
பேருலகில்
தனியே விட்டு
தன் வழி தான் செல்லும்
நவீன ஓவியங்கள்
கண்கள் வழி
உடலின் பாதையெங்கும்
விட்டுச் செல்லும் பெருந்தனிமையை
வாழ்வெங்கும்
ஓராயிரம் யானைகள் பயின்ற பாதையில்
துவைந்து புதைந்து
அமிழ்ந்து ஆழம் சென்று
மீண்டும் துளிர்க்கும்
உள்ளடங்கிய உயிர்ப்பு
பிரசவித்த நாய்களின் பசியாய்
தன் சதை தான் தின்று
பாசத்தின் பெருக்கில்
பாலூட்டும்
வாழ்வு
விழிக்கும் போதெல்லாம்
தலைக்கு மேல்
தலைகீழாய் சுழலும்
பழைய முத்தங்களின்
பல்லிச் சத்தம்
தவிப்புகளை தின்னக் கொடுத்தே
பயணங்களில் எதிர்ப்படும் எதிர்பாரா
விபத்தாய்
கைவந்து சேரும்
சின்னஞ்சிறு காதல் ஒன்று
அதில் திகைத்து திளைத்து
நனையத் தெரியாமல்
குடையாக குறுக்கே விரியும்
காலப்பிரமை