புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்

This entry is part 1 of 23 in the series புவிச் சூடேற்றம்

பூமியைச் சூடாக்க 30.000 ரூபாய்க்கு ஏ.சி. வாங்கும் நாம், பூமியைக் குளிர்விக்க 30 ரூபாய்க்கு மரக்கன்று வாங்கி நடுவதில்லை!

நடிகர் விவேக்

புவிச் சூடேற்றம் மிகவும் குழப்பமாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள ஒரு விஞ்ஞானம். கடந்த 40 ஆண்டு காலமாக, நாம் புவிச் சூடேற்றம் பற்றிப் பொதுவெளியில் பேசி வந்துள்ளோம். முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் அல் கோர் உலகிற்கு இந்தப் பிரச்சினையைப் புரியவைக்க எவ்வளவோ முயன்றார். அவருடைய முயற்சிக்கு, அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 2015–ஆம் ஆண்டில், உலக நாடுகள் ஒன்று கூடிப் பாரிஸ் ஒப்பந்தம் என்று புவிச் சூடேற்றத்தைக் குறைக்க, பல முயற்சிகள் செய்ய ஒப்புக்கொண்டன. இதற்காக, அல் கோர் பல ஒப்பந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டார். குறிப்பாக, இந்தியாவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மிகவும் முயற்சிகள் தேவைப்பட்டன.

2021–ல் நம்முடைய நிலை, 2015–ஐவிட மோசம். அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கி, மீண்டும் பைடன் அரசால் 2021–ல் இணைந்துள்ளது. எல்லா நாடுகளும் தாங்கள் ஒப்புக்கொண்ட அளவிற்குக் கரியமில வாயுவைக் குறைப்பதில் தடுமாறியுள்ளன. அமெரிக்காவே பின்வாங்கியபின் நாம் எதற்கு இதைச் செய்யவேண்டும் என்று பல நாடுகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டன.

சூடான நாள்களில் புவிச் சூடேற்றம் பற்றிப் பேசுவதும், குளிர் நாள்களில் எங்கு போய்விட்டது புவிச் சூடேற்றம் என்று வேடிக்கை பேசுவதும் வழக்கமாகிவிட்டது. போதாத குறைக்கு, முன்னாள் டிரம்ப் ஆட்சி, அமெரிக்காவின் கரியமில வாயுக் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டது!

குழம்பியுள்ள பொதுமக்களை மேலும், இந்த விஞ்ஞானமே சரியில்லை என்று தில்லாலங்கடி செய்யும் ஒரு ராட்சசக் குழுவே மேற்குலகில் உள்ளது. பழைய திரித்தல் முறைகளை மேலும் தூசு தட்டிக் கடை விரித்துத் தடாலடி வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டன. சுருக்கமாகச் சொல்லப்போனால், நிலமை மேலும் மோசமாகிக்கொண்டே போகிறது. இதில் விந்தையான விஷயம் என்னவென்றால், ஏழை நாடுகள், இது என்னவோ பணக்கார நாடுகளின் சதி மற்றும் பிரச்சனை என்று நினைக்கின்றன. உண்மையோ முற்றிலும் வேறு. இது பூமி சம்பந்தப்பட்டது. இதில் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம், நாடு, எல்லைகள் இவற்றுக்குப் பங்கே கிடையாது. பணக்கார ஸ்வீடன் நாட்டையும் ஏழை பங்களாதேஷையும் வேறுபடுத்திப் பார்க்காத பிரச்சினை இது. சொல்லப் போனால், ஏழை நாடுகளை அதிகமாகப் பாதிக்கவல்ல ஒரு பிரச்சனை இது.

ஒரு கற்பனை உதாரணத்தை விஞ்ஞான அலசலுக்குமுன் பார்ப்போம்.

பதைபதைக்க ஒரு தாய் மருத்துவரிடம் சென்று முறையிடுகிறாள்.

“மருத்துவரய்யா, என்னுடைய குழந்தை 100 டிகிரி காய்ச்சலில் ரொம்ப கஷ்டப்படுது. ராத்திரியெல்லாம் காய்ச்சலில் உளறிக்கொண்டே இருந்தாள். இப்படியே விட்டால், வேறு ஏதாவது ஆகிவிடுமோன்னு பயமாக இருக்கு. ஏதாவது மருந்து கொடுங்களேன்.”

நம் வாழ்க்கையில் பலரும் அனுபவித்த ஒரு நிகழ்வு இது.

மருத்துவர் இப்படிச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

“அம்மா, மனித உடலின் சராசரி வெப்பநிலை நிலை 98.6 டிகிரி. உன் குழந்தைக்கு வெறும் 1.4 டிகிரி அதிக வெப்பம். அவ்வளவுதான். இதெல்லாம், தானாகவே சரியாகிடும். இங்கு 104, 105 டிகிரின்னு கஷ்டப்படற குழந்தையைதான் நான் கவனிக்கமுடியும்.”

இதைப் படித்த உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறது? கல் நெஞ்சுக்கார மருத்துவர். படிச்சு என்ன பயன்? இப்படியா ஒரு நோயாளியைக் கவனிப்பது? இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்..

தொழில் புரட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்த பூமியின் சராசரி வெப்பத்தைவிட, இன்று 1.5 டிகிரி கூடிவிட்டது. இதைச் சொல்லும் விஞ்ஞானியை நாம் அந்தக் குழந்தையின் தாயைப்போல நினைப்பதில்லை. தாய், தன் குழந்தையின் உடல்நிலையைப் பற்றி ஏன் பொய் சொல்லுவாள்? அதைவிட்டு, ”கோடைக் காலத்தில் 108 டிகிரி வெய்யில் கொளுத்துகிறது. ஒரு டிகிரி சராசரியாக அதிகரித்துவிட்டதைப்போய் பெரிதுபடுத்த வேண்டுமா?” என்று, பொறுப்பற்ற நம் கற்பனை மருத்துவரைப் போலத்தான் இந்தப் பிரச்சனையை அணுகுகிறோம். அத்துடன், இந்த உதாரணத்தில் உள்ள 108 டிகிரி கோடை வெய்யிலுக்கும், விஞ்ஞானி சொல்லும் ஒரு டிகிரி சராசரி வெப்ப உயர்வுக்கும் உள்ள ஒரே தொடர்பு, இரண்டும் டிகிரி என்ற அளவால் அளக்கப்படுவது மட்டுமே. மற்றபடி, சம்பந்தமே இல்லாத ஒரு பேச்சு இது. சாதாரணர்களிலிருந்து டிரம்ப்வரை புவிச் சூடேற்ற விஷயத்தில் இவ்வகைப் பொறுப்பற்ற நிலை இருப்பது வேதனைக்குரியது.

வழக்கம்போல நாம் விஞ்ஞானத்தில் தொடங்குவோம். இந்த விஞ்ஞானம் குழப்ப மயமாக இருப்பதால், விவரமாக ஆனால் எளிமையாக முதலில் அணுகுவோம்.

முதலில், புவி + சூடேற்றம் = புவிச்சூடேற்றம்.

புவியைப் பற்றி ஒரு விஞ்ஞான பூர்வமான வரலாற்றுப் பார்வை இதற்குத் தேவை. இதை இந்தப் பகுதியில் பார்ப்போம். அத்துடன், இந்தப் பார்வையில் புவி, அல்லது பூமி, சூடேற்ற விஷயத்தில் எப்படிப் பல படிகளைத் தாண்டி வந்துள்ளது என்றும் பார்ப்போம்.

ஆங்கிலத்தில் இது climate change என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, பருவநிலை மாற்றம். பூமியின் பருவநிலையைச் சற்று விரிவாக ஆராய்ந்தால், அதைத் தீர்மானம் செய்கின்ற விஷயங்களையும் புரிந்து கொள்ளலாம். இந்த இரு பின்னணிகளுடன், புவிச் சூடேற்றம் மற்றும் அதன் விளைவுகளை விஞ்ஞானிகள் எப்படி எல்லாம் ஆராய்ந்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புரிதல் இருந்தாலே, பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் சரியாகப் புரியும். புவி வரலாறு பற்றிப் பார்க்குமுன், ஒரு சின்ன விஷயத்தை இங்கு சொல்லவேண்டும். அன்றாட வெய்யில், மழை, காற்று, பனிப்பொழிவு, ஈரப்பதம் போன்ற விஷயங்களை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாம் கேட்கிறோம் / பார்க்கிறோம். இது குறுகிய கால வானிலை அறிக்கை. பொதுவாக, ஒரு மணி நேரத்திலிருந்து 15 நாள்கள் வரையிலான அறிக்கை. கோடைக் காலம், குளிர் காலம், வசந்த காலம், இலையுதிர் காலம் போன்றவை நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இது பருவநிலை. புவிச்சூடேற்றம் என்பது நீண்டகால அளவுகளைச் சார்ந்தது. பருவநிலை மாற்றங்கள் அடிப்படையான முக்கிய ஓர் அங்கம். ஆனால், புவிச்சூடேற்றம் என்பது வானிலை மற்றும் பருவநிலை இரண்டையும்விட ஒரு நீண்ட புவி சார்ந்த ஒரு விஞ்ஞானப் பார்வை. இந்த புவிச் சூடேற்றத்தால், பருவநிலைகள் மற்றும் வானிலையும் பாதிக்கப்படுகிறது. ஆனால், வானிலை மாற்றங்களை வைத்துப் புவிச் சூடேற்றத்தை முடிச்சுபோடுவது ஒரு புரியாத பேதைமை என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி, நம்முடைய பூமியின் வரலாற்றைச் சுருக்கமாக முதலில் அலசுவோம்.

  1. பூமி, ஏறக்குறைய 4.54 பில்லியன் வருடங்களுக்குமுன் உருவானது – இதை ஆராய்ந்து சாட்சியங்களுடன் அறிவித்தவர் பேட்டர்ஸன் என்ற விஞ்ஞானி என்பதைப் ‘பெட்ரோலில் ஈயம்’ பகுதியில் பார்த்தோம். பூமியின் ஆரம்ப காலத்தில், ஆக்ஸிஜன் வாயு மற்றும் நீர் கிடையாது. அதனால், எந்த உயிரினமும் பூமியின் ஆரம்ப காலத்தில் இல்லை.
  2. மெதுவாகக் குளிரத் தொடங்கிய பூமியில், முதல் நுண்ணுயிர்கள் 3.5 பில்லியன் வருடங்கள்முன் தோன்றி இருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சிமூலம் தெரியவந்துள்ளது.
  3. அடுத்த பில்லியன் ஆண்டுகளில், மெதுவாகப் பூமி குளிர்ந்து, ஆக்ஸிஜன் மற்றும் நீர் அதிகரிக்கச் சிற்றுயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் செடிகள், மரங்கள் தோன்ற ஆரம்பித்தன. பூமியில் ஆக்ஸிஜனை அதிகரிக்கும் அருமையான பணியை மரம், செடி கொடிகள் மூன்று பில்லியன் ஆண்டுகளாகச் செய்துவந்துள்ளன
  4. கடந்த 780 மில்லியன் முதல் 580 மில்லியன் ஆண்டுகள்வரை பூமியில் கடும் குளிர் நிலவியது. இந்தக் காலகட்டத்தில் நான்கு பனியுறை யுகங்கள், (ice ages) தலா 10 மில்லியன் ஆண்டுகள் பூமியில் இருந்தன என்று உலகின் மிகப் பழைய பாறைகளை ஆராய்ந்து விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள். உலகின் மிக உயரிய மலைகளைத்தவிர எல்லா இடங்களிலும் உறைந்த பனிதான் இருந்ததாம். பூமியின், சராசரி வெப்ப அளவு,  −50 °C (−58 °F) என்று இருந்ததாம்!
  5. கடந்த 580 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்வரை, ஒரு நுண்நோக்கி இல்லாமல் பார்க்கவல்ல உயிர்கள் எதுவுமே பூமியில் இல்லை.
  6. பெரிய உயிர்கள் மெதுவாக உருவாகும் சூழல் அமையவே, மீன்கள் என்று தொடங்கி பூச்சிகள், மிருகங்கள் மற்றும் மனிதர்கள் தோன்ற ஆரம்பித்தனர். உலகில், மிக முக்கியமாகக் கடல், கண்டங்கள், காற்று மண்டலம் போன்றவை எல்லாம் இருப்பது கடந்த 500 மில்லியன் ஆண்டுகளாகத்தான்.
  7. விஞ்ஞானம் இன்று நவீன மனிதன் 160,000 முதல் 200,000 வருடங்களுக்குமுன் பூமியில் வாழ ஆரம்பித்தான் என்று கணித்துள்ளது. பூமியை நோக்குகையில், நாம் எல்லோரும் சமீபத்திய விருந்தினர்கள். 4.6 பில்லியன் வருடங்களில் 200,000 வருடம் என்பது கடலில் ஒரு துளியைப் போன்றது.

புவியியல் சம்பந்தப்பட்ட டெக்னிகல் விஷயங்களை இங்கு தவிர்த்து, மிகச் சுருக்கமாக வழங்கியுள்ளேன். பல இடைப்பட்ட விஷயங்களை இந்தக் கட்டுரைக்கு முக்கியமற்றதால், விட்டுவிட்டேன்.

இந்த வரலாற்றில், சில முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பின்னால், இவை புவிச் சூடேற்றம் சம்பந்தமான விஞ்ஞான விளக்கங்களில் இடம்பெறும். பனியுகம் (ice age) பற்றியும், பூமியே உறைந்து பல மில்லயன் ஆண்டுகள் இருந்ததையும் இங்கு சொன்னோம். முழுவதும் உறைந்த பூமி, மெதுவாக, உயிர்கள் தளிர்க்கும் வெப்பத்திற்கு வரச் சில மில்லியன் ஆண்டுகள் பிடிக்கின்றது.

நான்கு பனியுறை யுகங்கள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்குமுன் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தேன். ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். ஐந்தாவது பனியுறை யுகம் (fifth ice age) மூன்று மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தொடங்கியது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இன்னும் அந்தப் பனியுறை யுகத்தில்தான் நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம்! இதென்ன பூச்சுற்றல் என்று தோன்றலாம். 20,000 ஆண்டுகளுக்கு முன்வரை, பூமியில் கடும் குளிர் நிலவியது. உண்மை என்னவோ, கடந்த 11,000 ஆண்டுகளாக இந்தப் பனியுறைக் காலம் மெதுவாக வெப்பமாகிக் கொண்டு வருகிறது. மிக முக்கியமாக, 20,000 ஆண்டுகளுக்குமுன், பூமியின் சராசரி வெப்பம் இன்றைய நிலையைவிட 10 டிகிரி ஃபேரன்ஹீட் குறைவு. அதாவது, 20,000 ஆண்டுகளில், இயற்கை பூமியை 10 டிகிரி, சராசரி அதிக வெப்பதிற்கு உள்ளாக்கி உள்ளது. இதில் 1.5 டிகிரி, மனிதன் கடந்த 150 வருடங்களாகத் தொழிற்புரட்சிக்குப் பின்னால் எரித்த கரி, பெட்ரோல், அழித்த காடுகள், கட்டிய கட்டிடங்கள், புதுத் தொழிலகங்கள் போன்ற விஷயங்களால் அதிகரித்துள்ளது. ஒன்பது டிகிரி உயர, ஏறக்குறைய (150 என்பது 20,000–த்தில் மிகச் சின்ன எண்) இயற்கைக்கு 20,000 ஆண்டுகள் பிடித்தது. அதாவது, ஒரு டிகிரி சராசரி வெப்பம் உயர, இயற்கை எடுத்துக்கொள்ளும் காலம் 2,000 ஆண்டுகள். வெறும் 150 ஆண்டுகளில் மனிதர்கள் இதைச் செய்து, பூமியைச் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்கள்!

இன்னொரு விஷயம், பனியுறை யுகத்தில் பனியின் ஆழம் தரை மட்டத்திலிருந்து இரண்டு மைல்கள்! இரண்டு மைல்கள் ஆழமுள்ள பனிப்பாறைகள் உருகப் பல மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். இதை இங்கு சொல்ல இரண்டு காரணங்கள்: முதல் காரணம், பூமியைப் பொறுப்பில்லாமல் சூடேற்றிக்கொண்டே போனால், இன்னொரு பனியுகம் இன்னும் 400 முதல் 500 ஆண்டுகளில் தொடங்க வாய்ப்புள்ளது. அடுத்த பகுதியில், இது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம். இரண்டாவது காரணம், மனிதன் ஒரு வெப்ப விரும்பி. தீவிரப் பனியுகம் எதிலும் மனிதன் வாழவில்லை.

இந்தச் சராசரி வெப்பம் என்பது என்ன? எல்லா இடங்களிலுமே பருவத்திற்கேற்ப வெப்பம் மாறுபடுகிறது. அத்துடன், இன்றும் வட மற்றும் தென் துருவங்களில் வருடம் முழுவதும் பனியுறைந்து இருக்கின்றது. (இது குறைந்துகொண்டே வருவதைப் பற்றி பிறகு விவரமாகப் பார்ப்போம்.) துருவங்களின் அருகே உள்ள நாடுகளில் (வட துருவம் அருகே கனடா, தென் துருவம் அருகே ஆர்ஜன்டினா), பூமத்திய ரேகை அருகே உள்ள நாடுகளைவிட (சிங்கப்பூர், பிரேஸில்) குளிர் அதிகம். இதை எல்லாம் ஒன்றாகக் கணக்கிடும் ஓர் அளவுதான் சராசரி உலக வெப்பநிலை. இதைப் போன்ற வெப்ப வேறுபாடுகள் என்றும் பூமியில் இருந்து வந்துள்ளன. மனித உடலில்கூட அப்படித்தான். மனித உடலின் வெப்பத்தை சரியான நிலையில் வைத்துக்கொள்ள மிக முக்கியம் ரத்த ஓட்டம். அப்போதுதான் சராசரி மனித வெப்பநிலை 98.6 டிகிரியாக இருக்கும். பூமிக்கும் அப்படிப்பட்ட ஓட்டம் ஏதாவது உண்டா? அடுத்த பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.

உடலின் பல பாகங்கள் – குறிப்பாக ரத்த ஓட்டம், சுவாசம், ரத்த அழுத்தம், தொற்று போன்ற விஷயங்கள் உடலின் சராசரி வெப்பத்தைத் தீர்மானிக்கின்றன. இதைப்போல, பூமியின் சராசரி வெப்பத்தைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன:

  • காற்று மண்டலம்
  • நிலப்பரப்பு
  • பனிப்பொழிவு மற்றும் பனிப்பாறைகள்
  • கடல் மற்றும் பெரிய நீர்நிலைகள்
  • வாழும் உயிர்கள்

இந்த ஒவ்வொரு காரணியிலும் பல அடுக்குகள் உள்ளன. உதாரணத்திற்கு, நிலப்பரப்பு என்றால் காடுகள், பாலைவனங்கள், மலைகள் எல்லாவற்றிற்கும் இதில் பங்கு உண்டு. உயிர்கள் என்றால் அவை செய்யும் செயல்கள் – மனிதர்கள் பயன்படுத்தும் இயற்கை வளங்கள் என்று ஒன்றுடன் ஒன்று விளையாடும் காரணிகள். இந்தக் கட்டுரைமூலம் ஜுரம் ஏன் வருகிறது என்ற அளவு புரிதலை உருவாக்க முயற்சிப்பேன். உங்களை ஒரு டாக்டராக்குவது இக்கட்டுரைகளின் நோக்கமன்று. அதை விஞ்ஞானிகள் பார்த்துக்கொள்வார்கள்.

மேற்சொன்ன காரணங்களுடன் மட்டுமல்லாமல் பூமியின் பருவநிலை வேறு சில வெளிக் காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. சூரியனில் உருவாகும் மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள், மனித நடவடிக்கைகளால் உருவாகும் காற்றுமண்டல மாற்றங்கள் என்று இந்தப் பட்டியல் நீளும். பிரச்சனை என்னவென்றால், மனித நடவடிக்கைகளின் பங்கு அளவிற்கு அதிகமாகி விட்டதுதான்.

Series Navigationபனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.