களைக் காட்டிக் கடந்த சில  நூற்றாண்டுகளாகப் பொதுமங்கள் அனைத்தும்  அரசு இடையீடு இன்றியும் தனியார் சொத்துக்களாக மாறாமல்  சிறப்பாக இயங்கியும்  வந்துள்ளன என்றார். இதை மறுக்கும்  நவோமி கிளெய்ன், உலகமயமாக்கல் எதிர்ப்புகள், சூழலிய / நகரிய செயல் முனைவுகள் மற்றும் தொழிலாளர் இயக்கம் அனைத்துமே உடைமைப் பறிப்பு, தனியார் மயமாக்கல் மற்றும் பகிர்- வளங்கள் அழிவுக்கான எதிர் வினைகள் என்று அவர் 2001-ல் எழுதிய பொதுமங்களின் மீட்டெடுப்பு (Reclaiming the commons) என்னும் சிறு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

பொதுமங்களின் எழுச்சி 

கிளைன் மற்றும் ஆஸ்ட்ரம் எழுதியவை நடப்பில் உள்ள பொதுமங்கள் பறிபோகின்றனவா என்பது குறித்த விவாதங்கள் மட்டுமே. காடு, கடல், குளங்கள்,  மேய்ச்சல் நிலங்கள், நீர்வளம், காற்று  போன்ற பொதுச் சொத்துக்களின் பலன் தனிநபர்களைச் சென்றடைகிறது. ஆனால் இவை மட்டுமே  பொதுமங்கள் அல்ல. தற்போது  பண்பாடு, அறிவியல், எண்மம் (digital) போன்ற  பற்பல  புலங்களிலும்  பொதுமக் கருத்துரு ஊடுருவி இருக்கிறது.

முதலியமும் (capitalism) பொதுமங்களும் :

வழக்கமாக விறகு சேகரிக்கும் காடுகள், கால்நடைகளுக்கான  மேய்ப்பிடங்கள், நன்னீர் தரும் நீர்நிலைகள் ஆகிய இயற்கை வளங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு உரியவை. எந்த தனி மனிதரும் அவற்றிற்கு உரிமை கொண்டாட இயலாது. 15-19 நூற்றாண்டுகளில்  முதலியத்தின் தோற்றம் மற்றும் ஏற்றம், பொதுமங்களைத் திருடி தனியார் சொத்துகளாக்கிக்கொள்ள உதவியது என்பதே இன்று நிலவும்  அரசியல் பொருளாதாரக் கருத்து. இது ஒரு தனி நிகழ்வன்று; தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை மாற்றம் என்கின்றனர் கோட்பாட்டாளர்கள். புதிதாக எழும் பொதுமங்களும்கூட  களவாடப்பட்டோ அழிந்தோ போகும் ஆபத்தில் இருக்கின்றன. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாகி இருக்கும் பொதுமங்களின்  எழுச்சி, பொது எதிரியான  முதலிய (காபிடலிச ) சுரண்டலின் அச்சுறுத்தல்களைக் கடந்து சிக்கலான சமூகங்களின் அமைப்புசார் கொள்கையாகப் பரிணமிக்கும்  வாய்ப்பு உண்டா என்பதை வரும் பத்திகளில் அலசுவோம். 

எண்மப்  பொதுமங்கள்: 

இயற்கையின் கொடைகளாகத் திகழும்  பொதுமங்களைப் போலவே, எண்ம வரம்புக்குள் உள்ளதும்  மனிதர் உருவாக்கியதுமான அறிவு, பண்பாடு, தகவல் தொடர்பு  சார்ந்த பொதுமங்களும் பறி போகும் ஆபத்து உண்டு. விக்கிபீடியா எனப்படும் ஒருவகைக்  கலைக்களஞ்சியம் நிலைத்து நிற்கப் போகும் எண்மப்  பொதுமத்தின்  முதன்மையான  எடுத்துக்காட்டு. திறந்த அணுகல், விளம்பரம் இல்லாமை, அனைவர்க்கும் உள்ளடக்கம்  சேர்க்கும் /திருத்தும் உரிமை அதன் சிறப்பு அம்சங்கள். உண்மையில் அறிவு மற்றும் படைப்பாற்றல் புழக்கத்தைத் தனியார் நிறுவனங்கள் மேன்மேலும்  கட்டுப்படுத்தி வருவதைத்  தடுக்கும் விதமாக அமெரிக்க சட்ட அறிவியலாளர் லாரன்ஸ் லெஸ்ஸிக் 2001-ல் படைப்பாற்றல் பொதும உரிமம் (creative commons license) என்ற அமைப்பை உருவாக்கினார். 

Trendy ஆகும் பொதுமம் (காமன்ஸ்)

இப்போதெல்லாம் பொதுமம் என்னும் கருத்துப் படிவம் மேலோட்டமாக புரிந்துகொள்ளப் பட்டு   செயற்படுத்தப் படுகிறது. நகரப் புவி பரப்பியலாளருக்கு அது நகர்ப்புற பொதுமம்,  அறிவியல் உலகுக்கு அறிவுப் பொதுமம், இணையத்திற்கு எண்மப் பொதுமம்,  பண்பாட்டு மரபுக்கு பண்பாட்டுப் பொதுமம். ஏனெனில் ஒவ்வொன்றும்  பொதுமமாகத் தெரிகிறது  அல்லது அவ்வாறு விவரிக்க முடிகிறது. இந்த போக்கு  தொடர்ந்தால், கல்வி அமைச்சர்  கல்வித் துறையை கல்விப் பொதுமம் எனப் பெயர் சூட்டக் கூடும். பெருந்தொகையை கல்விக் கட்டணமாக வசூலிக்கும் உயர் கல்வி நிறுவனம் தன் நூலகத்துக்கு தகவல் பொதுமம் என்று பெயரிடக் கூடும்.  உண்மையில் ஒரு அமெரிக்க ஹிப் உணவக சங்கிலி, காமன்ஸ் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது. அங்கே  உலகெங்கிலும் இருந்து வரும் பயனாளிகள்   பொதுவான நவநாகரிக விஷயங்களைப்   பகிர்ந்து கொள்வார்களாம்.  இவ்வாறு சமூகத்துக்கு உரியதும், பொதுமக்களுக்கு உரியதும் வெவ்வேறு என்று அறியாமல் எல்லாமே பொதுமம் என்னும்  கருத்துருவாகப்  புரிந்து கொள்வது கருத்துருவை நீர்த்துப் போகச்செய்து விடும். முதலியக் கருத்துக்கு எதிர் வினையாக இருக்க வேண்டிய பொதுமம் என்னும் கருத்துப் படிவத்தை முழுமையாக விளக்குகினற இரு நூல்கள் வரும் பத்திகளில் அறிமுகமாகின்றன.  

 பொதுமப் புரட்சி :

தத்துவ ஞானி பியெர் டார்டோ (Pierre Dardot) மற்றும் சமூகவியலாளர் கிறிஸ்டியன் லாவால்  இணைந்து எழுதிய “Common: On  Revolution in the 21st Century” என்னும் நூல் ஒரு ஆழமான படைப்பு.  நூலாசிரியர்கள்  பொதுமம் என்ற கருத்துப் படிவத்தின் வேர்களை ரோமானிய சட்டத்தில் கண்டிருக்கிறார்கள். பொதுமம் பற்றிய விவாதத்திற்கு சம்பந்தமுள்ள விசய தானம் செய்துள்ள எல்லா சிந்தனையாளர்கள்  மற்றும் அறிவியலாளர்களுடன் மெய்நிகர் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

(அறிஞர்களின் பெயர்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.)

நூல் தலைப்பில் காமன்ஸ் என்று குறிப்பிடாமல் காமன்  என்று ஒருமையில் ஏன்  குறிப்பிடப்பட்டிருக்கிறது?

பொதுமங்கள்   பொருட்களோ அல்லது அனுகூலங்களோ அல்ல. அது தலையாய அரசியல் கொள்கை என்று ஆசிரியர்கள்  புரிந்து கொண்டதால் ஒருமையில் common (பொதுமம் ) என்று குறிப்பிடுகிறார்கள். நூலின் முன்னுரையில் அவர்கள் எழுதி இருப்பது:

Commune (கம்யூன்) என்பது ஒரு குறிப்பிட்ட  உள்ளூர் சுய ஆட்சி குடிமை அமைப்பு 

Commons (பொதுமம்) என்பது தனிமனிதர்கள் மற்றும் சமூக செயல்பாடுகள் நடத்தும் பல்வேறு  பொருட்கள்  அல்லது வளங்களின் தொகுப்பு;

Common என்பது இந்த செயல் பாட்டுக்கு உயிரூட்டி வழிநடத்தும் கொள்கையின் மிகச்சரியான பெயர்.

ஒருமையை (common) குவிமையமாக  வைப்பதின் நோக்கம், கருத்துருவுக்கு  ஆதரவு  தெரிவிக்கவும்  அரசியல் உத்தியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் தான். மேலும்  பொதுமங்களாகக் கருதப்பட வேண்டிய பொருட்கள் மற்றும் அனுகூலங்கள் குறித்த நீண்ட விவாதங்களைத் தவிர்க்கவும் அது பயன்படும்.   சில பொருட்களின் இயல்பான குணங்களுக்கும் அவை எந்த அளவுக்கு பொதுச்சொத்தாகவோ அல்லது தனியார் சொத்துக்களாகவோ ஆகிவிட்டன என்பதற்கும் தொடர்பு உண்டா என்ற கேள்வியையும் தவிர்க்கலாம். எடுத்துக்காட்டாக, நீரும் காற்றும் தாராளமாகக் கிடைக்கின்ற வற்றாத வளங்களாக இருப்பதால் அவை பொது நுகர் பொருளாக நீடிக்கின்றன என்று காலங்காலமாக நினைத்திருந்தோம். ஆனால் பிரத்யேகமான கொள்கலனில் இருக்கும்போது தான் தண்ணீர்  தனியார் சொத்தாக முடியும் என்கிறார் ஹியூகோ டே க்ரோட். அதாவது பாட்டிலில் அடைக்கப் பட்ட  கனிம நீர் வருகைக்கு நுகர்வோரே காரணம் என்கிறார். மற்றும் சில வளர்ச்சிகள்:

  • இயற்கைக்கு விலைச்சீட்டு ஏற்பாடு செய்வது எப்படியென்று அறிந்துகொண்டோம்.
  • துடிப்பான உலகளாவிய உமிழ்வுகள் (emission) உரிமைகளுக்கான வர்த்தக அமைப்பு உதயமாகி இருக்கிறது – இது அடிப்படையில் சுத்தமான காற்றுக்கான ஒரு குதிரை பேரம்.
  • நெஸ்லே, கொக்ககோலா போன்ற  பன்னாட்டு நிறுவனங்களுக்கு  குடி நீர் விற்பனையில் மில்லியன்கள் கிடைக்கிறது. விரைவில் குடிநீர் புது எண்ணெய் ஆகிவிடும் . 
  • 2015-ல் அமெரிக்கக் குடியரசின் மக்களவை நிறைவேற்றிய விண்வெளி சட்டத்தின்படி, சிறுகோள்களையும் வான் பொருட்களையும்கூட தனியார் மயமாக்க இயலும்.

நூலாசிரியர்களின் அணுகுமுறை

நூலாசிரியர்களான டார்டோ மற்றும் லாவால், இயற்கையியம் அல்லது இன்றியமையாமைக் கோட்பாட்டுகளை எந்த வடிவத்திலும் எதிர்ப்பவர்கள். பொதுப் பயன்பாடு மற்றும் மேலாண்மைகளை சுமத்தவோ  அல்லது விலக்கவோ நிர்பந்திக்கிற  இன்றியமையா குணநலன்கள் என்று எதுவும் கிடையாது என்று வாதிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பொது, தனியார் அல்லது அரசு சொத்து ஆகிய  வரையறைகள் சட்டம் சார்ந்தவை.  சட்டத்தின் நிலைப்பாடு, பகிர்வு நடைமுறை அடிப்படையில் தான் இருக்குமேயன்றி அதை மீற வழியில்லை என்று வாதிடுகிறார்கள். அதாவது, நூலாசிரியர்கள்  இயற்கையியம் சார்ந்த மரபை எதிர்ப்பது மட்டுமல்லாமல்  பறிக்கப் பட்ட பொதுமங்களை மீட்கக் கோரும் க்லெயின் போன்றோரின் அறைகூவல்களையும்  எதிர்க்கிறார்கள்.

அருஞ்சொல் விளக்கம்

பொதுமம் (commons): பொதுப் பயன்பாட்டுக்குரிய  இயற்கை  வளங்கள்

முதலியம்: Capitalism, முதலாளித்துவம்

Hip restaurant chain: 1960களின் ஹிப்பி மற்றும் ஹிப்ஸ்டர் சொற்களை மூலமாகக் கொண்டது. நவநாகரிக, நவீன, பிரபல, சம காலத்திய, புதிய போன்ற பொருள் தரக் கூடியது. பணக்கார நவ நாகரிகர்கள்  வீண் டம்பத்துக்காக செல்லும் உணவிடம்.

Creative commons: is an American non-profit organization and international network devoted to educational access and expanding the range of creative works available for others to build upon legally and to share.

நூலாசிரியர்களின் மேற்கோள் பொருட்கள்:

 Ancient and medieval philosophers such as Aristotle and Thomas Aquinas, via early modern thinkers such as Hugo de Groot and John Locke and thinkers in the socialist and anarchist tradition, such as Karl Marx and Pierre-Joseph Proudhon, to contemporary theorists such as Ostrom and Klein, Michael Hardt and Antonio Negri, and Jean-Luc Nancy and Roberto Esposito.

இங்கிலிஷ் கட்டுரையின் சுட்டி 

https://www.eurozine.com/the-commons-versus-capitalism/

Series Navigationமுதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.